முதலில் இந்த ‘ஒரே’ குறித்த இந்துத்துவ சனாதனத்தின் ‘பாசிசப் பித்து’ பற்றி யோசிக்கலாம். அடிப்படையில் இந்திய பன்மைச் சமூகத்தின் அத்தனை நம்பிக்கைகளையும் ‘இந்து’ எனும் ஒற்றை அடையாளத்தில் அடைப்பதில் முனைப்பும் இருப்பும் கண்டதுதான் இந்த இந்துத்துவப் பாசிசம். பாசிசத்தின் தீராத நோய்க்கூறு இந்த ‘ஒற்றை’. இந்த ‘ஒற்றை’ எனும் சொல் ஒற்றுமை என்பதன் சாயலில் இருப்பதான பிரமையை உருவாக்கும் எதிர்நிலைக் கருத்தமைவு. ஒற்றுமை என்பதும் ஒருமை என்பதும் எதிர்வுகள். ஒற்றுமையின் நெகிழ்வை அழித்தால் மட்டுமே ஒருமை அல்லது ஒற்றை சாத்தியமாகும். பொதுவாக முன் வைக்கப்படும் ‘இந்துத்துவப் பெரும்பான்மை’ என்பதுகூட அதனுள் பல நம்பிக்கைச் சிறுபான்மைகளை நசுக்கி அழித்து உருவாக்கப்பட்ட ஒன்றுதான். இந்துத்துவப் பெரும்பான்மையின் அதிகாரம் அதன் தொகுதியாக அடைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை.அதன் அதிகாரத்தை தமதாக்கிக் கொள்ளும் அதன் தலைமை ஏற்கும் சனாதனக் கூட்டத்தின் சதிச்செயலே இந்த ‘ஒற்றை’. அதனை இன்னொரு பெயராலும் அழைக்கலாம். அதுதான் பார்ப்பனீய / பனியா கூட்டணி. இந்தக் கூட்டணியின் நிரந்தர ஒவ்வாமை மக்களாட்சி. இவர்களால் அழித்தொழிக்க இயலாத, மக்களாட்சியின் இன்றியமையாத கூறான ‘அனைவருக்குமான வாக்குரிமை’ (Universal Franchise) வழங்கும் எளியோருக்கான அதிகாரத்தை ஒடுக்கும் முனைப்பின் ஒரு முயற்சியே ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’.

இந்திய அரசமைப்புச் சட்டமே ஒரு குழப்பமான, தெளிவற்ற வடிவம். 1935ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை, தேவைக்கேற்ற வகையில் ஒருசில மாறுதல்களை மட்டுமே செய்து உருவாக்கப்பட்ட சட்டவடிவம் அது. இந்திய ஒன்றியத்தின் மாதிரி உலகின் மக்களாட்சிகளில் வினோதமான வடிவம் கொண்டது. ஒரு அரசமைப்புச் சட்டமே இன, மொழி,கலாச்சார பன்மைத்துவத்தை ஒடுக்கிய அபூர்வம். இந்தியக் கூட்டாட்சி என்பதே பொய்மை. இறையாண்மை மிக்க இந்திய தேசம் ஒரு அரைகுறை கூட்டாட்சி(QUASI FEDERAL) . இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால், அரைகுறை கூட்டாட்சி வடிவமும், உள்ளார்ந்த அளவில் மையத்தில் அதிகாரம் குவிக்கப்பட்டதுமாகும். Quasi federal in form and Unitary in Spirit). இந்த வடிவை இன்னும் இறுக்கமாக்கி முற்றிலுமாக கூட்டாட்சி எனும் குறைந்தபட்ச பூச்சையும் சுரண்டிவிடுவதே இந் ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்ற முன்னெடுப்பு.

பிரதமர் மோடியின் ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்ற முழக்கம் இந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியின் போக்கு குறித்த ஒரு முன்னோட்டமே. அதாவது இந்த ஐந்து ஆண்டுகளில், ஏற்கனவே ஊனமான இந்திய அரசியலமைப்புச் சட்டம், பல பலமான காயங்களுக்கு உள்ளாகப் போகிறது என்பதன் அறிகுறி. மோடியின் ‘வேலைகளை’ தொடராதவர்களுக்கான ஒரு சின்ன பின்னோட்டம். பிரதமர் மோடி ஏதோ இந்தமுறை தான் முன்வைக்கும் திட்டமெனக் கருதவேண்டாம். சென்றமுறை வென்று நாடாளுமன்றம் நுழைந்தவுடன் முன் வைக்கப்பட்டதுதான் இந்த நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்குமான ஒரே நேரத்திலான தேர்தல் திட்டம். அநேகமாக மோடி பிரதமராக பொறுப்பேற்ற ஆட்சி அமைத்த முதல் நாடாளுமன்றக் குழு ஒரே நேரத்தில் தேர்தல் என்ற திட்டம் தொடர்பிலானதுதான். காங்கிரஸ் மேலவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான குழு 2014ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியில் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் பலவிதமான அமர்வுகளை நடத்தி, தேசிய மாநிலக் கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்டு, தேர்தல் ஆணையம் மற்றும் சட்ட ஆணையம் ஆகியவற்றின் கருத்துகளைக் கேட்டு தனது அறிக்கையை 2015 ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி தனது சமர்ப்பித்தது.

