2014 தேர்தலில் ஊழல் ஒழிப்பு, வளர்ச்சி எனும் கோஷங்களோடு களமிறங்கினார், குஜராத்தின் மூன்று முறை முதல்வர் நரேந்திர மோடி அதற்கு முன்னராகவே அவரது தளபதியான அமித் ஷா, இஸ்ரத் ஜகான் போலி என்கௌண்டர் வழக்கில், கொலை குற்றஞ்சாட்டப்பட்டு குஜராத்தைவிட்டு வெளியேற்றப்பட்டு, உத்தரப் பிரதேசத்தில் பூர்வாங்க வேலையில் இறக்கப்பட்டிருந்தார். மோடியின் அயல்நாட்டு வங்கிகளிலிருக்கும் கருப்புப் பணம் முழுவதும் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும், பதினைந்து லட்சம் போடப்படும் என்ற இமாலயப் பொய்யை நம்பிய எளிய மனிதர்களும், இந்தியாவை ‘குஜராத் மாடலில்’ பெரிய வல்லரசாக்கி விடுவாரென நம்பிய எல்லாம் தெரிந்த மூடர்களும் இந்துத்துவ அடிப்படைவாதிகளும் கூடி அவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர். ஐந்து ஆண்டுகால ஆட்சி அலங்கோலம் அவர்களை மீண்டும் துவக்கநிலைக்கே தள்ளியிருக்கிறது. ஐந்தாண்டு சாதனையாகச் சொல்ல ஏதுமற்றவர்களின் இலக்கு மீண்டும் தங்களது காலங்காலமான ‘மற்றமை’மீதானதாக மீண்டிருக்கிறது.

2019 பாராளுமன்றத் தேர்தல் களம்: பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள்:

1) அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உறுதி.
2) காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன விதி எண் 370 நீக்கப்படும். காஷ்மீரில் சொத்துரிமை தொடர்பான சட்டவிதி 35ஆ நீக்கப்படும்.
3) வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அசாமில், குடியுரிமை ரிஜிஸ்டர் இறுதி செய்யப்பட்டு, இந்துக்கள் அல்லாதோர் வெளியேற்றப்படுவார்கள். இந்துக்கள், பௌத்தர்கள் போன்றவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
4) ரோகிங்ஹியா இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
5) ஒரே சீரான உரிமையியல் சட்டம் கொண்டுவரப்படும் (UNIFORM CIVIL CODE).
6) முத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்படும்.

தேர்தல் பரப்புரைக் களத்தில் மோடி

‘பாலகோட் தாக்குதலில் 350 பேரைக் கொன்றதன்மூலம் இந்தியா ஒரு வலிமையான கையிலிருப்பதை உலகிற்கு உணர்த்தி இருக்கிறோம்.’

‘இந்திய ராணுவத்தின் பாலகோட் சாதனையை நம்ப மறுக்கும் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்.’

‘இந்தத் தேர்தல்களம் தேசாபிமானத்திற்கும், தேசவிரோதிகளுக்கும் நடக்கும் போர்’

‘பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானுக்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தெரியும், மோடி ஏழு ஏவுகணைகளை அவர்களை நோக்கி தயார் நிலையில் வைத்திருக்கிறார் என்று. அதனால் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள்.’

‘அணுகுண்டுகள் வைத்திருப்பது தீபாவளி பட்டாசு வெடிக்க இல்லை என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும்.’

