டிவாம்பாள்தான் அவளது முழுப் பெயர். வடிவு என்றால் தான் ஊராருக்குத் தெரியும். சுந்தரம், பொன்னாயாள் தம்பதியினரின் ஒரே வாரிசு. ஒரே வாரிசு என்றால் செல்லத்திற்கும் கொஞ்சட்டத்திற்கும் கேட்கவா வேண்டும்? வடிவாம்பாள் பிறந்ததிலிருந்தே வீட்டின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவள். சுந்தரம் துவக்கப்பள்ளி ஆசிரியராக பணியிலிருந்து இப்போது ஓய்வு பெற்று பென்சன் வாங்கிக் கொண்டிருக்கிறார். அடுத்தவருக்கு ஆடு மாடு மேய்க்க தன்னிடமிருந்த அஞ்சு ஏக்கர்  நிலத்தை குத்தகைக்கு கொடுத்திருந்தார். மழை வருடா வருடம் தவறிப் போய்க்கொண்டே இருப்பதால் குத்தகைக்கு எடுத்தவர் சோளப்பயிரை அங்கு விதைப்பதற்குக் கூட தயங்கித் தயங்கி தன் பண்டம் பாடிகளுக்கு மேய்ச்சல் நிலமாக்கிக் கொண்டார். வருடம் கூடி ஆயிரம் ரூபாயை மார்கழி மாதம் மாரியம்மன் நோம்பி சாட்டின் போது வீடு வந்து கொடுத்துப் போவார். சுந்தரம் இந்த விசயங்களிலெல்லாம் தலையிட்டுக் கொள்வதில்லை. எல்லாமும் பொன்னாயாள்தான்.

சுந்தரம் தன் மகளை படிக்க வைப்பதில் எந்தக் குறையுமில்லாமல் செய்தார். வடிவாம்பாள் காலேஜ் படிப்பை முடித்துக் கொண்டு, போதுமென கம்ப்யூட்டர் கிளாஸுக்கு சென்று கொண்டிருந்தாள். இதை பனிரெண்டு முடித்தபோதே செய்திருக்கலாம் என இப்போது அவளுக்குத் தோன்றியது. ஆனால் அது அப்பா சுந்தரம் செய்த ஏற்பாடு. இருபத்தியொரு வயதில் இருக்கும் வடிவாம்பாள் மற்றெல்லாரையும் போல பதினான்கு பதிமூன்று வயதிலெல்லாம் வயதிற்கு வந்து விடவில்லை. காலேஜ் சென்று கொண்டிருக்கும் பெண் இன்னுமா உக்காரலை? என்றே சொந்தபந்தமெல்லாம் பொன்னயாளிடம் கேட்டுக் கொண்டிருந்தது. உக்காராமலேயே போய் விடுவாளோ! என்கிற பயத்தில் தான் பொன்னாயாள் இருந்தாள். இன்னொன்று பெற்றிருக்கலாமோ? என்று காலம் கடந்து யோசித்துக் கொண்டிருந்தாள்.

பொன்னாயாள் தன் நெருங்கிய சொந்த பந்தங்களின் வீட்டு விசேசங்களிலெல்லாம் முதல் ஆளாய்ச் சென்று தன் வீட்டு வேலையைச் செய்வது போல செய்வாள். பொன்னாயாள் என்றால் சுறு சுறுப்புக்கு பேர் போனவள். கட்டிச்சோத்து விருந்து, ஆக்கிப் போடும் விருந்து, இழவு வீட்டு விருந்து என்று எதற்குமே சமையல்கட்டில் கரண்டியோடு நிற்பவள் பொன்னாயாள். போக, மொய் எழுதி வருவதிலும் எந்தக் குறையையும் வைக்க மாட்டாள். ஒரு காலத்தில் இவள் சுந்தரத்தைக் கட்டிக் கொண்ட சமயம் வந்த மொய் வசூல் நோட்டில் இருபது, ஐம்பது என்று வைத்தோரின் விசேசங்களில் ஐநூறு என்றே தான் வைப்பாள். விலைவாசியெல்லாம் ஏறிப்போயிடுச்சுல்லொ! அதே பத்தையும் இருபதையுமா திருப்பிக் கொண்டி வைக்கிறது? சுந்தரம் வாத்தியார் ஊஞ்சக்காட்டு வலசு ஐநூறு! என்று மொய் நோட்டில் எழுதுகிறார்களா? என்று நின்று பார்த்து விட்டுத்தான் இடத்தை விட்டு நகர்வாள்.

