கல்வியுரிமையும் இந்துத்துவ ராஷ்ட்ராவும்:

ஐந்தாவது மற்றும் எட்டாவது பொதுத் தேர்வுகளை முன்வைத்து

மீபகாலமாக தமிழ்த் தேசியத் தம்பிகள் ஆவேசமாக, வினயமாக முன்வைக்கும் மிக முக்கியமான கேள்வி ஒன்றுதான். திராவிடமும், பெரியாரும்தான் தமிழினத்தின் கல்வி மீட்சியை முழுமையாக்கி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களிற்கு அடிப்படைக் கல்வி, உயர்கல்வி ஆகியவற்றைக் கொண்டு சேர்த்தனர் என்பதைக் கேள்விக்குள்ளாக்குவதுதான். அவர்களது ஐயம், சங்க காலம் தொட்டு, ஏன் அதற்கு முன்னரும் தமிழ் நிலப்பரப்பில் செவ்விலக்கியங்கள் இவ்வளவு இருக்கின்றதே, அதை எழுதிய புலவர்களை, அறிஞர்களை எல்லாம் திராவிடமா கற்கவைத்தது என்பதுதான். அவர்களது கருதுகோளில் பெரும் மாற்றுக் கருத்து இல்லை. தொல்காப்பியத்திற்கு முன்னரே இங்கு பெரும் புலவர்கள் இருந்தமைக்கான சான்றுகள் அந்நூலிலேயே உள்ளது என்பதுதான் ஏற்றுக்கொள்ளத்தக்க சான்று. அதிலும் தொல்லியல் ஆய்வுகள், கீழடி, தமிழி என விரியும் நாளில் இதை நம் எதிரிகளே மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்களுக்குப் பதில் கூறுவதற்குமுன் அவர்களிடம் கேட்க ஒரே ஒரு ஐயப்பாடு உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவ்வளவு கல்வி கற்ற சமூமாக, சங்ககாலத்திலேயே முப்பதுக்கும் அதிகமான பெண்பாற் புலவர்களே வாழ்ந்த மண்ணில், இருபதாம் நூற்றாண்டிற்கு, முந்தைய பல நூற்றாண்டுகளாய் சமூகத்தின் பெரும்பான்மையினர் எப்படி (95% மிகுதியானவர்கள்) கல்வியற்றவர்களாய், எழுத்தறிவற்றவர்களாய் ஆனார்கள்.

தமிழ்த் தேசியர்கள் பாய்ந்து வந்து பதிலளிக்கும் விடயம் ஒன்றுதான். வந்தேறி, வடுகர்கள் ஆட்சி நம்மவர்களை சதிசெய்து படிப்பறிவற்றவர்களாக்கிவிட்டது என்பர். நல்லது. ஆனால் தம்பிகள் ‘கண்டுபிடித்த’ காரணகர்த்தாக்களான வடுகர்களில் அதே 95% மக்கள் கைநாட்டுகளாக இருப்பது ஏன்? இதற்கு மேல் தமிழ்த் தம்பிகளுக்கு வாதம் முடிந்து வசை தொடங்கிவிடும். போகட்டும். அவர்களை விடுப்போம். அவர்களிடம், பார்ப்பனரில் மட்டும் 99.9% பேர் கற்றவர்களாக இருக்கிறார்களே எனக் கேட்க முடியாது. அதற்கு மேலான வாதங்களே வசைமாரிதான். பார்ப்பனத் தமிழர்களை விலக்க முனையும் வடுகச்சதி அவ்வளவுதான். பார்ப்பனர் தங்களை எப்போதாவது தமிழர்தாம் என்றோ அல்லது தங்களது வேதபார்ப்பன வேரை மறுத்ததையோ கண்டதுண்டா என்றோ கேட்க முடியாது. திராவிட அரசியலைப் பார்ப்பன விரோதமாக மட்டுமே சுருக்கிவிட முயல்பவர்கள் யாரும், இந்தப் பார்ப்பன நிலைப்பாடு குறித்து வாய்திறப்பதில்லை. அதன் பொருள், பார்ப்பனர் தங்களை ஆரிய வேத பார்ப்பனராக உணர்வதும், அதைச் சார்ந்து இயங்குவதும் தர்மம். ஆனால் அதன் விளைவாக தமக்கு நேர்ந்த இழிவை, இழப்பை, வீழ்ச்சியை திராவிடம் சார்ந்து பேசினால் அவதூறு, மனித விரோதம் (மனு விரோதம்?).

