மோடியின் ஆட்சி என்றென்றைக்கும் முடிவடையப்போகும் நேரம் நோக்கிய இனிய காத்திருப்புக் காலமாக இது இருக்கிறது. முதற்கட்டத் தேர்தல் தொடங்குவதற்கு முன்னர், நாட்டின் நம்பகமான கருத்துக் கணிப்பு நிறுவனமான சிஎஸ்டிஎஸ் (CSDS) நடத்திய கருத்துக் கணிப்புகள் மீண்டும் மோடியின் ஆட்சியை சூசகமாக உறுதி செய்தன. மோடி தலைமையிலான ஆட்சிக்குப் பெரும்பான்மை கிடைப்பது அரிது, ஆனாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றே அது கணித்தது. முதற்கட்ட வாக்கெடுப்பு நடந்து முடிந்த பிறகான சூழலில், சிஎஸ்டிஎஸ் நிறுவனம் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. மோடி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்வதை அது திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. நமது நாட்டின் மையச்சரடாக, உயிர்நாடியாக விளங்குவது மதச்சார்பற்ற அதன் உள்ளடக்கம். எம்மதத்தையும் பாரபட்சத்திற்கு உட்படுத்துவதை நமது அரசியல் சாசனம் அனுமதிப்பதில்லை. அரசியல் சாசனம் என்பதும், அதன் அறம் என்பதும் கண்ணுக்குப் புலப்படாத, ஆனால் கற்பனைக்கு எட்டக்கூடிய ஒரு உயரிய இலக்கு. அறம் நழுவாத அரசியல் சாசனத்தை, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உய்த்தறிந்து கொள்ளவும், அனுபவிக்கவும், அதன்படி நடக்கவும் செய்ய வைக்க நாட்டின் உயர் அரசியல் சாசனப் பொறுப்பிலுள்ளவர்களுக்கு முழுக் கடமையும் உண்டு. மதச்சார்பற்றதன்மை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் மையச்சரடுகளை எவ்விதத் துண்டிப்பும் இன்றி, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் கடமையும் அவர்களுக்கு உண்டு. மதத்தின் பெயரால் வெறுப்பரசியல் நடத்திவரும் பா.ஜ.க. போன்ற இந்துத்துவா சக்திகள், அரசியல் சாசனம் காட்டியுள்ள வழிகளில் வரலாற்றைக் கொண்டுசெல்லத் தவறுகின்றன. தங்களுக்கான புதிய வரலாறைச் சமைக்க மதத்தின் துணையை நாடுகின்றன. முகம்மது அலி ஜின்னா, பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்து, நாட்டைப் பிளவுபடுத்தி, லட்சக்கணக்கான மக்களின் குருதியின் மேல், பாகிஸ்தானை எப்படிப் பிறப்பெடுக்கச் செய்தாரோ, அதைப் போலவே அன்றே எஞ்சிய இந்தியாவையும், தீவிர இந்து நாடாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்துத்துவாவாதிகள் எடுக்க முனைந்தபோதுதான் மகாத்மா காந்தியடிகள், அவர்களின் எல்லா முயற்சிகளுக்கும் குறுக்கே வந்து நின்றார். மகாத்மா காந்தியடிகள் மட்டும் அன்று இல்லாது போயிருப்பாரேயானால், தங்களின் முயற்சிகளுக்கு சர்தார் வல்லபாய் பட்டேலின் உதவியை இந்துத்துவாவாதிகள் பெற்றிருப்பர். ஜவஹர்லால் நேருவையும் தூக்கி எறிந்திருப்பர். எஞ்சிய இந்தியாவும் இந்துத்துவ பாகிஸ்தானாக மாறிப்போயிருக்கும். சுதந்திர இந்தியாவின் அரசதிகாரம் இந்துத்துவர்களின் கைகளில் சென்றுவிடாமல் தடுத்ததில் காந்தியடிகளுக்கு முக்கியப் பங்குண்டு. காந்தியடிகளுக்குப் பிறகு, கடும் தடுமாற்றத்துடன் நேரு அதை முன்னெடுத்துச் சென்றார்.

