1990ஆம் ஆண்டு வெளி ரங்கராஜன் முழுக்க முழுக்க நாடகத்திற்காக மட்டுமே ஒரு சிற்றிதழ் தொடங்கப்போவதாக தெரிவித்தார். எந்த ஒரு துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் ஏற்கனவே பலர் ஈடுபட்டிருப்பார்கள். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், ஓவியம், இசை, சினிமா என்று எல்லாவற்றிலும் அநேகர் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் எவரும் நினைத்திராத முன்னோடிகள் இல்லாத ஒரு பத்திரிகை பிரிவு நாடக இதழ். அதற்குமுன் காற்று என்கிற பெயரில் ஒரு சிற்றிதழ் ஒரே இதழ் மட்டுமே வெளிவந்து முடங்கியது. முதலாவதாக ஒவ்வொரு இதழுக்கும் படைப்புகள் கிடைக்குமா என்பதே கேள்வியாக இருந்தது. நான் அவரை உற்சாகப்படுத்தவில்லை. ஆனால் நாடகவெளிமூலம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்கிற தொலைநோக்கு சிந்தனை அவரிடமிருந்தது. முதல் இதழிலேயே அதன் உள்ளடக்கம் மூலம் அதை வெளிக்கொணர்ந்தார். நாடகம் பற்றிய கட்டுரைகள், நாடகப்பிரதிகள், மொழிபெயர்ப்பு நாடகங்கள் இவையெல்லாம் இருந்தன. 1999 ஆம் ஆண்டு வரை நாற்பது இதழ்கள் வெளிவந்தன. சில சிறப்பிதழ்களும் அவற்றினுள் அடக்கம். அதற்கு சந்தா கட்டியவர்கள், கட்டாதவர்கள் என்கிற பாகுபாடின்றி அவர் நாடக ஆர்வலர்கள் அனைவருக்கும் அவற்றை அனுப்பி வைத்தார். எல்லா செலவுகளையும் அவரே ஏற்றுக்கொண்டார்.

நாடக வெளியின் சாதனைகள் என்று எவற்றைக் கூறமுடியும்? அது முன்னோடியான நாடக இதழ் என்பது அவற்றில் ஒன்று. நாடக ஆர்வலர்களை இணைக்கும் சக்தியாக அது செயல்பட்டது. தங்களுக்கான ஒரு மேடை அது என்கிற ஒட்டுதல் உணர்வுடன் நாடகக்காரர்கள் சொந்தம் கொண்டாடியதைப் பார்க்க முடிந்தது. நாடக நிகழ்வுகளை அது ஆவணப்படுத்தியது. ஒரு சினிமாப் படம் எப்போது வெளிவந்தது, அதில் பங்கேற்றவர்கள் யார்யார் என்கிற விபரங்களை நாம் பலவாறான தரப்புகளிலிருந்து அறிந்து கொள்கிறோம். ஆனால் ஒரு நாடகம் எப்போது முதன் முறையாக நடிக்கப்பட்டது, அதில் கலந்துகொண்ட கலைஞர்கள் யாவர் என்கிற தகவல்கள் நம்மிடையே கிடையாது. முதன் முறையாக நாடக வெளி காலக்குறிப்புகளைத் தந்தது. அது வெளிவந்த அந்தப் பத்து வருடங்களில் தமிழில் நிகழ்த்தப்பட்ட நாடகங்களுக்கான காலக்குறிப்புகள் தடையின்றிக் கிடைக்கின்றன. நாடகவெளியின் சாதனைகளில் இது முக்கியமானது. நாடக வெளி நின்ற பிறகு நாடக நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் இல்லாமல் போயின. நாடகம் பற்றிய சிந்தனைகள், நாடக செயல்பாடுகள் ஆகியவை நம்மிடம் இவ்வளவு இருக்கிறதா, அவற்றை நாம் ஏன் நினைத்துப் பார்த்ததில்லை என்கிற எண்ணம் நாடக வெளி இதழ்கள் வந்தபோது ஏற்பட்டது. என்னைப் பொறுத்தவரை தொண்ணூறுகளின் முக்கிய சிற்றிதழ் செயல்பாடாக நாடக வெளி வந்ததைத்தான் சொல்வேன். நாடக ஆர்வம் கொண்டிருந்த எல்லோருக்குமான வெளியாக அது இருந்தது. குழு மனப்பான்மை அதில் இல்லை. காரணம், ரங்கராஜன் குழு மனப்பான்மை கொண்டவராக இல்லை. நாடகத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்கிற அவரது எண்ணத்தின் பிரதிபலிப்பாக அது இருந்தது. நாடக வெளி நின்றாலும் அவரது நாடக செயல்பாடுகளாக நாடகம் பற்றி தொடர்ந்து கட்டுரைகள் எழுதியும் வருபவர் அவர். அவர் மட்டுமே என்றும் சொல்லலாம்.

