கிழியாத பக்கங்கள்- பக்கம் 2

’முதல் பக்கத்தைப்’ படித்தவர்கள் பலர் உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது என்றனர். நம் நடை நன்றாக இருக்கின்றது என்று சொன்னாலே அடுத்த முறை வெளியில் செல்லும் போது கால் இடறும். நாம் கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து பணியாற்றும் போது, நம் கழுத்தின் மீது மூச்சு விட்டுக் கொண்டு பின்னாலிருந்து யாராவது ஒருவர் பார்க்கும் போது வரும் தடுமாற்றம் போன்றது அது. நடையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து எதை எழுதுவது என்று  சிந்தனை சென்றது. பகிர்ந்து கொள்ள ஏராளாமாய்க் கொட்டிக் கிடக்கிறது என்று உணர்ந்த போது நடை குறித்த பயம் விலகியது.

இதுதான் விஷயம். உள்ளடக்கமும், அதைப் பகிர்ந்து கொள்வதுதன் நோக்கமும் தெளிவாகும் போது நடை எனும் வடிவம் வசப் படுகிறது. ‘நாம் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. கதைகள்தாம் நம்மைத் தேர்வு செய்கின்றன,” என்று அருந்ததி ராய் எழுதினார்.

’உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஓளி உண்டாம்’ என்று பாரதியார் சொல்லி விட்டுப் போய் விட்டார். இந்த உண்மை ஒளி உண்டாவது தவ வலிமையினாலோ, தியானத்தினாலோ, யோகாசனத்தினாலோ அல்ல. குறிப்பிட்ட ஜாதியில் பிறப்பதனாலும் அல்ல. எனக்குக் கிடைத்தது உண்மையின் ஒளி என்று சொல்லும் தைரியமும் இல்லை. இள வயதிலேயே இதுதான் பாதை, இதுதான் பயணம் என்கிற தெளிவுதான் எனக்குக் கிடைத்தது.

ஒரு மனிதனுக்கு இந்தத் தெளிவு ஏற்பட, கிடைக்கும் வாய்ப்புகளும், தேடலும், படிப்பும், நீண்ட கால உழைப்பும் அனுபவமும் தேவை..

இன்று வரும் பல பத்திரிக்கையாளர்களின் பிரச்சினையே அவர்கள் அதிகம் படிப்பதில்லை என்பதுதான் _ அவர்கள் பணியாற்றும் பத்திரிக்கை உட்பட. அதை அவர்களின் பிரச்சினையாக மட்டும் நான் பார்க்க வில்லை. கல்வி முறையும், சரியான வழிகாட்டுதலும், துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதுமே காரணங்களாகத் தெரிகின்றன். ஊடக நிறுவனங்களுக்குள்ளேயே அனுபவப் பகிர்வுக்கான ஏற்பாடுகளும் இல்லை. இதனால் பல இளம் பத்திரிக்கையாளர்கள் ‘நேரா ஹீரோ… அடுத்தது சி.எம்.’ என்றுதான் இருக்கிறார்கள். அன்றாடச் செய்திகளுக்குப் பின் இருக்கும் அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார வரலாறுகள் குறித்த ஒரு மேலோட்டமான புரிதல் கூட இல்லாததால் பணியில் பரிணாமம் அடையாமல் போய் விடுகிறார்கள். படிப்பதையும் அறிந்ததையும் பகிர்ந்துக் கொள்ளத் துடிப்பதுதான் பத்திரிக்கையாளனின் அடிப்படைத் தகுதி.

என்னைப் பொறுத்த வரையில் நான் பத்திரிக்கையாளானாகப் போகிறேன் என்று தெரியாமலே நான் படித்த பல விஷயங்களை இன்று மூளையின் நியூரான் இணைப்புகள் ஒளிர்ந்து நினைவு படுத்திச் செல்கின்றன. இதற்கு  குடும்பச் சூழலும், பெற்ற கல்வியும் பிரதான காரணங்கள்.

நான் பிறந்த கல்லக்குடியில் (டால்மியாபுரம்)  தங்கப்பல் கட்டி, வெள்ளிக் கம்பி போல முறுக்கி நிற்கும் மீசைக் காரரான வடமலையின் முடி திருத்தகத்தில் கிடைத்த  தினத்தந்திதான் நானறிந்த, படித்த முதல் செய்தித் தாள்.

