தி.மு.க. ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்திருக்கும் சூழலில் தமிழக முதல்வரின் செயல்பாடு மற்றும் அவரது ஆட்சி குறித்த மதிப்பீடுகள் தேசிய அளவில் பெரிதும் உயர்ந்திருக்கின்றன. தமிழக முதல்வராக மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் அவரது பாத்திரம் பெரிதும் முதன்மை பெற்றிருக்கிறது. தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள், ஒன்றிய அரசிற்கு எதிரான போராட்டங்கள் என்ற இரு தளங்களிலும் முதல்வரின் செயல்பாடுகள் மென்மேலும் ஒளிபெற்று வருகின்றன. முக்கியமாக திராவிட மாடல் என்ற சித்தாந்தம் முன்மொழியும் அரசியல், சமூக பொருளாதாரக் கொள்கைகளை அவர் சமரசமற்ற வகையில் முன்னெடுத்து வருகிறார். மாநில சுயாட்சி, சமூக நீதி, தமிழுணர்வு, அனைவருக்குமான வளர்ச்சி என்ற நான்கு தூண்களில் இந்த திராவிட மாடல் எழுந்து நிற்கிறது. கடந்த ஒருநூற்றாண்டிற்கு மேலாக நீதிக் கட்சி காலம் தொடங்கி இன்றுவரை திராவிட இயக்கம் முன்னெடுத்து

வந்திருக்கும் சமூக நீதிக் கோட்பாடுகளின் ஒரு சித்தாந்த வடிவம்தான் திராவிட மாடல் என்ற சொல்லாட்சி. அது சொல்லால் திராவிடம் என்ற வரையரைக்குள் இருந்தாலும் அதனுடைய மக்களாட்சி தத்துவத்தால், நவீன அரசியல் சமூக கோட்பாடாக மலர்ந்துள்ளது. பன்முகத்தன்மை, கூட்டாட்சி, சமச்சீரான வளர்ச்சி, சமூக சமத்துவம் ஆகியவற்றால் இந்தியாவின் உண்மையான ஒற்றுமையை ஒருவர் கட்டிக்காக்க விரும்பினால் அதற்கு சிறந்த வழிமுறை திராவிட மாடல்தான். அதனால்தான் திராவிட மாடல் குறித்த உரையாடலைத் தேசிய அளவில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துச் செல்கிறார்.

ஆனால் தமிழகத்தில் இந்த திராவிட மாடல் பலரையும் எரிச்சலடைய வைக்கிறது. முக்கியமாக தி.மு.க. வெறுப்பாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகள் இந்த வார்த்தையைத் தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்க முயற்சிக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சீமான், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் உதிரிகள் திராவிட மாடல் என்ற சொல்லை இடையறாது தாக்குகிறார்கள். இவர்களால் உத்வேகம் பெற்ற சமூக வலைதள உதிரிக் கும்பல்களும் இந்த மந்தையில் உடன்செல்லுகின்றன. தமிழக அரசின் செயல்பாடுகளில் சிறு விமர்சனம் எழுந்தாலும் இதுதான் திராவிட மாடலா என்று கூக்குரல் எழுப்புகின்றனர். ஏன் இந்தப் பதட்டம்? ஏனென்றால், திராவிட மாடல் தமிழகத்தின் ஒருங்கிணைந்த பல்வேறு அரசியல், சமூகக் கோட்பாடுகளின் முகமாக இருக்கிறது. அது வளர்ச்சியையும் சமூக நீதியையும் பிரிக்க முடியாது என்று கருதுகிறது. தமிழுணர்வையும் சமூக சமத்துவத்தையும் துண்டிக்க முடியாது என்று கருதுகிறது. பெருமுதலாளித்துவ ஏகபோகத்திற்கு மாற்றாக விவசாயம், சிறுதொழில் மற்றும் பெருந்தொழில்கள் இணைந்த ஒரு பொருளாதார திட்டத்தை முன்வைக்கிறது. ஒருவிதத்தில் இது மோடி பின்பற்றுகிற குஜராத் மாடலுக்கு முற்றிலும் மாறானது. இதில் ஏதாவது ஒரு கொள்கையைத் தங்களுடைய கொள்கையாக வரித்துக் கொண்டிருப்பவர்கள் திராவிட மாடலோடு இணைந்து நிற்பதற்குப் பதிலாக அரசியல் காழ்ப்பின் காரணமாக அந்த சித்தாந்தத்தையே அழிக்க முயற்சிக்கிறார்கள். திராவிடம் தங்களிடமிருக்கும் எல்லா ஆயுதங்களையும் பறித்துக்கொள்ளுமென அஞ்சுகிறார்கள். இன்னொருபுறம் பா.ஜ.