சென்ற வாரம் கேரளத்தின் திரிச்சூரில் நடந்த ஒரு விழாவில் இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் அவர்களை மம்மூட்டியும் மோகன்லாலும் சேர்ந்து கௌரவித்தனர். தமது தொடக்கக் காலத்தில் கே.எஸ்.சேதுமாதவனின் இரண்டு படங்களில் இணைந்து நடித்தவர்கள். இந்த கௌரவித்தல் அவர்களுக்குதான் பெருமை. ஏனெனில் 1951 முதல் திரைப்படக் கலையில் தனது அழியா முத்திரையைப் பதித்த மாபெரும் சகாப்தம் கே.எஸ்.சேதுமாதவன். அவருடன் பணியாற்றுவதற்கும் அவரைக் கௌரவிப்பதற்கும் இவர்கள் கொடுத்துவைத்திருக்கவேண்டும். தற்போது 88 வயதான சேதுமாதவன் வெள்ளித்திரையிலிருந்தும் ஊடக ஒளிவட்டத்திலிருந்தும் மிகத் தொலைவில் வாழ்கிறார் என்றாலும் தமிழ், மலையாள சினிமாவிற்கு அவர் வழங்கிய கொடுப்பினைகள் நாம் ஒருபோதும் மறக்கக் கூடாதவை.

பால் மணம் (1968), கல்யாண ஊர்வலம் (1970), நாளை நமதே (1975), நிஜங்கள் (1982), மறுபக்கம் (1991), நம்மவர் (1994) என்று ஆறு படங்கள் மட்டுமேதாம் தமிழில் அவர் இயக்கியிருக்கிறார். ஆனால் நவீன தமிழ் சினிமாவின் உருவாக்கத்தில் அவரது பங்களிப்பு என்பது அதைவிடவெல்லாம் மகத்தானது. தமிழ் சினிமாவின் அடித்தளத்தையே உருவாக்கிய மாபெரும் இயக்குநர்களுடன் துணை, இணை இயக்குநராகப் பணியாற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க பல தமிழ்ப் படங்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியவர் சேதுமாதவன்.

இந்தியத்திரை அதுவரைக்கும் கண்டிராத பிரம்மாண்டப் படம் சந்திரலேகாவின் (1948) ஒளிப்பதிவாளரும், மார்க்கண்டேயா (1935), பாதுக பட்டாபிஷேகம் (1936), கன்னியின் காதலி (1949), ஏழை படும் பாடு (1950) போன்ற படங்களின் இயக்குநருமாகயிருந்த கே ராம்நாத்தின் துணை இயக்குநராக, எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த மர்மயோகி (1951) படத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்தார். ராம்நாத்தின் தாய் உள்ளம் (1952), விடுதலை (1954), சுகம் எங்கே (1954) போன்ற படங்களிலும் பணியாற்றினார். மட்டுமல்லாது எல்.வி.பிரசாத், ஏ.எஸ்.ஏ.சுவாமி, சுந்தர் ராவ் நட்கர்னி, டி.ஆர்.சுந்தரம் ஆகிய மேதமை வாய்ந்த இயக்குநர்களுடனும் சேர்ந்தியங்கினார்.

ஏ.எஸ்.ஏ.சுவாமி இயக்கிய சுதர்சன் (1951), நீதிபதி (1955), கற்புக்கரசி (1957), தங்கப்பதுமை (1959) படங்களிலும், சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கிய அழகி (1953), மாகாதேவி (1957) படங்களிலும் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய வளையாபதி (1952), அலிபாபாவும் 40 திருடர்களும் (1956), பாசவலை (1956) படங்களிலும் முக்கியப் பங்காற்றினார், இந்திய சினிமாவையே உருவாக்கியவர்களில் ஒருவரான மாமேதை எல்.வி.பிரசாத்துடன் சேர்ந்தியங்கி அவர் தயாரித்து இயக்கிய ராணி (1952), மனோகரா (1954), மங்கையர் திலகம் (1955), பாக்கியவதி (1957) போன்ற படங்களிலும் பணியாற்றினார் சேதுமாதவன். இவ்வரிசையிலுள்ள பல படங்களில் அவர் இணை இயக்குநர். ஆனால் தனித்து ஓர் இயக்குநராக அறிமுகமாகும் வாய்ப்பினை தமிழ் சினிமா அவருக்கு வழங்கவில்லை. சிங்கள மொழியில்தான் தனது முதல் படத்தை அவர் இயக்க நேர்ந்தது. 1960இல் வீரவிஜய எனும் படம்.

