விடுமுறை வாசிப்புக் குறிப்புகள் (1)

ஒருநாள் திடீரென “இன்னிக்கு முராகாமி படிக்கணும்” எனத் தோன்றியது. காரணமேதும் இல்லை. சும்மா அப்படி ஒரு மனநிலை. அவரது புத்தகங்களை சென்னையிலே விட்டு வந்திருக்கிறேன் என்பதை இப்போது அலமாரியில் தேடிய போது தான் தெரிந்தது. பல்கலைக்கழக நூலகத்தில் தேடினால் கிடைத்தது Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage நாவல் மட்டுமே. 2012இல் ஜப்பானிய மொழியில் வெளியான இந்நாவல் ஒரே மாதத்தில் ஒரு மில்லியன் பிரதிகள் விற்றது. 2014இல் ஆங்கிலத்தில் வெளியானது.

படித்த மூன்று நாட்களில் இந்நாவல் என்னை மற்றொரு உலகுக்கு மந்திரக்கம்பாளம் போல தூக்கிச் சென்றது. இந்த விடுமுறை வாசிப்புக் குறிப்புகளில் முதலில் இந்த புத்தகம் பற்றி பேசுகிறேன்.

முதலில் இது என்ன ஒரு சாதாரணத் தலைப்பு என நினைத்தேன். ஆனால் வசித்து முடித்ததும் எவ்வளவு பொருத்தமான அழகான தலைப்பு எனத் தோன்றியது: Colorless Tsukuru Tazaki எனும் தலைப்பிலேயே நாவலின் plotline வந்து விடுகிறது. அது என்ன என அடுத்து சொல்கிறேன். இது ஒரு மிகச்சிறந்த தலைப்பு தான்.

முராகாமியின் நாவல்களுக்கு ஒரு டெம்பிளேட் உண்டு – ஒரு இனம்புரியாத இழப்புணர்வு, அது நாயகன் அல்லது நாயகியை செலுத்தும்; பல வினோத சம்பவங்களை தொடர்ந்து ஏற்பட்டு அவனை ஒரு சுழலுக்குள் இழுத்து செல்லும். கதை முடியும் போது அவன் தெளிவடைந்திருப்பான், கூடவே நாமும். முராகாமியை புகழின் உச்சிக்கு இட்டுச் சென்ற Norwegian Wood தவிர பெரும்பாலான நாவல்கள் மாய எதார்த்த கதைகளே. மாய எதார்த்தம் நாவலுக்கான எழுத்துமுறை அல்ல என எனக்குத் தோன்றும். அது சிறுகதைக்கு ஏற்றது. குறுநாவல்களில் கூட எடுபடும். ஆனால் நீண்ட நாவல்களில் மாய எதார்த்தத்தைக் கையாண்டால் கண்ணைக் கட்டி விட்டது போல ஆகும். மார்க்வெஸைப் போன்ற சாதனையாளர்கள் மாய எதார்த்தத்தை வரலாற்றுடன் பிணைத்து வரலாறும் எதார்த்தமும் வெறும் புனைவுகளே, புனைவுகள் மட்டுமே உண்மை எனக் காட்டுவார்கள். வரலாறும் லத்தீன் அமெரிக்க சமூக அரசியல் சூழலும் மார்க்வெஸுக்கு பெரிய பலம். முராகாமிக்கு அப்படி அல்ல. அவர் தனது நாவல்களில் ஐம்பது, அறுபதுகளின் ஜப்பானையோ இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் ஜப்பானையோ பின்னணியாக கையாண்டாலும் கூட அவரது கதைகள் தனிமனிதர்களின், வரலாற்றில் இருந்து வெளியே நிற்கும், உளவியல் கதைகளே.