தேர்தல் அறிக்கையும், பரப்புரைக் கள உரைவீச்சுகளும் ஒன்றைச் சுட்டுகின்றன. மோடி அரசிற்கு சாதனைகளாகச் சொல்ல ஒன்றுகூட இல்லை. இல்லவே இல்லை. எனவே பாகிஸ்தான், காஷ்மீர், இஸ்லாமியர் எனும் மூன்று இலக்குகளைக் குறி வைத்து தேசம், பாதுகாப்பு, ராணுவம், போர் எனும் கூச்சல்களையே தேர்தல் கள உத்தியாக்கியுள்ளது பாஜக. இந்த இலக்குகள் புதியவை இல்லையென்ற போதும், இவையே மைய பேசு பொருளாக மாறுதல் என்பது அசாதாரணமானது. பாகிஸ்தானை விட்டுத் தள்ளுவோம், அந்த இலக்கு இந்திய உருவாக்கத்தின் ஆரம்பப் புள்ளியிலேயே கட்டமைக்கப்பட்ட ‘மற்றமை’ (OTHER). அதாவது இந்தியா என்பதை இந்துதேசமாக்கும் முனைப்பின் வெளிப்பாடே பாகிஸ்தான் எனும் நவீன தேசமான பாகிஸ்தான். வெகு குறுகிய காலத்தில் பம்பாயை (மும்பை) பூர்வீக வாழ்விடமாகக் கொண்ட முகமது அலி ஜின்னா அவர்கள் கையில் திணிக்கப்பட்ட நாடு. மிக அபூர்வமாக 1940இல் பேச்சாகத் துவங்கி 1947இல் அசலாகிப் போன அதிசய நாடு அது. அதன் பகுதிகளான (Provinces Punjab, Baluchistan, Northern Frontier) பஞ்சாப், பலுசிஸ்தான், வடஎல்லை மாநிலங்கள் பாகிஸ்தான் என்ற கோரிக்கையை முதலில் ஏற்கவில்லை என்பதே உண்மை.

இந்தியவாழ் இஸ்லாமியரும், காஷ்மீரமும் முற்றிலும் வேறானவை. காஷ்மீரமாவது தன்னாட்சி எனும் ஒப்பந்தத்தோடு மட்டுமே இந்திய ஒன்றியத்தில் இணைய ஒத்துக் கொண்ட நிலப்பகுதி. அந்த ஒப்பந்தத்தையே முறித்தெறிய முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தீவிரவாதம் தலைவிரித்தாடும் பூமி அது. அவ்வப்போதான கனத்த அமைதியை சாத்தியமாக்கும் சட்ட விதிகளை நீக்குவதான அறைகூவல் காஷ்மீரில் இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டை அரசியல் களத்தில் முன் நிறுத்தி இயங்கும் கட்சிகளையும் விளிம்பிற்குத் தள்ளுவதன்றி வேறில்லை.இது மட்டுமில்லை, தீவிரவாதத்தின் மடியிலமர்ந்து ‘இந்தியம்’ பேசுபவர்களை முழுதாக எதிரிகளாக்கும் முயற்சி. அசலான தேசாபிமானம் உள்ளவர்கள் ஒருபோதும் செய்யத் துணியாத காரியம் இது.
இந்த மூன்றாவது இலக்குதான் கொடூரமானது. இந்தியா இறையாண்மை பெற்ற நாடானபோது, தங்களுக்கு வழங்கப்பட்ட ‘இந்தியாவா? பாகிஸ்தானா?’ என்ற தேர்வில், உறுதியாக இந்தியா என்ற தேர்வை ஏற்று, இதன் இறையாண்மை மிக்க குடிநபர்களாகி இங்கு தொடர்ந்தவர்களின் அடுத்த தலைமுறையை ‘மற்றமையாக்கும்’ (எதிரிகளாக்கும்) செயல்பாடு மகா அயோக்கியத்தனம் மட்டுமே. அவர்கள் தேர்ந்தார்கள் என்பதில் ஒரு தெளிவு வேண்டும். அது அவர்கள் உரிமை என்று அவர்கள் தேர்ந்தார்கள். அஃதொன்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கொடையல்ல. அவர்களின் நிலம் என்பதால், அவர்களின் கலாச்சார பூமி என்பதால் இதைத் தேர்ந்தார்கள். எனவே ஒரு உரிமையாளர் தொகுதி மீது இன்னொரு தொகுதி தொடுக்கும் உரிமை மறுப்பு நீதியற்றது. அதிலும் எண்ணிக்கை பெரும்பான்மை எனும் கூறு ஒரு தரப்பிற்கு அந்த அதிகாரத்தை வழங்குவதாக எண்ணினால் அதுதான் தேசவிரோத, சகமனித விரோதச் செயல்.

