ஒரு பழைய கலாச்சாரத்தின் வடிவங்கள் இறந்தழிந்து கொண்டிருக்கும் போது பாதுகாப்பின்மை குறித்த பயமற்றவர்களால் புதிய கலாச்சாரமானது கட்டமைக்கப்படுகிறது

-ருடால்ப் பஹ்ரோ

‘கவிதை உணர்ச்சிகளை மொழிவது. வார்த்தைகளைக் கையாள்பவன் கவிஞன் . அவனது மனோநிலையும் பார்வையும் கவிதையின் வழியே வெளிப்படுகின்றன. நிகழ்ந்த அனுபவம் முற்றுப் பெற்று விடுவதற்கு மாறாக கவிதையில் உறைநிலையை அடைந்துவிடுகிறது.அதனை வாசிக்கிறவனின் புரிதலின் உள்ளே மீள் அனுபவமாக நிகழ்கிறது.

கவிதை என்பது இடையறாத நடனம். இந்த வாழ்வில் கண்டுபிடிப்பதற்கும் எதிர்வினையாற்றுவதற்கும் ஏதாவது இருக்கிறதா என்பதுதான் கேள்வி. நான் வாழ்க்கையை அதன் ஒவ்வொரு கணத்திலும் மறு கண்டுபிடிப்பு செய்கிறேன்.வாழ்க்கையை நான் இடையறாத கண்டுபிடிப்புகள் நிகழும் அற்புதத் தருணமாகக் காண்கிறேன்.இந்த வாழ்வின் சிடுக்குகளும் பதற்றங்களும் எழுதித் தீர முடியாதவை.காண்பதற்கும் சொல்வதற்கும் எனக்கு ஏராளமாக இருக்கின்றன.மொழி புழங்கப் புழங்கத்தான் பிரகாசமடையும் குறைவாக எழுதினால் செறிவாக இருக்கும் என்பதும் நிறைய எழுதினால் நீர்த்துப் போகும் என்பதும் வெறும் இலக்கிய மூட நம்பிக்கை.உங்களால் எவ்வளவு தூரம் நடக்கமுடியும் என்பதுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.’

இந்து தமிழ் திசைக்கு மனுஷ்யபுத்திரன் 25.12.2016 அன்று அளித்த பேட்டியிலிருந்து…

கவிஞன் சொல்ல வேண்டியவனாக மாறும் போது கவிதை பிறக்கிறது. கவிஞனின் குரல் புகாரளிப்பதில்லை. தீர்ப்பும் சொல்வதில்லை. இந்த இரண்டும் கலையின் வேலைகள் அல்ல.எப்போதும் கவிஞன் தன் ஆன்மாவிலிருந்து சாட்சியம் அளிக்கிறான்.புகாரைத் தன் அலகுகளால் தீர்க்கமாய்ப் பற்றிக் கொள்ளும் பறவையாகவே கவிதை தீர்ப்பை உள்ளடக்கிய பெருவெளியில் பயணிக்கிறது. இது தான் கவிதையின் வல்லமை. கவிஞன் சாகசம் எதையும் நிகழ்த்துவதில்லை. எந்தச் சாகசமும் விடாமல் திரும்பத் திரும்பப் பயிற்சி செய்வதன் மூலமாக சாத்தியமாவது.

மாறாக கவிதை ஒரு முறை மட்டுமே நிகழும் அற்புதமாகிறது.கவிஞன் தன்னையே நம்பாமல் அதிசயித்தவண்ணம் தன் கவிதையிலிருந்து உதிர்ந்து போகும் அற்புதவாதி.அவ்வளவே.

