இந்த ஆகஸ்ட் மாதத்தோடு தலைவர் கலைஞர் மறைந்து ஓராண்டு நிறைவுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி மரணத்துடனான நெடிய போராட்டத்திற்குப்பின் கலைஞர் தன்னை விடுவித்துக்கொண்டார். எவ்வளவு கொந்தளிப்பு மிகுந்த நாட்கள் அவை. காவேரி மருத்துவமனை சுற்றி ‘எழுந்து வா தலைவா’ என்று ஒலித்த குரல் கேட்டவர் நெஞ்சங்களையெல்லாம் உருகச் செய்தது. பெரும் மந்திரம்போல் ஒலித்தது அந்தச் சொல். காவேரி மருத்துவமனை வளாகத்தைத் தாண்டி ஒவ்வொரு தமிழரின் இதயத்திலும் அந்தக் குரல் ஒலித்தது. எல்லோர் மனங்களிலும் சட்டென விளக்கணைந்த ஓர் உணர்வு. கடந்த பல பத்தாண்டுகளில் தமிழர்களின் நெஞ்சில் எவருடைய மறைவும் இத்தகைய இழப்புணர்வை ஏற்படுத்தியதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் அந்தத் துயரம் உணரப்பட்டது. அவரை அரசியல்ரீதியாக எதிர்த்தவர்கள்கூட அவர் இல்லை என்ற உண்மையை நம்ப முடியாமல் தடுமாறினார்கள். அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக தமிழக அரசியலை மட்டுமல்ல; தேசிய அரசியலில் மையம் கொண்டிருந்த புயல் விலகிச் சென்ற தருணம் அது.

கலைஞரின் அரசியல்தான், நாடு முழுமைக்கான மாநில சுயஆட்சிக்கான அரசியலாக இருந்தது, அந்த அரசியல் இன்று இந்தியா முழுக்க இந்தி பேசாத மாநிலங்களின் முழக்கமாக மாறியிருக்கிறது. கலைஞர் எந்த ஒற்றை மைய அதிகாரத்தை எதிர்த்துப் போராடினாரோ அந்த அதிகாரம் இன்று மிருக பலத்துடன் இந்தி பேசாத, பாஜக ஆளாத மாநிலங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. மாநிலங்களின் ஒவ்வொரு உரிமையாகப் பறிக்கப்படுகின்றன. நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கை மூலமாக மாநிலங்களின் கல்வி உரிமைகளுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜி.எஸ்.டி. மூலம் மாநிலங்களின் பொருளாதார உரிமை ஒழித்துக்கட்டப்பட்டது. அணை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் மாநிலங்களின் நதிநீர் உரிமை பிடுங்கப்பட்டிருக்கிறது. இந்தி – சமஸ்கிருதம் திணிப்பு பல்வேறு வழிகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. இந்தியாவிலேயே கலைஞர் காட்டிய வழியில் தமிழகத்தில்தான் இதற்கான எதிர்ப்புகள் எப்போது முதலில் கேட்கிறது. அந்தவகையில் தலைவர் கலைஞர் மறைவிற்குப் பிறகு தனது இருப்பை இன்னும் பிரம்மாண்டமாக்கிக் கொண்டிருக்கிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இந்தியாவே காவிமயம் ஆகிவிட்டதோ என்கிற அஞ்சத்தகுந்த சூழலில் தமிழகம் மட்டும் இந்தக் காவி அரசியலுக்கு எதிரான ஒரு முழுமையானத் தீர்ப்பை அளித்தது. இந்தத் தீர்ப்பு ஒரு விதத்தில் இந்தியாவையே வியப்பில் ஆழ்த்தியது எனலாம். பாஜகாவால் அரங்கேற்றப்பட்ட தேசப்பக்தி நாடகம் எதுவும் தமிழகத்தில் மட்டும் ஏன் செல்லும்படியாகவில்லை என்பதற்கு ஒரே பதில் கலைஞர் என்பதுதான். கலைஞர் தேசிய அரசியலில் பல ஆண்டுகள் நிர்ணயமான பல பாத்திரங்களை வகித்தப்போதும் திமுகவை பதினான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்கேற்க செய்தபோதும் அவர் தமிழகத்தின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததும் இல்லை, சமரசம் செய்ததுமில்லை. இன்று பாஜக காட்டுகிற இடத்திலெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கைனாட்டு வைக்கிற ஒரு அரசு தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கிற சூழலில் கலைஞர் இந்த உரிமை பாதுகாக்கும் போராட்டத்தில் எப்படி வென்றார் என்பதுதான் எதிர்கால தலைமுறையினர் நினைவில் கொள்ளவேண்டிய உண்மை.