சமூக அறிவியல் மற்றும் அரசியல் அறிவியல் சிந்தனைகள் துருவமுனைவாக்கம் (POLARISATION) என்ற கருத்தமைவு குறித்துப் பேசுகிறது. மக்களாட்சி அமைப்பில் துருவமுனைவாக்கம் இயல்பாக நிகழ்வதுதான்.அது ஒருவகையில் மக்களாட்சியின் இன்றியமையாத போக்கும்கூட. அரசியலியல் இருவகை துருவமுனைவாக்கத்தை அடையாளப்படுத்துகிறது. முதல் வகை மேலடுக்கு துருவமுனைவாக்கம் (ELITE POLARISATION), மற்றது வெகுவியத்தள துருவமுனைவாக்கம் (றிளிறிஹிலிகிஸி ளிஸி விகிஷிஷி றிளிலிகிஸிமிஷிகிஜிமிளிழி). இந்த துருவமுனைவாக்கங்கள் கருத்தியல் சார்ந்த நிலைப்பாடுகளைக் கொண்டவை எனும்போதும், அவை கவனம் கொள்ளும் கருத்தியல் தளங்கள் வெகுவாகப் பரந்துபட்டவையாக இருப்பதே போக்கு. அமெரிக்கா போன்ற இருகட்சி மக்களாட்சியில் இந்த முனைவாக்கம் இருதுருவமுனைவாக்கமாக இயங்குகிறது. ஜனநாயகக் கட்சி எதிர் குடியரசுக் கட்சி எனும் நிரல் தெளிவானது. ஆனால் துருவமுனைவாக்கத்தின் காரணிகளை அமெரிக்க அரசியல் களத்தில் ஆய்வு செய்ய முனைந்தவர்களின் நீண்ட பட்டியலில் சில 1) அடையாள அரசியல் 2) மதபன்மைத்துவம்- இங்கு கிறித்தவ பெரும்பான்மை மதத்தின் தற்போதைய பன்மைத்துவ போக்கு. அதாவது இறுக்கமான கத்தோலிக்க, புராடஸ்டண்டு மதங்களிலிருந்து விலகி, அமைப்பு கட்டுமானங்களுக்கு வெளியே, இயங்கும் கிறித்தவ நம்பிக்கை அமைப்புகளின் எண்ணிக்கைப் பெருக்கம் மற்றும் மதமறுப்பின்றியும் அதனோடு தொடர்பறுந்த நிலையில் வாழும் தன்னிலைகளின் பெருக்கம். இன்னும் தெளிவிற்கு பழமைவாத கிறித்தவ நம்பிக்கையாளர்கள் (Conservative Chritians) குடியரசுக் கட்சியிலும், மேலே காணப்பட்ட பன்மைத்துவ சுதந்திரவாத கிறித்தவர்கள் (Liberal Christians) ஜனநாயகக் கட்சியிலும் துருவமுனைவாக்கம் கண்டுள்ளனர். 3) இன பன்மைத்துவம்- இந்தப் புள்ளியில் கவனிக்க வேண்டிய ஒரு மிக முக்கியமான கூறு அமெரிக்க கருப்பு சிறுபான்மையினர் இருகட்சிகளிலும் இருந்தபோதும், ஜனநாயகக் கட்சியே அவர்களது பிரதான தேர்வு என்பது.