இந்த நாடாளுமன்றக் குழு அறிக்கை மீதான விவாதக் குறிப்புகளைக் காண முடியவில்லை. ஆனால் இந்தக் கருத்து தொடர்பான எதிர்வினைகள் ஆங்காங்கு பொதுவெளி விவாதங்களில், ஊடகப் பத்திகளில் வெளிவந்தது. ஆனால் அரசின் மேல்நடவடிக்கை ஏதுமில்லை என்பது தெரிகிறது. அதற்குள்ளாக முந்திக் கொண்ட அதி அவசரமான கருப்புப்பண ஒழிப்பு பணமதிப்பிழப்பு நடவடிக்கை இதனை ஓரங்கட்டி விட்டிருக்கக் கூடும். அதேபோல ‘ஒரு தேசம் ஒரு வரி’ என்ற இன்னொரு ‘ஒற்றையான’ ஜி.எஸ்.டி. வேறு மோடியின் கவனத்தைக் கவர்ந்திழுத்து விட்டிருக்கக் கூடும். எனவேதான் இந்த ரவுண்டுக்கான முதல் அஜெண்டாவாக ‘ஒரே தேசம் ஒரே தேர்தலை’ களமிறக்கி விட்டிருக்கிறார். மோடியின் ஆகப் பிரபலமான மூர்க்கம் தெரிந்த நமக்கு இந்தமுறை இதைக் கொணர்வதில் அவர் காட்டப் போகும் வேகம் தெரியவே செய்கிறது. ஆனால் இந்த அவதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் (INDIAN CONSTITUITION),, மக்கள் பிரதிநிதித்துவ விதிகளிலும் (Representation of people act) உருவாக்கப் போகும் பேராபத்தான மாற்றங்களே அச்சமூட்டுபவை.

முதலில், இந்தியத் தேர்தல் ஆணையங்கள் உருவான காதையையும், அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையங்களின் வரன்முறைகளையும், அதற்கான அதிகார வரம்புகளையும் பார்க்கலாம். அதற்கும் பிறகு இந்த ஒரே தேர்தல் தொடர்பிலான நாடாளுமன்றக்குழு அறிக்கை, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை, சட்ட ஆணையத்தின் கருத்துரைகள் ஆகியவற்றைப் பார்க்கலாம்… இந்திய அரசமைப்புச் சட்டம் உருவானபோது, இந்தியத் தேர்தல்களை நடத்துவதற்கென இரண்டுநிலை ஆணையங்களே முன்வைக்கப்பட்டது. அதாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தலை நடத்துவதற்கான ஆணையம் ஒன்று, மாநிலத் தேர்தல்களை நடத்துவதற்கான ஆணையங்கள் மாநில அளவில் என்பவைதாம் அவை. ஆனால் சட்டவடிவம் இறுதி செய்யப்பட்ட போது கூட்டாட்சி (Federal) என்பதனை பலவீனமாக்கும் வேலை மும்முரமானது. அதிகாரங்களை மையத்தில் குவிப்பதையே கவனமாகக் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அவை விவாதங்களே அதற்கான மெய்சாட்சி. அந்த விவாதங்கள் எந்தவித ஒளிவுமறைவுமின்றி இந்தியா என்ற ‘கட்டமைக்கப்பட்ட தேசத்தை’ நிர்மானிக்க ஒழிக்கப்பட வேண்டியது கூட்டாட்சி தத்துவமும், மாநிலங்களின் உரிமை மற்றும் அதிகாரம் ஆகியவையே என்பதில் தெளிவாக இருந்தது. அண்ணல் அம்பேத்கர் உட்பட ஆட்சியாளர்கள் அனைவரும் அதை வெளிப்படையாகவே அறிவித்தார்கள். இஸ்லாமிய பாகிஸ்தான் எனும் எதிரி உருவாக்கம் அதனை எளிதாக்கியது. எனவே ஒன்றிய அளவிலான ஒற்றைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரத்தைப் பெற்றது. ஆனால் 1935ஆம் ஆண்டின் பிரிட்டீஷ் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இரண்டு தேர்தல் ஆணையங்கள் என்ற கருத்தாக்கத்தை முற்றிலுமாக நிராகரித்து விட்டதாகத் தோன்றக்கூடாது என்பதற்காக மாநில அளவிலான தேர்தல் ஆணையமும் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் பொறுப்பு அன்று ஸ்தல ஸ்தாபன அமைப்புகள் என விளிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்துவது மட்டும் என்றாகிப் போனது. காந்தி அப்போது உயிரோடு இருந்தார், அவரது கனவான கிராம ராஜ்யம் எனும் அமைப்பை உருவாக்க வேண்டிய நிர்பந்தம் கருதியும், மாநிலங்களிற்கு அதிகாரம் வழங்குவதான பாவனையிலும் உருவாக்கப்பட்டது இந்தப் போலி ஆணையம். இப்போது சொல்லுங்கள், முதலில் பரிந்துரைக்கப்பட்டதுபோல இரண்டு ஆணையங்கள் உருவாக்கப்பட்டிருந்தால் , இன்றைய மோடி அரசின் எதேச்சதிகாரம் முன் வைக்கும் ‘ஒரே தேர்தல்’ சாத்தியமாகி இருக்குமா? அன்றைய பிதாமகர்கள் உருவாக்கிய மையத்தில் குவிக்கப்பட்ட அதிகாரம் என்ற ராஜபாட்டையில்தான் பாசிசம் பவனி வருகிறது. இஃதொன்றும் அதிசயமல்ல, குவிக்கப்படும் அதிகாரம் சர்வாதிகாரத்தின் விளைநிலம். நிற்க.

