சமீபத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் பேசிவிட்டு திரும்பும்போது அந்தப் பள்ளியின் ஆசிரியை ஒருவர் தனியாகப் பேச வேண்டுமெனக் கேட்டு அழைத்தார்.

“சார், எனக்குத் தெரிந்த ஒரு மாணவி இருக்காங்க, ஏழாம் வகுப்புதான் படிக்கிறாங்க…”என கொஞ்சம் இடைவெளி விட்டு, “சார், நான் சொல்றத நீங்க வெளிய சொல்லிட மாட்டீங்களே? ” என்றார். சொல்லமாட்டேன் என நம்பிக்கை கொடுத்த பிறகு தொடர்ந்தார்.

“சார், நான் அவளோட போன்ல நிறைய போர்ன் வீடியோஸ் இருப்பதைப் பார்த்தேன். பார்க்கிறானு நினைக்கிறேன். இத எப்படி அவகிட்ட கேட்கிறது? எப்படி நான் இந்த விஷயத்த டீல் பண்றது?” என்று கேட்டு முடிக்கும்போது அவரது உடல் வியர்த்திருந்தது.

அவருக்கிருந்த பதட்டத்தை வைத்து அவருக்கு நன்றாகத் தெரிந்த பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என யூகித்துக்கொண்டே “இதுல என்ன தயக்கம்? நேரடியா அந்தப் பொண்ணு கிட்டயே இது எப்படி உங்கிட்ட வந்ததுனு கேட்க வேண்டியதுதானே?” என்றேன்.

“சார், கொஞ்ச நாளா அவ நடவடிக்கையே சரியில்ல. வீட்ல யார்கிட்டயும் பேசுறது இல்ல, எப்ப பார்த்தாலும் போன்ல தான் இருக்கா, ஏதாவது சொன்னா கோவப்படறா, ரூம லாக் பண்ணிக்கிறா, ஃபோன லாக் பண்ணிக்கிறா, ஒரு நாள் அவ ஃபிரண்ட்கிட்ட பேசிட்டு இருந்தப்ப என்கிட்ட பேசச் சொல்லி கொடுத்தா, நான் பேசிட்டு தற்செயலா அவ கேலரிய ஓப்பன் பண்ணி பார்த்துட்டு பயந்துட்டேன், அரை குறை டிரெஸ்ஸோட அவளோட ஃபோட்டோ அத்தனை இருந்தது எல்லாமே அவளே எடுத்துக்கிட்டது. எனக்கு என்ன பண்றதுனே தெரியல, என்னடி இதெல்லாம்னு கேட்டேன், நீ ஏன் மம்மி என் ஃபோன பார்க்குறனு கோபமா சொல்லிட்டு போய்ட்டா, எனக்கு பயமா இருக்கு சார், என்னோட பொண்ணுதான் சார் அவ. என்ன பண்றது சொல்லுங்க, என்ன சொல்லி அவள திருத்தறது?” என கேட்டு முடிக்கும்போது அவரது கண்கள் கலங்கியிருந்தன.

