நான் நிறைய முறை எழுதியிருக்கிறேன்.  எனக்குத் தூய்மைவாதிகளை சுத்தமாகப் பிடிக்காது.  உலகின் மிகப்பெரிய பதவிகளில் எல்லாம் மிகவும் அழுக்கான ஆட்கள் அமர்வது தூய்மைவாதிகளால்தான்.  ஜனநாயகம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்தது.  அதில் சிக்கல்கள் இருக்கும்.  100% பெர்ஃபெக்ஷன் இருக்காது.  அதுவும் மனிதனைப் போலவே பல கோணல்கள் நிறைந்த ஒரு அமைப்பு.  ஆனால் தூய்மைவாதிகள் தாங்கள் ஏதோ தேவதூதர்கள் போலவும், அரசியல் என்றாலே அசுத்தம் போலவும் வாந்தி எடுப்பார்கள்.  அதில் இருக்கும் நெளிவு சுளிவுகளைப் புறம் தள்ளுவார்கள்.  புறக்கணிப்பார்கள்.  அந்நேரத்தில் மோடியைப் போல யாராவது வருவார்கள்.  நான்தான் சர்வரோக நிவாரணி என்பார்கள்.  தூய்மையிலும் தூய்மையானவன் நான் என்பார்கள்.  இந்தத் தூய்மைவாதிகளின் ஆதரவோடு ஆட்சிக்கும் வருவார்கள். பிறகு கட்டியிருக்கும் கோமணமும் அம்பானிக்காக களவாடப்படும்!  ஆக, நாமெல்லாம் இந்த ரகம் இல்லைதான். மனித சமூகத்தில் எப்படி எல்லாமே குறைகளோடு இருக்கிறதோ, அதேபோல அரசியல், அரசியல்வாதிகள் எல்லாமே, எல்லோருமே குறைகளோடு இருப்பவர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறவர்கள்தான். ஆனால் நமக்கே அருவெறுப்பை வரவழைக்கும் ஒரு கூத்து தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.

எல்லா தேர்தல்களிலும் கூட்டணி வைப்பார்கள்.  அணி மாறுவார்கள். ஃபாசிச ஆட்சி எனக் கத்துவார்கள். தேர்தல் நெருங்கும்போது ஆளுங்கட்சியுடனேயே கூட்டணி வைப்பார்கள்.  மாறி மாறி திட்டிக் கொள்வார்கள். பின்பு கூடிக்குலாவுவார்கள். அன்போடு அரவணைத்து ஒன்றுக்கொன்றாக இருப்பார்கள். தேர்தல் நெருங்கும்போது மூன்றாவது அணி ஆரம்பிக்க கிளம்பி விடுவார்கள்.  எல்லாமே பார்த்திருக்கிறோம்.  ஆனால் இப்போது இணைந்திருக்கும் அதிமுக கூட்டணி இருக்கிறதே அதைப் போன்றதொரு அருவெறுப்பான கூட்டணி இருக்கவே முடியாது.

மிக உயரத்தில் இருந்து விழுந்தால்தான் அடி பலமாகப் படும்.  அந்த விதத்தில் மோடி ஆட்சியில் இந்தியாவின் எல்லா மாநிலங்களுமே அடிபட்டிருந்தாலும், ஐசியூவில் அட்மிட் செய்யும் அளவுக்கு அடிபட்டிருப்பது தமிழகம் தான். வடநாட்டவர்களுக்கு என்ன தெரியும்?  மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என அங்கு தேர்தல் வாக்குறுதி கொடுத்தால் அந்த மாநில மக்களே சிரிப்பார்கள். ஆனால் இங்கே அது கலைஞர் எனும் மாமனிதனால் எப்போதோ நனவாகிப் போன நிதர்சனம். இதுபோல எப்படியெல்லாம் தமிழகத்தைச் சீரழிக்கிறது பாஜக? எப்படியெல்லாம் துணை போகிறது அதிமுக?