இனி, ‘ஒரு தேசம் ஒரு தேர்தல்’ உருவான காதை. 1999 ஆம் ஆண்டின் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின் போது, தேர்தல் சீரமைப்பு (Reforms in Election) குறித்து இந்திய சட்ட ஆணையம் (Law Commission) ஒரு பரிந்துரையை முன் வைத்தது. அதுதான் இந்த ‘ஒரு தேசம் ஒரு தேர்தல்’ எனும் கருத்தமைவு . ஏற்கனவே ‘ஒற்றை வெறி’ பிடித்த சனாதன சங்பரிவாரக் கூட்டத்தை, இந்த நிலைப்பாட்டை நோக்கி வேகமாகத் தள்ளியது யார் தெரியுமா? அசலாக அதிகார போதை தலைக்கேறிய சண்டிராணி ஜெயலலிதா அம்மையாரேதான். 1998இல் உருவான இரண்டாவது வாஜ்பாய் அரசை (முதல் அரசு பதிமூன்று நாட்கள் மட்டுமே நீடித்தது) கவிழ்த்த கைங்கர்யம் அவருடையதுதான். ஆனால் அதனை அப்போது முன்னெடுக்கும் வாய்ப்பு, வாஜ்பாயின் கூட்டணி அரசிற்கு வாய்க்கவில்லை. அந்தப் பரிந்துரையைதான், முதல் பாஜக பெரும்பான்மை அரசை அமைத்த குஜராத் சிங்கம் கையிலெடுத்தது. ஆனால் அதைவிட அதிரடியான நடவடிக்கைகளில் மோடியின் உன்மத்தம் திளைத்ததால், அவர் விரும்பியபடி 2019 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலை ‘ஒற்றையாக்க’ முயலவில்லை. இப்போது அநேகமாக 2/3 பெரும்பான்மை கொண்ட ஆட்சியை நடத்தும் மோடி இந்த விடயத்தை இந்த பதினேழாவது நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னரே அறிவித்திருக்கிறார். ஏறத்தாழ அறுபது நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ‘மக்களிடம்’ வாக்குக் கேட்டு இரந்து நிற்க வேண்டியிருந்தது அந்த பாசிச மனத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும். அதனை ஆசுவாசப்படுத்தவே இந்த அவசர அறிவிப்பு. அவரது அவா வாழ்நாள் பிரதமராக வலம் வரப்போகும் அவருக்கு தேர்தல் என்ற அவஸ்த்தைகள் இனி கூடாது. அவ்வளவுதான்..

இனி இந்த விவகாரம் தொடர்பான சில பார்வைகளை முன்வைத்து விட்டு, ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையையும் , அதைவிட மிக முக்கியமான ஆவணமான இந்திய சட்ட ஆணையத்தின் அறிக்கையையும் பார்க்கலாம். எப்போதும் சட்டம் தொடர்பான, அதிலும் அரசமைப்புச் சட்டம் தொடர்பான ஆய்விற்கு அணுக வேண்டியது இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம் தொடர்பாக நிகழ்ந்த விவாதங்களை. இது கொஞ்சம் கடுமையான வேலைதான், ஆனால் அதனை எளிமையாக்கிவிட்டது சட்ட ஆணைய அறிக்கை. அந்த அறிக்கை தெளிவாக ஒன்றை ஒப்புக் கொள்கிறது. இந்திய அரசியல் சாசன உருவாக்க மேதைகள் ஒரே நேரத்தில் தேர்தல் என்கிற விடயத்தை நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று. இன்னும் சொல்வதானால் பல தேர்தல்கள் நடக்கும் வாய்ப்பை அனுமானித்தே சட்ட உருவாக்க விவாதம் நடந்துள்ளது. எனவே இந்த ஒரே தேர்தல் இந்திய அரசியல் சாசனத்தை புரட்டிப் போட்டு நிகழ்த்த வேண்டிய சாகசம் எனத் தெரிகிறது. சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு விசாரணைகளும், விவாதங்களும், இறுதி அறிக்கையும் அடிப்படைத் தரவுகளைத் தவிர்த்த எந்த விடயம் குறித்தும் பேசவில்லை. அறிக்கையின் முடிவும் தெளிவற்றதாகவே உள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் மக்களவையில் பெரிய விவாதங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. அறிக்கையும் தெளிவற்று இருக்கவே, மோடி அரசு அதனை இந்திய சட்ட ஆணையத்திற்கு அனுப்பி அதன் மீதான கருத்துகளைக் கோரியது. இந்திய சட்ட ஆணையம் விரிவான ஆய்வுகளை நடத்தி அதன் கருத்துகளை பொதுவெளி பார்வைக்கு ஆகஸ்ட் 30, 2018 அன்று ஒரு முன்வடிவை வெளியிட்டது. அந்த அறிக்கை இன்னும் பொதுவெளி கவனத்தில்தான் இருக்கிறது. மோடி அவர்களின் தற்போதைய முன்னெடுப்பே அதன் மீதான மேல்நடவடிக்கையை துரிதப்படுத்தத்தான். இனி இந்திய சட்ட ஆணையத்தின் விரிவான முன்வடிவைப் பார்ப்போம்.