வடிவாம்பாளின் சங்கதி பொத்துக் கொள்ள வேண்டுமென கோவில் கோவிலாக ஏறி சாமி கும்பிட்டாள். வெள்ளிக்கிழமை நாட்களில் விரதமிருந்தாள். சின்னஞ்சிறுசுகள் எல்லாம் சீக்கிரம் வருவதற்கு காரணமே பண்ணைக் கோழி சாப்பிடுவதால்தான் என்று யாரோ சொல்லப்போக பொன்னாயாள் கறிக்கடையில் போய் பண்ணைக்கோழிக்கு நின்றாள். கறிக்கடைக்கே அவள் வாத்தியாரைக் கட்டி வந்த காலத்திலிருந்து போனதில்லை. வீட்டில் ஒரு கோழிப்பண்ணையே வைக்குமளவு நாட்டுக்கோழிகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவள் எதற்காக கறிக்கடை தேடிச் செல்ல வேண்டும்?

கோழியின் வித்தியாசத்தை தெரிந்து கொண்ட வடிவாம்பாள் முதல் துண்டை வாயில் போட்டதும் மென்று பார்த்து சக்கையை வாசலில் ஓடித் துப்பினாள். ‘இந்தக் கருமம் ஏன் இப்பிடி இருக்குதும்மா? உவ்வே!’ என்றாள். மகளின் முகம் கோணலாகப் போனதைக் கண்ட பொன்னாயாள் சரிப் போச்சாது உடுவென விட்டு விட்டாள். இந்த விசயத்தை ஒரு பாட்டாக சொந்த பந்தங்களிடம் பொன்னாயாள் போனில் சொல்லிக் கொண்டேயிருந்தாள். அவர்களும் பல வைத்தியங்கள் செய்து பார்க்கச் சொன்னார்கள். எதற்கும் வடிவாம்பாளின் அந்தரங்கம் அசைந்து கொடுக்காமல் இருந்தது. இனி கடவுள் விட்ட வழி! என்று பொன்னாயாள் விட்டு விட காலேஜ் முடித்த கையோடு வடிவாம்பாள் பூப்பெய்தினாள். குறுநகரில் டெய்லர் கடை போட்டிருக்கும் பொன்னாயாளின் தம்பி தான் மாமன் முறையில் வந்து பச்சை ஓலைத் தடுக்கு பின்னி கூடாரம் செய்து அதனுள் வடிவாம்பாளை அமர வைத்தான். நெருங்கிய சொந்தம் மட்டும் கழி சுற்றுவதற்கு தகவல் கிட்ட வந்திருந்தது.

பொன்னாயாள் பின்பாக மண்டபத்தில் பத்திரிகையடித்து ஊரைக் கூட்டி மகளின் பூப்பு நீராட்டு விழாவை இரண்டு மாதத்தில் செய்தாக வேண்டுமென ஒற்றைக் காலில் நின்றாள். சில பெருசுகள் வடிவாம்பாளின் திருமண நாள் அன்று இரவு அந்த விசேசத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் ஒரே வேலையாய்ப் போய்விடுமெனவும் சொன்னார்கள். அது சரிதான் என்றாலும் பொன்னாயாளுக்கு இன்னமும் அந்த உறுத்தல் இருந்துகொண்டே தானிருக்கிறது. இருபத்தைந்து வயதுப் பெண்ணுக்கு சடங்கு விழா என்று பத்திரிகையடித்து இனி கொண்டி நீட்டினால் நன்றாகவா இருக்குமென்று அவளைக் கேட்கவும் சொந்தத்தில் நான்கு பேர் இருந்தார்கள்.

வடிவாம்பாள் கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டது நல்லதாயிற்று. குறுநகரில் கம்பெனி ஒன்றில் ஏசி அறையில் மாதச் சம்பளத்திற்கு அமர்ந்து விட்டாள். காலையில் உள்ளூரில் வரும் பேருந்து ஏறினால் மாலையில் ஏழரை போல வரும் பேருந்து வந்து ஊருக்குள் இறங்கிக் கொண்டாள்.

