எல்லாமே எப்போதுமே  8


On dispersive ground, therefore fight not. On facile ground, halt not. On  Contentious ground attack not.
SUN TZU
The Art Of War

தனிமை என்பது மனிதன் தனக்குத் தானே நிகழ்த்திக் கொள்கிற மாபெரிய தீமையும் நன்மையுமான புதிர்மை. மரணம் என்பது வேடத்திலிருந்து வெளியேறுதல்.

மழை பெய்கிற ஊரெல்லாம் எனக்குச் சொந்த ஊர் தான் என எங்கோ வாசித்த நினைவு. மழை மீது மனிதனுக்கிருப்பது குழந்தைப்ரியம். மழை வருவதற்கு முன் மண்ணும் காற்றும் உறவாடி வினோதமான வாசனை எழும். அது மழை முன் மணம். அப்போதே மனசு தயாராகி விடும். எத்தனையோ நாட்கள் மழைக்கு வீடு நோக்கி ஓடுகிறவர்களுக்கு எதிராக மழையில் இலக்கின்றி அலைந்திருக்கிறேன். தொப்பலாக நனைந்துவிட்டு வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் பாட்டியும் அம்மாவும் கோபித்துக் கொள்வார்கள். அந்த அன்பின் சொற்களிலிருந்து தொடங்கும் வெம்மை இன்னோர் இன்பம். பாட்டியின் இறப்பு என்னப் பல துண்டுகளாய்க் கிழித்தது. அன்பை இழப்பது தான் வேதனை.

துக்கம் என்பதை எப்படி மேலாண்மை செய்வது ? வெறுமையும் இழப்பும் நீரள்ளிக் குடிக்கத் தோன்றாத வறட்சி போலத் தான். ஒரு மனிதனின் மரணத்தைச் சுற்றிச் சுற்றிப் பின்னப்படுகிற பெருவாரி செய்கைகள் அதீதமானவையாக போலித் தனம் மிகுந்திருப்பதன் காரணம் என்ன..? துக்கம் என்பது ஒருவகை எதிர்கொண்டாட்டம். அது ஒரு முறைமை. அதனை முறைப்படி அடுத்தடுத்த படிநிலைகளோடு அணுகுவதை மனிதன் விரும்புகிறான். பாரேன் இத்தனை பெரிய இழப்பை எப்படி சந்திக்கிறேன் பார்த்தாயா என்று பீற்றிக் கொள்ளும் உத்தி. தன்னைச் சேர்ந்த ஒருவரைச் சிறப்பாக வழியனுப்புவது காலம் காலமாக மனித வாழ்வின் பூர்த்தியாகப் பார்க்கப் பட்டு வருகிறது. சத்தியத்தில் மரணம் என்பதை அறிந்து கொள்ளும் கணமே அது துவங்கி விடுகிறது அல்லது முடிவடையத் தொடங்குகிறது என்பது என் கருத்து. நிகழ்தலை விடவும் அறிதல் தான் அதிகப்படி கனகாத்திரம். நிகழும் போது சின்னதொரு வியத்தலோடு அதைத் தழுகிறவர்கள் தான் பலரும்.
அறிந்த மனிதரின் இழப்பென்பது உருவாக்குகிற சித்திர அலாதிகளைப் பார்ப்போம். அவன் எனக்கு எவ்ளோ நெருக்கம் தெரியுமா இத்யாதிக் கதைகள் பலவும் உடனடியாகத் திறந்து கொள்கின்றன. ரெடிமேட் பருப்புப் பொடி பாணியில் சின்ன நகர்வுகள் அல்லது கடந்து செல்லும் தோற்றமாயைகளை எல்லாம் அநியாயத்து விரித்தெடுத்து தனக்கும் இறந்த மனிதனுக்கும் இடையிலான இறுக்க நெருக்க ஆத்ம பந்தத்தை யாரிடமாவது சொல்லிக் கொள்வதில் ஒரு அற்ப சுகம் எழுகிறது. இறந்தவன் எழுந்து வந்து மறுக்கப் போவதில்லை என்றொரு மாபெரும் நிஜம் அடுத்த நிஜம் இறந்தவன் அறியாமல் அவனுக்கு நிகழ்த்தப் படுவதன் உலர் தன்மை தருகிற தைரியம். இப்படியான அர்த்தமற்ற கதைகள் ஏற்படுத்தித் தருகிற பொய்மையின் சுகம் முதுகு சொறிதல் போலத் தன் கதாபாத்திர எதிர்மறை குணாம்சத்துக்குத் தானே பலியாகும் பரிதாபம்.

