நீங்கள் விருப்பப்பட்டு  செய்யும் எதுவும் உங்களுக்குத் தொல்லையே தரும். அந்தத் தொல்லைகளைப் பொருட்படுத்தாது, அவற்றோடு போராடி வெல்பவர்கள் காலத்தால்  அழியாத புகழைப் பெறுகிறார்கள். அப்படியானவர்கள் வெகு சிலரே. அப்படிப்பட்ட வெகு சிலரில் ஒருவரான பார்னி ரோஸட் என்பவரின் சுவாரஸ்யமான வாழ்க்கை வரலாறு தான்   My life in Publishing and how I fought the censor என்ற நூல். குரூவ் பிரஸ் என்ற புகழ்பெற்ற பதிப்பகத்தின் உரிமையாளரான ராஸட்டின் கதை எழுத்துச் சுதந்திரத்தின் கதை. இலக்கியத்தில் எது ஆபாசம், எது ஆபாசம் இல்லை என்று யார் தீர்மானிப்பது என்பதை இந்த உலகிற்குச் சொன்ன கதை.

ராஸெட் பதிப்பகத் தொழிலுக்கு விரும்பி வந்தவர் அல்ல. எல்லா அமெரிக்க இளைஞர்களைப் போலவே, உலகப் போரின் போது ராணுவத்தில் சேர்ந்தவர்.ராணுவ செய்திப் பிரிவின் புகைப்படக் கலைஞராக இருந்தவர். அந்த அனுபவத்தில் போருக்குப் பிறகு பத்திரிகைகளில் வேலை பார்த்தவர். குடும்பச் சூழல் காரணமாக வாசிப்பில் ஆர்வமுள்ளவர் .தற்செயலாக ஒரு பதிப்பகம் விற்பனைக்கு வருகிறது, வாங்கி நடத்துகிறாயா? என்று நண்பர் கேட்க, அப்பாவும் அதற்கான முதலீட்டிற்குப் பணம் தருவதாகச் சொல்ல குரூவ் பிரஸ்ஸை 1500 டாலருக்கு வாங்கி நடத்த ஆரம்பித்தார். ஒரு குடோன் நிறைய விற்காத புத்தகங்களைத் தலையில் கட்டினார்கள். எல்லா பதிப்பகங்களைப் போலவே கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நிறுவனத்தை தூக்கி நிறுத்தினார்.மனவைி பிரபலமான நவீன ஓவியர். மனைவியின் நண்பர்கள் வட்டத்தின் காரணமாக நவீன எழுத்தாளர்களின் நட்பு கிடைத்தது. நாவல்களை வெளியிட ஆரம்பித்தார். சாமுவெல் பெக்கெட்டின் நட்பு கிடைத்தது.பாரீஸின் புகழ்பெற்ற புத்தகக் கடையான ஷேக்ஸ்பியர் அண்ட் கோவின் உரிமையாளர் சில்வியா பீச் மூலமாக பெக்கெட் அறிமுகமானார். அவரது படைப்புகளை வெளியிட ஆரம்பித்ததில் இருந்து ஏறுமுகம்தான். பெக்கெட்டுக்கும், இவருக்குமான நட்பு காவியத்தனமானது. இருவரும் பாரீஸ் முழுவதும் சுற்றித் திரிந்து இலக்கியம் பேசினார்கள். ராஸெட் தனது மகனுக்கு பெக்கெட்டின் பெயரைத்தான் வைத்தார்.

பதிப்பகம் ஆரம்பித்த காலத்தில் 1952இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பதிப்பகம் தொடர்பான படிப்பில் சேர்ந்து படித்தார். அங்கு விளம்பரம், எடிட்டிங் என்று பதிப்பகம் தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பற்றி பாடம் நடத்தினார்கள். பதிப்புத்துறையில் சாதனை படைத்த பெரிய பதிப்பக உரிமையாளர்கள் வருகைதரு பேராசிரியர்களாக வந்து பாடம் நடத்தினார்கள். பாலன்டைன் புக்ஸ்,பென்குவின் புக்ஸ் நிர்வாகிகள் எல்லாம் வந்து பாடம் நடத்தினார்கள். இங்கு நம் நாட்டில் இது மாதிரியான படிப்பெல்லாம் இருக்கிறதா? தமிழ் பதிப்பக உரிமையாளர்கள் யாரேனும் இப்படியான படிப்புகள் எல்லாம் படித்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை.

