நாடெங்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் இந்தியத் தேசியக் கொடி அசைகிறது. இந்தியக் குடியரசு போற்றப்படுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை வாசிக்கப்படுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் என்ற முழக்கம் எழுப்பப்படுகிறது.

மோதி அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் பல வகையிலும் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்பதில் எள்முனையளவும் ஐயமில்லை. ஆனால் அது மட்டும்தானா?

1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் முன்பே பல முறை — 1986, 1992, 2003, 2005, 2015 ஆண்டுகளில் திருத்தப்பட்டுள்ளது என்றாலும், இம்முறைதான் இவ்வளவு எதிர்ப்புக்கு இலக்காகியுள்ளது. திசம்பர் 12ஆம் நாள் நாடாளுமன்றத்தில் இறுதியாக இயற்றப்பட்ட திருத்தச் சட்டம் ஆறு பிரிவுகளைக் கொண்டிருந்தாலும். மத அடிப்படையில் பாகுபாடு காட்டும் விதிமுறைதான் பூசலுக்குக் காரணமாகியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியுரிமைக்குத் தகுதிபெறக் குறைந்தது 11 ஆண்டுக் காலம் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் என்ற பழைய கட்டுத்திட்டம் தளர்த்தப்படுகிறது. இந்தத் திருத்தச் சட்டம் செயலுக்கு வந்த பின் 6 ஆண்டுக் காலம் வசித்திருந்தாலே போதும். ஆனால் இந்தச் சலுகை இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும், பௌத்தர்களுக்கும், ஜைனர்களுக்கும், பார்சிகளுக்கும், கிறித்தவர்களுக்கும் மட்டும்தானே தவிர முசுலீம்களுக்குப் பொருந்தாது.

மதத்தை வைத்துப் பாகுபாடு காட்டும் இத்தகைய சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் சமயச் சார்பின்மைக் கொள்கைக்கு முரணானது என்பதும், மக்களை மத அடிப்படையில் கூறுபோடும் இந்துத்துவ அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதும் எதிர்ப்புக்கு முதற்காரணம். நேபாளமும் பூட்டானும் சிறீலங்காவும் அண்டை நாடுகளாய் இருப்பினும் அவை இந்தச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பது இரண்டாம் காரணம்.

இந்திய அரசமைப்பின் முகப்புரை “இந்திய மக்கள் ஆகிய நாம்” (We, the people of India) என்று தொடங்குகிறது. இந்திய மக்களா? இந்தியாவின் மக்களினங்களா? என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இறையாண்மை அல்லது அரசுரிமை மக்களைச் சாரும் என்பதில் ஐயமில்லை. இந்திய மக்களாகிய நாம் இந்தியாவைக் குடியரசாக அமைத்துக் கொள்கிறோம். எத்தகைய குடியரசு? இறைமையுள்ள, குமுகிய, சமயச் சார்பற்ற, குடியாட்சியக் குடியரசு! (SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC!) அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் இறைமையுள்ள குடியாட்சியக் குடியரசு (SOVEREIGN  DEMOCRATIC REPUBLIC) என்று மட்டும் இருந்தது. நெருக்கடிநிலைக் காலத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் வாயிலாக குமுகியமும் (சோசலிசம்) சமயச் சார்பின்மையும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இந்தியா சமயச் சார்பற்ற குடியரசு என்பதை மட்டும் எடுத்துக் கொண்டால், குடியுரிமைத் திருத்தச் சட்டம் சமயச் சார்பின்மைக்குப் புறம்பானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் சமயச்சார்பின்மைக்கு மட்டும்தான் எதிரானதா? இந்தியா ஒரு குமுகியக் குடியரசு (சோசலிசக் குடியரசு) என்று சொன்னால் “இந்த பூமி சிரிக்கும், அந்தச் சாமி சிரிக்கும்”! ஆனால் குடியாட்சியம் (சனநாயகம்), இறைமை, சமயச் சார்பின்மை என்ற தோற்றங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்திய அரசமைப்பு வரையப்பட்ட காலத்தில் இறைமையுள்ள குடியாட்சியக் குடியரசு என்றுதான் இருந்தது. ஆனால் இந்திரா காந்தி அம்மையார் நெருக்கடிநிலைக் காலத்தில் (1975-77) அரசமைப்புச் சட்டத்தில் செய்த திருத்தத்தின் வாயிலாக சமயச் சார்பின்மையும் குமுகியமும் முகப்புரையில் இந்தியக் குடியரசின் இலட்சணங்களாக நுழைக்கப்பட்டன.