நேரு காலத்திலேயே உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கோவிந்த் வல்லபபந்த் இந்துத்துவர்களுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டார். பாபர் மசூதி சர்ச்சைக்கு உள்ளாவதற்கு முன்னரே, அதை சர்ச்சைக்கு உட்படுத்தியதில் முக்கிய நிகழ்வான ராமனின் சிலையை மசூதிக்குள் கொண்டு சென்ற நிகழ்வு, கோவிந்த வல்லப பந்தின் ஆட்சிக்காலத்தில்தான் நிகழ்த்தப்பட்டது. நேரு அதைக் கண்டித்ததோடு நிறுத்திக் கொண்டார். நேரு அன்று அதைத் தீவிரமாகக் கருதி நடவடிக்கை எடுத்திருப்பாரேயானால், இந்துத்துவர்களின் செயல்பாடுகள் வரலாற்றின் பக்கங்களில் எவ்வளவோ மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். சுதந்திர இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது, அரசியலமைப்புச் சட்டப் பதவிகள் வகிக்கும் முக்கிய ஆளுமைகள் தங்களது ஆட்சிக்காலங்களில் நிகழ்த்திய அறம் வழுவிய செயல்களை நாம் பட்டியலிடமுடியும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது அன்றைய பிரதமர் நரசிம்மராவ் ஏதும் செய்யாமல் மௌனித்துக் கிடந்தார். எதிர்க்கட்சித் தலைவர்களான அத்வானியும், வாஜ்பாயும் இடிப்பை ஊக்குவித்தனர். அதன் பின்னர், மசூதி இடிப்பின் முக்கியக் குற்றவாளிகளை இந்திய நீதித்துறை இன்னமும் தண்டிக்கவில்லை. மாறாக, சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் எப்படிக் கட்டுவது, அதற்கான பொதுக்கருத்துகளை ஏற்படுத்துவது எப்படி என்பதில்தான் நீதித்துறை தனது முழுக் கவனத்தையும் செலுத்தி வந்திருக்கிறது. சிறுபான்மை மதத்துக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள ஒரு குற்றத்திற்கு எதிராக இன்னமும் நீதித்துறை செயல்படமுடியாமல் வாளாவிருப்பதன் தொடர்ச்சியாகத்தான் சிறுபான்மையினர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் வெறுப்புகளையும், மதத்தீவிரத்தன்மையை நோக்கிய அவர்களுடைய சாய்மானங்களையும் கடந்த முப்பது ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடந்த முப்பது ஆண்டுகளில் வலதுசாரித் தீவிரவாதம் (இந்துத்துவா, இஸ்லாமிய) தனது பாய்ச்சலை வேகமாகச் செய்திருக்கிறது. 2001 ஆம் ஆண்டில் குஜராத் படுகொலைகளை நடத்தமுடிந்திருக்கிறது. மாலேகான் குண்டுவெடிப்புகளும், சம்ஜூதா ரயில் குண்டு வெடிப்புகளும், மெக்கா மசூதி குண்டுவெடிப்புகளும் நடத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்திலும் வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகளின் பெயர்கள் பதியப்பெற்று அவர்கள் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அரசியல் சாசனம் உருவாக்கித் தந்திருக்கும் மாண்புகளைக் குலைக்கும் நடவடிக்கைகளில் இந்துத்துவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கின்றனர். நரேந்திர மோடி பதவிக்கு வரும் பட்சத்தில், தாம் இந்த நாட்டை விட்டுச் செல்லத் தயார் என அறிவித்த புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி, தனது வாழ்வின் கடைசி நாட்களில், இந்துத்துவர்களால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார். கல்புர்க்கி தொடங்கி கௌரி லங்கேஷ் உள்ளிட்ட எழுத்தாளர்களும், அறிஞர் பெருமக்களும் தீவிர இந்துத்துவர்களால் கொல்லப்பட்டனர். புகழ்மிக்க கல்வி நிறுவனங்களான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் (JNU), தேசிய வரலாற்று ஆய்வு நிறுவனமும் (ICHR), புனேவில் அமைந்திருக்கும் இந்திய திரைப்பட, தொலைக்காட்சிக் கழகமும் (FTII) தங்களின் சுயேச்சை தன்மையை இழக்க வைக்கப்பட்டன. ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தின் தலித் ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா இந்துத்துவர்களின் செயல்பாடுகளால் தற்கொலைக்கு இட்டுச்செல்லப்பட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் பன்முகத் தன்மைக்கும், கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும், வரலாற்றுக்கும் ஆர்.எஸ்.எஸ்.தலைமையிலான இந்துத்துவர்கள் செய்துள்ள குறுக்கீடுகளை, சேதங்களை மேலும் மேலும் எழுதிக் கொண்டே செல்லலாம். இதன் தொடர்ச்சியாகத்தான் நாடாளுமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையை சங்பரிவார் இப்போது எடுத்திருக்கிறது.

மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த எட்டு வருடங்களாக “சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA)” கீழ் சிறையில் அடைக்கப்பட்டு, உடல்நலப் பிரச்சினை என காரணம் சொல்லி, தற்போது பிணையில் வெளிவந்திருக்கும், இந்துத்வா பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் என்பவரை போபால் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக பாஜக நிறுத்தியுள்ளது. தனது வேட்பு மனுவை அவர் சமீபத்தில் தாக்கல் செய்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்தியப் பிரதேச மாநிலம், டிவாஸ் மாவட்டத்தில் சுனில் ஜோஷி என்னும் ஆர்.எஸ்.எஸ்.காரர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இதே பெண்சாமியாரைக் கைது செய்த அப்போதைய பாஜக முதலமைச்சராக இருந்த இதே சௌகான்தான், இப்போது இந்த பெண்சாமியாரை நாட்டைக் காக்கவந்த உத்தமர் என்றும் நாட்டைக் காக்க வந்த பாதுகாவலர் என்றும் கூறுகிறார்.

வன்முறையாளர்கள், பணமோசடி செய்தவர்கள், நில அபகரிப்பு செய்தவர்கள் இப்படிப்பட்டவர்களைக் கண்டிருந்த நம்முடைய நவீன நாடாளுமன்றம் இப்போது தேசத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் பொருட்டு நடத்தப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்புக் காரணமாக இருந்துள்ள ஒரு இந்துத்துவா பயங்கரவாதியையும் காணும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது. பெண்சாமியார் பிரக்யாசிங் தாகூரை போபாலின் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தியதன் மூலம், இந்திய அரசியலை, தீவிரவாதிகளின் முகாமாக மாற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறது. ஏற்கனவே சிறுபான்மையினர், மதச்சார்பற்றவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகியோரின் மீது வெறுப்பு அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் இந்துத்துவாவின் அரசியல் பிரதிநிதி பாஜக, இப்போது நாட்டை மிகவும் அபாயகரமான கட்டத்திற்கு இட்டுச் செல்கிறது. பாபர் மசூதி இடிப்பை போற்றிப் புகழும் ஒரு நபர், மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்துவிட்டு தற்போதுதான் பிணையில் வந்திருக்கும் ஒரு நபர், 2008 ஆம் ஆண்டில் மெக்கா மசூதி குண்டு வெடிப்பின் முக்கியக் குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ். நபர் சுனில் ஜோஷியைக் கொலைசெய்ததில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர், பாபர் மசூதி இடிப்பின்போது அதன் ஒரு கோபுரத்தின் மீது ஏறி அதை இடித்ததில் நானும் பங்குபெற்றேன் என்று மிகவும் வெளிப்படையாக அறிவிக்கும் ஒரு நபர் இப்போது போபால் நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர். தேர்தல் ஆணையமும் அதை அனுமதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்கப் போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தேவையான