எங்களுக்குச் சொந்தமான இடத்தில் அவர் கடை வைத்திருந்ததால் அங்கு காலை 7 மணிக்கெல்லாம் ஆஜராகி விடுவேன். என் நினைவின் முதல்  தலைப்புச் செய்தி  ’போர் துவங்கியது’ என்பதுதான். டிசம்பர் 3, 1971 அன்று துவங்கிய போரின் செய்தி அடுத்த நாள் தினத் தந்தியில் கொட்டை எழுத்துகளில் தலைப்புச் செய்தியாக வந்தது. அன்று துவங்கியதுதான் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கும் அப்போது எனக்கு வயது 9 (இரண்டு வயது கூட நிரம்பவில்லை என்றால் நம்பவா போகிறீர்கள்?)

அதே வயதில் டால்மியாபுரத்தின் ஒரு சந்துக்குள்ளிருந்த நூலகத்தின் உறுப்பினரானேன். சிறுவன் என்பதால் நூலகர் நல்ல புத்தகங்கள் வரும் போது எனக்காக எடுத்து வைத்திருப்பார்.

ஒரு முழு நேரக் கம்யூனிஸ்டு ஊழியரான அப்பா பொருளாதார ரீதியாக வளம் நிறைந்த வாழ்க்கையைக் கொடுக்க முடிய வில்லையென்றாலும் அறிவுச் சூழலைச் செழிப்பாகவே வைத்திருந்தார்.

 அவ்வப்போது வீட்டிற்கு வரும் அவர் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு வரும் கருப்புப் பையில்  எப்போதும் பிளிட்ஸ் (ஆர்.கே. கரஞ்சியா நடத்தியது, பி. சாய்நாத்  இங்குதான் தன் பத்திரிகைப் பணியைத் துவக்கினார்), சண்டே (எம்.ஜே. அக்பர் 24 வயதிலேயே ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்திய வார இதழ்) ஆன்லுக்கர், இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா (குஷ்வந்த் சிங் போன்ற பிரபலங்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்தது) போன்ற பருவ இதழ்களும், தினசரிப் பத்திரிக்கைகளும் இருக்கும். அறிவியலுக்கென்றே தனிப் பத்திரிக்கையாக வந்த கலைக்கதிர், பல்சுவை இதழான மஞ்சரி போன்றவையும் அவ்வப்போது கிடைக்கும். சோவியத் குழந்தை இலக்கியங்களின் தாக்கம் என்னை இன்னும் மனிதனாக வைத்திருக்கிறது என்றால் மிகையல்ல.

அரசியல், தத்துவார்த்தப் புத்தகங்கள் சூழ் வீடாக இருந்தது. மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் ஆகியோரின் எழுத்துக்களைத் தாங்கி வந்த சிவப்புப் புத்தகங்களிலிருந்து எந்த இடதுசாரிக் குடும்பமும் தப்பியிருக்க முடியாது. அந்த நூல்களின் முகப்புகள், தலைப்புகள் மட்டும்தான் நினைவில் இருக்கிறது. அவற்றைப் படிப்பது வெகு நாட்களுக்குப் பின்தான் நடந்தது. நடந்திருக்க முடியும்.

சீரியசான விஷயங்களை மட்டுமே படித்து வளர்ந்தவர் போலிருக்கிறது என்று என்னை யாரும் தப்பாக எண்ணி விட வேண்டாம். கண்ணில் பட்ட எழுத்துக்களையெல்லாம் படிப்பது வழக்கமாக இருந்தது. அந்தக் காலத்துப் பத்திரிக்கைகள் குறித்து ஏ. மருதகாசி எழுதி ஜி. ராமனாதனின் இசையில் உலக மகா கலைஞன்   சந்திரபாபு சமய சஞ்சீவீ (1957) படத்திற்காகப் பாடிய பாடலை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்?.  இதோ அதன் வரிகள்:

“பேப்பர்…. பேப்பர்… ஐயா பேப்பர்

ஹிண்டு தினமணி மித்திரன்

விடுதலை…. விடுதலை….

