சென்னையின் மையப் பகுதியிலிருக்கும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மங்களநாதன் தீவிரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தார். ஆயாசத்துடன் நெற்றியில் துளிர்த்த வேர்வையை சட்டைக் கையில் துடைத்துக்கொண்டார். இருகைகளிலும் ஃபைல்களின் தூசி. சார்பதிவாளர் சீனிவாசன் நேற்று கேட்ட ராமஜெயம் கோவிலுக்குத் தானமாக கொடுத்த நிலத்தின் தானப்பத்திரத்தை தேடியெடுக்க வேண்டும். இன்னும்  இரண்டு இரும்பு பீரோக்களின்  மேல் உள்ள ஃபைல்களில்தான்  தேட வேண்டும். கருணாகரன் வர காத்திருக்க பொறுமையில்லாமல் அவரே மர ஸ்டூல் மீதேறினார். இந்த வயதில் இது தான் செய்ய வேண்டிய வேலையில்லை என்ற எண்ணம் அவரை மேலும் சலிப்பேற்றியது. இந்த முப்பத்தி சொச்ச வருட சர்வீஸில் அவர் சலிப்படையாத நாட்களை விரல் விட்டு  எண்ணிவிடலாம்.

பாலாமடையிலிருந்து சென்னைக்குக் குடியேறி முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட சென்னைவாசியாகவே மாறிவிட்டார். பேச்சில் மட்டும் இன்னும் திருநெல்வேலி சொற்கள். தெய்வானையைத் திருமணம் செய்து சைதாப்பேட்டையில் குடியேறினவர்தான்.இத்தனை வருடங்களில் இதுவரை மூன்று நான்கு வாடகை வீடுகள் மட்டும் மாறியிருப்பார்.அதுவும் சைதாப்பேட்டையை விட்டு நகரவில்லை. அரிதாய் எப்போதாவது ஊருக்குச் சென்றாலும் இரண்டு நாட்களுக்கு மேல் தங்காமல் சென்னை திரும்பிவிடுவார். கிட்டத்தட்ட சென்னைதான் சொந்த ஊர் போலாகிவிட்டது.

மங்களநாதன் எப்போதும் தயக்கமும், தடுமாற்றமும் இறுக்கமாக இருப்பார். சட்டென்று முடிவெடுக்க தைரியமற்று மருகுவார். அதனால்தான் முப்பது வருடங்களாக இந்த அலுவலகத்திலேயே தேங்கிக் கிடக்கிறேன் என்று நினைத்துக் கொள்வார். சிலநேரம் சட்டென்று தன்மகன் அரவிந்தின் நினைவு வந்து அவரின் மனதைப் பெரிய பாறாங்கல் நசுக்குவதைப் போல நசுக்குவதாக நினைத்துக் கொள்வார். அவரின் ஐம்பது வயதிற்கு மேல் பிறந்த பிள்ளை அரவிந்த்.

வெகு நாட்கள் பிள்ளையில்லாமல், மருத்துவமும் கைகொடுக்காமல், இனி வாய்ப்பில்லையென மங்களநாதனும், தெய்வானையும் ஒருகட்டத்தில் முடிவு செய்துவிட்டார்கள். ஆனால்  அந்த ஒரு வாரமாக தெய்வானைக்கு எதை சாப்பிட்டாலும் வயித்தைப் புரட்டிக்கொண்டு வந்தது. சோர்ந்து சோர்ந்து சுருண்டு கொண்டாள். அப்படியிருக்க வாய்ப்பில்லையென தனக்குள்ளேயே  சொல்லிக் கொண்டாலும், அப்படி இருக்கவும் வாய்ப்பிருக்குமென  நம்பினாள்.  மங்களநாதனிடம்  சொன்னாள். அவருக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை யில்லை. இளம் வயதில் அடிக்கடி தெய்வானை இப்படியிருந்த பொழுது ஒவ்வொருமுறையும்  நம்பிக்கையோடு பரிசோதனைக்கு அழைத்துப்  போவார். பத்து வருடமாய் அந்த நம்பிக்கை முற்றிலுமாய் தூர்ந்து விட்டது. அதனால் ‘‘வயசாயிடிச்சில்ல, நல்லா சாப்பிடு சரியாயிடும்” என்று சொன்னார். எதற்கும் ஒருமுறை போய் பார்த்துவிடலாம் என்று தெய்வானை தீர்மானமாய் சொல்லிவிட அவருக்கும் சட்டென்று ஏதோ தோன்றி  சரியென்று கிளம்பிவிட்டார்.

