ஜினியை தமிழக பா.ஜ.க.வின் முகமாக மாற்ற அக்கட்சியால் பலவிதமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவை பா.ஜ.க.வின் மீது ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும் செய்கின்றன. அவர் துக்ளக் விழாவில் பேசியது பரபரபாக்கப்பட்டு தமிழகத்தின் ஊடக வெளியை முழுவதுமாக அடைத்துக் கொண்டது. பா.ஜ.க.வின் அரசியல் என்பதே மக்களை மதத்தின் பெயரால் ஒருங்கிணைப்பது என்பதே. இந்த ஒருங்கிணைப்பு மற்ற மதத்தினருக்கு எதிரானதாகச் செயல்படவேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம். மதத்தில் ஒருவேளை நல்ல அம்சங்கள் இருக்குமானால் அவற்றைக் கூறி மக்களை இணைக்க முயலலாம். மற்றுமொரு வழி, மதத்திற்கு எதிராக ஒரு மற்றமையைக் கட்டமைத்து அதை எதிரியாகவும் உருவாக்கி அதன் மூலம் வெளி புற மிரட்டல் உள்ளதாகக் கூறி, மக்களை வெகுண்டெழ வைத்து இணைக்கலாம். முதலாவதாகக் கூறிய முறை ஆன்மீகவாதிகள் மேற்கொண்டு வந்த பாதை. இரண்டாவதாகக் கூறியுள்ள முறை பா.ஜ.க. பின்பற்றும் முறை.

காளையிடம் பசுக்கள் தோல்வி

பாபர் மசூதி என்ற ஒரு கட்டிடம் அவர்களுக்கு வடஇந்தியர்களை முஸ்லிம்களுக்கு எதிராக திரட்டுவதற்கு உதவியாக அமைந்தது. அதை இடித்தது என்பது இந்துக்களுக்கான மாபெரும் வெற்றியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதில் இராமனும் பெரும் அரசியல் அடையாளமாக உருவாக்கப்பட்டார். அது அவர்களுக்கான அரசியல் லாபத்தை ஈட்டித் தந்தது என்பதும் உண்மையே. அதே போன்று பசுவும் அவர்கள் அரசியல் சக்தியை விரிவுபடுத்த பெரும் உதவி செய்துள்ளது. இவை வட இந்திய மாநிலங்களில் செல்லுபடியானது. தென்னகத்தில் குறிப்பாக தமிழகத்தில் காளைகளுக்கு முன் பசுக்கள் தோற்றுப் போயின. காளைகள் தமிழர் அரசியலின் சின்னமானது. வேதக் குறியீடாக உருவாக்கப்பட்ட பசு இங்கே எடுபடவில்லை. இராமனும் எடுபடவில்லை என்பதே உண்மை. தமிழகத்தில் இந்துத்துவ அரசியலை முன்னெடுத்து, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமெனில் அதற்கும் பல தடைகள் உள்ளன.

திராவிட அரசியலினால் வேயப்பட்டுள்ள தமிழக அரசியல் களம், காவி அரசியலுக்கு இம்மியும் இடம் கொடுக்காமல் தடுக்கின்றது என்பது அவர்களுக்குப் புரிகிறது. இங்கே சோ.ராமசாமி, குருமூர்த்தி,எஸ்.வி.சேகர் எச்.ராஜா வகையறாக்கள் யூடியூப் நையாண்டி நாயகர்களாகத்தான் பொதுமக்களால்அவதானிக்கப்படுகிறார்கள். இந்தக் குழுவின் பிரதான நாயகியாக விளங்கி வந்த தமிழிசையும் ஏதோ கிடைத்தவரை லாபம் என்று ஆளுநராக மாறி தப்பித்துவிட்டார்.எஞ்சியிருக்கும் சொத்தையான ஜீவன்கள் வேலைக்கு உதவாது என்று ப.ஜா.க. மோலிடத்திற்குத் தெரியும். மத்திய அரசின் அதிகார பலத்தைக் கொண்டு அ.தி.மு.கவைப் பணிய வைத்து கப்பம் கட்ட வைக்கலாம். ஆனால் மன்னர்கள் என்னவோ அதிமுகவினராகத்தான் இருப்பார்கள். சிலநேரங்களில் அவர்களும் தங்கள் கட்சி உறுப்பினர்களிடம் தன்மானம் உள்ளவர்களாகக் காட்ட வேண்டிய அவசியத்தினால் பா.ஜ.க.வை எதிர்த்து முனகுவதும் உண்டு. இப்படியே பினாமி ஆட்சியின் மூலம் ஓட்டுவது என்பது பா.ஜ.க. விற்கு ஏற்புடையதல்ல.

