இந்திய சினிமா தன்னுடைய மௌனத்தைக் கலைத்து, பேசத் தொடங்கியது 1931இல் வடக்கே இந்தியில் ‘ஆலம் ஆரா’வும், தென்னிந்தியாவில் ‘காளிதாஸூ’-ம் முதல் பேசும் படங்கள். காளிதாஸ் படத்தை இயக்கியவர் எச்.எம்.ரெட்டி. வெளியான தேதி 31.10.1931.

முதல் தமிழ் பேசும்படம் காளிதாஸ் எனப்பட்டாலும், அது தமிழ், தெலுங்கு மொழிகள் இடம் பெற்ற முதல் பன்மொழிப் படம். அவ்வாறிருக்க தெலுங்கு மொழியின் முதல் பேசும்படம் என்று காளிதாஸ் சொல்லப்படுவதில்லை. மாறாக, காளிதாஸுக்குப் பிறகு, வெளியான ‘பக்த பிரஹலாதா’ என்ற படம்தான் முதல் தெலுங்கு பேசும் படம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதுபோலவே முழுவதும் தமிழ் இடம் பெற்ற ‘ராஜா ஹரிச்சந்திரா’தான் முழு முதல் தமிழ்ப் படம். இதை இயக்கியவர் T.C.வடிவேலு நாயகர். ‘‘காலவ மஹரிஷி” தான் 2ஆவது படம் என்றும் சொல்லப்படுகிறது. ஆயினும், கிடைத்துள்ள சான்றுகள் அவ்வாறாக இல்லை. எனினும், காலவ மஹரிஷி படத்தை இயக்கியவரும் வடிவேலு நாயகர்தான். இவ்விரண்டு படங்களிலும் டெக்னிக்கல் டைரக்டராக இணைந்து பங்காற்றியவர் சர்வோத்தம் பதாமி. காளிதாஸ் வெளியான சில மாதங்களிலேயே (1932 ஏப்ரல்) சென்னையில் அப்போதைய சினிமா சென்ட்ரல் திரையரங்கில் திரையிடப்பட்ட படம் ‘ராஜா ஹரிச்சந்திரா’.

முழுதும் தமிழிலேயே பேசிய முதல் படத்திலிருந்து துவங்கி 1930,40களில் இயங்கிய இயக்குனரும், தமிழ் சினிமா முன்னோடிகளில் தவிர்க்கக் கூடாத ஒருவருமானவர் டி.சி. வடிவேலு நாயகர். கதை, வசனம், திரைக்கதை, பாடல்கள்,கலை இயக்கம் (ART DIRECTION) மற்றும் இயக்கம் ஆகிய பல்வேறு பணிகளைச் செய்து தமிழ் சினிமா பேசும்படக் காலத்தில் முதல் 2 பத்தாண்டுகளில் பங்காற்றியிருக்கிறார். துவக்கம் முதல் தொடர்ச்சியாகப் பணிபுரிந்திருக்கிகிறார்.ஏராளமான கலைஞர்களை அறிமுகப்படுத்தியும், வாய்ப்புகள் கொடுத்தும் வளர்த்திருக்கிறார்.

ஏ.நாராயணன், ராஜா சாண்டோ, ஆர்.பிரகாஷ் போன்ற பலரும் ஏற்கனவே தமிழில் (?) மௌனப் படங்களை எடுத்திருந்தபோதிலும், முதன்முதலில் சென்னையிலிருந்து புறப்பட்டு மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்குச் சென்று பேசும்படங்களை எடுத்தவர் வடிவேலு நாயகர்.

நாடகம்

வடிவேலு நாயகர் அன்று பிரபலமாகவிருந்த சுகுண விலாச சபை என்ற நாடக சபையின் முனைப்பான உறுப்பினர். நடிகராகவும், எழுத்தாளராகவும், ஒப்பந்ததாரராகவும் சுகுண விலாச சபையில் மும்முரமாக இயங்கியவர். நல்ல சங்கீத ஞானம் கொண்டவர். நன்றாகப் பாடக்கூடியவர். மெட்டுகளுடன் பாடல்களை எழுத வல்லவர். வள்ளி மணம் போன்ற இவர் எழுதிய நாடகங்கள் சுகுண சபையில் நடத்தப் பெற்றது. சில காலம் கன்னையா நாடக கம்பெனியில் பங்காற்றினார். கன்னையாவின் மறைவிற்குப் பிறகு கன்னையாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அது அண்மையில்தான் எமக்குக் கிடைத்தது.