முராகாமியின் நாயகர்கள் நான் ஏற்கனவே சொன்னதைப் போல முழுமையற்றவர்கள்; அவர்கள் அதை உணரும்படி ஒரு காதலி மறைந்து போகலாம், மனைவி விலகி செல்லலாம், பூனையொன்று காணாமல் போகலாம் (Wind-up Bird Chronicle), சொந்த அப்பாவை மகன் கொல்ல நேரலாம், ஒரு விபத்தில் தன் புத்திசாலித்தனத்தை இழந்து பேதையாகிப் போன ஒருவன் தான் நிஜத்தில் பேதை அல்ல, மாறாக அப்படி ஆக்கப்பட்டதாய் உணர்ந்துகொள்ள நேரலாம் (Kafka on the Shore) … இப்படி எது வேண்டுமெனிலும் நடக்கலாம். இதன் பிறகு முராகாமி இந்த இழப்புணர்வை கவித்துவமான ஒரு சாகசப்பயணமாக மாற்றுவார், நாயகனின் குழப்பங்கள், சிக்கல்களை நம்முடைய குழப்பங்கள், சிக்கல்களாகவே உணரச் செய்வார். ஒரு பாத்திரத்தை, அவனது வினோதச் செயல்களை உருவகமாக்குவார். ஹெமிங்வே, கார்வரின் மினிமலிச எதார்த்தத்தை லத்தீன் அமெரிக்க நாவல்களின் மாய எதார்த்தத்தோடு கலந்து, ஜப்பானிய தொல்கதைகளை குறிப்புணர்த்தி, ஒரு தனி கலவையாக, ரசனையான மொழியில் எழுதுவார் (தன்னுடைய மொழியைக் கண்டடைய அவர் முதலில் ஆங்கிலத்தில் எழுதி அதை ஜப்பானில் மொழியாக்கியதாக ஒரு கதை உண்டு). இப்படியான கதையமைப்புகள் சிரசாசனம் பழகியபடி காதலிக்கு உதட்டு முத்தம் கொடுப்பதைப் போல – எல்லாம் சரியாக அமைந்து வரவேண்டும்.

South of the Border, West of the Sun நாவலை இதற்கு உதாரணம் காட்டலாம் – அந்நாவல் முழுக்கவே இல்லாத ஒரு பெண்ணைப் பற்றியது, அவளுடன் நாயகன் கொள்ளும் நடக்காத கள்ள உறவைப் பற்றியது; கொஞ்சம் பிசகினால் மொத்த நாவலும் அபத்தம் எனப்படும். மேலும், இப்படியான ஒரு நாவலில் முழுக்க மனப்பிராந்திகளைப் பற்றி கவித்துவமான தீவிரமான தொனியில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு செல்ல முடியாது; திகட்டி / அலுத்து விடும். முராகாமி இந்த கவித்துவத்தை அன்றாட வாழ்வின் சாதாரணத்துவத்துடன் பின்னியெடுத்துச் செல்லும் பாங்கினால் இப்பிரச்சனையை வெற்றிகரமாக கடந்து செல்கிறார்.

சரி, நாம் எடுத்துக் கொண்ட நாவலுக்கு வருகிறேன் – மேலே சொன்ன அத்தனை சங்கதிகளும் (இழப்புணர்வு, மிகுபுனைவு, கவித்துவம், மனசஞ்சாரம், இல்லாத மனிதர்கள் இருப்பது, நடக்காத சம்பவங்கள் நடப்பது) இந்நாவலிலும் உண்டு – ஸ்குரு தஸாகி ஒரு ரயில்நிலைய பொறியாளன். முராகாமியின் பிற நாயகர்களைப் போல இவனும் எந்த தனித்திறனும் அற்ற, யாரும் பெரிதாய் பொருட்படுத்தாத, அதைக்குறித்த எந்த கவலையும் அற்ற சாதாரணன்; அன்றாட வாழ்வை எந்திரத்தனமாக வாழ்பவன். நாவல் துவங்கும் போது அவன் தன்னுடைய தற்கொலை விழைவைப் பற்றி, மரணத்தைக் குறித்து தியானிப்பதைப் பற்றி சொல்கிறான். அதற்குக் காரணம் அவனது நான்கு நண்பர்கள் – இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள். அவர்கள் அவனை ஒருநாள் அழைத்து நட்பைத் துண்டிக்கிறார்கள். அவர்கள் இன்றி அவன் தன் வாழ்க்கையை கற்பனை பண்ணினதே இல்லை. ஆகையால் மிகவும் தவித்துப் போகிறான். அவர்கள் அவனை விட்டு விலகுவதற்கு குறிப்பாக காரணமேதும் சொல்வதில்லை. அவனுக்கு ஒரு காரணம் தோன்றுகிறது – தனக்கு நிறம் இல்லை என்பதே அது.

