கேள்வி: அன்பிற்குரிய மருத்துவர் அய்யா, நான் மிகக் கடுமையான ‘Depression’ல் இருந்து மீண்டு உள்ளேன். எந்த நொடியும் சாகக்கூடும் என்ற நினைப்பில் முடங்கியிருந்த நான் என் கடமை என நினைத்தவற்றையும் , எனக்கு விருப்பமானவற்றையும் செய்ய சொன்னார்கள்! எனது கடமை என் மகனுக்கானது அவனது வளர்ச்சி குறித்தது எனவே காலம் தேவைப்பட்டது. எனது விருப்பம் மிகப்பெரியது நடைமுறைக்கு எளிதாக சாத்தியமில்லாதது. (சமூகம் சார்ந்தது). இத்தகைய சூழலில் மீள்வது எப்படி?

மருதுபாண்டியன், அண்ணாநகர், சென்னை. 40

பதில்: உங்கள் கேள்வியில் இருந்து நீங்கள் இரண்டு வகையான சிக்கலில் இருப்பது தெரிகிறது. ஒன்று, நீங்கள் சொன்னதுபோல கடுமையான ‘Depression’ல் இருந்து மீண்டுவந்திருக்கிறீர்கள். இங்கு ‘Depression’ என நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் என்பது தெரியவில்லை. மனம் சோர்வாக இருப்பது வேறு, மனச்சோர்வு என்பது வேறு. மனம் சோர்வாக இருப்பது ஒரு நிலை. தற்காலிக உணர்வுநிலை. ஏதேனும் சில சிக்கல்கள் சார்ந்து மனம் அவ்வபோது ஒரு சோர்வு நிலைக்குச் செல்லும். அந்த நிலை மாறக்கூடியது. உங்களது எந்த ஒரு முனைப்பும் இல்லாமலே மனமே அந்த நிலையில் இருந்து வெளியில் வந்துவிடும். நாமே நிறைய நேரங்களில் அதை கவனித்திருப்போம் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது மனம் மிகவும் விரக்தியாக ஒரு சோர்வு நிலையில் இருக்கும். அந்த நேரத்தில் எதிலும் நம்பிக்கையற்று, ஈடுபாடு அற்று இருப்போம். ஆனால் சற்று நேரத்தில் அந்தநிலையில் இருந்து வெளியே வந்துவிடுவோம், அந்த குறிப்பிட்ட சிக்கல் தீராவிட்டாலும்கூட மனம் சற்று நேரத்தில் தன்னிலைக்கு வந்துவிடும் அதன் பிறகே அந்த சிக்கலை தீர்க்கக்கூடிய நம்பிக்கை நமக்கு வரும்.

ஆனால் மனச்சோர்வு என்பது ஒரு நீடித்த மனநிலை. அதாவது உங்களுக்கு ஏற்படும் மேல் சொன்ன தற்காலிக சோர்வுநிலை இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்து கொண்டேயிருந்தால் அதுதான் மனச்சோர்வு. ஒரு நேர்முகத்தேர்விற்கு செல்கிறீர்கள் அதில் நீங்கள் தேர்வு செய்யப்படவில்லை அதனால் கவலைப்படுகிறீர்கள் அல்லவா அது ஒரு தற்காலிக நிலை. சற்று நேரத்தில் எல்லாம் நீங்கள் அதில் இருந்து மீண்டு வந்து அடுத்த நேர்முகத்தேர்விற்கு உங்களை தயார் செய்ய தொடங்கிவிடுவீர்கள். ஆனால் அப்படி மீண்டு வராமல் அதே மனநிலை தொடர்ச்சியாக நீடித்து அதன் விளைவாக எதன் மேலும் நம்பிக்கையற்று, ஈடுபாடற்று, எதிர்காலத்தை நினைத்து அச்சப்பட்டு, உங்களைப் பற்றி மிக தாழ்வாக மதிப்பிட்டு, அதையே நினைத்து நினைத்து யாரிடமும் பேசாமல், தூங்காமல், சாப்பிடாமல் இருந்து “ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?” என நினைத்தால் அது மனச்சோர்வு (Depression). அப்படி ஒரு மனச்சோர்வு வந்தால் அது தன்னிச்சையாக சரியாகாது. ஒரு மனநல மருத்துவரின் உதவியை நீங்கள் நாடுவது அவசியமான ஒன்று. உங்கள் கேள்வியில் நீங்கள் மீண்டு வந்ததாக சொன்னது ஒரு தற்காலிக உணர்வுநிலையாகதான் இருக்கும் என நினைக்கிறேன். அந்த நேரத்தில் இதுபோன்ற தற்கொலை எண்ணங்கள் வரக்கூடும். அப்படி வரும் பட்சத்தில் நாம் வாழ்வதற்குரிய காரணங்களை மனமே தன்னிச்சையாக எடுத்து பரிசீலிக்க தொடங்கிவிடும்.

உங்கள் கேள்வியின் இரண்டாம் பகுதிக்கு வருவோம். நமது வாழ்க்கையின்மீது நாம்தான் மிகப்பெரிய கற்பிதங்கள் செய்து கொள்கிறோம், நம் வாழ்வின் நோக்கங்களைப் பற்றி நாம்தான் மிக அலங்காரமாய் நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் இந்த வாழ்க்கை என்பது சுயநலமானது. நமக்காக மட்டுமே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குழந்தைகள், தேசம், மொழி, இனம் என வாழ்வதற்காக நாம் சொல்லும் காரணங்கள் அத்தனையும் ‘நாம்’ என்பதின் நீட்சியே. வாழ வேண்டும் என நினைத்தாலோ அல்லது சாக வேண்டும் என நினைத்தாலோ அது நமக்காக நாம் எடுக்கும் முடிவே. வாழ்வதற்குத்தான் நமது முனைப்பு தேவை, ஆற்றல் தேவை, எண்ணம் தேவை. இறப்பதற்கு இவை எதுவுமே தேவை இல்லை. அதனால் வாழுங்கள் எல்லோரும்போல உங்களுக்காக வாழுங்கள். வாழ்வதை தவிர வாழ்விற்கான அர்த்தம் எதுவுமில்லை.

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com