ஆனால் இந்தத் திருத்தத்துக்கு முன்பே 1973ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றத்தின் 13 நீதியரசடங்கிய அரசமைப்புச் சட்ட ஆயம் (CONSTITUTION BENCH) இந்திய அரசமைப்பினுடைய அடிப்படைக் கட்டமைப்பின் கூறுகளில் ஒன்றாக சமயச் சார்பின்மையை வரையறுத்தது. இந்த அடிப்படைக் கூறுகளில் எதையும் நாடாளுமன்றத்தால் கூட திருத்த முடியாது என்று தீர்ப்புரைத்தது.

கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் வரையறுத்துச் சொன்ன மற்ற முகன்மைக் கூறுகளில் ஒன்று கூட்டாட்சி (FEDERATION) என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை இந்திய அரசமைப்பு கூட்டாட்சி என்றோ ஒற்றையாட்சி என்றோ அறிவிக்கவில்லைதான். இந்திய ஒன்றியம் என்பதை ஒரு பக்கம் பார்த்தால் கூட்டாட்சி மறு பக்கம் பார்த்தால் ஒற்றையாட்சி என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். அல்லது அரைக் கூட்டாட்சி அரை ஒற்றையாட்சி எனலாம். ஆனால் உச்சநீதிமன்றம் கூட்டாட்சிதான் இந்திய அரசமைப்பின் அடிப்படைத் தன்மை என்று சொல்லி விட்டது.

இந்தக் கூட்டாட்சித் தன்மைக்கு இப்போதைய குடியுரிமைத் திருத்தச்சட்டம் பொருந்துகிறதா என்பதுதான் நம்முன்னுள்ள கேள்வி.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் உறுப்பு சொல்வதாவது:

  1. பாரதம் என்கிற இந்தியா அரச மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும். (India, that is Bharath, shall be a Union of states).

ஷிtணீtமீs என்பதை மாநிலங்கள் என்று தமிழில் சொல்லலாம், அரசுகள் என்றும் சொல்லலாம். இரு தன்மைகளும் உண்டு என்பதை உணர்த்தவே அரச மாநிலங்கள் என்கிறேன். ஆட்சிப்புலம், குடிகள், ஆட்சி மூன்றும் இருந்தால்தான் அரசு. குமுக அறிவியல் அல்லது அரசியல் அறிவியலில் நாடுகள் என்று இவற்றைக் குறிக்கக் காணலாம். அமெரிக்க ஐக்கிய நாடுகள் (Unites states of America) யாவருமறிந்த எடுத்துக்காட்டு.

மாநிலம் என்ற சொல்லும் கூட குறுநிலம் என்பதற்கு மாறாக ஆளப்படும்போது இறைமையைக் குறிக்கும். குறுநிலம் என்பது பேரரசுக்குக் கப்பம் கட்டும் சிற்றரசு. அது இறைமையற்றது. மாநிலம் என்பது தற்சார்பானது, தன்னாட்சி கொண்டது. அது இறைமையுடையது. கூட்டாட்சி அமைப்பில் அந்த இறைமையில் ஒரு பகுதியை அது கூட்டரசுக்கு விட்டுக் கொடுக்கலாம். ஷிமீஜீணீக்ஷீணீtமீ stணீtமீ என்பதை தனியரசு அல்லது தனிநாடு என்று சொல்வதே இயல்பு.