இந்தியக் கல்வி சரித்திரம் எழுதப்பட்ட வகையில், திராவிட நாட்டு கல்வி சரித்திரம் எழுதப்படவில்லை என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட, திராவிடப் பித்தன் அவர்களின், ‘திராவிட நாட்டு கல்வி வரலாறு’ நூல். (கயல்கவின், பாவேந்தன் 2009) ஒன்றைத் தெளிவுபடுத்துகிறது. வரலாற்றின் பக்கங்களில், கல்வி உரிமை, வாய்ப்பு என்பது பார்ப்பன மனுநீதியின் விதிகளால், பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டதாகவே இருக்கிறது என்பதுதான்.சமணமும், பௌத்தமும் கல்வியை வெகுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியைச் செய்தது என்றாலும், சங்கம் மறுவிய காலத்தைத் தொடர்ந்த களப்பிரர் காலம் தவிர்த்து, பல்லவர் துவங்கி சோழர்கள் ஊடாக விஜயநகர ஆட்சியிலும், அதற்குப்பின் வந்த நாயக்கர்கள் ஆட்சியிலும் பார்ப்பனர் மற்றும் உயர்குடி வேளாளர்களுக்கு மட்டுமே கல்வி உரிமை என்பது ஆட்சியாளர்களின் நிலைத்த கொள்கையானது. பல்லவர் காலம் தொட்டு பார்ப்பன அங்கீகாரம் ஆட்சியாளர்கள் தங்களை நிறுவிக்கொள்ளும் கருவியானது. சோழர்களின் சாம்ராஜ்ய விரிவாக்க நடவடிக்கை பார்ப்பனர்களின் அதிகாரத்தையும் விரிவாக்கியது. மனுதர்ம ஆட்சி இந்த மண்ணின் பூர்வகுடிகளை கல்வி உரிமைக்கு வெளியே நிறுத்தியது.. வெகுமக்கள் கல்வியறிவற்றவர்களாக சூத்திரர்,பஞ்சமராக ஆக்கப்பட்டனர். இந்தவகையில் வெள்ளாள சைவமடங்களும் , பார்ப்பனரோடு கைகோர்த்து கல்வியை அவர்களிற்குள்ளாக மட்டுமே இருத்திக் கொள்வதற்கு துணை போனது. சைவமடங்களில் கற்ற பார்ப்பனர்களுக்கு தனி போஜன அதிகாரம் வழங்கி தருமை ஆதீனம் கௌரவித்தது என்பதை உ.வே.சாமிநாதய்யரின் தன்வரலாற்றில் காண்கிறோம். ஆக, திராவிடநாட்டு கல்வி வரலாறு, போர்ச்சுகீசியர்களும், ஆங்கிலேயரும் தங்கள் மதம் பரப்பும் நோக்கத்தோடு அதனை வெகுமக்களை நோக்கி நகர்த்தும் வரை , கல்வி மறுக்கப்பட்ட வரலாறாகவே இருந்திருக்கிறது என்பதே. பதினேழில் முகிழ்ந்த இந்த புதிய போக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெகுவாக விரிந்து வளர்ந்து எளியவர்களின் கல்வி வாய்ப்பை பெருக்கியது என்பது மறுக்க முடியாது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் வலுவாக வளர்ந்துவிட்ட, கிறித்தவ மிஷனரிக் கல்வி, மக்கள் கல்வி வளர்ச்சிக்கு வெகுவாக வழிகோலியது.மதபரப்பல் நோக்கங் கொண்டதெனினும், அதன் பயன் விளைவாய், அதற்கு மாற்று திசையில் வைகுண்டர், வள்ளலார், அத்திப்பாக்கம் வெங்கடாசலனார், முனுசாமி நாயகர் முன்னெடுப்பில் நடத்தப்பட்ட தத்துவவேசினி இதழ் குழுமத்தினர் , அயோத்திதாசர் என சமூகமாற்றத்திற்கான செயல்பாட்டுச் சிந்தனையாளர்களை உருவாக்கியது. இந்த வேதபார்ப்பன மேலாதிக்க எதிர்ப்பியக்கங்கள், பார்ப்பனரல்லாதோர் இயக்கத்திற்கான அடிப்படையானதும், அதைத் தொடர்ந்த நீதிக்கட்சி ஆட்சியும் கல்வியுரிமையில் வெகுவான மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்த்ததும், பெரியார் ஆட்சி வடிவிலும், அதற்குவெளியிலும் பார்ப்பன அதிகாரத்தை வேரறுக்கும் பணியை தன்வாழ்நாள் பணியாக்கினார் என்பதும் அறியப்பட்ட வரலாறு. நிற்க.

மீட்கப்பட்ட கல்வியுரிமையும், அதன் வேரறுக்கும் முயற்சிகளும்.