வடிவாம்பாளின் இருபத்தியொன்றாம் வயதிலிருந்து மாப்பிள்ளை தேடும் படலத்தை வீட்டில் ஆரம்பித்து விட்டாள் பொன்னாயாள். தானாவதிக்காரர்கள் புதிது புதிதாய் வீட்டுக்கு வந்து போனார்கள். எல்லா தானாவதிக்காரர்களும் நாக்கில் தேன் வடியவே பேசினார்கள். காத்தால கலியாணம் முடிஞ்சி மூணு நாளில் புள்ளை பெத்துட்டு நிப்பா உங்க புள்ளை, என்கிற மாதிரியே பேசி பணம் வாங்கிச் சென்றார்கள். சுந்தரம் வாத்தியார் எல்லோரையும் நம்பிக்கையோடு தான் பார்த்தார். படிப்பு இருக்கிறது, வேலை இருக்கிறது.. பின் எதற்காக தழுங்கித் தழுங்கிப் போகிறது? என்று அவர்களுக்கு புரியவேயில்லை. வடிவாம்பாளோ தனக்கு ஒரு கல்யாணம் தேவை என்ற நினைப்பே இல்லாமல் அவள் பாட்டுக்கு தோளில் டிபன் பாக்ஸ் பேக்கை மாட்டிக் கொண்டு செல்கிறாள் வருகிறாள்.

ஊஞ்சக்காட்டு வலசிற்கு தரகன் பொன்னுச்சாமி ஒரு மாப்பிள்ளையைக் கூட்டிக் கொண்டு வந்தான். மாப்பிள்ளைக்கு காடு தோட்டம் இருபது ஏக்கரா இருப்பதாகவும், கார் இருப்பதாகவும், பால்கறக்கும் எருமை மாடுகள் முப்பது உருப்படி தோட்டத்தில் நிற்பதாகவும் சொல்லச் சொல்ல பொன்னாயாளுக்கு மகிழ்ச்சி பெருகிவிட்டது. பக்கத்து வீட்டு பாவாயாள் பிள்ளை குமுதத்தை அப்படியான தோட்டம் காடு வைத்திருந்த மாப்பிள்ளைக்கித்தான் கட்டிக் கொடுத்தார்கள். குமுதாவும் வடிவாம்பாளும் ஒன்றாகத்தான் பத்தாவது வரை படித்தார்கள். பத்தாவதோடு படிப்பை நிப்பாட்டிக் கொண்ட குமுதம் ஒரு வருடம் கழித்து மாப்பிள்ளை அமைய கட்டிக் கொண்டு போய் விட்டாள். இப்போது உள்ளூர் மாரியம்மன் கோவில் விசேசத்திற்கு வீடு வருகையில் கணவனோடு காரில் தான் வருகிறாள். ரெண்டு பிள்ளைகள் அவளுக்கு. பொன்னாயாளுக்கு பாவாயாள் மீது பொறாமையாய் இருக்கும். இவளுகளுக்கெல்லாம் மணியாட்டம் மாப்பிள்ளை அமையுது பாரு!

ஞாயிற்றுக்கிழமை நாள்தான் மாப்பிள்ளை வீடு வர சௌகரியப்படுமென்று பொன்னாயாள் தானாவதியிடம் சொல்லி விட்டாள். வடிவாம்பாள் கம்பெனிக்கி விடுப்பெல்லாம் போட்டு உன்னோட கூத்துக்கெல்லாம் நிக்க முடியாது என்று கட்டேன் ரைச்சாய் கூறி விட்டதால்தான் ஞாயிற்றுக்கிழமை. வடிவாம்பாளைப் பெண் பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளை பத்தாவது ஆள். தரகன் பொன்னுச்சாமி வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாமல் மூன்றாவது மாப்பிள்ளையைக் கூட்டி வந்திருக்கிறான் ஊஞ்சக்காட்டுக்கு.

