பிரதமர் மோடி பற்றிய விமர்சனங்கள் பெரிதும் வலுத்துக்கொண்டே இருக்கின்றன. அதில் நிறைய விமர்சனங்களுக்குப் புள்ளியியல்ரீதியாகவோ, தர்க்கரீதியாகவோ பதில் அளிப்பது சிரமமாக இருக்கும் நிலையில், இப்போது வேறு ஒரு வாதம் பாஜக ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

அது இதுதான்: சரி, மோடி மேல் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் மோடிக்கு எதிராக யார் இருக்கிறார்கள்? பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை எதிர்க்கட்சிகள் அறிவித்திருக்கிறார்களா? யாருக்காவது பெரும்பான்மை வருவதற்கு சாத்தியம் இருக்கிறதா? திரும்பவும் நாம் கூட்டணி ஆட்சியில்தான் போய் வீழப்போகிறோமா? தேசத்துக்கு உறுதியான பிரதமர் வேண்டாமா?

இவைகள்தான் அவர்கள் முன்வைக்கும் கேள்விகள். படிக்கும்போது இந்தக் கேள்விகள் நியாயமாகவே தோன்றுகின்றன. இவை உண்மையும்கூட. எதிர்க்கட்சிகளுக்கு இடையே நிறைய ஒற்றுமை இருப்பதுபோலத் தோன்றவில்லை. காங்கிரஸுக்கேகூட பெரும்பான்மை கிடைக்காது போலத்தான் தோன்றுகிறது. அப்படி பெரும்பான்மை பெறாமல் கூட்டணி ஆட்சி வந்தால் பிரதமர் என்று வருபவர் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தங்களுக்கு ஏற்றபடிதான் நடக்க வேண்டி இருக்கும்.
சரி, இந்த வாதம் சொல்லும் விஷயம் என்ன? பெரும்பான்மை பெற்றிருக்கும் கட்சியைச் சேர்ந்தவர் உறுதியான பிரதமராக இருப்பார். நல்லாட்சி தருவார். அதேபோல, கூட்டணிகளை நம்பி நடத்தும் ஆட்சி முன்னேற்றங்களைக் கொண்டுவர முடியாது. ஒருவரை ஒருவர் இழுத்துப் பிடித்துக்கொண்டு அலைந்துகொண்டு இருப்பார்கள்.

இந்த வாதங்களை கொஞ்சம் பின்வரும் வரிசையில் அலசுவோம்:
1. கூட்டணி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இருக்காது.
2. கூட்டணி ஆட்சியின் பிரதமர் உறுதியான முடிவுகளை எடுக்கமாட்டார்.
3. உறுதியான பிரதமர் ஆட்சியில் பெரும் பிரச்சினைகள் வராது.

இந்தியாவில் 1989 முதல் 2014வரை கூட்டணி ஆட்சி அல்லது சிறுபான்மை ஆட்சிதான் நடந்து வந்திருக்கிறது. விபி சிங், சந்திரசேகர், தேவகௌடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்றோர் கூட்டணி அமைச்சரவைகளுக்கு தலைமைவகித்து ஆட்சி புரிந்திருக்கிறார்கள். நரசிம்ம ராவ் சிறுபான்மை அரசை அமைத்து தலைமை வகித்து நடத்தி வந்திருக்கிறார். (பின்னர், இடையில் வேறு ஒரு கட்சி எம்.பி.க்கள் ஆதரவைச் சேர்த்து பெரும்பான்மை அடைந்துவிட்டார். அது தனி கதை.)

பொருளாதார வளர்ச்சி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1991இல் துவங்கியது. இந்தியத் தொழில்துறை தாராளமயமாக்கப் பட்டு தனியார் தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்பட்டு வளர்ச்சி கொண்டுவரப்பட்டது. எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் பின்பற்றப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் ‘லைசென்ஸ் பர்மிட் ராஜ்’ என்று இழிவாக அழைக்கப்பட்டது. அந்த லைசென்ஸ் பர்மிட் போன்ற தொல்லை சமாச்சாரங்கள் நீக்கப்பட்டுத் தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டன. விளைவு, இந்தியப் பொருளாதாரம் திடீர் வளர்ச்சி காணத் துவங்கியது. அதற்கு முன்புவரை சராசரியாக 4 சதவிகிதத்தை தாண்டாத ஜி.டி.பி. ஐந்தை தாண்டி எகிறத் துவங்கியது. ‘மன்மோகனாமிக்ஸ்’ என்று உலகம் முழுவதும் புகழப்பட்ட மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவில் வேர்கொள்ளத் துவங்கின.