Stateless என்பதை நாடற்ற என்றுதான் மொழிபெயர்க்கிறோம். stateless People என்றால் நாடற்ற மக்கள்.

State என்பது வெறும் province அன்று. மாகாணம் என்பது ஒரு ஆட்சியலகுதானே தவிர வேறன்று. அது விரிவடைந்த மாவட்டம் என்பதற்கு மேல் ஒன்றுமில்லை. 1935ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டம் மாகாணங்களையே தோற்றுவித்தது. 1950ஆம் ஆண்டின் இந்திய அரசமைப்புதான் அரசமாநிலங்களைத் தோற்றுவித்தது.

State என்பது மாநிலத்தைக் குறிக்க மட்டுமல்லாமல் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து இந்திய அரசைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. The state of Tamilnadu என்பது தமிழ்நாடு மாநிலம், ஆனால் Indian State என்பது இந்திய அரசு. உச்சநீதிமன்ற வழக்கு நடவடிகைகளில் மாநில அரசானாலும் நடுவணரசானாலும் இரண்டுமே Stateஎனப்படும்.

ஆக, State என்பதை மாநிலம் என்றாலும் சரி, அரசு என்றாலும் சரி, நாடு என்றாலும் சரி, அது இறைமையுடையது. இந்திய அரசமைப்பில் ஒன்றியம், மாநிலம் என்று இரு அரசுகள் உள்ளன. இரண்டும் இறைமை கொண்டவை. ஒவ்வொன்றும் சிலவகையில் தனிமுழு இறைமை கொண்டவை (Exclusive Sovereignty), வேறு சிலவகையில் இறைமையைப் பகிர்ந்து கொள்ளக் கூடியவை (Sovereignty shared between Union and States). அண்ணல் அம்பேத்கர் இதனைத் தெளிவாக்கியுள்ளார். மாநில அதிகாரப் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளில் மாநிலங்கள் இறைமை கொண்டவை என்று அவர் விளக்கமளித்தார்.

ஒன்றிய அதிகாரப் பட்டியலில் 17ஆவது இனம் இப்படிச் சொல்கிறது:

17) குடியுரிமை, குடிமையளிப்பு, அயலார் (Citizenship, naturalization and aliens).

ஆக, குடியுரிமை என்பது நடுவணரசு எனப்படும் ஒன்றிய அரசின் தனிமுழு அதிகாரமாகி விடுகிறது. இது மாநிலத்தின் இறைமையை மீறுவதாகும். ஒன்றியத்துக்கும் மாநிலத்துக்குமான இறைமைப் பகிர்வு என்ற கொள்கைக்கு முரணாகும். ஆகவே இது கூட்டாட்சிக் கொள்கைக்குப் புறம்பானது என்பது வெள்ளிடைமலை.

அரசு என்றிருந்தால் குடிமக்கள் இருந்தாக வேண்டும். குடிமக்கள் என்றிருந்தால் அரசு இருந்தாக வேண்டும். ஆகவே குடியுரிமை இல்லாத அரசு அரசே ஆகாது. ஒன்றியம் போலவே மாநிலமும் அரசுதான் என்றால் அதற்கும் குடியுரிமை இருக்க வேண்டும். மாநிலம் என்றாலும் அரசு என்றாலும் நாடு என்றாலும் குடியுரிமை இன்றியமையாத ஒன்று.

இந்திய உச்சநீதிமன்றம் கேசவானந்த பாரதி (1973) வழக்கில் கூறியுள்ளபடி இந்திய அரசின் கூட்டாட்சித் தன்மை இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பில் ஒன்று என்பது உண்மையானால் குடியுரிமையில் ஒரு பகுதியாவது மாநில அதிகாரமாக இருக்க வேண்டும். ஒற்றையாட்சி அமைப்பில்தான் அது நடுவணரசின் தனிமுழு அதிகாரமாக இருக்க முடியும். இந்தியாவை ஒற்றையாட்சி இலங்கையோடு ஒப்புநோக்கினால் இந்த வகையில் இரண்டும் ஒன்றாகவே இருக்கக் காணலாம்.