வளரிளம் பருவத்தினரிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை நாம் அத்தனை அச்சத்துடன் கவனித்துக்கொண்டிருக்கிறோம். இரண்டு மாறுபட்ட தலைமுறைகளினிடையே வாழும் ஒரு தனித்துவ தலைமுறையினராக நாம் இருக்கிறோம். அதே போல மாபெரும் இரண்டு எதிரெதிரான கலாச்சார மாற்றங்களைக் கண்கூடாகப் பார்த்த சாட்சியாகவும் நாம் இருக்கிறோம். ஒருவரிடம் பேச வேண்டும் என்பதற்காக இரவெல்லாம் விழித்திருந்து நீண்ட தூரம் பயணித்த தலைமுறையாகவும் நாம் இருந்தோம்.இருந்த இடத்தில் இருந்தே உலகின் எந்த மூலையில் இருப்பவருடன் அவரின் முகம் பார்த்துப் பேசக்கூடிய சொகுசை அனுபவிப்பவராகவும் நாம் இருக்கிறோம்.வேறு எந்தக் காலத்தில் வாழ்ந்தவரும் இத்தனை வேகமான தலைகீழான மாற்றங்களை ஒரே வாழ்நாளில் அனுபவித்திருக்க வாய்ப்பில்லை. வளரிளம் பருவத்தினரிடம் உருவாகி வரும் இந்த மாற்றங்களையும் நாம் அப்படித்தான் ஒரு குழப்பமான மனநிலையில் என்ன செய்வதென்று அறியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பதினான்கு வயதுடைய மாணவி தன்னுடைய ‘கிரஷ்’ என ஒருவனை இன்ஸ்டாவில் பகிர்ந்த போது அதைப்பார்த்த அவளது பெற்றோருக்கு இதை எப்படி அணுகுவது எனத் தெரியவில்லை. பதினான்கு வயதில் என்ன ‘கிரஷ்’? அப்படி என்றால் உண்மையான பொருள் என்ன? என அவர்களுக்கு எதுவும் விளங்கவில்லை. பெண்ணிடம் சென்று கேட்டபோது “வாட்ஸ் யுவர் பிராப்ளம் மாம்?” என அத்தனை அலட்சியமாகச் சொல்லி கடந்துவிடுகிறாள். ஆனால் நம்மால் அவ்வளவு எளிதாக அதை அலட்சியப்படுத்த முடியவில்லை. “குழந்தைகளின் எதிர்காலம் எங்கே போகிறது என பயமாக இருக்கு சார்” என ஒரு தலைமை ஆசிரியர் எனது கையை பிடித்துக்கொண்டு சொன்னபோது உண்மையில் அவர் பயந்துதான் போயிருந்தார்.

கிராமத்துப் பள்ளி மாணவர்களுடன் தேர்வு தொடர்பாக உரையாடச் சென்றிருந்தேன். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒன்றை உணர்ந்து கொண்டேன். ஒன்பதாம் வகுப்பைக் கடந்த அத்தனை மாணவ, மாணவிகளும் இன்ஸ்டாவில் இருக்கிறார்கள். சிலருக்கு இன்ஸ்டாவில் இரண்டு மூன்று கணக்குகள்கூட இருக்கின்றன.

“அப்படி என்னதான் இன்ஸ்டாவில் இருக்கிறது?” எனக் கேட்டபோது,

“நிறைய ஃபிரண்ட்ஸ் கிடைப்பாங்க சார், எல்லார் கூடயும் பேசலாம், நம்மள எந்த ஒளிவு மறைவு இல்லாம முழுமையா வெளிப்படுத்திக்கலாம், அது முக்கியம் இல்லையா சார்?” என்றாள் ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி.

“யாரோ ஒருத்தன் கிட்ட தினமும் சாட் பண்ணிட்டு இருந்திருக்கா, சில நேரம் வீடியோல எல்லாம் கூட பேசியிருக்கா, அவளோட போட்டோவ கூட அவன் கிட்ட ஷேர் பண்ணிருக்கா. நான் சந்தேகம் வந்து யாரு அவன்னு பார்த்தேன், அவனோட முகம் கூட அவன் புரஃபைல்ல இல்ல, எங்கேயும் அவனோட அடையாளம் இல்ல, வீடியோ கால்ல கூட அவன் அவன வெளிப்படுத்திக்கவே இல்ல. தன்னை மறைச்சிக்கிட்டுப் பேசுற ஒருத்தன நம்பி எப்படி இந்த பொண்ணுங்க தங்களோட அந்தரங்க படத்த எல்லாம் அனுப்புறாங்கன்றது எனக்குப் புரியவே இல்ல சார்” என ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் தனது மகளை அழைத்து வந்து சொன்ன போது அந்த பெண்ணின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. உண்மையில் இன்ஸ்டாவை அவர்கள் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள் என்ற நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என நான் நம்பவில்லை.

ஏன் திரும்ப திரும்ப இன்ஸ்டாவை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன் என்றால் இன்றைய வளரிளம் பருவத்தினரிடம் உருவாகி வரும் மாற்றங்களை நாம் இன்ஸ்டாவை அவதானிப்பதன் வழியாகப் புரிந்து கொள்ள முடியும். அதற்கு முதலில் நீங்கள் அவர்களைப் பற்றி எந்த முன்முடிவுகளும் இல்லாமல் இருக்க வேண்டும். “இந்தக் காலத்து பசங்களே இப்படி தான் சார்…” என்ற ஸ்டீரியோ டைப் சிந்தனைகளில் இருந்து வெளியே வந்து உண்மையில் அவர்களிடம் என்ன நடக்கிறது என்பதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். இன்ஸ்டா கிட்டத்தட்ட இந்த மாற்றங்களைப் பிரதி பலிக்கும் ஒன்றாக இருக்கிறது.