ஊஞ்சக்காட்டில் எண்ணி ஐம்பது வீடுகள் தான் இருக்கின்றன. ஊரின் மத்தியில் மாரியம்மன் அமர்ந்திருக்கிறாள். கோவில் சிறுசுதான் என்றாலும் கொட்டு மொளக்கு பெருசு அம்மனுக்கு. அரசாங்கப் பேருந்து குறுநகரம் வரை இரண்டு ஓடுகின்றன. இவன் கூட்டி வந்த மாப்பிள்ளை முன்பொருமுறை இந்த ஒரு காரணத்திற்காக வடிவாம்பாளை ரிஜக்ட் செய்து விட்டு போய் விட்டான். பெருசுக ஒவ்வொன்னா போச்சுதுகன்னா நேரங்காலத்துல இந்த ஊர்ல வந்து நிக்க முடியுமா? அட, ஒரு கோட்டரு குடிக்கோணுமின்னா ஆறு கிலோ மீட்டரு போய் வரணும்! ஊரா இது? பொண்ணு அழகா இருந்தா இருந்து சாட்டாது. அதுக்கும் எல்லாரையும் போல ஒரு ஓட்டெ தான இருக்கும்! லைட்டை ஆப் பண்ணீட்டா எல்லா ஓட்டையும் ஒன்னுதான்! மெத்தப்படித்த டவுன்கார மாப்பிள்ளை தரகனை சரமாரியாய் பேசி விட்டுப் போய் விட்டான்.

தோட்டக்கார மாப்பிள்ளை வீட்டார்  காரில் ஊஞ்சக்காடு வந்தார்கள். பத்து மணிக்குப் பத்து நிமிசம் இருக்கையில் வந்தவர்களை வாய்நிறையப் பற்களைக் காட்டி ‘வாங்க’ என்று அழைத்தாள் பொன்னாயாள். அவள் மனதில் பொண்ணுக்கு கல்யாணமே முடிந்து விட்டது போலத்தான். விருந்துக்கு வந்த சம்பந்தி வீட்டாரை அழைப்பது போன்றே அழைத்தாள். மாப்பிள்ளையின் தங்கை தன் கணவனோடும் பெண் பிள்ளையோடும் வந்திருந்தாள். அவள் கழுத்தில் இருபது பவுனுக்குப் பக்கமாக கிடந்தது. மாப்பிள்ளையின் அம்மா நெடு நெடுவென உசரமாய் இருந்தது. ஜாக்கெட் போடாத அந்தக்காலப் பெண்மணி. கைகளில் சுருக்கம் தெரிந்தாலும் தலையில் ஒருமுடி கூட நரைக்கவில்லை. மாப்பிள்ளைக்கு அப்பா இல்லை என்று முன்பே தரகன் சொல்லியிருந்தான். மாப்பிள்ளை சுத்தமாக சேவ் செய்திருந்தார். தாவாங்கட்டை பச்சை வாங்கியது. வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்தவருக்கு வயது நாற்பது என்பது சொல்லாமலே தெரிந்தது. டையடித்த தலைமுடி கருகருவென்றிருந்தது.

அனைவருக்குமே தீம்பண்டங்களும் காபியும் கொண்டு வந்து கொடுத்த வடிவாம்பாளைப் பிடித்திருந்தது. தானாவதி பொன்னுசாமிக்கு முகத்தில் வழக்கம் போல மகிழ்ச்சிக் களை இல்லை. அவனுக்கு பயம் உள்ளுக்குள் இருந்து கொண்டேயிருந்தது. வடிவாம்பாள் முகம்தான் சரியில்லை என கண்டு கொண்டான். ஏனோ தானோவென காபியும் பலகாரமும் கொண்டு வந்து வைத்ததாய் நினைத்தான். அதன்படி தான் ஆயிற்று. வடிவாம்பாள் மாப்பிள்ளையின் படிப்பை பொன்னுசாமியிடம் விசாரித்தாள் தனியே கூப்பிட்டு.

“ஏனுங் தானாவதிக்கார்ரே! எல்லாஞ் சரிங்க, மாப்பிள்ளை என்ன படிச்சிருக்காருங்கொ?”

“அம்மிணி மாப்பிள்ளைக்கி படிப்பெல்லாம் கம்மி தானம்மிணி. படிப்பெல்லாம் இந்தக்காலத்துல யாரு பாக்குறாங்க? சொத்து, பணமிருக்கான்னு தான பாக்குறாங்க!”

“தெரிஞ்சிக்கலாம்னு தானுங்க தானாவதிக்கார்ரே கேக்குறேன்.” என்றபோது பொன்னாயாளும் மகிழ்ச்சி முகமாய் வீட்டினுள் வந்தாள்.

“அஞ்சாவது பாஸ் பண்டியிருக்கறதா சொன்னாரு அம்மிணி.”

