அசைவறு மதி 15

நண்பன் ஒருவன் சிறுநீரகக்கோளாறின் ஆரம்பநிலையில் இருந்தான். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்ததாகச் சொன்னான். அவனுக்குப் பல டிப்ஸ்கள் கொடுத்தேன். அவன் செய்த பாடில்லை. அவனுக்குக் கம்பெனி கொடுப்பதற்காக ஒரு வாட்ஸப் குழு ஆரம்பித்தேன். முழுக்க முழுக்க உடற்பயிற்சி சார்ந்து. எடை குறைப்பிற்காக ஆரம்பித்தது. அதை நான் தான் ஆரம்பித்தேன் என்ற பொறுப்பிற்காகத் தினமும் நான் செய்யும் நடைபயிற்சி உடற்பயிற்சி மற்றும் டயட் களைப் பதிவிட்டேன். நான்கு உடன் படித்த நண்பர்கள் அந்தக் க்ரூப்பில் இருந்தார்கள். என் நண்பன் எடை குறைந்தானோ இல்லையோ நான் குறைந்துவிட்டேன். பிறகு அதே போல் தொழில்முறை சில நண்பர்களை இணைத்து ஒரு வாட்சப் க்ரூப் ஆரம்பித்தேன். அதில் உடல் நலம் சார்ந்து அதாவது உடற்பயிற்சி மற்றும் உடல் நலம் சார் பதிவுகளுக்காக மட்டும். நம் உடற்பயிற்சிகளைப் பதியலாம். உடல் நலத்திற்கான எந்தப் பதிவையும் ஃபார்வர்ட் செய்யலாம் என்று விதி இருந்தது. இரண்டு க்ரூப் நண்பர்களும் நாம் பதிவதை வேடிக்கைப் பார்ப்பார்கள். ஆனால் பதியமாட்டார்கள். சிலர் நான் பயிற்சி செய்கிறேன். உன்னைப் போல் பதிவதில்லை என்று சமாளித்தார்கள். உங்களுடைய ஒரு பதிவு இன்னொருவருக்கு ஊக்கத்தைத் தரும் என்ற லாஜிக் எல்லாம் அவர்களுக்கு எட்டவில்லை. நிறைய நண்பர்கள் பயிற்சி செய்ய வில்லை. செய்ய அவர்கள் யோசிக்கவும் இல்லை. சிலர் செய்ய முடியவில்லை.

நிறைய நண்பர்கள் உடற்பயிற்சி செய்யாமைக்குக் காரணங்கள் சொன்னார்கள்.  அனைவருக்கும் சில காரணங்கள் பொத்தம்பொதுவாய் இருந்தன.  குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவேண்டும். வீட்டு வேலைகள் , பிறகு அலுவலகம் காலையிலேயே கிளம்பிவிடுவதால் நேரமே இல்லை என்று.

அவர்களில் சிலரே அத்தி பூத்தாற் போல் உடற்பயிற்சி போன்ற பதிவுகளை இடுவார்கள். என்றைக்கு அவர்கள் உடற்பயிற்சியோ, நடை பயிற்சியோ செய்கிறார்களோ அன்று அவர்களுக்குக் காரணமே இருக்கவில்லை.

இப்பொழுது கொரோனோ தொற்று என ஊரடங்கு. கிட்டத்தட்ட 40 நாட்கள். பள்ளிகளுக்கு விடுமுறை. பெரும்பாலான அலுவலகங்களுக்கு விடுமுறை. ஆனால் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டுமே.  அவர்கள் சொன்ன நேரம் தான் இப்பொழுது கிடைத்திருக்குமே. ஆனால் செய்தார்களா என்றால் செய்திருக்கமாட்டார்கள். ஏன் என்றால் ஒரு செயல் நடக்கிறது என்றால் நாம் தான் காரணம், செயல் நடக்கவில்லை என்றாலும் நாம் தான் காரணம் என ஏற்கனவே கூறியிருக்கிறேன் அல்லவா. இதற்கு இது போன்ற நிகழ்வுகள் தான் உதாரணம். அவர்களைக் குறை கூறவில்லை. அவர்கள் என் நண்பர்கள் தான். ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயமான காரணம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டவன் நான். ஆனால் பிரச்சினை என்னவென்றால்,

ஒரு விசயத்தைச் செய்துவிடவேண்டும் என்று நாம் தீர்மானித்தால் தான் அது செயல்வடிவம் பெறும்.

