இந்திய அளவில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து பெரும்பான்மை பலத்துடன் பிஜேபி ஆட்சியமைத்திருக்கிறது. தேசியக் கட்சியான காங்கிரஸ் வெறும் ஐம்பதுக்குக் கூடுதலான இடங்களுடன் சுருங்கிப் போயிருக்கிறது. உண்மையாகச் சொன்னால் இது யாரும் எதிர்பாராத வெற்றி. குறிப்பாக, ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை கொண்டிருந்த பெரும்பான்மை மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும், தொங்கு பாராளுமன்றம் வரும் என்ற அபிலாஷைகளை அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோதே, மீண்டும் பாஜக வந்துவிடும் என்பது போன்ற உரையாடல்களை அவர்கள் அச்சத்துடன் கவனித்தார்கள். எதிர்பார்ப்பிற்கும், நிஜத்துக்குமான இடைவெளி கூடுதலாக இருந்தது அப்போதே வெளிப்படையாகவே தெரிந்தது.

ஆயினும் கூட தமிழ்நாடு இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்குத் தனது ஜனநாயகப் பண்பை வெளிப்படுத்தியிருக்கிறது. வெறுப்பு அரசியலுக்கு எதிராகவும், மதத்தின் அடிப்படையிலான பிளவுபடுத்தும் செயல்திட்டங்களுக்கு எதிராகவும் தமிழக மக்கள் தீர்க்கமாக வாக்களித்திருக்கிறார்கள். தமிழகத்தில் வீசியிருப்பது மத்திய அரசுக்கு எதிரான அலை. இந்திய எதார்த்தத்துடன் பொருத்திப் பார்த்தால் மோடிக்கு எதிரான அலை. தமிழக மக்கள் மோடியை நிராகரித்திருக்கிறார்கள். இப்படிச் சொல்வதன் பொருள் ஒரு தனிப்பட்ட கட்சியின் தலைமையை நிராகரித்திருக்கிறார்கள் என்பது அல்ல. மாறாக, மோடியிசம் என்று சொல்லப்படும் சகிப்புத் தன்மையற்ற மூர்க்கத்துக்கு எதிராக அவர்கள் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். இல்லை, பாஜக தலைமையிலான கூட்டணி பரவலான வாக்குகளைப் பெற்றிருக்கிறது, அதன் பொருள் பாஜக இங்கு நிராகரிப்படவில்லை என்ற வாதத்தை யாராயினும் முன் வைப்பார்களாயின் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, தினகரன் வாங்கியிருக்கும் வாக்குகளைப் பாருங்கள் என்பதுதான். மக்கள் மிகத் தெளிவாக தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வாக்குகள் சிதறக்கூடாது என்பதே வெகுமக்களின் எண்ணமாக இருந்திருக்கிறது.

இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்த திமுகவின் நேர்மறையான அணுகுமுறைகளை நாம் பாராட்டியே ஆகவேண்டும். மேலும் இந்திய அளவில் இத்தகைய அணுகுமுறை இல்லாததால் ஏற்பட்டிருக்கும் இழப்பு தெளிவாகத் தெரியும்போது இது குறித்து விவாதம் முக்கியத்துவம் அடைகிறது. பிரதானமாக இரண்டு காரணிகள். ஒன்று திமுக கூட்டணி, காங்கிரசுக்கு ஒதுக்கிய பத்து இடங்கள். இரண்டாவது, மிக வெளிப்படையாக ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய திமுகவின் அணுகுமுறை. இந்த இரண்டு முஸ்தீபுகளும் ராஜதந்திரரீதியில் சரிதானா என்பது போன்ற விவாதங்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, காங்கிரசுக்கு அதிக இடங்களை திமுக ஒதுக்கிவிட்டது என்பது போன்ற அதிருப்திகள். இப்போதும் அந்த விவாதங்கள் தொடர்கின்றன. நான் திமுகவின் இந்த செயல்திட்டத்தை மிகச்சரியான அணுகுமுறை என்றே அவதானிக்கிறேன். இப்போதும் கூட.

