மதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது.

கிளின் பார்லோ

கால எந்திரமொன்றில் பயணித்து மதராஸ் என்ற தொன்மையான வரலாற்றுப்புத்தகத்தின்  கடந்தகால பக்கங்களின் சில சுவையான நிகழ்வுகளை பார்க்கும் ஒரு காலவெளி பயணம் இந்த தொடர்

மதராஸ் – மண்ணும் , கதைகளும் -7

சில வருடங்கள் முன்பு சென்னை தினத்தையொட்டி, சிறப்புக்கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முன் பிரசவத்துக்குப் பயன்படுத்திய மருத்துவக்கருவிகளை மக்கள் பார்வைக்கு வைத்திருந்தார்கள். அதை பார்க்கும்போதுதான் அந்தக்காலத்தில் பெண்களின் நிலைமை எப்படி இருந்தன? குறிப்பாக பேறுகாலங்களில் எப்படி சிரமப்பட்டார்கள் என்று விரிவாக தெரிந்துக்கொள்ள முடிந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியில் பெண்கள் மருத்துவம் படிக்க அனுமதிக்கப்படவில்லை. மக்கள் நாளடைவில் ஆங்கில மருத்துவத்துக்கு மாறியபிறகு ஆண் மருத்துவர்களே பெண்களுக்கான சிகிச்சையை வழங்கினார்கள். அது பெண்கள் பலருக்குப் பிடிக்காமல் வீட்டிலேயே மருத்துவம் பார்த்துக்கொண்டார்கள். பிரசவகாலங்களில் பெண்கள் பலர் இறந்துப்போவது நடந்தது. தங்கள் வலியையும் , மனதையும் புரிந்துக்கொள்ளும் பெண் மருத்துவர்கள் இல்லை என்பது பெண்களின் நீண்டநாள் ஏக்கமாக இருந்துள்ளது.

ஆங்கிலேய வீரர்களின் காயங்களுக்கு சிகிச்சை செய்வதற்காக 1665ஆம் ஆண்டு செயின்ட். ஜார்ஜ் கோட்டையில் ஒரு சிறு மருத்துவமனை தொடங்கப்படுகிறது. பிறகு 1835ல் அது  மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மருத்துவப்பயிற்சிப்பள்ளியாக மாற்றப்படுகிறது. தொடக்கத்தில் ஆங்கிலேயர்களே இங்கு பயிற்சி எடுத்தார்கள். 1842 முதல் அந்த பள்ளியில் இந்தியர்களும் அனுமதிக்கப்பட்டார்கள்.