நாம் அதற்கு எண்ண வடிவம் முதலில் கொடுக்கவேண்டும் . பிறகு செயல் வடிவம் தரவேண்டும். நமக்கு அது பற்றிய ஆசைகள் மட்டும் இருந்தால் போதாது. அதை நோக்கி நகர வேண்டும்.  ஒரு விசயத்தைச் செய்வதற்கு அதைப் பற்றி எண்ணுவதும் அதற்குச் செயல் வடிவம் கொடுப்பதும் தான் முக்கியம். அது எந்தக் காலகட்டமாய் இருந்தாலும் சரி.

ஒரு சிறுமி இருக்கிறாள். அவளுக்குப் பள்ளிகூடத்தில் யூனிஃபார்ம் போட்டுக்கொண்டு போவது பிடிக்கவில்லை. அவள் எல்லோரும் போல் இருக்கவேண்டும் என ஆசைப்படவில்லை. அவள் படித்தது ஒரு கிறித்துவ சமூகத்தால் நடத்தப்பட்ட ஆன்மீகம் சார் பள்ளி. ஆன்மீக வகுப்புகளுக்குத் தரும் மெடல் போன்ற வெகுமதிகளை ஒன்றாய் கோர்த்து தன் யூனிஃபார்மில் ஒரு டிசைன் செய்து அதைப் போட்டுக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறாள். எல்லோரும் போல் இருக்கமுடியாது என்ற உந்துதல் அது. யூனிஃபார்ம் போட்டுத்தான் செல்ல வேண்டும். அதைத் தனித்துவமாய்ச் செய்யவேண்டும் என்று அப்படி செய்கிறார்.

இது சிறுமியாக இருக்கும் போது மட்டும் தோன்றிய எண்ணங்களா என்று கேட்டால் இல்லை. அவள் சுவாரஸ்யமாகவே இருந்து பழகிவிட்டாள். தன் வாழ்வில் சுவாரஸ்யங்கள் உயிர்ப்புடன் இருந்துகொண்டே இருந்தால் தான் தன் தனித்துவத்தை வாழ்வின் பல்வேறு கனங்களில் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கமுடியும் என்று ஆசைப்பட்டாள். அது அவளுடைய எந்தவயதிலும் வெளிப்பட்டுக்கொண்டே தான் இருந்தது. இருக்கிறது.

அந்தச் சிறுமி முதுகலை படித்து, முனைவர் பட்டம் வாங்கி ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக மாறினார். இப்பொழுது  64 வயது முதியவர் அந்தச் சிறுமி. கடந்த வருடம் அவர் என்ன செய்தார் தெரியுமா,  ஃபேஷன் டெக்னாலஜி யில் தன்னைப் போன்ற அறுபதுவயதுக்கு மேலானவர்கள் இருக்கிறார்களா எனத் தேடுகிறார். அறுபது வயது க்கு மேலான ,ஃபேஷன் டெக்னாலஜியில் விருப்பம் உள்ள பெண்கள் என்ன செய்கிறார்கள் எனத் தேடுகிறார். அவருக்குத் தேவை சாதாரணப் பெண்கள், ஆனால் சுவாரஸ்யமாக வாழும் வெகு சாதாரணப் பெண்கள்.  அவர்கள் ஃபேஷன் டெக்னாலஜி பற்றியோ மாடலிங்க் பற்றியோ எதுவும் எழுதுகிறார்களா என்று பார்த்திருக்கிறார். அப்படி யாரும் எழுதவில்லை. அதனால் என்ன நம்ம எழுதுவோம் என்று ஒரு BLOG ஆரம்பித்துவிட்டார்.

நம்மளே மாடல் போல் ஃபோட்டோ எடுத்துப்போட்டால் என்ன என்று ஒரு இருபது வயது ஃபோட்டோகிராபரை அழைத்துக்கொண்டு ஃபோட்டோ எடுத்து பதிவிட்டார். முப்பது வயதிலிருந்து அறுபது வயது வரை அதிகமான உலக ரசிகர்கள் தொடரும் BLOG அது. இன்ஸ்டாக்ராமில் 18 வயதிலிருந்தே இந்த 64 வயது பாட்டிக்கு ரசிகர்கள் குவிகிறார்கள்.

ACCIDENTAL ICON என்ற BLOG எழுதும் லைன் ஸ்லேட்டர் என்ற பெண் ஆளுமை தான் அது.

