2014இல் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக முன்வைத்த கோஷம் நமக்கெல்லாம் நினைவிருக்கும். ‘அச்சே தின் ஆனேவாலே ஹேன்!’ அதாவது நன்நாட்கள் வரவிருக்கின்றன. இந்த கோஷம் தேசமெங்கும் பிரபலமாகி மக்களின் கற்பனையைத் தூண்டியது. குஜராத் மாடல் என்பதே இந்தியர்களின் கனவாகியது. அகமதாபாத் பேருந்து நிலையம் பெரும் நவீன ஸ்டைலில் இருக்கும் படங்கள் பகிரப்பட்டன. அது சீன பஸ் நிலையம் என்று பின்னர் தெரிய வந்தது. இப்படி அப்படி நிறைய கதைகள் உலவினாலும் குஜராத்தில் சுபிட்சம் கொண்டு வரப்பட்டுவிட்டது என்பதில் நம்மில் நிறைய பேருக்கு சந்தேகம் வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. குஜராத்தை ஜப்பானாக ஆக்கியவர், இந்தியாவை அமெரிக்காவாக ஆக்குவார் என்று எதிர்பார்த்தோம்.

ஆறு வருடங்கள் கழிந்தன. இந்தியப் பொருளாதாரம் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. கடந்த நான்கு வருடமாகவே நிலைமை கீழே போய்க்கொண்டு இருந்தது. இதுபற்றி நானும் தொடர் கட்டுரைகளை உயிர்மையில் எழுதி வந்திருக்கிறேன். இவ்வளவு நாட்களாகத் தெரியாத விஷயம் இப்போது எப்படித் தெரிய வந்தது மற்றும் ஏன் இப்போது இந்த நிலைமையில் இருக்கிறோம்? பார்ப்போம்.

தற்போதைய நிலை

இப்பொழுது என்ன நடந்து வருகிறது. உற்பத்தி தேக்கம் நிலவுகிறது. அதாவது தொழிற்சாலைகளில் உற்பத்தி சரிவர நடைபெறவில்லை. காரணம், ஏற்கனவே உற்பத்தி ஆன பொருட்களை வாங்குதல் குறைந்திருக்கிறது. டிவிஎஸ் பைக்குகள் இருப்புக்கும் அதிகமாக விற்பனையானால் அவர்கள் அதிகமாக உற்பத்தி செய்வார்கள் அல்லவா. ஏற்கனவே உற்பத்தி ஆன பைக்குகள் கிடப்பில் இருந்தால் உற்பத்தியைக் குறைப்பார்கள். உற்பத்தி மேலும் குறைந்தால் இருக்கும் தொழிலாளர்களின் தேவை குறையும். அப்போது ஒன்று: அவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள். அல்லது வேலை நாட்களைக் குறைப்பார்கள். அதுதான் நடந்து வருகிறது. வாகனத்துறையில் மட்டும் கிட்டத்தட்ட 3.5 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள்.

வங்கிகளின் செயல்பாடுகளில் பெரும் மந்த நிலை நிலவுகிறது. வாராக்கடன்கள் குவிந்து வங்கிகள் மேல் நம்பிக்கையில்லாத நிலை இருப்பதால் அந்நிய முதலீடு வருவது குறைந்து விட்டிருக்கிறது. பங்குச்சந்தையிலும் வழக்கமாக ஈடுபடும் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்வதைக் குறைத்திருக்கிறார்கள். இவற்றால் தொழில் முதலீடுகள் குறைந்துள்ளன. சிறு குறு நிறுவனங்கள் நசிந்து கிடக்கின்றன. ஊரகப்பொருளாதாரம் சில ஆண்டுகளாகவே நசிந்து கிடக்கிறது.

வேலையின்மை பரவலாக நிலவுகிறது. அரசே வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த 45 ஆண்டுகளில் இப்படி ஒரு வேலையின்மை நிலவவில்லை. அதாவது இந்த அளவு மோசமான வேலையின்மை எழுபதுகளின் ஆரம்பத்தில்தான் இந்தியாவில் நிலவியது. அப்போது இந்தியா சோஷலிசத்தைப் பின்பற்றி வந்தது. தனியார் தொழில்கள் கிடையாது. ஐடி தொழிற்புரட்சி எல்லாம் நிகழவில்லை. அன்றைய திரைப்படங்களில் ஹீரோக்கள் சான்றிதழ் கோப்பு ஒன்றைக் கையில் பிடித்துக்கொண்டு தெருத்தெருவாக வேலை தேடி அலைவதையும், NO VACANCY போர்டுகளை பார்த்து ஏக்கத்துடன் வீடு திரும்புவதையும் பார்த்திருப்போம்.