சாத்தானின் புதிய முகம்

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு தத்துவ அடிப்படை அமைவது இயல்பு. எம்.ஜி.ஆர். அ.தி.மு.க தொடங்கியபோது அவர் தன் கட்சியின் தத்துவம் அண்ணாயிசம் என்றார். இன்று வரை அக்கட்சிக்கும் அண்ணாயிசத்திற்குமான தொடர்பு காணப்பட இயலாதது. ஆனால் பா.ஜ.க.வின் இந்துத்துவா கோட்பாடு அப்படிப்பட்டதல்ல. எப்படி சாத்தான் உலகில் தீமை செய்ய பல உருவங்களை எடுத்து வருவான் என்று கூறப்படுகிறதோ, அதைப் போல பாசிசம் உலகின் பல பாகங்களில் பல முகங்களோடு எழுச்சி பெற முயல்வதே உண்மை. இங்கே அது ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் மூலமும், பா.ஜா.க. என்ற கட்சியின் மூலமும் இந்துத்துவா என்ற முகத்தோடு அலைகிறது..

இந்தியாவைப் பொறுத்தமட்டில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் பாசிசத்துக்குப் பணியாளர்களாக இல்லாமல் இருந்தார்கள். அப்போது சாதி, மதங்களைக் கடந்து, நாம் இந்தியர் என்ற நவீனத்துவ தேசியக் கோட்பாடு பாசிச சக்திகளைத் தலையெடுக்க விடாமல் செய்தது. அப்போது மக்களிடையே இந்துத்துவா என்னும் மத வெறிக் கொள்கையை ஊன்ற முடியாத அளவிற்கு தேசிய சக்திகள் தடை செய்தன என்பதே உண்மை. காந்தி போன்றோர் ராமராஜ்யம் பற்றிப் பேசியபோது, அவருடைய ராமராஜ்யத்தில் முஸ்லிம்களுக்கும் சம பங்கு இருந்தது. ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற பஜன் ஒரு பண்பாட்டு அரசியல் முழக்கமே! இந்த முழக்கங்கள்தான் கோல்வால்கர்-கோட்சே கூட்டத்தைப் பரவ விடாமல் தடுத்தன. அதனால்தான் காந்தி தீர்த்து கட்டப்பட வேண்டிய ஒரு எதிரியாகக் காணப்பட்டார். அப்போது ஆங்கிலேயரின் அதிகாரத்திற்குப் பணிந்து, பம்மிக் கிடந்த அந்த பாசிச கூட்டம், இன்று மக்களின் அறியாமை என்னும் பலவீனத்தைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் பல இடங்களில் சாத்தானாகப் பரவி வெறுப்பு அரசியலை நடத்த முயல்கிறது. மக்களின் உண்மையான பிரச்சனைகளை மறைத்துப் போலி பிரச்சினைகளை அது உருவாக்கி, முன்னிறுத்துகின்றது.

சாதாரணர்களின் சாதாரணர்

காந்தியின் கொள்கைகள் ஒரு உயர்நிலை மனிதனை, உன்னதரை முன்மாதிரியாக வைக்கவே அது சாதாரணர்களால் எட்டிப் பிடிக்க இயலாத இலக்காகவே இருந்தது. என்றும் அவை அப்படித்தான் இருக்கும். காந்தி மகாத்மாவாக கட்டம் கட்டப்பட்டு உயரத்தில் வைக்கப்பட்டுவிட்டார். ஆகவே அந்த வெற்றிடம் வட இந்தியாவில், இந்துத்துவாவைப் பரவலாக்க மேலும் உதவியது எனலாம், ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை பாசிச சக்திகளுக்கு எதிரான சக்தியாக அன்றும் இன்றும் விளங்குவது பெரியாரிய சித்தாந்தமே! பெரியார் சாதாரண மக்களின் சாதாரணராக இருக்கின்றார். அவர் கட்டப்பட்ட உன்னதங்களை உடைத்தெறிந்தார். புராணங்கள் மூலம் உருவாக்கப்பட்டிருந்த மாயைகள் அவரால் உடைக்கப்பட்டன. காரல் யுங் எனும் உளவியல் அறிஞர் கூறிய கூட்டு பண்பாட்டு அடிமனம் என்பது பெரியாரின் பகுத்தறிவு உளியால் பதம் பார்க்கப்பட்டது. அவர் தமிழகத்து டெரிடாவாக இருந்தார்.