மலையாளத்தில் தனது முதல் படமான ’ஞான சுந்தரி’யை 1961இல் இயக்கினார். ஆனால் அது 1948இல் வெளியான ’ஞான சௌந்தரி’ எனும் தமிழ் படத்தின் மறு ஆக்கம். இரண்டாவது மலையாளப் படமான ’கண்ணும் கரளும்’ (1962) வழியாக குழந்தை நடிகர் கமல்ஹாசனை மலையாளத்திற்கு அறிமுகம் செய்தார். அப்போது களத்தூர் கண்ணம்மாவில் மட்டுமே நடித்திருந்த கமலுக்கும் அது இரண்டாவது படம். பின்னர் 1974இல் கன்யாகுமாரி மலையாளப்படம் வழியாக கமல் ஹாசனை முதன்முதலில் கதாநாயகனாக நடிக்க வைத்தவரும் சேதுமாதவன் தான்.

மலையாளத்தில் ஓர் உச்ச நட்சத்திர இயக்குநராக மாறி அறுபதுக்கும் மேலான படங்களை இயக்கினார். மலையாளப் படங்களுக்கே உரித்தானது என்று பிற்பாடு கொண்டாடப்பட்ட யதார்த்தத் தன்மையையும் இலக்கியச் சார்பையும் உருவாக்கி வளர்த்தவர்களில் முதன்மையானவர் சேதுமாதவன். மணவாட்டி (1964), ஓடயில் நிந்நு (1965), யக்ஷி (1968), கடல்பாலம் (1969), அடிமகள் (1969), வாழ்வே மாயம் (1970), அர நாழிக நேரம் (1970), ஒரு பெண்ணிண்டெ கத (1971), கரகாணாக்கடல் (1971), இங்குலாப் சிந்தாபாத் (1971), அனுபவங்ஙள் பாளிச்சகள் (1971), புனர்ஜென்மம் (1972), அச்சனும் பாப்பயும் (1972), பணிதீராத்த வீடு (1973), சட்டக்காரி(1974), ஓப்போள் (1980) போன்ற அவரது படங்கள் மலையாளத்தின் எக்காலத்திற்குமுரிய திரைப் படங்கள்.

பத்து தேசிய விருதுகள் அடக்கம் எண்ணற்ற விருதுகளைப் பெற்ற கே.எஸ்.சேதுமாதவன்தான் சிறந்த இந்தியத் திரைப்படத்திற்கான ஜனாதிபதியின் சுவர்ண கமலம் விருதினை முதன்முதலில் தமிழுக்கு வாங்கித் தந்தவர். 1991இல் அவர் இயக்கிய மறுபக்கம் படம் வழியாக. ஆனால் இந்த வரலாற்றுச் சாதனை போதிய அளவில் கண்டுகொள்ளப்படவில்லை. அவரது ஒரேயொரு தெலுங்குத் திரைப்படமான ஸ்த்ரீ (1991) பல விருதுகளை வென்ற படம். கன்னடத்திலும் மானினி (1971) எனும் படத்தை எடுத்தார். பெரும் வணிக வெற்றிபெற்ற ஜூலி போன்ற சில படங்களை இந்தியிலும் இயக்கினார்.

கே.எஸ்.சேதுமாதவனின் பங்களிப்பினைப் பெருமளவில் குறிப்பிடாமல் தமிழ், மலையாள சினிமாவின் வரலாற்றைப் பதிவு செய்யவே முடியாது. என்போன்ற எண்ணற்றோருக்கு என்றென்றும் உள்தூண்டுதலாக விளங்கும் ஒப்பிலாக் கலைஞனுக்கு எனது வந்தனங்கள்.