இறந்த மனிதனுக்கும் தனக்கும் நெருக்கம் என்பதில் தொடங்கி அவரது கதையைத் தன்னைக் கொண்டு திருத்தியெழுத முனைவது ஒருவிதமான உளவியல் கீறல் தான். அவனுக்கு நான் நெறைய்ய ஹெல்ப் பண்ணிருக்கேன் என்பதில் தொடங்கி அவன் எனக்கு எத்தனையோ செய்திருக்கான் என்பது வரை புனைவின் பாலன்ஸ் ஷீட் தரவுகள் அடுத்த அச்சுப்பிச்சு. இவை உண்மையில் பெரு நோக்கத்திற்காகப் பகிரப் படுகிற பொய்கள் அல்ல. எனக்குத் தெரிந்த இப்படியான பொய்யர் தான் சொன்ன பொய்யைத் தானே சிலபல காலம் கழித்து மறந்து போனார். இயல்பாகவே உண்மையை நீங்கள் அவிழ்த்து விட்டாலும் அது எங்கேயும் ஓடாது. பொய்களைச் சற்றுப் பிசகினால் அவை காட்டிக் கொடுத்துவிடும். அன்னைக்கி நீங்கதானே அப்படிச் சொன்னீங்க என்றதற்கு வியர்த்து விறுவிறுத்து நானா அப்டியா சொன்னேன் இருக்காதே என்னன்னு தெர்லியே என்றெல்லாம் அசடு வழியக் கிளம்பிப் போனார். பிடியற்ற கத்தி பற்றுபவனைப் பாவம் பார்ப்பதில்லை. யாரையும் போலவே தன்னைப் பற்றுகிறவனையும் அறுக்கும். அப்படித் தான் அந்த மனிதர் பிடிபட்டார். தானறிந்த பெரிய கூட்டம் ஒன்றால் மொத்தமாக நிராகரிக்கப் பட்டார்.

நன்றாக உற்றுக் கவனித்தால் இழப்பின் க்ரூரம் எதையும் பேசச்செய்யாது. உற்றவர்கள் அப்படியே விக்கித்துப் போய் மலங்க விழிப்பதும் சொல்லறுந்து திணறுவதும் எப்பெரிய கலைப்படைப்பிலும் முழுமையுறாத பாதிமலர். அப்படியானவற்றை வெறும்காட்சி என்று ஆழப் புதைத்துக் கொள்வது வழக்கம். துக்கத்தை விடக் கடினம் அதற்குரியவர்களுக்கு அருகிருந்து தேற்றுவது. அதற்கு நிஜமாகவே சில தகுதிகள் வேண்டும். அவற்றில் ஒரு தகுதி நிஜம் பகிர்தல். அப்படித் தான் பரணியின் தாய்மாமா இறந்த போது அவனோடு உடனிருக்க வாய்த்த சில பொழுதின் காட்சித் துகள்கள்.

அவன் வீட்டின் கீழ் போர்ஷன் மாமாவின் வீடு. அதிகம் கூட்டம் வந்து சேர்ந்திருக்கவில்லை. எப்படி இதனைக் கையாள்வது எனத் தெரியவில்லை. விசாரிப்பது ஒரு கடமை. என்னடா என்றேன். அவன் மாடிப் படிக்குக் கீழே ஒரு ஸ்டூலில் அமர்ந்து கொண்டு எனக்கு மடக்குச்சேரைத் தானம் செய்தான். மறுபடி என்னடா என்றதும் அவருக்குக் கொஞ்ச நாளாவே முடியலைடா என்றவன் பாலகுமாரனின் கைவீசம்மா கைவீசு நாவலைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். மெல்லிய குரலில் அவன் பேசுவதையே பார்த்தபடி இருந்தேன். எனக்கு அந்த இடத்தின் மணமும் அசட்டுத் தேசலாய் அந்த தினத்தின் வெளிறிய நிறமும் கூடுதலாய் நுழைந்து கொண்டிருக்கக் கூடிய மனித எண்ணிக்கையும் எல்லாமுமாய்ச் சேர்ந்து கொண்டு லேசான வெறுமையைத் தந்தன. அவனோ குன்றிய சன்னக் குரலில் எதெதையோ பேசிக் கொண்டிருந்தான்.