அந்த அளவுக்கு மோசமான நிலைதான் எழுபதுகளில் இருந்தது. அதே நிலைமை இப்போது இருக்கிறது. கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவேன் என்று 2014இல் மேடைகளில் முழக்கமிட்ட பிரதமர் மோடி லட்சக்கணக்கில் கூட வேலைகளை உருவாக்குவதில் வெற்றி பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. வேலை வாய்ப்புகளைப் பற்றி கேள்வி கேட்டபோது ‘பக்கோடா போட்டு விற்கலாமே. அதுவே நல்ல சுயதொழில் வேலை வாய்ப்புதானே?’ என்று வாய்மொழி அருளினார். தொண்ணூறுகளில் மன்மோகன் சிங்கின் பொருளாதார முன்னேற்றங்களை சிலாகித்து ‘மன்மோகனாமிக்ஸ்’ என்று பெயரிட்டார்கள். இந்த வசனத்துக்குப் பின் மோடியின் பொருளாதாரத்தை ‘பக்கோடானாமிக்ஸ்’ என்று (கிண்டலாக) அழைக்கத் துவங்கி விட்டனர்.

இந்த பக்கோடானாமிக்ஸ்தான் இன்றைய நிலைக்குக் காரணம். பக்கோடானாமிக்சின் பல்வேறு வடிவங்களை இப்போது பார்ப்போம்.

பண நீக்கம்

இந்தியப் பொருளாதாரத்துக்குக் கிடைத்த முதல் சுத்தியல் அடி பணநீக்கம் என்று சொல்ல வேண்டியதில்லை. யார் ஐடியா கொடுத்தார்கள், என்ன ஆய்வுகளை நடத்தினார்கள் என்று இன்று வரை தெரியவில்லை. ஆனால் விளைவு கொடுமையாக இருந்தது. இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகளிலேயே கிட்டத்தட்ட 40 சதவிகிதம் வாணிபங்களுக்கு கரன்சிதான் உபயோகிக்கிறார்கள். இந்தியா மாதிரி ஊரகப் பொருளாதாரம் சார்ந்த தேசங்களில் இது பற்பல மடங்கு அதிகம். அதையெல்லாம் யோசிக்காமல் கொண்டு வந்ததன் விளைவு: ஊரகப் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி கண்டது. வேலை வாய்ப்புகள் பறிபோயின. நிறுவனங்கள் புதிய முதலீடுகளை நிறுத்திக்கொண்டன. கரன்சி புழக்கத்தை முழுமையாக சார்ந்திருந்த தொழில் துறைகளான கட்டுமானத்துறை போன்றவை ஆட்டம் கண்டன.

ஜி.எஸ்.டி

அடுத்த வருடமே இன்னொரு அடி காத்திருந்தது. பண நீக்கத்தில் இருந்து மீள்வதற்குள் அதிரடியாக ஜிஎஸ்டியை கொண்டு வந்தது மத்திய அரசு. பல்வேறு குளறுபடிகளுக்கிடையே கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி உருவாக்கிய குழப்பம் நிறைய சிறு குறு நிறுவனங்களை சிக்கலில் தள்ளியது. இந்தியா முழுக்க வேலைக்கு ஆள் எடுப்பதை சிறு தொழிலகங்கள் குறைத்துக்கொண்டன என்று ஃபிரண்ட்லைன் இதழ் குறிப்பிடுகிறது. ஜிஎஸ்டி மட்டுமின்றி, வருமான வரி வசூலில் கடுமை காட்டி பல்வேறு விதிமுறைகளை கொண்டு வந்ததும் வரிதாக்கல் செய்யாததற்கு கடும் அபராதங்களை வைத்ததும் நிறைய சிறு குறு தொழில்களை பாதித்தது. பொதுவாகவே மோடி அரசு MSME (Micro Small Medium Enterprises) எனப்படும் சிறு குறு தொழில்களுக்கு வில்லனாகவே இருந்திருக்கிறது.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு என்பது பொருளாதாரத்தை முடுக்கி விடுவதற்கு இருக்கும் முக்கிய விசை. தொண்ணூறுகளில் மற்றும் இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் மன்மோகன் வேலை வாய்ப்புகளைப் பெருக்கும் முயற்சிகளில் இறங்கியதன் பலன்தான் இந்தியப்பொருளாதாரம் வளர்ந்ததற்கு காரணம். வேலைவாய்ப்பு பெருகுவதற்கு தொழில்கள் பெருக வேண்டும். தொழில் பெருக தொழில் முனைவர்கள் அதிகரிக்க வேண்டும். இந்த தொழில் முனைவை ஊக்குவிக்க முத்ரா என்ற பெயரில் கீழ் சிறு குறு தொழில்களுக்கு கடன்கள் கொடுக்கும் திட்டத்தை மோடி கொண்டு வந்தார். ஆனால் இது பெரிய முன்னேற்றம் காணவில்லை. ஏற்கனவே வாராக்கடன்களின் சுமையில் மூழ்கி இருந்த வங்கிகள் முத்ராவை முன்னேற்ற எந்த ஆர்வமும் காட்டவில்லை. அரசின் அழுத்தத்தை சமாளிக்க சாதா கடன்களை எல்லாம் முத்ரா கடன்களின் கீழ் காட்டி இருந்தனர் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இன்றைய நிலவரத்தின்படி மாதம் சுமார் 13 லட்சம் புதிய இளைஞர்கள் வேலை தேட ஆரம்பிக்கிறார்கள். அத்தனை பேரும் பக்கோடா கடை வைக்க முடியாது என்பது பிரதமருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊரக வேலை வாய்ப்பு (MINREGA)

