காற்றினிலே வரும் கீதம்-2

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் முதல் முதலாக பாடிய பாடல் எது என்று கேட்டவுடன், “அந்தரங்கம்” படத்தில் இடம் பெற்ற “ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்” என்ற பாடல் என்று நீங்கள் சொல்வீர்கள். சரி, இந்தப் பாடலை எழுதிய கவிஞர் யார் என்று கேட்டால் பலருக்குத் தெரியாது. அவர் தான் இந்தப் பதிவின் கதாநாயகன்.

தமிழ் திரைத்துறையில் பக்தி இயக்கத்திற்கான படங்களை தேசிய இயக்கத்தை சேர்ந்த பலர் இயக்கினர். அவர்களில் இருந்து வித்தியாசப்பட்ட  இயக்குநர், கதை வசனகர்த்தா, கவிஞர், தயாரிப்பாளர் ஒருவர் இருந்தார். க்ரைம் திரில்லர் படங்களை இயக்கி பெயர் பெற்ற அந்த இயக்குநர் தான், கமல்ஹாசன் பாடிய முதல் பாடலை எழுதிய கவிஞர்.

அவர் எழுதிய ஒரு படத்தின் பாடல்களை முழுவதும் வைத்து இந்தக் கட்டுரையை எழுத முடியும். அந்த அளவிற்கு சொற்செறிவும், கற்பனைத்திறனும் கொண்டவர். அந்த கவிஞரின் பெயர் நேதாஜி. இயக்குநர் மிட்டாளம் நேதாஜி என்றால்தான் திரையுலகில் அவரைத் தெரியும்.

வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த நேதாஜி எழுதிய பாடல்கள் சில என்றாலும், அவை காலத்தால் அழியாதவை.

தமிழின் ஹிட்ச்காக் என்ற பேசப்பட்ட ராஜ்பரத் உச்சக்கட்டம், சொல்லாதே யாரும் கேட்டால், சின்னமுள் பெரியமுள் படங்களை இயக்கிய காலத்தில் அறிமுகமானவர் தான் நேதாஜி. அவர் இயக்கிய “உன்னை விடமாட்டேன்” மிகச்சிறந்த திரில்லர் படங்களில் வரிசையில் இடம் பெற்றது.  உன்னிடத்தில் நான், ஜனனி, கோயில் மணியோசை, சொல்வதெல்லாம் உண்மை உள்ளிட்ட பல படங்களை அவர் இயக்கினார்.

தமிழ் சினிமாவில் 1975ம் ஆண்டு முக்தா சீனிவாசன் இயக்கிய “அந்தரங்கம்” படத்தின் மூலம் நேதாஜி பாடலாசிரியராக அறிமுகமானார். ஏஎஸ். பிரகாசம் எழுதிய இந்த படத்தின் கதைக்கு இசை  இசைமேதை ஜி. தேவராஜன்.

ஞாயிறு ஒளி மழையில்

திங்கள் குளிக்க வந்தாள்

நான் அவள் பூ உடலில்

புது அழகினைப் படைக்க வந்தேன்…

என்று நம்பிக்கையோடு பாட்டு பயணத்தை துவக்கினார் நேதாஜி. இசைஞானி எத்தனையோ பேருக்கு பாடுவதற்கு வாய்ப்பளித்துள்ளார்.  ஆனால், அவரது மகள் பவதாரணி, கங்கை அமரன் மகன்கள் வெங்கட்பிரபு,பிரேம்ஜி ஆகியோர் முதல் முதலாக பாட வாய்ப்பளித்தவர் நேதாஜி என்றால் நம்ப முடிகிறதா?

அவர் இயக்கிய “கோவில்மணி” படத்தில்  பட்டுக்கோட்டை நடராஜன் எழுதிய பாடல்,

ஓடைப்பட்டி பிச்சைமுத்து

அத்தை மக பெயரை வைச்சு

குத்துடா டப்பாங்குத்து…

சித்ரா பாடும் இந்த கிராமத்து கீதத்தில் பவதாரிணி, வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோர் முதன் முதலாக பாடினர்.

கடலோடு நதிக்கென்ன கோபம்

காதல் கவிபாட விழிக்கென்ன நாணம்

என்ற அற்புதமான முத்துலிங்கம் வரிகளில் சங்கர் கணேஷ் இசையில் எஸ்பி.பாலசுப்பிரமணியம் பாடிய “அர்த்தங்கள் ஆயிரம்” படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் நேதாஜி.  இயக்குநர் பாரதிராஜாவை அறிமுகம் செய்து வைத்த தயாரிப்பாளர் எஸ்ஏ.ராஜ்கண்ணு தான் “அர்த்தங்கள் ஆயிரம்” படத்தை இயக்கினார்.