“என்னது அஞ்சாவதா? மளார்னுபோயி பொண்ணுப்பிள்ள கட்டிக்க மாட்டீங்குதுன்னு சொல்லிடுங்க தானாவதிக்கார்ரே!”

“என்னடி பேசுறே நீயி? உனக்கு கொழுப்பெடுத்துக்கிச்சா? தானாவதிக்காரரு அஞ்சு வருசமா அலையா அலைஞ்சு இப்பத்தான் உருப்படியா நமக்கேத்தா மாதிரி ஒரு குடும்பத்தை கூட்டி வந்திருக்காரு. நீயென்னடான்னா இப்ப குறுக்க விலா ஓட்டறே? அவருக்கென்ன கொறச்சலு? அவரு படிக்காட்டி என்ன? அதுக்கு வதுலாத்தான் நீயி படிச்சிருக்கியேடி!”

“அம்மா கத்திரிக்கா வெதை போட்டா தக்காளிச் செடியா மொளைக்கிம்?”

“என்னடி வெதையுங் கிதையும்ம்மின்னுட்டு? ஏன் வேண்டாங்கறே?”

“ஏன் வேண்டாங்கறனா? நான் நாளைக்கி பெத்தெடுக்கிற கொழந்தை மக்காப் பொறக்கும்மா. நான்தான் அதோட மண்டையில கொட்டிக் கொட்டி படிப்பை மண்டையில ஏத்தணும்! யாரால முடியும் அது? போக அங்க போயி திடீருன்னு சாணி வழிச்சு குப்பையில கொட்டுன்னு சொல்லிட்டாங்கன்னா என்ன பண்றது? யாரை நம்புறது இந்தக்காலத்துல? தோட்டம் வச்சிருக்கிற ஒன்னு ரெண்டு ஆக்களுக்கும் கூலிக்கி வேலையாள் இல்லாம எத்தன கஷ்ட்டப்படறாங்கன்னு உனக்குத் தெரியுமா? ரோட்டும்பேர்ல இருந்த எத்தன காடுங்களை சைட் போட்டு வித்துட்டு இருக்காங்கன்னு தெரியுமா? என்னையக் கட்டீட்டுப் போயி மாட்டுக்கு பால் கறக்கவும், சாணி வழிச்சுக் கொட்டவும் வச்சாங்கன்னா எம்பட புருசம்மாடுகன்னு முத்தங்குடுத்துட்டு நான் நிப்பனா? துரூவா நம்மூட்டு வாசப்படிக்கித்தான் வந்து நிப்பேன். அப்புறமென்ன? டைவர்சுதான்.”

“உனக்கும் அவருக்கும் பதினொரு வயசு வித்தியாசம்னு கட்டிக்க மாட்டீங்கறியாடி?”

“அப்படியெல்லாம் இல்ல போம்மா சித்தெ! நொய்யி நொய்யின்னு! உனக்கு மாப்பிள்ளையப் பிடிச்சிருந்தா நீயே போயி கட்டிக்க போ!”

அந்த சம்பந்தமும் போயிற்று. இரண்டு வருடம் போல எந்த மாப்பிள்ளையையும் எந்தத் தரகரும் ஊஞ்சக்கட்டுக்கு அழைத்து வரவில்லை. வடிவாம்பாளின் வடிவு கொஞ்சம் கொஞ்சம் கரைந்து கொண்டிருப்பதை பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டாள் பொன்னாயாள். வடிவாம்பாளாவது செல்லும் கம்பெனியில் யாரையேனும் பிடித்துப் போய் அவளாகவே கல்யாணத்தைப் பண்ணிக் கொண்டால் கூட நிம்மதியாய் இருக்குமென தன் கணவரிடம் ஒருமுறை சொன்னாள். சுந்தரம் என்ன சொல்வார் பாவம். இந்த வீட்டில் முழு ராஜ்ஜியமும் பொன்னாயாள்தான். பொன்னாயாளுக்கு அடங்கிய மனிதர் அவர்.

“ஏங்க எம்பட தம்பிக்கே பேசாம நாம பிள்ளையக் கட்டிக் குடுத்துடுவமா? அவனுக்கு என்ன இப்ப நாப்பத்தெட்டு தான ஆச்சு! பாக்க ஒல்லியா அவன் இருக்கிறதால வயசும் தெரியல! இவ என்ன மாட்டீன்னா சொல்லப் போறா? மாமன்தான்னு சம்மதஞ் சொல்லிருவா வடிவா!”

