மதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது.

கிளின் பார்லோ

மதராஸ்மண்ணும் , கதைகளும் -5  

கால எந்திரமொன்றில் பயணித்து மதராஸ் என்ற தொன்மையான வரலாற்றுப்புத்தகத்தின் கடந்தகால பக்கங்களின் சில சுவையான நிகழ்வுகளை ப்பார்க்கும் ஒரு காலவெளிப் பயணம் இந்தத் தொடர்

மதராஸின் வரலாற்றுப்பக்கங்களில் பின்னிமில்லுக்கென்று தனித்த இடமுண்டு. இந்த ஆலைக்கு கிட்டத்தட்ட 250 ஆண்டு வரலாறும் இரத்தம் சிந்திய மனிதர்களின் கதைகளும் உள்ளது. இங்கிலாந்திலிருந்து கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் சார்பாக வியாபாரம் செய்ய வந்தவர்களில் ஒருவர்தான் சார்லஸ் பின்னி. 1769இல் மெட்ராஸ் வந்திறங்கினார் பின்னி. அன்றைய வாலாஜா நவாப்புடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பின்னி குடும்பத்தினர் மெல்ல மெட்ராஸ் மண்ணில் தங்கள் வணிகத்தை விரிவாக்க முயல்கிறார்கள்.  1876 மற்றும் 1881 ஆம் ஆண்டுகளில் பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் மில்  என்ற இரண்டு  ஆலைகளை நிறுவுகிறார்கள். 1800இல் ஜான் பின்னி, டெனிசன் என்பவருடன் இணைந்து நிறுவனத்தை நடத்தினார். அந்த நிறுவனத்திற்கு பின்னி அண்ட் டெனிசன் என்று பெயர். 1814இல் பின்னி அண்ட் கோ என்று பெயர் மாற்றப்பட்டது.  கப்பலில் இருந்து சரக்கு மூட்டைகளை கரைக்கு கொண்டு வர இந்த நிறுவனம் முப்பதுக்கும் மேற்பட்ட சிறியரக படகுகளை வைத்திருந்தது. பின்னிமில்லின் பெயர் உலகமெங்கும் பரவியிருந்தது.  முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் இந்த ஆலையில் நெய்யப்பட்ட சீருடைகளுடன்தான் இந்திய இராணுவமும், பிரிட்டிஷ் இராணுவமும் உலகெங்கும் சென்று போரிட்டுக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அமெரிக்க உள்நாட்டு யுத்தம் நடந்துக்கொண்டிருந்ததால் அங்கிருந்து பருத்தியை இங்கிலாந்துக்கு அனுப்புவதில் சிக்கல்கள் இருந்துள்ளன.  எனவே இந்தியாவில் பருத்தியை ஒரு பணப்பயிராக மாற்றி விவசாயிகளை விளைவிக்க வைக்கிறார்கள்.  1866-ல் அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. எனவே இந்திய பருத்திக்கான தேவை இங்கிலாந்தில் குறையத்துவங்கியது. அதேநேரம் அபரிமிதமான பருத்தி விவசாயத்தால் இந்தியாவில் பஞ்சின் இருப்பு கணிசமாக உயர்கிறது. இங்கு தேங்கிய பருத்தியைக் கொண்டு தமிழகம் முழுக்க பல நூற்பாலைகள் அக்காலகட்டத்தில் துவங்கப்பட்டன. ஹார்வி என்பவர் 1885-ல் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திலும், 1889-ல் தூத்துக்குடியிலும், 1892-ல் மதுரையிலும் நூற்பாலைகளை அமைத்தார். ஸ்டேன்ஸ் என்பவர் 1895-ல் கோவையில் ஆரம்பித்தார்.