ஒருவர் நாடற்றவர் என்றால் எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாதவர் என்று பொருள். குடியுரிமை இல்லாதவர் என்றால் நாடற்றவர் என்று பொருள். (Stateless means without citizenship. Not being a citizen means to be stateless.) தமிழ்நாடு மாநிலம் என்றால் தமிழ்நாட்டுக் குடிமக்கள் இருந்தாக வேண்டும். தமிழ்நாட்டுக் குடிமக்களாக இருக்கும் போதே அவர்கள் இந்தியக் குடிமக்களாகவும் இருக்கலாம். இறைமையைப் பகிர்ந்து கொள்ளும் கொள்கைப்படி குடியுரிமையையும் பகிர்ந்து கொள்ளலாம். இதை இரட்டைக் குடியுரிமை என்று அழைக்கலாம். இந்திய அரசமைப்பின் இரண்டாம் பகுதி குடியுரிமை பற்றியதாகும். 5 முதல் 11 வரையிலான ஏழு உறுப்புகள் குடியுரிமை பற்றியவை. இவற்றில் முதல் மூன்று உறுப்புகள் 1947 நாட்டுப் பிரிவினையை ஒட்டி இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் குடிபெயர்ந்தவர்கள் பற்றியவை. அடுத்த எட்டாம் உறுப்பு அயல்நாடுவாழ் இந்தியர்கள் பற்றியது. ஒன்பதாம் உறுப்பு விரும்பி அயல்நாட்டுக் குடியுரிமையை ஏற்போர் இந்தியக் குடியுரிமையை இழப்பது பற்றியது. பத்தாம் உறுப்பு இந்தியக் குடிமக்களாக இருப்போரின் குடியுரிமை — நாடாளுமன்றம் சட்டமேதும் இயற்றுமானால் அதற்கு உட்பட்டு — தொடர்ந்து நீடிப்பது பற்றியது. இறுதியாக வரும் பதினொன்றாம் உறுப்பு குடியுரிமையை முறைப்படுத்த நாடாளுமன்றம் சட்டமியற்றுவது பற்றியது.

ஆக, இந்திய அரசமைப்புச் சட்டம் — நாட்டுப் பிரிவினையை ஒட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான புலப்பெயர்வு பற்றிய வழிவகைகள் தவிர — ஏதிலியர் தகுநிலை, குடியுரிமை உள்ளிட்ட ஏதிலியர் உரிமைகள் பற்றி மூச்சும் விடவில்லை. இந்தியா-பாகிஸ்தான் புலப்பெயர்வுக்குப் பின் எதிர்காலத்தில் இந்தியாவுக்குக் குடிவரவோ குடிச்செலவோ இருக்காது என்று அரசமைப்பின் சிற்பிகள் எதிர்பார்த்தார்கள் போலும்!

என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் சமாளிப்பதற்கு 11ஆம் உறுப்பைப் பயன்படுத்திப் புதிய சட்டங்கள் இயற்ற வேண்டியதுதான். ஆனால் இந்தப் புதிய சட்டங்களுக்கு அடிப்படையாக அமைய வேண்டிய விழுமியங்களைக் கூட அரசமைப்புச் சட்டம் கோடிட்டுக் காட்டவில்லை என்பது பெருங்குறை.