தலைவர் கலைஞர் முன்னிறுத்திய, திட்டமிட்டுச் செதுக்கிய தமிழ் அடையாளத்தின்மீது இன்று பெரும் தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தத் தமிழ் அடையாளம் ஒருநாளில் உருவானதல்ல; பல நூற்றாண்டுகளாகச் சிதைவுற்றிருந்த தமிழ்மொழியை மீட்டு அதன் தனிச்சிறப்பை நிலைநிறுத்துவதற்கு அரசியலையும் அரசியல் அதிகாரத்தையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தினார் கலைஞர். தொல்காப்பியரையும் அய்யன் திருவள்ளுவரையும் கண்ணகியையும் தமிழ் மரபின் முகமாக மாற்றினார். சமஸ்கிருத மரபிற்கு எதிராக கலைஞர் தூக்கிப்பிடித்த இந்த தமிழ் மரபு பல நூற்றாண்டுகளாக நிலவி வடமொழி மேலாண்மைக்கு முடிவு கட்டியது. தனது மேடைபேச்சு, நாடகங்கள், அரசியல் எழுத்துகள், திரைப்பட வசனங்கள் என அனைத்திலும் நல்ல தமிழை வெகுஜன தளத்திற்குக் கொண்டு சென்றார். திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கு முன் தமிழ் இருந்த அவலநிலையோடு ஒப்பிட்டு பார்த்தால்தான் அண்ணாவும் கலைஞரும் திராவிட இயக்கமும் நிகழ்த்திய தமிழ்ப் புரட்சியின் தடம் தெரியும். கலைஞரின் இந்த தமிழ்ப் புத்தாக்கப் புரட்சியை இங்கு மூடி மறைக்கும் எத்தனையோ முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இன்று வரலாற்றை எழுதுவதாகச் சொல்பவர்கள் எல்லாம், வரலாற்றை திரிப்பவர்களாகவும் மறைப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். தமிழ் தேசிய இயக்கங்கள், திமுகவிற்கோ கலைஞர்கோ எந்தத் தொடர்பும் இல்லாத ஈழ தமிழர் படுகொலைகள் பழியை கலைஞர்மேல் சுமத்தி அவரைத் தமிழர் விரோதியாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். எந்த வரலாற்று உணர்வும் இல்லாத இளைஞர்களிடம் இந்தப் பொய் பிரசாரத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கிறார்கள். இன்று திராவிட அரசியல் சொல்லாடல்கள் இருந்தாலும் அது நடைமுறையில் தமிழக அரசியலாகத்தான் இருந்துவந்திருக்கிறது. அந்த தமிழக அரசியலை தாங்கி தனது வாழ்நாள் எல்லாம் கலைஞர் உக்கிரமாக முன்னெடுத்தார். தமிழின் தொன்மையும் நவீனமும் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்திலேயே அதிகாரப் பூர்வமாக நிறுவப்பட்டு அதன் மேன்மை வளர்த்தெடுக்கப்பட்டது. சங்க தமிழையும் கணினி தமிழையும் ஒருசேர தன் தோள்களில் தூக்கி சுமந்தவர் கலைஞர். கலைஞர் என்ற ஆளுமை இல்லையேல், தமிழக அரசியலும் இல்லை. தமிழ் தேசியத்திற்கான களமும் இல்லை. கலைஞர் தமிழுக்காற்றிய தொண்டில் தமிழக அரசியலுக்காற்றிய பங்கில் ஒரு சிறு பகுதியேனும் செய்திராதவர்கள் எல்லாம் இன்று யாருக்கோ கூலிப்படைகளாக மாறி திமுகவை கலைஞரையும் தமிழருக்கெதிராக நிறுத்த முயற்சித்தார்கள். காலம் அந்தப் பொய் பிரச்சாரத்தை முறியடித்திருக்கிறது. கலைஞர் நம்மோடு இல்லாத இந்த ஓராண்டு அவர், தமிழகத்தின் எதிரிகளுக்கு எத்தகைய தடுப்பரணாகவும் மதில் சுவராகவும் திகழ்ந்தார் என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

தலைவர் கலைஞர் வாழ்நாளெல்லாம் போராடி வென்றெடுத்த சமூக நீதியை சிதைக்கும் முயற்சி தற்போது நடந்துகொண்டிருக்கிறது. பொருளாதார இடஒதுக்கீடு என்ற கருத்தாக்கம் தலைதூக்கும்போதெல்லாம் கலைஞர் அதை வன்மையாக எதிர்த்தார். அந்தக் கருத்தாக்கத்தின் அபாயத்தை சுட்டிக்காட்டினார். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களை எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்த தலைவர் அவர். ஆனால் இடஒதுக்கீடு என்பது கல்விரீதியாகவும் சமூகரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே உரியது என்பதை அவர் உறுதியாக இருந்தார். இப்போது, மத்திய அரசு பொருளாதார ரீதியாக வலிமைகுன்றிய முற்பட்ட வகுப்பினருக்கு பத்து சதவீத இடஒதுக்கீட்டை அளிப்பதுமூலம் இந்தக் கோட்பாட்டை அடியோடு தகர்ந்திருக்கிறது. அண்மையில் நடந்த எஸ்.பி.