நல்ல படிப்பறிவுடன் தனது நிறுவனத்தை நடத்த ஆரம்பித்தார். 1959இல் லாபம் ஒரு மில்லியன் கூட இல்லை, ஆனால் 1969 வாக்கில் லாபம் 14 மில்லியன் டாலர் என்று ராஸெட் சொல்லும் போது வியப்பாக இருக்கிறது. கூடவே புத்தகங்களுக்காக எவர்கிரீன் என்ற பத்திரிகையை ஆரம்பித்தார்.முதலில் காலாண்டிதழாக வந்த இந்தப் பத்திரிகை பின்னர் மாத இதழாக வந்தது. இதில் எழுதாத பிரபலங்களே இல்லை.ழான்பால் சார்த்தர், நார்மன் மெய்லர், சார்லஸ் புகோவ்ஸ்கி, ஆல்பர் காம்யூ என்று பல பிரபலங்களின் கட்டுரைகளும் வந்தன.

இந்த நேரத்தில்தான் டி.ஹெச்.லாரன்ஸின் லேடி சாட்டர்லீஸ் லவரை அமெரிக்காவில் பதிப்பிக்கலாம் என்று ஒரு யோசனை வந்தது. புத்தகத்தின் நான்கு பிரதிகளுக்கு ஆர்டர் செய்தார். கப்பல் மூலம் வந்தது.கரை இறங்கியதும் அமெரிக்க தபால் துறை இந்தப் புத்தகம் ஆபாசம் என்பதால் தபால் துறையால் தடை செய்யப்பட்டது என்று சொல்லி இவருக்கு டெலிவரி செய்ய மறுத்தது.அன்றிலிருந்து போராட்டம் ஆரம்பித்தது. ஒருவழியாகத் தனது சொந்த ஊர் போஸ்ட்மாஸ்டர் ஜெனரலின் தடை உத்தரவை நீக்க வைத்து புத்தகத்தை அச்சிட்டார்.அமெரிக்காவின் சட்ட விநோதங்களில் ஒன்று மாகாணத்திற்கு மாகாணம் சட்டங்கள் மாறுவது. மற்றொரு விநோதம் புத்தகம் ஆபாசம் என்று தடை செய்ய அஞ்சல் துறைக்கு இருந்த அதிகாரம். லேடி சாட்டர்லீஸ் லவர் முதல்பதிப்பாக 1750000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டது. பிரிண்ட் ஆன் டிமாண்டில் அச்சடிக்கும் நமது பதிப்பாளர்கள் மயக்கம் போட்டு விட வேண்டாம். நிஜமாகவே 1750000 பிரதிகள்தான் அச்சடித்தார்கள். காரணம், பேப்பர் பேக் புத்தகங்களுக்கான அமெரிக்க சந்தை. அமெரிக்காவில் அன்று பீடி, சிகரெட் விற்கும் பெட்டிக்கடைகள், டீக்கடைகளில் பேப்பர் பேக் புத்தகங்களும் விற்கப்பட்டன. தினந்தோறும் அமெரிக்கா முழுவதும் சுமார் பத்து லட்சம் பேப்பர் பேக் புத்தகங்கள் விற்றன. பதிப்பாளர்களின், எழுத்தாளர்களின் பொற்காலம் அது.

திரும்பவும் இந்தப் புத்தகங்களை தபாலில் அனுப்ப முடியாமல், பார்சல் புக் செய்ய முடியாமல் அஞ்சல் துறையின் தடை. புத்தக விற்பனையாளர்கள் கைது,வழக்குகள் என்று வரிசையாகப் பிரச்சனைகள்.புத்தக விற்பனையாளர்கள் வழக்குகளை குரூவ் பிரஸ் நடத்தும். அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குரூவ் பிரஸ் ஈடுசெய்யும் என்ற ராஸெட் அறிவித்தார். எழுத்து சுதந்திரம், தணிக்கைக்கு எதிராகப் போராடுவது என்ற முடிவு செய்தார்.வரலாறு தன்னை F வார்த்தையை முதன்முதலாக அச்சிட்டு விற்றவன் என்று நினைக்கக்கூடாது. எழுத்துச் சுதந்திரத்திற்காகப் போராடியவன் என்றே போற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.

