சென்னை மருத்துவர் ஒருவர் கொரோனா நோய் தொற்றின் விளைவாக மரணமடைந்திருப்பது வருத்தமளிக்கிறது. கொரோனாவிற்கு எதிரான பணியில் முதல் வரிசையில் இருக்கும் மருத்துவர்கள், மற்றும் மருத்துவ பணியாளர்கள் உலகம் முழுவதும் கொரோனாவில் மிக அதிகமாக பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கொரோனாவினால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய விடாமால் தடுக்கும் செயல்கள் தொடர்ச்சியாக இங்கு நிகழ்வது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும், அச்சமாகவும் இருக்கிறது.

தனியார் மருத்துவமனை ஊழியர்களை கொண்டே உடல் மயானத்திற்கு எடுத்து வரப்பட்டிருக்கிறது. உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு எதிராக பெருந்திரளாக மக்கள் நின்று தடுக்கு போது எப்படி சொற்ப ஊழியர்களால் அதை தடுக்க முடியும்? மக்களுக்காக தனது உயிரைப் பற்றி கவலையில்லாமல் பணிபுரிந்த மருத்துவர்களின் உடல் மயானத்தின் தரைகளில் நிராதராவாக விட்டு செல்லக்கூடிய நிலைக்கு அந்த ஊழியர்கள் மட்டுமே தான் காரணமா? உலகமே ஒரு நோய்க்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் சூழலில் மருத்துவர்களின் மாண்பையும், கண்ணியத்தையும் குறைந்தபட்சம் அவர்கள் இறப்பிற்கு பிறகாவது பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா நோய் தொற்று மிக வேகமாக பரவிவரும் இந்த காலகட்டத்தில், கொரோனா நோய் தொற்றின் விளைவாக மருத்துவர்கள் மரணமடையும் போது அவரின் உடலை அடக்கம் செய்யும் பொறுப்பை முழுக்க முழுக்க அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடலை அவசர, அவசரமாக அடக்கம் செய்ய முயலாமல், முதலில் எந்த மயானத்தில் அடக்கம் செய்வது என்பதை முடிவு செய்து அங்கு அதற்குரிய அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இருக்கும் அச்சத்தை கலைந்து அவர்களுக்கு முழு பாதுகாப்பு உபகரணத்தை அளிக்க வேண்டும். அந்த பகுதி மக்களுக்கு இதில் எதுவும் அச்சம் இருக்கும் பட்சத்தில் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் மக்களிடம் பொறுமையாக பேசி அந்த அச்சத்தை போக்க வேண்டும்.

மக்கள் அனைவருக்கும் இந்த நோய் குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகமாகும்போது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது அந்த அச்சம் அவர்களுக்கு ஒரு பீதியாக மாறிவிடுகிறது. அது தொடர்பான பீதி மற்ற எல்லா இடங்களுக்கும் பரவிவிடும். அதற்காக நாம் அவர்களை மட்டும் குறைகூற முடியாது. பொது வெளியில் இது தொடர்பான விழிப்புணர்வையும், புரிதலையும் மக்களிடம் தொடர்ச்சியாக அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். இந்தப் பீதியையும், அச்சத்தையும் போக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கே இருக்கிறது.

கொரோனாவினால் தமிழ்நாட்டில் இதுவரை பதினாறு பேர் மரணமடைந்திருக்கும்போது, ஏன் மரணமடைந்த மற்றவர்களை அடக்கம் செய்யும் போது நடக்காத பிரச்சினை மருத்துவர்களின் அடக்கத்தில் மட்டும் நடக்கிறது என்பதையும் அரசாங்கம் கண்டறிய வேண்டும்.

மக்கள் இதில் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

கொரோனாவினால் ஒருவரின் உடலில் இருந்து கொரோனா வைரஸ்கள் நீண்ட நேரம் இருக்காது அதனால் அவரின் உடலில் இருந்து நோய் பரவாது.