பருத்தி ஆலைகளுக்கு தேவையான பஞ்சு தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வந்தன. 1870-களுக்கு நாடெங்கும் ரயில் போக்குவரத்து பரவலாக்கப்பட பருத்தியை கொள்முதல் செய்து தேவையான இடங்களுக்கு உடனடியாக கொண்டு  செல்ல முடிந்தது. ஆனால் சற்றேக்குறைய பருத்தி விவசாயம் தொடங்கிய அதே காலத்தில்தான் இந்தியாவில் கொடுமையான தாதுப்பஞ்சம் ஏற்படுகிறது. உணவு கிடைக்காமல் நாடெங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக சாகிறார்கள். மதராஸ் போன்ற பெருநகரங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள்.   குறிப்பாக ஆங்கிலேயர்களின் வரிவசூல் கொடுமை தாங்கமுடியாமலும், ஜமீன்தார்கள், நிலப்பிரபுக்களின் கொடுமையாலும் பாதிக்கப்பட்ட இடைநிலை சாதியை சேர்ந்த சிறு விவசாயிகள் , தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் மதராஸ் , மதுரை, கோவை போன்ற  ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க செல்கிறார்கள்.    அப்படி குடியேறியவர்கள்தான் பின்னி ஆலையின் பெரும்பான்மை தொழிலாளர்கள். மதராஸில் அப்படி குடியேறிய மக்களை ஆங்கிலேயர்கள் கொத்தடிமைகள்போல நடத்தினார்கள். அதிக உழைப்பு நேரம், குறைந்த கூலி என்று அவர்களை நாள்முழுவதும் வேலைவாங்கி ஆலையை நடத்தினார்கள்.    அப்படி குடியேறிய காலனிகளில் அம்மக்களை விலங்கினும் கீழாக ஆங்கிலேயர்கள் நடத்தினாலும், கிராமப்புற சாதிய கொடுங்கோன்மையை விட இது சற்று மேம்பட்டதாக இருந்ததால் அதனை அவர்கள் சகித்துக் கொண்டனர். இருந்தாலும் பசியிலும், பஞ்சத்திலும் , ஜாதிய அடக்குமுறைகளிலும் ஏற்கனவே செத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த கஷ்டம் பெரிதாக தெரியவில்லை. உணவும், உடையும், தங்குமிடமும், ஓரளவு மரியாதையும் கிடைக்கிறது என்று தேற்றிக்கொண்டு சுமையை பொருட்படுத்தாமல் ஆலையில் பணியாற்றினார்கள்

ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஆலையின் கெடுபிடிகள் அதிகமாயின. சூரிய உதயத்தைகூட பார்க்கமுடியாதளவு வேலைவாங்கினார்கள். காற்றோட்ட வசதியோ, மருத்துவ வசதியோ, சத்தான உணவோ அவர்களுக்கு அங்கு கிடைக்கவில்லை. ஆலைத்தொழிலாளர்களின் குழந்தைகளின் இறப்பு விகிதம் பிற பகுதிகளை விட எட்டு மடங்கு அதிகமாக இருந்தது. இந்த நிலையில்தான் அந்த மாபெரும் புரட்சி வெடித்தது.

1920-ல் ஒன்றிணைக்கப்பட்ட பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் மில்  ஆலைகளில் முதன் முதலாக தொழிற்சங்கம் தொடங்கப்படுகிறது. 1921 ஜூனில் மெட்ராஸ் லேபர் யூனியன் என்ற அந்த தொழிற்சங்கம் நடத்திய வேலை நிறுத்தம் இன்றும் வரலாற்றில் முக்கியமானதொன்றாக பார்க்கப்படுகிறது. ஆம் இந்தியாவில் அமைப்புரீதியாக தொடங்கப்பட்ட  முதல் தொழிற்சங்கம். அது நடத்தும்   வேலைநிறுத்தப்போராட்டம். இதற்கு முன்பே ஐஸ்ஹவுஸ் போன்ற சில சிறிய ஆலைகளில் வேலைநிறுத்தம் நடந்திருந்தாலும்  அவற்றையெல்லாம்  முறைப்படுத்தப்பட்ட அமைப்புரீதியிலான சங்கம் என்றோ போராட்டம் என்றோ சொல்லமுடியாது. ரஷ்யப்புரட்சி நடந்த மறு ஆண்டுதான் இந்தியாவின் உழைக்கும் வர்க்கம் ஒன்றாக இணைந்து இந்த சங்கத்தை ஆரம்பித்தார்கள்.