தெய்வானையின் வயது பெண்கள் அவர்களின் மகள்களின் உடல்பரிசோதனைக்காய் வந்திருந்தார்கள். தெய்வானைக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. மறுபக்கம் ஒரு குழந்தை இல்லாமல் தானே இவ்வளவு வருசமாய்  நல்லது பொல்லாததுக்கும், கோவில் கொடைக்கும் ஊர் பக்கமும், ஊர் மனிதர்களிடமும் தலைகாட்டாமல் இருந்தோமென்று விசனப்பட்டுக் கொண்டாள். என்ன வயதானாலும் சரி, பெற்றுக்கொள்வதென முடிவு செய்துவிட்டாள். இரண்டு மணி நேரத்திற்குள் முடிவு சொல்லிவிட்டார்கள். இருவருக்கும் அவ்வளவு சந்தோசமாக இருந்தது. கருவுற்றிருப்பதை தீர்மானமாய் சொன்ன அந்த காகிதத்தை பலமுறை திரும்பத் திரும்பப் பார்த்துப் பரவசப்பட்டாள். அழுகை முட்டிக்கொண்டு வந்தது. வீட்டிற்குத் திரும்புகையில் பெரிய மாலையாய் வாங்கி சைதாப்பேட்டை காரணீஸ்வரருக்கு சாத்தினாள். நாள் முழுக்க சந்தோஷமும், விசும்பலுமாய் இருந்தது. தெய்வானைக்கு உடனே ரயிலேறி மங்களநாயகியைப் பார்த்து ஒரு மஞ்சள்பட்டு  சீலை சாத்த வேண்டும் போலிருந்தது.

அம்மையும், அப்பனும் இல்லாத இந்த வயதில் யாரிடமாவது சொல்லவேண்டும் போல் ஆசையாயிருந்தது. காலையில் அருகிலிருக்கும் வீடுகளிலாவது சொல்லிவிடவேண்டுமென நினைத்துக்கொண்டாள்.  தெய்வானை பொழுதுக்கும் மிகுந்த பூரிப்புடனிருந்தாள்.

பேறுகாலம் சிரமமாயிருந்தது. ஆண்குழந்தை.

குழந்தையைக் கையில் பெற்றுக்கொண்டபோது   மங்களநாதனுக்கு உடலெல்லாம் சிலிர்த்து உண்மையிலேயே ஓவென… அழுதேவிட்டார். சட்டென இந்த வாழ்வு பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்ட  வாழ்வாய்  மாறிவிட்டது என்று இருவரும் நெகிழ்ச்சி யாயிருந்தார்கள். குழந்தை கொஞ்சம் வளரத் துவங்கிய பொழுதுதான் கவனித்தார்கள். பத்து மாதமாகியும் பிள்ளை தண்டுவடம் இல்லாத குழந்தை போல் அமரமுடியாமல் கொரக்கலித்து கொரக்கலித்து விழுந்தது. பேச்சு சப்தம் கேட்கும் திசையை நோக்கி பார்வையை வைக்காமல்  எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தது. கடைவாயோரம் எப்போதும் நிற்காத எச்சில் ஒழுக்கு இருந்தது. சூரன்குடி அத்தை பளிச்சென்று சொல்லிவிட்டாள் “மங்களம், ஏதோ சரியில்லை – முகம் பார்த்து சிரிக்கல – கழுத்து கூட இன்னும் நிக்கல. டாக்டர்ட்ட காட்டி, என்னனு பாரு டே.”  மருத்துவரிடம் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். மருத்துவர் ஓரிரு சோதனையிலேயே கண்டறிந்துவிட்டார். மனவளர்ச்சி குன்றிய குழந்தை. அய்யோவெனக் கதறிவிட்டார்கள். வாழ்க்கை சட்டென திசை மாறி கடுமையான முட்கள் நிரம்பிய பாதைக்குள் சட சடவென இறங்கிவிட்டது.

