அது ஒரு பகல் நேரம். அந்த மேம்பாலத்தில் ஹெல்மெட் போட்ட தலை ஒன்று நகர்ந்துகொண்டிருந்தது. மித வேகத்தில் கீழிறங்கி சிக்னலில் நின்றது. சிக்னலில் நின்றவுடன்தான் தெரிந்தது, அட்டகாச தேவதை ஒன்று ஸ்கூட்டியை இயக்கியதென்று. அந்த ஸ்கூட்டியை நான் பின்தொடர வேண்டுமென மனம் உந்தியது. அவளது லெங்கின்ஸ், தொடையாக காட்சியளித்தது. துப்பட்டா, முதுகிற்கு மாலையாக அணிவிக்கப்பட்டிருந்து. கேசங்கள் முகத்தை மறைத்திருந்தது மொத்தத்தையும்தான். ஸ்கூட்டி இருக்கையில் ஒட்டப்பட்டிருந்த உடல் கொஞ்சம் பெருத்துக் காணப்பட்டது. பெருத்த உடலின்மீது எப்போதும் தனிகவனம் சென்றதில்லை. ஆனால் இது ஏதோ புது ஆரம்பமாக இருக்கிறது. நான் நின்றிருந்த டீக்கடையில் மயில் இறகால் சாம்ப்ராணி வாசத்தை தூவிச் சென்றார் ஒருவர், வாசம் ஒவ்வொரு கடையிலும் கமழ்ந்து சென்றது. என் தட்டில் இருந்த போண்டா கொஞ்சம் சூடாக இருந்தது. ஒரு போண்டாவை நடுவாக்கில் புட்டுவிட்டு மறுபோண்டாவை சட்னியில் ஊறவைத்தேன். கொஞ்சம் சூடாறியவுடன் எடுத்து சாப்பிட்டேன். என்னுடைய காலை உணவு முடிந்தது.

அப்படிதான் அன்றும் அவளைச் சந்திக்க நேர்ந்தது. பின்தொடர சகல வசதிகள் இருந்தும் மனம் என்னவோ கிச்சிக்கிச்சி மூட்டியது. அவளது விலா எலும்புகள் புட்டத்தை நெருங்கும் பகுதியில் கிட்டத்தட்ட லெங்கின்ஸுக்கும் அவளது இடுப்பிற்குமிடையே ஒரு சிறு குழி காணப்பட்டது. அந்தக் குழியில் ஒரு கூழாங்கல் உள்ளே செல்ல வாய்ப்பிருந்தது. வாய்ப்பு கிடைத்தால் அந்த இடத்தில் தலைவைத்து தூங்க வேண்டும். கொஞ்ச நாட்களாக நான் அவளைக் கவனிப்பதை அவள் கவனிப்பது தெரிந்தது. அவள் பார்வை என்னை மேலும் முறுக்கேற்றியது. மணிமணியாக அவள் கண்களின் வழி எனக்காக அவள் இதயத்தில் ஒரு இடம் ஒதுக்கியுள்ளதைக் கண்டுபிடித்துவிட்டேன். நாளொன்றுக்கு இரண்டுமுறை வருவதும் போவதுமாகப் பார்வைகளைப் பரிமாறிக்கொள்வது வழக்கமானது.