கடந்த பத்து வருடங்களாக வளரிளம் பருவத்தினரின் உடலளவிலும் மனதளவிலும் சிந்தனையளவிலும் மதிப்பீடுகளிலும் மெல்ல மெல்ல உருவாகி வந்த மாற்றங்கள் ஊரடங்கு காலத்திற்குப் பிறகு வேகமெடுத்திருக்கிறது. மரபான வீட்டுச் சூழலும், பெற்றோர்களின் மனநிலையும் அவர்களிடம் உருவாகி வந்த இந்த மாற்றங்களை ஓரளவிற்குத் தடுத்து வந்தாலும் ஊரடங்கு காலத்தில் நேரடியாக இவற்றை எதிர்கொண்டதன் விளைவாக இவற்றின் மீது இருந்து தயக்கத்தை உடைத்துக்கொண்டு வளரிளம் பருவத்தினர் வெளியே வந்திருக்கிறார்கள். “எங்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்” என்பதுதான் அவர்கள் இதன் வழியாக பெற்றோர்களுக்குச் சொல்லும் செய்தியாக இருக்கிறது.

வளரிளம் பருவத்தினரின் சிந்தனையளவில் உருவாகி வந்திருக்கும் இந்த மாற்றங்கள் புறவுலகின் மாற்றங்களோடு நேரடித் தொடர்புடையன. பின் நவீனகாலத்தின் தாராளவாதம் உருவாகி வைத்திருக்கும் சந்தை மனநிலை வளரிளம் பருவத்தினரின் புதிய மாற்றங்களோடு நேரடித் தொடர்புடையது. தனி நபரின் மீது கட்டாயமாக்கப்படும் புதிய பொறுப்புகள் அவர்களை சுயதேவைகளைப் பிரதானமாக கொண்டவர்களாக மாற்றியிருக்கிறது. ஒரு சமூகத்திற்கு இருக்க வேண்டிய பொறுப்புகளை தாராளமையவாத அரசாங்கங்கள் புறக்கணித்ததன் விளைவாக வளரிளம் பருவத்தினர் தனியாகத் தங்களை உணருகிறார்கள். தங்களைத் தாங்களே வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர்களைத் தள்ளியதன் விளைவாக அவர்கள் தங்களைப் பற்றியான சுயதேடலிலும், சுய அடையாளத்தை உணர்வதிலும் அத்தனை முனைப்பாக இருக்கிறார்கள்.

டிஜிட்டல் தலைமுறை இளைஞர்களைப் பொறுத்தவரை அவர்களுக்குப் பிறகுதான் மற்றவையெல்லாம்.சுய விருப்பங்களும்,சுய அடையாளமும் தான் அவர்களைப் பொறுத்தவரை முக்கியமான ஒன்று. அதில் எந்த சமரசமும் செய்ய அவர்கள் எப்போதும் விரும்புவதில்லை. ஒரு பைக் வாங்கித் தரவில்லை என்பதற்காக தாயை கொலை செய்யும் வரை சென்ற வளரிளம் பருவத்து மாணவன் இதன் மோசமான முன்னுதாரணம். இந்த அளவிற்குத் தீவிரமாக இல்லையென்றாலும் கூட அவர்கள் தங்களின் தேவைகளுக்காக மற்றவர்களை உபயோகப்படுத்திக்கொள்ளும் மனப்பான்மையுடனே இருக்கிறார்கள். தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டால் அவர்களை உடனடியாக உதறிவிடவும் கூட தயாராக இருக்கிறார்கள்.