இந்த அறிக்கை ஒரு சங்பரிவார் அரசின் சார்பான வாதங்கள் எப்படியெல்லாம் இருக்க முடியுமென்பதற்கான சான்று. நூற்றியெழுபத்தியோரு பக்க ஆவணத்தை புரட்டினாலே பல அதிர்ச்சிகள் உங்களுக்குக் காத்திருக்கும். என்ன அப்படி அதிர்ச்சி என்போருக்கு ஒருசில மாதிரிகளை மட்டுமே காட்ட முடியும். எப்படியும் நடைமுறைக்கு வரப் போகிற சட்ட முன்வரைவு என்பதால் ஆர்வமுடையவர்கள்‘Simultaneous Elections, Law Commission report 2018’ என கூகுளில் தேடினால் கிடைக்கும். இந்த சட்ட ஆணைய அறிக்கை வழங்கியிருக்கும் விளக்கங்கள் முற்றிலும் புதியவை இல்லையென்றாலும், அவை வெளிப்படையாக பேசப்பட்டிருக்கும் போக்கு உறுதியாக உங்களை அதிரச் செய்யும். மக்களாட்சி (DEMOCRACY) கூட்டாட்சி (FEDERALISM)) அடிப்படை உரிமை (FUNDAMENTAL RIGHTS) அரசியல் சாசன உரிமை CONSTITUITIONAL RIGHT) ஆகியவை குறித்த விளக்கங்கள் ஒரு திறப்பாகக் கூட அமையலாம். இதை வாசித்து முடிக்கும் போது அரசியல் சாசனமே தலையாயது என்பதன் பொருளும், அதிலிருந்து இறையாண்மை பிறக்கிறது என்பதன் அர்த்தமும் விளங்கும். ஆம், இந்த அரசியல் சாசனமும், இறையாண்மையும் யாருக்கானது என விளங்கும்.

அறிக்கையின் முதல் பகுதியில் கவனிக்க வேண்டிய சங்கதி எதற்காக இந்த ஒரே தேர்தல் என்ற கருத்தாக்கம் முன்வைக்கப்படுகிறது என்ற குறிப்பு உள்ளது. இதில் நான்கு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. 1) தேர்தல் செல்வுகளை குறைத்தல். இப்போது நான்காயிரத்து ஐநூறு கோடியாக இருக்கும் செல்வை குறைத்தல்.(மோடியின் அரசுமுறை பயணங்களின் செலவு இதைவிட பலமடங்கு அதிகமென்று சொல்லக்கூடாது. அது அவதூறு) 2) அடிக்கடி நடக்கும் தேர்தல்களால் நடைமுறைக்கு வரும் தேர்தல் கால விதிமுறைகள் அரசின் நல்லாட்சி நிகழத் தடையாக இருக்கிறது (Policy paralysis and Governance deficit) (சிரிப்பை அடக்க முடியவில்லையென்றால் வாய்விட்டு சிரித்துவிடுங்கள்) 3) மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. அத்யாவசிய சேவைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. 4) மனித உழைப்பு நாட்கள் விரயமாகிறது (1077 ஒன்றிய காவல் துறையின் நிலையான ஆயுதந்தாங்கிய படைகளும், 1349 நடமாடும் படைப் பிரிவுகளும் பணியமர்த்தப்பட வேண்டியதாகிறது). இவ்வளவு அபத்தமான காரணங்களுக்காகத்தான் அரசியல் சாசனத்தையே கவிழ்த்துப் போடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது என்பது ஆச்சர்யமாக இருக்கலாம். நான்காயிரத்து ஐநூறு கோடி செல்வு, பல லட்சம் கோடி வரவு செலவில் என்னவகையான பாதிப்பை ஏற்படுத்தி விடுமெனத் தெரியவில்லை. இந்தச் செலவும் ஒன்றிய / மாநில அரசுகளின் பொதுச் செலவு. உலகின் மிக உயரமான வல்லபாய் பட்டேல் சிலைக்கான செலவு மூவாயிரம் கோடி என்பது நினைவிற்கு வந்தால் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒவ்வொன்றாக விளக்கத் தேவையில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் சில அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது என்பது தவிர மற்ற எந்தக் காரணங்களும் பொருட்படுத்தத்தக்கவையில்லை. பிறகு ஏன் இவ்வளவு எத்தனம். அதுதான் சங்பரிவார பாசிசத்தின் ‘ஒற்றை’ பிணி.

இந்த ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ முன்னெடுப்பிற்கான எதிர்வினையாற்றிய அரசியல் கட்சிகளில் , பாஜக விடம் தென்டனிடும் அ இ அதிமுக, அகாலிதளம், தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதேபோல் மாநில உரிமை போன்ற அக்கறையற்ற மாநிலக் கட்சிகளும் (சமஜ்வாடி, பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், ஜனதாதளம் / நிதிஷ்குமார்) ஆதரவளித்தன. இதனை கடுமையாக எதிர்த்த ஒரே மாநிலக் கட்சி வழக்கம்போல திமுக மட்டுமே . திரிணமுள் கட்சியும், தெலுங்கு தேசமும் நடுவாந்திரமாக நின்றன. அது போக தேசியக் கட்சிகளில் இந்திய தேசியக் காங்கிரஸ், இரு பொதுவுடமைக் கட்சிகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. எதிர்ப்பின் சாராம்சம் 1) இது மக்களாட்சியின் இயல்புப் போக்கை வரன்முறைப்படுத்தி கட்டுக்குள் வைக்கிறது 2) மாநிலக் கட்சிகளுக்கு எதிரானது. ஓரே வேளையில் தேர்தல் எனும் போது தேசியப் பிரச்னைகள் முன்னுரிமை பெறுவதால், மாநில நலன் மற்றும் உரிமைகள் பேசுபவர்களின் குரல் அமுக்கப்பட்டு கவனமற்றுப் போகும் 3) இது கூட்டாட்சி முறைக்கு எதிரானது 4) ஒன்றியத்திற்கும் , மாநில சட்டசபைக்கும் வாக்களிக்கும் போது வாக்காளர்கள் இரண்டிற்கும் ஒரேவிதமாக வாக்களிக்கும் மனநிலைக்கு ஆளாக்கப்படுவார்கள். ஆறுமாத இடைவெளியில் தனித் தனியே நடக்கும் தேர்தல்களில் ஒன்றியத்திற்கு ஒருவிதமாகவும், மாநிலத்திற்கு வேறுவிதமாகவும் வாக்களிப்பது பலமுறை நிறுவப்பட்டிருக்கிறது. 5)விதி எண் 356 ன்படி கலைக்கப்படும் மாநில அரசுகள் அடுத்த தேர்தல் வரை கவர்னர் ஆட்சியில் நீடிக்க வேண்டியதாகும். 6) இந்த தேர்தலுக்காக அரசியல் சாசனத்தின் அடிப்படைகளை கவிழ்த்துப் போட வேண்டியதாகும்.

