காஷ்மீர் என்றால் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு முதலில் நினைவு வரக்கூடியது “காஷ்மீர், ப்யூட்டிஃபுல் காஷ்மீர்” என்று துவங்கும் எம்.ஜி.ஆரின் இதய வீணை (1972)படத்தின் பாடல். “அண்ணாவின் பெயர் சொல்லும் காஞ்சியைப்போல், நேருவின் பெயர் சொல்லும் பூமி இது” என்று வேறு ஒரு வரி அந்தப் பாடலில் வரும். அறுபதுகளில் காஷ்மீர் மாநில அரசு சுற்றுலா வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு காஷ்மீரில் திரைப்படம் எடுப்பவர்களுக்கு பல சலுகைகளை செய்துதர முன் வந்தது. ஸ்ரீதரின் “தேன் நிலவு” (1961) படம் இந்த சலுகைகளைப் பயன்படுத்தும் விதமாகவே காஷ்மீரில் படமாக்கப்பட்டது.

இப்படியாக இயற்கை எழிலுக்கும், ஆப்பிள் பழத்திற்கும், ரோஜா பூக்களுக்கும் தொடர்புடையதாகவே மக்கள் மனதில் பதிந்த காஷ்மீரைத் தீவிரவாதிகளின் பூமியாக அறிமுகப்படுத்தியது ரோஜா (1991) திரைப்படம். அதைத்தொடர்ந்து பல படங்கள் காஷ்மீர் தீவிரவாத பிரச்சினையைக் குறிப்பிடும்படி எடுக்கப்பட்டுள்ளன. நிலைமை ஆண்டுக்காண்டு மோசமடைந்து வருவதுடன், பயங்கர தாக்குதல்களும், நெஞ்சை உருக்கும் சோக நாடகங்களும் தொடர்ந்து அரங்கேறுகின்றன. இந்திய ராணுவம் – மக்கள் – தீவிரவாதிகள் என்ற முக்கோணத்தில் வன்முறை வெள்ளமாகப் பாய்கிறது. தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தை தாக்குகிறார்கள்; இந்திய ராணுவம் மக்களைத் தாக்குகிறது; மக்களும் ராணுவத்தை தாக்குகிறார்கள். தொடர்ந்து ஒருவரை ஒருவர் பழி வாங்குகிறார்கள். பாடம் கற்பிக்கிறார்கள்.

இந்திய ராணுவம் தீவிரவாதத்தை ஒடுக்கி அமைதியை மீட்பதற்காக காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தைக் கொண்டு அமைதியை உருவாக்குவது, கத்தியால் காது குடைவது போல. அழுக்கு போகுமோ என்னவோ, காது செவிடாகிவிடும். ஆனால் எந்தக் காரணத்தாலோ, நவீன அரசு ராணுவத்தைக் கொண்டு அரிசியிலிருந்து கல்லை அகற்றுவது போல குடிமைச் சமூகத்திலிருந்து தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து அகற்றிவிடலாம் என நினைக்கிறது. விளைவு மொத்த அரிசியும் கல்லாகி விடுகிறது.

பொதுவாக காஷ்மீர் குறித்த கட்டுரைகள் எழுதப்படும்போது, காஷ்மீரின் நெடுங்கால வரலாறு, சுதந்திரத்திற்கு முந்தைய காஷ்மீரின் நிலை, சுதந்திரம் அடைந்தபோது இந்து மன்னர், முஸ்லிம்  மக்கள் அடங்கிய சமஸ்தானமாக அது இருந்த விதம், இந்து மகாராஜா சுதந்திர நாடாக இருக்க விரும்பியது, எத்தகைய குழப்பமான நிலையில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது, அதை பாகிஸ்தான் ஏன் ஏற்கவில்லை, இந்தியா பொதுவாக்கெடுப்பு நடத்துவதாகச் சொன்னது என்னவாயிற்று, முதல் பாகிஸ்தான் போரில் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் வசமானது, பின்னர் எப்படி இந்தியப் பகுதி காஷ்மீரில் அதிருப்தியும், விடுதலை வேட்கையும் தலைதூக்கின, பாகிஸ்தான் அதைத் தூண்டுவதாக கருதி இந்தியா எப்படி அதை ஒடுக்கியது, பாகிஸ்தான் எப்படி காஷ்மீர் தீவிரவாதிகளில் சில குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆயுதப்பயிற்சி அளிக்கத் துவங்கியது, இந்திய அரசு எப்படி காஷ்மீரை ராணுவ மயமாக்கியது, ரோஜா முதல் ஹைதர் வரை இந்திய சினிமா எப்படியெல்லாம் காஷ்மீர் சூழலை சித்தரித்தது என்றெல்லாம் பேசலாம். பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. நூல்களும் எழுதப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுரையில் இவற்றை நான் சில சமயங்களில் சுட்டினாலும், எப்படி இது போன்ற பிரச்சினைகள் சிக்கலாகின்றன, இவற்றை எப்படித் தீர்ப்பது என்பதையும், அரசியல் தத்துவ அடிப்படையில் இதன் பொருள் என்ன என்பதையுமே பரிசீலிக்க விரும்புகிறேன்.

பிரச்சினை என்ன? சங்கிலித் தொடர்களாக பெருகும் வன்முறை. ராணுவம் பெல்லட் குண்டுகளால் மக்களை நோக்கி சுட்டால், மக்கள் ராணுவத்தின் மீது கையில் கிடைத்த கற்களை எறிகிறார்கள். தீவிரவாதிகளை தேடுவதற்கு ராணுவம் மக்களை விரோதிகள் போல நடத்துகிறது. மக்கள் இந்தியாவை வெறுக்கிறார்கள். என் தம்பியின் மீது பெல்லட் குண்டு பட்டு அவனுக்குக் கண் போனால், கால் போனால், என் தமக்கையினை ராணுவம் அவமானப்படுத்தினால் நான் இந்தியாவை நேசிப்பேனா, வெறுப்பேனா? எனக்கு யாராவது ஆயுதம் கொடுத்தால் ராணுவத்தை தாக்கவே விரும்புவேன்.

