4.அசைவறு மதி

எங்கள் முதுகலை வகுப்பறை. சில நாட்களில் பருவத்தேர்வு எழுத இருந்தோம். எப்படி அதை அணுகுவது என்ற பயத்துடன் இருந்திருந்தோம் அல்லது பயத்துடன் இருந்ததாக எங்கள் ப்ரோஃபஸருக்குப் பட்டிருக்கிறது. அவர் பேச ஆரம்பித்தார்.

சோழ மன்னனான விஜயாலயச் சோழனின் ஆட்சிக்காலத்தில் சோழ நாட்டை சேரர்களும் பாண்டியர்களும் கூட்டு சேர்ந்து படையெடுக்கின்றனர். எதிரிகளின் படை வலிமைகொண்டதாய் இருக்கிறது. சோழ வீரர்கள் களத்தில் பின் வாங்குகிறார்கள். கிட்டத்தட்ட தோல்வி நெருங்குகிறது. வீரர்கள் மனதளவில் சோர்ந்துபோய்விடுகிறார்கள். பார்த்தான் விஜயாலயச்சோழன். அவனோ வயதானவன். போரில் உடம்பெல்லாம் புண்களைச் சுமந்தவன். கால்களில் வெட்டுப்பட்டு நடக்கமுடியாதவன்.

எட்டு வீரர்களை அழைத்தான். முதல் நால்வர் என்னைத் தூக்கிச் செல்லுங்கள். பகைவர்களின் கூட்டத்திற்குள் என்னை அழைத்துச் செல்லுங்கள். என் பின்னால் மற்ற வீரர்கள் வாருங்கள். யாராவது என்னைத் தூக்குபவர்கள் காயப்பட்டால் மற்றவர்கள் என்னைத் தூக்கிக்கொள்ளுங்கள். பகைவரை நோக்கி நானே வருகிறேன். என்றான். (இந்த சீனை எங்கள் ஆசிரியர் சொன்னபொழுது நான் மெதுவாக தோழிகள் பக்கம் திரும்பிப் பார்த்தேன்… கிட்டத்தட்ட அருந்ததி அனுஷ்கா போல் சிம்மாசனத்தில் அவதரித்ததுபோல் அமர்ந்திருந்தார்கள்.. கிட்டத்தட்ட வகுப்பறையே ஃபுல் ஃபார்மில் இருந்ததாகப்பட்டது)

அப்படியே வீரர்கள் தூக்கிச்செல்ல பகைவர்களைக் கொன்று போர்க்களத்தில் விஜயாலயச்சோழன் தனியாளாக நுழைய எதிர்ப்படும் வீரர்களைக் கொன்று குவித்தான். அதைப் பார்த்த சோழ வீரர்கள் தன்னம்பிக்கையுடன் போர் புரிய ஆரம்பித்தனர். எவ்வளவு தோல்வி நெருங்கினாலும் இப்படி நெருப்பாய் நாம் இருக்க வேண்டும் என்று எங்கள் ப்ரோஃபஸர் கதையைச் சொல்லிமுடிக்க, என் பின்பக்கம் இருந்த நண்பன் பெருமாள், இப்ப நம்ம என்ன சண்ட போடனுமா என்றான்.

கடைசி வரிசையிலிருந்த இன்னொரு நண்பன், சார் இதைவிட நல்ல கதைகளை எங்க அப்பாவே சொல்லிப் பார்த்தார். படிப்பு ஏறமாட்டிங்குது என முடித்தான்.

என் நண்பன் சொன்னதற்கு நீங்கள் சொன்ன கதையைவிட எங்கள் அப்பா சொன்னக் கதை மிகுந்த மோட்டிவேட் வெரைட்டி. அதற்கே ஒண்ணும் ஆகல என்றுதான் அர்த்தம். ப்ரோஃபஸரின் முகத்தில் ஈ ஆடவில்லை.

இப்பொழுது தன்னம்பிக்கை பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் நிலைகூட அப்படித்தான். சொல்ல வந்த விசயம் அது அல்ல. ஐந்து வருடங்களுக்கு முன் இருந்த சமூகவலைத்தளங்களின் பயன்பாட்டு வீதம்போல் இப்பொழுது இல்லை. அதாவது அதீதமாய் அதிகரித்துள்ளது. பல நல்லவிசயங்கள் வெகுவேகமாக நம்மை வந்தடைகின்றன.

எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர் இருந்தார். அவருக்கு எப்பொழுதும் நன்றாய் பேசுவார் என்று பெயர். பற்றாக்குறைக்கு அது ஒரு கிராமம் வேறு. இவர்தான் அந்தக் கிராமத்திற்கு அருகிலுள்ள அதைவிட பெரிய கிராமத்திலிருந்து வருபவர். மெத்த படித்தவர் என்ற கெத்தாய் தலைமையாசிரியையே அவரைப் பார்ப்பார்.
ஒவ்வொரு மாதத்தின் முதல் திங்கள்கிழமையின் அசெம்ப்ளியில் இவரைக் கொஞ்சம் பேசச்சொல்லி தலைமையாசிரியை அந்த நிகழ்வை ஓட்டுவார்.