1875- ஆம் ஆண்டுதான் முதன்முதலாக இங்கு ஒரு பெண் சேர்ந்து மருத்துவம் படிக்கிறார். உலகின் முதல் நான்கு பெண் மருத்துவர்களில் இவரும் ஒருவர்.  அவர் பெயர் மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப் (Mary Ann Dacomb Scharlieb). இங்கிலாந்திலிருந்து இங்கு வந்து மருத்துவராகி மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்று மீண்டும் மெட்றாஸ்க்கு திரும்பி வந்தார்.  இவரது கணவர் வில்லியம் மேஸன் ஸ்கார்லீப் ஒரு வழக்கறிஞர். அன்றைய காலத்தில் மெட்றாஸில் நிகழும் பேறுகால மரணங்களை பார்த்து மேரி ஆன் மிகவும் வருத்தப்பட்டார். அந்த பெண்கள் ஆண்மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு வரத்தயங்குவதை உணர்ந்து அவர்களுக்காக எப்படியாவது ஒரு பெண் மருத்துவரைக் கண்டுப்பிடிப்பது என்று முடிவெடுத்து தேட அவருக்கு ஏமாற்றம்தான் எஞ்சியுள்ளது. அப்போது மேரியின் கணவரின் நண்பர் எட்வர்ட் பால்ஃபோர்ட் என்பவர் மெட்றாஸ் மருத்துவக்கல்லூரியின்  தலைவராக இருந்தார். பால்ஃபேர்ட் மேரியிடம் நீயே மருத்துவராகி இவர்களுக்கு சிகிச்சை தரலாமே  என்று ஆலோசனை சொல்லியுள்ளார்.   மேரியின் கணவர் வில்லியம் அது நல்ல யோசனை என்று ஊக்கமூட்ட மேரி கல்லூரியில் சேர்ந்து மருத்துவரானார். செவிலியராக அந்த மருத்துவமனையில் வேலைப்பார்த்துக்கொண்டே மருத்துவம் பயில தொடங்கினார்.  மேரிக்கு அப்போது மூன்று குழந்தைகள் இருந்தனர். அவர்களையும் வளர்த்தபடியே செவிலிப்பணிகளையும் செய்துக்கொண்டே மருத்துவமும் படிப்பது சாதாரண வேலையல்ல. பெண்களால் மட்டுமே இதுபோன்ற சுமைகளை சமாளிக்கமுடியும். ஆனால் அன்றாடம் பிரசவ சிக்கல்களால் பெண்கள் பலர் இறக்கும் காட்சிகளை பார்க்கும்போது  இந்த சுமையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று அவருக்கு தோன்றியிருக்கக்கூடும்.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு தனது மருத்துவ இளநிலைப்படிப்பை வெற்றிகரமாக முடித்தவர் முதுகலைப்பட்டம் படிக்க லண்டனுக்கு சென்றார். லண்டனில் எலிசெபத் ஆண்டர்சன் என்னும் பெண் மருத்துவரைச் சந்திக்கிறார். ஆண்டர்சன்தான் அப்போது லண்டனிலிருந்து ஒரேயொரு பெண் மருத்துவர். ராயல் லண்டன் மருத்துவப்பள்ளி என்ற பெயரில் மருத்துவப்பயிற்சிப்பள்ளியொன்றை நடத்தி பெண்களுக்குப் பயிற்சி தருகிறார்.  எலிசெபத்தை சந்திக்கும் மேரிஆன்  தான் மருத்துவம் முதுகலை படிக்க விரும்புவதாகச் சொல்கிறார். மேரிஆன்னின் மெல்லிய பலவீனமான தேக அமைப்பை பார்க்கும் எலிசெபத் இவரால் மருத்துவராக முடியுமா என்ற ஒருவித சந்தேகத்துடனேயே நம்பிக்கை இல்லாமல் சேர்த்துக்கொள்கிறார். ஆனால் படிப்பின் மீது மருத்துவ சேவை மீதும் மேரி ஆன் காட்டும் ஈடுபாட்டை பார்த்து வியந்துபோகிறார். மேரி ஆன் மருத்துவத்தில் தங்கப்பதக்கம் வாங்கி தேர்ச்சியடைகிறார். அன்றைய காலத்தில் பெண் மருத்துவர்கள் என்பதெல்லாம் பெரிய சாதனை  விக்டோரியா மகாராணி வரைக்கும் அந்தச்செய்தி செல்கிறது. ராணி மேரியை அழைத்து பேசுகிறார். இந்தியாவில் குறிப்பாக மெட்றாஸ் மாகாணத்தில் பிரசவகாலத்தில் பெண்கள் படும் சிரமங்களை அவர்களது மரணங்களை பற்றி மேரி சொல்ல ராணி அதை எல்லாம் பொறுமையாக கேட்கிறார். பெண்களின் சிரமத்தை பெண்களைவிட வேறு யார் புரிந்துக்கொள்வார்கள். மேரிக்கு உதவி செய்வதாக ராணி சொல்கிறார். படிப்பை முடித்து மெட்றாஸ் திரும்பிய மேரி ஒரு மகப்பேறு மருத்துவமனையை ஆரம்பிக்கிறார். அதுதான் இன்றைய கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை.

கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறுவின் அன்றைய பெயர் விக்டோரிய காஸ்ட் & கோஷா (Victoria Caste and Gosha) மருத்துவமனை. அந்தக்காலத்தில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்களே இந்த பேறுகாலத்தில் அதிகம் சிரமப்பட்டுள்ளார்கள். தொடர் மகப்பேறில் பெண்கள் பலர் உயிரிழந்துள்ளார்கள். இதை கவனத்தில் கொண்டே இஸ்லாமிய பெண்கள் முகத்தை மூட அணியும் கோஷா (புர்கா)  என்ற பெயரிலேயே மருத்துவமனையைத் தொடங்கினார்.    1885-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் மூர்ட்ஸ் கார்டனில் The Royal Victoria gosha Hospital என்ற பெயரில் இந்த மருத்துவமனை நிறுவப்பட்டது. பிறகு 1890-ல்  ராஜா வெங்கடகிரியால் பிரிட்டிஷ் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட இடத்தில் இந்த மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டது.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமியை உருவாக்கியதும் இதே கோஷா மருத்துவமனைதான்.  அந்நாட்களில் பெண்கள் படிக்க மிகக்கடுமையான எதிர்ப்புகளும், கட்டுப்பாடுகளும் இருந்தன. புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர முத்துலெட்சுமி விண்ணப்பிக்கிறார். அதை பலர் கடுமையாக எதிர்க்கிறார். ஆனால்   முற்போக்கு கருத்துக்களை கொண்ட மன்னர் மார்த்தாண்ட பைரவத்தொண்டைமான்  எதிர்ப்புகளை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் முத்துலெட்சுமி கல்லூரியில் படிக்க அனுமதி தருகிறார். கல்லூரியில் சேர்ந்ததும் முத்துலட்சுமியின் தாயார் உடல்நலக்குறைவால் இறந்துபோகிறார். தாயாரின்  உடல்நலக்குறைவால் அவர் பட்ட வேதனைகளை , நோயின்  கொடுமைகளையையும் நேரில் பார்த்தவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.  மேரி ஆன் போன்றே முத்துலட்சுமியும் மருத்துவப்படிப்பில் தங்கப்பதக்கம் பெறுகிறார். மேரி ஆன்  கோஷா மருத்துவமனையை உருவாக்கியதுபோல முத்துலெட்சுமி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிறுவுகிறார்.

இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் போன்ற பெருமையும் டாக்டர் முத்துலெட்சுமிக்கு உண்டு.  தவிர சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையும் உண்டு. அவரது பதவிக்காலத்தில்தான் தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச்சட்டம்,பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் என்று பெண்களுக்கான பல உரிமைகளை பெற்றுத்தந்தவர். கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக அடையாறில் அவ்வை இல்லம் உருவாக்கியவர். பெரியாரின் ஆலோசனையின் பேரில் டாக்டர் முத்துலட்சுமி சட்டமன்றத்தில் தேவதாசி தடுப்புச்சட்டத்தை முன்மொழிந்து பேசும்போது  “தேவதாசிகள் புனிதமானவர்கள். அவர்கள் கடவுளுக்குச் சேவை செய்யப் பிறந்தவர்கள். அவர்கள் அடுத்த பிறப்பில் சொர்க்கத்தில் பிறப்பார்கள்” என்று சத்தியமூர்த்தி சொன்னார். அப்போது எழுந்து பதிலளித்த முத்துலட்சுமி, “தேவதாசிகள் சொர்க்கத்திற்குச் செல்வதாக இருந்தால் இனிமேல் சத்தியமூர்த்தி அவர்கள் தங்கள்  வீட்டுப்பெண்களைத் தேவதாசிகளாக்கி அடுத்த பிறவியில் சொர்க்கத்தில் பிறக்கலாமே” என்று சொல்ல எல்லாரும் வாயடைத்து நின்றார்கள்.

கோஷா மருத்துவமனை முற்போக்கு பெண்மணிகளை மட்டுமல்ல வீராங்கனைகளையும் உருவாக்கியது.  இதே மருத்துவமனையில்தான் கேப்டன் லட்சுமிசாகலும் மருத்துவம் படித்தார். பின்னாட்களில் நேதாஜியின் இராணுவத்தில் சேர்ந்து உலகின் முதல் பெண் இராணுவப்படையான  ‘ஜான்சி ராணி’ படைப்பிரிவை  தலைமையேற்று நடத்தியவர். லட்சுமி சாகலின்  தாயாரும், தங்கையும் அமெரிக்காவில் இருந்தார்கள். லட்சுமி சாகலின் தந்தை இறந்திருந்த நிலையில் தனியாக வசித்துவந்தவர்  சிங்கப்பூரில் இருந்த அவரது உறவினர் ஒருவருக்கு மருத்தும் பார்க்க செல்கிறார். அங்குள்ள தென்னிந்திய பெண் தொழிலாளர்களின் சுகாதாரமற்ற வாழ்க்கைச்சூழலை  பார்க்கிறார். அவர்களின் இறப்புவிகிதம் கண்டு மிகுந்த  மனவேதனை அடைகிறார். மீண்டும் மெட்ராஸ் திரும்பாமல் சிங்கப்பூரிலேயே தங்கி மருத்துவமனை தொடங்குகிறார். பிறகு நேதாஜியை சந்திக்கிறார். ஜான்சிராணி படைப்பிரிவின் தளபதி மட்டுமின்றி நேதாஜி உருவாக்கிய அமைப்பில் பெண்கள் நலனுக்கான அமைச்சர் பொறுப்பையும் ஏற்கிறார்.