இந்த ஆட்சேபங்களிற்கு பதிலளிப்பதும், சில மாற்று முன்மொழிவுகளை வைப்பதுமே இந்த இந்திய சட்ட ஆணைய அறிக்கை. ஆனால் அதனை அது செய்திருக்கும் விதம்தான் அபாரமானதும் ஆபத்தானதும். மக்களாட்சியின் அடிப்படை அரசியல் சாசனம். அந்த அரசியல் சாசனத்தின் ஆன்மா ‘அடிப்படை கட்டுமானம்’ (BASIC STRUCTURE). எந்தவிதமாத அரசியல் சாசனத் திருத்தமும் அதன் அடிப்படையை மாற்றுவதாக இருக்க முடியாது. அரசியல் சாசன திருத்தங்களால் சாசனத்தையே அழித்துவிட முடியாது, கூடாது. அதேவேளை ‘அடிப்படைகள்’ சாசனத்தினுள்ளிருந்து மட்டுமே அல்லாமல், உன்னதமானாலும் ‘வெளியிலிருந்து’ பெறப்பட முடியாது. அடிப்படைகள் எனப்படுபவை 1) அரசியல் சாசனமே தலையாயது 2) மக்களாட்சிக் குடியரசு 3) மதச்சார்பின்மை 4) கூட்டாட்சி வடிவிலான அதிகாரப் பகிர்வு 5) மக்களவை / சட்டசபை, நிர்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் ஆகியவற்றிற்கிடையிலான தெளிவான அதிகார வரம்புகள், 6) நீதிமன்றங்களின் தனித்துவம் ஆகியவையாகும். இவை ஏன் அடிப்படைகள் என்றால், இதன் மீதுதான் இறையாண்மை நிலைபெறுகிறது. இந்த அடிப்படைகள் தொடர்பான எந்த அரசியல் சாசனத் திருத்தம் அரசியல் சாசனத்தின் பண்பையே மாற்றி விடுமோ அந்தத் திருத்தம் ஒருபோதும் கையாளப்படக்கூடாது.

கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? நான் ஏற்கனவே எச்சரிக்கை செய்தது போல எந்தக் கருத்தையும் சட்ட அணையம் சொல்லவில்லையே என்று

தோன்றுகிறதல்லவா? நீங்கள் நினைப்பது சரிதான். தெளிவாக ‘அடிப்படைக் கட்டுமானம்’ பற்றியும், அதன் உயிர்நாடியான இயங்குதளங்களையும் அடையாளப்படுத்தி விட்டு, துவங்குகிறது அடிச்செங்கல்லை உருவும் வேலை. இந்தப் புள்ளி படுசிக்கலானது என்பதால் சட்ட ஆணையத்தின் கருதுகோள்களை அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்து தமிழ் மொழியாக்கத்தை முயல்கிறேன். சட்டம் தொடர்பான கலைச்சொற்கள் நுட்பமான வேறுபாடுகளைக் கொணர்ந்து விடும் வாய்ப்புள்ளது.

Right to vote is not a Fundamental right but a Constitutional Right (வாக்குரிமை என்பது அடிப்படை உரிமை இல்லை, அது அரசியல் சாசனம் வழங்கிய உரிமை மட்டுமே) . இதன் உட்கிடை என்ன ? தேர்தல், வாக்குரிமை தொடர்பான அரசியல் சாசனத் திருத்தம் அதன் ‘அடிப்படையை’ மாற்றாது. காரணம் வாக்குரிமை சாசனத்தின் கொடையே. அப்படியானால் ஒரே தேர்தலுக்காக அரசியல் சாசனத்தை திருத்துவது அதன் அடிப்படையை திருத்துவதாக ஆகாது. ஆஹா என்ன அருமை. ஆனால் அரசியல் சாசனத்தின் தலையாய தன்மையே மக்களால், தங்களுக்கு தாங்களே வழங்கிக் கொண்டதன் மூலம் அங்கீகரிப்படுவதுதானே. அரசியல் சாசனமே தனது அதிகாரத்தை மக்களிடமிருந்து பெறுகின்றது எனும் போது, அந்த மக்களுக்கான வாக்குரிமையை சாசனம் வழங்குவதாக வாதிடுவது முறையாகுமா? சரி இது இப்படியே இருக்கட்டும் அடுத்த விடயத்திற்கு நகர்வோம்.

Indian Constitution is not a traditional federal Constitution

Indian Federalism is a ‘pragmatic federalism’ (இந்தியக் கூட்டாட்சி சம்யோசிதமானது)

The expression ‘ federation “ or ‘ federal form of govt ‘ has no definite meaning . It broadly indicates division of power(கூட்டமைவு என்பதும் கூட்டாட்சி வடிவிலான அரசு என்பதும் தீர்மானமான பொருளற்றது. அதன் தோராயமான பொருள் அதிகாரப் பகிர்வு என்பதைச் சுட்டுவதே)

Indian constitution is quasi – federal (இந்திய அரசியல் சாசனம் ஒரு அரைக் கூட்டாட்சியையே உத்தேசிக்கிறது)

Indian federation is ‘collaborative federation’ (இந்தியக் கூட்டமைவு ஒரு ஒத்திசைவான/ ஒத்துப் போவதான கூட்டமைவே)