இந்திய அரசியல்கள துருவமுனைவாக்கம் சுதந்திரத்திற்கு வெகுகாலம் முன்னேயே உருப்பெற்றுவிட்டது எனலாம். இன்னும் வலியுறுத்திச் சொல்வதானால் காந்தியின் வரவு இடையீடு செய்திராவிட்டால், இன்றைய இந்தியா சாத்தியமாகி இருக்குமா என்பதே பெரும் ஐயம். காங்கிரஸ் இயக்கத்தின் அளவே அல்லது சற்று முந்தையது இந்துத்துவ இந்தியா கனவு. திலகரின் மறைவும், காந்தியின் வரவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் இந்தியா எனும் நவீன இந்தியா தொடர்வதற்கான குறைந்தபட்ச சாத்தியத்தை முற்றாக வீழ்த்தியவர்கள் இந்துத்துவவாதிகளே. கோல்வாக்கரும், சாவர்க்கரும் செய்த இடையீட்டின் பங்களிப்பு, இந்திய விடுதலைபற்றியதன்று. மாறாக, வெள்ளையர் தயவில் உருவான பிரிட்டிஷ் இந்தியாவை அந்த கணவான்களின் ‘அகண்ட பாரதம்’ ஆக்குவது. அப்படியானால், அந்தப் பெரும் நிலப்பகுதியில் வாழும் இஸ்லாமியரை இந்துத்துவ இந்தியாவின் இரண்டாம்தர குடிநபர்கள் ஆக்குவது. ஆனால் அந்தப் பேராளர்கள் உணரத் தவறியது அல்லது கவனிக்க மறுத்தது அந்த நிலப்பகுதியின் குடிமைத் தொகுதியில் நாற்பது விழுக்காட்டிற்கும் அதிகமான எண்ணிக்கையினராக இஸ்லாமியர் இருந்தனர் என்பதை.அதை உணர்ந்த, கவனத்தில் கொண்ட காந்தியாரின் நோக்கும், விளக்கங்களும் அவர்களை ஆத்திரமூட்டி அவரைக் கொலை செய்யச் செய்தது. 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவிலேயே மரித்துப் போன காந்தி, கொலையுண்ட போது அது அவருக்கு அது இரண்டாவது மரணம் மட்டுமே. ஆம், அவரை இரண்டாவதாகவே இந்துத்துவர்கள் கொலை செய்தனர். அவரது முதல் ஆன்ம மரணத்தை நிகழ்த்தியவர்கள் நேரு, வல்லபாய் படேல் உள்ளிட்ட இந்திய தேசியக் காங்கிரசாரே.

எது எப்படியோ, இந்திய சுதந்திரம் எனும் நிகழ்வே இஸ்லாமிய பாகிஸ்தான் என்ற ‘மற்றமை’ உருவாக்கம் வழியாகவே சாத்தியமானது. அது இன்றும் தொடரும் காட்சி. ஆனால் இடையில் நிகழ்ந்த விபரீதம்தான் பெரும் சோகம். எதிராக / எதிரியாக கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தானும், இணைந்தும் விலகி நின்ற காஷ்மீரமும், அசலான இந்திய இஸ்லாமியரை “மற்றமையாக்கிய” சோகம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியே ஒருவகையில் காங்கிரஸ் உருவாக்கம். ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்திய முஸ்லிம் லீக் கட்சி பாகிஸ்தான் கோரிக்கையை முன் வைத்த போது இங்கிருந்த இஸ்லாமியரை ஆற்றுப்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பு அது. அதாவது இந்திய சுதந்திரத்தை, அதாவது இந்திய நிலப்பகுதியின் இறையாண்மையை ஏற்றுக் கொண்ட, அதற்காக காங்கிரசுக்குத் துணை நின்ற அமைப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி. அபுல் கலாம் அசாதும், காயிதே மில்லத்தும் உருவாக்கிய அமைப்பு. அதாவது முகமது அலி ஜின்னா அவர்கள் தலைமையை மறுத்து, இந்தியா எனும் தேச உருவாக்கத்திற்குத் துணை நின்ற அமைப்பு. ஆனால் அதையே எதிரியாக கட்டமைத்ததுதான் இந்துத்துவ அரசியல். இந்திய சுதந்திரத்திற்குப் பின்னான நேரு கால அரசியலை எதிர்க்க இந்துத்துவ ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங், இந்து மஹா சபா போன்ற அடிப்படைவாதிகளின் இலக்கு ஆனது இந்திய இஸ்லாமியரே. இத்தனைக்கும் இந்திய வறிய அடித்தட்டு வர்க்க சமூகத்தின் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலானவர்களாக இருந்தவர்கள் அந்தச் சமூகம் என்பதுதான் வேதனை.