அரசமைப்புச் சட்டத்தின் பதினோராம் உறுப்பைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் இயற்றிய சட்டம்தான் இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955 என்பது. இந்தச் சட்டமும் சட்டப் புறம்பான குடியேறிகள் (illegal immigrants) பற்றிப் பேசுகிற தவிர ஏதிலியர் (அல்லது அகதிகள்) குறித்து எதுவும் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்தவரை இந்தியாவில் ஏதிலியர் பற்றிப் பேசும் சட்டமே இல்லை. (இருந்தால் யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம்.)

1959ஆம் ஆண்டு முதல் திபெத்திலிருந்து ஏதிலியர் அடுக்கடுக்காக வந்து குவிந்துள்ளனர். 1962ஆம் ஆண்டு பர்மாவிலிருந்து இராணுவ ஆட்சியாளர்களால் வெளியேற்றப்பட்ட தமிழ் ஏதிலியருக்காகத்தான் சென்னையில் பர்மா பஜார் அமைக்கப்பட்டது. 1971இல் வங்கதேச இனவழிப்பின்போது சற்றொப்ப ஒரு கோடிப் பேர் இந்தியாவுக்கு ஏதிலியராக வந்து, விடுதலைக்குப் பின் நாடு திரும்பினார்கள். வங்கதேசத்திலிருந்து வெளியேறிய பீகாரி முஸ்லிம்கள் போன்ற பிற வகை ஏதிலியர் நாடு திரும்ப வழியில்லாமல் பாகிஸ்தானுக்கே போய் விட்டார்கள். இன்னும் உகாண்டாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும் உள்ளனர். நேபாள ஏதிலியரும் பூட்டான் ஏதிலியரும் கூட உண்டு.

1991ஆம் ஆண்டு கர்நாடகத்தில் காவிரிச் சிக்கலை ஒட்டி நடைபெற்ற வன்தாக்குதலால் ஏராளமான தமிழர்கள் ஏதிலியராகத் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். சட்டிஸ்காரிலிருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடிகள், அசாமில் இனமோதலால் புலம்பெயர்ந்தவர்கள் என்று இந்தியாவின் உள்நாட்டு அகதிகள் ஏராளம்.

இந்தியாவில் ஏதிலியர் என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யலாம். இருப்பினும், இவர்களின் தொகை இலட்சக்கணக்கில் இருப்பினும், இவர்களில் சிலரை இந்திய அரசு முறையான ஏதிலியராக ஏற்றுக் கொண்டிருப்பினும், ஏதிலியருக்கென்று தனிச் சட்டம் ஏதும் இயற்றப்படவில்லை.

குறிப்பாக, இலங்கைத் தீவிலிருந்து உயிர்தப்பி இந்தியா வந்துள்ள தமிழ் ஏதிலியர் சற்றொப்ப நாற்பது ஆண்டுகளாக நாடற்றவர்களாக அல்லலுற்றுக் கிடக்கின்றனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்களுக்கு இடைக்காலக் குடியுரிமை கூட வழங்கப்படவில்லை, இந்த மண்ணில் பிறந்து வளர்ந்த ஏதிலியர் குழந்தைகளும் அதே அவலநிலையில்தான் உள்ளனர். குடியுரிமை இருக்கட்டும், அவர்கள் ஏதிலியராகக் கூட அறிந்தேற்கப்படவில்லை. உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்தேறிய அயலார் என்பதே அவர்களின் சட்டநிலை.

