பொழுது இதமாக இருந்தது. கர்த்தர் பிரம்மாவுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். பிரம்மா வாயு வேகம் மனோ வேகத்தில் உயிர்களைப் படைத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். கையெல்லாம் வலித்தது. ஒரே குடைச்சல். உடம்பெல்லாம் அசதி. இந்த ஆள் வேறு இடைஞ்சல் செய்ய வந்து உட்காந்துவிட்டார். ‘நைநை’ என்று எதையாவது பேசி உயிரை வாங்குவார்.

“இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்? மனுஷ உற்பத்தியா? இல்லை யானை, பூனை என்று மிருக உற்பத்தியா?” என்று கேட்டார் கர்த்தர்.

“இதைக் கேட்டுத் தெரிந்து என்ன செய்யப்போகிறீர்? உம்மால் எனக்கு உதவ முடியுமா? எதோ என் தலைவிதி… சிலேபி மீன், கணவாய் மீன், இறால், சுறா, திமிங்கலம் என்று எதோ செய்துகொண்டு கிடக்கிறேன்…” என்றார் பிரம்மா.

அல்லா வந்தால் இப்படித் தொணதொணத்துக் கொண்டிருக்க மாட்டார். பேசாமல் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் போய்விடுவார். இந்த ஆள்தான் சள்ளைபிடித்த மனுஷன்.

“ஏன் கோபித்துக்கொள்கிறீர்? நானும் உம்மைப்போல்தான்… அப்போ இன்னைக்கு ஃபிஸரீஸ் டிபார்ஃப்மெண்ட் வேலை என்று சொல்லும்… நாளைக்கும் இதேதானா? இந்த மீனின் வாலை நீர் எப்படிச் செய்கிறீர் என்று பார்க்க வேண்டும்.”

“அதுதான் எத்தனையோ தடவை பார்த்துவிட்டீரே? ஒண்ணும் புதுசில்லை…”

“ஏன் சலிச்சுக்கிறீர்? நீர்தானே படைப்புக் கடவுள். எனக்கோ அல்லாவுக்கோ இந்தப் பேர் இருக்கா சொல்லும்?”

“படைப்பாவது பொடலங்காயாவது? ஏதோ நான் எடுத்த ஜென்மம்… இந்த வேலையைச் செஞ்சு ஜென்மாந்தர கடனைக் கழிச்சுக்கிட்டு இருக்கேன்… ஒம்ம பாடு தேவலை. வேலை, வெட்டி ஒண்ணும் கெடையாது. இருந்த எடத்துல இருந்தே ஜனங்க சொல்லுத ஜெபங்ளை காதுல போட்டுக்கிட்டு இருந்தாப் போரும். யாருக்கும் ஜவாப் சொல்ல வேண்டியதில்லை” என்றார் பிரம்மா.

“அதை ஏன் கேட்கிறீர்? ஜெபங்களைக் கேட்டுக் கேட்டு மண்டையே வீங்கிபோகுது. அதுவும் சில சமயப் பிரசாரகர்கள் மன்றாடி மன்றாடி ஜெபம் பண்ணுதாங்க… அதைக் கேட்டா அழுகை அழுகையா வருது. இப்போகூட சகோதரர் ஜான் லூயிசுன்னு ஒரு ஆள் மன்றாடி ஜெபம் பண்ணிக்கிட்டு இருக்கான். கெட்ட ஆவிகளை எல்லாம் ஓட்டுதான். எல்லாம் நீரு படைச்சுவிட்டவங்கதான?”

“இதை எல்லாம் சத்தம் போட்டுச் சொல்லாதீரும்… ஒம்ம மதம் மாறிட்டார்னு சொல்லிருவானுக…”

“கன்வர்ஷனைச் சொல்லுதீரா?”

