ஒரு நீண்ட ஊரடங்கின் நான்காவது வாரத்தில் இருக்கிறோம். ஆரம்பத்தில் வேடிக்கையாக, குதூகலமாக, மெல்லிய பதட்டமாக, ஆசுவாசமாக என கலவையான மன நிலையில் தொடங்கிய இந்த ஊரடங்கு, நாட்கள் செல்ல செல்ல ஒரு வெறுமையான மன நிலைக்கு நம்மைக் கொண்டு வந்திருக்கிறது. முன்பு போல தொலைகாட்சியின் கொரோனா செய்திகளில் அத்தனை ஆர்வமில்லை, கொரோனா தொற்றின் எண்ணிக்கையில் கவனமில்லை,  இதன் பின்ணணியில் உள்ள அரசியலில் ஈர்ப்பில்லை, யாருடனும் பேசுவதில் முன்பிருந்த நாட்டமில்லை, சமூக வலைதளங்களில், ஆன்லைன் திரைப்படங்களில், புதிய முயற்சிகளில் என அத்தனையின் மீதும் ஆரம்ப நாட்களில் இருந்த ஈடுபாடுகள் வடிந்துவிட்ட நிலைக்கு இப்போது வந்திருக்கிறோம். மனம் முழுக்க வெறுமையும், ஆற்றாமையும், காரணம் தெரியாத கோபமும் மட்டுமே இருக்கின்றன. குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதாய் சொல்லப்படுவதற்கு கூட இந்த மன நிலைக்கு நாம் வந்தடைந்தது தான் காரணம்.

இப்போது நம் எல்லோர் மனதிலும் இருப்பது ஒரே ஒரு கேள்வி தான். எப்போது இது முடியும்? எப்போது நாம் அன்றாட வாழ்க்கைக்கு திரும்புவோம்?

இந்த கேள்விக்கான பதில் அத்தனை எளிமையானதல்ல. அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, பொருளாதார திட்டங்கள், பரிசோதனைகளை விரிவுபடுத்துதல், மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மருத்துவப்பணியாளர்களின் அர்ப்பணிப்பு, அவர்களின் பாதுகாப்பு, மக்களின் சுய ஒழுங்கு, நமது தட்பவெப்ப சூழலில் நோயின் மாறுபடும் தன்மை, நமது உடலின் நோயெதிர்ப்பு திறன் என பல காரணிகள் இதை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கின்றன. இவையெல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில் நம்மால் இந்த கேள்விக்கான பதிலை ஓரளவிற்கு கணிக்க முடியும்.

இந்தியாவின் கொரோனா பரவலின் சில பிரத்யோக பண்புகளை நாம் பார்த்துவிடலாம், அதன் பிறகு நாம் அந்த கணிப்பிற்கு செல்லலாம்.

இந்தியாவில் நோய் பரவலின் வேகம் முன்பு கணிக்கப்பட்டதை விட குறைவாக இருக்கிறது. மார்ச் இறுதியில் வெளியான கணிப்பின்படி இந்நேரம் இந்தியாவில் நோய் தொற்றின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை தாண்டியிருக்க வேண்டும்.

ஐசிஎம்ஆர் கணிப்பின்படி நோய் தொற்று பரவல் இரண்டிற்கும் கீழாக தான் இருக்கிறது.

இறப்பு வீதம் கிட்ட தட்ட ஒரு சதவீதம் என்ற அளவில் தான் இந்தியாவில் இருக்கிறது

சமீபத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின்படி இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு அதாவது எண்பது சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் தொற்று இருந்தும் அதற்கான அறிகுறிகள் இல்லை. அவர்கள் Asymptamatic carriers களாக இருக்கிறார்கள்.

இந்த சூழலில் இன்னும் எவ்வளவு நாட்கள் நோய் தொற்று நீடித்திருக்க வாய்ப்பிருக்கிறது?

