ரு தேர்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலை நெருக்கடிநிலை காலத்திற்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட ஒரு தேர்தலோடு மட்டுமே ஒப்பிட முடியும். நாடு இன்று நெருக்கடிநிலை காலத்தில் அனுபவித்த துயரங்களைவிட பெரும் துயரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. கடும் பொருளாதார வீழ்ச்சியும் ஜனநாயக அமைப்புகளின்மீதான தாக்குதலும் நிறைந்திருக்கும் ஒரு சூழலில் இந்தியர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் வாக்கை அளிக்க இருக்கிறார்கள்.

சில தினங்களுக்குமுன்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துப்புரவுத் தொழிலாளர்கள் சிலரின் காலைக் கழுவும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன. மோடி நடித்த காட்சிகளிலேயே மிகச் சிறந்த காட்சி இதுதான். தன் அகங்காரத்தாலும் எதேச்சதிகாரத்தாலும் இந்த தேசத்தின் மக்களை ஒரு புழுவைப்போல காலில் போட்டு மிதித்தவர் நரேந்திர மோடி. இன்று அவர் துப்புரவுத் தொழிலாளிகளின் காலைக் கழுவுகிறார். தான் நடிக்கிற இந்த நாடகம் குறித்து அவருக்கு எந்த நாணமும் இல்லை. அவருக்கு மீண்டும் அதிகாரம் வேண்டும். இந்த நாடு அவரை 20 ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அதிகாரத்தைப் பெறுவதற்காகவும் அதை உறுதிசெய்து கொள்வதற்காகவும் அவர் எந்த வழிமுறையையும் பின்பற்றத் தயங்காதவர் என்பதை குஜராத் கலவர நாட்களிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவரால் தன்னை ஒரு டீ விற்பவர் என்று சொல்லிக்கொண்டே ஒரே இரவில் இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்களைத் தெருவில் நிறுத்த முடியும். ரஃபேல் விமானங்களை வாங்குவதில் மிகப்பெரிய முறைகேடுகளைச் செய்துவிட்டு தன்னை ஊழல் ஒழிப்பு நாயகன் என்று காட்டிக்கொள்ள முடியும். கார்ப்பரேட்டுகளுக்கு முழுநேர ஊழியம் செய்துகொண்டே தன்னை ஏழை எளியவர்களின் பாதுகாவலனாக முரசறைந்து கொள்ள முடியம். விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் உதவித் தொகை தருகிறேன் என்று சொல்லிவிட்டு பெருமுதலாளிகளின் பல்லாயிரக்கணக்கான கோடிகளை அவரால் தள்ளுபடி செய்ய முடியும். மோடி உருவாக்கிய இந்தியா, முரண்பாடுகளின் பெரும் மூட்டை. அது பொய்களின் புழுதிகளால் ஆனது. மக்களிடையே வெறுப்பும் பரஸ்பர சந்தேகங்களும் விதைக்கப்பட்ட காலம் இது. இந்த மனிதர் அதிகாரத்திலிருக்கும் வரை இந்த ஜனநாயகத்தைப் பீடித்திருக்கும் இருள் ஒருபோதும் விலகப்போவதில்லை என்பதைத்தான் இந்த ஐந்தாண்டுகள் நமக்கு உணர்த்தியிருக்கின்றன. அவர் அடிப்படை ஜனநாயக விழுமியங்களைப் பற்றியோ நெறிமுறைகளைப் பற்றியோ நீதியுணர்ச்சி பற்றியோ எந்தக் கவலையும் கொண்டிருந்ததில்லை. எல்லாவற்றையும் வளைக்க முடியும், அழித்தொழிக்க முடியும் என்று அவர் நம்பினார், அதை செயல்படுத்தவும் செய்தார். நானே அரசன், நானே நாடு என்ற அந்தப் பழைய குரலை மோடியின் வழியாக இந்தத் தேசம் கேட்டது.