நினைத்தால்… உனைத்தான் நினைப்பேன்

நெஞ்சில்… தமிழாய்… இனிப்பேன்

நினைத்தால்… உனைத்தான்… நினைப்பேன்

நெஞ்சில்… தமிழாய்… இனிப்பேன்

நிழல்போல்… தொடர்வேன்…

நினைவாய்… படர்வேன்…

அடடா… அடடா…

இளமை.. இளமை.. இளமை…

கேஜே.யேசுதாசும், வாணி ஜெயராமும் இணைந்து பாடிய இந்த பாடல் 1986ம் ஆண்டு வெளிவந்த “உன்னிடத்தில் நான்” படத்தில் இடம் பெற்றது. இந்த அற்புதமான பாடலுக்கு இசைமீட்டியவர் தாயன்பன். இந்த படத்தின் கதாநாயகன் வேறு யாருமல்ல நேதாஜி தான்.

இதற்கு முன்பாக 1985ம் ஆண்டு நேதாஜி இயக்கிய “ஜனனி” திரைப்படம் வெளியானது.  கல்லூரி விழாக்களிலும், மேடைப்பாடகர்களும் விரும்பிப் பாடிய பாடல் இப்படத்தில் இடம் பெற்றது.

காதல் சோகம் என்றவுடன் சட்டென இந்தப் பாடலின் முதல் வரியைக் கேட்டதும், அனைவருக்கும் படத்தின் பெயர் ஞாபகத்திற்கு வந்து விடும். ஆனால், இந்தப் பாடலை எழுதிய நேதாஜியை யாரும் நினைப்பதில்லை என்பது தான் சோகம். ஜனனி படத்தில் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் 5 பாடல்கள்  இடம் பெற்றன. அப்படத்தை இயக்கியதுடன் அத்தனைப் பாடல்களையும் எழுதியவர் நேதாஜி தான்.

மன்னிக்க மாட்டாயா உன்மனமிரங்கி

நீ ஒரு மேதை  நான் ஒரு பேதை

நீ தரும் சோதனை நான் படும் வேதனை

போதும்  போதும் மன்னிக்க மாட்டாயா …..

என்று கேஜே.யேசுதாஸ் பாடும் போது நம்மை அறியாமல் காதல் சோகம் நம் தோளில் சாய்ந்து கொள்ளும். ஒரு புதுக்கவிதை மிக அழகாக மெட்டமைத்த எம்எஸ்.விஸ்வநாதன் என்ற மெய்நிகர் கலைஞனை நினைத்தால் ஆச்சரியமும், மதிப்பும் கூடுகிறது.

ன் விழிகள் தீபங்களாய்

உனக்கென ஏற்றிவைத்தேன்

பொன்னழகு தேவி உந்தன்

தரிசனம் பார்த்து வந்தேன்

உன்னடிமை உன்னருளை

பெற ஒரு வழி இல்லையா

உன்னருகில் வாழ உந்தன்

நிழலுக்கு இடமில்லையா

என் மனதில்  நாள் முழுதும்

இருப்பது நீயல்லவா

என் குரலில்  ராகங்களாய்

ஒலிப்பதும் மூச்சல்லவா

என் இதயம் உன் உடமை

உனக்கது புரியாதா

இன்னுமதை நீ மிதித்தால் 

உனக்கது வலிக்காதா?…

என மன்னிக்கமாட்டாயா பாடலில் வரும் வரிகள், அந்தக் காலத்தில் பலரின் நோட்டு புத்தகங்களில் பதிவு செய்யப்பட்ட காதல் கவிதையாய் இருந்தது. இதே பாடலை பி.சுசீலாவும் தனித்து பாடியிருப்பார். அதற்கு வேறு வரிகளை நேதாஜி எழுதியிருப்பார். இதே படத்தில் எஸ்பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடிய இந்தப்  பாடல் நேதாஜியின் கவிப்புலமைக்குச் சான்று என்றே கூறலாம்.

கொஞ்சும் மலர் மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம்

இங்கு வாராயோ நீ என் உயிரே

தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்

அதை தாராயோ நான் இன்புறவே

உன் மேனி நாதஸ்வரம்

அதில் உருவாகும் ஏழு ஸ்வரம்….

எனத் துவங்கும் பாடலில் வாணி மிகப்பிரமாதமாக ஸ்வரம் படிக்க கேட்க, கேட்க இந்தப் பாடலின் மீது பெருங்காதலே ஏற்பட்டு விட்டது. வாணியின் குரல் உச்சஸ்தாயில் போகும் போது, எஸ்பி.பாலசுப்ரமணியத்தின் குரல் மெதுவதாக ஒலிக்க தபேலா ஒலியில் இந்தப் பாடலை நீங்கள் யூடியூப்பில் கேட்டால், நேதாஜி என்ற கவிஞனின் கவிஆளுமையை ரசிக்கலாம்.

நான் ஆட எந்தன் மணிச்சதங்கை ஆடும்

நீ ஒரு தேவதை நாட்டிய தாரகை

நூலாக எந்தன் இடை மெலிந்து போகும்

இடை என்ன இறைவனா உள்ளதா இல்லையா …

இடையை இறைவனோடு ஒப்பிட்டு இருக்கிறதா, இல்லையா என்ற அற்புத கற்பனையில் நேதாஜி வரைந்த பாடல் எவ்வளவு அருமை?