எதேச்சையாக நடந்த சந்திப்பொன்றில் நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை அல்லது அவளது கண்கள் என்னைப் பேச சொல்லி அனுமதிக்கவில்லை. முகப்புத்தகத்தில் என் தோழியின் மீச்சுவல் ப்ரெண்ட் லிஸ்ட்டில் அவள் தென்பட்டாள், பிறகு நடக்க வேண்டியன தகவல் பரிமாற்றங்கள் எல்லாம் சரியாகவே நடந்தது. நான் என்னுடைய முன் அனுபவங்களையும் அவள், அவளின் முன் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டோம். எனக்கு என்ன தேவை என்பதை பேச்சினூடாக அவள் கவனித்துக்கொண்டே வந்தாள். இருந்தும் அவளிடமிருந்து எந்தவிதமான சமிக்ஞைகளும் நான் உணரவில்லை. ஒருநாள் என் ஏக்கங்களையும் ஆசைகளையும் வெளிப்படையாகக் கூறினேன். மறுப்பேதுமில்லை, ஆனால் அதிக காலம் கடந்துதான் அது நடந்தது. தோராயமாக இருபது நாட்கள். பிறகு மாதம் ஒருமுறை அவளது இல்லத்தில் எனக்கு விருந்துவைத்தாள். பிறகு நாற்பது நாட்களுக்கு ஒருமுறை ஆனது. என்னுடைய கடந்த காலத்தை என் சுயநினைவிற்கு அப்பால் கொண்டுசெல்வதில் அவள் மிக கவனமாகவே இருந்தாள். மாதங்கள் வருடங்களாக உருப்பெற்றுக்கொண்டிருந்தது. அந்தக் கார்காலத்தில் எங்களை நாங்கள் மிக நெருக்கமாக உணர்ந்தோம். ஒருகணம்கூட பிரிய எண்ணாத சிந்தனைகளால் மூழ்கிக்கிடந்தோம். பிறகு அவ்வருட இறுதியில் திருமணம் செய்துகொண்டோம். அவள் என் மனைவி ஆனாள். நான் அவள் கணவனானேன்.

இப்போதெல்லாம் அவள் என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. தேவையில்லாமல் என்னுடைய பழைய நினைவுகளைக் கிளற ஆரம்பித்தாள். வேண்டுமென்றே எனக்குப் பிடிக்காத விஷயங்களை செய்ய ஆரம்பித்தாள். இத்தனை நாட்களாக ஒன்றாக இருந்ததை நினைத்து நினைத்து அழ ஆரம்பித்தாள், அவளுக்கு என்ன இப்போதெல்லாம் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்று என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. மிகுந்த சிரத்தைக் கொண்டு அவளை மகிழ்ச்சியடையச் செய்வதில் நான் சற்று தொய்வுற்றிருந்தேன். பல இரவுகள் மெத்தை இடைவெளிகளுடன் மிக நீண்ட சூர்ய கதிர்களாக மாறிக்கொண்டிருந்தது. அவள் நன்றாக வெளிக்காட்டிக்கொண்டாள், ‘என்னால் இனிமேல் உன்னுடன் வாழ முடியாது’ என்பதை. ஒருவித சலிப்பு மற்றும் தேவை. சலிப்பை ஈடுசெய்ய நாங்கள் இருவரும் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தோம். ஏதோ ஒன்று எங்கள் சந்திப்பின் ஆரம்பப் புள்ளியிலிருந்து புணர்ச்சியின் இறுதிப்புள்ளிவரை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. இறுதியாக நாங்கள் எங்களை உணர்ந்தோம். பிரிந்தோம்ஞ் இல்லை இல்லை, பிரிந்தாள்.