இந்த இருண்டகாலத்திற்கெதிராக நாடு முழுக்க ஒரு பெரிய அணியைக் கட்டுவதில், தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சிகளுக்கிடையே பல்வேறு முரண்பாடுகள், கடந்த கால கசப்புகள் இருந்தும், ஜனநாயகத்திற்கான இந்தப் போரில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டு நிற்க வேண்டுமென்கிற உணர்வு நாடு முழுக்கப் பரவிக்கொண்டிருக்கிறது. கருத்துக் கணிப்புகள் மோடிக்கு நல்ல செய்திகளைக் கொண்டு வரவில்லை. மோடி அலை தணிந்து மோடி வெறுப்பு அலை நாடு முழுதும் உயர்ந்துகொண்டிருக்கிறது. மீண்டும் அவர்கள் தங்கள் வகுப்புவாத அரசியலின் வாள்களைத் தீட்டத் தொடங்கியிருக்கிறார்கள். சபரிமலையில் நடத்திய நாடகங்களைத் தொடர்ந்து ராமர் கோயில் பற்றிய உரையாடல்களைத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னொருபுறம் உயர்சாதியினருக்கு பத்து சதவிகித இடஒதுக்கீடு, தெருவில் நிர்வாணமாகப் போராடிய விவசாயிகளுக்கு கதவு திறக்க மறுத்த மோடி இப்போது நாள் ஒன்றுக்கு 17 ரூபாய் வீதம் பஞ்சப்படி அளித்து தேர்தலுக்காக லஞ்சம் கொடுக்கிறார். ஐந்து வருடங்களாக விவசாயிகளுக்கு என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்குப் பதில் இல்லை. கருப்புப் பணத்தை ஒழிப்பதாகச் சொன்ன பொய்கள், 5 ஆண்டுகளில் பத்துக் கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகச் சொன்ன பொய்கள், விவசாயிகளுக்கான வருவாயை இரட்டிப்பாக்குவதாகச் சொன்ன பொய்கள், இந்தியாவை மாபெரும் வளர்ச்சிப் பாதையில் கொண்டுபோவதாகச் சொன்ன பொய்கள் அனைத்தும் இன்று அம்பலமாகியிருக்கின்றன.

காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தற்கொலைப்படைத் தாக்குதலை உடனடியாகத் தன்னுடைய தேர்தல் ஆதாயத்திற்குப் பயன்படுத்துவதற்காக மோடி மேற்கொண்ட உத்திகள், அவர் எவ்வளவு தூரத்திற்குச் செல்வார் என்பதைக் காட்டியது. போலியான போர்ப் பிரகடன முழக்கங்களை எழுப்பினார். அதிஉயர் பாதுகாப்பு கொண்ட காஷ்மீரில் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் அந்த வீரர்கள் ஏன் அனுப்பப்பட்டார்கள் என்ற கேள்விக்கோ, பயங்கரவாதிகள் அவ்வளவு சுலபமாக தாக்குதல் நடத்தக்கூடிய வகையில் புலனாய்வு அமைப்புகள் எவ்வாறு தோல்வியடைந்தன என்பது குறித்து மோடி வாய் திறக்க மறுக்கிறார். மாறாக, நாடு முழுக்க மதரீதியான வெறுப்பு தேசியவாதத்தின் கூக்குரல்கள் எழுப்பப்படுகின்றன. தன்னை இந்த நாட்டின் மாபெரும் பாதுகாவலனாகக் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார். இந்த நாட்டைக் காப்பாற்ற மோடி என்ன செய்தார் என்ற கேள்விக்குப் பதிலில்லை. அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் ராணுவவிமானப் படையில் புகுந்து தாக்குதல்கள் நடத்தினர். இப்போது இந்த புல்வாமா தாக்குதல். மோடி மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதில், இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில், ஜனநாயக அமைப்பைப் பாதுகாப்பதில் எப்படிப் படுதோல்வி அடைந்தாரோ அப்படி நாட்டைப் பாதுகாப்பதிலும் படுதோல்வியடைந்திருக்கிறார். எதிலுமே வெற்றி பெறாத ஒருவர் இந்தப் பிரச்சார உத்திகளின்மூலம் தன்னை ஒரு வெற்றிகரமான பிரதமராகக் கட்டமைக்க முயற்சிக்கிறார். போலி கருத்துக் கணிப்புகளின் மூலமாகவும் ஊடகங்களுக்கு வீசயெறிகிற எலும்புத் துண்டுகளின் மூலமாகவும் அவர் அதைச் சாதித்துவிட முடியும் என்று நம்புகிறார்.

