தலையில் இருந்து கைய எடுத்தால் குரல் வளைய கடித்துவிடுவேன் என  வடிவேலு-வெங்கல்ராவ் நகைச்சுவை காட்சி போல,  கச்சா எண்ணெய் வர்த்தகத்தில்   சிக்கல்கள் நீடித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால், உலகம் முழுவதும் முடங்கியுள்ள  நிலையில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் நுகர்வு இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது.

அதன் காரணமாக கச்சா  எண்ணெய் தேவை குறைந்து, விலை சரிந்து வருகிறது. அதையடுத்து உலக அளவில் சந்தைப்படுத்தப்படும் பிரெண்ட் (brent) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 25 டாலர் என்கிற அளவில் சரிந்து வர்த்தகமாகிறது.

அமெரிக்காவில் மட்டும் வர்த்தகமாகும் டபிள்யு.டி.ஐ. எனப்படும் வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு (-40 டாலர்) என 0 டாலருக்கும் கீழே நேற்று வர்த்தகமானது. இது அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான சரிவு என கூறப்படுகிறது.

ஏற்கெனவே வாங்கிய  கச்சா எண்ணெய் பலகோடி பீப்பாய்கள்  தேங்கி உள்ளதுடன், ஓசியில் கொடுத்தாலும் அதை வாங்கி வைக்க  இடவசதி குறைவாக இருப்பதாலும், சுத்திகரிப்பு நிறுவனங்கள் கச்சா எண்ணெயை வாங்கவில்லை என்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது சரிவடைந்த விலை என்பது மே மாதம் முடிவடையும் ஒப்பந்தம். கச்சா எண்ணெயை லாபத்திற்காக வாங்கி விற்கும் வர்த்தகர்கள், 3 மாத ஒப்பந்த காலத்துக்குள், அதை விற்றுக் காசு பார்ப்பார்கள். அப்படி இந்த மாதம் ஆதாயம் கிடைக்கும் என நினைத்து வாங்கியவர்கள் , அதைச் சும்மாவேணும்  மற்றவர்களிடம்  ஒப்படைக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

ஒருவேளை ஊரடங்கு தளத்தப்பட்டு விமான போக்குவரத்து உள்பட அனைத்தும் சீரானால், ஜூன் மாதத்துக்கான ஒப்பந்தம்  , மே மாதத்தில் சடசடவென விலை ஏறலாம்.

உற்பத்தி நிறுவனங்களுக்கோ, தற்போதைய கச்சா எண்ணெய் இருப்பையும், தொடர்ந்து உற்பத்தி செய்வதையும் எப்படியாவது, தள்ளிவிட வேண்டும் என்கிற நெருக்கடி உள்ளது. அது இடவசதி சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, உற்பத்திச் செலவு சார்ந்த சுமையும் உள்ளது.

தேவை குறைந்துள்ளதால், உற்பத்தியை நிறுத்தலாமே என எளிதாக நினைக்கலாம், ஆனால்  உற்பத்தியை நிறுத்திவிட்டு மீண்டும் தொடங்குவது அதிகச் செலவு பிடிக்கும் விவகாரம். அதாவது விற்பனையில் ஏற்படும் இழப்பைவிட, மீண்டும் உற்பத்தியை  தொடங்குவதற்கு அதிகம் செலவாகும்.

உதாரணமாக, விற்பனையால் ஏற்படும் இழப்பு ஒரு கோடி ரூபாய் என்றால், உற்பத்தியை நிறுத்திவிட்டு மீண்டும் தொடங்க 4 கோடி ரூபாய் செலவாகும் என்கின்றன விவரங்கள்.

அதனால்தான், தற்போதைய கச்சா எண்ணெய் இருப்பை எடுத்துக்

கொள்வதற்கே,  பணம் கொடுக்கும் நிலைமைக்கு  அளவுக்கு அமெரிக்க முதலாளிகள்   தள்ளப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், ஜூன் மாதத்துக்கான டபிள்யு.டி.ஐ ஒப்பந்தத்தில் ஒரு பீப்பாய் 20 டாலர் அளவில் வர்த்தகமாகி வருகிறது. ஆனால் கொரோனா தாக்கம் நீடிக்கும்பட்சத்தில் அடுத்த மாத இறுதியில் இதே போன்ற நிலைமை உருவாகலாம்.

டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெயில் நிலவும் போக்கு பிரெண்ட் கச்சா எண்ணெயில் உருவாகும்பட்சத்தில், இந்தியா உள்பட பல நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஆதாயம்தான். ஆனால் அதிக இருப்பு வைக்கும் கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் இல்லை என்பதும் முக்கியமானது.

அது ஒருபக்கம், ரிலையன்ஸ் உள்பட பெரு நிறுவனங்களுக்கு ஆதாயம் என்றால்,  மறைமுகமாக இந்திய தொழிலாளர் சந்தைக்கு நல்லதல்ல. குறிப்பாக பிரெண்ட் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவது வளைகுடா நாடுகள். அங்கு ஏற்படும் பொருளாதாரச் சரிவு, கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் என வளைகுடா நாடுகளில்  பணியாற்றும் லட்சக்கணக்கான இந்திய தொழிலாளிகளை பதம் பார்க்கும்.

தற்போதே, சிறிய அளவிலான சுமார் 400 கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும்,  இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், தங்கள் நாடுகளுக்கு திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெயில் ஏற்பட்ட விலைச் சரிவு போல, பிரெண்ட்  கச்சா எண்ணெயிலும் ஏற்படுமா என உறுதியாகச்சொல்ல முடியாது.  காரணம் பிரெண்ட் சர்வதே சந்தை.  பல நாடுகளும் பிரெண்ட் எண்ணெயைத்தான் கொள்முதல் செய்கின்றன.ஓபெக் எனப்படும் வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் விலை சரிவு ஓரளவு கட்டுப்படுத்தப்படும் என நம்ப வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில், விலை சரியாது என்றும் சொல்ல முடியாது. டபிள்யு.டி.ஐ எண்ணெய்க்கும்,  பிரெண்ட் எண்ணெய்க்குமான விலை வித்தியாசம்  எப்போதும்,  6 டாலர் என்கிற அளவிலேயே உள்ளது.

ஆதாயம் என்றால் முதலாளிக்கும், நெருக்கடி என்றால் தொழிலாளிக்கும் என்கிற சந்தை விதியில், தற்போது புதிய அத்தியாயத்தில் முதலாளிகள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

எது எப்படி என்றாலும், நஷ்டத்தை குறைப்பதற்காக  கச்சா எண்ணெய் உறுஞ்சுவதை மட்டும் முதலாளிகள் நிறுத்தப்போவதில்லை.

பொருளாதாரத்தின் குரல் வளையை நெரித்துக் கொண்டிருக்கிறது கச்சா எண்ணெய். தலையில் இருந்து கைய எடுத்தால் குரல் வளைய கடித்துவிடுவேன் என வெங்கல்ராவ் சொல்ல, எடுக்க முடியாமல் தவிக்கும்  வடிவேலுவின் நிலை கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு..

நாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமல்ல…