சினிமா

அக்காலத்தில் நாடகத்திலிருந்து சினிமாவில் பங்காற்றியவர்களே நிறைய பேர். அவர்கள் 3 முதன்மையான குழுக்களைச் சேர்ந்தவர்களே. சுகுண விலாச சபா, டி.கே.எஸ். சகோதரர்கள் குழு, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி ஆகியவையே அவை. மற்ற குழுக்கள் இவற்றிலிருந்து கிளைத்தவை எனலாம். நாடகக் குழுக்களில் ‘வாத்தியார்’ என்றழைக்கப்படுபவர் கதை,திரைக்கதை,வசனம், நடிப்புப் பயிற்சி, நடிகர்கள் தேர்வு போன்ற பணிகளைச் செய்பவர்கள். இவர்கள் ‘நாடக இயக்குனர்’, ‘நாடக சூத்ரதாரி’ என்றழைப்பட்டனர் (Playwright). இவற்றுடன் பாடல்கள், இசை, அரங்க அமைப்பு போன்றவற்றையும் செய்தவர்கள் உண்டு. 1923இல் மறைந்துபோன சி.ரங்கவடிவேலு முதலியார் சுகுண விலாச சபையைச் சேர்ந்த சிறந்த நடிகர். இவர், மௌனப்படக் காலத்தில் திரைப்பட நடிகர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளித்ததை தியடோர் பாஸ்கரன் எழுதியிருக்கிறார். பம்மல் சம்பந்த முதலியார் சினிமாவில் ஆற்றிய பங்களிப்பும் நாடக இயக்குனர் என்பதாகவே இருந்தது. இவர்களைப் போலவே டி.சி.வடிவேலு நாயகர் சினிமாவில் ஆற்றிய பங்களிப்பு என்பதும் முதன்மையாக நாடக இயக்குனர் என்பதேயாகும். அதே வேளையில் 3 படங்களுக்குக் குறையாமல் (பட்டினத்தார், கவிரத்ன காளிதாஸ், விக்ரம ஸ்த்ரி சாகசம்) தனித்து இயக்கியும் இருக்கிறார். சுகுண விலாச சபையிலிருந்து சினிமாவில் பங்காற்றியவர்களில் வடிவேலு நாயகரே முதன்மையானவர். மேலும், பேசும்படங்கள் வந்த முதல் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே 15 படங்களுக்கும் மேலாக பங்கெடுத்திருப்பது போல் வேறு யாரும் இருப்பார்களா என்பதே ஐயத்திற்கிடமாகிறது. சினிமாவில் அவருடைய பங்களிப்பு வசனம் என்று மட்டும் சில இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவர் நாடக இயக்குனர் செய்யும் பணிகளனைத்தையும் செய்தார் என்பதற்கு சான்றுகள் கிடைக்கின்றன.

ஊசித்தட்டு நாடகங்கள்

கிராமஃபோன் அறிமுகமானதும் கர்னாடக இசைப்பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் போன்றவை ஒலிப்பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. பின்னர், நாடகங்களை கிராமஃபோனில் ஒலிவடிவில் வசனம், பாடல்கள், இசை ஆகியவற்றுடன் கேட்கும்படியான நடைமுறை வந்தது.இதுபோன்ற கிராமஃபோன் நாடகங்களை எழுதியவர்களில் வடிவேலு நாயகரும் ஒருவர். இந்தக் குறிப்பை அ.கா.பெருமாள் (தமிழ் இந்து) எழுதியிருக்கிறார். நாவலாசிரியர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

கலைஞர்கள் அறிமுகம்

முதல் தமிழ் பேசும் படம் மற்றும் துவக்கக் கால படங்கள் என்று வரும்போது, அவற்றில் பங்காற்றிய கிட்டத்தட்ட அனைவருமே அறிமுகம் என்று சொல்லத்தகும். அந்த வகையில் முதல் தமிழ்க் கதாநாயகரான V.S.சுந்தரேச அய்யர், D.R.முத்துலட்சுமி, P.B.ரங்காச்சாரி, கோல்டன் P.சாரதாம்பாள், கே.ஆர்.சாரதாம்பாள், N.கிருஷ்ணமூர்த்தி, கொத்தமங்கலம் சீனு, கொத்தமங்கலம் சுப்பு, M.M.தண்டபாணி தேசிகர், T.M. சாரதாம்பாள், இசையமைப்பாளர்கள் G.ராமநாதன், M.D.பார்த்தசாரதி, போன்ற புகழ்பெற்ற பலரையும் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவ்வாறு நடிகர்கள் முதல், தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை ஏராளமானவர்கள் வடிவேலு நாயகரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.