அமெரிக்கா முழுவதிலும் 60 நீதிமன்றங்களில் இவர் மீது வழக்கு. நியூஜெர்சி பகுதியில் மட்டும் 23 வழக்குகள். மஸாசூசெட்ஸ், ரோட்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, பிலாடெல்ஃபியா, கிளீவ்லாண்ட், அட்லாண்டா, மியாமி, டல்லஸ், ஹில்டன், சியாட்டில்,ஹார்ட்ஃபோர்ட், வில்மிங்டன், இன்டியானாபொலிஸ், செயிண்ட் லூயிஸ், டெல் மோயின்ஸ், டிரெல்டன், பஃபலோ. ஃபோனிக்ஸ், ஒக்லஹோமா. பிர்மிங்ஹாம் என்று எல்லா முக்கிய இடங்களிலும் தடை, வழக்குகள். ஒரு இடத்தில் வழக்கு வெற்றி பெறும்போது மற்றொரு ஊரில் புது வழக்கு ஒன்று போடப்படும். மீண்டும் நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்க வேண்டும். எல்லா நாடுகளிலும், போஸ்ட் மாஸ்டர்களும், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்களும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார்கள் போலும். ஒரு மாகாணத்தில் நடந்த விசாரணையின் போது, அந்தப் பகுதி போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், “லாரன்ஸ் மிக அற்புதமாக ஆபாசத்தை எழுதியுள்ளார். அதனால்தான் தடை செய்தோம்“ என்றாராம். ராஸெட்டின் வழக்கறிஞர், “அப்படியானால் ஆபாசத்தை சுமாராக அல்லது படுமோசமாக எழுதினால் தடை செய்ய மாட்டீர்களோ?” என்று கிண்டலாகக் கேட்டாராம். ஒரு கட்டத்தில் எல்லா வழக்குகளையும் இணைத்து அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒன்றாக விசாரித்தது. விசாரணையின்போது ஏராளமான அறிவுஜீவிகள் ராஸெட்டுக்கு ஆதரவாக எழுதினார்கள். ஆனால் எந்தப் பதிப்பகமும்   துணை நிற்கவில்லை.

ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸிஸ் நாவலுக்கு எதிரான தடையை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற ராண்டம் ஹவுஸ் நிறுவனம் கூட  லேடி சாட்டர்லீஸ் லவர் ஆபாசம் தான் என்றது. பங்காளிக் காய்ச்சல் போலும்.

இறுதியில் நீதிபதி எப்ஸ்டீன் அருமையான தீர்ப்பு வழங்கி, லேடி சாட்டர்லீஸ் லவர் ஆபாசமானதல்ல. உயர்ந்த இலக்கியம் என்று தடையை நீக்கினார். தீர்ப்பில் அவர், “இலக்கிய ரசனை என்பது கல்வி தொடர்பானது. ஒரு படைப்பைப் பிடிக்காதவர்கள் பிறரைப் படிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கலாம். தனிப்பட்ட முறையில் தவிர்ப்பது வேறு. அரசாங்கம் தடை செய்வது என்பது வேறு.பெற்றோர் தம் குழந்தைகளை இதைப் படிக்காதே என்று சொல்லட்டும். ஆனால் அரசாங்கம் சொல்லக் கூடாது. ஒவ்வொரு வாசகனும் தனிப்பட்ட முறையில் ஒரு தணிக்கை அதிகாரி. அவர்கள் முடிவு செய்யட்டும்” என்று குறிப்பிட்டார்,

இதன் பிறகு ராஸெட் தடை செய்யப்பட்ட பல புத்தகங்களை வெளியிட்டார். அவற்றில் எல்லாம் பிரச்சனைகள்தான்.ஹென்றி மில்லரின் ட்ராபிக் ஆஃப் கேன்சர் என்ற நாவலை வெளியிட முயற்சி மேற்கொண்டார்.இதுவும் அமெரிக்க அஞ்சல் துறையால் தடைசெய்யப்பட்ட புத்தகம். ஹென்ரி மில்லருக்கு 50000 டாலர் முன்பணம் கொடுத்து உரிமம் வாங்கினார். எனக்கு நம்மூர் நிலைமையை நினைத்து வயிறு எரிந்தது.