பேப்பர்…. பேப்பர்… பேப்பர்

இண்டியன் எக்ஸ்பிரஸ்

மெட்ராஸ் மெயில் நம்நாடு

இருக்குதுங்கோ தினத்தந்தி

இதைப் படிச்சுப் பாருங்கோ முந்தி…

உலகில் நடப்பதை

ஒவ்வொரு நாளும் அறிவிக்கும்

தன் நிலையை மறந்த

தலைவர் பல்டியை தெரிவிக்கும்…

அற்புதமான சித்திரக் கதைகள்

அளிக்கும் கல்கியைப் பாருங்க

அல்வா போல ருசியா இருக்கும்

ஆனந்த விகடனைப் படியுங்க

கற்பனையாளர் காவியமான

கலைமகள் வாங்கிப் பாருங்க

காதல் புதுக் காதல் கண்ணன் காதல்

கல்கண்டு அணுகுண்டு….

பேசும் படங்களின் பெருமையை

விளம்பரம் செய்யும் இந்தப் பேசும் படம்

பிலிம்பேர் குண்டூசி ஆனா குத்தாது

மார்க்கெட்டிலேயும் கிடைக்காது…

கலைப்படம் கலைக்கதிர் மூவிஷாட்

கலைமன்றம் கலையரங்கம் பிக்சர் போஸ்ட்

கலைமணம் வீசும் கலைச் சோலை

மனங்கவர் தமிழ் சினிமா சினிமா ஸ்டார்

இலக்கியத் தென்றல் முத்தாரம்

இனித்திடும் முரசொலி எழில் குமுதம்

தேனூறும் தமிழ் நடைக்கு பேர் போனது _ இந்த

திராவிட நாடு  உயர்வானது _ இன்று

பேனா பிடிப்பவர்கள் பல பேருக்கு _ நல்ல

பேருக்கும் சீருக்கும் வித்தானது எல்லாம் விற்றானது.

 நான் பிறப்பதற்கு 5 வருடம் முன்பே வந்திருந்த இந்தப் பாட்டுப் பட்டியலில் வரும் செய்தித்தாள்கள்   பலவற்றைப் பல இடங்களில் படித்திருக்கிறேன்.

1970களில் பள்ளிப் பருவம் கண்டவர்கள் இரும்புக்கை மாயாவியைப் போல் மின்சாரத்தைத் தொட்டு மாயமாக மறையும் வித்தை நமக்குக் கைவராதா என்று ஏங்காமல் இருந்திருக்க முடியாது. அம்புலி மாமா, டென்காலிக் காட்டின் வேதாளம், கோகுலம், அணில், முயல், வாண்டு மாமா போன்ற ஏராளமான குழந்தைகளுக்கான ஏடுகளையும் நாங்கள் விட்டு வைக்க வில்லை.  சிறு மாதா சந்தா வசூலித்து இந்தப் புத்தகங்களுக்கான லெண்டிங் லைப்ரரியே நடத்தியிருக்கிறோம்.

அப்பா வீட்டில் இருக்கும் போது நடக்கும் உரையாடல்கள் அறிஞர் அண்ணா முதல் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் வரை (இவரது வாட்டர்கேட் ஊழலை அமெரிக்க பத்திரிக்கைகள் அம்பலப் படுத்தியதைத் தொடர்ந்து ராஜினாமா செய்தவர்; இது புலனாய்வு இதழியலின் ஒரு முக்கிய நிகழ்வு) உலகையே சுற்றி வரும். உலகப் போர்களின் கொடூரங்கள், அமெரிக்காவின் அணு குண்டு எப்படி கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது என அவர் விவரித்த போது அருகிலிருந்து மேசைக்கடியில் ஒளிந்து கொண்டேன். ஒரு கம்யூனிஸ்டு இப்படி இருக்கக் கூடாது என்று சிரித்த படியே என்னை வெளியே இழுத்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் மாநாட்டுத் தீர்மானங்களை வரைவு செய்யும் போது அவரும் பிற தோழர்களும் செய்யும் காரசாரமான விவாதங்கள் எனக்கு எடிட்டிங்கில் உதவுமென்று அப்போது தெரியாது. அரசியல் கட்டுரை எழுத அவர் எடுத்த சிரமங்களையும் அதன் பலனாய் விளைந்த கட்டுரைகளையும் பார்த்து, படித்து வளர்ந்தேன். தரவுகளும் துல்லியமான மேற்கோள்களும், பல விவரங்களும் அதில் கொட்டிக் கிடக்கும்.குறிப்பு வைத்துக் கொள்ளாமல் அவர் பொது மேடைகளில் பேசியது அபூர்வம். ஒரு முறை நான் படித்த ஏதோ ஒரு கட்டுரை நன்றாக இருக்கிறது என்றேன். எதனால் அப்படிச் சொல்கிறாய் என்று அவர் கேட்க அது வித்தியாசமாக இருக்கிறது என்றேன். தலைகீழாக நடப்பது கூடத்தான் வித்தியாசமாக இருக்கும், பிறர் கவனத்தைக் கவரும்  என்பதற்காக நாம் அப்படி நடப்பதில்லை என்றார்.