கூண்டோடு, ஆண்டாண்டு காலமாகக் கட்டப்பட்டு, நிழல்களை உண்மை எனக் கருதி வந்த தமிழர்கள் வெளிச்சத்திற்கு வந்தனர். உண்மை அவர்களை வரவேற்றது. இந்தப் பகுத்தறிவு வெளிச்சத்தில் மதவெறிசக்திகள் மிரண்டுபோய் ஓடின. இன்று காந்தியிசம் போற்றத்தக்கதாகப் பேசப்படுகிறது. ஆனால் அது நகராமல், பின்பற்றப்படாததாக ஆகிவிட்டது.ஆனால் பெரியாரும்,அம்பேத்கரும் அவர்களின் காலத்தை விட இப்போது மிகவும் வீரியமாகத் தமிழகத்தில் வலம் வரத் தொடங்கிவிட்டார்கள். இதுதான் பா.ஜ.க.விற்குத் தமிழகத்தில் பெரும் அரசியல் சவாலாகும். தமிழ் மண்ணின் உருவாக்கமான பெரியார் எப்படியும் இன்று வீழ்த்தப்பட வேண்டும் என்பது அவர்களின் இன்றைய அரசியல் தேவையாகும். இதற்கான யுத்திகளைக் கையாள்வது என்பது அவர்களின் திட்டம்.

இன்று பாஜக மூலம் தலை எடுப்பது நவீன பாசிசம் ஆகும். இது இனத்தின் அல்லது மதத்தின் அடிப்படையில் மக்களைத் திரட்டி அதிகாரத்தைக் கைப்பற்ற வெறிகொண்டு அலைகிறது. .பெரியாரின் கொள்கைகள் இந்துக்கள் நம்பிக்கைக்கு எதிரானது, அவர்களை அவமானப்படுத்துவது என்ற பிரகடனத்தை பரவலாக்குவதின் மூலம் பெரியாரியத்தை வீழ்த்த முடியும் என இந்த நவீன பாசிஸ்டுகள் நம்புகிறார்கள்.

பெருவாரியான இந்துக்கள் என்பவர்கள், இன்று பகுத்தறிவுப் பின்புலம் இல்லாமல் ஊடகங்களின் மாய வலையில் மயக்க நிலையில் சிக்குண்டு வருவது என்பதும் பாஜகவிற்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கக்கூடும்.

பெரியாரியத்தை உடைக்க சோ முதல் எச்.ராஜா, எஸ்.வி. சேகர் வரை முயன்று பார்த்தும் ஒன்றும் பலிக்கவில்லை. ஒரு காலத்தில் டீ சர்ட்டுகளில் சேகுவாரா பிடித்திருந்த இடத்தை இன்று பெரியார் பிடிக்கத் தொடங்கி விட்டார். அதே சமயம் வெறும் பிம்பமாக அல்லாமல், கருத்தியலாக அவர் இளைய தலைமுறைகளின் இதயங்களில் ஊடுருவி வருகிறார். இது தமிழகத்தின் பகுத்தறிவு பண்பாட்டிற்குப் பலம் சேர்ப்பதாக உள்ளது. பெரியார் என்ற பிரம்மாண்டத்தை உடைக்க பெரும் உளி பாஜகவிற்குத் தேவைப்படுகிறது. அந்த உளியாகத்தான் ரஜினியை அவர்கள் அடையாளம் கண்டார்கள். கொஞ்சம் பகுத்தறிவு உள்ளவன் கூட இந்த நவீன பாசிசத்திற்குத் துணை போக மாட்டான்.தமிழர்களிடையே அந்த உளியை பா.ஜ.க.வினால் அடையாளம் காணவே முடியாது. எனவே வில்லனாகத் தொடங்கி கதாநாயகனாகத் தன்னை உருவாக்கிக் கொண்டு, உச்ச நாயகனாக காட்டப்பட்டுள்ள ரஜினி இவர்களுக்குத் தோதான ஆளானார். ரஜினி, தான் சினிமா மூலம் திரட்டிய ரசிகர்கள் சக்தியை அரசியல் அதிகாரத்தை அடைய பயன்படுத்தினால் என்ன என்று ஆசைப்பட்ட அந்த வினாடியே பாசிச சாத்தான் அவருக்குள் புகுந்துவிட்டது. இதைத்தான் பா.ஜ.க. எதிர்பார்த்தது. அவர் பலமுறை அவர்களின் சதிவலையில் இருந்து தப்பித்து வந்தபோதும், இறுதியாக சிக்கிவிட்டார். ஆனால் உச்ச நடிகனுக்கு நாற்காலிக் கனவு ஒருபுறம். ஆனால் சொகுசையும், சுகத்தையும் இழக்க வேண்டிய அச்சம் மறுபுறம்.