முன்னோடி

புதிய பட நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் போன்றவர்களுக்கு கலைத்துறையில் அனுபவமுள்ளவராகத் துணை நின்று தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பங்காற்றியிருக்கிறார்.தமிழ் சினிமாவின் மகத்தான முன்னோடிகளில் ஒருவரான ஏ. நாராயணனுடன் உறுதுணையாய் இணைந்து பல படங்களில் கலைத்துறை சார்ந்த அனுபவம் கொண்டவராகப் பணியாற்றியிருக்கிறார்.அதேபோல் வேல்பிக்சர்ஸ் எம்.டி.ராஜன், இயக்குனர் ராமுலு நாயுடு, கண்ணாம்பாவின் கணவரும் இயக்குனருமான கே.பி.நாகபூஷணம், பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா போன்ற ஸ்டுடியோ அதிபர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு அவர்களுடைய துவக்கக் காலத்தில் பெரிதும் பக்கபலமாய் இருந்து பங்காற்றியிருக்கிறார்.

கதை,திரைக்கதை, உரைநடை ஆசிரியர்

துவக்கக் காலங்களில் படங்களை எழுதி, இயக்கியும் வந்தவர் பின்னாட்களில் இணை இயக்கம்,கதை,திரைக்கதை, வசனம் போன்ற பங்களிப்புகளைச் செய்துள்ளார். அந்த நாட்களின் மிகவும் குறிப்பிடத்தக்க கதை வசன எழுத்தாளர்களில் ஒருவர். ‘விக்ரம ஸ்திரி சாஹசம்’ கதையே பின்னர் ஜெமினியின் தயாரிப்பான மங்கம்மா சபதமாக வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால், சர்ச்சைக்குரியதாகி விமர்சிக்கப்பட்டது. ஆனால், விக்ரம ஸ்திரி சாஹசம் படத்தின் திரைக்கதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. பட்டினத்தார் படம் இதுவரை மூன்று வெவ்வேறு தயாரிப்புகளாக வந்துள்ளன. அவை மூன்றிலும் சிறந்த கதை,திரைக்கதை கொண்ட படம் வடிவேலு நாயகர் எழுதி, இயக்கிய பட்டினத்தார்தான் என்பதை ஒப்பிட்டுப் பார்க்கும் எவரும் ஏற்றுக்கொள்வர். இவரின் எழுத்தில் உருவான துளசி ஜலந்தர் படம் மீண்டும் படமாக்கப்பட வேண்டும் என்று அந்த நாளில் படத்தைப் பார்த்தவரான எழுத்தாளர் விட்டல் ராவ் குறிப்பிடுகிறார். துளசி ஜலந்தர் இன்று கிடைக்காமல் அழிந்துவிட்ட படங்களில் ஒன்று. சாவித்ரி (1941) படத்தில் நடித்த புகழ்பெற்ற வடஇந்திய நடிகை சாந்தா ஆப்தே-வுக்கு தமிழ் கற்றுத்தந்த இருவரில் வடிவேலு நாயகரும் ஒருவர்.

புகழை விரும்பாதவர்

வடிவேலு நாயகர் பெயர் இருக்க வேண்டிய இடங்களிலேயே இல்லை என்பதுதான் பரவலான தேடுதலில் கண்டடைந்த ஓர் உண்மை. அதாவது, அவர் தன்னுடைய பெயரை முன்னிறுத்திக் கொள்வதை விரும்பாதவராக இருக்குமோ என்று யோசிக்கவைக்கிறது. போலவே, தன்னுடைய பங்கை குறைத்துக்காண்பித்திருக்கிறார் என்றும் எண்ண வேண்டியதாகிறது. பழைய ஆவணங்களில் இவர் தொடர்புடைய பொது நிகழ்ச்சிகளிலிருந்து, சினிமாப்பங்களிப்புவரை இவரின் பெயர் அரிதாகவே வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

சுகுண விலாச சபையினர் விடுதலை இயக்கத்துக்கு ஆதரவான நாடகங்களைப் பொதுவாக நடித்ததில்லை என்று தெரிகிறது.அங்கிருந்தே வந்தவரான வடிவேலு நாயகர் தொடர்புள்ள படங்களும் விடுதலை இயக்கக் கதைப்படங்களாக இல்லை.மாறாக, விடுதலைக்குப் பிறகும், இன்றும் நீடிக்கும் பெண்ணுரிமை, சாதிய சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது.