*

12 மாடி குடியிருப்பின் 11 மாடி பால்கனியின் விளிம்பில் கைவைத்து மங்கலாகத் தெரியும் சந்திரனைப் பார்த்தபடி, ஃபிரிஜ்ஜில் ஒருவாரமாகக் கிடந்த பீர் பாட்டில்களைத் தனியாக காலி செய்யவேண்டிய நிலையில் தள்ளப்பட்டிருக்கிறேன் என்பது கசப்பான உண்மை. இந்த உலகத்தில் என்னைப் புரிந்துகொள்ள யாருமே இல்லை, வேதனை நிறைந்த காலத்தில் யாருடன் என்னுடைய துயரங்களைப் பரிமாறிக் கொள்வது? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இந்த உலகம் எவ்வளவு பெரியது. என்னிடம் பேசுவதற்கும் பழகுவதற்கும் ஏதேனும் ஒரு ஜீவன் இங்கு இல்லாமல் போனது யாருடைய தவறு. எனக்குத் தெரியவில்லை, ஒருவேளை இது என்னுடைய தவறாகக்கூட இருக்கலாம். நாம் யாரை அதிகம் நம்புகிறோமோ அவர்களால் காயப்படுவதும், வேதனைப்படுவதும், துயரப்படுவதும் எப்போதும் இப்பூமிப் பந்தில் நடந்தேறிக்கொண்டே இருக்கிறது. வாழ்வின் கொடுமைகளில் இந்தத் தனிமையை மட்டும் பிரித்துவிட்டால் மனிதன் நினைத்துப் பார்த்து சிரிப்பதற்கு ஏதுமில்லாது போய்விடுமோ! 10ஆவது மாடி பால்கனியில் ஒரு தம்பதியினர் தங்கள் காதலை சந்திரனுக்கு இரையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ‘எப்படி இருந்த நீ இப்படி ஆகிவிட்டாய் பார்த்தாயா’ என்று நட்சத்திரங்கள் என்னைப் பல்லைக்காட்டி சிரித்துக்கொண்டிருக்கிறது. மணி அதிகாலை 2.33 ஆகியிருக்கலாம் அல்லது ஓரிரு நிமிடங்கள் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். இந்நேரம் சோடியம் பல்பின் ஒளி இல்லாத நெடுஞ்சாலையில் 30 அடி நீளத்திற்கு சிமெண்ட் பைப்புகளை ஏற்றிக்கொண்டு சென்ற ராட்சச லாரி விபத்துக்குள்ளாகி அதன் ஓட்டுநர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கலாம். இல்லையென்றால் என் மனைவியின் அல்குல்லில் வேறொருவன் முகம் புதைந்து கிடக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், எப்படி இருந்தாலும் இப்போது நான் தனியன். என் தனிமையைப் போக்கிக்கொள்வதற்கு நான் யாரிடமாவது பேச வேண்டும், யாரிடம் பேசுவது? இந்த 30 வருட காலத்தில் என்னுடன் மட்டும்தான், என்னால் தயக்கமில்லாமல் பேசமுடிந்துள்ளது. இந்த உயரம் என்னைப் பயமுறுத்துகிறது அல்லது தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகிறது. ஒருவன் தற்கொலை செய்துகொள்வதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் தனிமைதான் காரணம் என்பது எவ்வளவு துயரமானது. என்னை யாரோ தள்ளிவிடுவதுபோல் உணருகிறேன். இது கண்டிப்பாக நான் எடுத்த முயற்சி அல்ல.

*

அன்பின் வடிவம் சுபிக்‌ஷா! சுபிக்‌ஷாவும் நானும் கல்லூரி நண்பர்கள். பல காரணங்களால் நாங்கள் இருவரும் காதலைச் சொல்லிக்கொள்ளவில்லை. அவள் அப்போதே அவ்வளவு மிடுக்காக இருந்தாள் எல்லாவற்றிலும். மிடுக்கென்றால் எப்படி நீங்கள் புரிந்துகொள்வீர்கள், ஒருவேளை என்னிடம் தன்னுடைய அபிலாஷைகளை முழுவதுமாகப் பகிர்ந்துகொண்ட பிறகு இன்னொருவனைக் காதலித்ததாலா அல்லது எதிர்வீட்டு கோபியுடன் மொட்டைமாடியில் வழக்கமாக இரவு சந்திப்புபற்றி எனக்குத் தெரியாமல் மறைத்ததாலா? இல்லை அவளின் சித்தப்பாவுடன் அவளுக்கிருந்த உறவைப் பற்றி என்னிடம் பகிர்ந்துகொண்டு என்னை சித்தப்பாவிற்கு அறிமுகம் செய்துவைத்ததாலா? ஏதோ ஒன்று, எனக்கு எப்போதுமே அவள் மிடுக்காக காட்சியளித்தாள். மேலும் எல்லாச் சூழ்நிலையிலும் அவள் அவளாக இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. வகைவகையாக வித்தியாசமான தோரணையில் அவள் பேசுவது பார்ப்பதற்கே அவ்வளவு ஆசையாக இருக்கும். என் நினைவின் அடிஆழத்திலிருந்து எழ முயற்சிக்கும் சில முக்கிய சம்பவங்களைக் காட்சிப்படுத்தினால் நானும் சுபிக்‌ஷாவும் ஒன்றாக இருந்தது மட்டுமே தெரியும். ஆனால் அதில் ஒரு காட்சி மட்டும் எவ்வளவு அழிக்க முயன்றும் என்னால் முடியவில்லை.