மிசஸ் (Mrs) என்பதை எம்.ஆர்.எஸ். என வாசிக்கும் ஒரு அறிவாளி.  கம்பராமாயணம் எனும் பேரிலேயே கம்பர் என அதை எழுதியவர் பெயரும் இருந்தாலும், அதை எழுதியவர் சேக்கிழார் எனச் சொல்லும் பேரறிவாளி. இப்படி சராசரிக்கும் குறைவான IQ உடைய இரண்டு பேர் நம் குழந்தைகளுக்கு அடுத்தடுத்து தேர்வுகளாக அடுக்கிக் கொண்டே போகிறார்கள். நீட் எனும் கிருமியோடு சேர்த்து இப்போது 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்கிற கிருமியையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள். உலகமே மிகக்குறைந்த தேர்வுகள் கொண்ட பாடத்திட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் போது, இவர்கள் நம் கல்வியைக் கற்காலத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.

நம் ஊர் மாணவர்களில் பெரும்பான்மையினரைப் படிக்கப் பள்ளிக்கு கூட்டி வருவதே ஒரு போராட்டம்.  அவர்களின் வாழ்க்கைச் சூழல், பெற்றோர்களின் மனநிலை என எத்தனையோ போராட்டங்களை எல்லாம் அரசு தனது திட்டங்களின் மூலம், சலுகைகளின் மூலம் வென்றுதான் அவர்களை இதுவரை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.  அதிலும் மாணவிகள் நிலைமையைச் சொல்லவே வேண்டாம்!

ஒவ்வொரு பொதுத்தேர்வு மட்டுமல்ல, ஆண்டுத்தேர்வுமே கூட மாணவர்களை பள்ளியில் இருந்து நிப்பாட்டுவதற்கு அவர்களின் குடும்பத்திற்கு கிடைத்த பெரும் ஆயுதம்.  இதை நான் சொல்லும்போது, “ஒழுங்காப் படிக்காதவன் படிப்பை நிப்பாட்டிட்டுப் போறான்” என உங்கள் மனதில் தோன்றினால் நீங்கள் சுயநலம் பிடித்த, தன்னை வைத்தே உலகை அளக்கும் மேட்டுக்குடி திமிர்த்தனத்தைப் பெற்றுவிட்டீர்கள் என அர்த்தம்.  உங்களுக்கு இது புரியாது.

ஆனால், இது புரிந்ததால்தான் நீதிக்கட்சி தொடங்கி காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரை மாணவர்களுக்கு உணவு ஊட்டிவிட்டு. சீருடை தைத்துக் கொடுத்து, பஸ் பாஸ் கொடுத்து, சைக்கிள் கொடுத்து, லாப்டாப் கொடுத்து, நாப்கின் கொடுத்து, படிக்க வைத்தார்கள், வளர்த்தார்கள்.  வாழ்க்கை தன்மீது சுமத்தும் தடைகளைத் தாண்டி எப்படியாவது படித்து முன்னேறிவிட்டால் இந்தச் சமூகம் ஒட்டுமொத்தமாக முன்னேறும் என்பதை அந்தத் தலைவர்கள் உணர்ந்திருந்தார்கள்.  பல தலைமுறைகளாக தமிழ்நாட்டில் நடந்த இந்த மாற்றத்தினால்தான் குஜராத், உபி, பீகார் போல அல்லாமல், நாம் முன்னேறிய மாநிலமாக இருக்கிறோம்.

அந்த மாநிலங்களில் எல்லாம் பணக்காரர்களிடமும், குறிப்பாக உயர்சாதிக்காரர்களிடம் மட்டுமே புற்றுநோய் செல்களைப் போலக் குவிந்து கிடக்கும் கல்வி, நம் மாநிலத்தில் ஆரோக்கியமான செல்களாக எல்லா இடத்திலும் பரவிக் கிடக்கிறது.  எல்லோரையும் வாழவைக்கிறது, முன்னேற்றுகிறது.  பிற நாடுகளில், மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் உயர்பதவிகளில் இருக்கும் வெளிமாநிலத்தவர்கள் பெரும்பாலும் உயர்சாதிக்காரர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் அப்பதவிகளில் நம்மூர் கிராமங்களில் படித்து வளர்ந்த பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட ஆட்கள்கூட இருப்பார்கள்.  இதுதான் அடிப்படை வித்தியாசம்.  பரவலான முன்னேற்றம்.  வளர்ச்சி!