அவனது நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் குடும்பப்பெயராக ஒரு நிறம் வருகிறது – ஷிரோ மற்றும் குரோ எனும் தோழிகளுக்கு கறுப்பு மற்றும் வெள்ளை; ஆவோ மற்றும் அகாவுக்கு நீலம் மற்றும் சிவப்பு. நிறமற்றவனாக இருப்பதே தன்னை நண்பர்களுக்கு பிடிக்காமல் போகக் காரணம் என அவன் நினைக்கிறான். பல வருடங்களுக்குப் பின்னர் அவனுக்கு சாரா எனும் ஒரு காதலி அமைகிறாள். அவளது தூண்டுதலின் பெயரில் அவன் தன் நண்பர்களை ஒவ்வொருவராக சந்தித்து தன்னை அவர்கள் முன்பு நட்பிலிருந்து விலக்கியதன் காரணத்தைக் கேட்டறிகிறான். அப்போது அவர்கள் சொல்லும் காரணத்தில் அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது – குரோவை அவன் பலாத்காரம் பண்ணினதாக அவர்கள் சொல்கிறார்கள். அவர்களால் அதை ஆரம்பத்தில் நம்ப முடியவில்லை; ஆனால் குரோ அப்படி வற்புறுத்தி சொல்கிறாள்; மற்றொரு தோழியான ஷிரோவும் வற்புறுத்துகிறாள். மற்ற இருவரும் வேறு வழியின்றி குரோவின் மனநலனைக் கருத்திற் கொண்டு ஸ்குருவை தம் குழுவிலிருந்து வெளியேற்றுகிறார்கள். இதைக் குறித்து ஸ்குரு குரோவிடம் விசாரிக்கலாம் என எண்ணினால் அவள் சில வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்டதாய் தெரிய வருகிறது. இறுதியாக அவன் ஷிரோவை சந்திக்க முடிவெடுக்கிறான். அவளிடத்து மட்டுமே குரோ தன் ரகசியங்களை வெளிப்படுத்தி இருக்க முடியும். தான் குரோவை பலாத்காரம் செய்யவில்லை எனில் யார் அதை செய்தது? அவளைக் கொன்றது யார்? ஏன்? ஷிரோ திருமணத்துக்குப் பிறகு பின்லாந்தில் தன் கணவன் மற்றும் குழந்தைகளுடன் வாழ்கிறான். ஷிரோவை அவன் சந்திக்கிற காட்சிகளே நாவலின் இறுதிப் பகுதி.

பின்லாந்தில் ஷிரோ அவனிடம் மனம் விட்டுப் பேசுகிறாள் – தான் அவனை ஒரு காலத்தில் மனதுக்குள் காதலித்ததைப் பற்றி; ஒருவேளை குரோவுக்கும் அவனிடத்து ஈர்ப்பு இருந்திருக்கலாம், அந்த பொறாமை காரணமாய் அவள் இந்த பலாத்கார குற்றச்சாட்டை வைத்திருக்கலாம் என்பதை அவள் சொல்கிறாள். ஆனால் அவளுக்கு நடந்த அந்த தாக்குதல் உண்மை, அவள் கர்ப்பமுற்றிருந்தது உண்மை, அதன் பின்னர் கருக்கலைந்து அவள் தனிமையில் வாழ நேர்ந்ததும், உடல் நலிவுற்ற நிலையில் அவள் யாராலோ கொல்லப்பட்டதும் உண்மை என்கிறாள். அதன் பிறகு ஸ்குருவும் ஷிரோவும் தழுவிக் கொள்கிறார்கள். நீண்ட நேரம் அந்த நிலையில் நின்று இசை கேட்கிறார்கள்; தம்மால் அடைய முடியாது போன காதலை எண்ணி மனம் கசிகிறார்கள். பிரிகிறார்கள்.

ஒரு மிகுபுனைவு த்ரில்லரைப் போலப் போகும் இந்த நாவலின் முடிவு தான் என்ன? குரோ ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்பதற்கு ஒரு விளக்கம் நமக்குத் தரப்படுகிறது. ஆனால் அது மட்டுமல்ல, அவளது துன்பங்களுக்கும் ஸ்குருவும் காரணமே என்பதை முராகாமி நுட்பமாக நமக்கு உணர்த்துகிறார். அது என்ன?

ஸ்குரு என்றால் ஜப்பானிய மொழியில் ஒன்றைக் கட்டமைப்பவன் எனப் பொருள். அவனது தொழிலும் கூட ரயில் நிலையங்களை அமைப்பது தானே. ஒன்றை கட்டமைக்கிறவன் ஒரு ஊடகமாக இருக்கிறான்; அண்ணாவின் “செவ்வாழை” கதையில் உற்பத்தி செய்கிறவனுக்கு அப்பண்டத்தைப் புசிக்க முடியவில்லை என்பதைப் போல. ரயில் நிலையம் இங்கு மற்றொரு உருவகம் – ரயில்கள் வந்து இளைப்பாறி, பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன, எல்லாரும் அந்த நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் யாரும் அதை தம் சொந்த இடமாகக் கருதி அதனுடன் உறவைப் பேண முடிவதில்லை. ஸ்குருவின் ஆளுமையும் இந்த ரயில் நிலையத்தைப் போன்றதே. அதனாலே அவன் தன்னை நிறமற்றவன் என்கிறான். அவனுடன் இருப்பவர்களின் நிறமே அவனது நிறமாகிறது.