சென்ற காங்கிரஸ் ஆட்சியில் ஊரகப் பொருளாதாரத்தை முன்னேற்ற மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் விருப்பம் உள்ளவர்கள் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறலாம். இதன் மூலம் கோடிக்கணக்கானோர் வேலை பெற்று ஊதியம் பெற்றனர். இதன் மூலம் கிராமப்புறங்களில் பணப்புழக்கம் அதிகரித்தது. ஊரகப்பொருளாதாரம் உயர்ந்தது. MINREGA மட்டுமே ஊரகப்பகுதிகளில் ஒரு பொருளாதாரப் புரட்சி நடத்தியது என்று பொருளாதார அறிஞர் ழான் த்ரே குறிப்பிடுகிறார்.

அப்படிப்பட்ட விழிஸிணிநிகி திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடனே மோடி கிண்டலடித்து இழிவாகப் பேசினார். எதிர்பார்த்தது போலவே அந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. அதுவரை செய்த வேலைகளுக்கும் ஊதியம் வழங்கப்படுவதில் பெரும் தாமதங்கள் நிகழ்ந்தன. அந்த திட்டத்தில் ஆர்வம் காட்டுவது குறைந்தது. விளைவு: ஊரகப்பகுதிகளில் பணப்புழக்கம் குறைந்தது. இருந்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் பணநீக்கம் வந்து கொண்டு போனது.

ஊரக நசிவு

பணநீக்கம் வந்த காலத்தில் இருந்தே ஊரகப்பொருளாதாரம் நலிவடைவது பற்றி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே வந்தனர். அதற்கு ஊரக நசிவு (Rural Distress) என்றே பெயரிட்டு அதனை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டி அரசைக் கேட்டுக்கொண்டு இருந்தனர். ஆனால் அரசுத்தரப்பில் எந்த முக்கிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

வீடு விற்பனை

லையசெஸ் ஃபோரெஸ் எனும் கட்டுமான நிறுவனத்தின் கணக்கின்படி இந்தியாவின் நகரங்களில் கிட்டத்தட்ட 12 லட்சம் வீடுகள் விற்பனையாகாமல் இருக்கின்றன. இது சென்ற ஆண்டை விட 7 சதவிகிதம் அதிகம். இருக்கும் வீடுகள் விற்காவிடில் புதிய வீடுகள் கட்டப்பட மாட்டாது என்பதை சொல்ல வேண்டியதில்லை. கிட்டத்தட்ட 250 துறைகள் கட்டுமானதொழிலை நம்பி இருக்கின்றன. இங்கே தேக்கம் வந்தால் 250 இடங்களில் தேக்கங்கள் நிகழும். அதுதான் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

வாங்கும் சக்தி

மக்களின் பொதுவான வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. இது மளிகை வாங்குவதில் இருந்து பைக் கார் வீடு வரை பிரதிபலிக்கும். நுகர்வோர் பொருட்களை விற்கும் யூனிலீவர், பார்லே, பிரிட்டானியா என்று நிறுவனங்களின் வருவாயில் பாதிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. இதன் மூலம் உற்பத்தி குறைவு, வேலையிழப்பு போன்றவை விளைவுகளாக ஆகி இருக்கின்றன.