முதலாவதாக பிஜேபி ஒரு பிரமாண்ட கனவை முன்னிறுத்தும் அரசியல் சார்ந்த பிரச்சார உத்தியைக் கட்டமைக்கிறது. அதற்கு எதிராக காங்கிரசிடம் இருந்த யுக்தி என்ன என்று பார்த்தால் அப்போது ஒன்றுமே இல்லை. திமுகதான் தனது வெளிப்படையான அறிவிப்பின் வழியாக, அவர்களுடன் பொருதும் சொல்லாடலை முன்வைக்கிறது. இதை மாயாவதி, அகிலேஷ் யாதவ், மமதா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் மிகவும் தவறான முறையில் எதிர்கொண்டார்கள். இந்த கோஷத்தை முன்னெடுக்காமல் விட்டதன் வழியாக “வலுவான எதிர்க்கட்சிகள்” எனும் பிம்பத்தைக் கட்டமைக்கும் வாய்ப்பை அவர்கள் தவறவிட்டார்கள்.

ராகுலின் பிரதமர் பதவிக்கு எதிரான தங்களது அதிருப்திகளை அவர்கள் வெளிப்படையாக முன்வைத்தது பிழையாகிப்போனது. அது மக்கள் மனதில் ஒரு எதிர்விளைவையே உண்டாக்கியிருக்கிறது. “கட்டுப்பாடான ஒற்றைத் தலைமை”, “ஒரே கட்சி ஆட்சி” போன்ற கனவுகளைக் குறிப்பிட்ட அளவுக்கு மக்கள் மனதில் ஊன்றுவதில் பிஜேபி வெற்றியடைந்திருக்கும் சூழலில், பிராந்தியக் கட்சிகளின் இந்த முணுமுணுப்பு மக்களிடம் தவறான சமிக்ஞையை ஏற்படுத்திவிட்டது. மக்கள் சந்தேகம் கொண்டுவிட்டார்கள். அது தேர்தலில் பிரதிபலித்திருக்கிறது.

இந்த எனது அனுமானம் எந்த அளவுக்கு சரி என்பதை தமிழக வாக்காளர்கள் வாக்களித்திருக்கும் விதத்தைப் பார்த்தால் தெரியும். ஸ்டாலினின் அந்த முன்னெடுப்பு பெருமளவில் களத்தில் நேர்மறையாகப் பங்காற்றியிருக்கிறது என்றே நான் புரிந்துகொள்கிறேன். “நீங்கள் மோடியை எதிர்ப்பதற்கு ஒரு உறுதியான திட்டத்துடன் இருக்கிறீர்களா…” என்பதை மக்கள் உற்றுப் பார்க்கிறார்கள். தமிழகத்தில், மோடியை எதிர்ப்பதற்கு, இந்த வலதுசாரி அரசை அகற்றுவதற்கு காங்கிரஸ்தான் சரியான தேர்வு என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். கலங்கலாக இருந்த தங்களது கனவை முழுமையாக்கிக்கொள்ள இந்த கோஷத்தை அவர்கள் நம்பியிருக்கிறார்கள். அதனால்தான் பெருவாரியான வாக்குகளை அவர்கள் இந்தக் கூட்டணிக்கு சிதறாமல் அளிக்க முன்வந்திருக்கிறார்கள்.

ஆனால் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் இருந்த பிராந்தியத் தலைமைகள் வேறு வேறு கணக்குகளுடன் இந்தத் தேர்தலை எதிர்கொண்டன. மக்கள் அவர்களது கணக்கீட்டை நம்பவில்லை என்பதாகவே தேர்தல் முடிவுகள் சொல்கின்றன.