ஓரளவில் கல்வியுரிமை மீட்கப்பட்டது என்றாலும், அசலாக இன்னும் மிகப் பெரும்பான்மை சமுகங்கள் அதன் பயன்வெளிக்கு அப்பால் நிறுத்தப்பட்டிருப்பதும் மறுக்க முடியாத உண்மை. பார்ப்பனீயம் தன் இரண்டாயிரமாண்டு அதிகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிடுமா என்ன ? பெரியார் மிகச் சரியாகவே சொன்னது போல, வெள்ளையர் ஆட்சி மாற்றம், மீண்டும் பார்ப்பன அதிகார மேலாண்மைக்கே வழிவகுத்தது. இந்தியம், தேசியம் என்ற தளத்தில் பல்வேறு மொழிவழி தேசிய இனங்களை உரிமையற்றவர்களாக்கும் பணியை தொடர்ந்தது பார்ப்பனீயம். 1920 களில் அரசு ஆணை வடிவில் உருப்பெற்ற மிகச் சிறிதளவான ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகள் பறிக்கப்பட்டதே, இந்திய சுதந்திரத்தின் அதிகாரத்தை தன்னகப்படுத்தி விட்டிருந்த பார்ப்பனீயத்தின் முதல் கொடை. அதை மீண்டும் பெறவே பெரும் பெரியார் தலைமையில் ஒரு போராட்டம் நடத்த வேண்டியதானது. இந்த முறை பெற்ற முன்னுரிமைகள், பெரும்பான்மை சமூகங்களின் எண்ணிக்கை பலத்திற்கு ஏற்ற வகையில் இல்லையெனினும் மிகச் சிறிய அளவிலேனும் பயன் தருவதானது. ஆட்சிக்கு உள்ளும், வெளியேயும் இருந்தபடி திராவிட அரசியல் தொடுத்த கணைகள் மாநில அளவில் இடஒதுக்கீடு மேம்பட்டபடி இருக்க உதவியது. சொல்லப் போனால் இந்தியாவின் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் மாதிரி மாநிலமானது தமிழ்நாடு. ஆனாலும் இந்த சமூகநீதிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும், அதனை ‘தரம்’ என்ற பார்ப்பன உன்னதத்திற்கெதிரானதாகவும் தவறவில்லை பார்ப்பனீயம். இந்தப் போர் இன்னும் ஓய்ந்தபாடில்லை. கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் உச்சநீதிமன்றத்தையும், தில்லியின் ஆட்சியதிகார தலைமையையும் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆரிய சனாதனப் பார்ப்பனீயம் எளியவர்க்கான இந்த குறைந்தபட்ச உரிமைகளை பறிப்பதையே குறியாகக் கொண்டுள்ளது. விடுதலை பெற்றதான இந்தியாவின் நவீன வரலாறும் அனைவருக்கும் வாக்குரிமை என்ற தேர்தல் அரசியல் வழியாக பெற்ற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அரசியல் அதிகாரத்தின் வழியாகச் சாத்தியமான உரிமைகளை மட்டுப்படுத்தும், இல்லாமலாக்கும் பார்ப்பன/ உயர்சாதிகளின் ஆட்சியதிகார நடவடிக்கையாகவே உள்ளது. அதன் உச்சம் பார்ப்பனீயம் கண்டடைந்த இந்துத்துவ ஆட்சி. இந்திய சுதந்திரத்திற்கு முன்னரே ஆங்கிலேயர் தாள்பணிந்து ‘இந்து ராஷ்ட்ரா’ வை அவர்கள் தயவில் பெற்றுவிடத் துடித்த கோல்வர்கர், சவர்க்கார் கனவை மெய்படுத்தத் துடிக்கிறது இன்றைய பாஜக / ஆர்.எஸ்.எஸ். அரசு. இன்று இந்துத்துவா ஆட்சி அதிகாரத்தில். இதுவரையான மீட்புகளை ஒன்றுவிடாமல் சிதைப்பதையே தினசரி நடவடிக்கையாக்கிக் கொண்டுவிட்டது இந்த சனாதன பாசிச அரசு. நிற்க.

திராவிட ஆட்சி எனும் பொதுப் பெயர் வைத்து அழைக்கப்பட்டாலும், அதன் ஆட்சிப் பண்புகளில் பொதுமை ஒருபோதும் இல்லை. எம்ஜிஆரும், ஜெயலலிதாவுமே, பார்ப்பனிய கருத்தியல் உந்துதல் சார்ந்து பலநடவடிக்கைகளை எடுத்தவர்கள்தான். அவற்றில் பல அப்படியே திராவிடக் கருத்தியல் நிலைப்பாட்டை நீர்த்துப் போகச் செய்ததும் உண்டுதான். ஆனாலும் ஓரிரு சமயங்களில், அவர்களது திட்டங்களின் / செயல்பாட்டின் எதிர்விளைவுகள் தேர்தல் தோல்விகளான போது, அவற்றை கைவிட்டதும், மாற்றிக் கொண்டதும் உண்டு. 1991-96 ஆட்சி காலத்தில் 69% இடஒதுக்கீட்டை உறுதி செய்த ஜெயலலிதா அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஆதரித்ததும் நடந்தது. தனது சொந்த மாதிரியான நம்பிக்கைவாத / சடங்குமயமான இந்துத்துவத்தை ஊரறிய நடத்தியவர், பாஜக பாணி இந்துத்துவத்தை எதிர்ப்பதை கவனமாகச் செய்தார் ஜெயலலிதா. அதாவது மென் இந்துத்துவம் எதிர் கடும் இந்துத்துவம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்றிருக்கும் தற்போதைய ஆட்சியை, ‘திராவிட ஆட்சி’ என்பது அவமானம் என்பதாகக் கருதவேண்டியதாகும். இதில் வேடிக்கை என்னவெனில் இதுவரை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பதைக் கூடத் தவிர்க்கும் அளவிற்கான நபர்தான் பழனிச்சாமி. இந்த அடிமை ஆட்சியின் ஒரே லட்சியம், ஆட்சிக்காலத்தை தக்க வைத்து லாபமடைவது. அதன் விளைவு, பாஜகவின் அனைத்து திட்டங்களையும் சிரமேற்கொண்டு நடத்துவது என்பதாகிவிட்டது.

நீட் தொடர்பான ஒன்றிய ஆட்சியாளர்களின் எதிர்மறை முடிவை ஒளித்து வைத்து, இரண்டு ஆண்டுகளாக ‘கடிதம்’ எழுதுவதாக கதை விட்டவர்கள் இந்த அடிமைகள். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் அரசுசார் இலவச பொதுக்கல்விக்கு சாவுமணியடிக்கும் ‘சனாதனக் கொள்கைக்கு’ அடிபணிந்துள்ளார்கள். இந்த ஆட்சியாளர்களின் இழிசெயல் என்னவெனில் , பாஜக ஒன்றிய அரசின் அழிவுக் கொள்கை அனைத்திற்கும் சரணடைவது மட்டுமே. இந்த சரணடைதல் போக்கில் அழிந்து போயிருக்கும் விடயங்கள் பெரும்பான்மையானவை கல்வி தொடர்பானவை என்பதுதான் வேதனை. அமைச்சர்கள் முதலில் பரிசிலிக்கிறோம் என்பார்கள், தொடர்ந்து இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படாது என்பார்கள். ஒரு சில நாட்களில் ஆணையொன்று அதன் அமலாக்கத்தை அறிவிக்கும். இதுவே வாடிக்கையாகிவிட்டது. ஆக, இந்த அரசிடம் எந்தவித கொள்கை நிலைப்பாடுகளோ, மக்கள் உரிமைகள் சார்ந்த அக்கறையோ கிஞ்சித்தும் இல்லை.இந்த ஆட்சிக்காலம், திராவிட ஆட்சி எனப்படும் ஆட்சித்தடத்தினை முற்றிலுமாக அழித்தொழித்துவிட முனைந்துவிட்ட ஆட்சி.

