சுகாதார வளாகம் பராமரிப்பின்றி பூட்டிக் கிடப்பதால் கஞ்சநாயக்கன்பட்டி பிரதான சாலையை  திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டியநிலை உள்ளதாக அருப்புக்கோட்டை அருந்ததியர் காலனியச் சேர்ந்த மக்கள் புலம்பி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி அருந்ததியர் காலனியில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. காலனியை ஒட்டிய தும்பைகுளம் கண்மாயில் மழைநீர் நிறைந்து செல்லும் மறுகால் செல்லும் ஓடை உள்ளது. ஓடை பராமரிப்பு செய்யாமலும், கரை பகுதி ஆக்கிரமிப்பாலும், மழைக்காலங்களில் மழைநீர் காலனிக்குள் வந்துவிடுகிறது. காலனியில் உள்ள நவீன சுகாதார வளாகம் பராமரிப்பின்றி செயல்படாமல் உள்ளது.

கஞ்சநாயக்கன்பட்டியிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து, கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. கஞ்சநாயக்கன்பட்டி முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காலனி மக்கள் குடிநீருக்காக குடங்களுடன் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்காலனியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில்,” காலனியில் உள்ள கழிப்பறைகள், நவீன சுகாதார வளாகம் அனைத்தும் பூட்டப்பட்டு காட்சி பொருளாக தான் உள்ளது. கஞ்சநாயக்கன்பட்டியில் நிலத்தடி நீர் நன்றாக இருந்தது. இதை பயன்படுத்தி இங்குள்ள ஊரணிகள், கண்மாய்கள் அருகே நிலத்தை வாங்கிய சிலர், போர்வெல் அமைத்து தண்ணீரை இரவு பகல் பாராது விற்கின்றனர். தற்போது ஊரில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு மெத்தனம் காட்டுகிறது.

அதுமட்டுமில்லாமல், கஞ்சநாயக்கன்பட்டி – அருப்புக்கோட்டை முக்கியமான சாலை. இந்தச் சாலையில் தான் மக்கள் பேருந்து, இருசக்கர வாகனங்கள்  என அருப்புக்கோட்டைக்கு தினமும் சென்று வந்தோம். பள்ளி, அரசு அலுவலகங்களுக்கு செல்ல வசதியாக இருந்தது. பல ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து, கற்கள் பெயர்ந்து நடக்க முடியாத அளவிற்கு  மோசாமான நிலையில் உள்ளது. சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர்.