India is a ‘co operative federation’ (இந்தியா ஒரு கூட்டுறவு கூட்டமைவு)

Indian constitution provides for a quasi federal structure which is federal in form but unitary in spirit (இந்திய அரசியல் சாசனம் ஒரு அரைக் கூட்டாட்சி உத்தேசிக்கிறது. அது வடிவில் கூட்டாட்சியாகவும், அதன் ஆத்மார்த்தத்தில் ஒற்றை அரசாகவுமே இருக்கும்)

போதுமல்லவா? இவையெல்லாம் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுகள் பல்வேறு காலங்களில், பல்வேறு வழக்குகளில் உதிர்த்த முத்துக்கள். விடயம் இவ்வளவுதான் . கூட்டாட்சி, கூட்டமைப்பு எல்லாம் ‘சும்மா’. அதாவது பொருளற்றது. விசனப்பட்டு ஆவதொன்றுமில்லை. இத்தனை உச்சாடனங்களும் மோடியின் வரவை எதிர்நோக்கியிருந்தவையே. இதோ மீட்பர் வந்தே விட்டார். ஜெய்ஸ்ரீராம்.

இந்திய அரசியல் சாசனம் அதன் பாரம்பர்யமான பண்பில் கூட்டாட்சி சாசனம் அல்ல. அது என்ன ‘பாரம்பர்யம்’ அல்லது ‘வழமையான’ பண்பில்? வேறொன்றுமில்லை. இந்தக் குப்பைக் கூட்டாட்சித் தத்துவமொன்றும் புதிதில்லை. இந்திய அரசை உருவாக்கிய பிதாமகர்கள் ஒரு கருத்தினை இறுகப் பற்றியிருந்தனர். அது என்னவெனில், இந்திய துணைக்கண்ட மக்களை பிரிட்டிஷ் அடிமைத்தளையிலிருந்து காத்து ரட்சித்தவர்கள் அவர்கள்தாம். பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் கெடுவைத்து சுதந்திரத்தை வீசி விட்டு ஓடினார்கள் என்பதை அவர்கள் மறந்தே போனார்கள். அல்லது ஒரு போதும் கருத்தில் கொள்ளவில்லை. விளைவு இந்தியப் பிரதேசங்கள் அவர்களின் தயை வேண்டி மண்டியிட்டு நிற்பவை. எனவே இங்கு உருவான கூட்டாட்சி அமெரிக்க மண்ணில் நிகழ்ந்தது (அதுதான் traditional))போல அல்ல.அங்கு தன்னாட்சி கொண்ட மாநிலங்கள், தங்களுக்குள் ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டை உருவாக்கிக் கொண்டார்கள். அந்தத் தன்னாட்சி மாநிலங்கள் தனித் தனியே அரசியல் சாசனங்களைக் கொண்டவை. ஆனால் இங்கு கூட்டாட்சி என்ற தயை ஒன்றிய ஆட்சியாளர்களால் இடப்பட்ட பிச்சை. இதையும் அண்ணல் அம்பேத்கர் அவர்களே சொன்னதுதான் நமது அவலம். பின்னர் இந்த நிலைப்பாடு குறித்த மாற்று சிந்தனைகள் அவரிடம் எழுந்தன, ஆனால் அதற்குள்ளாக காலம் கடந்துவிட்டது. இணைந்து கொள்ளும் விருப்பைக்கூட கோராத ஒன்றிய அரசு , மாநிலங்களிற்கு ஒருபோதும் பிரிந்து செல்ல முடியாது என்ற தடையையும் தன்னிச்சையாக விதித்தது. இந்த கட்டாய இணைப்பின் விளைவிற்கான விலையை இன்றும் நாம் காஷ்மீரில் பெரும் தொகைகளாகவும், அரிதான இளம் உயிர்களாகவும் கொடுத்தபடி இருக்கிறோம். வேறொன்றுமில்லை இந்தியா / பாகிஸ்தான் பிரிவினை மற்ற அனைத்து ‘தன்னாட்சி’ நிலைப்பாடுகளையும், அடக்கி ஒடுக்கும் அதிகாரத்தை வழங்கி விட்டிருந்தது. ஆனால் விபரீதம் இங்கேதான். இந்தியாவை ‘செதுக்கிய சிற்பிகள்’ அதனை இந்துத்துவ சனாதனத்திற்கு அணுக்கமானதாக ஆக்கியதுதான். அதன் விளைவுதான் இங்கே, இப்போது.

சரி என்னதான் சொல்ல வருகிறது இந்த இந்திய சட்ட ஆணையத்தின் அறிக்கை.

‘he (Dr Ambedkar) further explained the limitation envisaged in the constitution by saying that , ‘ when we say that the Constitution is a Federal Constitution it means this , that the provinces are as sovereign in their field which is left to them by the Constitution as the Centre is in the field which is assigned to it ’ (Constituent assembly debates)  தோராயமான மொழிபெயர்ப்பு இவ்வளவுதான்

‘அவர் (டாக்டர் அம்பேத்கர்) அரசியல் சாசனத்தில் அவதானிக்கப்பட்டுள்ள வரன்முறைக்குட்பட்ட தன்மை குறித்து மேலும் விளக்கியபோது’ நாம் அரசியல் சாசனம் கூட்டாட்சியின் சாசனம் எனும் போது அதன் பொருள், பிரதேசங்களின் இறையாண்மை கட்டுப்பாட்டிற்குட்பட்டது என்பதே, ஏனெனில் அதனால் கையளிக்கப்பட்ட பிரதேசங்களின் இறையாண்மைத் தளத்தில் மையமும் இருப்புக் கொண்டுள்ளது.

ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற அறைகூவலை எதிர்த்தவர்கள் முன்வைத்த பிரதான வாதங்களான , மக்களாட்சிக்கு எதிரானது, கூட்டாட்சிக்கு பங்கம் விளைவிப்பது என்பனவற்றை, அதன் அடிப்படைகளையே தகர்த்து பதிலடி கொடுத்துள்ளது சட்ட ஆணையம். இங்கு தெளிவாக கருத வேண்டியது இதுதான். சட்ட ஆணையம் இந்த ஒரே தேர்தல் கூட்டாட்சிக்கு பங்கம் விளைவிக்காது என வாதிடவில்லை. மாறாக இந்தியாவின் கூட்டாட்சி என்பதே பொருளற்ற சொல், அதற்கு எந்த உள்ளீடும் கிடையாது. எனவே கூட்டாட்சி பாதிப்பிற்குள்ளாகும் என்பதே பொருளற்றது என முடித்து வைத்து விட்டது. மறுபுறம் அடிப்படை உரிமைகள் தளத்திலும் பாரிய விளக்கங்களை வழங்கி, எனவே தேர்தல் தொடர்பான எந்தவிதமான,திருத்தங்களை கொண்டு வந்தாலும் அதாவது அரசியல் சாசனச் சட்டத்தின் எந்தப் பிரிவை திருத்தினாலும் அது சட்ட விரோதமானது அல்ல எனச் சான்றிதழ் வழங்கி விட்டது. இனி மோடி தனது ராஜபாட்டையில் நினைத்த தடத்தில் ரதத்தை செலுத்துவார்.
சரி, என்னவிதமான அரசியல் சாசனத் திருத்தங்கள் உத்தேசிக்கப்படுகின்றன. சட்ட ஆணையம் உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் “ ஒரே தேர்தல் “ பற்றி விலாவரியான வாதங்களை முன் வைக்கிறது. அவையனைத்தும் குடியரசுத் தலைவர் தலைமையேற்கும் ஆட்சிகள் (Presidential form of Goverments). அவற்றின் அரசியல் சாசனங்களையும் அலசி, ஜெர்மானிய மாதிரியை (ஆரிய மாதிரி என்ற எண்ணம் வந்தால் நான் பொறுப்பில்லை) கண்டடைகிறது. ஆனால் அதை நோக்கி நகர்வதற்கு இடையூறாக இருப்பது மாநில அரசுகள். ஒன்றிய ஆட்சியாளர்களின் தயவில் உபயோகமான அரசியல் சாசனப் பிரிவு 356ஆல் வீழ்ந்து, பல்வேறு காலங்களில் நடக்கும் தேர்தல்களை எப்படி ஒரே வேளையில் நடத்துவது என்பதுதான் இடியாப்பச் சிக்கல். ஆட்சிகளை 356ஆல் கலைப்பது எஸ்.ஆர். பொம்மை தீர்ப்பிற்குப் பிறகு கடிது. ஆகவே சமாதானமாக கலைத்துவிட முயல்கிறார்கள் முதல் சுற்றில். இல்லையெனில் கலைப்பு அல்லது நீட்டிப்பு என்ற வகையில்தான் அதைச் செய்ய முடியும். 2024ஐ குறிவைத்து நகர்ந்தாலும் பல இடையூறுகள் உள்ளன. ‘கலைப்பு’ மோடிக்கு எளிது. அதிலும் மேலவை பெரும்பான்மையை ‘வளர்க்க’ அமித்ஷா கண்டிருக்கும் உபாயம் (தெலுங்கு தேச உறுப்பினர்கள் ஐந்து பேர் கட்சி தாவி பாஜக வந்து விட்டனர்) அதற்கான நல் வாய்ப்பை வழங்கி விடும். ஆனால் இந்த ‘நீடிப்பு’ தான் பெரும் சிக்கல். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் 2021இல் நடக்க இருக்கும் தேர்தலை 2024 வரை நீட்டிக்க வேண்டும். அல்லது 2021 தேர்தலை மூன்று ஆண்டுகாலத்திற்கானது என நடத்த வேண்டும். இல்லையென்றால் 2021 முதல் 2024 வரை கவர்னர் ஆட்சி நடத்தப்பட வேண்டும். கலைப்பு சாத்தியமானாலும் அங்கும் இதே விவகாரம் எழும். ஆறு மாதங்களிற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் அசாதரண சூழலைக் காட்டி (காஷ்மீர் மாதிரி) மேலும் மேலும் நீட்டிக்க வேண்டும். ஆம், நீட்டிப்பு அசாதரண சூழல்களில்(Emergency situation) மட்டுமே அனுமதிக்கப்படுகிறது அரசியல் சாசனத்தில். சட்ட ஆணையம் எப்படிப் பட்டியல் போட்டாலும் ‘கலைப்பு’ ‘நீட்டிப்பு’ சிக்கல் வருகிறது. எனவேதான் ஆணையம், ‘ஒரு பெரிய நன்மைக்காக ஒரு சிறிய தவறைச் செய்யலாமென’ ஆலோசனை வழங்குகிறது. அதாவது ஆட்சி நீட்டிப்பை அல்லது கவர்னர் ஆட்சியை சில ஆண்டுகள்கூட தொடரும் அரசியல் சாசனத் திருத்தத்தைச் செய்யலாமென்பதே அந்த ஆலோசனை. கவனம். எந்த அரசியல் சாசனத் திருத்தமும் அதன் அடிப்படைகளை மாற்றுவதாக இருக்கக் கூடாது என்பதை சுற்றி வளைக்கவே ‘தேர்தல் வாக்குரிமை’ எல்லாம் ‘அடிப்படைகள்’ தொடர்பானதோ அல்லது அடிப்படை உரிமையோ அல்ல என விளக்கமளித்தது. இது பெரு விவாதம். நாளை உச்ச நீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது தலையைப் பிய்த்து யோசிக்கப் போகும் விடயம். எனவே அரசியல் சாசனத்தை கவிழ்த்துப் போட கிளம்பிவிட்டார் மோடி என்ற அளவில் மட்டும் இப்போதைக்கு புரிந்துகொண்டால் போதும்.