கடவுள்தான் எவ்வளவு குரூரமானவன். குழந்தையில்லா ஏக்கம் போக ஒரு குழந்தை கொடுத்தான் என்று நம்பினால்  உடம்பாலோ பொருளாலோ பரமரிக்க வசதியற்ற தனக்கு இப்படி ஒரு குழந்தையைக் கொடுத்திருக்கிறானே என தவித்தார்.

இனி செய்வதற்கொன்றுமில்லை என்பது போல வேறு வழியின்றி பராமரிக்கத் துவங்கிவிட்டார்கள். சம்பளத்தில் கணிசமான தொகை மருத்துவ செலவுக்கும், பராமரிப்புக்குமென கரைந்தது. பணப்பற்றாக்குறை  வரத்துவங்கி  இருவரும் தமது அன்றாடத் தேவையைக் கூட   குறைத்துக் கொண்டு ஏறக்குறைய எல்லாதொகையையும் மகன்அரவிந்திற்கு செலவிட்டார்கள். வீட்டில்  இரண்டு காய் போட்ட குழம்பு கூட கிடையாது.தொடுகறி கிடையாது. ஆடை, அணிகலன், போக்குவரத்து ஏதும் கிடையாது.

தெய்வானை மகனை விட்டு சிறிதும் நகராமல்  கண்காணித்தபடியிருந்தாள். நாளுக்கு ஆயிரம் முறை ‘’அம்மா சொல்லு”, ‘’அப்பா சொல்லு’’ என்று பழக்கம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அர்விந்த் அவளின் வாயை கவனிக்கவேயில்லை, அவன்  வாயிலிருந்து ஒரு சத்தம் கூட வராது. எங்கோ இலக்கில்லாமல் பார்த்தபடி படுத்திருப்பான். பசி, தாகம், உபாதை, சிரிப்பு, அழுகை ஏதுமற்று ஒரு துறவியைப்போல மனநிலையில் இருப்பான்.. ஐந்தாறுவயதாகும் போது அர்விந்த் வார்த்தையும் அர்த்தமுமில்லாத, அழுகையும், சிரிப்பும்  மாதிரியான   சிலசொற்களை உச்சரித்தான்.. பெரிதாக சிரிப்பு போல ஒரு சத்தம் – மகிழ்வாயிருக்கிறான் என்று மகிழ்ந்தாள். காரணமேயில்லாமல் கேவிக் கேவி அழுகை போல சில சமயம் – துன்பப்படுகிறான் என்று தானும் சேர்ந்து அழுதாள் தெய்வானை.

வயதோ, மகனை எப்படி பார்த்துக்கொள்ளப் போகிறோம் என்ற கவலையோ விரைவில் இருவரும் தளர்ந்து விட்டார்கள். மங்களநாதனுக்கு பணி ஓய்வுக்கு இன்னும் ஒரு வருடம்தானிருந்தது. அவர் தனக்கு வரும் ரிட்டயர்மென்ட் தொகையை வைத்து சில காரியங்களை திட்டமிட்டார். தினமும் அந்த தொகையை பற்றி சிந்திக்கத் துவங்கினார்.