ஆர்யமாலா, ஜகதலப்ரதாபன், சதிமுரளி போன்ற படங்களின் கதைகளையும், அவற்றைத் தேர்ந்தெடுத்ததையும் கவனிக்கும்போது ஒன்றை உணரலாம். சாதிய ஏற்றத் தாழ்வுகளை எதிர்க்கும் ஒரு களமாகவே இவை இருக்கின்றன. பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போட்டுக் கொள்வதையே வழக்கமாக வைத்திருந்த அந்தக் காலத்தில் இப்படி சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான படங்கள் எடுக்கப்பட்டதில் வடிவேலு நாயகரின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. 1947 துளசி ஜலந்தருக்குப் பிறகு, வடிவேலு நாயகர் எந்தப் படத்திலும் பங்காற்றியதாக, எமக்கு இதுவரை விவரம் இல்லை.

12.7.1953 அன்று திருவல்லிக்கேணி நேஷனல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க விழாவைத் துவக்கி வைத்து நிகழ்வில் துவக்கவுரை ஆற்றியுள்ளார். மூத்த நடிகர் மற்றும் நாடகாசிரியர் என்ற முறையில் சிறப்பிக்கப்பட்டுள்ளார். இவரைப் போன்றே பழம்பெரும் இயக்குனரான எச்.எம்.ரெட்டி தலைமை வகித்திருக்கிறார். B.N. சர்க்காரின் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலைஞர்களுக்கு விருதுகள், பொற்கிழி அளித்தல், திருவுருவப்படங்கள் திறந்து வைத்தல் போன்ற சிறப்பு மரியாதைகளைச் செய்யும் தனுடைய பணியில் 1985-86 இல் டி.சி.வடிவேலு நாயகர் அவர்களுடைய திருவுருவப்படத்தையும் திறந்து சிறப்பித்துள்ளது

வடிவேலு நாயகர் பங்களிப்பு செய்த படங்கள்

1.ராஜா ஹரிஸ்சந்திரா 2.காலவ மஹரிஷி அல்லது சித்ரசேனன் உபாக்யானம் (1932), 3.பிரஹலாதன் (1933), 4.சக்குபாய், 5.திரௌபதி வஸ்திராபஹரணம் (சீனிவாசா சினிடோன் தயாரிப்பு ) (1934), 6.பட்டினத்தார்* (வேல் பிக்சர்ஸ்) 7.மீராபாய் 8.விராட பருவம் அல்லது ப்ருஹன்னளை 9.விஸ்வாமித்ரா (1936), 10.கவிரத்ன காளிதாஸ் 11.கிருஷ்ண துலாபாரம் 12.விக்ரம ஸ்திரீ சாகசம் & நவீன ஸ்திரீ சாகசம் (1937), 13.பிரகலாதா* – 1939 14.ரம்பையின் காதல் அல்லது யத்பவிஷ்யன்*–(1939), 15.சதி முரளி (1940) 16.சாவித்ரி* 17.ஆர்யமாலா* (1941), 18.ஹரிச்சந்திரா* 19.ஜகதலப்ரதாபன்* – 1944, 20.புலந்திரன் – 1946 ( வெளிவரவில்லை. பாதியில் நின்றுவிட்டது), 21.துளசி ஜலந்தர்- 1947

* குறிப்பிட்ட படங்கள்  இன்றும் கிடைக்கின்றன. பட்டினத்தார் சுமார் 1மணி நேர நீளம் மட்டும் கிடைக்கிறது.

வடிவேலு நாயகர் பற்றிய அரிய, விரிவான தகவல்கள் மற்றும் புகைப்படங்களுடன் கட்டுரையாசிரியர் எழுத்தில் ‘பேசும் பட முதல்வர்’ என்றொரு நூல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. மின்னங்காடி பதிப்பகம் (72992 41264) மின் புத்தகமாகவும் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.