கல்வி உரிமைச் சட்டமும் அதன் திருத்தங்களும்

கல்வி (பள்ளிக் கல்வி) இந்திய சுதந்திரத்தின் போதும், அதைத் தொடர்ந்து 1976 வரையிலும் மாநில உரிமைகள் பட்டியலில் மட்டுமே இருந்தது. இந்திரா அம்மையாரின் கொடையான நெருக்கடிநிலைக் காலத்தில் அது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. தேசியம் என்ற ஒற்றை அதிகார மையத்தை உருவாக்க ‘கல்வி’ என்ற ஆயுதம் வலுவானது என்பதை அனைத்துவிதமான சர்வாதிகார சக்திகளும் அறியவே செய்கின்றன. ஒன்றியத்தில் குவிக்கப்படும் அதிகாரம் ஒருபோதும் நாட்டின் பொதுநலன் கருதியதில்லை. அதிகாரத்தை கைப்பற்றி ஏதேச்சாதிகாரம் செய்ய விளையும் மனத்திற்கான வல்லாயுதம் மட்டுமே. கல்வி ஒன்றியத்தின் அதிகார வரம்பிற்குள் கொணரப்பட்டதால் ஏற்பட்ட நலன்களைவிட தீமைகளே அதிகம். இந்தப் போக்கின் வரலாற்றுச் சுவடுகளை சுருக்கமாகப் பார்க்கலாம். 1992ஆம் ஆண்டு, அரசியலமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகள் சட்டவிதி எண் 21இல் கீழ் கல்வி அடிப்படை உரிமையாக ஆக்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, 2002ஆம் ஆண்டு விதி எண் 21 ஏ என்ற அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி (86ஆவது சட்டத்திருத்தம்) சட்டமானது. இதன்படி ஆறிலிருந்து பதினான்கு வயது வரையான சமூகப் பொருளாதார ரீதியான பின் தங்கிய குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டுமென்பது சட்டரீதியான அடிப்படை உரிமையானது.

2009ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் இந்த இலவச கட்டாயத் துவக்கக் கல்வி தொடர்பில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இதன் அடிப்படை நோக்கங்கள் ஓரளவிற்கு பாராட்டிற்குரியதுதான். இந்தச் சட்டத்தின்படி, ஒரு குழந்தையின் இருப்பிடத்திற்கு அருகாண்மையிலிருக்கும் அனைத்துவகைப் பள்ளிகளிலும் (அரசு உதவி பெறும் மற்றும் பெறாத சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர்த்து) அந்தக் குழந்தை கல்வி கற்கும் உரிமை அடிப்படையானது. அதற்காக 25% இடங்களை அந்தப் பள்ளிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏழை குழந்தைக்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை அரசே வழங்கும். இந்தக் குழந்தைகளை பிற குழந்தைகளின் திறனோடு ஒப்பிடும் அளவிற்கு உயர்த்துவது பள்ளி மற்றும் ஆசிரியர்களின் கடமை. இந்தக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மிக அடிப்படையான விதி, அதுவரை பள்ளி செல்லாத குழந்தையையும், சிறப்பு கவனம் செலுத்தி அந்தக் குழந்தையின் வயதுக்கேற்ற வகுப்பிற்கு தகுந்தவராக்குவது பள்ளி மற்றும் ஆசிரியர்களின் கடமை. இன்னொரு மிக முக்கியமான கூறு இந்த ஆறு முதல் பதினான்கு வயதுவரையான குழந்தைகளை நுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வு என்பவற்றின் வழியாக வடிகட்டும் நடவடிக்கை கூடவே கூடாது. அதற்காக எட்டாவது வரை தேர்வு வழியாக தடை செய்யப்படக்கூடாது.

அனைத்து இந்தியச் சட்டங்கள் போலவே, இத்தனை வரையறைகள் இருந்தும் , கட்டாயக் கல்விச் சட்டத்தின் வழியாக சிபிஎஸ்சி மற்றும் பிரபல மெட்ரிக் பள்ளிகளில் பயனடைந்த குழந்தைகள் வெகுசிலரே. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, நடைமுறைப்படுத்தலை கண்கானிக்க என பல அரசுசார் அமைப்புகள் உருவாக்கப்பட்டும், அவற்றின் செயல்பாடுகளால் பயனடைந்தோர் வெகுசிலர் என்பதே கசப்பான உண்மை. சாதி, மத பேதங்கள் நிறைந்த சமூகத்தில் , ‘ இலவசம்’ என்ற அடையோடு ஒரு வளமான சூழலில் கல்வி கற்பது என்பது தீண்டாமையின் அத்தனை ஒடுக்குதலையும் கொண்டிருப்பதாகவே இருக்கும். அதையும் கடந்து அதன்வழி பலன் பெறுவது கடுமையான சவால். இளம் சிறார் இந்த சவால்களை எதிர்கொள்ளும் மனத்திண்மையை தரும் ஆசிரியர் வேண்டும். இவையெல்லாம் அபூர்வங்கள் என்பதே கள நிலவரம்.