அன்று அலுவலகம் மிகுந்த பரபரப்பாய் இருந்தது. மாதத் துவக்கம். ஒரே நேரத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் பத்திரப்பதிவுக்கென வந்திருந்தது. அலுவலகம் முழுக்க திடீரென பதட்டம் சூழ்ந்து கொண்டது லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் இன்னும் சிறிது நேரத்தில் அங்கே வந்து சேரக்கூடுமென தகவல் வந்திருந்தது.. பத்திரப்பதிவு அலுவலகம்  பணமும், லஞ்சமும் அதிகம் புழங்குமிடம். மங்களநாதன் இதில் ஒன்றிலும் தலையிட்டுக் கொள்ளமாட்டார். பியூன் கருணாகரன் கூட வாங்குவதாய் கேள்வி. தேநீர் குடிக்கலாமென்று நினைத்துக் கிளம்பினார்.தேநீர் கடைக்கு வந்து அப்போது தான் தேநீர் சொல்லிவிட்டு நின்றார். அவரின் போனுக்கு உயரதிகாரியிடமிருந்து அழைப்பு வந்தது, தேநீர் குடித்துவிட்டு வருவதாய் சொன்னார். ‘‘மிகுந்த அவசரம்’’ என்று சொல்லி  உடனே தன் அறைக்கு வரும்படி சொன்னார். உயர்அதிகாரி  பதட்டமும், குழப்பமுமாய் அமர்ந்திருந்தார். மறுக்காமல்  எனக்கு ஒரு உதவி செய்யவேண்டுமென சொன்னார். ப்ளீஸ் என்று அழுத்தமாய் கெஞ்சும் தொனியில் பேசினார்.

மறுக்காமல் செய்வதாய் சொன்னவரின் கையில் பெரிய தோல்பையொன்றை கொடுத்து உடனே இங்கிருந்து இதை எடுத்துக்கொண்டு போய்விட்டு தான் மீண்டும் அழைக்கும் போது எடுத்து வரும்படி சொன்னார். மறுப்பு சொல்லாமல் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் மங்களநாதன். அவர் அலுவலகப் படியில் இறங்கிக்கொண்டிருக்கும் போது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் வாகனம் வந்து நின்றது. அவர் பாட்டுக்கு முகத்தை வேறெங்கோ திரும்பியபடி நகரத் துவங்கினார், கேட்டின் அருகில் வரும் பொழுது மங்களநாதனை யாரோ ஒருவர் பெயர் சொல்லி அழைத்தார். நிறுத்தி சோதனை செய்தார்கள். அந்த தோல்பை முழுக்கப் பணம். அவருக்கு விளங்கிவிட்டது. அவரைத் தவிர வேறு யாரும் மாட்டிக்கொள்ளவில்லை. உயர் அதிகாரி கொடுத்தது என்று சொல்லிவிடலாமாவென்று நினைத்தார். கொஞ்சம் பொறுமையாய் இருக்கலாம் என்று நினைத்தார். கூட்டமாயிருந்தது.

தன்மேல் தவறில்லை என்பதால் அவருக்குப் பெரிதாய் உறுத்தலொன்றுமில்லை, மிகவும் அழுத்தம் கொடுத்தால் மட்டும் உயர் அதிகாரி கொடுத்தாய் சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து கொண்டார்.  அப்போது தான் கவனித்தார். நியூஸ் சேனல்களின் பெயர் ஒட்டப்பட்டிருக்கும் ஓரிரு வீடியோ  கேமராக்கள் அவரை நோக்கிப் படம் எடுத்துக்கொண்டிருந்தன. ஒரு நிமிடம் மங்களநாதன்  வெலவெலத்து விட்டார். அப்போதுதான் விஷயம் மிகவும்  முக்கியமானதும், மோசமுமானது  என்று உணரத் துவங்கினார். அவரின் உடம்பெல்லாம் சர்ப்ப கடிபட்ட மனிதனுக்கு விஷம் ஏறுவது போல் போல் பயம் ஏறத்துவங்கிவிட்டது. தனது உறவினர்கள், அருகாமை வீட்டினர் எல்லோரும் தொலைக்காட்சியில் இந்தக் காட்சியைப் பார்ப்பார் களென நினைக்கையில் அவருக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