க. போன்ற கட்சிகள் அடிப்படையிலேயே மாநில சுயாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானவர்கள் என்பதால் நேரடியாக திராவிட மாடலைத் தாக்குகிறார்கள். சமீபத்தில் தமிழகத்தில் எழுந்த சில சர்ச்சைகள், அது தொடர்பான தமிழக அரசின் செயல்பாடுகளை வைத்துப் பலரும் தமிழக அரசின்மேல் தாக்குதலில் இறங்கினார்கள். தருமபுர ஆதீன பல்லக்குத் தூக்கு விவகாரம், ஆம்பூர் பிரியாணி திருவிழா விவகாரம் போன்றவற்றை வைத்து தமிழக அரசு பழமைவாதிகளுடன் சமரசம் செய்துகொண்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஊடகங்களில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர். பொதுவாக பா.ஜ.க. எங்காவது ஒரு சிறு பிரச்சனை கிடைத்தாலும் மத உணர்வுகளை மக்களிடம் விதைப்பதற்கு வெறியுடன் அலைந்துகொண்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு முயற்சியையும் தமிழக அரசு வெகு சாதுரியமாக முறியடித்து வருகிறது. சிறுசிறு விட்டுக்கொடுத்தல்கள் மற்றும் பிரச்சனைகளை முனைமழுங்கச் செய்வதன் மூலமாக பா.ஜ.க.விற்கு எந்த அரசியல் பிடிமானமும் கிடைக்கவிடாமல் செய்வதுதான் அரசின் அணுகுமுறையாக இருக்கிறது. இதைப் புரிந்துகொள்லாமல் ஒவ்வொன்றிற்கும் தி.மு.க.அரசைத் தாக்குவதும், அதன்மீது ஐயங்களை உருவாக்குவதும் இங்கு பலருக்கும் பொழுதுபோக்காகவும் தொழிலாகவும் இருக்கிறது. இன்று தமிழகத்தின் ஊடகச் சூழல் தி.மு.க.விற்கு எதிராக தீவிரமாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. சமீப ஆண்டுகளில் புற்றீசல்கள்போல ஏராளமான யூ டியூப் சேனல்களும், இணையதளங்களும் துவங்கப்பட்டன. இன்னொருபுறம் வலதுசாரிகள், நடுநிலையாளர்கள், பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பல புதுப்புது அவதாரங்கள் களத்தில் இறக்கப்பட்டனர். வெகுசன ஊடகங்களில் இடதுசாரி மற்றும் திராவிட ஆதரவு மனநிலைகொண்ட பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

 

யூ டியூப் சேனல்களிலும் வெகுசன ஊடகங்களிலும் நேரடியாக அ.தி.மு.க., பா.ஜ.க. ஆதரவு மனநிலை கொண்டவர்கள் நேரடியாக களமிறக்கப்பட்டு தி.மு.க.வின் மீது கடும் அவதூறுகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. சவுக்கு சங்கர் போன்ற ‘பிளாக் மெயில்’ ஆசாமிகள், மாரிதாஸ் போன்ற சமூக விரோதிகளின் பொய்கள் சமூக ஊடகவெளியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இன்னொருபுறம் சாதி, மத அமைப்புகளைச் சேர்ந்த வெறியர்களின் குரலும் வெள்ளமாய் எங்கும் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. இந்தக் குரல்களை சமூக வலைதளங்கள் தங்களுக்குக் கிடைக்கும் ‘வியூஸ்’, அதன்மூலம் கிடைக்கும் வருவாய்க்காக மட்டும் செய்கின்றன என்று சொல்லிவிட முடியாது. அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் மிகக் குறைவு. மாறாக, இந்த யூ டியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு எங்கிருந்தோ நிதி கணிசமாகவும் தொடர்ச்சியாகவும் திறந்து விடப்படுகிறது. அவர்கள் தாங்கள் ஒரு பொது உலகம்போல, எல்லாத் தரப்புக் குரல்களுக்கும் இடமளிப்பவர்கள்போல நாடகமாடுவார்கள். அதன்மூலமாக பல்வேறு தரப்பு சந்தாதாரர்களையும் முதல்கட்டத்தில் ஈர்ப்பார்கள். பிறகு தங்களுக்குப் பணம் தரும் முதலாளிகளின் கட்டளைக்கு ஏற்ப முழுமூச்சாக களத்தில் இறங்குவார்கள். இவர்களுக்கான தி.மு.க. வெறுப்பு கருத்துருவாக்கங்களை செய்வதற்குப் பல்வேறு முன்னாள் பத்திரிகையாளர்கள் மற்றும் வலதுசாரிகள் ஊதியத்தின் அடிப்படையில் அமர்த்தப்படுகின்றனர். இவர்கள் ஒரு போலி சத்திய ஆவேசத்துடன் ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு நேர்காணல்களாவது ஏதாவது ஒரு யூ டியூப் சேனலில் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். சவுக்கு சங்கர் போன்ற முழுநேர ஊழியர்கள் எந்த ஆதாரமுமற்ற இதுபோன்ற புளுகுகளை ராப்பகலாக அவிழ்த்து விட்டவண்ணம் இருப்பார்கள். எங்கு திரும்பினாலும் இவர்களே இருப்பதுபோன்ற ஒரு மாயத் தோற்றம் சமூக வலைதளங்களில் உருவாக்கப்படுகிறது. இதற்காக இவர்கள் இந்த யூ டியூப் நிறுவனங்களிடமிருந்து ஒரு கணிசமான வருமானமும் பெறுகின்றனர். அதேபோல அவதூறு பரப்பும் இணையதளங்களோ முழுமூச்சாக இயங்குகின்றன. அத்தோடு பா.