கவிதை ஏன் தூர இருளில் பிறரறியாமல் சிலர் நிகழ்த்திப் பார்க்கும் முணுமுணுத்தலைப் போன்றே தோற்றமளிக்கிறது..? கவிதை வெகு சிலரின் ரகசியக் குற்றம் அல்ல. அது பெருவாரியானவர்களுக்காகச் சிலர் நிகழ்த்திப் பார்க்கும் கயிறேற்றம். ஆனால் மனித ஊடாட்டம் கவிதையைச் சற்றே உயர்த்தி வைப்பதன் மூலமாக அறியாத தெய்வம் மீதான பரிவற்ற பயத்தை எப்போதும் பராமரிப்பதாகிறது. நிசத்தில் இது தேவையற்றது மட்டுமன்றிக் கவிதைக்கும் சமூகத்திற்கும் இடையே ஒரு திரையாகத் தொடங்கி மாபெரும் தடையாக வளர்ந்தோங்கி விடுவது தவிர்க்கப்பட வேண்டியது. கவிதைமீதான ரசனை மூடிய ரகசியமாகத் தொடர்வது தேவையற்றது. அதன் திறந்த தன்மை கவிதைமீதான மாபெரும் அனுபவத்தைத் தொடர்ந்து சாத்தியம் செய்துவிடும்.

கவிதையை மொழியின்மீதான பொறுப்பேற்றல் என்றால் தகும். மொழியும் காலமும் வினையாற்றுவதற்கான உப பொருளாகவே மானுடவாழ்வு இருக்கிறது. மனிதன் சிந்தனா சக்தியின் விளைவாகத்தான் எல்லாவற்றையும் நிகழ்த்துவதாகக் கருதுகிறான். அது அவனளவில் சரி என்றாலும் மொழியும் காலமும் மானுட அனுபவத்தின் வாயிலாகச் சிதைவதன் படர்க்கை அனுபவமே மானுடப் பங்களிப்பாகிறது.இந்த இரட்டைத் தன்மை கவிதைமீதான மனிதப் பிடிவாதங்களை பற்றுதல்களை உருவாக்கித் தருகிறது. கவிஞன் உண்மையில் அடுத்தடுத்த கவிதைகளினூடாகத் தீர்ந்து போவதை நம்ப விரும்புவதில்லை. இங்கே தீராதது என எதுவுமே இல்லை. அனுபவம் ஞானமாகி அடுத்தடுத்த கலயங்களை நோக்கிப் பாய்ந்து செல்லத்தக்க நதி என்றபோதும் எல்லா நதியும் நிரந்தரிப்பதில்லை. சூன்யமென்பது எதுவுமற்றது மாத்திரமல்ல. எல்லாவற்றின் பின்னதான சூன்யம் கருத்தில் கொள்ளத்தக்கது. கவிஞன் தன்னைப் பெருமனிதனாகக் கற்பனை செய்து கொள்வது வாழ்க்கை அவன் முன் வைத்திருக்கும் பொய்வசதிகளில் ஒன்று.விடுதி அறையில் குளியல் இலவசம் என்கிறாற் போன்ற பம்மாத்து வேலை அது.மெய்ப்பாடு எதுவெனில் எல்லாம் உதிர்ந்தழிவது போலத்தான் கவிதையும் உதிர்வதற்கும் அழிவதற்குமானது.

மொழியின் வரலாற்றில் மற்ற எந்த வாழ்வனுபவத்தை விட வேறெந்தக் கலையை விட கவிதையின் உயிர்த்திருத்தல் நெடியதாக வாய்க்கிறது. கவிதையின் அளவு தன்மை போன்ற புறக் காரணிகளைத் தாண்டி அதன் மீதான கூட்டப் பரிவு மற்றும் கவிதையை எப்படியாவது வழிபடவும் தப்புவிக்கவும் விரும்புகிற எத்தனம் ஆகியவற்றின் விளைதலாகத் தான் அது சாத்தியமாகிறது. இந்த உலகில் மீட்டெடுக்கப்படாத இன்னும் ஒருமுறை கூட மறுமுறை வாசிக்கப்படாத கல்வெட்டுக்களின் எண்ணிக்கை எத்தனை மடங்கு அதிகம் என்பதும் நாம் கடந்து வந்தவற்றில் கைக்கொண்டு வாசித்து மறு நிர்மாணம் செய்திருக்கக் கூடிய கல்வெட்டுக்கள் எத்தனை சொற்பம் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது.இதே போன்றே கவிதை என்றில்லை. எஞ்சுவதும் காலம் கடப்பதும் எந்தக் கலைவடிவத்துக்கும் மாபெரிய கடினங்களே.