”சொல்லுவா எம் பொண்ணு, நீயும் நினைச்சிட்டு இருக்கே! சொந்தத்துல கட்டுனா பொறக்குற கொழந்தை ஊனமாப் பொறக்கும்னு வடிவா அதுக்கு ஒரு விளக்கம் சொல்லுவா தெரியுமா! ஆமா உன் தம்பிக்கு டெய்லர் கடை இருந்தும் ஏன் பொண்ணு இத்தனை காலமா சிக்கலைன்னு தெரியுமா?”

“தண்ணி போடுறதாலன்னு சொல்லுவீங்க! அதெல்லாம் இவ போயி சரி பண்ணிடுவா!”

“இங்க பாரு பொன்னு.. பிள்ளை கிட்ட போயி மாமனை கட்டிக்கிறியான்னெல்லாம் கேட்டுட்டு நிக்காதேயாமா!”

“சேரிச் சேரி உடுங்க, நான் கேக்கலை. பொண்ணை ஒருத்தனுக்கு கட்டிக் குடுத்து மொய்யி வசூல் பண்டாமயே நாஞ் செத்துப் போயிருவனாட்ட இருக்கே சாமீ!”

“மொய் வசூல் பண்ணுறதுலயே இரு நீயி! பொண்ணு கல்யாணத்தை யோசிக்கறதை வுட்டுட்டு வசூல்லயே நிக்குறா!”

தம்பியிடமும் பொன்னாயாள் ஒருமுறை கேட்டுப் பார்த்து விட்டாள். அவனோ, ‘நாங்காணப் பொறந்து வளந்த பொண்ணுக்கா அது! அதுக்கு எத்தன விசுக்கா இசி வழிச்சிருக்கேன்னு தெரியுமா? அதப்போயி எப்பிடி நாங் கட்டுவேன்? பாக்குறவுங்க சிரிக்க மாட்டாங்க? உடு, நானும் இங்க நம்ம சொந்தத்துல எதாச்சிம் மாப்பிள்ளை இருக்கான்னு பாக்கேன்’ என்று சொல்லி விட்டான்.

பின்பாக தரகர்களின் வரவும் ஊஞ்சக்காட்டுக்குள் நின்றே போனது. மனதில் வைத்துக்கொண்டு புழுங்கிக் கொண்டிருப்பதே பொன்னாயாளின் பணியாயிற்று. திடீரென தரகரின் அழைப்பு ஒரு நாள் காலை பொன்னாயாளுக்கு வந்தது. எடுத்தவுடனே பொன்னுசாமி சொல்லும் ‘அருமையான மாப்பிள்ளை!’ என்கிற வார்த்தையோடு தான் அது ஆரம்பித்தது. பொன்னாயாளுக்குள் மீண்டும் சுறுசுறுப்பு கூடிக் கொண்டது. கடந்த ஒரு வருடத்தில இவளது பேத்திகளின் வளைகாப்பு, பேத்திகளின் பிள்ளைகளின் சீர் விழா என்று எதற்குச் சென்றாலும் அடுப்படிக்குச் செல்வதை விட்டிருந்தாள். அவளுக்கு அதிலெல்லாம் சலிப்பு ஏற்பட்டுப் போயிருந்தது. மொய் வைப்பதையும் தவிர்த்து வந்தாள். ஒரே வீட்டின் பல விசேசங்களுக்கு எத்தனை முறை தான் மொய் வைப்பது?

தரகன் சொன்னபடி காளியாயி கோவிலுக்கு வடிவாம்பாளோடு பேருந்தில் போய் இறங்கினாள் பொன்னாயாள். அன்று அமாவாசை இல்லையென்பதால் கோவிலில் கூட்டம் அதிகமில்லை. கோவிலின் முன்பாக நான்கைந்து கடைகள் இருந்தன. ஒன்றில் தேங்காய் பழம் ஊதுபத்தி சூடம் என்று சாமி பூஜைக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு கோவிலின் மிகபிரமாண்ட கதவு வழியே கோவிலினுள் நுழைந்தார்கள் இருவரும். வடிவாம்பாளுக்கு சாமிகள் மீதான நம்பிக்கை அரமாலும் விட்டுப் போயிருந்தது. இருந்தும் தாயின் ஆசையைக் கெடுப்பானேன் என வந்திருந்தாள். இந்தக் கோவிலுக்குள் சின்ன வயதில் அவள் வந்தது. முன்பை விட கோவில் புதுப்பிக்கப்பட்டு அழகாய் இருந்தது. ஆலமரம் மிக உயர்ந்து நின்றிருந்தது. ஆலமரத்தினடியிலும் ஒரு கல் நடப்பட்டிருக்க, அதற்கும் பொட்டு போட்டிருந்தார்கள். அங்கும் பூஜை நடக்கும் போலிருந்தது.