எளியவர்களின் உரிமைகளை நிலைநாட்ட உயரும் கரங்களை விட அவற்றைப் பறித்துக் கொள்ள பரபரத்துக் கிளம்பும் கரங்களே அநேகமானவை. கட்டாயக் கல்விச் சட்டம் உருவானதால் நிகழ்ந்த நேர்மறை சமூகமாற்றத்தைவிட எதிர்மறை மனநிலையே வேகமாக வளர்ந்தது. வழக்கம் போல, இந்தச் சட்டத்தால் பயனடைந்தோர் பட்டியலை, எண்ணிக்கையை, சதவீதத்தை வைத்து விவாதிப்பதை விடுத்து, இதனால் விளைந்ததாக கருதப்பட்ட ‘தர வீழ்ச்சியே’ பிரதான விவாதப் பொருளானது. அதாவது அந்தச் சட்டத்தின் நோக்கத்தை முழுமையாக்க முனைவதைவிட, அதன் விளைவாக கல்வித்தரம் வீழ்ந்து விட்டது என்ற வாதத்தின் வழியாக அந்த உரிமையைப் பறிப்பதையே குறியாகக் கொண்டது பார்ப்பனீயம். இந்துத்துவ மோடி அரசின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் மிக மிக முக்கியமானது கல்விமுறையை சனாதனமயமாக்குவது. இந்த சங்பரிவார கவனம் நிரந்தரமானது. வாஜ்பேயி தலைமையிலான அரசிலேயே முரளிமனோகர் ஜோஷி அவர்கள் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக முயன்றவை நிறைய. ஆனால் அந்த ஆட்சி அறுதிப் பெரும்பான்மை கொண்ட ஆட்சி இல்லையென்பதால் அவை பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. பல்கலைக்கழகக் கல்வியில் ஜோதிடம், வானவியல் சாஸ்திரம் முதலியவற்றை திணிக்க முயன்ற அளவோடு நின்றது. இந்த முறை மோடி அரசு நாட்டின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களை அழித்தொழிக்கப் புறப்பட்டிருக்கும் வேகமும், முறையும் பயங்கரமானவை. தில்லி ஜாமிய மாலியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் என இந்தியாவின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்கள் ஒடுக்கப்படுகின்றன. காவல்துறை அத்துமீறி நூலகத்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்துகிறது. போராட்டங்கள் வலுவடைந்து தொடர்ந்தபடி உள்ளது. அமீத் ஷா முன்னெடுப்பில் நிகழும் எதுவும் கொடூரமானவையாக இல்லாமல் இருந்தால் மட்டும்தானே ஆச்சர்யம். ஆனால் வேடிக்கை பாருங்கள், ஸ்மிதி இரானி துவங்கி தற்போதைய மனிதவளத்துறை அமைச்சர் வரை அமைச்சர்கள் யாரென்பதே கவனத்திற்குரியது, குறைந்தபட்ச கல்வித் தகுதி இல்லாதவர்களே அங்கு தலைமை தாங்குகிறார்கள். அதனை யார் பின்னிருந்து இயக்குகிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. ஆர்.எஸ்.எஸ். நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது மனிதவளத்துறை. கோல்வால்கரும், சவர்க்காரும் கண்ட சனாதன மேலாண்மைக் கனவை உறுதிப்படுத்துவதே அவர்கள் நோக்கம். அநேகமாக பாதிவழி கடந்துவிட்டதாகவே தோன்றுகிறது. அவர்களது இறுதி யுத்தத்திற்கான களம் கல்விப்புலமே, அதற்கான சாசனம் (அவர்களது திட்டவரையறை) புதிய கல்விக் கொள்கை என்ற வடிவில் வடிக்கப்பட்டுவிட்டது. ஆம், புதிய கல்விக் கொள்கைதான் இன்றைய மகத்தான சவால்.

புதிய கல்விக் கொள்கை எனும் சனாதனக் கொள்கை.

மோடியின் இந்துத்துவ ‘ஒற்றையாட்சி’ புதிய கல்விக் கொள்கை தொடர்பில் ஒரு வரைவறிக்கையை வெளியிட்டு, முப்பது நாட்களுக்குள் அதுபற்றிய கருத்துகளை அனுப்ப கால அவகாசம் கொடுத்தது. ஒரு நாட்டின் எதிர்காலக் கல்விக் கொள்கையை பொதுவெளி அறிந்து கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசம் முப்பதுநாள். முடிந்தவரை அந்த அறிக்கை குறித்த கடுமையான விமர்சனங்கள் விவாதிக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். அது தொடர்பான பல்வேறு கருத்துகளும் ஒன்றிய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையென பெயரிடப்பட்டிருந்தாலும், அதன் ஒரே கொள்கை, கல்வி அத்தனை மாற்றங்களையும், முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் பிரதமர் தலைமையிலான ‘ராஷ்ட்ர சிக்‌ஷா அயோக்’ (தேசிய கல்வி ஆணையம்) எனும் அமைப்பிற்கு மட்டுமே. ஏற்கனவே இந்தியப் பொருளாதாரத்தை நிர்மூலமாக்கி சாதித்திருக்கும் ‘நிதி அயோக்’ பாணியிலான அமைப்பு. ஒட்டு மொத்த அதிகாரத்தையும் ‘ஒற்றை’ புள்ளியில் குவிக்கும் இந்துத்துவ ராஷ்ட்ரத்தின் இன்னொரு கனவுத் திட்டம்.

புதியக் கல்விக் கொள்கையின் சில முக்கியமான விதிகளே, அதன் நோக்கத்தை அம்பலமாக்கப் போதும்.

1) துவக்கக் கல்வி மூன்று முதல் எட்டு வயது வரை-குருகுலம் மற்றும் மதரஸா மாதிரியில்.