ஜ.க. ஐ.டி.விங்கின் வாட்ஸ் – அப் ராணுவத்தின் மூலமாக பரப்பப்படும் இடையறாத பொய்கள். இந்தச் சூழலை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்வது கடினம். உண்மைபோல தோற்றமளிக்கும் இந்தப் பொய்கள் தி.மு.க.விற்கு எதிராக 2ஜி காலத்திலிருந்தே புனையப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னால் ஈழத்தமிழர் படுகொலை, கச்சத்தீவு விவகாரம் போன்றவற்றிலும் தி.மு.க.விற்கு எதிரான கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டு இன்றளவும் அரசியல் விழிப்புணர்ச்சியற்ற பாமர மனங்களில் அது புகுத்தப்படுகிறது. பழ.நெடுமாறன் போன்ற ஈழ ஆதரவு தமிழ் தேசியர்கள் பா.ஜ.க.வோடு எப்படி கை கோர்க்கிறார்கள்? சீமான், திருமுருகன் காந்தி போன்றவர்கள் அ.தி. மு.க., பா.ஜ.க.விற்கு சாதகமாக இங்கே கட்டமைக்கும் தி.மு.க. எதிர்ப்பரசியலின் ஊற்றுக்கண்கள் எவை? இந்தக் கேள்விகளுக்கான பதில்களும் இன்றைய தி.மு.க. எதிர்ப்பு ஊடகச் சூழலுக்குப் பின்னாலிருக்கும் சக்தி யார் என்ற பதிலும் ஒன்றேதான். மறைந்த ம.நடராஜன் வழியாக ஜெயலலிதா, ஒன்றிய அரசின் உளவு அமைப்புகள், பா.ஜ.க. தமிழக அரசியலுக்காக இறக்கியிருக்கும் பெரும் மூலதனம் ஆகியவைதான் இந்தச் சூழலைக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கட்டமைத்து வந்திருக்கின்றன. தமிழ் தேசியம், ஊழல் எதிர்ப்பு போன்ற பல முகமூடிகள் இவர்களுக்கு இருந்தன. இன்று தி.மு.க. அரசு பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே ஒரு சிறந்த ஆட்சியை, நிர்வாகத்தை வழங்கப் போராடிக்கொண்டிருக்கும்போது, சிறுசிறு குறைகளையெல்லாம் பிரம்மாண்டமாக, அவதூறுகளைப் பரப்புவதன் மூலமாக, இந்த அரசு அடையக்கூடிய செல்வாக்கை சிதைக்க முற்படுகின்றனர். ஒன்றிய அரசோடு தி.மு.க. நடத்திவரும் போராட்டம் தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுவரும் சூழலில் பா.ஜ.க.வோடு தி.மு.க. சமரசம் செய்து கொள்கிறது என்கிற பொய்யைத் திரும்பத் திரும்பப் புனைகிறார்கள். ஒன்றிய அரசும் மாநில அரசும் கடுமையாக முரண்படுகிற இடங்கள் உண்டு. அதே சமயம் மாநில அரசின் தேவைகள் மற்றும் உரிமைகளுக்காக ஒன்றிய அரசோடு உரையாட வேண்டிய தேவையும் உண்டு. எல்ல உரையாடல்களையும் சமரசங்களாக சித்தரிப்பதன் மூலமாக பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலையிலிருந்து தி.மு.க.வை ஆதரிப்பவர்களை தி.மு.க.விலிருந்து விலக்க வேண்டும் என்பதுதான் இவர்களது திட்டம். எப்படி ஈழப் பிரச்சனையைக் காட்டி இளைஞர்களின் ஒரு பகுதியினரை தி.மு.க.விடமிருந்து அந்நியப்படுத்தினார்களோ அதேபோல. தி.மு.க.வினருக்கு எதிராகக் கட்டப்பட்ட எதிர்மறை பிம்பங்கள் அனைத்தையும் திராவிட மாடல் என்ற கருத்தாக்கம் தகர்த்து வருகிறது என்பதால்தான் அதை எல்லா இடத்திலும் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த திராவிட மாடல் அரசியல் அவர்களது இடங்களைக் காலி செய்துவிடும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் இந்த உக்கிரமான வெறுப்பாட்டத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். திராவிட அரசியலின் எதிரிகள் ஒரு குறைந்தபட்ச அரசியல் தகுதிகூட இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் இந்தப் போராட்டத்திலிருக்கும் பெரும் அவலம்.