உள்ளீடற்ற சவால்

ரஜினியின் துக்ளக் மேடைப்பேச்சு என்பது அவர் மக்களை வசீகரிக்க இரவலாகப் பெற்று, உருவாக்கப்பட்டதுதான். துக்ளக் பத்திரிகையின் வாசகனாக ரஜினி எந்தக் காலத்தில் இருந்திருப்பார் என்பதும் தெரியவில்லை. சோவை மிகப்பெரிய அரசியல் குருவாகப் போற்றுவது என்பது கூட ஒரு வகையில் அவர்களுக்கு உண்டான வெற்றிடத்தை நிரப்பும் வேலையே! சோ எந்தக் காலத்திலும், எந்த அரசியல் சித்தாந்தத்தின்மீதும் உறுதியாக நின்று பேசியதே இல்லை என்பதே உண்மை. அவர் ஒரு அரசியல் நையாண்டி செய்யும் எழுத்தாளர், கலைஞர். அவ்வளவுதான். இன்று அவரை விட ஆழமாக, தைரியமாக, அரசியலை நையாண்டி செய்யும், விமரிசனம் செய்யும் பல இளம் படைப்பாளிகள் இணையங்களில் பெருகி வருகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்க விஷயம். இன்றைய வெகுஜன ஊடகங்கள் தங்கள் டி.ஆர்.பி.ரேட்டிங்கிற்காக பரபரப்பான செய்திகளைப் போடுவதும்,விவாத மேடை நடத்துவதும் போன்றதுதான் சோவின் அரசியல் விமர்சனங்கள் என்பவை. அவரைத் தமிழகத்தின் சிறந்த அரசியல் சாணக்கியர் என்பது போன்ற பிம்பத்தை அப்போது ஊடகங்கள் உருவாக்கின. தெளிவான அரசியல் கண்ணோட்டத்துடன் அரசின் திட்டங்களையும் அரசியல்வாதிகளின் தவறுகளையும் கண்டித்து மாற்றுகளை முன்வைத்து எழுதப்பட்ட அரசியல் சிறு பத்திரிகைகளும் அக்காலத்தில் இருந்தன. அவை மக்களிடையே இறங்கிப் பணியாற்றிய பல இடதுசாரி இயக்கங்களின் பத்திரிகையாக இருந்தன. சோ எந்தக் காலத்திலும் மக்களுடன் இணைந்து எந்தப் போராட்டத்திலும் கலந்து கொண்டதே இல்லை. உயிருடன் இருந்திருந்தால் இன்றும் பெரியார் சேலம் மாநாட்டை விட அதி தீவிரமான நிகழ்வுகளைத் தைரியமாக நடத்திக் காட்டி இருப்பார். இவர்கள் புராணக் கதைகளை வரலாறாகவும், அறிவியல் உண்மையாகவும் நிறுவ முற்பட்ட வேளையில், பெரியாரின் கட்டுடைப்பு மிக மிக அவசியமான ஒன்றாகும்.