அவரது சில ஃபோட்டோக்கள் பார்த்துவிட்டு நீங்கள் ஏன் தலை முடிக்கு DYE அடிக்கவில்லை எனக் கேட்கிறார்கள்.  ‘வயது மாறக்கூடியது’ எனக்கு இருபது வயது இல்லை. நான் இருபது வயதாக இருக்கவும் ஆசையில்லை, நான் நானாகவே இருக்கிறேன்’ என் கிறார்.

சாதாரண உடையில் எப்படி நம்மை வெளிப்படுத்துகிறோம் என்பதே தனித்துவம் என் கிறது அவரது புகைப்படங்கள். ஒரு பேராசிரியை தனது 63வது வயதில் ஒரு விசயத்தைத் தேடுகிறார். கிடைக்கவில்லை. தானாகவே மாறுகிறார். இப்பொழுது உலக ஃபேஷன் ரசிகர்கள் அவரைத் தேடுகிறார்கள்.

நம்மூர் காரர்களுக்கு நாற்பதைத் தாண்டிவிட்டால் போதும், இனி மேல் இதைச் செய்து என்ன ஆகிவிடப்போகிறது என்று ஒரு ஒன்றுக்கும் ஒப்பேறாத டயலாக் வைத்திருப்பார்கள்.

லைன் ஸ்லேட்டரை எதுவுமே தடுக்கவில்லை. அவரால் இருபது வயது டெக்னிஷீயன் களுடன் பணியாற்ற முடிகிறது.  அவர்களின் படைப்பாற்றலைப் புகழ்ந்து பேசமுடிகிறது. அவர்களுக்கு இணையாக லைன் ஸ்லேட்டரால் இயங்க வைப்பதே அவரது தனித்துவம் தான்.  காரணம் அவரது ஆர்வம். ஒருவரை அவரது எண்ணங்கள் தான் வழிநடத்துகின்றன. நாளை என்னவாக இருக்கப் போகிறோம் என்பதை நமது தனித்துவமும் நமது இன்றைய ஆர்வத்தின் எண்ணங்களும் தான் முடிவுசெய்கின்றன.

போகுற போக்கில் ஆட்டோக்களின் பின்னால் ஐந்து விரலும் ஒன்றல்ல, ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு விதை இருக்கு என்றபடியே எழுதிவிட்டு பேசிவிட்டுச் சென்றுவிடலாம். ஆனால் அப்படிப்பட்ட தனித்துவத்தை வெளிக்கொண்டு வருதல் என்பது அப்படி எழுதிவிடுவது போன்று எளிது அல்ல.

நமது ஆர்வம், எந்தப் புள்ளியில் மையம் கொள்கிறதோ அதைக் கண்டறிய வேண்டும். அதில் நம் எண்ணங்களையும் நேரத்தையும் செலுத்த நம் தனித்துவம் வெளிவரும்.

லைன் ஸ்லேட்டர் போன்ற ஆளுமைகள் வயதைப் பார்ப்பது இல்லை. அவர்கள் வயதைத் தாண்டிய எண்ணங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நமது எண்ணங்களுக்கு வயது ஒன்றும் கிடையாது.

இந்தப் பிரபஞ்சம் நமக்குப் பலவற்றைத் தந்திருக்கிறது. தந்துகொண்டிருக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை காலத்தின் வரம்பிற்குள் கட்டுப்பட்டவை.

நம் ஆசைகளை,ஆர்வத்தைச் செய்துபார்க்க,  நம் எண்ணங்களைச் செயல்வடிவமாய் செய்ய  நமக்கு வயது ஒரு தடை இல்லை. புதியதான ஒன்றைச் செய்து பார்த்தலும், நம் ஆர்வத்தின் படி ஒன்றைச் செய்து பார்த்தலும் வாழ்வின் சுவாரஸ்யங்களைக் கூட்டும்.

உண்மையில் நாம் நம் வாழ்வை நேசிப்போம் தானே.

நம் வீடு அழகாய் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம் தானே.