ஒவ்வொரு முறையும் அன்னார் ஒரு கதையைச் சொல்லி அதன்மூலம் தத்துவத்தைச் சொல்லி முடிப்பார். ஒருமுறை அவர் அந்தக் கதையைச் சொல்லி முடிக்குமுன்னரே கூட்டத்தில் ஒரு வகுப்பு மாணவர் கூட்டம் சிரிக்கத் தொடங்கிவிட்டனர். தனித்து விசாரித்ததில் ஆசிரியர் மாதந்தோறும் படித்துவிட்டு வரும் வாராந்திரப் பத்ரிகையின் பெயர் தெரிந்ததுதான்.

இப்பொழுதெல்லாம் இங்கு எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கிறது.

ஆனால் தன்னம்பிக்கை பெறுவதும் புத்துணர்வு பெறுவதும் ஏதோ பெரிய மாற்றங்களுடன் வெளியிலிருந்து மாயை நிகழும் என நம்புகிறார்கள். அப்படியில்லை என்பதுதான் எதார்த்தம்.

உங்களுக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. கால் எலும்பு முறிவு என்று கொள்ளலாம். (என்னடா, இப்படி சாபம்விடுகிறேன் என்று நினைக்கவேண்டாம், நீங்கள் விஜயகாந்த்போல் பல தீவிரவாதிகளைக் காலால் எட்டி உதைப்பீர்கள்தான் இது கொஞ்சம் விளையாட்டுக்கு…) உங்கள் கால் எலும்பு முறிவிற்கு அறுவைசிகிச்சை முடிந்து படுக்கையில் இருக்கிறீர்கள். வந்த மருத்துவர் மூன்று நாட்களில் காலை கீழே வைத்து எழுந்து நின்று பிறகு நடந்து பாருங்கள். சும்மா படுத்தே இருக்காதீர்கள் என்றுவிட்டு போய்விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். என்ன செய்வீர்கள்….

விஜய் நடித்த பத்ரி படத்தில் குஸ்தி விளையாடுவதற்கு முன் போடும் பாடலை போட்டுக் கேட்பீர்களா…

நீ பழைய சத்ரியனா வா என்று மகன் சொன்னதும் விஜயகாந்த் தண்டால் எடுக்கும் காட்சியைப் பார்ப்பீர்களா,

இப்படிப் பல சினிமா காட்சிகளைப் பார்த்து….?

ஒன்றும் நடக்காது. நீங்கள்தான் நடக்கவேண்டும்.

உங்கள் காயத்திலிருந்து நீங்கள்தான் எழவேண்டும்.

வேறு ஒருவர் வருவார். அபயக் குரல் கேட்பார். ஆபத்பாந்தனாவார் என்பது எல்லாம் மூடநம்பிக்கை.

இருளிற்கு வெளிச்சமாய் மெழுகுவர்த்தி தேவைப்படலாம். நீங்களே மெழுகுவர்த்தி நீங்களே வெளிச்சம் என்பதுதான் எதார்த்தம்.

ஒரு நண்பரின் நிறுவனத்தில் சில பணியாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்திற்கு ஒரு தலைப்பின் கீழ் பேசச் சென்றேன். பேசி முடித்து தேநீர் குடிக்கும் வேளையில் ஒரு பணியாளர் வந்து ஆரவாரமாய் என்னைப் புகழ்ந்து தள்ளினார்.

சில மதமாற்ற விளம்பரதாரர் நிகழ்வுகளில் வருபவரைப்போல இது எனக்கு இதுவரைக்கும் தெரியாது. நீங்கள் சொன்னதுதான் என் கண்களைத் திறந்தது. இது தெரியாமல்தான் இத்தனை நாள் இருந்திருக்கிறேன் என்று ஏகத்துக்கும் அள்ளிவிட்டார். ஓரளவிற்கு மனிதர்களுடன் பழகிக்கொண்டும் மனிதர்களை எப்படிக் கையாளவேண்டும் என்றும் பழக்கிக்கொண்டும் இருப்பதனால் இது போன்ற பொய்யான நபர்களை எளிதாக அடையாளம் காண முடிகிறது.

அவரைக் குறித்து என் நண்பரிடம் விசாரித்தபோது, நான் நினைத்தவண்ணம் அவர் செயல்பாடுகளில் சராசரிக்கும் கீழ் இருப்பவர்.

இது போன்ற மேஜிக்குகளை யாராலும் நிகழ்த்தமுடியாது. அப்படி ஒரு மனத்தினுள் மேஜிக் நிகழ்கிறது என்றால் அதை நிகழும்படிக்கு அனுமதித்த நீங்கள்தான் காரணம்.

நீங்கள் மூடிய மனதோடு இருந்துகொண்டு உங்கள் முன் பில்கேட்ஸை வைத்து இரு நாட்களுக்குத் தொடர்ந்து சொற்பொழிவு நிகழ்த்தினால் கூட உங்களால் தேற முடியாது.