முதலீட்டு குறைவு

இந்தியாவின் வருமான வரிச்சட்டம் பழையதாகி விட்டதால் அதனைப் புதுப்பிக்க வேண்டும் என்று பிரதமர் விரும்பினார். அதற்காக 2017இல் ஒரு நிபுணர் பணிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்தக்குழு இரண்டு அறிக்கைகளை சமர்ப்பித்தது, வரைவு அறிக்கை போன வருடமும், திருத்திய முழு வடிவம் இந்த மாதமும் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கைகளில் இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் இதர கம்பெனிகள் செய்த முதலீட்டைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் இந்தியா முழுவதும் நிறுவனங்கள் செய்த முதலீடு விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது:

(ரூபாய் லட்சம் கோடிகளில்)

* 2010—11 – 11.72

* 2011—12 – 9.25

* 2012—-13 – 10.22

* 2013—-14 – 11.03

* 2014—-15 – 9.98

* 2015—-16 – 10.33

* 2016—-17 – 4.25

இதன்படி பணநீக்கம் நடந்த ஆண்டு தனியார் முதலீடுகள் பெருமளவு குறைந்திருக்கின்றன என்பது தெரிய வந்திருக்கிறது. நிற்க, இந்தத் தரவுகள் எதுவும் 100-150 பேரிடம் சர்வே நடத்தி எடுத்த எண்கள் அல்ல. இந்தியாவில் பதிவு செய்திருக்கும் அனைத்து நிறுவனங்களும் சமர்ப்பித்த வருடாந்திர வருமான வரி தாக்கல் படிவங்களில் இருந்து எடுத்த உண்மையான எண்ணிக்கை. (நிறுவனங்கள் தாங்கள் செய்யும் முதலீடுகளை வருமானவரித் தாக்கலில் தெரிவிக்க வேண்டும்.

இதே அறிக்கையில் வேறு பல கவலையான விஷயங்களும் தெரிய வருகின்றன. அந்த ஆண்டில் பாதி நிறுவனங்கள் வருமான வரித்தாக்கல் செய்யவே இல்லை. செய்தவற்றில் பாதி நஷ்டம் காட்டி இருந்தன, இத்யாதி.

பணநீக்கம் நிகழ்ந்த ஆண்டில் முதன் முதலில் நிறுவனங்களின் முதலீடு குறைந்தது. முதல் தொடர்ந்து குறைந்து வந்து இப்போது 2004 நிலைமைக்கு போயிருக்கிறது.

Make In India

ஆட்சிக்கு வந்த புதிதில் இந்தியாவிலேயே பொருட்களை உற்பத்தி செய்வதற்காக பிரதமர் மோடி Make In India என்ற திட்டத்தை அறிவித்தார். சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவும் உற்பத்தியில் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்கள் இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கின்றன.Make In India வெறும் கோஷத்திலேயே நின்று போயிருக்கிறது.

ஏற்றுமதி தேக்கம்

இந்தியாவின் ஏற்றுமதி 2011 அளவிலேயே நின்று போய் அதில் இருந்து உயராமல் இருக்கிறது. இதுவும் பிரச்சினையில் இருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இறக்குமதி / ஏற்றுமதி வாய்க்கால் தகராறு இந்தியாவுக்கு உதவும் என்று நிறைய நிபுணர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை.

தரவுகள், தரவுகள்

இது எல்லாவற்றையும் விட முக்கிய பிரச்சினையாக நான் கருதுவது தரவுகளின் மேல் இந்த அரசுக்கு இருக்கும் அலட்சியம். பணநீக்கம் கொண்டு வர யோசித்த போதே அது பற்றிய பரிசீலனையை அறிவியல் பூர்வமாக மேற்கொண்டிருக்க வேண்டும். சரி, கொண்டு வந்து தொலைத்தாகி விட்டது. அதற்குப்பிறகும் அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து சமூகத்தில் அது எப்படிப்பட்ட பாதிப்புகளை நிகழ்த்தி இருக்கிறது என்று கண்டறிய ஒரு குழுவை நியமித்து அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து இருந்திருக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடித்து அதன் பாதிப்பை அரசுக்கு சொல்லி இருந்திருப்பார்கள். உடனடியாக பாதிப்புகளை களையும் நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. பழைய படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் பலமுறை அடி வாங்கியும் ‘ஒங்கொப்பன் மவனே சிங்கம்டா!’ என்று வீராவேசமாக ஒரு பாத்திரம் பேசிக்கொண்டே இருக்கும். அந்த மாதிரி பணநீக்கம் பெரும் முன்னேற்றத்தைக் கொண்டு வந்து விட்டது என்று மெயின்டைன் பண்ணிக்கொண்டே இருந்தார்கள்.