இதையெல்லாம் முறித்துப் போட்டு, நம் குழந்தை களையும் இந்த பீடா போட்டு தாஜ்மஹாலில் துப்பிவைக்கும் இந்தத் தற்குறி முண்டங்களைப் போலவே ஆக்கத்தான் பாஜக திட்டம் தீட்டுகிறது.   படித்தோ, உழைத்தோ முன்னேறாமல் டயர் நக்கியே முன்னேறிய அதிமுக அடிமைக் கூட்டமும் கூச்சநாச்சமின்றி இந்தக் கொடுமைக்குத் துணை போகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவோ உண்டுதான்.  ஆனாலும், இப்போது நாம் அடைந்துள்ள வளர்ச்சி என்பதே பல தடைகளைத் தாண்டி,  நம் தலைவர்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய ஒன்று.  அதை ஸிஷிஷி, பாஜக, அதிமுக நிர்மூலமாக்குவதைப் பார்த்துக்கொண்டிருப்பதைவிட ஒரு தமிழினத் துரோகம் வரலாற்றில் இருக்க முடியாது.

பாஜக எதிரி, அதிமுக காட்டிக்கொடுக்கும் எதிரி. சரி.  ராமதாஸ் என ஒருவர் இருந்தார். சமூகநீதிப் போராளி என அறியப்பட்டவர்.  சின்னப் பெரியார் எனப் பட்டமெல்லாம் பெற்றவர்.  அம்பேத்கர் விருது பெற்றவர். கடந்த ஐந்தாண்டுகளாக ஆதாரங்களோடு அதிமுக அடிமை அரசின் ஊழல்களைப் பட்டியல் போட்டவர்.  இதோ இன்று கொஞ்சம் கூட வெட்கம், மானம், ஞாபகம் என எதுவுமே இல்லாமல் எடப்பாடி என்கிற ஒரு ஆளிடம் குனிந்து கிடக்கிறார்.  டாக்டர் அய்யா என அவரைப் பலமுறை விளித்து எழுதியிருக்கிறேன். அவர் சமூகத்துக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வரிசையில் இட ஒதுக்கீட்டை வாங்கிக் கொடுத்தவர். அளித்தவர் கலைஞர்.  அந்த மரியாதை முன்பு எப்போதும் எனக்குண்டு.   ஆனால் இன்று என்ன ஆனது?

எந்த இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை வைத்து அரசியலுக்கு வந்தாரோ, எந்த சமூகநீதியை வைத்து அரசியலுக்கு வந்தாரோ, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை நீக்குவோம் என முழங்கும் பாஜகவுக்கு வாக்குக் கேட்கப் போகிறார்.  தன் சமூக மக்களுக்குப் போராடிப் பெற்றுக் கொடுத்த இட ஒதுக்கீட்டை பணத்துக்கோ, தன மகனுக்கான பதவிக்கோ ஆசைப்பட்டு தானே தாரைவார்க்கப் பார்க்கிறார்.  இதைவிட ஒரு பச்சைத் துரோகம் வரலாற்றில் இருக்குமா?