ஒருவிதத்தில் பாஜகவைப் பாராட்டியே ஆகவேண்டும். தேர்தல் மேலாண்மையில் அவர்கள் மிக உயரிய திட்டமிடலையும் கட்டமைப்பையும் கொண்டவர்களாக மாறியிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அவர்களுக்கு ஆசான் காங்கிரஸ் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு காலத்தில் காங்கிரசிலும் கூட அட்டகாசமான Poll Managers உண்டு. அவர்களது கடந்த கால சாதனைகள் பிரமிப்பூட்டக்கூடியவை. ஆனாலும் அவர்கள் ஏன் தேக்கமடைந்திருக்கிறார்கள், இந்தத் தோல்விக்குப் பின்னால் அவர்களது திட்டமிடலில் இருந்த குறைபாடுகள் என்ன என்பது போன்ற விஷயங்கள் இனிமேல்தான் வெளிச்சத்துக்கு வரும். ராகுலின் ராஜினமா, ராஜினாமாவைக் கட்சி ஏற்பதில்லை போன்ற சடங்குப் பூர்வமான கிளுகிளுப்புகளைத் தாண்டி, அது கவனம் செலுத்தவேண்டிய உண்மையான புள்ளிகளை நோக்கிக் கட்சி நகரவேண்டும். மேலும் இந்த ஒரு தோல்வியை அடிப்படையாகக் கொண்டு, “காங்கிரசின் அரசியல் அவ்வளவுதான்…” என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான அச்சமும் எனக்கில்லை. கட்சி திட்டவட்டமான பரிசீலனைக்குத் தயாராகவேண்டும் என்பதே நான் சுட்ட விரும்புவது. அதை அவர்கள் செய்வார்கள் என்பதும் உண்மைதான்.

வலிமையான ஒற்றைத் தன்மை உள்ள மத்திய அரசு எனும் கனவு மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்திருக்கிறது என்று மேலே சொல்லியிருக்கிறேன். பிஜேபியின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என்பது எனது அவதானம். அப்படி ஒரு வழிமுறையை நோக்கி காங்கிரஸ் நகர்வதைத் தாண்டி இப்போதைக்கு அதற்கு வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது. அப்படி ஒரு செயல்திட்டத்தை அது வகுத்துக்கொள்ளாத வரை, வலுவான பிராந்தியக் கட்சிகளுடன் காங்கிரசால் பேரம் பேச முடியாது. உத்தரப் பிரதேசம் சிறந்த உதாரணம்.

எண்ணிக்கை பலம் வாய்ந்த மாநிலங்களில் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. ராகுல் அவரது அமேதி தொகுதியில் ஸ்ம்ருதி இராணியிடம் தோற்கிறார். ஆனால் சோனியா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ரேபரேலியில் தனது வெற்றியைத் தக்கவைக்கிறார். ஆனால் இன்னும் ஆழமாகப் பார்த்தால் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் எந்த அளவுக்குத் தேய்ந்திருக்கிறது என்பது தெரியும். சில தொகுதிகளில் இருபதாயிரம் முப்பதாயிரம் வாக்குகள் கூட வாங்கியிருக்கிறது காங்கிரஸ். ஒரு காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் வெல்வதன் வழியாகவே தனது ஆட்சியைத் தொடர்ந்துகொண்டிருந்த கட்சி அது.

ஆனால் இன்று நிலைமை தலைகீழாகப் போயிருக்கிறது. அகிலேஷும், மாயாவதியும் கூட்டணியில் உங்களுக்கு இரண்டு இடங்கள்தான் தருவோம் என்று சொல்கிறார்கள். வேறு வழியில்லாமல் தனித்து நிற்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது காங்கிரஸ். அது தேர்தலில் பிரதிபலிக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், மாயாவதி மற்றும் அகிலேஷுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்திருந்தால் கூட, பிஜேபி இப்போது வாங்கியிருக்கும் இடங்களை விட ஐந்து இடங்களைக் குறைத்துப் பெற்றிருக்கும் அவ்வளவுதான். அதைவிட பெரிய சேதாரம் பிஜேபிக்கு உண்டாகியிருக்காது. ஆனால் அந்தக் கூட்டணியின் மூலம் உத்தரப் பிரதேசம் இந்தியாவுக்குச் சொல்லியிருக்கும் செய்தி வேறாக இருந்திருக்க முடியும். தமிழகக் கனவுடன் சேரும்போது அது விரிந்த அளவிலான பரப்பை எட்டியிருக்கும்.