அவரை வாகனத்திற்குள் ஏற்றினார்கள். வாகனத்தில் செல்லும்போதுதான் யோசித்தார். தன்னைக் குற்றவாளியென அவர்கள் முடிவு செய்துவிட்டால் தனக்கு ரிட்டயர்மெண்ட் தொகை வராமல் போய் விடுமோ எனப் பயந்தார். இன்னமும் ஒரு வருடம்தான் பணிக்காலம் இருக்கிறது, வருமானத்திற்கும் மகனின் பராமரிப்பு செலவுக்கும் என்ன செய்ய முடியும். தனது ரிட்டயர்மெண்ட் தொகைக்கு ஏதும் பாதிப்பு வரும்போலிருந்தால் உயர் அதிகாரியை மாட்டிவிட தீர்மானமாயிருந்தார். அவரிடமிருந்து கைப்பற்றிய பையிலிருந்து தொகையை எண்ணி மூன்று லட்சத்தை நெருக்கி ஒரு தொகையை சொன்னார் அதிகாரி. ஒரு நாள் காலைக்குள் அவ்வளவு தொகையா? மிரண்டு போனார். இவ்வளவு காலம் பிழைக்கத்  தெரியாத மனிதனாய் இருந்துவிட்டோமோ என்று நினைத்துக்கொண்டார். சிறிது நேரத்திற்குள் அந்த அலுவலகத்தை தேடிப் பையனோடு ஆட்டோவில் தெய்வானை வந்து இறங்கினாள். தொலைக்காட்சியில் பார்த்ததாய் சொன்னாள். அவளிடம் மட்டும் உண்மையை சொன்னார்.

அரவிந்திற்கு யாரோ ஒரு அதிகாரி ஆளனுப்பி கொஞ்சம் இனிப்பும், பாலும் வாங்கி வர சொன்னார். வாஞ்சையாய் பேசியபடி இனிப்பை அவன் கரத்தில் திணித்தார். அவனால் அதை அழுத்தமாகப் பிடிக்க முடியவில்லை. கீழே விழுந்தது. தன் தங்கையின் மகனுக்கும் இப்படித்தான் இருப்பதாக சொன்னார்.சிறிது நேரத்தில் அவரின் உயர் அதிகாரியையும், வேறு ஓரிருவரையும் அழைத்து வந்திருந்தார்கள். அதில் கருணாகரனும் இருந்தான். உயர் அதிகாரியிடம் தான் எதுவும் சொல்லவில்லையென சிறு சைகையால் சொன்னார். அவர் தெரியும் எனும்படிக்கு  சிறியதாய் தலையசைத்தார். மாலைக்குப் பின் மங்களநாதனைப் போகச் சொல்லிவிட்டார்கள். மற்ற எல்லோரும் குற்றம் செய்தவர்கள் என தீர்மானமாகிவிட்டதாகவும், அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும் சொல்லிவிட்டார்கள். அவருக்கு இப்போதுதான் உயிர் போய் உயிர் வந்தது. தெய்வானையிடமிருந்து மகனை வாங்கித் தன் தோளில் சரித்துக்கொண்டார்.அவனுக்கு நிறைய முத்தமிட்டார். சி.சி.டி.வியில் அதிகாரி தன்னிடம் பணம் கொடுப்பது பதிவாகியிருப்பதாய் சொன்னார்கள்.