துருவமுனைவாக்கம் மக்களாட்சி அரசியலின் கூறு என்றபோதும், ஒரு அறுதிப்பெரும்பான்மைத் தொகுதி “இந்து” எனும் தொகுப்பு அடையாளத்தை கூர்தீட்டி ஒற்றையாக்கி, அதனை சிறுபான்மைச் சமூகங்களுக்கு (இங்கு இஸ்லாமோடு கிறித்துவமும்) எதிராக நிறுத்துவது உலக அரங்கில் மக்களாட்சியின் பண்பே அல்ல. அது அனுமதிக்கப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட துருவமுனைவாக்கப் பண்பும் அல்ல. மக்களாட்சி அல்லாத எதேச்சாதிகார, சர்வாதிகார நாடுகளில் நிகழும் இந்த இழிவை இங்கு நிகழ்த்த முனைவது மக்களாட்சியை அடியோடு ஒழித்து விடும் முயற்சியே. அதற்காக இந்துத்துவர்கள் உருவாக்கிய கலாச்சார வேறுபாட்டுத் தளங்களே இந்த பிளவைத் தீர்க்கமாக மாற்றும் பணியை வலுவாகக் கட்டமைத்தது. இந்தவகையில் பிரதான பாத்திரம் வகித்தது பசு. இந்துமதத்தின் ஆகப்புனிதமான திருவுருவாக ‘பசுவை’க் கட்டமைத்ததன் மூலம் அதை உண்ணும் இஸ்லாமியரை எதிரிகளாக்கியது. உண்ணும் உணவைக் கொண்டு “மற்றமையை” கட்டமைத்த தீவிரவாதம் இந்துத்துவம் தவிர வேறெதாகவும் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அடுத்ததாக கண்டடையப்பட்டது, ஜென்மஸ்தான் எனப்பட்ட பிறப்புதலங்கள். ராமன் பிறந்த அயோத்தியும், கிருஷ்ணன் பிறந்த மதுராவும், இன்னபிற கடவுளர் வழிபாட்டுத் தலங்களும் உருப்பெற்றன. அவர்களை அந்நியராக கட்டமைக்கவல்ல அனைத்து வடிவங்களும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.இந்தப் போக்கு அனைத்திலும் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விடயம், இங்கு எதிரை / மற்றமையை கட்டமைப்பதன் வழியாக உருவாக்கப்பட்டது ‘இந்து’ எனும் ஓர்மையும் என்பதுதான். ஆம், இதுதான் பிரதான கூறு. இந்து என்பதாக அறியப்பட்ட பன்மைத்துவமான வாழ்வுமுறைகளை ‘இந்துத்துவம்’ என்னும் ஒற்றை அடையாளத்தில் அடைக்க முனைந்தது இந்துத்துவ அரசியல். இந்தியா எனும் தேசம் தன்னை உருப்படுத்திக் கொள்ள இஸ்லாமிய பாகிஸ்தான் என்ற எதிரைக் கட்டமைத்தது போலவே “இந்து” தனக்கெதிரான “இஸ்லாமியன்” என்ற ஒற்றையை உருவாக்கி தன்னை நிறுவ முனைந்தது.

இந்தப் புள்ளியில்தான் தமிழ்நாட்டு அனுபவம் எப்படி முற்றிலுமாக இந்த ‘இந்து’ எனும் ஓர்மையை முறியடித்தது என்பது கவனத்தைக் கோருகிறது. இந்தத் 2019 தேர்தல் களத்தில் வடக்கே உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தும், மாயாவதியும் முறையே இந்துக்களையும், இஸ்லாமியரையும் தூண்டியதாக தேர்தல் காலத்தில் பரப்புரை சில நாட்களுக்கு செய்யக் கூடாதென தடைவிதித்தது தேர்தல் ஆணையம். ஆனால் தமிழ்நாட்டில் தலைகீழ் மாற்றம். இங்கு திமுக இஸ்லாமியரைத் தூண்டுவதாகவோ, அவர்களை வாக்களிக்க நேரடியாக வேண்டியதாகவோ குற்றச்சாட்டு ஏழவில்லை. மாறாக பாஜக திமுக ‘இந்து விரோதக் கட்சி’ என பரப்புரை மேற்கொண்டது. இத்தனைக்கும் திமுக வேட்பாளர்கள் ஒருவர்கூட இஸ்லாமியர் இல்லை. மதரீதியான அடையாளத்தின்படி அவர்கள் இந்துக்களே. ஆனால் அவர்களை இந்து விரோதிகள் என ஒரு இந்துத்துவக் கட்சி ஏன் சொல்கிறது. அந்தப் பொய்மைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சொன்ன பதிலில் அடங்கியுள்ளது விடை. ஆம், தளபதி சொன்னார், “நாங்கள் இந்துக்களுக்கு விரோதிகளல்ல. இந்துத்துவ விரோதிகள்” என்று. இந்திய அரசியல் அரசியல் களத்தில் இந்த ரீதியிலான உரையை ஒரு தேர்தல் அரசியல் கட்சி பொதுவெளியில் நிகழ்த்த முடியுமா? உறுதியாக வாய்ப்பில்லை. இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் அவர்களே தன் பரப்புரை களத்தில் கோவில் குளங்கள் சுற்றும்படிக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும்போது, தமிழ்நாடு அரசியலில் மட்டுமே அந்த நிர்ப்பந்தம் எவருக்கும் இல்லை.