தகுதிகள் இத்தனை கையெழுத்து வேண்டும், இவ்வளவு பணம் கட்டவேண்டும் என்னும் பொது விதிகளுக்கு அப்பால், தார்மீக அறத்தைக் கடைபிடிக்கக் கூடிய, குற்றமற்ற வேட்பாளர்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்ற பாரம்பரிய நடைமுறைகளும், மரபுகளும் இப்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. ஓட்டுப் போடும் அரசியலில் உள்ள அபத்தங்களை நேரு பிரதம மந்திரியாக இருந்த காலத்திலேயே உணர்ந்திருந்த மகாத்மா காந்தி, அரசியல்வாதிகளை இனி ஒன்றும் செய்வதற்கில்லை, இனிமேல் வாக்காளர்களை மட்டுமே நாம் விழிப்படையச் செய்யவேண்டும் என்றார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இந்துத்துவர்களால் திட்டமிடப்பட்ட முசாபர்பூர் கலவரங்கள், பாஜகவிற்கு உத்தரப் பிரதேசத்தின் பெரும்பான்மையான நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பெற்றுத் தந்தது. மோடி பிரதமரான நிலையில், நாட்டை மேலும் பதற்றத்திற்குள்ளாக்கி, பாகிஸ்தானுடன் மோதல் போக்கை உருவாக்குவதன் மூலம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில், இழந்த தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள பாஜக முயன்றது. ஆனால் இம்முறை இம்முயற்சி வெற்றியடைய மக்கள் அனுமதிக்கப்போவதில்லை.

இந்தியா எந்த அடித்தளத்தின் மீது உருவாக்கப்பட்டிருக்கிறதோ, எந்த அடித்தளம் நம்முடைய ஜனநாயகத்தைப் போற்றிப் பாதுகாக்கிறதோ அந்த அரசியலமைப்புச் சட்டம் என்னும் அடித்தளம் தற்போது நொறுக்கப்பட்டுவருகிறது. நாடு முழுவதும் அரசியலமைப்புச் சட்டத்தின் மையச் சரடிற்கு எதிராக ஏராளமான வேலைகளை இந்துத்துவாவாதிகள் செய்து வருகிறார்கள். கடந்த வருடம் உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பில், குற்றவாளிகளை வேட்பாளர்களாகக் களமிறக்கும் கட்சிகளுக்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது. அதன்படி, அப்படிப்பட்ட நபர்களைக் கட்சியைவிட்டே நீக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறது. அது போல அவ்வேட்பாளர்கள் தேர்தலில் நிற்கத் தடைவிதிப்பது குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு எடுக்கவேண்டும், மேலும் இது குறித்த மேல் நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பைத் தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால் பெண்சாமியாரின் வேட்புமனுவை நிராகரிக்கும் துணிவு தேர்தல் ஆணையத்திற்கு உண்டா? அப்படிப்பட்ட துணிவு தேர்தல் ஆணையத்திற்கு இருக்குமேயானால் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில், ஆணையமே ஒப்புக்கொண்டபடி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்களர்களின் பெயர்களைத் திட்டமிட்டபடி நீக்கியிருக்கும் நபர்களின் மீதும் நடவடிக்கை எடுத்து, அவர்களை மீண்டும் வாக்காளர்களாக்கி வாக்களிக்கும் நடவடிக்கையை எடுத்திருக்கும்.