அவருக்கு ஒரு தேநீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. எதிரே இருக்கும் தேநீர் கடைக்குப் போனார். தேநீர் கடையில் அவர் குற்றவாளியென அறியப்பட்டு   வாகனத்தில் ஏற்றும் காணொளி ஓடிக்கொண்டிருந்தது. அதிர்ந்து விட்டார். குற்றவாளி இல்லையென  அறிவிக்கப்பட்ட பின்னும் மீண்டும் மீண்டும் யாரோ தன்னைக் குற்றவாளியென அறிவித்துக்கொண்டும், அவரை இவர்தான் அந்தக் குற்றவாளியென அடையாளம் காட்டிக்கொண்டும்  இருப்பதைக்  கண்டு  அவமானமாய் உணர்ந்தார். உண்மைத் தன்மை அறியாது   ஒரு முறை தவறாய்  பதிவு செய்யப்பட்ட ஒரு செய்தியை யாரும் மறுத்து மறு செய்தி வெளியிடமாட்டார்கள் என உணர்ந்து அமைதியாகி விட்டார். நடு இரவு தாண்டியும் அந்த செய்தி ஓடிக் கொண்டிருந்தது. தன் வேலையும், ரிட்டயர்மெண்ட் தொகையும் பத்திரமாக இருக்கிறது என்பதை மட்டும் நினைத்து ஓரளவு நிம்மதி அடைந்தார்..

மறுநாள் கிளம்பி பணியிடத்திற்குக் கிளம்பினார். அலுவலகம் எந்தப் பரபரப்பும் இல்லாமல் இருந்தது. வேறொரு தலைமை அதிகாரியை நியமித்திருப்பதாக சொன்னார்கள்.. அவரின் இடத்தில் போய் அமரப் போனார். குமரேசன்தான் சொன்னார், உங்களைப் பணி நீக்கம் செய்திருக்கிறார்கள் என. தான் குற்றம் செய்யவில்லையென நிரூபித்து விட்டார்களே  என அவரிடம் வாதிட்டார். அது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறி, பணிநீக்க உத்தரவு நகலைக் காண்பித்தார். அதைப் பெற்றுக்கொண்டு தலைமை அலுவலகத்துக்குக் கிளம்பினார். பணிநீக்க உத்தரவு வழங்கிய அதிகாரி விடுப்பில் போயிருப்பதாய் சொன்னார்கள். அவரின் எண் வாங்கிப் பேசினார். விடுப்பு நாளில் அலுவலக விஷயத்திற்காய் அழைத்ததற்காய் பெரிதும் கோபப்பட்டார். அந்த கேஸ் முழுக்க முடியும் வரையில் தன்னால் ஒன்றும் செய்ய இயலாதென சொல்லிவிட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட சிலருக்கும், உயர் அதிகாரிக்கும் பதினைந்து நாள் தற்காலிகப் பணிநீக்கமும், பணிஇடமாற்றமும் தீர்ப்பளித் திருந்தார்கள். தண்டனையாய்  சிறு பாதிப்போடு அவர்கள் மீண்டும் வந்து தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

மங்களநாதனுக்குப் பெரும் மன உளைச்சலா யிருந்தது. அவரின் பணிக் காலம் முடிவடையும் காலம் வந்து விட்டது.கையிலிருந்த பணம் முழுமையும் செலவாகி கடன் வாங்கி செலவு செய்யத் துவங்கிவிட்டார். அரவிந்தின்  செலவையும் வேறு வழியில்லாமல் கட்டுப்படுத்தத் துவங்கிவிட்டார். பணிக்காலம் முடிந்து ஓய்வுக்காலம் துவங்கி  விட்டது. ரிட்டயர்மெண்ட் பணத்திற்காக அலைந்தார். இழுத்தடித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு வருடமாய் தினமும் ஒவ்வொரு அலுவலகமாக அலைந்தார். இறுதியில் யாரோ சொன்னர்களென கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார், கடனால் சூழப்பட்டு மிகவும் துயரப்பட்டார்.  இப்போதெல்லாம் குழந்தைக்கு நல்ல உணவளித்தால் கூடப் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டார். வாடகை தரப் பணமில்லாமல் பல வருடமாய் குடியிருந்த வீட்டை விட்டு பெருங்களத்தூர் பக்கம் குறைந்த வாடகைக்கு குடிபெயர்ந்தார். நாள் தவறாது ஓய்வூதியப் பணம் வழங்கும் அலுவலகம் சென்றார், வாரம் ஒரு முறை  தவறாது மனு எழுதிப் போட்டார். தன் ஓய்வூதியப் பணம் வந்து விட்டால் எல்லா பிரச்னையும் நிமிடத்திற்குள் தீர்ந்து விடும் என முழுக்க நம்பினார்.