2) மூன்று, ஐந்து, எட்டு வகுப்புகளில் தேசிய(!) தகுதிகாண் தேர்வு.

3) எட்டாவது வகுப்பு தேசியத் தேர்விற்குப் பின் எதிர்கால கல்வி / தொழில் குறித்த திட்டமிடலும், தீர்மானமும்.

4) மூன்று, ஐந்து, எட்டு தேசிய தேர்வுகளில் தேர்ச்சியடைய முடியாதவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, சிறப்புப் பயிற்சி பெறுவர்.

5) மூன்றாவது வகுப்பு முதலே மும்மொழிக் கல்வி.

6) பல்கலைக் கழகங்களில் அனுமதிக்காக தேசிய பொதுத் தேர்வு. பட்டயத் தேர்விற்குப் பிறகும் தேசிய பொதுத் தேர்வு.

7) மருத்துக்கல்வி பெற நுழைவுத் தேர்வு (NEET), எம்பிபிஎஸ் தேர்ச்சி முடிந்த பிறகு மருத்துவ சேவை துவங்க தேசிய பொதுத் தேர்வு (NEXT).

8) பல்கலைக்கழகங்கள் மூன்று வகை கல்லூரிகளைக் கொண்டிருக்கும். ஒன்று ஆய்வுக் கல்லூரிகள், இரண்டு கொஞ்சம் ஆய்வுக் கொஞ்சம் பாடத்திட்டம். மூன்று முழுமையாக பாடத்திட்டம். கல்லூரிகளே பட்டம் வழங்கிவிடும்.

9) இந்த வகை கல்விமுறை அனைத்தும் பிரதமர் தலைமையிலான ராஷ்ட்ர சிக்‌ஷா அயோக் எனும் அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

இந்தக் கல்விக் கொள்கை விதிகளில் விகாரமாகத் துருத்தி நிற்பது ‘தேசியப் பொதுத் தேர்வு’ என்ற கூறு. அனைத்து நிலைகளிலும், அதாவது மூன்றாவது துவங்கி கல்வி கற்றலின் இறுதிவரை ‘தேசிய பொதுத் தேர்வு’.பொதுத் தேர்வு எனும் இதன் நோக்கம்தான் என்ன? எதற்காக ‘ஒற்றை’ பொதுத் தேர்வு. இதுவரையான பொதுத் தேர்வுகளிலிருந்து இந்தத் தேர்வு எந்தவகையில் மாறுபடுகிறது. இதுவரையான பொதுத் தேர்வுகள் ‘தேசியமாக’ இல்லை என்பது முதல் வேறுபாடு. இரண்டாவது ஒருநிலைக் கல்வியை முடிப்பதை ‘பொதுத் தேர்வு’ நிறைவு செய்தது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலம் முதல் பலவிதமான பள்ளிக் கல்வி தொடர்பான பொதுத் தேர்வுகள் இருந்துள்ளன. ஆரம்பக் காலங்களில் ஐந்தாவது வரையான துவக்கக் கல்வி நிறைவிற்கே தேர்விருந்திருக்கிறது. அதேபோல் நடுநிலைப்பள்ளி நிறைவின் போதும் தேர்விருந்திருக்கிறது. அதற்குபின் உயர்நிலைப்பள்ளி இறுதியில் ஒரு தேர்வு என இருந்திருக்கின்றன. ஆனால் இவையனைத்தும் ஒருநிலை கல்விமுறை முடிவின் போது வைக்கப்பட்டவை. அதைவிட கவனத்திற்குரியது, இந்த ஐந்தாவது, எட்டாவது தேர்வுகளைத் தொடர்ந்து அவர்கள் கல்வி நிறைவடையும் வாய்ப்பும், தொடர்ந்து ஆசிரியப் பணிக்குச் செல்லும் சாத்தியமும் இருந்தது. ஐந்தாவது படித்துத் தேறியவர்கள் ‘லோயர் கிரேடு’ ஆசிரியர்களாகவும் , எட்டாவது தேறியவர்கள் ‘ஹையர் கிரேடு’ ஆசிரியர்களாகவும் ஆக வாய்ப்பு இருந்தது. இது தவிர இதர பணி வாய்ப்புகளும் அவர்களுக்கு இருந்தது. எட்டாவது வகுப்பு தேர்வான ‘இ.எஸ்.எல்.சி’ ஏறத்தாழ 1960கள் வரை தொடர்ந்தது என நினைவு. இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அனைத்துப் பொதுத் தேர்வுகளும் பள்ளியை விட்டுச் செல்லும் சான்றிதழ் கொண்டவை என்பது (School Leaving Certificate).