ஆண்கள் படித்தால் அது ஆணுக்கான படிப்பு மட்டுமே. ஆனால் ஒரு பெண் படித்தால் அவரைப்போல நூறு பெண்களை உருவாக்குவார்கள் என்பதற்கு மேரிஆன் உதாரணம்.  மேரி ஸ்கார்லீப்  அவரது சுயசரிதையை  அவரே கைப்பட ரெமினிசென்ஸ் என்ற பெயரில் புத்தகமாக  எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்திலிருந்து

“என்னைப்பற்றி மற்றவர்கள் தெரிந்துக்கொள்வதற்காக இந்த கதையை எழுதவில்லை. எனக்குப் பிறகு  மருத்துவத்துறைக்கு  வரும் பெண்கள் அவர்கள் பணியை செம்மையாக செய்வதோடு கூடவே கடின உழைப்பும் அக்கறையும்  இருந்தால் வாழ்க்கை முழுக்க வெற்றியும்,மகிழ்ச்சியும் கிடைக்கும். ஒரு பெண்ணால் குடும்பத்தையும், வீட்டு வேலைகளையும், மருத்துவப்பணியையும் ஒன்று போலக்கருதி வெற்றிகரமாக அதை செயல்படுத்தமுடியுமா என்ற கேள்விக்கான விடையைத்தான்  நான் இந்த புத்தகம் வழியாக உங்களுக்கு சொல்லியுள்ளேன்’’

இந்த மருத்துவமனையில் இதுவரை ஆயிரம் ஆயிரம் பெண்கள் வெற்றிகரமாக பிரசவம் முடித்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இரண்டாவது வாழ்க்கையை  கொடுத்துள்ளது. அங்கு பிறந்தவர்கள் இன்றும் அந்த மருத்துவமனையை நினைவுகூர்கிறார்கள்.  இந்த எல்லா பெருமைகளுக்கும்   பின்னால் இருப்பது மேரி ஆன் என்ற பெண்மணி. எங்கோ வேறு ஒரு மண்ணில் பிறந்த மேரி போன்ற மகத்தான பெண்மணிகள் இந்த மண்ணுக்காக தங்கள் வாழ்வை அர்பணித்துள்ளார்கள்.. எண்ணற்ற உயிர்களை  காப்பாற்றியுள்ளார்கள் என்று நினைக்கும்போது இந்த மண் மீது இயல்பாகவே ஒரு பெருமிதம் வருகிறது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்
  2. சென்னையின் முகமான  தி.நகர்- விநாயக முருகன்
  3. சென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் - விநாயக முருகன்
  4. ஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்
  5. அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
  6. அடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்
  7. ஒரு வங்கி திவாலான கதை  - விநாயக முருகன்
  8. மைனர் மாளிகையும் ஒரு நள்ளிரவுப் படுகொலையும் 
  9. சென்னையின் சிவப்பு மாளிகைகள்- விநாயக முருகன்
  10. சென்னையின் சில பெயர்களும், காரணங்களும்- விநாயக முருகன்
  11. கன்னிமாராவின்  கதை-விநாயக முருகன்
  12. பிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்
  13. ஒரு விளையாட்டின் கதை - விநாயக முருகன்
  14. பின்னிமில்லின் கதை - விநாயக முருகன்
  15. ஒரு கால்வாய் மறைந்த கதை  - விநாயக முருகன்
  16. தேசத்தை அளந்த கால்களின் கதை - விநாயக முருகன்
  17. ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை - விநாயக முருகன்
  18. தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் - விநாயக முருகன்