கடந்த 70 வருடகால நவீன இந்திய வரலாற்றில் கொஞ்சம் கொஞ்சமாக இந்துத்துவாக் கொள்கைகளைப் பரவலாக்கும் முயற்சியில் வலதுசாரிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் வாஜ்பாயி குறித்து, அவர் மென்மையான இந்துத்துவாவாதி, தவறான இடத்தில் இருக்கும் சரியான மனிதர் என்றெல்லாம் புகழாரங்கள் பரப்பப்பட்டன. வாஜ்பாயியின் புகழ் அவருடைய மரணத்தின் பிற்பாடு ஊதிப் பெருக்கப்பட்டது. உண்மையில் பார்க்கப்போனால் குஜராத் கலவரங்களைக் கட்டுப்படுத்தத் தவறியவர் வாஜ்பாயிதான். ராஜதர்மத்தை மோடி மீறிவிட்டார் என்று குற்றம் சுமத்தினாரே தவிர, அவர் மீது என்ன நடவடிக்கையை அவரால் எடுக்கமுடிந்தது? அப்படி எடுத்திருப்பாரேயானால் வாஜ்பாயி என்றோ அரசியல் அரங்கிலிருந்து காணாமல் போயிருப்பார். பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமாக இருந்த எல்லா அரசியல்வாதிகளையும் வாஜ்பாயி பாதுகாத்தார். வாஜ்பாயிக்குப் பிறகான சூழலில் அத்வானி ஜின்னாவையே போற்றிப் புகழ்ந்தார். மோடி கடைபிடிக்கும் பல தீவிரப் பொருளாதார, அரசியல், இந்துத்துவாக் கொள்கைகளை எதிர்ப்பதற்கு அவர் தயங்கியது இல்லை. இப்போது அத்வானி மிகவும் நல்லவராகிவிட்டார். மோடிக்குப் பிறகான சூழலில் அமித்ஷாவும், யோகி ஆதித்யநாத்தும் களத்தில் உள்ளார்கள். அவர்களின் எதிர்கால நடவடிக்கைகள், மோடியை மிக மிக நல்லவர் என்கிற தகுதிக்குக் கூட உயர்த்திவிடும் அபாயங்களுண்டு. தீவிர இந்துத்துவா தீவிரவாதிகள் நிகழ்த்தியிருக்கும் எந்த ஒரு குற்றத்திற்கும் இதுவரை தண்டனை அளித்தபாடில்லை. மோடியின் ஆட்சிக்காலத்திலும், அதற்கு முன்னரும் இஸ்லாமியர்களுக்கு எதிராக, நாட்டின் ஜனநாயக சக்திகளுக்கு எதிராகத் தீவிர, சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தொடர்ந்து கூறிக்கொண்டு வந்திருப்பவரான யோகி ஆதித்யநாத் இன்று உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர். ஆனால் இந்தப் பெண்சாமியார் இன்னமும் ஒரு படி மேலே போகிறார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் நன்னாள். நான் அதன் உச்சியின் மீதேறி இடித்தேன் என்கிறார். அதை மிகவும் பெருமையாகக் கருதுகிறார். சுதந்திர இந்தியாவின் மிக மோசமான நிகழ்வாகக் கருதப்படும் பாபர் மசூதி இடிப்பு நிகழ்வில் தான் பங்கு பெற்றதை மிகவும் பெருமையாகக் கருதும் இந்தப் பெண்சாமியார்தான் இன்று போபாலின் இந்துத்துவா வேட்பாளர்.

நாட்டின் பாதுகாப்பையும், துணைக்கண்டத்து மக்களின் பாதுகாப்பையும் அடகு வைத்துத்தான் பாஜக தனது துணிகரமான ராணுவ அரசியல் விளையாட்டை எப்போதும் நடத்தி வந்திருக்கிறது. வாஜ்பாயி காலத்தின் கார்கில் போல, இப்போது புல்வாமா தாக்குதலும், அதன் பிறகான போர்விமானத் தாக்குதல் அரசியலும். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அரசியல் புத்திசாலித்தனத்தால் இரு நாடுகளுக்குமிடையிலான தீவிர மோதல்கள் தவிர்க்கப்பட்டது என்று சொல்வதில் என்ன பிழை இருக்கமுடியும்?

கடந்த ஐந்துவருட கால பாஜகவின் வெறுப்பரசியலை சரிசெய்ய இன்னும் ஐம்பது ஆண்டுகள்கூட பிடிக்கலாம். ஆனால் மற்றுமொரு முறை மோடியின் அரசதிகாரம் ஏற்படும்பட்சத்தில், வெளிப்படும் வெறுப்பரசியலின் வெம்மை தணிய, காலம் என்றுமே அனுமதிக்கப்போவதில்லை.

(c.shanmughasundaram@gmail.com)