இப்போதைய ஐந்தாம், எட்டாம் வகுப்பு தேர்வுகளுக்கு அந்தவித பண்பு இல்லை. அந்தத் தேர்வின் நோக்கம் ‘திறனறிதல்’ மட்டுமே.தேர்ச்சி பெறாதவர்களை திறனற்றவர்களாக அறிவித்து நிறுத்தி வைப்பது மட்டுமே அதன் பயன். என்ன விபரீதம். இடைநிற்றல் என்ற சமூக அவலத்தை களைய கொண்டு வரப்பட்ட தடையில்லா கல்வியை தடை செய்ய ஒரு புதிய கொள்கை. தேர்வு, தோல்வி, அதே வகுப்பில் தொடர்தல் என்பது குழந்தைகள் மீது செலுத்தும் மன அழுத்தம் இவர்களுக்குப் பொருட்டில்லை போலும். வருடத்திற்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு என உறுதியளித்த மோடி வேலை வாய்ப்புகளை அறவே ஒழித்ததுதான் நடந்தது. இந்த நிலையில் ஐந்தாவது , எட்டாவது வகுப்பில் தோற்று பள்ளியை விட்டு வெளியேறுபவர்கள் நிலை என்ன ? கலைஞர் போன்ற சமூக சிந்தனையாள ஆட்சியாளர்கள் பத்தாவது வரை வந்து தேற முடியாதவர்களுக்கான கடைநிலை ஊழியர்கள், காவலர்கள், ராணுவப்பணி (ராணுவ வீரர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாட்டின் பங்கு கணிசமானதாக இருக்க இதுவும் காரணம்) போன்ற வேலைவாய்ப்பு அனைவரும் பெறட்டும் என அளித்த வாய்ப்பு அந்த இடைநில்லாக் கல்வி. பக்கோடா விற்கும் வேலைவாய்ப்பை பரிந்துரைத்த மோடிக்கு அதெல்லாம் புரிய வாய்ப்பில்லை.

தகுதி, திறன் எனும் பார்ப்பனீய சனாதனச் சொல்லாடல்கள் வழியாக பெரும்பான்மையாக கல்வியற்ற சமூகமாக இருக்கும் இந்தியர்களிடையே என்ன மாற்றத்தை இந்த புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்த முடியும்.ஏற்கனவே பார்ப்பனியத்தால் கல்வி மறுக்கப்பட்டவர்களை மீண்டும் அந்தப் பிரதேசத்தை விட்டே விரட்டுவதைத் தவிர வேறென்ன நடக்கும். கல்விமுறை பற்றிய அக்கறையும் வாசிப்பும் உள்ளோர் பிரேசில் நாட்டின் கல்விச் சிந்தனையாளர் பாலோ பெரெய்ரி( றிகிஹிலிளி திஸிணிமிஸிணி ) அவர்களின் ‘ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி, ( றிணிஞிகிநிளிநிசீ ளிதி ஜிபிணி ளிறிறிஸிணிஷிஷிணிஞி ) வாசித்திருக்கலாம். கல்விமுறை, அதிலும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் கல்வி போதிக்கப்பட வேண்டிய முறை குறித்த மிக விரிவான ஆய்வுப் பெட்டகம். அதனை சாராம்சப்படுத்துவது பிழையானதும், முறையற்றது என்றாலும், அறியாதவர்கட்கு அறிமுகம் என்ற வகையில் சிலவற்றை கூறலாம்.

ஒடுக்கப்பட்டோர் விடுதலையை அவர்கள் மட்டுமே தேடிக் கொள்வதே சாத்தியம். இன்னும் ஆழமான பொருளில் ஒடுக்கப்பட்டோர் விடுதலை, அவர்களை ஒடுக்குகிறவர்களுக்குமான விடுதலையாகவும் இருக்க வேண்டும். ஒடுக்கப்பட்டோர் விடுதலையை ஒடுக்குவோரால் ஒருபோதும் உத்தரவாதப்படுத்த இயலாது. ஒடுக்குவோரால், தங்களையும், தங்களால் ஒடுக்கப்படுவோரையும் விடுவிப்பதற்கான சக்தியை உருவாக்கிக் கொள்ள இயலாது. ஒடுக்கப்பட்டோரின் பலவீனத்தினின்று ஊற்றெடுக்கும் சக்தி மட்டுமே ஒடுக்குபவனையும் சேர்த்து விடுவிப்பதற்கான வாய்ப்பாக அமையும்.ஒடுக்கப்படுபவர் பலவீனத்தைக் கடக்க ஒடுக்குபவனின் இளக்கத்தை வேண்டுவது ஒரு பொய்யான இரக்கத்தையே அவனிடமிருந்து பெரும். இதைவிட இந்த பொய் இரக்கத்தை தொடர்ந்து தக்க வைக்க ஒடுக்குபவன், தன் ஒடுக்குதலை தொடர வேண்டியதாகும். தொடரும் சமூக சமமின்மையே இரக்கத்தை தக்க வைக்கும் குணாம்சம். அது ஒரு போதும் சமூக விடுதலைக்கான கருவி ஆக முடியாது.

உண்மையில் ஒடுக்கப்பட்டவர்கள் விளிம்புநிலை மனிதர்களோ அல்லது அதற்கு வெளியே வாழ்ந்தவர்களோ அல்ல. அவர்கள் எப்போதும் உள்ளே இருந்தவர்கள்தான். இங்கிருந்த அமைப்பே அவர்களை இந்த அமைப்பிற்கு வெளியே இருப்பவர்கள் ஆக்கியது. எனவே இதற்கான தீர்வு அவர்களை இந்த ஒடுக்குகிற அமைப்பிற்குள் இணைத்துக் கொள்வதல்ல மாறாக, இந்த அமைப்பின் ஒடுக்குகிற தன்மையை மாற்றுவதன் மூலம் அவர்கள் அவர்களாகவே தொடர அனுமதிப்பதுதான்.இந்தவிதமான அமைப்பு மாற்றம் ஒடுக்குகிறவர்களின் நலனிற்கு உகந்ததல்ல. எனவேதான் ஏற்கனவே இருக்கும் கற்றல் முறை வன்முறைக்குள் அவர்களை திணிக்க முனைவார்கள்.