சேலம் மாநாட்டில் நடந்ததாக ரஜினி கூறியது உண்மையா, இல்லையா என்று பார்ப்பதற்கு முன் கடவுளரை இழிவு செய்த புகைப்படங்களைத் தன் பத்திரிகையில் சோ அச்சிட விரும்பியதன் நோக்கம் என்ன என்று பார்த்தால் ஒருவேளை இந்துக்களை உசுப்பி எழுப்ப என்று யோசிக்கத் தோன்றும். ஆனால் உண்மை என்னவென்றால் கடவுளரை அவமானப்படுத்தும் படங்களைப் போட்டால் தன் பத்திரிகை பரபரப்பாக விற்பனையாகும் என்ற வணிக கணிப்பே அப்படி அவரைச் செய்ய்ய வைத்தது என்பதுதான் உண்மை. அது பலிக்கவும் செய்தது. சேலம் ஊர்வலத்தில் கடவுள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்படவில்லை, செருப்பு மாலை அணிவிக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருந்தாலும், தவறான செய்தியை வெளியிட்டதற்காக சோ நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட தகவல் ரஜினிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பியில்லை.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் அந்த நிகழ்வை முன்வைத்து ஒரு விவாதத்தை எழுப்ப வேண்டிய அவசியம் என்ன என்பதே இன்றைய முக்கிய அரசியல் கேள்வியாகும். பிரபலமானவரைக் கொண்டு, வலுவான எதிரியை ஒரு அடிப்படையான விஷயத்தில் தாக்கினால், அது பற்றிக்கொள்ளும் என்பதே கணிப்பு. மறந்துவிட வேண்டிய விஷயம் என்று பத்திரிகையாளரிடம் கூறிய ரஜினி, தான் மட்டும் மறக்காமல் மேடையில் பேசிய ரஜினி, பிரச்சனை கிளம்பியவுடன் துக்ளக்கை ஆதாரமாகக் காட்டாமல் அவுட்லுக் பத்திரிகையை அதுவும் 2017 இல் வெளியாகிய கட்டுரையைத் தூக்கி ஆதாரமாகக் காட்டிப் பேசுகின்றார். பத்திரிகையில் வருவதெல்லாம் ஆதாரமாகக் காட்டி குற்றம் சாட்டத் தொடங்கிவிட்டால், ரஜினியின் கதி என்னவாகும் என்று அவர் யோசித்ததாகத் தெரியவில்லை. நவீன பாசிஸ்டுகள் நினைத்தது இது பெரிதாக பற்றிக்கொண்டு, இதன் அடிப்படையிலேயே மக்களைப் பிடிக்கலாம் என்று. ஆனால் அது நேர் எதிராக அமைந்துவிட்டது.

பொதுவாக மக்கள் அரசிற்கு எதிராகப் போராடுவார்கள், கொள்கைகளுக்காகப் போராடுவார்கள் அல்லது திட்டங்களுக்கு எதிராகப் போராடுவார்கள். ஆனால் இப்போது மக்களை, மக்களுக்கு எதிராகவே போராட வைக்க முயல்கிறது இந்துத்துவ பாசிசம். ஆனால் தமிழகத்தில் அந்த பாச்சா பலிக்கவில்லை. இஸ்லாமியரை சமமாகப் பார்க்கவே பெரும்பான்மை தமிழக இந்துக்களின் விருப்பமாக உள்ளது.

ரஜினியின் பேச்சு பாஜக அரசியல் பல தோல்விகளை, புரட்டுகளை அநீதிகளைப் புறம்தள்ளி, நாட்டின் அரசியல் விவாதத்தை திசை திருப்ப முயற்சித்தபோதும், ஒருபுறம் ரஜினிக்குப் பதிலடி கொடுப்பதும் மறுபுறம் குடியுரிமை திருத்த சட்டம் முதல் வெவ்வேறு பிரச்சனைகளை எதிர்த்தும் வருகிறது தமிழ்ச் சமூகம். தமிழகத்தில் பல குழுக்கள், அமைப்புகள் வீரியமாகப் போராடி வருவது என்பது பெரியாரின் பகுத்தறிவு பங்களிப்பிற்குக் கைமாறு செய்வதாக இதைக் கொள்ளலாம்.

தமிழகத்தில் கடவுள் நம்பிக்கையாளர்கள் கூடப் பெரியாரை மதிப்பது என்பது அவருடைய சமூக சீர்திருத்தப் பணிகளுக்கானஅங்கீகாரமாகும். அவர்களுக்கு உண்மை புரிகிறது. தங்கள் இன விடுதலைக்காக எழுப்பப்பட்ட முதல் குரல் அவருடைய குரல் என்பது அவர்களுக்குத் தெரிகிறது. பெரியாரின் பெண் அடிமைத்தனத்திற்கு எதிரான குரலும், சாதி ஒழிப்பிற்காக அவர் ஆற்றிய பணிகளும் அவரை உலகளாவிய தலைவர்களில் ஒருவராக அடையாளம் காணச் செய்கின்றன என்பதே உண்மை.