“ஏதோ ஒரு சாமியக் கும்புட்டுக்கிட்டுச் சும்மா கெடக்க வேண்டியதுதான? எந்தச் சாமியக் கும்பிட்டா என்ன? அவனவன் கஷ்டத்தை என்ன பண்ண முடியும்? எல்லாருக்கும் புத்தியக் குடுத்தாச்சு. புத்தியக் கொண்டு பொழைக்க வேண்டியதுதான…”

“புத்தி மட்டுமா இருக்கு? ஆசை, பாசம், கோபம், அன்பு, இரக்கம்னு ஆயிரத்தெட்டு உணர்ச்சிகள் இருக்கே. அதையெல்லாம் மனுஷன் கட்டி மேய்க்க வேண்டியதிருக்கே…”

“எல்லா ஜீவராசிக்கும்தான் இதெல்லாம் இருக்கு… அதுக்கு என்ன பண்ண முடியும்?…” என்றார் பிரம்மா.

“வேதனை, கஷ்டம் இதெல்லாம் உணராமலிருக்க மனுஷனை உம்மால் உண்டாக்க முடியாதா?”

“அது எப்பிடி? அதெல்லாம் இல்லைன்னா உயிர்ப் பிராணியே இல்லையே. மனுஷனைத் தவிர மத்த உயிர்களுக்கெல்லாம் வேண்டுதல், பிரார்த்தனை இந்த எளவெல்லாம் தெரியாது. மனுஷந்தான் தனக்கு எதாவது சின்னக் கஷ்டம் வந்தாக்கூடப் பொலம்ப ஆரம்பிச்சிருதான். கோயில் கொளம், மசூதி, சர்ச்சுன்னு கௌம்பிப் போயி ஒப்பாரி வைக்கான்…”

“மனுஷனோட பொலம்பல் பெரிய பொலம்பலால்லா இருக்கு…” என்றார் கர்த்தர்.

“நல்லவேளை.. எங்ககிட்டே எவனும் வந்து பொலம்புதது கிடையாது. ஒம்மகிட்டேயும், சிவன், விஷ்ணுகிட்டேயும்தான் அதக் குடு, இதக் குடுன்னு கேட்டுக்கிட்டே இருக்கான்…”

“ஒமக்குத்தான் கோயிலே இல்லையாமே?”

“ஆமா நான் கழிச்சுப்போடப்பட்டவன்” என்றார் பிரம்மா.

“என்கிட்டே ஒரு பையன் வந்து விசித்திரமான கோரிக்கையை வைக்கிறான்…”

“என்ன கேக்கான்? வீடு வேணும்கிறானா, கல்யாணம் ஆகனும்கிறானா… இல்லை பணம் வேணும்கிறானா? இதத்தான கேப்பானுவோ?”

“அவன் கேக்கத என்னால தரமுடியாது… அதான் ஒம்மகிட்டே வந்தேன்…”

“ஒம்மாலே தர முடியாததை எல்லா எப்படிய்யா தர முடியும்?”

“வேற ஒண்ணுமில்ல… ஒரு பிள்ளையாண்டான் கலாச்சாரமே இல்லாத வீட்டுல பொறக்கணும்னு கேக்கான். அவன் கிறிஸ்தவன்தான். ஆனால் அவனுக்குக் கிறிஸ்தவ கலாச்சாரமே பிடிக்கலை. ஹிந்து கலாச்சாரம், முஸ்லிம் கலாச்சாரம் எதுவுமே பிடிக்கலை. தினசரி ஜெபம் பண்ணுதான்.”

“ஒம்மைக் கும்புடுதான்லா? பெறவென்ன? அவனை ரெட்சிக்க வேண்டியதுதான?”

“என்னால முடியலை… என்னைக் கும்பிடுதவங்க எல்லாம் தீவிரமா கிறிஸ்தவக் கலாச்சாரத்தை அனுசரிக்கிறவங்க… அவன்தான் கிறிஸ்தவ கலாச்சாரமே வேண்டாம்னு சொல்லுதானே?”

“கலாச்சாரம் என்ன செய்யிது? புடிக்கலைன்னா சும்மா இருக்கவேண்டியதுதான?” என்றார் பிரம்மா.