ஏதிலியர் தொடர்பான 1951 ஜெனிவா ஒப்பந்தம், 1967 வகைமுறை உடன்படிக்கை ஆகியவற்றில் இந்தியா ஒப்பமிடவில்லை என்பதால் பன்னாட்டுச் சட்டம் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று இந்திய அரசு — முன்பு காங்கிரஸ், இப்போது பாஜக — அழிச்சாட்டியம் செய்கிறது. ஆனால் 1948 உலகளாவிய மாந்தவுரிமைச் சாற்றுரையில் இந்தியா ஒப்பமிட்டிருப்பது மறந்து போவதே இவர்களுக்கு வசதியாக உள்ளது. இந்திய உயர்நிலை நீதிமன்றங்கள் இந்தச் சாற்றுரைக்குச் சட்ட மதிப்புக் கொடுக்கின்றன. இந்தச் சாற்றுரையின் உறுப்பு 14 தஞ்சம் கோரவும் பெறவும் ஒவ்வொருவருக்கும் உரிமை இருப்பதை வலியுறுத்துகிறது. இந்தச் சாற்றுரையின் அடிப்படையில் ஏதிலியர் நிலை குறித்துச் சட்டம் இயற்றும்படி உச்சநீதிமன்றமும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்திய அரசு ஏதிலியர் உரிமை தொடர்பான பன்னாட்டுச் சட்டங்களையும் மதிப்பதில்லை, உள்நாட்டிலும் சட்டம் இயற்றுவதில்லை என்று உறுதியாகவுள்ளது. ஏதிலியர் சிக்கலைப் புவிசார் அரசியல் நலன், உள்நாட்டு அரசியல் நலன் என்ற கோணத்திலிருந்தே அணுகுவதுதான் தொடக்கத்திலிருந்தே இந்திய அரசின் நடைமுறையாக உள்ளது. மோதி-அமித்ஷா கையில் இந்த நடைமுறை படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடும் குடியாட்சிய ஆற்றல்கள் தற்காப்பு நிலை எடுத்து, புதிய சட்டத்தைத் திரும்பப் பெற்றால் போதும் என்ற நிலைக்கு வந்துவிடக் கூடாது. எதிர்மறைக் கோரிக்கையோடு நின்று கொள்ளாமல், நேர்நிறையாக மாநிலங்களுக்குக் குடியுரிமை அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப வேண்டும். தாக்குதலே தற்காப்பின் ஆகச்சிறந்த வடிவம்.

அரசு, மாநிலம் அல்லது நாடு என்பது உண்மையானால், இந்தியக் குடியுரிமையோடு மாநிலக் குடியுரிமையும் கோருவோம். எடுத்துக் காட்டாக, இந்தியாவும் தமிழ்நாடும் இரு நாடுகளாக இயங்கி இரட்டைக் குடியுரிமை வழங்கட்டும். இந்தியக் குடியுரிமை, தமிழகக் குடியுரிமை இரண்டும் இருக்கட்டும். இந்தியா இதற்கு இணங்காது என்றால் இரட்டைக் குடியுரிமைக்கு இடமே இல்லை. ஒற்றைக் குடியுரிமைக்குத்தான் வாய்ப்புண்டு என்றால் அது ஏன் அந்தந்தத் தேசிய இனக் குடியுரிமையாகவே இருக்கக் கூடாது என்ற எண்ணம் எழத்தான் செய்யும். இந்தியக் கட்டமைப்பு உள்ள வரை தமிழ்க் குடியுரிமையோடு இந்தியக் குடியுரிமையும் இருக்கட்டும். ஆனால் தமிழ்நாட்டுக் குடியுரிமை இல்லாத இந்தியக் குடியுரிமை அடிமைத்தனமே! அதனால் குடியாட்சிய நோக்கங்களை அடைய முடியாது.

குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் அது சமயச் சார்பின்மைக்கு எதிராக இருப்பது போலவே கூட்டாட்சிக் கொள்கைக்கும் எதிராக இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். குடியுரிமை அதிகாரம் இந்திய நடுவணரசின் முழுமுதல் அதிகாரமாக இருப்பது கூட்டாட்சிக் கொள்கைக்குப் புறம்பானது என்பதால் அதனைப் பொதுப் பட்டியல் அல்லது இசைவுப் பட்டியலில் (CONCURRENT LIST) சேர்க்கும்படி கோர வேண்டும். நூற்றுக்கு மேற்பட்ட முறை திருத்தப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை மாநிலக் குடியுரிமைக்காக இன்னும் ஒரு முறை திருத்தலாமே!