உன்னை விடமாட்டேன், உன்னிடத்தில் நான் போன்ற திகில் படங்களை இயக்கிய நேதாஜி, விஜயகாந்த், ரேகாவை வைத்து “சொல்வதெல்லாம் உண்மை” படத்தை  எடுத்தார். தனக்கென தனிப்பாணியை திரைத்துறையில் வைத்திருந்த நேதாஜி, நடிகர்  முரளி, ரோகிணி நடித்த சிலம்பு,  ரகுவரன் படித்த கோயில்மணியோசை உள்ளிட்ட பல படங்களை  இயக்கினார். இப்படங்களில் சில பாடல்களையும் அவர் எழுதியுள்ளார்.

சங்கர் கணேஷ் இசையில் “கன்னிப்பருவத்திலே” படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் பயங்கர ஹிட் அடித்தன. ஆவாரம் பூமேனி ஆடாத மயிலாட்டம் பாடல் துள்ளல் வகை என்றால், அடி அம்மாடி சின்னப்பொண்ணு பாடல் ஏக்க ரகம், பட்டு வண்ண ரோசாவாம் சோக ரகம். ஆனால், இப்படத்தில் டைட்டில் பாடல் பயங்கரமான குத்து ரகம்.

தமிழில் எத்தனை  குத்துப்பாடல் வந்தாலும், இந்தப் பாடலுக்கு நிகர் இல்லையென்றே கூற வேண்டும்.  இந்தப்  பாடலை நேதாஜி  தான் எழுதியிருந்தார். நடன இயக்குநர் பாபு, சத்யா ஆடிய இந்தப் பாடலை மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி இணைந்து பின்னி எடுத்திருப்பார்கள். என்ன வேகமான தாளம்.அதற்கு ஏற்ற வகையில் அவர்கள் பாடியிருப்பார்கள். ஆடியிருப்பார்கள்.

 நடைய மாத்து.. ஒன் நடைய மாத்து..

அக்கா நீ என்ன பாத்து ஆடுருறியே கூத்து

அசையுது ஒன்ன போல நாத்து….

இந்தப் பாடலை எழுதிய நேதாஜி, படத்தயாரிப்பாளர் எஸ்ஏ.ராஜ்கண்ணு பெயரை மட்டுமின்றி அவர் அதற்கு முன் தயாரித்த 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் படங்களின் பெயர்களையும் பாடலில் கெட்டிக்காரத்தனமாகச் சேர்த்திருப்பார்.

கோயில் திருவிழாக்களில் தவறாமல் இன்னமும் இப்பாடல் ஒலிக்கிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் கரகாட்ட நிகழ்ச்சிகளில் இந்தப் பாடல் ஒலிக்கிறது. ஆனால், இந்தப் பாடலை எழுதிய கவிஞர் நேதாஜி என்பது தான் மறந்து விட்டது. அவர் மிகச்சிறந்த கவிஞர் வழக்கறிஞர் என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.

திராவிடப் படைப்பாளிகள் மீது பாய்ந்த வெளிச்சம் தேசிய, இடதுசாரி பார்வை கொண்ட படைப்பாளிகள் பலர் மீது படவே இல்லை. அதன் விளைவே, நேதாஜியை நினைவுபடுத்தும் இந்தப்பதிவு. நேதாஜி என கூகுளில் தேடினால் சுபாஷ் சந்திரபோஸ் தான் வருகிறார். அப்படியென்றால் இத்தனை பாடல்களை எழுதிய நேதாஜிக்கான இடம் எது ?

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மனதின் ஆசையை தூண்டிய குரல் - ப.கவிதா குமார்
  2. சிவாஜி, ரஜினியை இயக்கியும் தோல்வியடைந்த இயக்குநர்-- ப.கவிதா குமார்
  3.  ஏழு சுவரங்களில் எத்தனைப் பாடல்:வாணி ஜெயராம் - ப.கவிதா குமார்
  4. கோழிக்கறி கேட்டதற்காக சென்சார் செய்யப்பட்ட பாடல்- ப.கவிதா குமார்
  5. வித்தியாசமான பாடல்களின்முகவரி  வி.சீத்தாராமன்- - ப.கவிதா குமார்
  6. கண்மணி சுப்பு: கவியரசு வீட்டுக்கட்டுத்தறி- ப.கவிதா குமார்
  7. வித்வான் வே.லட்சுமணன்  ஜோசியக்காரர் மட்டும்தானா? - ப.கவிதா குமார்
  8. ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை: வங்கத்துக் குயில் எம்ஆர்.விஜயா - ப.கவிதா குமார்
  9. தென்னாட்டு தமிழ்க்குரல்  விஎன்.சுந்தரம்-ப.கவிதா குமார்
  10. ’புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே’ :கவி சீமான் கேபி. காமாட்சி- ப.கவிதா குமார்
  11. ஜாவர் சீத்தாராமன் சரி... அது யார் ராஜ் சீத்தாராமன்?- ப.கவிதா குமார்
  12. மனோவின் முன்னோடி ...மறக்க முடியாத பாடகர் ரமேஷ்- ப.கவிதா குமார்