1915இல் துணி வியாபாரியான செல்வபதி செட்டியாரால் பின்னி மில்லில் தொடங்கப்பட்ட சிறு தொழிற்சங்கம்தான் இந்தியாவின் முதல் தொழிற்சங்கம். சென்னையில் முதன்முதலாக உழைப்பாளர்களின் திருநாளான மே தினம் கொண்டாட அவர்தான் முயற்சி எடுத்தார். பிறகு 1921இல் திரு வி.க தலைமையில் நடைப்பெற்ற பின்னிமில் போராட்டம்தான் பின்னிமில்லுக்கும் ஆலை தொழிலாளர்களுக்கும் வரலாற்றின் பக்கங்களில் தனித்த இடத்தை ஏற்படுத்தியது. அனால் இந்த வேலைநிறுத்தத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓர் அணியாகவும் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் இன்னொரு அணியாகவும் பிரிந்து நின்றார்கள். இதில் பிற்படுத்தப்பட்ட மக்கள் வேலைநிறுத்தத்திலும், தலித் மக்கள் வேலைநிறுத்தத்தை புறக்கணித்து ஆலைப்பணிக்கும் சென்றார்கள். இந்த நுட்பமான பிரித்தாளும் சூழ்ச்சியை ஆங்கிலேயர்களும், அவர்களிடம் சேவகம் புரிந்த சில ஜாதி இந்துக்களும் திட்டமிட்டு உருவாக்கி கலகம் ஏற்படுத்தினார்கள். இதில்  தலித் குடியிருப்புகளை தீவைத்து எரித்தார்கள். இந்த கலவரத்துக்கு புளியந்தோப்பு கலவரம் என்று பெயர். கலவரத்தில் சிலர் உயிரிழந்தார்கள். இன்றும் முதலாளித்துவம் இந்த பிரித்தாளும் உத்தியை பயன்படுத்திதான் தொழிலாளர்களை ஒன்றுசேராமல் பார்த்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்தியா  போன்ற  பல்வேறு ஜாதிய அடுக்குகள் கொண்ட தேசத்தில் இதுபோன்ற போராட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வேலை எளிதே.  இந்த கலவரம் பற்றி திருவிக அவரது சுயசரிதையில் விரிவாக பதிவு செய்துள்ளார். இந்தியவரலாற்றில் முதல்முறையாக சுயமரியாதையோடு எழுந்த தலித்துகளும் எதிர்தாக்குதல் நடத்தியுள்ளார்கள். பெரம்பூரில் இருந்த  பின்னி ஆலை ஊழியர்களின் குடியிருப்புகள் மீது தலித் குழுக்கள் பதில்தாக்குதல் நடத்தினர். அதைத்தொடர்ந்து புளியந்தோப்பிலும் சுற்றுப்பகுதிகளிலும் பிரிட்டிஷ் போலீசார் காவலை அதிகப்படுத்தி பலரை கைது செய்தார்கள். ஆறு மாத காலம் நடந்த இந்த வேலை நிறுத்த முடிவில் புதிய தொழிலாளர் நலச்சட்டங்கள் உருவாக்கப்பட்டன..