காளியாயியை இருவரும் கும்பிட்டு விட்டு ஆலமரத்தடிக்கு வந்த போது தானாவதி பொன்னுசாமி கூடவே ஒருவனை அழைத்துக் கொண்டு கோவிலினுள் வந்தான். அவன் முகம் வழக்கம் போல புன்னகையாய் இருந்தது. “சாமி கும்பிட வந்தீங்களா?” என்கிற மாதிரியான சம்பிரதாய வார்த்தைகளை பேசி விட்டு தானாவதி பொன்னுசாமி கூட வந்திருந்தவனுடன் சாமி கும்பிடச் செல்ல பொன்னாயாள் கோவிலை விட்டு வெளிவரவும் வந்து நின்ற பேருந்தில் ஏறிக் கொண்டார்கள்.

அன்று மாலை பொன்னுசாமி பொன்னாயாளை போனில் அழைத்து விசயத்தைச் சொன்னான். மாப்பிள்ளைக்கு வடிவாம்பாளை ரொம்பவும் பிடித்துப் போய் விட்டதாக! வரும் ஞாயிறு அன்று மாப்பிள்ளையை கூட்டி வருவதாக சொன்னான். பொன்னாயாள் முப்பது வயது வடிவாம்பாளை கட்டிக் கொடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கு தாட்டி விடும் மகிழ்ச்சிக் கனவில் மூழ்கிப்போனாள்.

வடிவாம்பாளிடம் விசயத்தை பொன்னாயாள் சொன்ன போது வடிவுக்கு கோபமே மிஞ்சியது. “என்னைய ஏன் இன்னமும் அடுத்த வீட்டுக்கு தாட்டி விடுறதுலேயே குறியா இருக்கே நீ? உனக்கு என்னைய வீட்டுல வச்சிருக்கிறது புடிக்கிலியா? சொல்லும்மா! நான் வேணா கம்பெனிக்கு பக்கமா ஒரு வீடு வாடகைக்கு பிடிச்சுட்டு அங்கியே இருந்துக்கறேன்” என்றவளை சரிப்படுத்தி அமைதிப்படுத்த சுந்தரமும் வரவேண்டியதாகி விட்டது. ஏனோ புதிதாய் அன்று வடிவாம்பாள் கண்களில் கண்ணீர் வரவும் தான் அவருக்கே தாங்கவில்லை. பிறந்ததிலிருந்து வடிவாம்பாள் அழுது அவர் பார்த்ததேயில்லை.

இதுவே இந்த வீட்டுக்கு வரும் கடைசி மாப்பிளையாக இருக்கட்டும்! என்ற ஒற்றை வார்த்தையை வடிவாம்பாள் சொல்லி விட, ஞாயிறு அன்று மாப்பிள்ளையை பொன்னுசாமி ஊஞ்சக்காடு கூட்டி வந்தான். மாப்பிள்ளைக்கி வயது முப்பத்தி ஐந்துதான். மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்குமிடையே ஐந்து வருட வித்யாசம் தான். மகள் மறுக்க எந்த காரணமும் இல்லை. போக, மாப்பிள்ளை காலேஜ் படிப்பை ஒருவருடம் படித்து விட்டு முடியாமல் விட்டிருக்கிறார். பனியன் கம்பெனி சொந்தமாக இருக்கிறது. எல்லாமையும் முன்பாக சொன்ன தானாவதி பொன்னுசாமி வீடு வந்த பிறகு தான் முக்கியமான அந்த விசயத்தை பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சபையில் சொன்னான்.