ஆற்றில் குளிக்கச் சென்ற இடத்தில் மரணமடைந்த எழுத்தாளரையும் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட கவிஞரையும் அடுத்தடுத்துக் குறிப்பிட்ட பரணி அவருக்குத் தான் செத்திட்டு இருக்கோம்னு தெரியாமலே மூழ்கியிருப்பார்ல..சாகுந்தருவாய்ல என்னல்லாம் நினைச்சிருப்பார்..? இவர் கிணத்துல குதிக்குறதுக்கு மின்னாடி என்ன நினைச்சிருப்பார் இந்த ரெண்டுலயும் வெவ்வேற நீர் நிலைகள் இருக்கிறதை வியக்குறேன் ரவீ.. அங்கே அலைபாய்ற வெள்ளமா நீர் கட்டறுந்து பாய்றது தான் சரி. பிரார்த்திக்கிறதுக்குள்ளே அடிச்சி முடிச்சிர்ற பேய்வருகை. இங்க பாரேன்…ஒரு பெரிய கலயத்துல ஆடாம அசையாம நிலைச்சிருக்கிற நீர்பிம்பம்..முன்னது எழுத முடியாத சிறுகதை. அடுத்தது எழுதிக் கிழிச்சிப் போட்ட கவிதை என்றான். எனக்கு லேசாக பயமாக இருந்தது. யார் யாரோ கடக்கையிலெல்லாம் நான் என் முகத்தை கஷ்டப்பட்டு துக்கத்தைப் பிரதிபலிக்கிறாற் போல் சங்கடம் பண்ணிக் கொள்ள வேண்டி இருந்தது. எதையுமே அவன் லட்சியம் செய்துகொள்ளவில்லை. நடந்ததற்கும் அவனுக்கும் சம்மந்தமே இல்லாதவனைப் போல் சலனமற்றிருந்தான்.

பின்னொரு நாளில் கேட்டேன். ஏண்டா உங்க மாமா இறந்த அன்னிக்கு என்னென்னவோ பேசிட்டிருந்தே உனக்கு கஷ்டமாவே இல்லியா..?அவன் அதற்கு அந்த தினத்தின் அதே குரலில் பதில் சொன்னான். பாவனையா கத்திக் கதறி அழுறதெல்லாம் ஹம்பக் நண்பா..எது வருதோ அது தான் நிஜம். அன்னிக்கு நான் என்னவா இருந்தேனோ அதான் நான். இங்கே பாவனைகளுக்குத் தான் பத்து மார்க். நிசத்துக்கு ஒன்றிரண்டு தான் ” என்றான்.

அந்தப் பரணி வேறொரு தினம் நான் எழுதிய கடிதத்துக்கான தன் பதிலை இப்படித் தொடங்கி இருநான்.

“புகழ் பெற்ற நடிகனுக்கு நிஜத்தில் எது நடந்தாலும் தனக்குள் இருக்கிற தேர்ந்த நடிகனை முதலில் சமாதானம் செய்துவிட்டுத் தான் அதனைக் கையாள வேண்டியிருக்கும். நடிப்பு என்கிற கலைக்குத் தர வேண்டிய மாபெரும் விலை இது”. நடிகலட்சணங்களில் முதன்மையானது வேடத்திலிருந்து வெளியேறுதல் என்று படிக்க நேர்ந்த போது ஏனோ பரணியின் ஞாபகம் வந்தது.

 ஒரு கவிதை
****************
குருட்டொலிகளின்
அலைவீச்சில்
யுகயுகமாய் சேகரமான
வேறொரு
கருமணல் விரிவு

கலையாதிருப்பது
கருமணல் விரிவு மட்டுமே

அபி

(அபி கவிதைகள்
அடையாளம் பதிப்பகம் வெளியீடு)

தனிமையைக் கொண்டாடவும் அச்சப்படவும் வேண்டியதில்லை. மாறாக அதனை உற்று நோக்குவது ஒரு பாங்கு.அதனைப் பழகியவர்க்குத் தனிமை பழகிய நாய்க்குட்டி மாத்திரம்.
வாழ்க்கையென்பது மலர்பூத்து வனமாதல் தான். தனித்திருத்தல் காலங்கள் விரைவில் தீர்ந்து விடும்.நம்பிக்கை தான் வாழ்வில் நல்மருந்து வாழ்தல் இனிது.

தொடரலாம்

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. குஸ்கா பிரியாணியும் சால்னா பரோட்டாவும் - ஆத்மார்த்தி
  2. அழகர் கோயில் தோசையின் அழியாத சுவை
  3. அன்பென்ற பொருளாதல்
  4. ஜெயன் என்னும் மறக்க முடியாத நடிகர் - ஆத்மார்த்தி
  5. மதுரையில் மறைந்த திரையரங்குகள் -ஆத்மார்த்தி
  6. சினிமா பித்து- ஆத்மார்த்தி
  7. நகரத்தின் கண்கள்- ஆத்மார்த்தி
  8. மெலிய மறுக்கும் யானை - ஆத்மார்த்தி
  9. கனவான் குணவான் - ஆத்மார்த்தி
  10. பெஸ்டியை இழத்தல் - ஆத்மார்த்தி
  11. வயலட் விழியாள் - ஆத்மார்த்தி