இப்படித் துவங்கிய வளர்ச்சி ஒவ்வொரு பிரதமராக தொடர்ந்தது. நரசிம்மராவுக்கு அடுத்துவந்த தேவகௌடா 6.9, வாஜ்பாய் 5.7 என்று தொடர்ந்து கடைசியாக ஆட்சிக்கு வந்த மன்மோகன் ஆட்சியில் ஜெட் வேகத்தில் போனது. தன் ஆட்சியில் சராசரியாக 8.0 என்று மன்மோகன் சிங் சராசரி வளர்ச்சி காட்டியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் ஆட்சிக்காலத்தில்தான் Credit Crunch என்று பெயரிடப்பட்ட பன்னாட்டு பொருளாதார வீழ்ச்சி வந்தது. உலகெங்கும் நிறைய வங்கிகள் இழுத்து மூடப்பட்டு, பணப்புழக்கம் குறைந்து பொருளாதாரம் தேங்கி நின்றது. அது போதாதென்று கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத உயர்ச்சி கண்டது. இத்தனைப் பிரச்சினைகளையும் சமாளித்து இந்தியப் பொருளாதாரம் இவற்றால் பெரிதும் பாதிக்கப்படாமல் மன்மோகன்சிங் பார்த்துக்கொண்டு வளர்ச்சியையும் குன்றாமல் கவனித்துக் கொண்டார்.

1991 முதல் 2014வரை இந்தியாவில் கிட்டத்தட்ட 40 கோடிப் பேர் வறுமைக்கோட்டுக்கு மேலே வந்து வளர்ந்து மத்திய வர்க்கத்தில் சேர்ந்திருக்கிறார்கள். உலக வரலாறு காணாத சாதனை இது. இதே காலகட்டத்தில்தான் இந்தியாவில் ஐ.டி. எனும் தொழில்நுட்ப புரட்சி, தொலைத்தொடர்பு துறை வளர்ச்சி எல்லாம் நடந்தேறியது. இந்தியா ‘World’s Backoffice’ எனும் புகழ் பெருமளவு கால் சென்டர் போன்ற துறைகள் வளர்ந்தன.
இந்த சாதனை, முன்னேற்றம் எல்லாமே கூட்டணி ஆட்சிகள் காலகட்டத்தில்தான் நிகழ்ந்திருக்கிறது. நேரு, இந்திரா, சாஸ்திரி போல அதீத பெரும்பான்மை ஆட்சிகளில் நடக்கவில்லை. சொல்லப்போனால் இந்திரா ஆட்சிதான் இந்தியா பெருமளவு பொருளாதார வீழ்ச்சி கண்ட காலகட்டம். காங்கிரஸ் பெரும்பான்மையில் ஆண்ட காலமும் இதுதான். ‘உறுதியான பிரதமர்’ என்று பெயரெடுத்த இந்திரா ஆட்சியில் வேலையின்மை அதிகரித்து, பொருளாதாரம் சுருங்கி இந்தியா பெரும் வறுமையில் உழன்றது.