இந்நிலையில் ரஜினி போன்ற நபர்களை வைத்து சோ ராமசாமி மற்றும் துக்ளக் வாசகர்களைத் தமிழகத்தில் பெரும் புத்திஜீவிகள் ஆக கட்டமைத்து, மற்றவரெல்லாம் எதிரிகளாக ஆக்குவது என்ற பாஜகவின் முயற்சி இயல்பாக எழுந்த எதிர்ப்பின் மூலம் அடித்துச் செல்லப்படுகிறது.

துக்ளக் வாசகர்கள் ஒருபுறமும், எதிர்ப்புறம் திமுககாரர்கள் என்றும் பிரிப்பது என்பது இந்துக்களை ஒருபுறமும், இந்துக்களின் எதிரியாக திராவிடப் பாரம்பரியத்தைக் கட்டமைப்பது என்பதும் இதன் உள்குத்து அரசியலாகும்.

இதுவரை உருப்படியான அரசியல் எதுவும் பேசியிராத ரஜினி, பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளரை நடத்தும் விதமே மிகவும் அவலமாக உள்ளது. அவர் வீட்டு வாசலில் பத்திரிகையாளர்களை வரவழைத்து, நிற்கவைத்து, ஏதோ பிச்சைப் போடுவது போல தயாரித்து வந்த கருத்துக்களைப் படபடவென்று ஒப்பித்து விட்டுத் தப்பி ஓடிச் செல்வது என்பதும், அவர் வீட்டின் இரும்புக் கதவுகள் இழுத்து மூடப்படும் வரையில் நின்று “சார்.. சார்..! இன்னும் ஏதாவது போட்டுவிட்டுப் போங்க!” என்று பத்திரிகையாளர்கள் தவிப்பதும் எந்தவகை ஊடகப் பண்பாடு என்று புரியவில்லை.

உடைக்க வேண்டிய ஆன்மீக பிம்பம்

ஒரு எந்த வாசிப்பும் இதுவரை படித்திராத ஒரு உச்ச நடிகன் பேசிய ஓரிரு வரிகளை ஊதிப் பெரிதாக்க ஊடகங்கள் முயல்வதின் நோக்கம் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் நோக்கம் டிஆர்பி ரேட்டிங்காக இருந்தாலும்கூட, அம்மாதிரி ஊடக வெளிச்சத்தினால் உண்டாகியிருக்கும் ஒரு பெரிய பிரச்சனையையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவில் டிரம்ப் செய்த கோமாளித்தனங்களும், அவர் பேசிய ஏடாகூடமான பேச்சுக்களும் பல்வேறு ஊடகங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டன. ஊடகங்களில் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டன. அவையே அவரைப் பெரும் தலைவராக மாற்றிவிட்டன என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே ஆபத்து இங்கு நிகழக் கூடாது என்பதற்காகத்தான் ரஜினி என்பவர் கட்டுடைக்கப்பட வேண்டும்.

மக்கள் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில், போராட்டங்களில் வன்முறை தேவையற்றது என்று அறிவுரையாகக் கூறிவிட்டு, வன்முறையைத் திரைப்படங்கள் மூலமாக அளவுக்கு அதிகமாகப் பரப்புரை செய்து பணம் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு போலி நடிகனைத் தமிழகம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.. அவருடைய ஆன்மீகப் பிம்பம் அரசியல்ரீதியாக உடைக்கப்பட வேண்டியிருக்கிறது. அவருடைய இமயமலைத் தேடல்கள் இங்கு இருக்கும் நாட்டு மக்களுக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இம்மாதிரியான சொத்தை ஒலிகளைக் கொண்டு பிரம்மாண்டமான பெரியாரியத்தை ஒரு இம்மி கூட உடைக்க இயலாது என்பதை பாஜகவிற்குத் தமிழகம் உணர்த்தி ஆகவேண்டும் என்பது வரலாற்றுக் கடமையாகும்.