கனவுகளைப் பற்றுதல்

“கொச்சையாகவோ ‘புரியாத’ மாதிரியோ எழுதுவதுதான் புதுக்கவிதையின் இலக்கணம் என்று சில சமயம் நினைப்பு வந்து விடுகிறது”

—சார்வாகன் ‘கசடதபற’ மார்ச் 1971

“வசனக் கவிதையில் (PROSE POETRY) ஒலி நயமோ எதுகை மோனையோ இருக்கவேண்டிய அவசியமில்லை. நுட்பமான உணர்ச்சியும் சொல்லில் கவிதை வெளிச்சமும் இருந்தால் போதும். வசனத்தின் உருவத்தையும் கவிதையின் உள்ளடக்கத்தையும் கொண்டு பிறப்பதே வசனக் கவிதை என்று நாம் குறைந்தபட்ச அளவுகோலை வைத்துக் கொள்வது தவறல்ல” இது என்.ஆர்.தாசனின் கூற்று.

மேற்காணும் இரண்டும் எதிர்காலத் தமிழ்க்கவிதை என்ற பேரில் கவிஞர் மீரா 1973இல் எழுதிய கட்டுரையில் மேற்கோள் காட்டப்பெற்றவை. அதே பெயரில் அன்னம் பதிப்பகம் இதனை 1985ஆமாண்டு இதனைப் பதிப்பித்தது.

கவிதையின் எதிர்காலம் என்னவாக இருக்கப் போகிறது?

பெருங்கவிதைகள் மொழியின் செழுமைக்குத் தங்களது பங்களிப்பை விரிந்த அனுபவமாக நிகழ்த்துபவை என்றால் சின்னஞ்சிறிய கவிதைகள் வடிவத்தினூடாகச் செய்து பார்க்க விழைகிற மாயவேலை. லிமரிக் ஹைகூ சென்ரியூ என அயல்கவிதைகளாகட்டும், நம்மூர் வெண்பா, குறள் என எல்லாமே கணித முகாந்திரங்களோடு இயங்குபவை. அங்கே விதிதான் எல்லாம் அல்லது விதிதான் முதலில். கவிதை செகண்டரி சாய்ஸ்தான் என்றுகூடச் சொல்லலாம். தமிழில் காலம் காலமாக சின்னஞ்சிறிய கவிதைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. என்னளவில் எளிதில் ஞாபகத்தினோரம் ஒரு இடம் தந்து இருத்தி விடுவது இயலுகிறது. சொல்ல முயற்சிக்கையில் வரிகளில் ஒன்றிரண்டு வரமறுத்துப் பிடிவாதம் பிடிக்காமல் அச்சு அசலாய் முழுவதுமாய் நினைவில் கொள்வதும் அதிலிருந்து எடுத்து மறுபடி அதிலேயே இட்டுப் பராமரிக்க, பத்திரம் செய்ய எனப் பல வசதிகள் கொண்டவை இம்மாதிரி சிறுகவிதைகள்.

கடைசி தூரதேசப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை என்பது தலைப்பு. கவிதைத் தொகுதிக்குத் தலைப்பு இன்னதுதான் என்று வரையறுத்துவிட முடியாது. அது கவிஞனின் அகத்தின் ஏதோவொரு பெட்டகத்தைக் கிழித்துக்கொண்டோ அல்லது வெடித்துச் சிதறியபடியோ உருவாகும். அச்சுக்குப் போகும் வரைக்கும் ஒரு தலைப்பைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டே எதுவோவொன்று ஒத்துவராமல் அல்லது பூர்த்தியடையாமல் போதாமையின் பெருங்கனத்தை எப்படி மேலாள்வதெனத் தெரியாமல் அந்தரத்தை வெறித்தபடி இருந்துகொண்டிருந்து சட்டென்று இன்னொரு வெளிச்சத்தில் புதிய வேறொரு தலைப்பு புறப்பட்டுக் கிளம்பி வந்து தோள்மேல் அமர்ந்து தன் செம்மூக்கால் சிரிக்கும் கிளி. நீதான் நீயேதான் என்றாகிக் கவிதை புஸ்தகத்தை வெளியிடுவதாவது பேரொளியில் கொண்டுபோய்ச் சிறு சிதறலைச் சேர்ப்பிக்கும் அலாதியான ப்ராசஸ்.