முராகாமியின் மற்றொரு நாவலான Norwegian Wood இந்த நாவலைப் புரிந்து கொள்ள அவசியம் என நினைக்கிறேன் – குறிப்பாக அந்நாவலின் நாயகன் வத்தநாபேவின் பாத்திரம். வத்தநாபே தனக்கென நிலைப்பாடு / நம்பிக்கை / இச்சைகள் இல்லாதவன். அவன் ஒரு கண்ணாடிக்கோப்பையைப் போல. அவனுக்குள் ஊற்றப்படும் திரவமே அவனாகி விடுவான். ஆரம்பத்தில் வத்தநாபேயின் நெருங்கிய நண்பனான கிஸுக்கி தன் காதலியான நவோக்காவுடன் இருக்கையில் வத்தநாபே அவர்களுடன் இருப்பான். இருவருடைய காதலுக்கும் அவன் ஒரு மனத்திரையாக அமைவான். அதன் பிறகு கிஸுக்கி தற்கொலை பண்ணிக்கொள்ள, நவோக்காவுக்கு வத்தநாபேவின் துணை (ஒரு மாற்றுக்காதலனாக) அவசியமாகிறது. அதுவரை அவர்களின் காதலின் கண்ணாடியாக இருந்தவன் இப்போது காதலனாகிறான், கிட்டத்தட்ட ஒரு நாடகத்தில் பாத்திரம் ஒன்றை ஏற்பதைப் போல. ஒரு மனிதன் இவ்வாறு தானாக அல்லாமல் மற்றொருவனாக இருக்க நேரும் உளவியல் தேவையை ஜப்பானிய மரபில் இருந்து முராகாமி வரித்துக் கொள்கிறார் என நினைக்கிறேன். இப்படி ஆகும் போது ஒருவன் எதிர்கொள்ளும் மனநெருக்கடி தான் அவரது பல நாவல்களின் மையச்சிக்கல்.

நவோக்காவும் இந்த நெருக்கடியினால் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற ஒரு சானிடோரியம் செல்கிறாள். வத்தநாபே இதனால் உடைந்து போகிறான். அவன் வாழ்வில் அடுத்து மற்றொரு பெண் வருகிறாள் – மிதோரி. இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் கிஸுக்கியிடம் ஒரு மாற்றுக்காதலனாக இருக்க முடியாமல், மிதோரியின் அசல் காதலனாக இருக்க இயலாமல் அவன் தவிக்கிறான். கிஸுக்கி பின்னர் தற்கொலை பண்ணிக்கொள்ள வத்தநாபே ஒரு பித்தனைப் போல ஜப்பான் முழுக்க அலைகிறான். இப்போது கிஸுக்கியுடன் மனநலக் காப்பகத்தில் இருந்த ரெயிக்கோ எனும் மத்திய வயதுப்பெண்ணின் உதவியால் அவன் மிதோரியைப் புரிந்து கொள்கிறான் – அவளிடமும் உடலுறவு கொள்கிறான்; அதுவே அவனைக் காப்பாற்றுகிறது. இறுதியில் அவன் மிதோரியிடம் வந்து சேர்கிறான். அவள் கேட்கிறாள், “நீ இப்போது எங்கிருக்கிறாய்?” (இடம் இங்கு மனத்தின் ஒரு உருவகம்). வத்தநாபே இதைக் குறித்து சிந்திப்பதுடன் நாவல் முடிகிறது. ஒருவர் மற்றொருவரிடன் இடத்தை வாழ்வில் எடுத்துக் கொள்வதை ஒரு தவிர்க்க இயலாத நெருக்கடியாக முராகாமி காண்கிறார். இதை எப்படிப் புரிந்து கொள்ள?