உலக சுகாதார நிறுவனம் முதற்கொண்டு கொரோனாவை கட்டுபடுத்தும் பணியில் இருக்கும் அனைத்து நாடுகளும், அமைப்புகளும் இரண்டு இலக்குகளைக் கொண்டிருக்கின்றன:

தடுப்பூசியை விரைவாக கண்டுபிடிப்பது. இதற்கான முயற்சியில் மருத்துவத்துறை மிக துரிதமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு கூட அமெரிக்காவில் கொரோனாவிற்கான தடுப்பூசி மனிதர்களின் மீது சோதனை செய்யப்பட்டிருக்கிறது. தடுப்பூசியை கண்டுபிடித்தவுடன் அதை உடனேயே சந்தையில் பயன்படுத்த முடியாது. அதற்காக பல படி நிலைகள் இருக்கின்றன. இன்றைக்கு தடுப்பூசி கையில் இருந்தால் கூட அது சந்தைக்கு வர குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஆகும். ஒருவேளை தடுப்பூசியை மருத்துவத்துறை கண்டுபிடித்து விட்டால் கோவிட் 19 நோய்க்கு அது நிரந்தர தீர்வாக இருக்கும். இதற்கான நீண்ட கால அளவு இருப்பதால் தடுப்பூசி கண்டுபிடிப்பது மட்டுமே இலக்கல்ல.

அடுத்த இலக்கு, R0 எனப்படும் தொற்றுபரவல் வீதத்தை அதாவது ஒருவரிடம் இருந்து எத்தனை பேருக்கு தொற்றுபரவ வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணிக்கையை 2.5 இல் இருந்து 1 ஆக குறைப்பது. அப்படி குறைக்கும்போது ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துவிடும் என்பதை மற்றுமொரு இலக்காய் மருத்துவ உலகம் கொண்டிருக்கின்றன. இதைச் சாத்தியப்படுத்த நாம் என்ன திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும்?

தொற்று பரவலை குறைக்க இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன:

இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஐம்பதில் இருந்து அறுபது சதவீதத்தினர் நோய் தொற்றுக்கு உள்ளாகும்போது அவர்கள் எல்லோருக்குள்ளும் கொரொனாவிற்கு எதிரான பிரத்தியோக நோயெதிர்ப்பு செல்கள்(ஆண்டிபாடிகள்) உருவாகிவிடும். இதனால் நோய் பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்படும். ஆனால் இதில் ஒரு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது ஐம்பது சதவீத மக்கள் பாதிக்கப்படும்போது இறப்பின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும். தொடக்கத்தில் பிரிட்டனும் இந்த முறையை தான் பரிசோதித்து பார்த்தது, எந்த கட்டுபாடுகளும் இல்லாமல் அனைத்து மக்களும் அவர்களது இயல்பு வாழ்க்கையை தொடரலாம் என்றது.  பெரும்பாலான மக்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகினால் அதன் வழியாக உருவாகும் கூட்டு நோயெதிர்ப்பு நிலை (Herd Immunity) நோய் பரவலை கட்டுப்படுத்தும் என நம்பியது, சில நாட்களிலேயே அங்கு மக்களின் இறப்பின் எண்ணிக்கை அதிகமாகியது, நாளுக்கு நாள் இறப்பின் எண்ணிக்கை கூடிச் செல்வதை பார்த்த பிரிட்டன் அரசாங்கம் உடனடியாக ஊரடங்கை அறிவித்தது.

இந்தியாவில் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் நோய் அறிகுறிகள் இல்லாமல் இருக்கிறார்கள் அல்லது மிதமான அறிகுறிகளையே கொண்டிருக்கிறார்கள், இறப்பு வீதமும் இங்கு என்ற ஐசிஎம்ஆர் தரவுகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் இந்த வழிமுறையை முயற்சி செய்யலாம் ஆனால் அதற்கு முன்பு முதியவர்களையும், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட பிற நோய்கள் இருப்பவர்களையும் சில மாதங்கள் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் இதை முயற்சி செய்ய முடியாது.

இரண்டாவது வழிமுறை அதிகமான பரிசோதனைகளும், கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வும். ஊரடங்கு என்பது முழுமையான தீர்வல்ல. அதன் சமூக, பொருளாதார இடர்களை எல்லாம் கணக்கில் கொண்டால் கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பை விட இன்னும் சில காலங்கள் நீடிக்கும் ஊரடங்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். அதனால் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படாமல் இருக்க வேண்டும். ஆனால் அதற்குள் நாம் செய்ய வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன.

கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை அதன் வழியே கண்டறிய வேண்டும், அதன் வழியாக அவர்களையும், அவர்களின் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும். அதற்கு முதலில் நோய்க்கான அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் கூட கொரோனா பரிசோதனை செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்தியா போன்ற மிக அதிகமான மக்கள் தொகையை கொண்ட நாட்டில் இதற்கான பொருளாதாரச் செலவு மிக அதிகமே. ஆனால் ஊரடங்கின் விளைவாக ஏற்ப்படப்பொகும் பொருளாதார இழப்பை ஒப்பிட்டால் இதற்காக செலவிடப்போவது மிகச் சொற்பமே.

மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் காவல் துறையினர் போன்றவர்களுக்கு மிக அதிகமாக பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். ஏனென்றால் இவர்களிடம் இருந்து நோய் பரவுதலுக்கான வாய்ப்பு மிக அதிகம்.

இந்த இரண்டு வழிமுறைகளும் அடுத்த சில வாரங்களில் சரியாக பின்பற்றபட்டால் ஊரடங்கை நாம் தளர்த்திக்கொள்ளலாம் ஆனால் முழுமையாக அல்ல.

அடுத்த சில வாரங்களில் ஊரடங்கை தளர்த்திய பிறகு என்ன செய்ய வேண்டும்?

ராப்பிட் டெஸ்ட் என சொல்லக்கூடிய ஆண்டிபாடி பரிசோதனையை மக்களுக்கான சேவையை வழங்கும் எல்லோருக்கும் செய்ய வேண்டும். இந்த சோதனையில் பாசிட்டிவ் முடிவு ஒருவருக்கு வந்தால் அவரிடம் கொரோனவிற்கு எதிரான நோயெதிர்ப்பு செல்கள் இருக்கிறது என்று பொருள், அவருக்கு கொரோனாவினால் பாதிப்பு வராது அவரிடம் இருந்து மற்றவர்களுக்கும் நோய் தொற்று பரவாது என்று பொருள். அதனால் ராப்பிட் டெஸ்டில் பாசிட்டிவ் முடிவு வரும் அனைவரையும் மக்களுக்கான சேவை பணியில் ஈடுபடுத்தலாம். அதாவது உணவகத்தில் பணியாளர்களாக இருப்பவர்கள், வாகன ஓட்டிகள், மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர் என அனைவருக்கும் சோதனை செய்து அதில் பாசிட்டிவ்வாக வருபவர்களை மட்டும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

ஊரடங்கை தளர்த்தினாலும் கூட அதை சில கட்டுப்பாடுகளுடன் செய்ய வேண்டும், உதாரணத்திற்கு மா நிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடையை இன்னும் சில காலங்கள் நீடிக்க வேண்டும், பொது போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும், மக்கள் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பேணுவதை உறுதி செய்ய வேண்டும், திரையரங்குகள், பொழுதுபோக்கு கூடங்கள், மால்கள் போன்றவைகளுக்கான தடையை நீட்டிக்க வேண்டும்.

அடுத்த சில மாதங்களில் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கான தனி சோதனை மையங்களை, மருத்துவமனைகளை ஒவ்வொரு ஊரக பகுதிகளிலும், மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும், அதற்காக மருத்துவர்களை, மருத்துவ பணியாளர்களை தகுந்த பாதுகாப்பு உபகரணங்களோடு பிரத்தியோகமாக நியமிக்க வேண்டும்.

மற்ற மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

ராப்பிட் டெஸ்ட் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் செய்யப்பட வேண்டும்.

தனி மனித சுகாதார நடவடிக்கைகளை மக்களிடம் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்

பொது இடங்களில் தனி மனித இடவெளியை மக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்திட வேண்டும்

வயதில் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வந்தால் கூட கட்டாயம் மாஸ்க், தனித மனித இடைவெளி, கைகளை கழுவதல் போன்றவற்றில் சமரசமின்றி இருக்க வேண்டும்.

இந்த வழிமுறைகளையெல்லாம் அரசாங்கமும், மக்களும் உறுதியாக பின்பற்றும்பட்சத்தில் நாம் அடுத்த ஒரு வருடத்தில் நம்மையும், நமது சமூகத்தையும் பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி கொரோனாவிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

“ஆனால் இவையெல்லாம் இங்கு சாத்தியமா?” என்ற கேள்வி எழுவதை தான் தவிர்க்க முடியவில்லை.