போதைப் பழக்கவழக்கம், படிப்பில் ஆர்வமின்மை, கவனமின்மை, பெற்றோர்களிடம் ஏற்படும் முரண்பாடுகள் போன்றவைதான் பத்து வருடங்களுக்கு முன்பு வளரிளம் பருவத்தில் பார்த்த முக்கியமான பிரச்சினைகளாக இருந்தன. ஆனால் இன்று முற்றிலும் நிலைமை மாறியிருக்கின்றன. “ஆண்-பெண் உறவு சிக்கல்கள், பிரேக் அப் பிரச்சினைகள், சமூக வலைதளங்களில் நிகழ்த்தும் உடல் ரீதியான, உளவியல் ரீதியான வன்முறைகள் போன்ற பிரச்சினைகள்தான் இன்று பிரதானமாக இருக்கின்றன. ஏழாம் வகுப்பு மாணவிக்கு ‘கிரஷ்’ இருக்கிறான் என்பதை உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இன்றைய காலத்தில் அது அவ்வளவு சாதாரணமாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆண்-பெண் உறவு என்பது இன்று மிகவும் வெளிப்படையானதாக, எளிமையான ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது. முன்னிருந்த ரகசியத்தன்மை அதற்கு இல்லை. ஒரு பெண் தனக்குப் பிடித்த ஆணுடன் மிக சகஜமாக உரையாட முடிகிறது. இந்த உரையாடல் என்பது அடுத்தடுத்த கட்டங்களுக்கு மிக எளிதாக நகர்ந்துவிடுகிறது. எதிர் பாலின மோகங்கள் இன்னும் வெளிப்படையாகியிருக்கின்றன. ஒருவருடன் நெருக்கமாகப் பழகுவது என்பது இன்னமும் புகார் சொல்லக்கூடிய கேலி செய்யக்கூடிய ஒன்றாக அவர்களிடம் இல்லை. இந்த உறவும் கூட இன்னொருவரின் மீதான உள்ளார்ந்த அன்பின் காரணமாகவோ அல்லது அக்கறையின் காரணமாகவோ உருவாகுவதில்லை. சுய அடையாளத் தேடலின் விளைவாகவும், அவர்களது தனிப்பட்ட பாலியல் கிளர்ச்சியின் விளைவாகவுமே உருவாகிறது. பாலினக் கவர்ச்சியும், மோகமும் அத்தனை இயல்பாக உருவாகும்போது அதை மறைத்துக்கொள்ள அவர்கள் எப்போதும் முயன்றதில்லை, இதைக் கடந்த தலைமுறையின் ஆண்-பெண் உறவோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். எதிர் பாலினரோடு பழகுவதை ரொமாண்டிசைஸ் செய்து கொண்டு அதன் மீது அன்பு, காதல், பாசம் என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு தங்களது அந்தரங்க உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டதைப் போல் இவர்கள் இல்லை. அதைக் குறைந்தபட்சம் ஒரு பாலினக்கவர்ச்சி என ஒத்துக்கொள்கிறார்கள் . அதைத்தங்களது  இணையிடமே எந்த ஒரு குற்றவுணர்ச்சியும் இல்லாமல் வெளிப்படுத்த இவர்களால் முடிகிறது. போலியான புனிதங்கள் இங்கு இல்லை. ஆண்-பெண் உறவு என்பது இன்றைய வளரிளம் பருவத்தில் தன் முனைப்பின் வழியாகவே நடப்பதாலும், அதில் எந்தமிகைப்படுத்தலும் இல்லாமல் இருப்பதாலும் அதன் மீது அவர்கள் ஆத்மார்த்தமாகப் பிணைக்கப்படுவதில்லை.சுயம் காயப்படும் போது அல்லது மற்றொருவரின் தன்னை சார்ந்திருக்கும் நிலை உருவாகும் போது மிக சாதாரணமாக அதிலிருந்து இவர்களால் வெளியேறவும் முடிகிறது. அதற்கு இந்த வெளிப்படைத்தன்மையும், நேர்மையுமே காரணமாக இருக்கிறது. இப்படி இவர்கள் பிரிவதை முந்தைய தலைமுறையினரின் பால்ய கால அனுபவங்களுடன் நாம் ஒப்பிட்டு பார்க்கும் போது மிகுந்த பதட்டமடைகிறோம், நம் காலத்து ஆண்-பெண் சார்ந்த மதிப்பீடுகள் இதை அத்தனை சாதாரணமாகப் பார்ப்பதில் இருந்து நம்மைத் தடுக்கிறது. இது நமது பிரச்சினையே தவிர அவர்களின் பிரச்சினை அல்ல.