அதே போல அரசு வருடம்தோறும் பதிப்பிக்கும் விவசாயி தற்கொலை அறிக்கையையும் 2016இல் இருந்து நிறுத்தி விட்டார்கள். அதன் விளைவு ஊரக நசிவு பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் போய் விட்டது. வேலையின்மை அறிக்கை ஆண்டுதோறும் வந்து கொண்டிருந்தது, அதுவும் நின்று விட்டது. அதிரடியாக கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டியின் தாக்கங்கள் பற்றியும் எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு வெள்ளை அறிக்கை கூட அரசுத்தரப்பில் வெளியிடப்படவில்லை. ஏப்ரல் மாதம் ‘இந்தியப்பொருளாதாரம் பெரும் வேகத்தில் முன்னேறிக்கொண்டு இருக்கிறது,’ என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்ததாஸ் பேட்டி கொடுத்தார். ஆகஸ்ட் மாதம் ‘ஒரு பெரும் பொருளாதார தேக்கம் வந்திருக்கிறது,’ என்று ஒப்புக்கொண்டு இருக்கிறார். நடுவில் தேர்தல் வந்தது என்பது தவிர நான்கே மாதங்களில் என்ன ஞானம் பிறந்தது என்பது தெரியவில்லை.

போலவே தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு 108 பொருளாதார அறிஞர்கள் கொண்ட குழு ஒன்று அரசின் பொருளாதாரக்கொள்கைகளை விமர்சித்து பிரதமருக்கு ஒரு திறந்த கடிதம் எழுதி இருந்தது. அதனையாவது அரசு சீரியசாக எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்தது? அதனை மோடி மீதான விமர்சனமாக பாஜக எடுத்துக்கொண்டு விட்டது. அந்தக் கடிதத்துக்கு பதிலடியாக பாஜகவுக்கு ஆதரவான 130 பொருளாதார அறிஞர்களைக் கொண்ட இன்னொரு குழுவை விட்டு இன்னொரு கடிதம் எழுத வைத்து விட்டார்கள். எல்லாம் சுபிட்சமாக இருக்கிறது என்று அவர்கள் ஒரு கடிதம் எழுதி விட்டனர். முடிந்தது விஷயம். அரசு மாதா மாதம் பன்னாட்டு நிதி நிறுவனத்துக்கு சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கைகளையும் சரிவர சமர்ப்பிக்கவில்லை என்று இப்போது தெரிய வந்திருக்கிறது.

இப்படி ஏறக்குறைய ‘ஆங்கிலத்தில் எனக்குப் பிடிக்காத வார்த்தை Data’ என்ற லெவலுக்கு பிரதமர் நடந்து கொண்டிருக்கிறார். விளைவு, இன்று எல்லாம் நாசமாய்ப்போன பிறகு தெரிய வந்திருக்கிறது. தற்போது பொருளாதாரத்துக்கு ஊக்கம் கொடுப்பதற்கு என்று 70,000 கோடியை அரசு அறிவித்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் கணக்கில் இருந்து 1.76 கோடியை வேறு வாங்கி இருக்கிறது. இந்தப்பணம் தேசம் பெரும் பொருளாதார சிக்கல்களில் இருக்கும் போது பயன்படுத்துவதற்கென்று ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் நிதி. இதில் கைவைத்ததில் இருந்தே தேசம் பெரும் பொருளாதார சிக்கலில் இருக்கிறது என்று அரசே ஏறக்குறைய ஒப்புக்கொண்டது மாதிரி ஆகி விட்டது. இனிமேல் அவர்கள் ஒப்புக்கொண்டு என்ன ஆகப்போகிறது என்று கேட்கலாம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் மாதிரி இந்த ஊக்க நிதிகள் பெரிய அளவுக்கு உதவுமா என்பது கேள்விக்குறி.

நன்நாட்களை நோக்கி

பிரச்சினை தீர வேண்டுமெனில் முதன் முதலில் பிரச்சினை என்று ஒன்று இருக்கிறது என்று நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். Problem recognised is half solved என்று சொல்வார்கள். அதில்தான் நம் பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் சிக்கல். இன்றளவும் கூட அவர் தெளிவாக இதனை வைத்து ஒரு இடத்தில் கூடப் பேசவில்லை. காஷ்மீரில் சினிமா ஷூட்டிங் நடத்துவதில் அவருக்கு இருக்கும் அக்கறை இந்தியாவில் பொருளாதார தேக்கத்தைப் புரிந்து கொள்வதில் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் சொன்ன நன்நாட்கள் நமக்கு வர வேண்டாம். ஆனால் தயவுசெய்து 2014க்கு முன்பு இருந்த நாட்களுக்குக் கொண்டு போய் விட்டு விடுங்கள். அங்கிருந்து நாங்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்கிறோம் என்று கேட்கத்தோன்றுகிறது.