தெய்வானை  ஒருநாள் கழிப்பறையில் வழுக்கி விழுந்து இடுப்பொடித்துக்கொண்டாள்.. இப்போது தெய்வானைக்கும் மருத்துவச் செலவை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அரசு மருத்துவமனை தான் என்றாலும் அதற்கும் பெரிய தொகை செல வாகியது. அனுதினமும் குழந்தைக்கும் அவளுக்கும் உணவு கொடுப்பதிலிருந்து, கழிவறை பராமரிப்பு வரை எல்லா  வேலைகளையும் அவரே செய்தார். யாரோ எல்லா இடத்திலும் லஞ்சம் கொடுத்தால் வழியுண்டு என்று சொன்னதால். தெய்வானையிடம் உள்ள கடைசி நகைகளையும் விற்று லஞ்சமும் கொடுத்து பார்த்துவிட்டார். இதோ அடுத்த  வாரம், அதன் மறு வாரம் என்பது போல் தொகை போக்கு காட்டிக்கொண்ட இருந்தது. ஒரு அதிகாரி இவர் தினமும் வரும் தொல்லை தாங்காமல் அக்கறையின்றி எப்படியும் இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிடும் என்று  முகத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டார்.. ஒட்டுமொத்த நம்பிக்கையும் சரிந்து விட்டது. வாசல் இல்லாது எல்லா பக்கமும் சுவர் எழுப்பிவிட்ட அறைக்குள் தவிப்பது போலிருந்தது.

இறுதியில் இது ஓன்று தான்  வழியாயிருக்க முடியும் என்று நினைத்தபடி இந்த முறை கலெக்டருக்கு வேறொரு மனு கொடுத்தார். அதில் தனக்கு அறுபது வயதாகி விட்டதென்றும், படுக்கையில் கிடக்கும் தன் மனைவியையும் தனது எட்டு வயது குழந்தையையும் பராமரிக்க வழியற்று நிற்பதால் தன்மகனைக் கருணை கொலை செய்ய அரசு கருணை காட்டும்படி மனுகொடுத்தார். மறுநாளே அவரின் எண்ணிற்கு  கலெக்டர் அலுவலகத்திலிருந்து அழைப்புவந்தது.  குடும்பத்தோடு வரச் சொல்லி அழைத்திருந்தார்கள். தனக்கு எங்காவது விடிவு கிடைத்து விடாதா என்று  தன் குடும்பத்தோடு போய் இறங்கினார். தெய்வானைக்கு நடை கோணலாகிவிட்டது. மருத்துவமனையில் வழங்கிய அரை செவ்வக வடிவ பைபர் தாங்கு ஊன்றுகோலால் நடந்தாள். இடுப்பில் பெரிதாக இடுப்பு பட்டை அணிந்திருந்தாள்,

அவர்களை குடும்பத்தோடு கன்னியாஸ்த்ரீ மாதிரி தன்மைக்கும், மருத்துவர் தன்மைக்கும் நடுவிலிருக்கும் பெண் முன் அமர்த்தினர், வலிந்து ஒரு கனிவை தன் முகத்தில் வரவழைத்துக் கொண்டு தற்கொலையும், கருணைக்கொலையும் எதற்கும் தீர்வாகி விடாது என்று சொல்லி…. வழக்கமாய் சொல்லும் ‘‘என்ன நடந்தாலும்  உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்.’’ என்ற போலியான வாக்குத்தத்தம் அளித்தபடி ‘‘இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை’’  என்பது போலவும் இந்த அறையிலிருந்து கிளம்பியவுடனே அழிந்து விடும் போலியான நம்பிக்கை தரும் ஓரிரு வார்த்தைகளையும், தேநீரும் கொஞ்சம் பிஸ்கட்டுகளும் வழங்கினார்கள். சுவர் கடிகாரத்தில் சரியாய் ஒரு மணி ஆகியதும் மங்களநாதன்  தனது துயர சரித்திரத்தை பேசிக்கொண்டிருக்கும் போதே கிளம்பி ‘‘சாரி, இது லன்ச் டைம். நீங்களும் போய் சாப்பிட்டு வந்திருங்களேன்’’ என்று சிரித்த முகத்தோடு சொல்லி ஒரு அறைக்குள்போய்க் கொண்டிருந்த  பெண்மணியைப் பார்த்ததும் அவருக்கு அவநம்பிக்கையின் அளவு  உப்பி மேலும் பெரிதாகி விட்டது. எழுந்து அங்கிருந்து கிளம்பி விட்டார்.