கொரோனாவினால் இறந்த ஒருவரது உடலை அடக்கம் செய்வதற்கான பிரத்தியோக வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் கொடுத்திருக்கிறது, அதன்படியே ஒவ்வொருவரது உடலும் இங்கு முழு பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்படுகிறது. அதனால் அதுகுறித்த அச்சம் என்பது அவசியமில்லை.

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தொற்று யாரை வேண்டுமானாலும் பாதிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால் நாம் அனைவருமே இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட நேரலாம், ஆனால் இதனால் மிக சிலர் மட்டுமே மரணமடைய வாய்ப்பிருக்கிறது. அப்படி மரணமடையும் போது ஒரு சமூகமாக மரணமடைந்தவரின் மாண்பை காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

அப்படியில்லாமல் இறந்த ஒருவரின் உடலை நிராதராவாக விட்டு செல்லும் நிலைக்கு இந்த சமூகம் செல்லுமென்றால் அது இந்த சமூகத்தின் நோய்மையை காட்டுவதாகத்தான் நாம் புரிந்து கொள்ள முடியும்.

இனி வரும் காலங்களில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

சமீபத்தில் கொரோனாவினால் மரணமடைந்த மருத்துவர்கள் கொரோனா பணியில் இல்லாதவர்கள் என்பது மிக முக்கியமான ஒன்று. அரசாங்கம் கூட மருத்துவர்களுக்கான பாதுகாப்பு, ஊதிய உயர்வு, காப்பீடு போன்றவற்றை கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கும் மட்டும் தான் என சுருக்கியிருக்கிறது. ஆனால் இன்றைய நோய் பரவும் சூழலில் மருத்துவமனையில் பணியாற்றும் அத்தனை மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் கொரோனாவினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை தான் இந்த மரணங்கள் காட்டுகிறது.

சமீபத்தில் அரசு இராஜீவ் காந்தி மருத்துவமனையில் நெஞ்சு வலி என்று வந்த நோயாளிக்கு இதய பரிசோதனை செய்த மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. அதன் பிறகு தான் அந்த நோயாளிக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள். இப்போது இதய நோய் பிரிவு அங்கு முழுமையாக மூடப்பட்டிருக்கிறது. அதனால் கொரோனா நோயாளிகளுக்கான பிரிவில் இருக்கும் மருத்துவர்கள் மட்டுமல்லாது அனைத்து பிரிவிலும் வேலை செய்யும் அத்தனை மருத்துவர்களுமே இதனால் கொரோனாவினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டு அனைத்து மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பிற்கு சில நெறிமுறைகளை வகுத்துள்ளது, அதாவது அவர்களின் exposure time ஐ குறைக்க வேண்டும் என்கிறது.  அதாவது நீண்ட நேரம் மருத்துவமனைகளில் இருக்கும்போது நோய் தொற்றுக்கான வாய்ப்பு மிக அதிகம். அதனால் அவர்களின் நேரத்தையும், நாட்களையும் குறைக்க வேண்டும். இதை பின்பற்றி அடுத்த சில மாதங்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சைகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

சுழற்சி முறையில் மருத்துவ பணியாளர்களுக்கான பணி வழங்கப்பட வேண்டும், அத்தனை பிரிவிலும் இருக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். மருத்துவ பணியாளர்களுக்கான கொரோனா பரிசோதனை மிக அதிகமாக செய்யப்பட வேண்டும். மருத்துவமனையின் வெளி நோயாளி பிரிவிற்கு வரும் நோயாளிகள் அத்தனை பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். காப்பீடு, ஊதிய சலுகைகள் போன்றவற்றை கொரோனா பணியில் இருப்பவர்கள் மட்டுமல்லாது அத்தனை சுகாதார பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

மக்களுக்கும், மருத்துவர்களுக்குமான பிணைப்பும், பரஸ்பர நம்பிக்கையும் வேறு எந்த காலத்தை விட இப்போது மிக மிக அவசியமானது. தெளிவான திட்டமிடல்கள் மூலம் அரசாங்கம் இதை உறுதி செய்திட வேண்டும்.

 

மரு.சிவபாலன்

தலைவர்

சென்னை சைக்யாட்ரிக் சொசைட்டி

20/04/2020