இங்கு பதிப்பாளர் எழுதியவருக்கு 10 பிரதிகள் தருவதே பெரிய விஷயமாக இருக்கிறது. டி.ஹெச்.லாரன்ஸ் நாவலுக்கு வந்த தீர்ப்பின் பிறகும் அஞ்சல்துறையின் சட்டங்கள் மாறவில்லை. போஸ்ட் மாஸ்டர்களும், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்களும், அஞ்சலகங்களின் காய்ந்த பசையைப் போலவே மாறாமல் இருந்தார்கள். இம்முறையும் ஒவ்வொரு மாகாணத்திலும்  தடை. வழக்கு. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல், இம்முறை ஹென்றி மில்லரை ஆபாசமாக எழுதத் தூண்டியதாக ராஸெட் மீது வழக்குப் போட்டுக் கைது செய்து உள்ளேயும் தள்ளி விட்டார்கள். “கனம் கோர்ட்டார் அவர்களே! ஹென்றி மில்லர் டிராபிக் ஆஃப் கேன்சர் நாவலை 1934இல் எழுதினார். அப்போது எனக்கு வயது 12! மேலும் அதை அவர் அப்போது பிரெஞ்சு மொழியில் எழுதினார். எனக்கு அப்போது பிரெஞ்சு மொழி தெரியாது,“ என்று கெஞ்சிக் கதறிய பிறகு ஜாமீனில் விட்டார்கள். லேடி சாட்டர்லீஸ் லவ்வரை ராஸெட் வெளியிட்ட போது டி.ஹெச்.லாரன்ஸ் உயிரோடு இல்லை. அவர் மனைவியிடம் உரிமை பெற்றுதான் வெளியிட்டார்கள். இம்முறை ஹென்றி மில்லர் உயிரோடு இருந்ததால், அவர் நேரில் ஆஜராகி தனது நாவல் பற்றி சாட்சியம் அளித்தார். பெரிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இந்த நூல் வெளியானது.

ரோஜர் கேஸ்மண்ட் என்ற ஒரு ஐரிஷ் புரட்சியாளரின் டைரிக் குறிப்புகளை வெளியிட்ட போது திரும்பவும் பிரச்சனை. கேஸ்மண்ட் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று அவரது டைரிக் குறிப்பை பிரிட்டன் தடை செய்திருந்தது. எனவே இங்கும் போஸ்ட் மாஸ்டர்கள் அணி சுறுசுறுப்பாக இயங்கித் தடை செய்தது. உண்மையில் அந்த டைரிக் குறிப்புகளில் ஆபாசம் எதுவுமே இல்லை. கேஸ்மண்ட் அமேசான், காங்கோ பகுதிகளில் கறுப்பின மக்களுக்காகப் பாடுபட்டவை பற்றிய குறிப்புகள்தான் இருந்தன. இதை நீதிபதிகளுக்குப் புரிய வைக்க ஒரு நீண்ட சட்டப் போராட்டம். இதிலும் இறுதி வெற்றி ராஸெட்டுக்குத்தான்.