மென்மையான சுபாவமும் அதற்கேற்றாற் போன்ற எழுத்து நடையும் உள்ளவர் என்பதாக அவரைப்பற்றிய ஒரு பொது பிம்பம் உள்ளது. ஆனால் அவர் நாடகம் பற்றிய தீவிரமான நிலைப்பாடுகளை உடையவர். தமிழ் நாடகம் உன்னதமடைய மேலும் கால அவகாசம் தரப்படவேண்டும் என்கிற எண்ணம் உடையவர். அதற்காக அவர் சமரசங்களை ஏற்பவர் என்று சொல்லமுடியாது. தகுதிக் குறைவான எந்த நாடகத்தையும் அவர் தூக்கிப் பிடித்ததில்லை. தீவிர அரசியல் பார்வையும் கொண்டவர். ‘தமிழில் தேவாரம்’, ‘உலகத்தமிழ் செம்மொழி மாநாடும் தமிழ்ப் படைப்புச்சூழலும்’, ‘தமிழ் போதனா முறை’ போன்ற கட்டுரைகளை அவரது அரசியல் பார்வைக்கான எடுத்துக்காட்டுதல்களாக குறிப்பிட விரும்புகிறேன்.

அகஸ்டோ போவல், பாதல் சர்க்கார் ஆகிய கலகக்கார நாடகக்காரர்களிலிருந்து புராதான கூத்துக் கலைஞர் கண்ணப்ப தம்பிரான் வரை அனைத்து வகை நாடகங்களையும் அவற்றின் நிகழ்த்துப் பரிமாணங்களை முன்வைத்துப் பாராட்டுகிற வெளி ரங்கராஜன், தான் நாடகங்களை இயக்கும்போது அவற்றிற்கான கதைக்களன்களுக்காக செவ்வியல் இலக்கியங்களை நாடிப்போகிறார். தனது நாடகங்களில் நடனம், இசை, ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தருகிறார். அவை மரபார்ந்த நடனம், இசை, ஆகியன. மரபின்மீது அவர் கொள்கிற லயிப்பு, அவரை அவரது முந்தைய செயல்களிலிருந்து முரண்படுத்துவதாக இல்லாது பார்வையாளர்கள் தாங்களாகவே அவை காலங்காலமாக எழுப்பும் வினாக்களையும் அவை தரும் அமைதியையும் நோக்கி செலுத்துவதாக உள்ளது.

ஆண்டாள் நாடகத்தை அவர் மேடையேற்றிய தருணம் ஆண்டாள் பற்றிய சர்ச்சைகள் மிகுந்ததாக இருந்தது. எனவே அவரது ஆண்டாள் எத்தகைய மறுவாசிப்பிற்கு தங்களை உட்படுத்தப்போகிறது என்கிற எதிர்பார்ப்புடன் சென்ற பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அது ஆண்டாள் பாசுரங்கள் இசைக்கப்பட்ட நடன நிகழ்வாகவே இருந்தது. ஆண்டாள் என்கிற செவ்வியல் பிரதியைக் காலத்துக்கேற்றவாறு புனைவதில் அவருக்கு நம்பிக்கையில்லை. எக்காலத்திற்கும் ஆண்டாள் பொருத்தமானவள் என்கிறபோது ஒரு சர்ச்சையை முன்னிட்டு அவரது கவிதைகளை இலக்கு நோக்கியதாக மடை மாற்றம் செய்வதில் அவருக்கு உடன்பாடில்லை. செவ்விலக்கியங்களின் உள்ளார்ந்த பலத்தை அவற்றின் மூலத்தில் உள்ளவாறே அறிவதுதான் என்கிற நிலைப்பாடு அவருடையது.
அவரது இயக்கத்தில் வெளிவந்த கு.ப.ரா.வின் ‘அகலிகை’ என் கணிப்பில் அவரது சிறந்த நாடகம். சென்னை அல்லயன்ஸ் பிரான்ஸே அரங்கில் அந்நாடகம் நடைபெற்று முடிவுற்றபோது அதில் ராமனாக நடித்த மாணவர் ரமேஷ் பார்வைத்திறன் குன்றியவர் என்று தெரிவிக்கப்பட்டது. பார்வையாளர்களால் நாடகம் நடந்த போது அதை எவராலும் உணர முடியவில்லை. ராமனின் கால் பட்டு அகலிகை உயிர்த்தெழுகிறாள். ராமனின் கண்ணுக்கு மட்டுமே புலப்படுபவளாக அகலிகை பாத்திரம் படைக்கப்பட்டிருப்பதாக ரங்கராஜன் கருதினார். ‘ஒரு இயல்பான பெண் இருப்பை அங்கீகரிக்க இந்த சமூகத்திற்குப் புறக்கண் தாண்டிய ஓர் அகப்பார்வை தேவை என்று கு.ப.ரா. வலியுறுத்துவதாக எனக்குத் தோன்றியது. அதனால் அந்தப் பாத்திரத்திற்குப் புறப்பார்வை குன்றிய அந்த மாணவர் அதிகக் கவிதை நியாயம் கொண்டவராகத் தோன்றினார்’ என்று தனது நடிகர் தேர்வு குறித்து ரங்கராஜன் எழுதுகிறார். மாற்றுத்திறனாளியின் வாயிலாக ராமாயணக்கதையை மாற்று நிகழ்வாக்கினார்.