நான் ராணுவ வீரனாக இருந்தால், புரியாத ஊரில் கண்ணுக்குப் புலனாகாத தீவிரவாதிகளை வேடையாடச் சொன்னால், பார்க்கும் மக்களை யெல்லாம் ஆபத்தானவர்களாகவே நினைப்பேன். என்னுடைய பதட்டத்தில், எனக்குள்ள ஆயுத பலத்தைப் பயன்படுத்தி அனைவரையும் அச்சுறுத்து வேன். பணியாவிட்டால் துன்புறுத்துவேன்; தாக்கு வேன். ஒரு வன்முறை இன்னொரு வன்முறையை தூண்டும். இதற்கென்ன முடிவு?

தீர்வு ஒன்றும் சாத்தியமில்லாத ஒன்றில்லை. சுலபம்தான். உதாரணத்திற்கு இப்படி சொல்லிப் பார்க்கலாம். இந்தியா பாகிஸ்தான் இரண்டும் ஐ.நா.சபை மேற்பார்வையில் தங்களது ராணுவத்தை காஷ்மீர் பகுதியிலிருந்து முழுமையாக நீக்கிக்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரையும், இந்திய வசமுள்ள காஷ்மீரையும் இணைத்து சுயாட்சியுள்ள பகுதியாக தேர்தல் நடத்தி ஆட்சியமைக்க வேண்டும். இந்த மாநிலம் ஐ.நா. மேற்பார்வையில் தனித்து ஐந்து ஆண்டுகள் இயங்க வேண்டும். வன்முறையின் காயங்கள் ஆறவேண்டும். அதன் முடிவில் காஷ்மீர் தனி நாடாக வேண்டுமா, இந்தியாவுடன் இருக்க வேண்டுமா, பாகிஸ்தானுடன் இருக்க வேண்டுமா என்ற மூன்று தேர்வுகளை கொடுத்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அந்த வாக்கெடுப்பின் முடிவின்படி காஷ்மீரின் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம். இந்தியா தனது ஆதிக்கத்தை தளர்த்தி சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தால், எப்போது வேண்டுமானாலும் பிரிந்து போய்க்கொள்ளலாம் என்றால், மக்களாகவே விரும்பி இந்தியாவுடனே இருக்க ஓட்டளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஸ்காட்லாந்தில் பொது வாக்கெடுப்பு சமீபத்தில் நடந்தபோது மக்கள் இங்கிலாந்துடன் இருக்கலாம் என்றே பெருவாரியாக வாக்களித்தார்கள் என்பது கருதத்தக்கது.

ஆனால் இப்படியொரு தேர்வை இந்தியாவும், பாகிஸ்தானும் ஏற்காது. இப்படி ஒருவர் எழுதினால் கூட தேசபக்தி இல்லாதவர் என்ற குற்றச்சாட்டு வரும். தேச விரோதி என்று கைது கூட செய்யப்படலாம். அத்துணை வன்முறைக்கும் இடம் கொடுத்து காஷ்மீரத்தை பிடித்து வைத்துக்கொண்டு ஒரு தேசமாக நாம் சாதிக்கப்போவது என்ன? ஒரு இந்தியக் குடிமகனாக நான் இந்தக் கேள்வியை எழுப்பக் கூடாதா? நாமெல்லாம் ஏன் கருத்தரங்கம் போட்டு இந்த பிரச்சினையை விவாதிக்கக் கூடாது? அமைதிக்குத்தானே வழி சொல்கிறோம்? ஆனாலும் கூட இதெல்லாம் நிகழ்வதில்லை. யாரும் கருத்தரங்கம் போடுவதில்லை. காஷ்மீரிலிருந்து ராணுவத்தை திரும்பப் பெறச் சொல்வதில்லை. ஏனெனில் அது இந்தியாவின் பகுதி. ராணுவம் அங்கே இருக்க உரிமை இருக்கிறது என்று நினைக்கிறோம். இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்பதே முக்கியமான கேள்வி. பொறுமையாகப் பரிசீலிப்போம்.

பண்டைய அரசும், நவீன தேசிய அரசும்

வெகுகாலமாக அரசு என்பது அரசன், அரசி என்று தனிநபர்களை மையப்படுத்தி இருந்தது நம் எல்லோருக்கும் தெரியும். அவர்கள் மந்திரி, பிரதானிகளின் துணை கொண்டு ஆண்டாலும் அவர்கள் முடிவுகளே இறுதியானவை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். சதுரங்க விளையாட்டில் அரசன் என்ற காய்க்கு செக் வைத்தால் தோல்வி என்பது போல, அரசனைக் கொன்றால், சிறைப்பிடித்தால் அந்த அரசன் ஆண்ட நாடே வென்ற அரசனின் ஆட்சிக்கு கட்டுப்பட வேண்டும்.

இப்போதெல்லாம் அரசர்களை வைத்து பத்திரிகைகளில் நிறைய ஜோக் எழுதுகிறார்கள். இதற்குக் காரணம் நாம் புதிய மக்களாட்சி அரசியலை இயல்பானதாக ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்பதுதான். ஆனால் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் வரை அரசர் என்ற பதவிக்கு அரசியல் முக்கியத்துவம் நிறைய இருந்தது. அவர்களிடம் இறையாண்மை என்ற ஆற்றலும், அதிகாரமும் இருந்தது.