மதராஸ் லேபர் யூனியன்  பற்றி இன்னொரு சுவையான கதையும் உண்டு. அன்றைய ரயில்வே தொழிலாளர் தலைவராக இருந்தவர் ஜார்ஜ் அருண்டேல். கலாஷேத்ரா நிறுவனரும் பரதக்கலைஞருமான  ருக்மணி அம்மையாரின் கணவர்தான் ஜார்ஜ் அருண்டேல். இங்கிலாந்தில் பிறந்தவர். மதராஸ் வந்தவர் பிறகு  அடையாறில் இருந்த அன்னிபெசன்ட் அம்மையாரின் பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்தார். சங்கத்திலிருந்த நீலகண்ட சாஸ்திரியின் மகள் ருக்மணியை சந்தித்ததும் காதல் மலர்கிறது. ருக்மணி, ஜார்ஜ் அருண்டேல்  காதல் விவகாரம் வெளியில் தெரிகிறது. அந்தக்காதல் அந்நாட்களில் பலத்த சர்ச்சையை  ஏற்படுத்தியிருக்கிறது. அன்றைய நாளிதழ்களில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயமும் இதுதான்.  அன்னிபெசன்ட்டின் ஹோம் ரூலை எதிர்த்த எல்லாரும் இவர்கள் காதலையும் எதிர்த்துள்ளார்கள். சென்னைக்கடற்கரையில் நடந்த கூட்டத்தில் வ.உ.சி இந்த காதலை எதிர்த்து மிகக்கடுமையாக பேசினார். இந்து, சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்கள் இந்த காதலை எதிர்த்து கட்டுரைகள் எழுதின. தேசபக்தன் நாளிதழோ இவர்கள் காதலை ஆதரித்தது. ஒரு வெள்ளையன் நமது ஆச்சாரமான இந்துக்குடும்பப்பெண்ணை களவாடுகிறான். அதை நீங்கள் வெட்கமில்லாமல் ஆதரிக்கிறீங்களே என்று சுப்ரமணிய சிவா   திருவிகவை கடுமையாக திட்டியுள்ளார். அதற்கு திருவிக காதலின் அருமையும், வலிமையும் உங்களுக்கு புரியவில்லை. அதை புரிந்துக்கொள்ளாமல் காலத்தை வீணாக்கிவிட்டீர்கள். காதலையே உணராத நீங்கள் எப்படி இந்த நாட்டின் விடுதலையை பற்றி பேசமுடியும் என்று திருப்பி கேட்டுள்ளார். நீலகண்ட சாஸ்திரியின் மகள்தான் ருக்மணி   1920-ல்  அருண்டேலுக்கும், ருக்மணிக்கும் திருமணம் நடக்கும்போது ருக்மணிக்கு பதினாறு வயது. அருண்டேலுக்கு நாற்பத்திரெண்டு. திருவிக அவர்கள் இருவரையும் அழைத்து மதராஸ் லேபர் யூனியனுக்கு அழைத்து தொழிலாளர் முன்னிலையில் வாழ்த்தியுள்ளார்கள். இப்படி லேபர் யூனியன் ரத்தம் சிந்திய இடத்தில் பூக்களும் மலர்ந்துள்ளன.

1970ல் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் இந்த ஆலை முழுவதும் சேதமடைந்து தனது செயல்பாட்டை அடியோடு நிறுத்திவிட்டது.  பின்னர் இந்த ஆலை முற்றிலும் கைவிடப்பட்டு தமிழ் திரைப்பட இயக்குநர்களின்  சொர்க்கபுரியாக மாறியது. நாம் பார்க்கும் பல தமிழ்த்திரைப்படங்களின் பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டவையே.

முந்தைய தொடர்கள்:

4.ஒரு கால்வாய் மறைந்த கதை – https://bit.ly/3b5ypq7
3.தேசத்தை அளந்த கால்களின் கதை – https://bit.ly/2IZXNBK
2.ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை – https://bit.ly/3db1vWN
1.தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் – https://bit.ly/2J0okyC

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்
  2. சென்னையின் முகமான  தி.நகர்- விநாயக முருகன்
  3. சென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் - விநாயக முருகன்
  4. ஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்
  5. அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
  6. அடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்
  7. ஒரு வங்கி திவாலான கதை  - விநாயக முருகன்
  8. மைனர் மாளிகையும் ஒரு நள்ளிரவுப் படுகொலையும் 
  9. சென்னையின் சிவப்பு மாளிகைகள்- விநாயக முருகன்
  10. சென்னையின் சில பெயர்களும், காரணங்களும்- விநாயக முருகன்
  11. கன்னிமாராவின்  கதை-விநாயக முருகன்
  12. பிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்
  13. கோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்
  14. ஒரு விளையாட்டின் கதை - விநாயக முருகன்
  15. ஒரு கால்வாய் மறைந்த கதை  - விநாயக முருகன்
  16. தேசத்தை அளந்த கால்களின் கதை - விநாயக முருகன்
  17. ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை - விநாயக முருகன்
  18. தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் - விநாயக முருகன்