இதற்கு முன்னதாக மால்கம் எக்ஸ் சுடப்பட்ட செய்தி கிடைத்ததும், ராஸெட் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதி வந்த புகழ்பெற்ற எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலியைத் தொடர்பு கொண்டார். நீங்கள் நினைத்தது சரிதான். கறுப்பின மக்கள் குறித்த அற்புதமான நூலான ரூட்ஸை எழுதிய அதே அலெக்ஸ் ஹேலிதான். மால்கம் எக்ஸ்ஸின் வரலாற்றை வெளியிட எல்லா பதிப்பகங்களும் தயங்குவதாக ஹேலி சொன்னார். ராஸெட் அதை குரூவ்ஸ் வெளியீடாகக் கொண்டு வந்தார். இந்நூல் உலகப் புகழ் பெற்றது. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சே குவேரா பொலிவியாவில் கொல்லப்பட்ட போது, சேவின் இறுதி நாட்கள் பற்றி The Great Rebel:Che Guevara in Bolivia என்ற நூலை வெளியிட்டார். லூயி ஜே.கோன்சலாஸ், கஸ்டவோ ஏ.சான்சஸ் சாலசர் என்ற இரண்டு எழுத்தாளர்கள் பொலிவியாவில் எழுச்சியை ஏற்படுத்த சே போராடிய வரலாற்றை அற்புதமாக  எழுதியிருந்தார்கள். சேவின் இறுதி நாட்களின் டைரிகள் பொலிவிய அரசிடம் இருந்தன. அவற்றை அந்த அரசிடமிருந்து பெற்று நூலாசிரியருக்குத் தர ராஸெட் மிகவும் சிரமப்பட்டார். அது பற்றி தனியாகவே ஒரு நூல் எழுத வேண்டும் என்று சொல்லி நிறுத்திக் கொண்டுவிட்டதால், பொலிவிய அரசிற்கும், அவருக்கும் நடந்த மோதலின் விபரங்கள் இந்த நூலில் இல்லை. ராஸெட் இப்படி தடை, வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து கொண்டே, ஏராளமான புகழ்பெற்ற புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டே இருந்தார். நான்கு முறை விவாகரத்து செய்து, தாத்தா ஆகிவிட்ட வயதில் ஐந்தாவது திருமணம் செய்து கொண்டு, ஏராளமான குழந்தைகளைப் பெற்றார். இவரது பதிப்பகத்தில் தமது புத்தகங்களை வெளியிட்டவர்களான பாப்லோ நெருடா, ஆக்டேவியோ பாஸ், ஹெரால்ட் பின்டர், சாமுவெல் பெக்கட், கெஸ்காபுரோ ஓயே ஆகியோர் நோபல் பரிசு பெற்றார்கள். ஒரு பதிப்பகத்தின் ஐந்து எழுத்தாளர்கள் நோபல் பரிசு பெற்றது பெரிய சாதனை. அதைவிடப் பெரியச் சாதனை தணிக்கைக்கு எதிராக, எழுத்துச் சுதந்திரத்திற்காக அவர் இடைவிடாது ஆண்டுக்கணக்காகப் போராடியது.

இந்த நூலைப் படித்துக் கொண்டிருக்கும்போதே எனக்கு இர்விங் வாலஸின் தி செவன் மினிட்ஸ் என்ற நாவல் நினைவிற்கு வந்தது. ஆபாசம் என்று தடை செய்யப்பட்ட ஒரு நூலின் தடையை நீக்க ஒரு கற்றுக்குட்டி வக்கீல் போராடி ஜெயிக்கும் கதை.செவன் மினிட்ஸைத் தேடினால்,என் இர்விங் வாலஸ் எப்போதும் போலவே ஆச்சரியப்படுத்தினார். குரூவ் பிரஸ் பற்றி, லேடி சாட்டர்லீஸ் லவர் வழக்கு பற்றி, டிராபிக் ஆஃப் கேன்சர் வழக்கு பற்றி கிட்டத்தட்ட ஐம்பது இடங்களில் குறிப்பிட்டுள்ளார் வாலஸ். ஒரு இடத்தில் லேடி சாட்டர்லீஸ் லவர் தடை வழக்குகள் எந்தெந்த ஊரில் நடந்தன என்ற பட்டியலே வருகிறது! இந்த வழக்குகள் நடந்தது 1960களில். தி செவன் மினிட்ஸ் வெளிவந்தது 1969இல். இணையமும், கணினியும் இல்லாத காலத்தில் இர்விங் வாலஸ் அன்றைய தேதியில் மிகச் சமீப தணிக்கை வழக்குகளான லேடி சாட்டர்லீஸ் லவர் பற்றியும், டிராபிக் ஆஃப் கேன்சர் பற்றியும் அவற்றின் இலக்கிய நயம் பற்றியும், எழுதியிருப்பது வியப்படைய வைத்தது. பார்னி ராஸெட் மீதான மரியாதையுடன்,  இர்விங் வாலஸ்மீதான மரியாதை இன்னும் அதிகரித்தது. தமிழில் நான் வாசித்த ஒரே பதிப்பாளர் வாழ்க்கை வரலாறு வானதி திருநாவுக்கரசு அவர்களின் வெற்றிப்படிகள் மட்டுமே.மற்ற பதிப்பக உரிமையாளர்களும் தமது அனுபவங்களை இவ்வாறு எழுதினால் நன்றாக இருக்கும். ஆர்வமுள்ளோர் வாசிக்க – My Life In Publishing and How I Fought Censorship – Barney Rosset.

 

subbarao7@gmail.com