யியற்கை கவிதைகள் எழுதித் தானே பெரும்பாலும் வைத்துக் கொள்கிற சமர்த்துப் பிடிவாதம் கொண்டவர். கைப்பொருள் தொலைத்துக் காகிதம் வாங்கி வெயில்நதி என்று பத்திரிகை நடத்திப் பித்ததிகம் கொண்டலைந்த இன்னொரு சிறுபத்திரிகைக் கவிஞன். அவனது கவிதைத் தொகுதியின் தலைப்புத்தான் இந்தப் பத்தியின் முதல் வரி எழுத்தின் வசீகரங்கள் பல. அவற்றில் மகத்தான ஒன்று என இதனைச் சொல்வேன். வாழ்வின் சாரமென்பதே அழிவதுதான். ஆனாலும் பூரணம் எது, பாதி எது என்பதில் தொடங்கிச் சதா அழிவை எண்ணியும் எண்ணாமலும் அதன் திசையிலும் வேறு திசைகளிலும் ஓடிக் கொண்டே இருப்பதாக மனிதன் வாழும் வாழ்வின் அத்தனை நிஜங்களும் பொய்யாகும் ஒற்றைப் புள்ளி மட்டும் நிஜம். எழுத்தின் மூலமாக அழிதலைக் குறித்த முழுமையான தகவல் அறிக்கையைத் தயாரித்து விட முனையும்போது அதன் சேர்மான விலக்கத்தில் எதற்கோ முயலுகையில் வேறேதோ அகப்படுகிறாற் போல வந்து உதிப்பது இலக்கியமாகிறது.

யியற்கை (நாமகரண காரணமென்னவோ) எழுதி உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுதி அலாதி அபார அசத்தல்களைத் தருவதற்கான சாத்தியப்பாடாக விரியாது போனாலும் சின்னதொரு குறுநகையை நிகழ்த்தித் தருவது ரசம். மேலும் முன்னர் சொன்னாற் போல் எதிர்பாராத அளவீடுகளுக்குள் ஒரு கல் கிளி கண் திறப்பது மட்டுமல்லாமல் ரெண்டொரு வார்த்தை பேசி விட்டு மறுபடி சமைகிற ஒரே ஒரு அற்புதத்தை மட்டும் செய்து காட்டுகிறது. மற்றபடி யாதொரு சூதுமறியா இயல்பான கவிதைகள்.

இன்னுமிருக்கும் தொலைவு

வாகனங்கள் கடக்கும்போதெல்லாம்

நசுங்கிய உடலிலிருந்து எம்பிப் பார்க்கிறது

றெக்கை

யியற்கையின் ரசவாதம் தன்னை முன்னிறுத்திக் கொள்ளத் தெரியாத கூச்ச சுபாவி ஒருவனின் டைரிக்குள்ளேயே இருந்துகொள்ளட்டுமா என்று அவன் குரலிலேயே மனதுள் ஒலிக்கும் தேசல் கவிதைகள் அல்லது பட்டாம்பூச்சிக்கு முந்தைய நிலையிலேயே தான் பட்டாம்பூச்சியாகாமல் தப்பிப் பறக்க வழியேதும் அகப்படுமா என்று சதா தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டே இருக்கிற ராஜாளிப் பறவைகள் அல்லது முன் சொன்ன இரண்டுமற்ற வேறேதோ சிலதுகள்.நான் இப்படி எழுதுவதால் எல்லோரும் வாங்கி உடனே இந்தக் கவிதைகளை வாசித்துவிடப் போவதில்லை. அப்படியே ஆகட்டும் எல்லாவற்றையும் எல்லோருக்கும் பகிர்ந்தளித்துக் கொண்டே இருக்கவேண்டும் என எந்த நியதியும் இல்லை

வழியில்

வழியில்

ஒன்றுமட்டும் புரிகிறது

புறப்படாமலேயே போய்க்கொண்டிருக்கிறேன்

பாதசாரி எழுதிய மீனுக்குள் கடல் தொகுப்பின் கடைசிப் பக்கக் கவிதை மேற்காண்பது. சுந்தர ராமசாமி எனும் பசுவய்யா எழுதிய வேட்டையாடத்தான் வந்தேன் எனத் தொடங்கும் கவிதையின் ஈற்றுவரிகளில் ஒன்று இப்படியாக வரும் ஆயத்தங்களில் கழிகிறது காலம் என. மேற்காணும் கவிதையை அதனுடன் பொருத்திப் பார்க்க முடிவது கவிதையின் பேரழகு.