இதேதான் ஏறக்குறைய பிரதமர் மோடி ஆட்சியிலும் நடந்திருக்கிறது. ஜி.டி.பி. எனப்படும் பொருளாதார வளர்ச்சி சுருங்கியது. (அதனை சரிக்கட்ட ஜிடிபி கணக்கீட்டையே மாற்றி எழுதினார்கள். அப்படி மாற்றியும் மன்மோகன் ஆட்சியைவிட 0.45 சதவிகிதம்தான் உயர்த்திக்காட்ட முடிந்தது.) வேலையின்மை பெருமளவு அதிகரித்து, வேலையின்மை பற்றிய ஆய்வறிக்கையையே அரசு வெளியிடாமல் மறைக்க வேண்டி வந்தது. திணீக்ஷீனீ ஞிவீstக்ஷீமீss என்று பெயரிடப்பட்ட ஊரகப் பொருளாதார வீழ்ச்சி வந்து கிராமப்புறங்களில் கடும் துன்பங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர். விளைவாக விவசாயி தற்கொலை அறிக்கையையும் அரசு நிறுத்திவிட்டது. அறிக்கை வந்தால்தானே தரவுகளைப் படித்து கேள்விகள் கேட்பீர்கள்? அறிக்கையே இல்லையென்றால் எதை வைத்து அரசை விமர்சிக்க முடியும்?
இப்படி எந்தத் தரவும் இல்லாமல் இருக்கும் ஓரிரு தரவுகளும் கணக்கிட்டு முறைகள் மாற்றி அமைக்கப்பட்டு எது உண்மை, எது பொய் என்று தெரியாமல் குழம்பும் நிலையில்தான் மோடியின் பொருளாதாரம் இருக்கிறது. பெரும்பான்மைப் பெற்ற, நெஞ்சுறுதி கொண்ட பிரதமர் சாதித்தது இதுதான். எந்தப் பெரிய ஆதரவுமற்ற, தேவகௌடா சாதித்த முன்னேற்றத்தைக்கூட பிரதமர் மோடியால் முறியடிக்க முயலவில்லை என்பதுதான் சோகமான உண்மை.
சொல்லவந்த கருத்து இதுதான்: கூட்டணி அமைச்சரவைக் கொண்ட பிரதமர்கள் பெரும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணமாக அமைத்திருக்கிறார்கள். பெரும் பலம் கொண்டதாகக் கருதப்பட்ட பிரதமர் மோடி இவர்களில் எவரின் சாதனையையும் முறியடிக்கவில்லை.
ஐ.கே. குஜ்ரால் அவர்களின் பொருளாதார சாதனையை மோடி முறியடித்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் ஐ.கே. குஜ்ரால் மிகக் குறுகிய காலமே பிரதமராக பதவிவகித்தார். அதுவும் ஏன் என்பது தனிக்கதை. அப்புறம் பேசுவோம்.

உறுதியான முடிவுகள்

அடுத்தவாதம், பெரும்பான்மை உள்ள, உறுதியான தலைவர் உறுதியான, கடுமையான முடிவுகள் எடுப்பார் என்பது. இதைப் பார்ப்போம்.
கூட்டணி ஆட்சிகள் துவங்கியதில் இருந்து எடுக்கப்பட்ட உறுதியான முடிவுகளில் சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன்:
1. இடஒதுக்கீட்டில் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டன
2. ரத யாத்திரை நடத்திய அத்வானி, கைது செய்யப்பட்டார்
3. அந்நிய கடன் தவணைக் கட்டயியலாமல் இந்தியாவின் தங்கம் இங்கிலாந்து கொண்டுபோய் அடமானம் வைக்கப்பட்டது
4. பொருளாதார தாராளமயம் கொண்டுவரப்பட்டது
5. லைசென்ஸ் பர்மிட் ராஜ்ஜியம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது
6. இரண்டாவது அணு ஆயுத பரிசோதனை நடத்தப்பட்டது
7. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் கையொப்பம் ஆனது
8. பொடா சட்டம் நிறைவேற்றப்பட்டது
9. பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது

இவற்றில் கடைசி விஷயத்தைத் தவிர மீதி அனைத்துமே கூட்டணி ஆட்சியின் பிரதமர்கள் எடுத்த முடிவுகள். இத்தனைக்கும் பண மதிப்பிழப்பு மாபெரும் அழிவைக் கொண்டு வந்தது என்று எல்லாருக்கும் புரிந்த பின்னரும் மோடியின் ஆட்சி கவிழவில்லை. ஆனால் கூட்டணி ஆட்சியில் எடுக்கப்பட்ட உறுதியான முடிவுகள் அந்த ஆட்சியையே கவிழ்க்கும் ஆபத்தை கொண்டிருந்தன. மண்டல் கமிஷன் திட்டத்தால் வி.பி.சிங் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார். அத்வானி தலைமை வகித்த பாஜக ஆதரவில்தான் வி.பி. சிங் ஆட்சியிலேயே தொடர்ந்து கொண்டிருந்தார். அவரைக் கைதுசெய்தால் கண்டிப்பாக ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும் என்று தெளிவாகத் தெரிந்தது. சொல்லப்போனால் அதனாலேயே தன்மேல் கைவைக்கமாட்டார் என்ற தைரியத்திலேயே அத்வானி ரதயாத்திரையை மேற்கொண்டார். ஆயினும் வி.பி.சிங் அவரைக் கைது செய்தார். ஆதரவு விலகியது. வி.பி.சிங் பதவியை இழந்தார்.
அதேபோல நரசிம்மராவின் பொருளாதார தாராளமயக் கொள்கைகள் பெரும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கு உள்ளாகின. ஆயினும் அவர் உறுதியை இழக்காமல் தொடர்ந்தார்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவுக்கு நீண்டகால பாதுகாப்பைத் தரும் என்பதில் மன்மோகன் உறுதியாக இருந்தார். அப்போது அவர் ஆட்சி இடதுசாரி கட்சிகளின் ஆதரவில் இருந்தது. அந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டால் தங்களின் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று இடதுசாரிகள் தெளிவாக அறிவித்திருந்தனர். அதற்கு பயந்து ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறிவிடும் என்று தேசமே நம்பிக்கொண்டிருந்த வேளையில், தைரியமாக மன்மோகன்சிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஒப்பந்தம் நிறைவேறியது. ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. மன்மோகன்சிங்கின் உறுதியைக் கண்டு அவரைப் பதவியில் தொடர வைப்பதில் சோனியா உறுதிகாட்ட சிலபல கட்சிகள் துண்டாடப்பட்டு, சில உள்ளடி வேலைகளில் ஆட்சி தக்கவைக்கப்பட்டது. ஆனால் முன்னாள் பிரதமரின் கொள்கை உறுதி பலராலும் பெரிதும் சிலாகிக்கப்பட்டது.