அட்ரெய்ன் செஸில் ரிச் 16.05.1929—27.03.2012 அமெரிக்காவின் அறியப்பட்ட கவிதாயினி, ஆசிரியை மற்றும் விமர்சகர், பெண்ணியவாதி ஆவார். இவரது கவிதைகள் உறுதியான தனித்த மொழியும் லேசான பகடியும் நேரடியான தாக்கமும் கொண்டவை. தொன்மங்களிலிருந்து விவரித்து எழுதப்பட்ட அட்ரெய்ன் ரிச்சின் பல கவிதைகள் தொடர் உரையாடல்களை நிகழ்த்திவருபவை. அட்ரெய்ன் ரிச் ஒரு பொது மொழியின் கனவு, சிதைவுக்குள் மூழ்குதல், குருதி ரொட்டி மற்றும் கவிதை, உனது பூர்வீகம் உனது வாழ்க்கை உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியராவார். அட்ரெய்ன் ரிச்சின் கவிதாமொழி வாசிப்பவனை மிக லேசாக அயர்த்தித் தருவதை வழக்கமாகக் கொண்டது.அறிந்த அனுபவங்களின் புதிரேதுமற்ற மீவருகைகளினூடான மென் சலனங்கள் அட்ரெய்ன் ரிச்சின் கவிதைகள்.

இறுதிக் கருத்துகள்

அது அவ்வளவு எளியதல்ல, அதிக நேரமெடுக்காது
சொற்பமான நேரத்தையே எடுக்கும் அது உங்கள் சிந்தனை மொத்தத்தையும் பற்றும்
உங்கள் நெஞ்சத்தை முழுவதுமாகப் பற்றி மொத்த சுவாசத்தையும் கொள்ளும்.
ஷணப் பொழுதிலான அது அவ்வளவு எளியதல்ல.
உங்கள் விலா வழியாகத் தீண்டும், உங்கள் இதயத்தை மொத்தமாகப் பற்றும்
அதிக நேரமெடுக்காது உங்கள் சிந்தை மொத்தத்தையும் ஆக்ரமிக்கும்
ஒரு நகரம் ஆக்ரமிக்கப்படுவதைப் போலவே ஒரு படுக்கை ஆக்ரமிக்கப்படுவதைப் போலவே
உங்கள் மாம்சத்தைப் பீடிக்கும் அது அவ்வளவு எளியதல்ல
உங்களைத் தாக்குப்பிடிக்க முடியாத எங்களை நோக்கி வருகிறீர்கள்.
உங்களைத் தாக்குப்பிடிக்க விரும்பாத எங்களை நோக்கி வருகிறீர்கள்
ஒருபோதும் திட்டமிடாத இடங்களுக்கு எங்களில் சிலரைக் கொண்டு செல்கிறீர்கள்
எங்கள் வாழ்வுகளின் சிறுதுண்டங்களோடு வெகுதொலைவு செல்கிறீர்கள்
ஷணப் பொழுதிலான அது உங்கள் சுவாச மொத்தத்தையும் பற்றிக்கொள்ளும்
அவ்வளவு எளிமையானதல்ல அது, உங்கள் விருப்பமாகவே மாறும்.