இந்த அரசனோ, அரசியோ ஒரு கோட்டைக்குள் இருப்பார்கள். எதிரி நாட்டுப் படைகள் நாடு முழுவதையும், அதாவது விவசாயிகள், வயல் வெளிகள், வணிகர்கள், நகரங்கள், கோயில்கள் என எல்லாவற்றையும் கைப்பற்றினாலும் கோட்டையினுள் நுழைந்து அரசரைக் கைப்பற்றினாலோ கொன்றாலோ தான் வெற்றியடைந்ததாக அர்த்தம். தங்கம், வைரம் போன்ற மதிப்பு மிக்க செல்வங்களையும் அந்த கோட்டையில் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். அதிகாரம் என்பது மணிமுடி, சிம்மாசனம், செங்கோல் என்பன போன்ற குறியீடுகளில்தான் இருந்தது.

இவற்றையெல்லாம் விட முக்கியமான விஷயம் இந்த அரசர்கள் ஆண்ட நாடுகளுக்கு திட்டவட்டமான எல்லைகள் கிடையாது. மலைகள், நதிகள், காடுகள், கடல் போன்ற இயற்கையான எல்லைகளை வைத்துக்கொள்ளலாம். இல்லாவிடில் சில குறிப்பிட்ட அடையாளங்களை, ஒரு சிறு குன்று, எல்லைத்தெய்வத்தின் கோயில் போன்ற சில புள்ளிகளை அடையாளமாக வைத்துக்கொள்ளலாம். எல்லைக்கோடு என்பதை திட்டவட்டமாக உருவாக்குவதோ, வேலி அமைப்பதோ தேவையுமில்லை, சாத்தியமுமில்லை. வேளாண்மை செய்பவர் எந்தக் குறுநில மன்னருக்கு வரி செலுத்துகிறாரோ, அந்தக் குறுநில மன்னர் எந்த அரசருக்கு கப்பம் கட்டுகிறாரோ அதுதான் கணக்கே தவிர, நாட்டிற்கான எல்லை என்பதெல்லாம் திட்டவட்டமாக இருக்க வேண்டியதில்லை.

இத்துடன் இணைத்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு அம்சம் வரைபடம். இப்போது நாம் ஆரம்பப் பள்ளியிலேயே புவியியல் பாடத்தில் தேசத்தின் வரைபடம், மாநிலத்தின் வரைபடம் என்ற மேப் என்று ஆங்கிலத்தில் சொல்லும் விஷயத்தை பயில்கிறோம். அவற்றில் எல்லாம் திட்டவட்டமான எல்லைக்கோடுகள் இருக்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த வரைபடங்களை துல்லியமாக தயாரிக்கும் தொழில்நுட்பம் உருவாகவில்லை. கார்டோகிராஃபி என்று அழைக்கப்படும் இந்தக் கலை, பதினெட்டாம் நூற்றாண்டில் துவங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் பரவலாகியது. இருபதாம் நூற்றாண்டில் இது மெள்ள மெள்ள உறுதிப்பட்ட இது, இன்று செல்பேசியில் நாம் பயணிக்கும் பாதையை கூகுள் மேப்பில் தெரிந்துகொள்ளும் அளவு வளர்ந்துள்ளது.

நவீன தேசங்களின் உருவாக்கத்தில் இந்த வரைபடத் தொழில்நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏன் எனில் ஒரு அரசன் அல்லது அரசியிடம் இருந்த இறையாண்மை என்ற அரசியல் அதிகாரம் குடிமக்களிடம் இருப்பதாக மக்களாட்சி கொள்கை உருவானதால் ஒரு நாட்டின் குடிமகன் அந்த நாட்டின் எல்லைக்குள் வசிக்க வேண்டும் என்ற தேவை உருவாகிறது. ஒரு நாட்டின், மாநிலத்தின் சட்ட திட்டங்கள் அந்த மாநிலத்தின் எல்லைக்குள்தான் செல்லுபடியாகும். தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தால், பாண்டிச்சேரியில் அது இல்லையென்றால் பாண்டிச்சேரி எல்லைக்குள் ஒரு கிராமத்தில் குடிக்கலாம். ஆனால் அதற்குப் பக்கத்துக் கிராமம் தமிழ்நாட்டில் இருந்தால், அதில் குடித்தால் காவலர்கள் கைது செய்ய வாய்ப்பு உண்டு.நிலங்களெல்லாம் துல்லியமாக அளந்து பட்டா போடப்பட்டு, எங்கே ஒரு மாநிலத்தின் எல்லை முடிகிறது என்பதெல்லாம் தெளிவாக இருக்க வேண்டும்.

மக்கள் வசிக்கவே முடியாத கார்கில் மலைத்தொடர்களில் இந்தியாவின் எல்லைக் கோட்டை காவல் காத்துக்கொண்டு ராணுவ வீரர்கள் தங்கியுள்ளார்கள். கடலிலும் எல்லை இருக்கிறது. இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடித்தால் இலங்கை ராணுவம் கைது செய்துவிடும்; சுட்டுக்கொன்றுவிடும். மலையுச்சியோ, கடலோ, காடோ எதுவாக இருந்தாலும் எல்லை முக்கியம். ஏனெனில் நவீன தேசங்கள் புவியியல் அடையாளங்கள். பண்டைய அரசர்களின் நாடுகள் அரச அடையாளங்கள் மட்டுமே கொண்டவை. சுருக்கமாகச் சொன்னால், பண்டைய அரசுகளுக்கு மையம் உண்டு, திட்டவட்டமான எல்லை கிடையாது. நவீன தேசங்களுக்கு திட்டவட்டமான எல்லைகள் உண்டு. மையம் என்பது கிடையாது. ஏனெனில் அதிகாரம் எல்லா குடிமக்களிடமும் பரவியுள்ளது. அவர்களது பிரதிநிதிகள்தான் நாட்டை அவர்கள் சார்பாக நிர்வகிக்கிறார்கள்.