தேவகௌடா தன் ஆட்சியில் காஷ்மீர், நாகா பிரச்சினைகளை மேம்படுத்த பெரும் முயற்சிகளை கொண்டுவந்தார். வாஜ்பாய் கஷ்மீர் பிரச்சினையில் புதிய அத்தியாயமே எழுதினார். தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பொடா சட்டத்தை பெரும் எதிர்ப்புகளுக்கு இடையில் நிறைவேற்றினார். (நிற்க: பொடா சட்டம் தவறானது என்று நான் நம்புகிறேன். அது பெரிய அளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்பது தனி விஷயம். ஆனால் இங்கே பேசுபொருள் வேறு: தான் சரி என்று நம்பிய ஒரு விஷயத்தை பெரும் எதிர்ப்புகளுக்கு இடையில் கூட்டணியை நம்பி இருந்த ஒரு பிரதமர் நடைமுறைப்படுத்த மேற்கொண்ட முயற்சியை, துணிச்சலை குறிப்பிடுகிறேன்.)

ஆட்சியில் பிரச்சினைகள்

இப்போது மோடிக்கு திரும்ப வருவோம். பண மதிப்பிழப்பு மோடி எடுத்த துணிச்சலான முடிவு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்தத் திட்டம் வெற்றியா தோல்வியா என்று உங்களுக்கு தெரியுமா? அது கண்டிப்பாக வெற்றியடையவில்லை என்பது உறுதி. ஏனெனில் அப்படி இருந்திருந்தால் தெருவுக்குத் தெரு அதன் பலன்களை போஸ்டர் அடித்து ஒட்டி இருந்திருப்பார்கள். ஆனால் இப்போது அரசு அதிகாரபூர்வமாக ஒரு அறிக்கை சமர்ப்பிக்கக்கூட தயாராக இல்லை.
ஆனால் யோசித்துப் பாருங்கள். இதே மோடி ஒரு கூட்டணி ஆட்சிக்குத் தலைமை வகித்திருந்தால் இந்தப் பணமதிப்பிழப்பு திட்டமே வந்திருக்காது. அப்படியே இரவோடு இரவாக அவர் கொண்டுவந்திருந்தாலும் அதன் விளைவுகள் பற்றி வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க இதர கூட்டணி கட்சிகள் அரசை நெருக்கி இருந்திருக்கும். அதற்கு பதில் சொல்ல வேண்டி இருந்திருக்கும். அப்படி எதுவும் இல்லாததால்தான் அவரால் ஒரு திட்டத்தை இஷ்டத்துக்கு அறிவித்துவிட்டு அது பற்றிய எந்தப் பொறுப்பும் இல்லாமல் இருக்க முடிகிறது.