“வளரிளம் பருவத்தினரின் மனநலம்” தொடர்பான ஒரு சர்வதேச கருத்தரங்கில் சமீபத்தில் கலந்து கொண்டேன். அங்கே பேசிய மேற்கத்திய நாட்டைச்சார்ந்த உளவியல் நிபுணர் ஒருவர் “பொதுவாகவே வளரிளம் பருவத்தினரை நாம் ஆரோக்கியமானவர்கள் என நம்பிக்கொண்டிருக்கிறோம், சுகாதாரம் தொடர்பான நமது திட்டமிடல்கள் பெரும்பாலும் குழந்தைகளையோ அல்லது நடுத்தர, முதிய வயதினரையோ தான் இலக்காகக் கொண்டிருக்கின்றன, அதனால் வளரிளம் பருவத்தினரை நாம் புறக்கணித்துவிடுகிறோம். ஆனால் சமீப காலங்களில் மிக அதிகமான உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளால் வளரிளம் பருவத்தினரே பாதிக்கப்படுகிறார்கள். போதைப்பொருள், சாலை விபத்து, தற்கொலைகள், முறையற்ற பாலுறவினால் உருவாகக்கூடிய பாலியல் நோய்கள் சமீபத்தில் வளரிளம் பருவத்தினரிடம் மிக அதிகமாகப் பார்க்கிறோம். இன்றைய சூழலில் வளரிளம் பருவத்தினரிடம் உருவாகி வரும் வரைமுறையற்ற பாலுறவுசார்ந்த பிரச்சினைகள் சமூகத்தின் வேருக்கடியில்யாரும் அறியாத வகையில் பரவிக்கொண்டிருக்கின்றன, அதை நாம் கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சுகாதாரத்திற்கான திட்டங்களில் இனியும் நாம் வளரிளம் பருவத்தினரைப் புறக்கணிக்க முடியாது” என்றார். அங்கிருந்த அத்தனை பேருக்கும் உண்மையில் அதிர்ச்சியானதாகவே இருந்தது.

அவர் சொன்னதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. சமீபத்தில் வெளியான உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி சர்வதேச அளவில் பதினைந்து வயதில் இருந்து பத்தொன்பது வயது வரையான பெண்களின் இறப்பிற்கு முதன்மையான காரணமாகப் பேறுகாலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள்தான் இருக்கின்றன. மேலும் உலகம் முழுவதும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வளரிளம் பருவத்தினர் எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அதற்கு காரணமாக முறையற்ற பாலுறவு இருக்கிறது என்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய குடும்ப நல ஆய்வின் (National family health survey-3 (2005-06)) (National family health survey-4 (2015-2016) முடிவுகள்

சில அதிர்ச்சியான செய்திகளை சொல்கிறது. அதில் முக்கியமானவை:

  • முன்னெப்போதயும் விட இளவயதில் பாலுறவில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமான அளவு கூடியிருக்கிறது
  • ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடனான பாலுறவு வளரிளம் பருவத்தினரிடம் அதிகரித்து வருகிறது.
  • முதல் முறை பாலுறவு கொள்ளும் சராசரி வயது குறைந்திருக்கிறது.
  • பாதுகாப்பற்ற பாலுறவின் காரணமாக வளரிளம் பருவத்தினரிடம் பாதுகாப்பற்ற கர்ப்பம் தரித்தல்(Unsafe pregnancy) அதிகரித்திருக்கிறது. பாலியல் நோயினால் அவர்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்திருக்கிறது.
  • நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலுமே கூட இளவயது பாலுறவும், கர்ப்பமடைவதும் அதிகரித்திருக்கிறது.
  • பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த வளரிளம் பருவத்தினரிடம், நடுத்தர மற்றும் உயர்தர பொருளாதார வகுப்பைச் சார்ந்தவர்களை விட முறையற்ற பாலுறவும், ஒன்றுக்கு அதிகமான இணையும் அதிகமாக இருக்கிறது.
  • போதைப் பழக்கவழக்கங்களும், சாலை விபத்துகளும், தற்கொலைகளும் வளரிளம் பருவத்தினரிடம் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

இந்தத் தரவுகளைப் பார்க்கும்போது, வளரிளம் பருவத்தினர் நமது கவனத்தில் இருந்து விலகி ஆபத்தான வாழ்க்கை முறைகளில், பழக்கவழக்கங்களில் நுழைந்துகொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதைத்தடுப்பதற்காக என்ன திட்டங்கள் நமக்கு இருக்கின்றன?.வெறும் ஒழுக்கவியல் கோட்பாட்டுடனே இன்னமும் நாம் அணுகிக்கொண்டிருந்தால் இந்தப் பிரச்சினைகள் எதிர்காலத்தில் இன்னும் தீவிரமடையும். அதனால் உடனடியாகச் செயல்பட்டு இந்தப் பிரச்சினைகளின் வேர்களை முழுமையாகப் புரிந்து கொண்டு அதற்கான தீர்வுகளைத் திறந்த மனதுடன் சிந்திக்க வேண்டும்.