சாயல்

கடல் நீரின் மேற்பரப்பில் தாழப்பறக்கும்

பறவையின் கழுத்தை

தாவிப்பிடித்து நீருக்குள் இழுத்துச் சென்ற

மீனின் சாயலடி உனக்கு

ராஜேஷ் வைரபாண்டியனின் மேற்காணும் கவிதை வேனிற்காலத்தின் கற்பனைச் சிறுமி என்கிற அவரது நாலாவது கவிதைத் தொகுப்பு. இது போன்ற சிறுகவிதைகளின் உருவாக்கம் மொழியைச் செறிவூட்டுவதற்கான இன்னொரு சாட்சியம். இக்கவிதை வாசிப்பவனுக்குள் பிறழ்த்தித் தருகிற இடவலமாற்றம் அரிதானது.சின்னதொரு நடுக்கத்தை வெளிச்சொல்வதற்காகத் தேர்வெடுக்கக் கூடிய அதீதமான சொற்களினூடாக வேறொன்றாக மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்தான். மனிதனுடைய மனமானது எதையுமே அபரிமிதமான தன் பெருக்கிக் கண்ணாடி ஒன்றின் விஸ்தரிப்புக்குள் நிறுத்திப் பார்க்க விழைந்து கொண்டே இருக்கிறது. இந்தப் புள்ளிதான் கலையின் ஆரம்பத்திற்குமாய்க் கிளைத்துச் செழிக்கிறது. நிகழ வாய்ப்பே இல்லாத ஒன்றின் நிகழ்ந்து விடுவதற்கான சாத்தியப் பெருக்கத்தை மிகச்செறிவான அதே நேரம் குறைவான சொற்களைக் கொண்டு நிகழ்த்தித் தருவதுதான் அற்புதமான தரிசனமாக மாற்றமெடுக்கிறது.இதில் சாயலடி என்பது சாயலுனக்கு என்றிருந்தால் இதே கவிதையின் அறிதல் அறியாமை வரைபடப் புள்ளிகள் சில மாறக் கூடும். அது கவிஞனின் விருப்பம்.எதுவுமே அப்படித்தானே?

ஆசையும் குற்ற உணர்ச்சியும்

சமமாய்ப் பிய்த்துத் தின்ற

விகார முகத்தை

எவர்சில்வர் பாத்திரப் பளபளப்பு

எதிர் ஒளிக்கக் காண்பது

துயரக் கேலியின் இருண்ட கணம்

அதிர்ந்து பேசத் தெரியாதவர். ஒருமுறைக்கு இருமுறை கவனம் கூர்ந்தால் மட்டுமே மனதுள் பெயரும் சன்னமான தொனியில் எத்தனை குத்துக்கும் பிளந்து கொடுக்காத காலங்காலமாய் இறுகிக் கிடக்கும் கற்பாறையின் அதே உறுதியோடு கருத்துக்களை முன் வைப்பவர். தன் கவிதையுலகப் பயணத்தின் ஐம்பதாம் ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கக் கூடிய ந.ஜயபாஸ்கரனின் ஐந்தாவது கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக ஆகஸ்ட் 2018 இல் வெளியிடப்பட்டிருக்கும் பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள் எனும் தலைப்பிலானது.

ந.ஜயபாஸ்கரன் மதுரையில் பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருபவர். தொழில்கணங்கள் திறந்து வைக்கிற அன்றாடங்களின் வாசல்களைத் தாண்டி வருகிற முகங்களின் தற்காலிகத்தைத் தாண்டித் தன்னிச்சையாக நிகழ்கிற உள்ளுறை அபூர்வங்களைச் சேகரிக்கிற கலயமாகத் தன் கவிதைகளை நாடுகிறார். புலம்புதல் நீக்கப்பட்ட ஒரு தொடர் வெறுமை இவரது கவிதைகளின் சிறப்பு. இவரது கவிதைகள் வாசிக்கிறவனுக்கு உடனடி அவசரத்தில் எதையும் கடத்துவதில்லை. அன்னியரின் புகைப்பட ஆல்பத்தைப் பார்த்துத் திருப்புகிற அதே உலர்தன்மையுடன் முதல் வாசிப்பில் வாசகனை எட்டி நிறுத்துகிற இக்கவிதைகள் ஆழ்ந்து பார்த்தால் வேறொரு திரையை அகற்றி உள்ளே இன்னும் சில காட்சிகளை சாத்தியம் செய்கிற வல்லமை கொண்டவை. சொற்களினூடாகத் தன்னை ஒளிக்கிற அகலாத் தழும்புகளென எஞ்சுகிற தனித்துவம் மிக்க கவிதைகளின் கவிஞர் ந.ஜயபாஸ்கரன்.