இதேதான் ராஜீவ் காலத்திலும் நடந்தது. ஷாபனா வழக்கில் முஸ்லிம்கள் எதிர்ப்பில் பயந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மாற்றி எழுதினார் ராஜீவ் காந்தி. அதேபோல இந்துத்துவ சக்திகளுக்கு பயந்து அயோத்தி வளாகத்தை திறந்து கொடுத்தார். பிரச்சினை தீவிரமடைய இது உதவியது. இதே ஒரு கூட்டணி அரசு நடந்திருந்தால், அயோத்தி வளாகத்தை திறப்பதோ அல்லது ஷாபானோ வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுதலிப்பதோ சாத்தியமாகி இருந்திருக்காது.
இதற்கு இன்னுமொரு முக்கிய உதாரணம் ஷரத்து 356ஐ பயன்படுத்தி மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்வது. எண்பதுகளின் இறுதிவரை இதனை பெரும்பான்மை அரசுகள் கண்டமேனிக்கு செய்து வந்தன. முணுக்கென்றால் மாநில அரசுகள் டிஸ்மிஸ் ஆகும். ஆனால் கூட்டணி ஆட்சிகள் வந்ததிலிருந்து இந்த ஷரத்துப் பயன்படுத்தப்படவே இல்லை. பயன்படுத்த முனைந்த நேரத்திலும் அது கடைசி நிமிடத்தில் மாற்றத்துக்கு உள்ளாகி இருந்திருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த வழக்கம் படிப்படியாக குறைந்து இப்போது மாநில அரசுகள் மேல் கையையே வைப்பதில்லை. இது இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இது சாத்தியமானதற்கு காரணம் கூட்டணி அரசுகள்.

அதேபோல, பெரும்பான்மை பலம் கொண்டிருந்த இந்திரா ஆட்சியில் பஞ்சாப் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்தது. பொற்கோயிலில் ராணுவத்தை அனுப்பும் ‘உறுதியான முடிவை எடுத்தார் இந்திரா. சுதந்திர இந்திய வரலாற்றிலேயே ராணுவம் நுழைந்த ஒரே வழிபாட்டுத் தலம் என்ற அவமான சின்னத்தைத் தாங்கி நிற்கிறது பொற்கோயில். அதற்கான விலையை இந்திரா பின்னர் கொடுத்துவிட்டாலும், அது நடந்தது என்கிற வரலாற்றை மாற்ற முடியாது. யோசித்துப் பாருங்கள். ஒரு கூட்டணி ஆட்சியில் அந்த முடிவை அவரால் எடுத்திருக்க முடிந்திருக்காது.

அதேபோல காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசு இஷ்டத்துக்கு விளையாடி வந்தது. மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்வது, தேர்தல்களில் தில்லுமுல்லு செய்து தனக்கு வேண்டிய அரசை ‘தேர்ந்தெடுப்பது’ என்று இருந்தது. கஷ்மீரில் வெகு நாட்கள் கழித்து சுதந்திரமான, மத்திய அரசு குறுக்கீடற்ற ஒரு தேர்தல் 1996ல் நடத்தப்பட்டது. அப்போது பிரதமராக இருந்தவர் தேவகௌடா. பஞ்சாபில் காலிஸ்தான் பிரச்சினை தலைதூக்கியத்தில் இருந்து முதன்முதலில் சுதந்திரமான சட்டசபை தேர்தலும் அவர் ஆட்சியில்தான் சாத்தியமானது. ஒரு மாநிலத்தின் தலைவர் என்பதால் மாநிலங்களின் கவலைகள் பற்றிய கவனம் அவருக்கு இருந்திருக்கவே அவரால் அப்படி தேர்தல்கள் சுதந்திரமாக நடத்த முடிந்தது என்று நம்பலாம்.

அவர் மட்டுமல்ல, 2014வரை தொடர்ந்த மத்திய அரசுகள் கஷ்மீரை கரிசனத்துடனேயே அணுகி வந்திருக்கின்றன. அதற்கு மாறாக, மோடி பிரதமராக வந்தவுடன் காஷ்மீர் மேல் பெரும் கடுமை காட்டப்பட்டது. போராட்டக்காரர்கள் மேல் ரப்பர் தோட்டா குண்டுகள் பொழியப்பட்டன. பொதுமக்களை ஜீப்பில் கட்டி கேடயமாக பயன்படுத்தும் ‘உத்தி’ எல்லாம் மேற்கொள்ளப்பட்டது. மிதவாதப் பிரிவினை இயக்கங்கள் மேல் பெரும் அடக்குமுறை ஏவப்பட்டது. இதெல்லாம் ஏறக்குறைய இந்திராகாந்தி பயன்படுத்திய உத்திகள். விளைவு, தீவிரவாத போராளிக் குழுக்களில் ஆட்சேர்க்கை பன்மடங்கு அதிகரித்தது. எல்லை அத்துமீறல்கள் கடந்த இருபது வருட எண்ணிக்கையை முறியடித்து அதிகரித்தன. முத்தாய்ப்பாக புல்வாமா எல்லாம் தாக்குதலில் நடந்து முடிந்தது. இதுதான் உறுதியான பிரதமர் நிகழ்த்தியிருக்கும் சாதனை.