இந்துத்துவ பார்ப்பனீயத்தின் ‘திறன் மேம்பாடும் ‘இஃதே போன்றதுதான். பல நூற்றாண்டுகளாக கல்வியை மறுத்தவர்கள், மறுக்கப்பட்டவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த ‘பொதுத் தேர்வு’ என்பது போலி இரக்கம் மட்டுமே. இந்த சனாதனிகள் கல்வி வாய்ப்பை மறுக்கும் நடவடிக்கையை தொடர்வதன் வழியாகவே ‘பொங்கி வழியும் இந்துத்துவ இரக்கத்தை’ காட்சிப்படுத்த முடியும். அதை தொடர்வதற்கான வழியே ஐந்தாவது மற்றும் எட்டாவது வகுப்புத் திறன் தேர்வு.. அதேபோல் ஒடுக்கப்பட்டோரின் திறன் வளர்ச்சியை தங்கள் அளவுகோலிற்குள் அடக்க முனைபவர்கள், அவர்களை தங்கள் ஒடுக்கும் அமைப்பின் வகைக்கு மாற்ற / வளைக்க முனைவது அயோக்கியத்தனம். ஒடுக்கப்பட்டோரை வெளியே நிறுத்திய கல்விமுறையை மாற்றியமைத்து அவர்களை வெளியே நிறுத்தும் காரணிகளை இல்லாமலாக்குவதே சரியான வழி. திறனறியும் தேர்வுமுறை, அதிலும் தேசிய பொதுத் தேர்வுமுறை , ஏற்கனவே நிலவும் ஒடுக்குதலை இன்னும் கடுமையாக்கி ஒடுக்கப்பட்டோரை முற்றாக விலக்கி விடும் படுபாதகம் மட்டுமே.

இதனை உத்தரவாதப்படுத்தவே ஒரே பாடத்திட்டம், மும்மொழிக் கல்வி , கற்பிக்கும் முறை, கற்றல் முறை என அனைத்தையும் தரநிர்ணயம் செய்வதான போக்கில் ‘ஒற்றை’ ஆக்குவது. அதாவது இந்தியாவிற்கான ஒரே பாடத்திட்டம். ஒரே தேர்வு முறை. இவர்கள் நோக்கம் புரிகிறது, ஆனால் நூற்றிமுப்பது கோடி மக்கள் தொகை கொண்ட சமூகத்தை ஒரு ஆணையத்தின்கீழ் நடத்துவது என்பது எவ்வளவு அராஜகமான நடவடிக்கை என்பதை காலம் அம்பலப்படுத்தும். காஷ்மீரத்தைப் போல அனைத்து மாநிலங்களையும் கலைத்துவிட்டு, யூனியன் பிரதேசங்களாக ஆக்கி தங்களது நேரடி ஆணைக்குள் கொண்டு வரும் ஆவல் / வெறிதான் அதிபயங்கர ஆபத்தானது. அதிகாரத்தை ஒரு நபரிடம் குவிக்க வெறி கொண்ட நடவடிக்கை அசலான பாசிசமன்றி வேறில்லை. இந்தப் பாசிசம் எந்தவிதமான சுதந்திரவாதத்தையும் தனக்கான அச்சுறுத்தலாகவே கருதும். எந்தவித ஆட்சேபமும், தேச துரோகமாகவே கருதி நசுக்கப்படும்.

அதிலும் கல்வி என்ற தளத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ‘கட்டாய இலவசக் கல்வி’ என்பதை முற்றாக ஒழித்துவிடுவதே புதிய கல்விக் கொள்கை என்பதில் ஐயமில்லை. எட்டாவது வரை வடிகட்டும் தேர்வுகூடாது என்றது ‘இடைநிற்றல்’ என்ற போக்கை கட்டுப்படுத்துவதற்காக செய்யப்பட்டதே. ஆனால் மூன்றாவது வகுப்பிலேயே தேர்வு என்ற அச்சம் வழி அடித்தட்டு சமூகங்களை கல்வி பெறுவதிலிருந்து விரட்டும் சனாதன நடவடிக்கையே இது.

ஒரு எளிமையான / நேரடியான புரிதலில் இந்தக் கல்விக் கொள்கை வழியாக முற்றிலுமாக துவக்க கல்வி முதல் உயராய்வு கல்வி வரை அனைத்தும் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும். அதாவது கல்வி இனி மாநில உரிமை இல்லை. துவக்கக் கல்வித் தேர்வை மூன்றாவது , ஐந்தாவது , எட்டாவது, பத்தாவது, பதினொன்றாவது, +2, நீட், நெக்ஸ்ட் அனைத்தும் தேசியத் தேர்வு ஆணையக் கட்டுப்பாட்டில். கல்லூரி நுழைவுத் தேர்வும் அதேவிதம். அப்படியானால் பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் செயலிழந்து போகும் அல்லது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படத் துவங்கும். மோடி / அமீத் ஷா ஆகியோரின் மூர்க்கம் அறிந்தவர்களுக்கு ஒன்று நன்றாகத் தெரியும். அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் புதிய கல்விக் கொள்கை சட்டவடிவம் பெற்று விடும்.இவர்களின் நோக்கம்தான் என்ன? இத்தனை அடிப்படையான மாற்றங்கள் வழியாக என்ன சாதிக்க நினைக்கிறார்கள். இந்தியாவின் பன்மையான இன,மொழி, கலாச்சாரத்தை ஒழித்து ‘ஒற்றை’ இந்துத்துவா கலாச்சாரமாக்குவது,.

‘இந்துத்துவ ராஷ்ட்ரா’வின் உச்சப்பட்ச வெற்றியே சமூகத்தை பிளவுண்டதாக்கி, சமநிலையற்ற வாழ்க்கை தரத்தை சாசுவதமாக்குவதே. அதுதானே பிறப்பால் மேல் கீழ் என்ற மனுநீதியை நிறுவும் வகை.