இந்திய மக்கள்தொகையில் 22 சதவீதம் வளரிளம் பருவத்தினரே இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை வரும்காலத்தில் இன்னும் அதிகமாகும். முந்தைய தலைமுறையை விட இன்றைய வளரிளம் பருவத்தினரின் வளரும் சூழல் என்பது முற்றிலும் வேறாக இருக்கிறது. ஒட்டுமொத்த சமூகமே அதன் மதிப்பீடுகளில், சகமனித உறவுகளில், மானுட மாண்புகளில், அறம் தொடர்பான விழுமியங்களில், புதிய பொருளாதாரக் கொள்கைகளில் பெரும் மாற்றங்களைக் கடந்த பத்தாண்டுகளில் சந்தித்திருக்கிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் வளரிளம் பருவத்தினரின் சிந்தனையில், வாழ்க்கை முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன் விளைவாக அவர்களின் முன்னுரிமைகள் மாறியிருக்கின்றன. சுதந்திரமான ஒருவராக, எதற்கும் கட்டுப்படாத ஒருவராக, யாரையும் சாராத ஒருவராக, அத்தனையும் பரிசோதித்துப் பார்க்கும் ஒருவராக அவர்கள் மாறியிருக்கிறார்கள். இந்த மாற்றங்களின் விளைவாக அவர்கள் மிகுந்த சுயநலம் கொண்டவர்களாகியிருக்கிறார்கள். அவர்களின் சிந்தனையில், வாழ்க்கை முறைகளில் நடந்திருக்கும் இந்த மாற்றங்களுடன், எல்லையற்ற டிஜிட்டல் உலகமும், வரைமுறையற்ற சமூக வலைதள பயன்பாடும் இணையும்போது அது அவர்களை ஆபத்தான பழக்க வழக்கங்களில் கொண்டு சேர்க்கிறது. குடும்ப அமைப்பின் தனித்துவமான மதிப்பீடுகள் குறைந்ததாலும், மதம் போன்ற அறத்தைப் போதிக்கும் நிறுவனங்கள் செயலிழந்ததாலும் அவர்கள் இன்னும் தன்னிச்சையாக எந்தக் குற்றவுணர்வுமின்றி இந்த ஆபத்தான பழக்கவழக்கங்களைப் பரிசோதித்துப் பார்க்கிறார்கள். இந்தப் பின்னணியிலேயே வளரிளம் பருவத்தினரின் சமீபத்திய பிரச்சினைகளை நாம் பார்க்க வேண்டும். இதைத் தனிப்பட்ட ஒருவரின் பிரச்சினையாகச் சுருக்கிப் புரிந்து கொள்ளாமல் அத்தனை மட்டங்களிலும் நடக்கும் மாற்றங்களோடு புரிந்து கொண்டால்தான் இதற்கான முழுமையான தீர்வை எட்ட முடியும்.

ஒருவர் தனது சுய பாலியல் அடையாளத்தை உணர்வதும், பாலின ஈர்ப்பு உருவாகுவதும், எதிர் பாலின மோகமும் அது சார்ந்த கிளர்ச்சியும் வளரிளம் பருவத்தில்தான் நடக்கிறது. சமூக, பொருளாதாரச் சூழல், கல்வி, குடும்ப அமைப்பு போன்றவை இந்த வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. இந்தப் பருவத்தில் பாலுறவில் ஈடுபடுவது என்பது பல வகைகளில் வளரிளம் பருவத்தினருக்கு ஆபத்தான ஒன்று. குறிப்பாகப் பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாக இளவயது கர்ப்பம் தரித்தலும், எச்.ஐ.வி. போன்ற பாலியல் நோய்களும் வருவதற்கான சாத்தியங்களும் அதிகம். அதனால் முறையான பாலியல் கல்வியும், அது சார்ந்து உருவாகி வரும் உடல் ரீதியான மாற்றங்களையும், பாதிப்புகளையும் பற்றி அவர்களுக்கு கொடுக்கப்பட ஆலோசனைகளும் மிக முக்கியமானது. ஆனால் வளரிளம் பருவத்தினரிடம் பாலியல் சார்ந்து பேசுவதே தவறானது. அதுதான் அவர்களின் நடத்தையைப் பாதிக்கும் என்றுதான் நாம் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறோம். சமீபத்தில் அதிகரித்திருக்கும் இளவயதுப் பிரசவங்களையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்க அனைத்து வளரிளம் பருவத்தினருக்கும் கருத்தடை சாதனங்கள் தொடர்பான விழிப்புணர்வை பதிமூன்று வயதிலிருந்தே ஏற்படுத்த வேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