இந்த அற்புதத்தை சாத்தியமாக்கியது பெரியார் எனும் கலகக்காரன். இந்துத்துவமும், பார்ப்பனீயமும் இணைபிரியாத இரட்டைகள். பார்ப்பன அதிகாரத்தை, அதன் மேலாண்மையை நிறுவும் ஆயுதமே ஒற்றை இந்து எனும் அடையாளம். இந்துத்துவத்தின் அளப்பரிய கொடையான மநுநீதி தர்மசாஸ்திரமே, பிறப்பால் மேல் கீழ் எனும் வர்ண அடுக்கு ஒழுங்குமுறையின் மூலம் என்பதைக் காலத்தே கண்டுணர்ந்த பாரிய சிந்தனையாளர் பெரியார். அந்த சமூகநீதிக்காரரின் தேசம், இறையாண்மை, மொழி, பண்பாடு, கலாச்சாரம் குறித்த பார்வைகள் தமிழ்ச் சமூகத்தை அதன் அதலபாதாள வீழ்ச்சியிலிருந்து காத்தது. அதற்காக இந்து இந்தியா எனும் பாசிசத்திற்கெதிராக திராவிட நாடு எனும் கோரிக்கையை முன்மொழியச் செய்தது. இந்துத்துவத்தின் மனிதநீதிக்கெதிரான கொள்கையை தனது மற்றமையாகக் கொண்ட திராவிட நாடு, அதன் மக்கள் திரளை மத, சாதி அடையாளங்கள் வழியாக தொகுத்துக் கொள்ளவில்லை. மாறாக, அனைத்துவிதமான மதவாதங்களையும் நிராகரித்த சமூக நீதி மற்றும் சமத்துவக் கொள்கையைத் தனது அடிப்படையாகக் கொண்டு அதைச் செய்தது. அந்த சமூகநீதியின் இந்துத்துவ மறுப்பு இஸ்லாமையும், கிறித்துவத்தையும், பௌத்தத்தையும் விமர்சனங்களோடு அவற்றின் மனிதநீதி கருதி தொகுத்துக் கொண்டது. இந்துத்துவத்தை மற்றமையாகக் கொண்ட திராவிட சிந்தனை பூமி இஸ்லாம்,பௌத்தம் உள்ளிட்ட சிந்தனைகளை அந்நியமாக்க முனையவில்லை. இதை இன்னும் எளிதாக்கியது. ஏற்கனவே இருப்பில் நிலவிவந்த இன, மொழி, அடையாளமும், கலாச்சார ஒருமைப்பாடும் இங்கு மற்றமையாக / எதிராக நிறுத்தப்படாதமை பிற மதசிந்தனைகளையும், மண்ணின் கலாச்சார ஓர்மை சார்ந்தே தம்மைத் தகவமைத்துக் கொள்ளும்படியான நல்வாய்ப்பிற்கு வழிகோலியது.