இப்படி கற்பனை செய்து பாருங்கள். தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் என்ன செல்வாக்குடனா இருக்கிறது? இங்கும் கூட கூட்டணி பலத்தில் வெல்லும் கட்சிதானே அது. ஆனாலும் கூட தங்களது கூட்டணியின் பிரதம வேட்பாளர் ராகுல் என்று ஸ்டாலின் அறிவிக்கிறபோது அதற்கு ஒரு பெறுமதி வருகிறதுதானே. அதை மாயாவதியும் மமதாவும் செய்திருந்தால், இவ்வளவு வெளிப்படையாக இல்லாவிட்டாலும் கூட, அது இந்திய அளவில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றே நினைக்கிறேன்.

ஏனென்றால் இப்போதும் கூட இந்திய அளவில் மதச் சார்பற்றவர்களின், சிறுபான்மையினரின் நம்பிக்கைக்குரிய கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது என்பதே உண்மை. இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பது என்ற செயல் திட்டத்துடன் நகரும் பாஜக, கடந்த இரண்டு தேர்தல்களிலும் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பது நிஜம்தான்.

உதாரணத்துக்கு மொத்த மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 41% இருக்கும் உத்தரப் பிரதேசத்தின் முஸாஃபர் நகரில், பிஜேபி 5,73,780 வாக்குகள் பெற்றிருக்கிறது. ஆனால் இந்தத் தொகுதியில் வெறும் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அக்கட்சியால் ஜெயிக்க முடிகிறது. அத்தொகுதியில் இரண்டாமிடத்தில் இருக்கும் ராஷ்டிரிய லோக்தள் கட்சி 5,67,254 வாக்குகள் பெற்றிருக்கிறது. இந்துக்களும் முஸ்லிகளும் சம அளவில் இருக்கும் இடங்களில் வாக்குகள் பிரியும் தன்மையில் இந்த எண்ணிக்கை ஆதிக்கம் செலுத்துகிறது.

ஆனால் இந்துக்கள் 71% இருக்கும் காஸியாபாத்தில் ஒன்பது லட்சத்துக்கு மேலான வாக்குகளை வாங்குகிறது பிஜேபி. அடுத்த இடத்தில் இருக்கும் சமாஜ்வாடி கட்சி நான்கரை லட்சம் வாக்குகள் வாங்கியிருக்கிறது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வாங்கியிருக்கும் வாக்குகள் ஒரு லட்சத்துக்கு மேல். இதுவொரு இறுதியான ஆய்வு கிடையாது. மிகவும் மேலோட்டமான எனது பார்வைதான்.

ஆனால் இந்துக்கள் vs முஸ்லிம்கள் எனும் அரசியல் வழிமுறையில் பிஜேபி குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்திருக்கிறது என்பதுதான் இந்தப் புள்ளி விபரங்களின் வழியாக நாம் அடையும் முதல் கட்ட புரிதல். வேறு என்னென்ன காரணிகள் அங்கு செயல்பட்டன என்பது குறித்த விரிவான தகவல்கள் இனிமேல்தான் வரத் தொடங்கும். ஆக, இந்தக் கணக்கீட்டைக் களத்தில் எதிர்கொள்வது மிகவும் சிக்கலானதும் பெரும் உழைப்பைக் கோருவதுமானது என்பதே நான் சுட்ட விரும்புவது. ஆனால் அதுவொன்றும் இயலாதது அல்ல. அந்த அழகிய கனவை மிச்சம் வைத்துக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு இந்தியனுக்கும் அந்த வழியில் நம்பிக்கையூட்டும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பதுதான் இங்கு நான் கவனப்படுத்த விரும்புவது. அது எப்படி என்று பார்க்கலாம்.

தமிழகத்தில் உருவாகி நிலை பெற்றிருக்கிற சமூக நீதி சார்ந்த சமத்துவ அரசியலுக்கு இந்த வெற்றியில் பெரும் பங்கு இருக்கிறது. மேலும் எவ்வளவு சிக்கலான விவகாரங்கள் என்றாலும் அவற்றை மக்கள் முன்னால் வைத்து உரையாடுவது என்பதை திராவிடக் கட்சிகள் தங்களது வழிமுறையாகக் கொண்டிருக்கின்றன. பாஜகவின் பெரிய தேர்தல் வெற்றிக்குப் பின்னான இந்த சூழலில், இங்கு கைகொள்ளப்பட வேண்டிய அரசியல் வழிமுறைகள் என்ன என்று பரிசீலிக்கும்போது, மிகவும் அபூர்வமான நேர்மறையான ஒரு அரசியல் தமிழத்தில் தொழிற்படுகிறது என்கிற முடிவுக்கே நான் வந்தடைகிறேன்.