இதையே துல்லியமாகச் சொன்னால் இறையாண்மை என்பது அரசனிடம் இருந்தது, இப்போது வரைபடத்திடம் இருக்கிறது. மனிதர்கள் வாழவே முடியாத பனிபடர்ந்த மலையுச்சியில் நமது எல்லைக்குள் நூறடி தூரம் அந்நிய ராணுவம் வந்துவிட்டால் அது ஆக்கிரமிப்பு என்றே அறியப்படும். அண்டை நாட்டுக் குடிமக்கள் வந்துவிட்டால் அவர்கள் கைது செய்து விசாரிக்கப்படுவார்கள். அந்தக் காலத்தில் கோட்டை வாசல் வரை அந்நியப் படைகள் வந்தாலும் கோட்டைக்குள் நுழைய முடியாவிட்டால் அவர்கள் வெற்றி பெற்றதாக அர்த்தமில்லை. ஆனால் இன்று ஒரு கிலோமீட்டர் தூரம் அவர்கள் உள்ளே நுழைந்துவிட்டால் அது நாட்டின் இறையாண்மையையே பாதித்து விடும்.

இதில் இன்னொரு முக்கியமான மாற்றம் பண்டைய நாட்களில் படைகள், படைகளுடன் மோதும். ஒரு நாட்டினுள் நுழையும் எதிரிப்படைகள் குடிமக்களை சூறையாடுவது, பெண்களை வல்லுறவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்தான். சில சமயம் பயிர்களுக்கு,வீடுகளுக்கு தீ வைப்பார்கள். ஆனாலும் கூட குடிமக்கள் சரணடைந்தோ, தப்பியோடியோ, காடு மலைகளில் ஒளிந்துகொண்டோ அல்லது போராடியோ தங்களைப் படை வீரர்களிடமிருந்து காத்துக்கொள்ளலாம். நிராயுதபாணியானவர்களை வீரர்கள் கொல்லக்கூடாது என்ற அறமும் கூட உண்டு. ஆனால் நவீன யுகத்தில் குடிமக்கள் எல்லோரிடமும் இறையாண்மை இருப்பதால், வெடிகுண்டுகளை வீசி மக்களை அழிப்பது என்பது போரின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் குடிமக்களை கொல்வதற்கென்றே வீசப்பட்டன. அதன் தாக்கம் பலதலைமுறைகளைத் தாண்டியும் நிலவுகிறது.

மக்களும், நிலமும்

இதுவரை பழைய அரசமைப்பிற்கும், நவீன தேசிய அரசிற்கும் உள்ள வேறுபாட்டின் சில முக்கியமான பரிமாணங்களைப் பார்த்தோம். இதன் மற்றொரு பரிமாணம் மக்களுக்கும், நிலத்திற்கும் உள்ள உறவு. பண்டைய காலத்தில் நிலத்தை உழுகின்ற உரிமைதான் மக்களுக்கு உண்டே தவிர நிலம் அவர்களுக்கு சொந்தமில்லை. அது அரசனுக்கு சொந்தமானது. ஒருவர் உழுகின்ற, வசிக்கின்ற நிலத்திலிருந்து அவரை அப்புறப்படுத்தி அதை வேறொருவர் வசம் அரசன் ஒப்புவிக்கலாம். எட்டுவழிச்சாலை போடாமலேகூட செய்யலாம். இப்போது போல எனக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்று வழக்கு போடுவதோ, போராடுவதோ சாத்தியம் கிடையாது.

இதில் என்ன முக்கியமான அம்சம் என்றால் மக்களுடைய வாழ்நாள் குறுகியது. அதிகபட்சம் நூறாண்டுகள்தான் வாழ்வார்கள். ஆனால் நிலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்து இருப்பது. காஷ்மீரில் உள்ள விவசாய நிலங்கள் தனிநபர்களுக்கு சொந்தமானவை. ஆனால் அதைத்தவிர உள்ள காடுகள், மலைகள், நதிகள் எல்லாம் இந்திய அரசிற்கு சொந்தமானவை.

இப்போது ஒரு முக்கியமான முரண் உருவாகிறது. காஷ்மீரில் உள்ள குடிநபர்களுக்கு அவர்கள் விளைநிலம், வீடு கட்டியுள்ள நிலம் என்பது தனிச்சொத்தாக இருக்கலாம். ஆனால் அந்த ஊரின் பொதுநிலம் என்பது அரசின் சொத்து. மாநில அரசின் பயன்பாட்டிற்கு உரியது; ஆனால் மத்திய அரசின் இறையாண்மைக்கு கட்டுப்பட்டது. நிலத்துடனான உறவு என்ற அளவில் இறையாண்மை மூன்றாகப் பிளவுபட்டுள்ளது. குடிநபரின் சொந்த நிலம், மாநில அரசின் பயன்பாட்டு உரிமை, மத்திய அரசின் இறையாண்மை ஆகிய மூன்றும் நிலத்தினைக் கூறுபோடுகின்றன.

அரசியல் ரீதியாக மக்களிடமே இறையாண்மை இருக்கிறது. ஆனால் இந்திய அரசு காஷ்மீரத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டு விட்டதால், காஷ்மீர் நிலப்பகுதி தன் இறையாண்மைக்கு உட்பட்டது என்கிறது. இப்படி ஒரு நவீன தேசம் ஒரு நிலப்பகுதியை இணைத்துக்கொள்ளலாமா என்பதில்தான் ஒரு கடுமையான சிக்கல் நிலவுகிறது. அது என்ன என்பதையும் பரிசீலிப்போம்.