‘நான் ஒரு நாடகக்காரன். இசையையும் நடனத்தையும் நாடகத்தின் அங்கமாக நினைப்பவன். சிறு வயதில் கோவில்களில் நான் கேட்ட இசையும் நான் உலவிய பிரகாரங்களும் நான் சந்தித்த நடனப்படைப்பாளிகளும், வாசித்த இலக்கியங்களும் தான் எனக்குள் நாடகத்தை விதைத்திருக்கின்றன. கவனத்தைக்கோரி நிற்கும் எண்ணற்ற மௌனக்குரல்களிலிருந்தே நான் நாடகங்களுக்கான உத்வேகங்களைப் பெறுகிறேன்.’ இது ரங்கராஜனின் வாக்குமூலம்.

கோவில் கலாச்சாரத்தை பக்திக்கு அப்பாற்பட்ட மனநிலையுடனும் அழகியல் உணர்வுடனும் விமர்சனத்துடனும் அவர் பார்க்கும் பார்வை தஞ்சை பெரிய கோவிலும் தேவதாசி மரபும் என்கிற கட்டுரையில் துலக்கம் பெறுகிறது. திருமணம், குடும்பம் ஆகிய கட்டுண்ட அமைப்புகளிலிருந்து விடுபடும் பெண்களின் சுதந்திரம் எவ்வாறு பழிப்பிற்கும் அவதூறுக்கும் இலக்காகிறது என்பதை தேவதாசி மரபினைத் தொடர்ந்து இன்றைய கலையுலகப் பெண்கள் எதிர்நோக்கும் நிலைகளுடன் நீட்டித்துப் பார்க்கிறார்.
வெளி ரங்கராஜன் பரந்த வாசிப்பும் அவற்றின்மீதான விமர்சன நோக்குமுடையவர். சிறந்த கட்டுரையாளர். அறிவார்ந்த விவாதங்களை எழுப்புவதுடன் நெகிழ்வான உணர்வுகளையும் அவரது எழுத்துகள் தோற்றுவிக்கின்றன. பிரமிளை மரணப் படுக்கையில் சி.சு. செல்லப்பா சந்தித்தபோது அதை உடனிருந்து பார்த்த வெளி ரங்கராஜன் அக்கணங்களைக் கனத்த வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். சி.சு. செல்லப்பாவை பிரமிள் கடுமையாக விமர்சித்த பின்னணியில் அந்தக் கடைசி சந்திப்பு நிகழ்ந்தது. ஆனால் அவர்கள் இருவரும் அவற்றையெல்லாம் கடந்து தங்களது நட்பின் ஆதாரங்களைப் பகிர்ந்து கொண்டனர். அதைப் பற்றி ரங்கராஜன் சுருக்கமாக ஒரே வரியில் எழுதுகிறார். ‘ஒரு கொடிய யதார்த்தத்தின் பின்னால் கனவொன்று சுற்றிப் படர்ந்தது போலிருக்கிறது.’ எளிதில் மறக்கவியலாத வரி.

நகுலன், மௌனி, பிரமிள், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி போன்றோரது படைப்புகளைப்பற்றி அவர் எழுதியுள்ள சுருக்கமான கட்டுரைகள் செறிவானவை. அவரது எழுத்துகள் நாடகம் பற்றி மட்டுமின்றி பலவற்றையும் கவனப்படுத்துவதாக உள்ளன. சினிமா விமர்சகராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். எனது தேர்ட் தியேட்டர் என்கிற பாதல் சர்க்கார் நாடகங்கள் பற்றிய ஆவணப்படத்தயாரிப்பிற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

அவருக்குத் தரப்பட்டுள்ள மா.அரங்கநாதன் இலக்கிய விருது அவரது வாழ்நாள் சாதனை விருது. இதுவரை அவரது சாதனைகளுக்கான விருது. அவரது சாதனைகள் இத்தோடு முடிவதில்லை. அவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
(2019ஆம் ஆண்டிற்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது, வெளி ரங்கராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருடன் இந்த விருதினைப் பெறும் மற்றொரு எழுத்தாளர் யூமா வாசுகி)