எம் மக்கள்

லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ்

தமிழில்: ஜெனிஃபர்

இரவு மிக அழகானதாக இருக்கிறது.

அவ்வண்ணமே எம் மக்களின் முகங்களும்

நட்சத்திரங்கள் அழகானவை.

போலவே எம் மக்களின் கண்களும்

சூரியன் கூட அழகானதுதான்.

மேலும் அழகானவை

எம் மக்களின் ஆன்மாக்கள்

1920களில் ஹார்லெம் மறுமலர்ச்சியின் முன்னணி முகமாக லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் தனது எழுத்துக்களின் வழியே உருவானவர். அமெரிக்காவின் மிசௌரியில் 1902 ஆமாண்டு பிறந்த ஹ்யூக்ஸ் தன் முதற்கவிதையை 1921 ஆமாண்டு தன் 19 ஆம் வயதில் பதிப்பித்தார்.

கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் மட்டுமே பயின்ற அவர் தன் படிப்பை உதறிவிட்டுப் பயணங்களை மேற்கொண்டார். எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் தவிர பல்வேறு கவிதைகளை எழுதியவரான ஹ்யூக்ஸ் Chicago Defender என்ற தலைப்பிலான தொடர் பத்தி எழுத்தின் மூலமும் பெரும்புகழ் அடைந்தார். Montage of a Dream Deferred இவரது புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பு. பல்வேறு சிறப்புகளையும் விருதுகள் மற்றும் வெகுமதிகளைப் பெற்ற ஹ்யூக்ஸ் தனது 62 ஆம் வயதில் நோய்மையால் மரணித்தார்.

“என் ஆன்மா ஆறுகளைப் போல் ஆழமாக வளர்ந்துள்ளது.” என்று குறிப்பிடுகிற லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் கலைமீதான தன் உறுதியான கருத்துக்களை எப்போதும் வெளிப்படுத்திய வண்ணம் வாழ்ந்தார். “கலைஞன் தான் என்ன செய்யவேண்டுமென்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கொண்டவனாக இருப்பது அவசியம். மேலும் அவன் அப்படியானதைத் தேர்ந்தெடுப்பதற்குத் துளிகூட பயப்படக் கூடாது.கலைஞனின் நோக்கமானது மக்கள் தமக்குள் உறைந்திருக்கிற அழகை அவர்கள் உணரும் வண்ணம் எடுத்துரைப்பதுதான். எழுதுவது விதவிதமான இடங்களை நோக்கிப் பயணித்தல் போலவே சிறப்பான அற்புதம். நீங்கள் ஒரே இடத்தில் தங்குவதன் காரணமாகவே சோர்ந்துவிடுகிறீர்கள் என விவரிக்கிற ஹ்யூக்ஸ் கனவுகள் பற்றிப் பல இடங்களில் தொடர்ந்து எழுதியவரும் ஆவார்.

“கனவுகளை வேகமாகப் பற்றிக்கொள்ளுங்கள். எப்போது கனவுகள் அற்றுப் போகின்றனவோ வாழ்க்கையானது பனி உறைந்த தரிசு நிலம் போலாகிவிடும்.” இத்தனை அழகாகக் கனவுகளைப் பற்றுவது குறித்துச் சொல்ல முடிவது மொழியின் வல்லமை அன்றி வேறேது?

கல்வெட்டு

**************

இலக்கியத்தை ரசிக்க, அடையாளம் கண்டுகொள்ள, தரவரிசைப்படுத்த நம்முடைய சொந்த வாழ்க்கையனுபவமே ஆதாரம். நல்ல ஆக்கம் நம் அந்தரங்கத்துடன் உரையாடும். நம்மையே நமக்குக் காட்டித் தரும். இலக்கியம் சொல்பவற்றை நிரூபிக்க முயல்வதில்லை. அது சொல்லிச் செல்கிறது. அவ்வளவுதான். நாம் வாசித்ததுமே அதை உண்மை என நம் அந்தரங்கத்தால் உணர்கிறோம் அல்லது அது பொய் என உணர்கிறோம். தொடர்ந்து வாசிப்பது மட்டுமே நாம் செய்யவேண்டியது.

—-ஜெயமோகன்

எழுதியவனைக் கண்டுபிடித்தல் உரையாடல் தொகுப்பு. கயல்கவின் பதிப்பகம் வெளியீடு விலை. ரூ.120, ஆகஸ்ட் கவிதையின் முகங்கள்