இதையெல்லாம் பார்த்து விட்டு அப்போதே நான் அரசியலிலும் தத்துவத்திலும் தேர்ந்து மாஸ்டர் ஆகி விட்டதாகச் சொல்ல வருகிறேனென்று நினைத்துக் கொள்ளாதீர்கள். ஆனால் எதையுமே ஒரு அரசியல் நோக்கில் விமரிசின ரீதியாகப்  பார்ப்பது பழக்கமாகிப் போனது.  அரசியல் பார்வை இல்லாத இதழியல் அர்த்தமற்றது. இப்போதெல்லாம் சில மூத்த பத்திரிக்கையாளர்கள் கூட அரசையோ வேறு நிறுவனங்களையோ விமரிசித்து எழுதுவதை நெகடிவ் செய்தி என்கிறார்கள். விமரிசனக் கருத்து எதிர்மறைக் கருத்தல்ல. விமரிசனம் இன்றி பத்திரிக்கை நடத்துவதற்கு பதில் பி ஆர் ஓ வேலையைப் பார்த்து விடலாம்.

இடதுசாரி அரசியல் குடும்பச் சூழல் தவிர,  எனக்கு வாய்த்த தமிழ், ஆங்கில ஆசிரியர்கள் என் எழுத்தின் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். குறிப்பாக, தமிழ் ஆசிரியர்கள். கல்லக்குடி தூய சவேரியார் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தமிழ் சொல்லிக் கொடுத்தவர் ஐயா ராஜேந்திரன். சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவை அவர் உரக்கப் படித்து அதில் வரும் வருணனைகளை விளக்கியது ஆரம்ப கால வாழ்வில் வைக்கப் பட்ட ஒரு அழகியல் புள்ளி. முழுவதும் புரியவில்லையென்றாலும் கேட்க ஆனந்தமாய் இருந்தது.

திருச்சி உறையூரில் இருக்கும் எஸ்.எம். உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்த சி.சோ. என்றழைக்கப் பட்ட சி. சோமசுந்தரம் ஐயா வெற்றிலை மணக்கும் வாயுடன் கம்பராமாயணம் போன்ற காப்பியங்களையும் நாலடியார், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, அக நானூறு, புறநானூறு என்று தமிழ்க் கம்பெடுத்துச் சுற்றும் காட்சியைக் காண அடுத்த வகுப்பு ஆசிரியர்கள் கூட வகுப்பில் வந்து அமர்ந்திருப்பார்கள். அவர் சொல்லிக் கொடுத்த செய்யுள்களை மாணவர்கள் அனைவரும் அவரவர் பென்ச் லீடரிடமும், பென்ச் லீடர்கள் என்னிடமும் அடுத்த நாள் ஒப்புவிக்க வேண்டும். இறுதியாக நான் ஐயாவிடம் ஒப்புவிக்க வேண்டும். ஒரு தவறுக்கு ஒரு பிரம்படி. அவ்வளவுதான்.

செயின்ட் ஜோசப் பள்ளியின் தமிழாசிரியர் ஐயா செல்வராஜ் சீவக சிந்தாமணி சொல்லிக் கொடுக்கும் போது காட்டில் பிறந்த சீவகனுக்கு அவனுடைய அன்னை பாடிய தாலாட்டை ‘வெவ்வாய் ஓரி முழவாக… விடிந்தார் ஈமம் விளக்காக…’ என்று ராகமிட்டுப் பாடும்போது கண்களில் நீர் துளிர்க்காத மாணவன் யாரும் இருந்திருக்க முடியாது. அடுத்த நாள், “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்,

மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்’ என்று குற்றாலக் குறவஞ்சியில் குறத்தி மலைவளத்தைக் கூறிப் பாடுவதை அவர்  பாடும் போது எழுந்து ஆடத் தோன்றும்.

தமிழாசிரியர்கள் பாடங்களை மட்டும் சொல்லித் தர வில்லை. அவற்றுடன் சேர்த்து வாழ்க்கையையும் சொல்லித் தந்தனர்.

செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயிற்றுவித்த பேராசிரியர்கள் ரிச்சர்டும், யூஜின் டிவாஸும் கூட அப்படித்தான். சார்லஸ்  டிக்கன்சின்டேல் ஆஃப் டூ சிட்டீஸ் புதினத்தை ரிச்சர்ட் சொல்லித் தரும் போது ஃபிரெஞ்சுப் புரட்சி நம் கண் முன்னே விரியும். ஒவ்வொரு இலக்கிய மாணவனும் 100 செவ்வியல் இலக்கியங்களைப் படித்திருக்க வேண்டும் என்று யூஜின் முதல் வகுப்பில் கொடுத்த பட்டியலை நான் இன்னமும் முடிக்க வில்லை என்று 36 வருடங்களுக்குப் பின் அவரை ஜனவரியில் திருச்சியில் சந்தித்த போது  சொன்னதும் உனக்கு இன்னமும் நேரமிருக்கிறது. என்றார். அவருடைய நேரம் சென்ற மாதம் முடியப் போகிறது என அப்போது தெரியாது.

இருமொழித் தேர்ச்சி என் இதழியல் பணிக்கு வலு சேர்த்தது. ஒருவர் வாழும் சமூக கலாச்சாரச் சூழலில் ஆழமாகக் காலூன்றி நின்று கொண்டே உலகத்துடன் உறவாடுவதற்கு இது பெரும் உதவியாக இருக்கிறது.

இப்படித்தான் என்னை உருவாக்கியவர்களில் பலர் அரசியல், பொருளாதார, கலாச்சார பாரம்பரியங்களை உள் வாங்கி எனக்குக் கடத்தினார்கள்.  எழுத்தையும், இசையையும், நுண்கலைகளையும் குறித்த உங்களின் ரசிப்புத் தன்மை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனித குலம் தன்  சிந்தனையில் செதுக்கியது என்று மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சன் கூறியதாக இலங்கையின் முது பெரும் எழுத்தாளர் செ கணேசலிங்கன் எனக்கு சொன்னார்.

இந்தச் சிந்தனைச் செதுக்கல் பாரம்பரியத்தில்  நான் ஒரு  துகளாகவும்  அலையாகவும் இருக்க முயற்சிக்கிறேன்.

இளைய தலைமுறையினர் படிப்பது குறைவென்றாலும் நம்மை விட புத்திசாலிகளாகவும் தொழில்நுட்ப வல்லுனர்களாகவும் இருக்கின்றனர். உள்ளார்ந்த தீப் பொறியைத் தட்டியெழுப்பி பிழம்பாக்கும்  கடமை நமக்கு இருக்கிறது.  ஒளிந்திருக்கும் திறமைகள் யாருக்குமே தெரியாமல் தொலைந்து போனவர்கள் ஏராளம். கிராமப்புறக் கல்லறையில் எழுதிய இரங்கற்பா என்று எழுதிய தாமஸ் கிரே என்கிற ஆங்கிலக் கவியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன:

”கடலின் இருண்ட அளக்கப் படாத ஆழத்திலிருக்கும் குகைகளுக்குள்

அமைதியாய்த் தூய ஒளி வீசும் ஒரு கல் கிடக்கலாம்;

பிறந்த ஒரு மலர் யாரும் காணாமல் வெட்கப் பட்டு

அதன் இனிமையை பாலைவனக் காற்றில் வீணாக்கலாம்.

… பேசவியலாத,  புகழற்ற ஒரு மில்டன்

இந்த கல்லறைக்குள் ஒய்வு கொண்டிருக்கலாம்.”

கடலுக்கடியில் கிடக்கும் ஒளி வீசும் கற்களையும், பாலைவன மலர்களையும், மில்டன்களையும் கண்டு உலகிற்கு அடையாளம் காட்டுவதுதான் நாம் வரும் தலைமுறைகளுக்குச் செய்யும் பெரும் தொண்டாக இருக்கும்.

(தொடரும்)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்
  2. புதிய உலகிற்கான புதிய இதழியல்- ஆர். விஜயசங்கர்
  3. அல்ஜீப்ராவில் வீழ்ந்த விண்வெளி வீரன் - ஆர். விஜயசங்கர்
  4. கிழியாத பக்கங்கள் - ஆர். விஜயசங்கர்