புதிய தேசிய அரசும், பழைய அரசனும்

இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஜம்மு-காஷ்மீர் பகுதி ஒரு சமஸ்தானமாக இருந்தது. அதன் அரசராக ஹரி சிங் என்ற மன்னர் இருந்தார். இவர் லாஹோரிலிருந்து சீக்கிய அரசை ஸ்தாபித்த ரஞ்சித் சிங் என்ற மன்னரிடம் பிரதானியாக இருந்த குலாப் சிங் என்பவரின் கொள்ளுப்பேரன். ரஞ்சித் சிங் காலத்திற்குப் பின் பிரிட்டிஷ்கார்கள் சீக்கிய அரசைத் தோற்கடிக்க, இந்த குலாப் சிங் பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து ஒரு உடன்படிக்கை மூலமாக ஜம்மு-காஷ்மீரை ஆளும் அதிகாரத்தை 1846 ஆம் ஆண்டு பெற்றார். அது முதல் இவரது வம்சம் ஜம்மு-காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்டு வந்தது.

ரஞ்சித் சிங் காலம் முதலே காஷ்மீரத்து முஸ்லிம் விவசாயிகள் கடுமையாக சுரண்டப்பட்டு வந்தார்கள். எல்லா சமஸ்தானத்து அதிபர்களும் போல, ஆடம்பர வாழ்க்கையில் அரசர்கள் வாழ்வதும், வரி செலுத்தும் குடிமக்கள் சுரண்டலுக்கு ஆட்பட்டு எளிய வாழ்க்கை வாழ்வதுமாகத்தான் இருந்தார்கள். ஹரி சிங் இளமையில் பாரிஸ், லண்டன் என உல்லாசமாக வாழ்ந்தவர். பெண் விவகாரத்தில் இவர் மேல் ஏதோ ஒரு வழக்கு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.  இவர்தான் ஜம்மு-காஷ்மீரின் அரசராக 1947 ஆம் ஆண்டு இருந்தார்.

காஷ்மீரில் மக்கள் தலைவராக இருந்த ஷேக் அப்துல்லாவிற்கும், நேருவிற்கும் இருந்த நட்பின் காரணமாக இவருக்கு காங்கிரஸைக் கண்டால் பிடிக்கவில்லை. பாகிஸ்தான் கோரிக்கை வைத்த முஸ்லிம் லீகையும் பிடிக்கவில்லை. எனவே தனி சமஸ்தானமாகவே ஜம்மு-காஷ்மீர் தொடரவேண்டும் என விரும்பினார். திருவாங்கூர் சமஸ்தானம், ஹைதரபாத் சமஸ்தானம் போன்றவையும் இப்படி விரும்பின. பொதுவாக பிரிட்டிஷ் அரசு இந்திய துணைக்கண்டத்திற்கு சுதந்திரம் வழங்கிய போது, சம்ஸ்தானத்து மன்னர்கள் தங்கள் குடிமக்களின் விருப்பத்தை அனுசரித்து இந்தியாவுடன் இணைவதை முடிவு செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டார்கள்.

இதற்கு முக்கிய காரணம், இந்தியா, பாகிஸ்தான் இரண்டுமே நவீன தேசிய அரசுகள். இவை மக்களுடைய சுதந்திர போராட்டத்தால் உருவானவேயே தவிர, மன்னர்கள் பிரிட்டிஷ் அரசுடன் போரிட்டதால் உருவானவை அல்ல. இந்திய மக்களின் சுதந்திரப் போர் நவீன அரசியல் பிரக்ஞையால் உருவானது. இது சமஸ்தானத்து மக்களிடையேயும் பரவியது. அதனால் சமஸ்தானத்து அரசர்கள் பழைய இறையாண்மை வழங்கிய அதிகாரத்தில் முடிவெடுத்தால் அது மக்கள் ஆதரவைப் பெறாமல் போகலாம் என்ற அச்சம் இருந்தது. அதனால்தான் மக்களைக் கலந்தாலோசித்து முடிவெடுக்கச் சொல்லி சமஸ்தான அதிபர்களை பிரிட்டிஷ் அரசு அறிவுறுத்தியது.

காஷ்மீரில் என்ன நடந்தது என்றால் வெகுகாலமாக சுரண்டப்பட்ட மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். எல்லைப்புற பகுதிகளில் இருந்து தலைநகரை நோக்கி வந்தார்கள். இவர்களுக்கு பாகிஸ்தான் உதவியளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காஷ்மீர் மன்னர் ஹரி சிங் இந்திய ராணுவத்தின் உதவியை நாடினார். காஷ்மீர் இந்தியாவில் சேருவதாகச் சொன்னால் ராணுவத்தை அனுப்புவதாக இந்தியா சொன்னது. இந்த அவசரத்தில் அவர் இந்தியாவுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே ராணுவம் காஷ்மீர் சென்றுவிட்டது என்றும் ஒரு கூற்று இருக்கிறது.

பழைய அரசுரிமையின் அடிப்படையில் மக்கள் கருத்தைக் கேட்காமல் ஒரு நவீன அரசில் சேரும் உரிமை ஒரு மன்னருக்கு இருக்கிறதா என்பதே கேள்வி. நேரு மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்துவோம் என உறுதியளித்தார். ஆனால் இது நிகழவேயில்லை. பாகிஸ்தான் தொடர்ந்து இந்த வாக்குமீறலை சுட்டிக்காட்டி வந்தது.

