சமுதாயத்தில் அதிக அளவில்  பேசப்பட்டு பின்னர் இருக்கும் இடம் தெரியாது மறைக்கப்பட்டு மறக்கப்பட்டு அழிந்து போகக் கூடிய குழந்தை பாலியல் தொந்தரவு (Sexual abuse)பற்றிய மறுபக்கம் தான் “நடவடிக்கை மாற்றங்கள்”

பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை இறந்து விட்டது என்ற செய்தி கேட்டால் மட்டுமே அச்செய்தி அனைவருக்கும் தெரிய வருகிறது அப்படியான சூழலில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம்.

இதையும் தாண்டி ஒரு சூழல் உண்டு அனைவரும் காணாத பக்கம் இருக்கிறது.அது தான் பள்ளிச் செல்லும் குழந்தைகள், பக்கத்து வீட்டிற்கு விளையாடும் செல்லும் குழந்தைகள், டியூஷன் செல்லும் குழந்தைகள் , வேலைக்கு செல்லும் பெற்றோர்களால்  வேலையாட்களிடம் விட்டுச் செல்லும் குழந்தைகள் இப்படியான குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளும் அவற்றை அவர்கள் பெற்றோரிடம் சொல்லத் தயங்குவதும் இதைச் சொன்னால் பெற்றோர்கள் நம்புவார்களா  மாட்டார்களா என்ற உளவியல் பிரச்சினைகளும் தான் நடவடிக்கை மாற்றம் என்னும் நடைமுறை பழக்கம் வழக்கங்கள்.

இங்கு ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்கள் கவனித்தில் கொள்ள வேண்டியவை:

*குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் உடல்ரீதியாக இருப்பதை விட பழக்கவழக்கங்களில் நிறைய மாறுபாட்டை அடையாளம் காண முடியும்.

* கருத்தரிப்பு

* சிறுநீர் மற்றும் மலம் கழித்தலில் அசெளகாரியம்

*மன உளைச்சலால் உடல் எடைக் குறைவு

*அனோரெக்சியா உணவின் மீது வெறுப்பு உணர்வு

*நடக்கும் போதோ உட்காரும் போதோ சிரமமாக எண்ணுதல்

*பால்வினை நோய் இருந்தல்

*பிறப்பு உறுப்பு மலம் கழிக்கும் இடங்களில் இரத்தக் கசிவு

இவையெல்லாம் குழந்தையின் ஆரம்பக் கால நடவடிக்கை மாற்றங்கள்.ஆரம்பக் கால நடவடிக்கை மாற்றங்கள் பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்பதால் நாளாக எல்லாம் சரியாகிவிடும் என்று சிலர் எண்ணுகிறார்கள்.சிலர் எண்ணுவது சிலருக்கு மட்டுமே பொருந்துகிறது.

ஏனென்றால் 70 சதவீதக் குழந்தைகள் பின்னாளில் நிறைய விளைவுகளை சந்திக்கிறார்கள்.

விளைவுகள் :

*யார் மீதும் நம்பிக்கை கொள்ளாதிருத்தல்

*தனிமையை அதிகம் விரும்புதல்

*சுற்றியுள்ள மனிதர்களிடம் இருந்து தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளுதல்

*திருமணத்திற்கு பின்னர் உடலுறவில் விருப்பமின்றி இருத்தல் மற்றும் உடலுறவை முற்றிலுமாக வெறுத்தல்.

* மனச்சிதைவு, மனச்சோர்வு

*எதையும் நேர்த்தியாக எவ்வித குறையின்றி செய்ய வேண்டுமென்ற எண்ணம்

*தற்கொலை முயற்சி

*தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்

*குற்றவுணர்வு மேலோங்குதல்.

*போதை பழக்கவழக்கங்களுக்கு ஆளாகுதல்.

இவையெல்லாம் நிகழாது இருக்க வேண்டுமென்றால் முதலில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமிடையேயான இடைவெளி குறைய வேண்டும்.அதற்கு பெற்றோர்கள் குழந்தைகளிடம் நேரத்தைச் செலவிட வேண்டும்‌.அவர்களிடம் நிறைய பேச வேண்டும்.அதற்காக குழந்தைகளை முழு நேரக் கண் பார்வையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.தேவையான நேரத்தில் அவர்களை பார்வையிட்டால் போதுமானது.

பிரச்சனை நேர்ந்தால் குழந்தைகள் பெற்றோர்களிடம் வந்து சொல்லும் வகையில் நட்புறவையும் தைரியத்தையும் தர வேண்டும் பெற்றோர்கள்.

சமூகமென்னும் பயம் :

பெற்றோர்கள் ஒருபக்கம் இருக்க இச்சமூகம் என்னச் செய்கிறது பாலியலால் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறது.எதற்கு ஒதுக்க வேண்டும் எதற்கு அரவணைக்க வேண்டுமென்று தெரியாத இச்சமுதாயத்தில் தான் கண்ணுக்கு தெரிந்து ஆயிரம் தவறுகள் நடக்கிறது. அதில் எல்லாம் தங்களின் கண் பார்வை பட்டாலும் படாதது போல் நகர்கிறார்கள்.

ஒரு குடும்பத்தில் இத்தகைய சூழ்நிலை மாற்றங்கள் நடந்தால் முதலில் குறை கூறுவதை நிறுத்துங்கள்.ஆதரிக்க கூட வேண்டாம் அநாகரிகமாக பேசுவதைத் தவிருங்கள்.குழந்தை வளர்த்த விதம் சரியில்லையென்று குற்றங்களை குடும்பத்தாரின் மீது திருப்பாமல் குற்றவாளிகளுக்கு அக்குடும்பத்தோடு ஒன்றிணைந்து தண்டனை வாங்கிக் கொடுங்கள்.

இதைத்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லுவார்

“நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்”…