டிவிக்களின் அடியே பொம்மைகள் சில வீட்டில் வைக்கிறார்கள். அழகிற்குத்தானே,

வீட்டில் அலங்காரச்செடிகள் வைக்கிறார்கள் , புத்தாக்கம் பெறத்தானே,

வேலை பார்க்கும் அலுவலக மேசையில் ஏதாவதுஅழகு சேர்ந்துவிட்டால் மகிழ்கிறோம் தானே,

நம் அடுப்பறையில் என்றாவது ஒரு நாள் ஒழுங்குமுறையில் நம்மைச் சார்ந்தவர்கள் பாத்திரங்களை அடுக்கிவைத்து அழகுபடுத்தினால் இன்புறுகிறோம் தானே,

நம் உடை நன்றாக இருக்கிறது என்று பார்த்துக்கொள்கிறோம் தானே,

ஒரு புடவையை எடுத்து இதை இப்பொழுது தான் கட்டினோம் கொஞ்ச நாள் ஆகட்டுமென வேறொரு புடவையைத் தேர்ந்தெடுத்து அழகு பார்க்கிறோம் தானே,

நம்மை அறியாமலே நம் வாழ்வு நம்மால் நேசிக்கப்படுகிறது.

ஒரு காலை சிற்றுண்டிக்கு நேற்று இட்லி என்றால் இன்று தோசை என சுவாரஸ்யம் கேட்கிறது.

புதிய பூ ஒரு காலைப்பொழுதின் தோட்டத்தை அழகாய் மாற்றுகிறது.

சிலர் வீட்டில் சாமி சிலைகளுக்கு நிரந்தரமான ப்ளாஸ்டிக் மாலை போட்டிருப்பார்கள். அதைக் காட்டிலும் வாரம் ஒருமுறையாவது நிஜப் பூ வைத்துப் பார்த்தால் அது அழகைக் கூட்டுகிறது தானே.

நாம் சுவாரஸ்யங்களால் நேசிக்கப்படுகிறோம். நாமும் சுவாரஸ்யங்களை நேசிக்கிறோம். அப்படியான உலகை நம்மைச் சுற்றி வடிவமைத்துக்கொள்கிறோம்.

நம் வாழ்விலும் சுவாரஸ்யங்கள் கூடினால் தானே வாழ்வும் அழகாய் மாறும். சுவாரஸ்யங்கள் என்பவை யாவை, நேற்றைய இட்லிக்குப் பதிலான தோசை போல் தான்,

ஒரு தாவரம் தன் வளர்ச்சியில் புதியதாய் ஓர் இலையை, ஒரு மொட்டை ஒரு பூவைச் செய்து பார்ப்பது போல் தான்,

ஆடைகளின் மீதான நம் விருப்பத்தில் இன்று என்ன வித்தியாசம் எனச் செய்வது போல் தானே.

உங்களுக்கு உடற்பயிற்சி செய்யவேண்டும். காலையில் குழந்தைகளைக் கிளப்பவேண்டும். அலுவலகம் கிளம்பவேண்டும். நேரம் இல்லை. இதில் சுவாரஸ்யம் இல்லையே.

குழந்தைகளையும் கிளப்பவேண்டும், அலுவலகமும் கிளம்பவேண்டும், உடற்பயிற்சியும் செய்யவேண்டும் என்பதில் தானே சுவாரஸ்யம்.

மருத்துவர் நடக்கச் சொல்லியிருக்கிறார் நேரம் இல்லை என்று சமாளிப்பது எல்லாம் நம்மை நாமே ஏமாற்றும் வேலை.

லைன் ஸ்லேட்டர் தன் ஆர்வத்தில்  இதைச் செய்து பார்த்துவிடவேண்டும் என்று சுவாரஸ்யம் சேர்த்ததால் வந்த விளைவே ACCIDENTAL ICON.

முதலில் சுவாரஸ்யங்களுக்கு ஆர்வப்படுங்கள், வாழ்வு சுவாரஸ்யம் ஆகும். வாழ்வு சுவாரஸ்யமானால், உங்கள் தனித்துவம் தானாய் வெளிவரும்.

இப்போது உலகம் சொல்வது என்ன, தனித்திரு தானே. அதைத்தான் நாமும் பேசுகிறோம்.  ஆனால்  இது ‘ தனித்துவமாயிரு’ .

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. கடைசியாய் எப்பொழுது முரண்பட்டீர்கள்? : பழனிக்குமார்
  2. "நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்" : பழனிக்குமார்
  3. "ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்" -பழனிக்குமார்
  4. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நிறுவ முடியுமா?-பழனிக்குமார்
  5. யுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்
  6. உங்கள் அக வயது என்ன?-பழனிக்குமார்
  7. குழந்தைமையிலிருந்து ஆளுமை -பழனிக்குமார்
  8. உங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்
  9. தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார்
  10. கொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்
  11. பிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்
  12. நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்
  13. உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? - பழனிக்குமார்
  14. ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்
  15. 'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்
  16. இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்
  17. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்