பொதுவாக மக்களுக்கு அரசின் மீது அதிருப்தி நிலவுவது இயற்கை. அதில் இது போன்று ஒரு வரலாறு சேரும்போது, அந்த அதிருப்தி சுதந்திர வேட்கையாக, இறையாண்மைக் கோரிக்கையாக மாறுவது இயல்பு. இந்த இறையாண்மைக் கோரிக்கையில் இரண்டு விதமான பிரச்சினைகள் உள்ளன. அது என்னவென்று காண்போம்.

இறையாண்மைச் சாபம்

காஷ்மீரின் மொத்த மக்கள் தொகை ஒன்றேகால் கோடி. இது காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக், ஜம்மு என்று மூன்று பிரதேசமாகவும், பல மொழிகள், பல இனங்களை சேர்ந்த மக்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. இவ்வளவு சிறிய நாட்டிற்கு சமகால உலகில் அரசியல் ரீதியாக இறையாண்மை பெறுவதற்கு எந்த அளவு பொருள் இருக்கிறது என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

ஏனெனில் பொருளாதார வளர்ச்சி என்பதே அனைவரும் வேண்டுவதாக இருக்கும்போது மூதலீட்டியக் குவிமையங்களின் ஆதரவு இல்லாமல் அதை செய்ய முடிவது இல்லை. காஷ்மீர் தனி நாடாக ஆனால் அதை தங்கள் சந்தையாக, தங்கள் முதலீட்டின் உற்பத்திக் களனாக வைத்திருக்க இந்தியாவும், சீனாவும் தொடர்ந்து ஊடுருவி செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கும். இப்போது தனி நாடுகளாக இருக்கும் நேபாளத்திலும், இலங்கையிலும் இதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. நேபாளத்தில் ஒரு தேர்தல் முடிந்த பிறகு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் இந்திய அரசு புதிய கார்களைப் பரிசளித்த செய்தி செய்தித்தாள்களில் வெளியானது. ஆப்பிரிக்க நாடுகளில் தொழில்பேட்டைகளில் முதலீடு செய்யச்சொல்லி தொலைக்காட்சியிலேயே விளம்பரங்கள் வருகின்றன. இப்படியெல்லாம் அந்நிய முதலீட்டினை நம்பி வாழ்வதற்கு இறையாண்மை எதற்கு என்ற கேள்வியும் எழுத்தான் செய்யும்.

மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தாலும் செல்வாக்குமிக்க சில குடும்பங்கள்தான் அதிகாரத்தில் முக்கிய பங்கெடுக்கும். இவை இந்திய, சீன, பாகிஸ்தானிய அரசுகளுடன் உறவுகளைப் பேணும். பிற மேற்கத்திய அரசுகளும் தங்கள் பங்கிற்கு “உறவுகளை” வலுப்படுத்தும். மக்கள் அதே பொருளாதார ஏற்றத்தாழ்வு, சுரண்டல், அதிருப்தி என்றுதான் வாழ வேண்டி இருக்கும்.

அது மட்டுமன்றி, எல்லைகளைப் பாதுகாக்க ஒரு ராணுவமும் ஆயுதங்களும் தேவைப்படும். இந்தியா, பாகிஸ்தான் அளவு ராணுவ பலத்தைப் பெருக்காவிட்டாலும், கொஞ்சமாவது உருவாக்கிக் கொண்டால்தான் ஒரு கெத்து இருக்கும். இதற்கான செலவுகளும் வரிச்சுமையாக மக்கள் தலையில்தான் விடியும். இதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் இறையாண்மை என்பது வரமா, சாபமா என்ற கேள்வி தோன்றாமல் இருக்க முடியாது.

இந்தியாவுக்கு என்ன லாபம்?

சரி இப்படியெல்லாம் ராணுவத்தை வைத்து மக்களைக் கட்டுப்படுத்தி காஷ்மீரைத் தன்னுடன் வைத்திருப்பதால் இந்தியாவிற்கு என்ன லாபம் என்ற கேள்வியும் எழுத்தான் செய்யும். காஷ்மீரிலிருந்து கிடைக்கும் மொத்த உற்பத்தியின் பெறுமதி என்ன, அதன் மேலான வரி வருவாய் என்ன, அரசு காஷ்மீரின் வளர்ச்சிக்கும், ராணுவத்திற்கும் செலவிடும் தொகை என்ன என்று கணக்குப் பார்த்தால் நிச்சயம் எந்தவொரு கணிசமான லாபமும் இந்தியாவிற்கு இருப்பதற்கு சாத்தியமில்லை. காஷ்மீரில் பெட்ரோலோ, வேறு முக்கிய கனிம தாதுக்களோ கிடைப்பதில்லை. ஒன்றேகால் கோடி மக்கள், நிலத்தின் கணிசமான பகுதி மலைப்பகுதி; மாநில அளவிலான மொத்த உற்பத்தியில் நாட்டில் இருபத்தோராவது இடத்தில்தான் இருக்கிறது. இத்தகைய பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக இத்தனை ராணுவ வீரர்களை பலி கொடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுத்தான் செய்யும். விடைதான் கிடைப்பது அரிது.

அரசியல் முரண் என்பது ஒருவகையில் தான் தோன்றித்தனமானது. கார்ல் ஷ்மிட் என்ற அரசியல் தத்துவவாதி அரசியல் என்பது எதிரிகளையும், நண்பர்களையும் வரையறை செய்வதுதான் என்று சொன்னார். இப்படி செய்வதற்கு மதம், பொருளாதாரம், மொழி, இனம் என பல காரணங்கள் இருந்தாலும் இவை எதுவுமே முழுமையாக இருக்க முடியாது என்பதே அவர் கருத்து. இவையெல்லாம் முரண் தோன்றுவதற்கு காரணமாக இருக்கலாம்; ஆனால் அரசியல் முரண் தோன்றிய பிறகு அது தனித்தேதான் இயங்கும்.