சாப்பிடலாமென தோன்றியது.கையில் தொகையை எண்ணிப் பார்த்தார். கடைசியாய் கடன் வாங்கிய தொகை நான்காயிரம் மீதமிருந்தது. ஒரு பெரிய கடையின் வாசலில் போய் ஆட்டோவை நிறுத்தி நுழைந்தார். தெய்வானை அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். இருப்பதிலேயே அதிக விலைகொண்ட பதார்த்தங்களை வாங்கி தெய்வானைக்கும் கொடுத்து உண்டார். அரவிந்தை வாஞ்சையாக மடியில் இருத்தி ஊட்டிவிட்டார். உணவு முடிந்ததும் தெய்வானையிடம் கேட்டார். ஒரு சினிமா பார்த்துவிட்டு கடல் பார்க்கப் போகலாமா என. சட்டென அவர் இயல்பான மனிதர் போலவும், காரணமற்ற ஒரு சந்தோசத்தோடும் இருந்தார். தெய்வானை சரி என்றதும் நகரத்தின் முக்கியமான திரைஅரங்கிற்கு சென்று சினிமா பார்க்க அமர்ந்தார். அரவிந்தை இப்படி ஒரு முறை கூட அவர் வெளியே அழைத்து வந்ததில்லை, அவன் மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தான். எச்சி  ஒழுக்கலோடு கோண வாயால் சிரித்தபடி சிறியதாய் சந்தோஷத்தில்  கத்தியபடி  சினிமா பார்த்தான். முடிந்ததும் கிளம்பி கடற்கரைக்குச் சென்றார்கள்.. கடலின்  கரையில் குழந்தையை  இறக்கி மணலில் அவன் கால் படும்படி வைத்தார். அலையின் தழுவலும், மணலின் குறுகுறுப்பும் அவனை ஏதோ செய்தது. மகிழ்ந்து கத்தினான். அங்கே இருந்து நகர மறுத்துவிட்டான். நள்ளிரவு வரை அப்படியே அங்கேயே அமர்ந்திருந்தார் கள். அவன் தூங்கி விழுந்ததும் அள்ளியெடுத்து ஆட்டோ பிடித்து வீடு வந்தார்கள்.

மறுநாள் மாலை வரை  வீட்டின் கதவு திறக்கப் படாமலிருந்தது. மூவரும் படுக்கையில் உறங்குவது போலிருந்தது. குழந்தையின் வாயிலிருந்து அம்மா என்ற சொல் நுரை நுரையாய் கடைவாயில் வழிந்தது. மங்கலநாதனின் வாயிலிருந்தும், தெய்வானையின் வாயிலிருந்தும் வாழ்வு என்ற சொல் வெள்ளை நுரையாய் வழிந்தது. கதவு பூட்டி இருப்பதால் கதவின் கீழேயுள்ள இடைவெளியில் மாலை வெயிலின் சாய்வான கீற்றில் மிதந்து மினுங்கும் தூசியில் ஒரு கடிதம் உள்ளே தள்ளப்பட்டிருந்தது. அதில் அடுத்த நாளே மங்களநாதனின் ஓய்வூதியத்திற்கான  முழுத் தொகையையும் அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளும்படி எழுதியிருந்தது.

ஓவியங்கள்: கிரிஜா ஹரிஹரன்