எல்லா தேர்தல்களிலும் நமக்கு இரண்டு பெரிய தேர்வுகள் இருக்கும்.  இதுவா அதுவா என யோசிப்போம்.  இந்தக் கூட்டணிதான் நல்லது என்றோ, அந்தக் கூட்டணிதான் நல்லது என்றோ ஆளாளுக்கு ஒரு காரணம் வைத்திருப்பார்கள், அதை வைத்துப் பிரச்சாரம் செய்வார்கள்.  ஆனால் இந்த முறை அப்படிப் பிரச்சாரம் செய்யத் தேவை இருக்கிறதா? பாஜகவும், அதிமுகவும் மக்களின் ரத்தம்குடிக்கும் மோசமான கட்சிகள், பாமக அதற்கு காசுக்கு கூலி வேலை பார்க்கப் போயிருக்கும் கட்சி என சொல்லித்தான் மக்களுக்குப் புரியவைக்க வேண்டுமா?  எனக்கு ஏன் இந்த சந்தேகம் என்றால், ஒரு பக்கம் பரோட்டாவும், இன்னொரு பக்கம் சப்பாத்தியும் இருந்தால், எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிட வேண்டாம் எனப் பரிந்துரை செய்வதிலோ, பரப்புரை செய்வதிலோ நியாயம் இருக்கிறது. தேவை இருக்கிறது.  ஆனால் ஒரு பக்கம் மலமும், ஒரு பக்கம் சோறும் இருக்கும்போது கூடவா அந்தப் பிரச்சாரம் தேவைப்படுகிறது?   கொஞ்சம் அதிகப்படியான ஒப்பீடாகத் தெரிகிறதா? சத்தியமாக இல்லை.  இல்லவே இல்லை.

அதிமுககாரர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் மோடி படத்தை மாட்டிவிட்டார்கள்.  இவ்வளவு வளர்ந்தபின் எந்த மானமும், கூச்சமும் இன்றி இனிஷியலை மாற்றிக் கொண்டார்கள்.   இந்த பாமகவுக்காவது வெட்கமானம் வேண்டாமா?  இந்தியாவின் மிகப்பெரிய சாதிக்கட்சி பாஜக.  பார்ப்பனர்களுக்காக மட்டுமே நடத்தப்படும் ஒரு பார்ப்பனக் கட்சி.  ஆனால் தொண்டர்களாக எல்லா சாதிக்காரர்களும் இருப்பார்கள்.   அதுதான் அதன் தந்திரம். அதில் போய் இவர்கள் இன்னொரு படையாகச் சேரலாமா?  கடைசியில் பார்ப்பனர்களுக்கு சேவகம் புரியவா இவ்வளவு போராட்டமும்? அப்படி கூட்டணி வைத்தே ஆகவேண்டும் என்றால் தினகரனுடன் வைத்திருக்கலாம். அது மிகப்பெரிய மாஃபியா கும்பல்தான். மாஃபியா கும்பல் என்ன செய்யும்?  கொள்ளை அடிக்கும்.  மிஞ்சிப் போனால் கொலை செய்யும்.

ஆனால் பாஜக என்ன செய்கிறது? நம் தலை முறையையே அழிக்கிறது. நம்மை மீண்டும் சூத்திரர்களாகத் திரியவிட்டு, பார்ப்பனர்களின் நாடாக மட்டுமே இந்தியாவை ஆக்க பகிரங்கமாகக் களத்தில் இறங்கி இருக்கிறது.  தற்காலிக சுகத்துக்காகத் தலைமுறைகளைக் காவு கொடுக்கத் தயாராகிவிட்ட ஒரு கூட்டணியை அருவெறுப்பானது எனச் சொல்லாமல் வேறெப்படிச் சொல்வது?

இதையெல்லாம் மீறியும், எடப்பாடி என் சாதிக்காரர் என்பதால் அவருக்கு வாக்களிப்பேன், ஓ.பி.எஸ் என் சாதிக்காரர் என்பதால் அவருக்கு வாக்களிப்பேன், அன்புமணி என் சாதி என்பதால் அவருக்கு வாக்களிப்பேன், கிருஷ்ணசாமி என் சாதி என்பதால் அவருக்கு வாக்களிப்பேன் எனச் சாதியை வைத்து உங்கள் வாக்கை முடிவு செய்தீர்களேயானால் ஒன்றே ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் உங்களின் வாக்கை அளிக்கவில்லை,

உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை அழிக்கிறீர்கள்.