இந்தியாவின் தேசிய குடும்ப நல ஆய்வின் முடிவுகளைக் கொண்டு, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கட்மேஷர் ஆய்வு நிறுவனம் (Guttmacher Institute, 2020) “Adding it up: Investing in Sexual and Reproductive Health 2019” என்ற ஆய்வு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதில் உள்ள சில முக்கியமான அம்சங்களைப் பார்ப்போம்:

  • இந்தியாவில் 2 மில்லியன் வளரிளம் பருவத்தில் உள்ள பெண்களுக்கு கருத்தடை சாதனங்கள் தேவையான நேரத்தில் கிடைப்பதில்லை.
  • 78 சதவீதம் வளரிளம் பருவத்தில் நடக்கக்கூடிய கருச்சிதைவு பாதுகாப்பற்ற முறையில் நடக்கிறது, இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கிறது.
  • கிட்டத்தட்ட 2 லட்சம் வளரிளம் பெண்களுக்கு கருச்சிதைவிற்குப் பிறகான முறையான மருத்துவப் பராமரிப்பு கிடைப்பதில்லை.

மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து வளரிளம் பெண்களுக்கும் முறையான பாலியல் கல்வியும், தகவல்களும், தடையில்லாமல் கருத்தடை சாதனங்களும், பிரசவத்திற்கு அல்லது கருச்சிதைவிற்குப் பிறகான முறையான மருத்துவப் பராமரிப்பும் கிடைத்திருந்தால், கிட்டத்தட்ட எட்டு லட்சம் திட்டமிடாத, பாதுகாப்பற்ற பிரசவங்களையும், ஐந்து லட்சம் முறையற்ற கருச்சிதைவையும் தடுத்திருக்கலாம் என்கிறது. போதைப் பழக்க வழக்கங்கள், சாலை விபத்து, தற்கொலைகள் போன்ற பிரச்சினைகளும் கணிசமான அளவில் வளரிளம் பருவத்தினரிடம் அதிகரித்து வந்தாலும் இளவயது பாலுறவும் அது சார்ந்த நடவடிக்கைகளும் மிக முக்கியமான பிரச்சினைகளாக சமீப காலத்தில் உருவாகி வருகின்றன. இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்கள் இதற்குப் பெரும் உதவியாக இருக்கின்றன. அந்தரங்க படங்களும், வீடியோக்களும் மிகவும் சகஜமாகப் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. இது சார்ந்த தயக்கங்களும், அவமானங்களும் இரு பாலினருக்குமே கூட குறைந்திருக்கிறது. அதனால் ஏற்படும் மனவுளைச்சல்களும், அது ஏற்படுத்தும் உடனடி மற்றும் நீண்ட நாட்களுக்கான தாக்கங்களும் நாம் நினைப்பதை விட அதிகமாக இருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் உணர்ந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை . குடும்பத்தினருடனான உரையாடல்கள் குறைந்து போயிருக்கும் சூழலில் இந்தப் பிரச்சினைகள் தீவிரமடையும் சூழலில்தான் குடும்பத்தின் கவனத்திற்கும் வருகின்றன. ரகசியமாக இவை வளரிளம் பருவத்தில் ஏற்படுத்தும் காயங்கள் அதிகமாக இருந்தாலும், இளவயது கர்ப்பங்களும், கருச்சிதைவுகளும் அதே அளவில் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் இன்னமும் நாம் ஒன்றும் நடக்காதது போல முகத்தைத் திருப்பிக்கொள்ள முடியாது.