பெரியார் சிந்தனைகளின் வழிகாட்டுதலில் அண்ணாவும், கலைஞரும் அதனை அடுத்தடுத்த தளங்களுக்கு, அதாவது வெகுமக்கள் அரசியல் தளத்திற்கும் கொண்டு சென்றனர். பெரியாரின் சுயமரியாதை இயக்க காலந்தொட்டு மிலாது நபி மேடைகளை அலங்கரித்தவர்கள் திராவிடக்கட்சிக்காரர்கள். இன்னும் சொல்வதானால் மிலாது மேடைகள் திராவிட மேடைகளாகவே ஒளிர்ந்தன. மொழி, இன ஓர்மையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட இணைவு ஒற்றை வழிப் பாதையல்ல. பெரியாரின் உரிமை அவர்களை அணைப்பதாக மட்டுமில்லை, கடிந்து ஆலோசனை சொல்லவும் அனுமதித்தது. இந்த உறவு மற்றெதைச் செய்ததோ தெரியாது. உறுதியாக இஸ்லாமியரை ‘மற்றமையாக்கும்’ / எதிரியாக்கும் சாத்தியத்தை முற்றிலுமாக மறுதலித்தது. இன்றும் கூட முற்றிலுமாகத் தமிழ் அடையாளம் சார்ந்து மட்டுமே தங்களை முழுமையாக நிறுவிக் கொள்ளும் இஸ்லாமிய இளைஞர் குழாமின் பெரும் திரள் இருப்பொன்று உள்ளது என்பதுதான் திராவிட சிந்தனை வழங்கிய சமத்துவ சமூகநீதிக் கொள்கையின் பெருவெற்றி. சமீப காலங்களாக இஸ்லாமிய உலகளாவிய ஒற்றைக் கலாச்சாரம் எனும் போக்கின் சவால் இங்கும் ஊடுருவியுள்ளது. கவலைக்குரிய இந்தப் போக்கை இங்குள்ள இஸ்லாம் வெகுதூரம் அனுமதிக்காது என நம்பக் காரணங்கள் உள்ளன. தமிழ் நிலப்பகுதி சிறுபான்மையை ‘மற்றமை’ ஆக்காதது மட்டுமல்லாமல், அதனை தமிழ்த் ‘தன்னிலையின்’ பகுதியாகவே தகவமைத்துக் கொண்டுள்ளது. திராவிட / தமிழ் தேசியத்தின் ஆகப் பெரிய சாதனையென்றே இதனைக் கருதலாம்.

சமீபத்திய நேர்காணலொன்றில், பாஜகவின் கருத்தியலாளர் மற்றும் ஊடகச் செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். ராவ் அவர்களிடம் தென்னிந்தியாவில் பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சி மற்றும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புகள் பற்றிய கேள்வியொன்று முன்வைக்கப்பட்டது. அவரது பதிலில் கர்நாடகம் ஏற்கனவே சாத்தியமுள்ள மாநிலம், கேரளத்திலும் எங்கள் இருப்பு உள்ளது. முயன்றால் தெலுங்கானாவிலும், ஆந்திரத்திலும் காலூன்றி விடலாம். ஆனால் தமிழ்நாடு என்றும் மிகப் பெரிய சவால்தான், அதை வென்றெடுப்பதற்கான வாய்ப்புகள் வெகு வெகு குறைவு என்றார். அவரால், ஒரு இந்துத்துவ இந்தியா எனும் மேலாதிக்க சிந்தனையைக் கொண்ட நபரால், இந்தியாவில் தனது அடையாளத்தை கரைத்துக் கொள்ளாத தனித்துவமான இருப்பாக தமிழ்பூமி தொடர்வதற்கான காரணிகளை ஒருபோதும் கண்டடைய முடியாது. ஏனெனில் ஒரு தேசம் (இங்கு திராவிடம்) குறித்த கருத்தமைவு தன்னைத் தொகுத்துக் கொள்ள எதனைத் தனது மற்றமையாக கொண்டது என்பதே, அந்த தேசத்தின் தேசிய மனோபாவத்தை தீர்மானிப்பதாகிறது. திராவிடம் தனது மற்றமையாகக் கொண்டது சாதியப் படிநிலையை/ வர்ணத்தை, அடிப்படையாகக் கொண்ட ஆரிய / பார்ப்பனீய இந்துத்துவம் எனும் ஒடுக்கும் அடையாளம் என்பதை உணர்ந்தவர்கள், இந்த பூமியில் கால் பதிப்பதை கனவு காண மாட்டார்கள். திராவிடத்தின் / தமிழ் தேசியத்தின் அடிப்படையாக, அதன் தன்னிலையாக பன்மைத்துவம் தொடரும் வரை அது ஒருபோதும் சாத்தியமில்லை.