அன்று வகுப்பறை வாசலை சுபிக்‌ஷாவின் தடித்த ஹீல்ஸ் வைத்த செருப்பு எட்டியிருக்கவில்லை. மனம் சுபிக்‌ஷாவின் வாசனையைத் தேடிக்கொண்டிருந்தது. ஏன் அவள் இன்னும் வரவில்லை? இந்த ‘ஏன்’ என்ற கேள்வி எனக்குள் எப்போது எழுந்ததோ, அப்போதே சுபிக்‌ஷாவின் பின் கழுத்துமுடி பிசிறில் சிக்கிக்கொண்டேன் என்று நினைக்கிறேன், அதுவும் வசமாக. மணி அடித்து கலைந்த சக மாணவர்கள் மத்தியில் உள் நுழைந்து வந்தாள் சுபிக்‌ஷா. அவளது அந்த நடையை எப்படி விவரிப்பது? மிதப்பான நடையென்றா இல்லை, அது ஒருவிதமான ஒத்திசைவு. அந்த ஒத்திசைவின்வழி ஏதோ ஒன்றை எனக்கு உணர்த்த முற்பட்டாள். அன்றுதான் அவளை, அவளாக நான் கண்ட கடைசி நாள். அடுத்தநாள் முதல் அவளுக்கு நான் என்ற என் பிம்பம் ஒரு இருப்பு மட்டுமே. வகுப்பறை முழுக்க சுபிக்‌ஷா, வினோத் காதல் கதை அரசல்புரசலாகக் காதில் விழுந்துகொண்டிருக்கிறது. முழுவதுமாக அவள் கண்ணைப் பார்த்து ஏன்? எப்படி? என்று கேட்க துணிவில்லாதவனாக நான் ஏன் மாறினேன் என்று எனக்குத் தெரியவில்லை. வலையில் சிக்காத மீன்களை சுலபமாக இனம் கண்டுகொள்ளமுடியும். ஆனால் வலையில் சிக்கி நழுவும் மீன்களை எப்படிப் புரிந்துகொள்வது.

யார்மீதோ கோபப்பட வேண்டும், யார்மீதோ பழிபோட வேண்டும், யாருக்காகவோ தேம்பித் தேம்பி அழ வேண்டும் என எத்தனைவிதமான மனப்பிறழ்வு சிந்தனைகள். வெறுமை நிறைந்த அந்நாட்களைக் கடக்க போதைப் பழக்கத்தில் ஈடுபட்டேன். சிகரெட்டும் குடியுமாக சுற்றினேன். டீக்கடை டீக்கடையாக நின்று வெட்டவெளியைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.  காலத்தால், ஒருவரின் உள்ளார்ந்த உணர்வு குவியலின் இருப்பை மற்றொரு உணர்வால் ஈடுசெய்ய முடியாது.

*

என் மனைவியின் இருப்பை சுபிக்‌ஷாவின் நினைவுகளால் ஈடுசெய்ய முடிந்திருந்தால் இந்நேரம் நான் இப்படித் தனிமையில் உழன்று கொண்டிருக்கத் தேவையில்லைதானே?.

என் மூளை நரம்புகள் விழித்தது. நான்தான் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று அர்த்தப்படுத்தியது. உடல் முழுவதும் பாரமாக உணர்கிறேன். இப்போது என்னுடைய போதையின் அளவை யாரோ திருடிக்கொண்டிருக்கிறார்கள்.