வலதுசாரிகளுக்கு எதிரான திராவிட அரசியல் என்பது மக்களிடம் தங்களது தரப்பை விளக்குவது, அவர்களது நம்பிக்கையைப் பெறுவது என்பதாகவே இருக்கிறது. அது இங்கு உள்ளே நுழைய முயலும் வலதுசாரிகளுக்கு ஒருவித நிபந்தனையை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் அவர்களோ இதற்குப் பழக்கமில்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்திய அளவில் அவர்களது அரசியல் திரட்சி என்பது, வன்முறை அல்லது எதிர் வன்முறை என்பதன் வழியாகவே உருவாகி வந்திருக்கிறது.

தமிழக அரசியலின் இந்தப் பிரத்யேக அரசியல் பண்புதான், பிரித்தாளும் அரசியலுக்கு எதிரான நிலைபாடாகக் கனிகிறது. அதுதான் மாற்றுக் கனவை முன்வைக்கும் சாத்தியத்தை பிரதான கட்சிக்கு வழங்குகிறது. இங்கு சாத்தியப்பட்ட பெரிய வெற்றி இந்த அழகிய ஒருங்கிணைவின் விளைவே. இதை இந்திய அளவில் விரிவுபடுத்துவதன் சாத்தியங்கள் குறித்து விவாதிப்பதே தேசியக் கட்சிகளின் முன்னுள்ள கடமை.

மட்டுமல்லாது, தமிழக மக்களின் அரசியல் உணர்வு வெறும் சித்தாந்த உரையாடல் என்பதோடு மட்டும் நிற்காமல், மக்கள் நலன் எனும் கருத்தை நிபந்தனையாக்கும் பண்பையும் கொண்டதாக இருக்கிறது. இங்கு நிலை பெற்றிருக்கும் திராவிட அரசியலுக்கு அது சாதித்த மக்கள்நலத் திட்டங்களுக்குப் பங்குண்டு. அந்த வகையில் தமிழக வாக்காளர்கள் ஒருவித Sophesticated மக்கள் திரள் என்றே நான் உருவகிக்கிறேன். அதனால்தான் அவர்களிடம் உட்புக வெறும் மதம், சாதி என்பதைத் தாண்டி ஓரளவுக்குத் தரமான செயல்திட்டங்கள் தேவைப்படுகின்றன. இந்திய அளவில் தோற்றிருக்கும் பிராந்தியக் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டிய காரணிகள் மட்டுமே இவை. இப்படி சொல்வதை இங்கு நிலவும் அரசியலைப் புனிதப்படுத்துவது என்ற அளவில் புரிந்துகொள்ளக்கூடாது. ஆனாலும் நாம் பெருமிதப்பட காரணங்கள் இருக்கின்றன என்பதை மறைத்துக்கொள்ள வேண்டியதில்லை. இந்தத் தேர்தல் வெற்றியில் நாம் ஆசுவாசமடைய இப்படியும் கூட ஒரு காரணம் இருக்கிறதுதான்.

ஜனநாயத்தின் பிரதான அம்சம் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் அல்ல. உரையாடல்களின் வழியாக அதிகாரத்தை நெறிப்படுத்தும் பண்பைத் தக்கவைத்துக்கொள்ளும் அதன் எத்தனத்திலேயே இருக்கிறது. அந்த வகையில் தமிழகப் பிரதிநிதிகளுக்குப் பெரிய பொறுப்பு இருக்கிறது. அது ஆள்பவர்களுக்கு நிகரான பொறுப்பு. பிரித்தாளும் செயல்களின் வழியாக அதிகாரத்தை நிறுவும் அமைப்பு ஆட்சிக்கு வருகிறபோது எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் சுமை வருகிறது. அதை நேர்மறையாக எதிர்கொள்வதே வாக்களித்தவர்களுக்கு அவர்கள் செலுத்தும் நன்றி!