இந்தியாவிலேயே எங்கும் இல்லாத ஒரு விசித்திரமான அரசியல் களம் தற்போது தமிழகத்தில் இருக்கிறது. தமிழகத்தில் எந்த செல்வாக்கும் இல்லாத பா.ஜ.க. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை நிர்பந்தித்து தனக்கு ஐந்து இடங்களைப் பெறுகிறது. கூட்டணிக்குத் தாங்கள்தான் தலைமை தாங்க வேண்டுமென பா.ஜ.க. நிர்ப்பந்திக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் மோடியின் படம் வைக்கப்படுகிறது. ஜெயலலிதா மறைந்த இரண்டாண்டுகளில் அதிமுகவை பாஜக முழுமையாக விழுங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வரன்முறையற்ற ஊழல்களை, ஆட்சியை ஹைஜாக் செய்வதற்கான ஒரு ஆயுதமாக பாஜக பயன்படுத்திக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் கட்சி அளவிலும் ஆட்சி நிர்வாகத்திலும் பாஜகவால் கடும் இன்னல்களைச் சந்தித்த கட்சி அதிமுக. அதிமுகவின் உள் விவகாரங்களில் தலையிட்டு தன் சித்து விளையாட்டுகளை பாஜக அரங்கேற்றியது. தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை வளைத்து எடப்பாடியின் பொம்மை ஆட்சியைத் தனது ஆட்சியாக பாஜக நடத்திக்கொண்டிருக்கிறது. அதிமுகவிற்கு இருக்கும் வாக்குவங்கியைப் பயன்படுத்தி தங்களைத் தமிழகத்தில் முன்னிறுத்திக்கொள்ள வேண்டுமென்பதுதான் அவர்களது கனவு. இன்னும் சொல்லப்போனால் அதிமுகவை முற்றாக அழித்து தமிழ்நாட்டில் ஒரு பிரதான எதிர்க்கட்சியாக வார்த்துக்கொள்ள வேண்டுமென்பதுதான் அவர்களது நீண்டகால திட்டம். தமிழகத்தின் உரிமையை ஒவ்வொன்றாகப் பறித்ததோடு மட்டுமல்லாமல், தமிழக அரசை மத்திய பாஜக அரசு ஒரு செல்லாக்காசாக நடத்திக்கொண்டிருக்கிறது. தமிழகத்திற்குத் தரவேண்டிய 12000 கோடி ரூபாய் பணத்தைத் தராமல் மத்திய அரசு பிடித்து வைத்திருக்கிறது. சமூகநீதியில் நாம் அடைந்த மிகப்பெரிய சாதனைகள் இன்று நீட் மூலமாக நொறுக்கப்பட்டிருக்கின்றன. அதை எதிர்த்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய பாஜக அரசு கழிவறை காகிதங்களாகப் பயன்படுத்திக்கொண்டிருப்பதைப் பற்றி இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.

இது ஒருபுறம் என்றால் பாமக நேற்று வரை தான் பேசிய அனைத்தையும் மறந்துவிட்டு அதிமுக, பாஜக வோடு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கூட்டணி. திராவிடக் கட்சிகளோடு கூட்டணி வைத்தால் அது தாயோடு வைத்த உறவுக்குச் சமம் என்று பேசியவர் ராமதாஸ். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருக்க எந்தத் தகுதியுமற்றவர் என்று முழங்கியவர் அன்புமணி ராமதாஸ். மத்திய அரசு தமிழகத்தின் உரிமைகளைப் பறித்தது குறித்தும் ராமதாஸ் விடாத அறிக்கை இல்லை, பேசாத பேச்சு இல்லை. எல்லோருக்கும் ஒரு விலை இருக்கிறது. அந்த விலையைக் கொடுக்கக்கூடிய சக்தி பாஜக, அதிமுக இரண்டுக்கும் இருக்கிறது. இன்று பாமகவினரே தலைகவிழ்ந்து நிற்கும் அளவிற்கு இந்தக் கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். கூட்டணி வைப்பதற்கு தமிழகத்தின் நலன்களாகப் பத்து கோரிக்கைகளைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அரசின்மீது 24 ஊழல் புகார்களை ஆளுநரிடம் கொண்டுபோய் கொடுத்தவர்கள் இப்போது 10 கோரிக்கைளைக் கொடுக்கிறார்களாம். பாஜகவோ, அதிமுகவோ அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று வெளிப்படையாக வாக்குறுதிகள் கொடுத்திருக்கின்றனவா? எவ்வளவு பொய்கள், எவ்வளவு நாடகங்கள்.

ஆனால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஏழு பேர் விடுதலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த இந்தக் கூட்டணி முயற்சி செய்யும் என்றே தோன்றுகிறது. ராமதாஸ் ஏழு பேர் விடுதலையை வலியுறுத்துகிறார். தமிழகத்தின் எல்லாக் கட்சிகளும் முன்வைத்த இந்தக் கோரிக்கையை நிர்த்தாட்சண்யமாக மறுத்த மத்திய அரசு, திடீரென ஒருநாள் அவர்களை விடுதலை செய்து, நாங்கள்தான் தமிழர்களுக்காக நிற்கிறோம் என்று நாடகமாடுவார்கள். அவர்கள் தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

இந்தச் சூழலில் மக்கள் ஒரு வரலாற்றுத் தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். மதச்சார்பற்ற கட்சிகள் ஒரு வரலாற்றுத் தருணத்தை எதிர்நோக்கியிருக்கின்றன. இந்த நாட்டைப் பேரழிவிற்குக் கொண்டுசென்றவர்களை வரலாற்றின் நீதிமன்றத்தின் முன்னால் நிற்க வைக்கவேண்டுமென்றால் அதற்கான அதிகாரம் மக்களிடத்தில்தான் இருக்கின்றது. கடும் சூழ்ச்சிகளுக்கு நடுவே மக்களைப் பிரித்தாளும் வஞ்சங்களுக்கு நடுவே இந்த நாட்டின் மனசாட்சி விழித்தெழும் என்பதுதான் நம்முடைய கடைசி நம்பிக்கையாக இருக்கிறது.