என் ஆழ்தனிமையை என் சிந்தனைக்கு அனுப்பாத இந்த பீர் பாட்டிலின் மகிமைகளை மற்றவர்களைப்பற்றி சிந்தித்தே அழித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது என் நிலைமை நானே சீர் செய்துகொள்ள வேண்டும். ஒரு டீ சாப்பிடலாம். அகலவிரிந்த இந்த அறையில் நான் மட்டுமே தற்போது இருப்பதால் நான்தான் கிச்சனுக்கு சென்று டீ போட வேண்டும். என்னால் முடியாது. இது ஒரு விதமான சோம்பேறித்தனம். என் சோம்பேறிதனத்தால் நான் நாளுக்குநாள் பெருத்துக்கொண்டிருக்கிறேன். ‘கீர்… ர்ர்ர்… ர்… இப்படியான சத்தம் என் காதுகளில் விழுந்தது. அது, என் அறையின் நடுவில் டைனிங் டேபிளோடு ஒட்டப்பட்டிருந்த மர நாற்காலியை பால்கனி ஓரமாக இழுத்துச் சென்றபோது எழுந்த சத்தமாக இருக்கலாம். அய்யோ இந்த நாற்காலி! ஒருமுறைகூட என் மனைவியைப் புணர்வதற்கு உபயோகிக்காத நாற்காலி ஆயிற்றே இது. காலைத் தொங்கவிட்டபடி இதில் அமர்ந்திருப்பது சிறிது நேரத்தில் சலிப்படித்துவிடுமே! என்ன செய்வது? கொஞ்சம் முயற்சி செய்து இன்னும் இரண்டுமணி நேரம் கடந்துவிட்டால் விடியற்காலை வந்துவிடும், பல அடுக்கு உயரத்திலிருந்து கிழிறங்கி வெளியே சென்று டீ சாப்பிடலாம். ஆனால் இந்த இரண்டுமணி நேரம்?

*

இரண்டு மூன்றுமுறை வினோத்துடன் சுபிக்‌ஷாவை சந்தித்திருக்கிறேன். ஆனால் இது காதல், கல்யாணம் வரைக்கும் செல்லும் என நான் சிறிதும் யூகித்திருக்கவில்லை. எப்படி அவளால் இவ்வளவு இயல்பாக நடந்துகொள்ள முடிந்தது. பின்பு எப்படி என்னுடைய கூதிர்கால முதல் புணர்வின்போது அவ்வளவு ஆக்ரோசமாக நடந்துகொள்ள முடிந்தது. இதெல்லாம் நடிப்பா? இல்லை அதெல்லாம் ஒத்திகையா? ஏன் என் கண்களுக்கு மட்டும் எல்லாம் பட்டவர்த்தனமாக தெரிகிறது, இதை எப்படிப் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கு விவரிப்பது? ஒருவேளை நான் அவளை அனுமானிப்பதுதான் அவளது பிரச்சினையா? எப்படி அவளால் அந்நாட்களில் அத்தனை பகல்வேஷங்களைப் போட முடிந்தது, அவளைப் பற்றி எல்லாம் தெரிந்தும் நான் ஏன் எதுவும் கேட்காமல் இருந்தேன். அவளது இரு கரங்கள் என் முதுகைக் கட்டியணைத்து வருடிய தருணங்களை என் நினைவுத்துளியிலிருந்து அழித்துவிட்டால் ஒருவேளை அவளை முழுவதுமாக வெறுத்துவிடுவேனோ? அய்யகோ! இது மிகப்பெரிய சுயபுலம்பலாக ஆகிவிட்டதே!

அவளது திருமணம், ஆனால் அது என்னுடன் இல்லை. நான் கல்யாணமேடையில் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். எது தடுத்தது? இப்படி கல்யாண சாப்பாடு சாப்பிடுவதற்காகவா இத்தனை நாள் பழக்கவழக்கமெல்லாம். எவ்வளவு அழகாக என்னுடைய பார்வையை எதிர்கொள்கிறது அவளது கண்கள். பொய், சுத்த பொய்மை.

அவளை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு என்னுடைய வேலைகளை நான் பார்க்க வேண்டும். எனக்கான சுய முன்னேற்ற கருத்துக்களை நானே என் மூளைக்குள் அனுப்பிவைக்க வேண்டும் இல்லையென்றால் இன்னொரு காதல். நிச்சயமாக அது பண்பட்ட காதலாக எந்தவகையிலும் விலகாத காதலாக இருக்க வேண்டும். நாட்கள் மெல்ல ஊர்ந்து செல்லத் தொடங்கியது. நானும் காலங்களுடன் என் நினைவுகளைக் கழித்தேன்.

அந்த மேம்பாலத்திற்கு அருகிலிருந்த டீக்கடையில் என்னுடைய ரிங்டோன் மட்டும் சற்று வித்தியாசமாக ஒலித்தது. சுபிக்‌ஷாவுக்கு இரண்டாவதும் ஆண் குழந்தை என்ற செய்தியை நண்பன் ஒருவன் மெனக்கெட்டு தகவல் அளித்தான். ஆமாம், அது ஒரு பகல் நேரம்.