காஷ்மீரை தன் இறையாண்மைக்கு உட்பட்டதாக வைத்திருப்பதில் இந்தியாவிற்குப் பெரிய லாபமில்லை. இந்தியாவிலிருந்து விடுபட்டு தனி நாடாக இறையாண்மையைப் பெறுவதால் காஷ்மீர் மக்களுக்கும் பெரிய லாபமில்லை. ஆனால் அரசியல் முரண் என்று ஒன்று ஏற்பட்ட பிறகு இரண்டு தரப்புகளுமே விட்டுத்தரத் தயாராக இல்லை என்பதுதான் பிரச்சினை.

இந்தியா முழுவதிலும் தேசபக்தர்கள் காஷ்மீரை இந்தியா விட்டுவிடக்கூடாது என்று நம்புகிறார்கள். இவர்கள் காஷ்மீர் வரலாற்றையோ, அதன் மக்கள் தொகை என்ன, பொருளாதாரம் என்ன என்பதையோ அறியாதவர்கள். இந்தியாவுக்கு சொந்தமான பகுதி இந்தியாவிலிருந்து பிரிந்து போகக் கூடாது என்பதுதான் அவர்கள் பொதுப்புத்தி.

கார்கில் போரின்போது நான் தமிழகத்தில் ஒரு மத்திய அரசு அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். அங்கே சில ஊழியர்கள் கார்கில் போருக்கு நிதி சேகரித்துக்கொண்டு வந்தார்கள். நான் நிதியளிக்க மாட்டேன் என்றேன். அவர்களிடம் நீங்கள் காஷ்மீருக்கு சென்றிருக்கிறீர்களா, எப்போதாவது போகப் போகிறீர்களா என்று கேட்டேன். இல்லை என்றார்கள். அங்கே உங்கள் உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டேன். அதுவும் இல்லை என்றார்கள். இப்படி நமக்கு எந்த தொடர்பும் இல்லாத எங்கோ இருக்கும் மலைப்பகுதிக்காக நாம் ஏன் நிதி திரட்ட வேண்டும் என்று கேட்டேன். அது நம் தேசத்தின் ஒரு பகுதி என்றார்கள். நம் ஊரிலேயே நிறைய பகுதிகளில் சுகாதாரம் மோசமாக இருக்கிறதே, நாம் நிதி திரட்டி அதை சரிசெய்யலாமே என்றேன். இப்படியாக ஒரு விவாதம் சென்றது. அவர்கள் ஓரளவு என் வாதங்களைப் புரிந்துகொண்டாலும், தேசத்திற்கு ஒரு ஆபத்து என்ற எண்ணத்திலிருந்து விடுபட முடியாமலேயே இருந்தார்கள். நான் கார்கில் மலைத்தொடரைப் பேசாமல் பாகிஸ்தானிடம் கொடுத்துவிடலாம். அங்கே புல் பூண்டு கூட முளைப்பதில்லை. அவர்களே வைத்துக்கொள்ளட்டும் என்றேன். சற்று குழம்பிப் போய்விட்டார்கள்.

இதற்கு ஒரு விளக்கத்தை படித்த புத்திசாலி நண்பர்கள் சொல்வார்கள். காஷ்மீரைத் தனியாகப் போகவிட்டால் பின்னர் எல்லா பகுதிகளும் தனியாகப் போய்விடுவார்கள். இந்தியா சிதைந்து போய்விடும் என்ற கவலைதான் அது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் நமக்கே கவலையாகத்தான் இருக்கும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியா ஒரே நாடாக இருந்தது இல்லை. இப்போதுதான் எழுபது ஆண்டுகளாக ஒரே நாடாக மாறியிருக்கிறது. ஆனால் அதற்கு முன்னால் பல நாடுகளாகப் பிரிந்து இருந்தபோதும் மிகச்சிறந்த நாகரீக வளர்ச்சி சாத்தியமாகத்தான் இருந்தது. மானுட சிந்தனையின் தனிப்பெரும் சிகரமான பௌத்த தத்துவம் இங்கேதான் உருவானது. திருக்குறள் போன்ற மகத்தான அறிவு நூல் ஒன்று உருவானது. இசையும், கட்டிடக் கலையும், நடனக் கலையும், இலக்கியமும் செழித்தோங்கியது. இவையெல்லாம் நடைபெற இந்தியா ஒரே நாடாக இருப்பது தேவையாக இருக்கவில்லை.

இந்தியா அளவே பெரிதான ஐரோப்பாவும் ஒரே நாடாக இருந்ததில்லை. இன்றைக்கும் ஒரே நாடாக இல்லை. ஐரோப்பிய யூனியன் என்று ஒன்றை சிறிது காலத்திற்கு முன் துவங்கினார்கள். ஆனால் பிரிட்டன் அதிலிருந்து வெளியேறுகிறேன் என்று கூறிவிட்டது. அதாவது பிரிட்டிஷ் மக்கள் பொதுவாக்கெடுப்பில் வெளியேற வேண்டும் என்று பெரும்பான்மை வாக்களித்து விட்டார்கள். இப்போது வெளியேறவும் முடியாமல், இருக்கவும் முடியாமல் திணறுகிறது.