கடந்த முப்பது ஆண்டுகளில் கூட்டணி ஆட்சிகள் இருந்திருப்பதுதான் நிறையக் கடுமையான முடிவுகள் உடனடியாக எடுக்கப்படாமல் தேசம் பாதுகாக்கப்பட்டு வந்திருப்பதன் காரணம். சொல்லப்போனால் கடந்த ஐந்தாண்டுகளில் பிரதமர் மோடி நிறைய முடிவுகளை எடுத்து அதற்கான விளைவுகளுக்கு பொறுப்பேற்காமல் தப்பிக்க முடிந்ததற்கு அவருக்கு இருந்த பெரும்பான்மைதான் காரணம். ஒரு கூட்டணி ஆட்சிக்கு பிரதமராக இருந்திருந்தால், ஒரு ஊடக சந்திப்புகூட நடத்தாமல் அவரால் காலம் தள்ளி இருந்திருக்க முடியாது. வேலையின்மை அறிக்கையை மறைத்துவிட்டு ஏதேதோ சொல்லிக்கொண்டு இருந்திருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் நெருக்கித்தள்ளி அறிக்கையை வெளியே கொண்டு வந்திருப்பார்கள்.

முடிவுரை

‘இந்தியா, ஒரு நாடாளுமன்ற ஜனநாயகம். இதில் தேர்தலில் எம்.பி.க்களைத்தான் தேர்ந்தெடுக்கிறோம், பிரதமரை அல்ல.’
ஏன் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டியதில்லை என்பதற்குப் பெரும்பாலும் மோடி விமர்சகர்கள் கூற முயலும் பதில்தான் மேலே உள்ள வரி. ஆனால் இந்தப் பதில் கொஞ்சம் அறிவுஜீவித்தனமானது என்று சொல்ல வேண்டியதில்லை. சற்றே பலவீனமாகவும் தொனிக்கிறது.
ஆனால் உண்மையாக நாம் சொல்ல வேண்டிய பதில் இதுதான்: இந்தியா ஒரு பிராந்தியவாத தேசம். A federalist country. இங்கே பிராந்திய பிரதிநிதிகள் இணைந்து ஒரு ஆட்சி நடத்தும்போது அங்கே கொள்கை முடிவுகள் எல்லாருடைய தேவைகள், கவலைகள் மற்றும் பிரச்சினைகளை உள்ளடக்கியே எடுக்கப்பட வேண்டும். அப்படி எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் பெரும்பாலும் பலனளிக்கவே செய்யும். பலனளிக்கிறதோ இல்லையோ பாதிப்புகள் பெரிதும் இல்லாமல் காப்பாற்றும்.

அப்படி நடந்ததா விளைவுதான் 1991ல் தொட்டு இந்தியா அடைந்திருக்கும் பொருளாதார, சமூக வளர்ச்சிகள். போலவே பிராந்தியங்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு, அமைதி போன்றவையும் சாத்தியப்பட்டிருக்கின்றன. ஜனநாயகம் தழைத்திருக்கிறது. சமூக நீதி பரவலாக மக்களிடம் சேர்ந்திருக்கிறது. இந்த சாதனைகள் எல்லாமே கூட்டணி ஆட்சிகள் இருந்த சமயத்தில்தான் நடந்திருக்கிறது.

மாறாக அசுர பலம் கொண்டிருக்கும் ஆட்சிகள் வந்த காலத்தில் எல்லாம் அதிகார துஷ்பிரயோகம், பிரிவினை வன்முறைகள், தவறான, தன்னிச்சையானக் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு சமூகப் பொருளாதார பாதிப்புகள் நிறைய நடந்திருக்கின்றன.

மேற்சொன்ன இந்த இரண்டிற்கும் சில விதிவிலக்குகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், பெரும்பாலான நேரங்களில் இதுதான் விதியாக இருக்கிறது.
எனவே இந்தத் தேர்தலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது எல்லாம் இதுதான். ‘உறுதியான, அசுர பலம் கொண்ட பிரதமரை’ தேர்ந்தெடுத்து அவரை தொடர்ந்து பொறுப்பில்லாமல் நடந்துகொள்ள உதவப் போகிறோமா அல்லது பலம்வாய்ந்த மாநிலக்கட்சிகளை தேர்ந்தெடுத்து, ஒரு கூட்டணி அரசை நிறுவி அதற்கு பொறுப்பான, எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டிய, ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுக்க உதவப் போகிறோமா? பதில் நம் விரல் நுனியில் இருக்கிறது.