அரசியல் சாசனப் பந்தாட்டம் இத்தோடு முடிவதில்லை. ஓரே தேர்தல் நடந்து உருவாகும் ஆட்சி கலைக்கப்பட்டால், வீழ்ந்தால் எஞ்சிய ஆட்சிகாலத்தை எப்படிக் கையாள்வது. நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை எப்படிக் கையாள்வது என்பன போன்றவை ஏராளம். அது தொடர்பில் சில ஆலோசனைகளைதான் ‘ஜெர்மன் மாதிரியிலிருந்து’ எடுத்துக் காட்டுகிறது சட்ட ஆணையம். அதாவது நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் முன் மொழியப்படும் போது அதன் இணைபிரியாத பகுதியாக நம்பிக்கைத் தீர்மானமொன்றும் இணைக்கப்பட வேண்டும். அதாவது பிரதமர் / முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் போது அவருக்கான மாற்று நபர் யார் என்பதும் அவருக்கான ஆதரவையும் நிருபிக்க வேண்டும். இல்லையெனில் நம்பிக்கையின்மை நிறைவேறினாலும் செல்லாது. அதே போல ஒரு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறவில்லையானால் அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியாது (இப்போது ஆறுமாதம்தான் கெடு). இதற்கடுத்த வில்லங்கம் ஆட்சிக் கலைப்பு / கவிழ்ப்பு நடந்துவிட்டால் குறுகிய காலமானால் (தோராயமாக இரண்டு ஆண்டுகளுக்கு குறைவு என்றால்) கவர்னர் ஆட்சி தொடரும். அவரது விருப்பத்தின்படி அமைச்சர்களை நியமித்து ஆட்சி செய்வார்.இந்த ஆட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அத்தனை அதிகாரங்களையும் கொண்டது. கலைப்பு / கவிழ்ந்து நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலான காலம் எஞ்சி இருந்தால் இடைத்தேர்தல் நடக்கும். ஆனால் அது அடுத்த ‘ ஒரே தேர்தல் ‘ வரைதான் செல்லும். ஆனால் உச்சக் கட்ட வில்லங்கம் என்னவென்றால் ஒன்றிய ஆட்சி வீழ்ந்தால் / கலைந்தால் அத்தனை பெரும்பான்மை கொண்ட மாநில ஆட்சிகளும் தன்னால் கலைந்துவிடும். இதற்கெல்லாம் சிகரம் வைக்கும் சிக்கல் காஷ்மீர் தொடர்பிலானது. அங்கு சட்டசபையின் வாழ்நாள் ஆறு ஆண்டுகள். அதன் அரசியல் சாசனமும் சற்று மாற்றானது. ஒவ்வொரு ஆணையையும், திருத்தத்தையும் அந்த அவை அங்கீகரித்துதான் ஏற்றுக்கொள்ளும். நாட்டைப் பதற வைத்தே தனது பாசிச மனத்தை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் மனிதர்களின் கொடூரம் இது. இனிவரும் ஐந்து ஆண்டுகள் நம் எண்ணங்களை ஆக்ரமித்து சித்திரவதை செய்யப் போகும் நடவடிக்கையே ‘ஒரே தேசம் ஓரே தேர்தல்’.

இறுதியாக ‘ட்ரிபியூன்’ இதழில் என். பாஸ்கர் ராவ் என்பவர் எழுதிய கடிதம், ‘One election idea undermines regional parties , local leaders and promotes One Party , ONE LEADER . It has implications on Federalism ’. ‘ஒரே தேர்தல் என்ற கருத்தமைவு , மாநிலக் கட்சிகளை, மாநிலத் தலைவர்களை வலுவிழக்கச் செய்யும். அந்தத் திட்டம் ஒரு கட்சியை, ஒரு தலைவரை முன்னிறுத்துவதாக இருக்கும். இதனால் கூட்டாட்சி மீது கடுமையான விளைவுகள் இருக்கும் .’ மோடிக்கும், அல்லது அவரது ஆலோசகர்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரியும். தேசியக் கட்சிகள் அழிவின் விளிம்பில் அல்லாடிக் கொண்டிருக்கின்றன. பாஜக கட்சிக்கான சவால் மாநிலங்களிலிருந்தே உருப்பெற முடியும். எனவே மாநிலக் கட்சிகளை அதன் தலைமைகளை ஒரு சமனற்ற போட்டிக்குத் தள்ளுவதே அவர்களை வீழ்த்தும் எளிய வழி. தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் அழிந்த பூமியில் பிரதமர் மோடி இந்திய ‘வாழ்நாள்’ குடியரசுத் தலைவராக மோடியாக வலம் வருவார். பாசிசவாதிகளின் இறுதிக் கற்பனை இதுவாகத்தானே இருக்க முடியும். பாசிசம் இறுதியாக இட்டுச் செல்லும் எல்லையை இப்போது யாரும் அவருக்குச் சொல்ல முடியாது. அது இறுக அணைக்கும் போது திரும்ப வழி இருக்காது. ஆனால் இந்தப் பாசிசம் வீழும் நாள் வரையான தினசரி வாதை மக்களுக்கானது.