“அவனுடைய பெற்றோர் எனக்கு உகந்த பிள்ளைகள். சர்ச்சுக்கு வரத் தவறமாட்டாங்க… இவனையும் சர்ச்சுக்கு வரணும்னு வற்புறுத்துறாங்க. இவன் எந்த நேரம் பார்த்தாலும் செல்போனை நோண்டிக்கிட்டே இருக்கான்… சர்ச்சுக்கு வந்தால் போனை எல்லாம் நோண்ட முடியாதே…”

“சரி! ஹிந்துவாய்ப் போயிர வேண்டியதுதான?”

“உம்ம மதத்திலும் கோயில், கொளம் தீவாளி, பொங்கல்னு ஏகப்பட்ட கலாச்சார சமாச்சாரங்கள் இருக்கே?”

“கொஞ்சம் இரும்! உம்மோட பேசிக்கொண்டிருந்ததில் ஏகப்பட்ட அரைகுறைப் பிறவிகள் உற்பத்தியாகிவிட்டன. இதுக்குத்தான் வேலை செய்யும்போது நான் யார்கிட்டேயும் பேசுறது கெடையாது…” என்றார் பிரம்மா.

“ஐயையோ! நானா காரணம்? அந்தப் பாவம் என் தலையிலா?”

“கடவுளான ஒமக்குத்தான் பாவ, புண்ணியம் எதுவும் கெடையாதே… அது சரி, அவனுக்காக எதுக்கு நீர் பரிஞ்சுக்கிட்டே வரணும்?”

“அவனைப் பார்த்தால் பாவமா இருக்கு….”

“அவன் செத்துப் போனதால்தான் அடுத்த ஜென்மத்தில், கலாச்சாரமே இல்லாத வீடாகப் பார்த்து அவனைப் பிறக்க வைக்க முடியும். எல்லாவனும் ஏதோ ஒரு கலாச்சாரத்தைத் தோள்லே சொமந்துகிட்டுத்தானே அலையிதான்… அமெரிக்கா மாதிரி வெளிநாடுகள்லே சர்ச்சுக்கே போகாத குடும்பங்கள் இருக்கே… அங்கே போகவேண்டியதுதான?”

“அதெல்லாம் நடக்கிற சமாச்சாரமா?”

“உம்மோடு பெரிய வம்பாப்போச்சே…”

“தமிழ் நாட்டுலேயே எதாவது கலாச்சாரமே இல்லாத வீட்டுக்கு அனுப்பினால் தேவலை…”

“புரொபஸர் சங்கரன் வீட்டில் நல்ல நாள், கிழமை, திதி, பண்டிகை எல்லாம் கிடையாது. ஆனால் அவன் வீட்டில் பொறந்த நாளைக் கொண்டாடுவாங்களே?”

“பொறந்தநாள்தானே? பரவாயில்லை…”

“அப்போ அவனைச் சாகச் சொல்லும். செத்த பிறகுதான் மறு பொறப்புல அந்தப் புரபொஸர் வீட்டுலேயே பொறக்கவைக்க முடியும்…”

“ஐயோ இருவத்தி நாலு வயசுப் பையனைச் சாகச் சொல்லவா?”

“அதுக்கு நான் என்னய்யா பண்ணுவேன்… உசிரோட இருக்கிறவனை மாற்ற எனக்கு ரைட் கெடையாது… உமக்கு கூழுக்கும் ஆசை… மீசைக்கும் ஆசை…”

“வேறவழியே கெடையாதா?”

“உலகத்திலேயே கலாச்சாரம் இல்லாத எடமே கெடையாதுய்யா… ஆடு, மாடு, நாய், சிங்கம், புலி, குருவி, காக்காய்னு எல்லாத்துக்கும்தான் கலாசாரம், பழக்கவழக்கங்கள் இருக்கு… எந்தப் பொறப்பெடுத்தாலும் அதுவும் கூடவே வந்திரும்… என்னை என்ன செய்யச் சொல்லுதீரு?”

“சரி, சரி… உம்ம வேலையைப் பாரும்… படைப்புக் கடவுளாச்சே ஏதாவது வழி செய்வீர்னு பாத்தேன்… நான் போயிட்டு வாரேன்…” என்று இடத்தைக் காலி செய்தார் கர்த்தர்.