இது தொடர்பான ஆய்வு முடிவுகளும், உளவியல் நிபுணர்களும் தொடர்ந்து நம்மை எச்சரித்துக் கொண்டே வருகிறார்கள். வளரிளம் பருவத்தினருக்கான ஆரோக்கியத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் விரைந்து எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகிறார்கள். குறிப்பாக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கணக்கில் கொண்டு அவர்களின் அடிப்படைக் கல்வியை உறுதி செய்யவேண்டும். மேலும் பாலியல் சார்ந்த தகவல்களையும், அதன் பிரச்சினைகளையும், உடல் ரீதியான, உளவியல்ரீதியான மாற்றங்களையும் வளரிளம் பருவத்தினரிடம் முறையாகக் கற்பிக்க வேண்டும். பாலுறவின் மீதான மர்மத்தன்மையை விலக்கி அதை இன்னும் வெளிப்படையாக அவர்களுடன் உரையாட வேண்டும். கருத்தடை சாதனங்கள் சார்ந்த விழிப்புணர்வையும், அதனைத் தடையில்லாமல் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என சர்வதேச அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

ஏழாவது படிக்கும் மாணவி ஒரு பார்ன் வீடியோ பார்ப்பதை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் தவிக்கும் படித்த ஆசிரியைகள் எப்படி பாலியல் சார்ந்த தகவல்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும்? நம் சமூகத்தின் சிக்கலே இதுதான். நம் குழந்தைகளிடம் நாம் பேசத் தயங்கும், பேச மறுக்கும் விஷயங்களை நம் குழந்தைகள் கற்றுக்கொள்ளாமல் இருப்பதில்லை .அதை நமது குழந்தைக்கு சொல்லித்தர ஆயிரம் தொடர்புகள் வெளி உலகில் இருக்கின்றன. நாம் மறைக்கும் விஷயங்களை எல்லாம் ஒரு மர்மப்புன்னைகோடு நமது குழந்தைகள் வெளியே கற்றுக்கொள்கின்றன. பேசினாலே கெட்டுப்போய்விடுவார்கள் என்ற பழமையான எண்ணத்தில் நாம் வெளிப்படையாக உரையாடாமல் இருப்பதே அவர்கள் ஆபத்தான வலைகளுக்குள் மாட்டிக்கொள்ள பெரும்பாலான நேரத்தில் காரணமாக இருக்கின்றன.

எவ்வளவு திறந்த மனதுடன், வெளிப்படைத்தன்மையுடன், முன் முடிவுகளற்று எந்த உணர்ச்சிவசப்படலும் இல்லாமல் எந்தக் களங்கப்பார்வையும் இல்லாமல் உங்களால் ஒரு விஷயத்தை ஆரோக்கியமாக உங்களது குழந்தைகளிடம் உரையாட முடிகிறது என்றால் அது சார்ந்த பிரச்சினைகளில் அவர்கள் சிக்கிக்கொள்வது மிக அரிதாகவே நடக்கும். இதையெல்லாம் போய் எப்படிப் பேசுவது என்று தயங்கினாலோ அல்லது இந்த காலத்துப் பசங்களே இப்படித்தான் என அவர்களைப் புரிந்துக்கொள்வதில் இருந்து நீங்கள் விலகி நின்றாலோ உங்களது குழந்தைகளின் முன்னால் அத்தனை பிரமாண்டமாக விரியும் ஆக்டோபஸ் கரங்களில் இருந்து அவர்களை காப்பாற்றுவது சிரமம். அதே போல தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காகப் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். “இந்தியா புனிதமான நாடு” “ஒருவனுக்கு ஒருத்தி” தான் எங்கள் பண்பாடு, கலாச்சாரம் என இன்னமும் பழைய பல்லவிகளைப் பாடிக்கொண்டிருக்காமல் சுற்றி நடப்பவைகளைக் கூர்மையாகக் கவனித்து இந்தப் பிரச்சினையின் உண்மையான தாக்கத்தை அளவிட்டு அதைத் தடுப்பதற்குண்டான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும், செயல் திட்டங்களையும் தீட்ட வேண்டும். சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் “Global Accelerated Action for the Health of Adolescents (AA-HA!) என்ற வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவும் கொள்கை முடிவுகளை எடுத்து செயல்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இனியும் வளரிளம் பருவத்தினரின் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தக்கூடாது என்பது தான் நாம் இன்றைய புதிய சூழல்களில் இருந்து கற்க வேண்டிய பாடமாக இருக்க வேண்டும்.

 

sivabalanela@gmail.com