லக்கான் எனும் உளவியலாளர் ஒரு குழந்தை தன் அப்பாவை முதலில் காண்கிறது, ஆனால் சற்று வளர்ந்த பின் அது உலகில் தன் அப்பாவை நிகர்த்த வேறு பலரையும் காண்கிறது, அப்போது அப்பா குறித்த அதன் மனச்சித்திரம் விரிவடைகிறது, தான் காணும் ஒவ்வொரு அதிகார மையத்தையும், வசீகரமான, ஆதிக்கமான, ஆர்வமூட்டும் மனிதர்களையும் அப்பாவைக் காணும் ஒரு கண்ணாடியாக அக்குழந்தை பயன்படுத்துகிறது, உலகம் முழுக்க தன் இறுதி மூச்சு வரை அது தன் அப்பாவையே காண்கிறது என்கிறார். இதனாலே நாம் ஒரே சமயம் அதிகாரத்தை வெறுத்தபடியே அதனிடத்து ஒரு ஈர்ப்பையும் கொண்டிருக்கிறோம். (இப்படி லக்கான் பிராயிடின் ஈடிபல் காம்பிளக்ஸை மறுவரையறை பண்ணினார்) உறவுகளில் மொழி இப்படி ஒரு கண்ணாடியாக ஒருவரை மற்றொருவராக பிரதிபலிக்கிறது; மொழியில் புழங்கும் போது நம் வழி ஒருவர் மூன்றாவதொருவரைக் காண்கிறார். யாரும் யாரிடத்தும் இல்லாமல், எல்லாரும் எல்லாரிடத்தும் இருக்க முடிவது இப்படித்தான்.

வத்தநாபேவும் ஸ்குருவும் இத்தகைய கண்ணாடிகள்; அவர்களின் துயரமே தம்மை அடுத்தவர் பயன்படுத்துவதைப் போல தம்மால் அடுத்தவர்களைக் கொண்டு உலகை பிரதிபலித்து அறிய முடியாது என்பது. அவர்கள் தாம் நிறமற்றவர் என உணர்வதை, அப்படி இருப்பது குற்றமில்லை என தெளிவை, உறவாடலில் பிறரை ஒரு கண்ணாடியாகக் கொண்டு உலகைக் காண தாமும் கற்பதை முராகாமி இந்த நாவல்களில் சித்தரிக்கிறார். (ஒருவர் மற்றொருவரை கண்ணாடியாக பயன்படுத்துவதை முராகாமி தன் நாவல்களில் உடலுறவு சித்தரிப்புகள் வழி காட்டுகிறார்.)

Colorless Tsukuru நாவலின் பலவீனம் அதன் இறுதிப் பகுதி தான் – ஸ்குருவால் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு கண்டடையும் ஒரு தீர்வை முராகாமி (“நார்வேஜியன் வுட்” நாவலில் போல) கிளைமேக்ஸில் தீவிரமாக காத்திரமாக உருவாக்கித் தருவதில்லை.

மற்றபடி, ஒரு தீவிரமான கவித்துமான வாசிப்பு சஞ்சாரத்துக்கு இந்த நாவல் ஒரு கச்சிதமான பயணச்சீட்டு.

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. திரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்
  2. கிளைமேக்ஸை எப்படி அமைக்க வேண்டும்? - மணிரத்னத்திலிருந்து மிஷ்கின் வரை - ஆர். அபிலாஷ்
  3. ’காட்ஃபாதரி’லிருந்து ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’: கமல் எனும் மேதை - ஆர். அபிலாஷ் (பெங்களூர்)
  4. கொரோனோ பயங்கரமும் பா.ஜ.க அரசின் கார்பரேட் பயங்கரவாதமும் - ஆர். அபிலாஷ் 
  5. காட்ஃபாதர் முதல் முள்ளும் மலரும் வரை: கதைக்குள் இருக்கும் கதை- ஆர். அபிலாஷ்
  6. சினிமாவில் போதனை இருக்கலாமா?- ஆர். அபிலாஷ்
  7. பொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல் - ஆர். அபிலாஷ்
  8. ‘அலைபாயுதே’ - திரைக்கதை நுணுக்கங்கள் - ஆர். அபிலாஷ்
  9. தனிமையின் காதலே நட்பு- ஆர். அபிலாஷ்
  10. ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது?- ஆர். அபிலாஷ்
  11. பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்- ஆர். அபிலாஷ்
  12. அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்- ஆர். அபிலாஷ்
  13. காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்- ஆர். அபிலாஷ்
  14. எனது நண்பன் எனது நண்பன் அல்ல- ஆர். அபிலாஷ்
  15. ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?- ஆர். அபிலாஷ்
  16. நிழல் நிஜமாகிறது - ஆர்.அபிலாஷ்
  17. சத்யன் அந்திக்காடு: தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர் - ஆர். அபிலாஷ்
  18. யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன் - ஆர்.அபிலாஷ்