உங்கள் மனதை எப்பொழுது திறந்துகொண்டு நீங்கள் மாறுவதற்கும் மாற்றம் காண்பதற்கும் உங்களை நீங்களே ஒப்படைப்பு செய்கிறீர்களோ அப்பொழுதுதான் நீங்கள் நினைப்பதும் உங்களுக்குத் தோதுவானச் சூழ்நிலையும் நிகழும்.

வெளியிலிருந்து இறைத்தூதர்கள்போல் எவரும் வருவதற்கு வாய்ப்பில்லை.

உண்மையில் தன்னம்பிக்கைச் சொற்பொழிவாளர்கள் செய்வது உங்களுக்கு, ஒருகாலத்தில் அவர்கள் படித்ததைச் சொன்னார்கள். சமூக வலைத்தளங்கள் உங்களுக்கு அதைக் கையிலேயே சமயத்தில் தருகின்றன. அதை நீங்கள் பொருட்படுத்துவதில்லை.

சில தன்னம்பிக்கையாளர்கள் சில பயிற்சி முறைகளைத்தான் கண்ட அனுபவங்களை சில வெற்றியாளர்கள் பயன்படுத்திய சூத்திரங்களைத் தங்கள் முன் தருவார்கள்.

ஆனால் அத்தகையப் பலன் தரக்கூடிய பல நல்ல விசயங்களை நீங்கள் அணுகும்பொழுது எத்தகைய மன நிலையில் இருக்கிறீர்கள் என்பதுதான் விசயம்.

மறுபடியும் மருத்துவமனைக்கு வாருங்கள். மருத்துவர் உங்களை நடந்து பழகு என்று சொல்லிவிட்டுப்போய்விட்டார். முதல்முறையாக அடிபட்ட சிகிச்சைக்குள்ளான உங்கள் காலை நீங்கள் தரையில் வைக்கிறீர்கள். எலும்பு துண்டாகி நடுவே தகடு வைக்கப்பட்டு இரத்த நாளங்கள் வெளியிலிருந்து புது வரவாய் வந்திருக்கும் அந்த உலோகத்தின் மேலும் இரத்தத்தத்தைச் செலுத்தியிருக்கும். புதிய காலாக இருக்கும்.

உங்கள் பாதத்தை நீங்கள் தரையில் வைத்து உங்கள் எடையை அந்தப் பாதத்திற்கு நீங்கள் செலுத்தும்பொழுதுதான் உள் வைத்த தகடு தாங்குகிறதா தாங்காதா சிகிச்சை வெற்றியா தோல்வியா என்றே அந்த மருத்துவருக்குத் தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் எடையை உங்களின் அந்தக் காலுக்கு மடை மாற்ற பயிற்சி அளிப்பார்கள்.

கால் உங்கள் உடலில் உள்ளது. உங்கள் எடை. நீங்கள்தான் அந்த எடையை அந்தக் காலிற்குச் செலுத்தவேண்டும். நீங்கள் தயார் ஆகவில்லை என்றால் கால் பழக்கம் அடையாது. நீங்கள் தயார் ஆகவில்லை என்றால் உங்களால் நடக்க இயலாது. நீங்கள் தயார் ஆகவில்லை என்றால் உங்கள் காயங்களை நீங்களே குணப்படுத்த முடியாது. நீங்கள் தயார் ஆகவில்லை என்றால் உங்களால் உங்கள் காயத்திலிருந்தே மீள முடியாது. நீங்களே எழ வேண்டும்., நீங்களே உங்கள் காயங்களைப் போக்க வேண்டும். நீங்களே உங்கள் உடல் காயத்திற்கும் மனக்காயத்திற்கும் ஆபத்பாந்தவன்.

ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது.

இன்பமோ துன்பமோ வெற்றியோ தோல்வியோ சலனமற்ற மதி கேளுங்கள். அது அசைவறு மதி என்பான் பாரதி.

முந்தைய தொடர்:

3.‘எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன’ – https://bit.ly/2Quz6RQ

2.இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது – https://bit.ly/3dbEeUR

1. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் உயிர்ப்பு இருக்கிறது – https://bit.ly/393NmHE

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. கடைசியாய் எப்பொழுது முரண்பட்டீர்கள்? : பழனிக்குமார்
  2. "நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்" : பழனிக்குமார்
  3. "ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்" -பழனிக்குமார்
  4. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நிறுவ முடியுமா?-பழனிக்குமார்
  5. யுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்
  6. தனித்துவமும், சுவாரஸ்யங்களும்-பழனிக்குமார்
  7. உங்கள் அக வயது என்ன?-பழனிக்குமார்
  8. குழந்தைமையிலிருந்து ஆளுமை -பழனிக்குமார்
  9. உங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்
  10. தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார்
  11. கொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்
  12. பிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்
  13. நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்
  14. உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? - பழனிக்குமார்
  15. 'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்
  16. இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்
  17. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்