சமகால உலகின் அரசியல் தன்மை

சமகால உலகம் என்பது தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. உலகின் எல்லா பகுதிகளுக்கும் செய்திகள் உடனடியாகப் பரிமாறப் படுகின்றன. கலாசார நிகழ்வுகள் பகிரப் படுகின்றன. பயணம் செய்வது மிகவும் சுலபமாகிவிட்டது. பண்டங்களின் பரிமாற்றமும் எளிதாகிவிட்டது. இப்படியாக சுருங்கிப் போன உலகில் சிறிய நாடுகளின் இறையாண்மை என்பதற்கு எத்தகைய மதிப்பு இருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறி வருகிறது.

மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு நிர்வகித்துக்கொள்ள வேண்டும் என்பது சரியான கோட்பாடு என்பதை அனைவரும் ஏற்கின்றனர். இது சுயாட்சி என்று அழைக்கப்படலாம். இந்த சுயாட்சி உரிமை என்பது இறையாண்மை என்ற வடிவத்தை எடுக்க வேண்டுமா என்பது முக்கியமான கேள்வி. இறையாண்மையின் ரகசியம் போர் புரியும் ஆற்றல் என்பதேயன்றி வேறில்லை. இன்றைய உலகில் பல நாடுகள் அணு ஆயுத ஏவுகணைகளை வைத்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால் சர்வநாசம் விளையும் என்பதும் அனைவருக்கும் தெரியும். எனவே போர் என்பது நாடுகளுக்கிடையில் தவிர்க்கப்படுவதே முக்கியம்.

அதனைக்கடந்து பொருளாதார வாழ்க்கை, உற்பத்தி நுகர்வு பெருக்கம் என்பதே இன்று மானுட வாழ்வின் மைய அச்சாக இருக்கிறது. இதை நிகழ்த்தும் முதலீட்டிய குவிப்புகள் சர்வதேச தன்மை கொண்டுள்ளன. மல்டி நேஷனல் கார்ப்பரேஷன், எம்.என்.ஸி. என்று அவை அழைக்கப்படுகின்றன. தேசிய அரசுகள் இவற்றை அனுசரித்துதான் இயங்குகின்றன.

இதன் ஒரு விளைவாக சுற்றுச்சூழல் சீர்கேடு மிகப்பெரிய ஆபத்தாக, மானுட இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குவதாக மாறியுள்ளது. இன்னும் ஐம்பது ஆண்டுகளில் இமயமலைத் தொடரில் பெரும்பாலான பனி உருகிவிடும் என்று அறிவியல் கூறுகிறது. புவி வெப்பம் தொடர்ந்து அதிகரிப்பதால் இவ்விதம் நிகழும் என்று கூறுகிறார்கள்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்த சூழலியல் பிரச்சினையால் மிகப்பெரிய மாறுதலை சந்திக்கும். அங்கே இப்போது முக்கிய தொழிலாக உள்ள விவசாயம், பழ உற்பத்தி போன்றவை பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படியான மாற்றம் வரும்போது அரசியல் இறையாண்மையை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி முக்கியமானது.

அதே சமயம் பிரிவினை குறித்த இந்திய தேசியத்தின் அச்சம் பொருளற்றது. சுயாட்சி பெற்ற பிரதேசங்களின் கூட்டமைப்பாக, இறையாண்மையை கூடியவரை பகிர்ந்துகொள்ளும் அரசியலமைப்பை உருவாக்குவதுதான் அனைவரையும் பாதுகாப்பாக உணர வைக்கும். மத்திய அரசில் அதிகாரத்தை குவித்துக்கொண்டு, தேச பக்தி என்ற பெயரில் தேவையற்ற அரசியல் வெறியை உருவாக்குவது பண்பாடற்ற செயல் என்பதை உணர வேண்டும்.

மனித நாகரீகத்தின் வளர்ச்சி போரை வன்முறையற்ற அரசியல் முரணாக மாற்றுவதுதான் என்று நாம் எடுத்துக்கொண்டால், இறையாண்மை குறித்த கற்பிதங்களிலிருந்து விடுபட வேண்டும். இறையாண்மை என்பது குடிநபர்கள் விரும்பியபடி வாழும் சுதந்திரம்தானே தவிர, தேசிய அரசின் போர்புரியும் ஆற்றல் அல்ல என்பதைப் புரிந்துகொண்டால் மானுடம் முதிர்ச்சியடைய முடியும்.

அதற்கு அடுத்த கட்டமாக நுகர்வையும் குறைத்துக்கொண்டு வாழ்க்கையை எளிமையாக வாழக்கற்றால் மொத்தமாக அழிந்துபடாமல் தப்பிக்கலாம்.

இப்படியெல்லாம் யோசிப்பது கடினமல்ல. எத்தனையோ ஆன்றோர்களும், சான்றோர்களும், கலைஞர்களும் சொன்னதுதான். ரவீந்திரநாத் தாகூர் சொன்னார். ஜான் லெனன் பாடினார். எந்தக் காரணத்திலோ போரை சூல்கொண்ட இறையாண்மையை நேசிக்கும் அளவு, விடுதலையை சூல்கொண்ட இறையாண்மையை கற்பித்துக்கொள்ள இயல்வதில்லை.

ப்யூட்டிஃபுல் காஷ்மீர், டெர்ரரிஸ்ட் காஷ்மீராக மாறிய சோகம் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படை முரண் என்றால் மிகையாகாது. அதை உருவாக்கியதில் நம் அனைவருக்கும் பங்கிருக்கிறது. இந்திய வரைபடத்தில் அதன் தலைபோல காஷ்மீர் தோன்றுகிறது என்ற அபத்தமான உருவகத்தையாவது நாம் தவிர்க்கக் கற்கவேண்டும். தேசம் ஆளுமில்லை; அதற்குத் தலையுமில்லை, வாலுமில்லை. தேசம் தவிர்ப்போம்! நேசம் வளர்ப்போம்!