மாப்பிள்ளைக்கு இருபத்தைந்து வயதிலேயே கல்யாணமாகி இப்போது இரண்டு பிள்ளைகள். மூத்தவள் நான்காம் வகுப்பு படிக்கச் செல்கிறாளாம். இளையவன் இரண்டாம் வகுப்பு செல்கிறானாம். வீட்டில் அப்பாவும் அம்மாவும் மட்டும்தானாம். இரண்டு வருடம் முன்பாக பன்றிக்காய்ச்சலில் அவன் மனைவி இறந்து விட்ட தகவலை பொன்னுசாமி சொல்ல சுந்தரம் சொங்கிப் போய் விட்டார். பொன்னாயாளுக்கும் அப்படித்தானிருந்தது. இதுவே கடைசி என வடிவாம்பாள் வேறு சொல்லி விட்டாள். இந்த தரகன் ஏன் இதை முதலில் சொல்லவில்லை? இனி இவள் என்ன சொல்லப் போகிறாளோ ஆண்டவா!

வடிவாம்பாள் பட்டுச் சேலையில் இருந்தாள். மகளது அழகு பொன்னாயாளுக்கே பொறாமையாகத்தான் இருந்தது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு! காபியைத் தட்டில் கொண்டு வந்து மாப்பிள்ளைக்கும். பொன்னுசாமிக்கும் கொடுத்தவள் அப்பாவுக்கும் கொடுத்து விட்டு அம்மாவோடு ஒட்டி நின்றாள். நின்றவளுக்கு வயிற்றைப் புரட்டிக் கொண்டு வர உவ்வே! என்றவள் கொடேர்ச்சென வாந்தி எடுத்தபடி வீட்டினுள் ஓடினாள். அப்படியே பின்கட்டுக்கு ஓடி துவைக்கும் கல்லருகே சென்று அதைக் கைகளால் பிடித்துக் கொண்டு குனிந்து ஓங்கரித்தாள்.

‘பாப்பாவுக்கு ஒடம்புக்கு முடியலையா? என்னாச்சு?” பொன்னுசாமி கேட்கவும் சுந்தரம் பதில் சொல்ல வேண்டுமேயென சொன்னார். ‘ஒன்னுமில்ல, நீங்க வர்றீங்கன்னு பஜ்ஜிய அவ தான் அடுப்படியில நின்னு சுட்டுட்டு இருந்தா! அப்பிடியே வாயில பிச்சு ரெண்டு மூணு போட்டிருந்திருப்பா! ஒத்துக்கலையாட்ட இருக்குது!” பொன்னாயாள் மகளின் பொறவுக்கே பின்கட்டுக்குச் சென்றிருந்தாள்.

பொன்னாயாளுக்கு அது சாதாரண வாந்தி அல்ல என்று தெரிந்து போனதும் வடிவாம்பாளின் முதுகில் பொத்துப் பொத்தென ரெண்டு சாத்து சாத்தினாள். “அடக் கருமாந்திரம் புடிச்சவளே, என்ன இந்தக்காரியம் பண்டி வச்சிருக்கே! யாருடி அவன்? சொல்லுடி! சொல்லுடி!” வடிவாம்பாள் மீண்டும் ஓங்கரித்து வாந்தியெடுத்தாள்.

பக்கெட்டிலிருந்த தண்ணீரை முகத்தில் அள்ளி ஊற்றிக் கொண்டு வாயிலும் ஊற்றிக் கொப்பளித்துத் துப்பினாள் வடிவாம்பாள். துவைக்கும் கல்லிலேயே அமர்ந்து அம்மாவைப் பார்த்தாள். “சொல்லுடி யாருடி அவன்? இத்தனை வருசங் கழிச்சி என் தலையில கல்லைப் போட்டுட்டியேடி!” என்ற பொன்னாயாளை வெறிக்கப் பார்த்தாள் வடிவாம்பாள்.

“யாரா இருந்தா என்னம்மா இப்போ? போயி மாப்பிள்ளைகிட்ட சொல்லு! அவனோட ரெண்டு கொழந்தைகளுக்கும் அம்மாவா இருக்க நான் சம்மதம்னு. ஆனா வயித்துல இருக்குற என் குழந்தைக்கி அவன் அப்பாவா இருக்க சம்மதமான்னு போயி கேளு போ!” என்றாள் வடிவாம்பாள்.

ஓவியங்கள் :சக்தி குருநாதன்