பொது நம்பகத்தின் படி கவிதை எப்போதும் திறந்த தன்மையைக் கொண்டிருப்பது கவிதையை மலினப்படுத்தும். மாற்றாக கவிதையின் மூடிய பூடகத் தன்மையே அதன் முழு முதற்தகுதி என்பது காலம் காலமாக மாற்றியளிக்கப்பட்டுவருகிறது. இதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்பதே மெய் கவிதை திறந்ததோ அல்லது பூடகமாய்க் குவிந்ததோ அதனை வாசிக்கையில் ஏற்படுத்தி விடுகிற அனுபவத்தின் வாயிலாகவே அது கொள்ளவும் தள்ளவும் படுமென்பதே நியதி.அறிந்த சொற்களின் கொத்தெனவே லேசாய்க் கடக்க எத்தனிப்பவர்களுக்கு அட்ரெய்ன் ரிச்சின் மேற்காணும் இறுதிக் கருத்துகள் கவிதை எளியதென்றே தோன்றும். உள்ளே ஆர்ந்தால் புரிபடும் மொழியின் விபரீத வசீகரம்.

முன் தீர்மானத்தோடு காட்சி ஒன்றைக் கவிதையாக்க எத்தனிப்பது வலுவிழந்த ஒன்றெனவே எஞ்சும்… மாறாகக் கவிதையை நிகழ்த்துகிற கண்கள் வாய்க்கப் பெறுவது சிறக்கும். கவிஞன் கூட்டங்களில் கலக்காமல் தனித்துத் திரிபவன் அல்லன்.மாறாக அவனது தனிமை கூட்ட நடுவாந்திரம் எளிதில் நிகழவல்லது. இருப்பினூடாகவே தனிப்பவனே கவிஞனாகிறான்.காட்சி என்பதற்கும் தரிசனம் என்பதற்குமான வேறுபாடு கவிதையாகிறது எனக் கொள்ளலாம். கீழ்க்காணும் தேவதேவனின் கவிதை தரிசனம் என்பதை எடுத்துரைக்கும் நல்ல சான்றாகிறது.

மரத்தடியில் துயிலும் ஒருவன்
புரண்ட விலாவினில்
ஒட்டியிருக்கிற மணல்
பூமியைப் பிரிந்ததால்
தன் உக்கிரமிழந்து தவிக்கிறது
கருணை கொண்ட மரக்கிளைகள்
தனது கந்தல் நிழலின் வெயில் எரிப்பை
ஈடு செய்ய விசுறுகின்றன
வீசிய காற்று
விலாமணலை உலர்த்தி உதிர்க்கிறது
அதே வேளை
உடம்பின் இன்னொரு விலாவை அழுத்துகிறது
உயிருடன் அவனை விழுங்க இயலாத பூமி

இதில் உணர வாய்க்கும் மணலின் உக்கிரம் மரக்கிளையின் கருணை நிழலின் கந்தல் ஆகியவை ஏற்படுத்தித் தருகிற அனுபவத்தின் சட்டகங்களுக்குள் விலாமணல் உலர்ந்து உதிர்வது காட்சியாகிறது அழகு. அதே வேளையில் உடம்பின் இன்னொரு விலா எனும் சொல்லடுக்கு நமக்குள் கனமான சித்திரமொன்றை நிகழ்த்துகிறது. வாசிப்பவன் உயிருடன் விழுங்க இயலாத பூமியோடு தானுமாய்த் தனிக்கிறான். கவிதையின் விசித்திரம் அவை சொற்களை மொழியினின்றும் விலக்கி அவற்றின் அர்த்தவழமையிலிருந்து வெகுதூரம் அப்பால் கொணர்ந்து நிறுத்துவதுதான். இந்தக் கவிதை மறுபுற விலா அல்லது அடுத்த விலா அல்லது இரண்டாவது விலா என்றெல்லாம் சொல்லாமல் இன்னொரு விலா என்று சுட்டப்படுவதனுள்ளே உறையக் கூடிய மிகுதி இருள் கவித்துவமானது.பைபிளில் தொடங்கி தைல விளம்பரம் வரைக்கும் விலா என்பதை நாள்தோறும் கடந்து வருகிறோமென்றாலும் கவிதைக்குள் விலா எனும் உடல்பாகத்தின் வருகையும் தொலைதலும் உன்னதமான வேறொன்றாகிறது