ஐ வங்கித் தேர்வில் 100/28 மதிப்பை பெற்றிருந்தவர்கூட தேர்வு செய்யப்பட்டது உயர்சாதியினருக்கு ஆதரவாக இந்த இடஒதுக்கீடு எவ்வளவு மூர்க்கமாக அமல்படுத்தப்படுகிறது என்பதையே காட்டுகிறது. இதற்கு அவர்கள் சொன்ன காரணம், 10 சதவீத இடஒதுக்கீட்டை நிரப்புவதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் போதுமான அளவு பொருளாதாரரீதியாக வலிமை குன்றிய முற்பட்ட சாதியினரிடம் இருந்து வராததால் அவர்களில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தவர்கள் எல்லாம் தேடிப்பிடித்து கொடுக்கவேண்டியிருந்தது என்பதுதான். நீட் வந்தபோது தகுதியும் திறமையும் உள்ளவருக்குதான் இனி வாய்ப்பு என்று பேசிய உயர் சாதி அரசியல், இப்போது 10% இடஒதுக்கீடு வந்ததும் இவர்கள் தகுதியற்றவர்கள் என்று சொன்ன பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் அறுபதாக இருக்கும்போது காலம் காலமாக தகுதியும் திறமையும் தங்களுக்குத்தான் இருக்கிறது என்று சொன்னவர்கள், முப்பது மதிப்பெண்கூட தாண்ட முடியாமல் வாய்ப்புகள் பெற்றதை இப்போது, நியாயம் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். உயர்சாதி அரசியலின் இந்தத் தகுதி, திறமை என்ற போலி நாடகத்தைத்தான் தலைவர் கலைஞர் கடுமையாக எதிர்த்துப் போராடினார். வாய்ப்பு மறுக்கப்பட்டவருக்கு வாய்ப்புகள் உருவாக்கினார். கல்வியில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் இந்த வாய்ப்புகள் மறுக்கிறது என்றதும் அனைவருக்கும் பொதுவான சமச்சீர் கல்வியை கொண்டுவந்தார். கல்வியில் கிராமம், நகரம் என்றிருந்த ஏற்றத்தாழ்வுகளை இந்த சமச்சீர் கல்வி தகர்த்தது. அரசு பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் இடையேயான வேற்றுமைகள் குறைக்கப்பட்டன.

மாவட்டம் தோறும் மருத்துவ கல்லூரிகளும், ஊர் தோறும் பொது சுகாதார மையங்களும் அபாயத்தில் உதவ 108 ஆம்புலன்ஸ்களையும் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டங்களையும் கொண்டுவந்து தமிழகத்தில் பெரும் சுகாதாரப் புரட்சியை நிறுவினார் கலைஞர். வடமாநிலங்களில் இருக்கும் மருத்துவ கட்டமைப்போடு இதை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் கலைஞர் எத்தகைய சுகாதாரப் புரட்சியை நடத்தினார் என்று தெரியும். அந்தப் புரட்சியை அழிக்கத்தான் மத்திய அரசு படாதபாடு படுகிறது.
தமிழகத்தில் கலைஞர் உருவாக்கிய தனித்துவமான பொது விநியோகத்திட்டம் இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட ஒரு மக்கள்நல திட்டமாக இருந்துவருகிறது. எளிய மக்களின் பசிப்பினி போக்கும் சமூகப்புரட்சியின் அடையாளமாக இந்தத் திட்டம் திகழ்கிறது. பசியின் காரணமாக எந்த மனிதனும் தன்னை அடிமைத் தனத்திற்கு ஒப்புக்கொடுக்கக்கூடாது என்று கலைஞரின் சிந்தனைதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் அடிப்படை கட்டுமானங்களில் பெரும் சாதனைகளைச் செய்தார். சாலை வசதிகள், மேம்பாலங்கள், குடிநீர் திட்டங்கள், மின் திட்டங்கள் என பிரம்மாண்டமான திட்டங்களை நிறைவேற்றினார். அதுமட்டுமல்ல, ஒருபுறம் விவசாயத்தைப் பாதுகாக்க இலவச மின்சாரம், விவசாய கடன் தள்ளுபடி, அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் என பல்வேறு திட்டங்களைத் தீட்டிய கலைஞர், இன்னொரு புறம் தொழில் வளர்ச்சிக்கான பரந்துபட்ட அடித்தளத்தையும் உருவாக்கினார். கலைஞர் ஆட்சிகாலத்தில் உருவாக்கிய தொழில் பூங்காக்கள் தமிழ்கத்தில் பெரும் அடையாளங்களாகத் திகழ்கின்றன. தகவல் தொழில்நுட்ப புரட்சியின் நாயகன் என்பதற்கு அவர் படைத்த ஐ.டி. பூங்காக்கள் சாட்சியம் சொல்கின்றன. தமிழகத்தை இந்தியாவின் மிக நவீனமான மாநிலமாக வார்த்தெடுத்தார் கலைஞர், அவர் ஏற்றிய விளக்கு எரியாத வீடுகளே இல்லை. இதை தங்கள் வெற்று அரசியலுக்காக மறுத்தவர்கள்கூட, அவர் தந்த வெளிச்சத்தில் நின்றுதான் மறுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தலைவர் இல்லாத இந்த ஓராண்டில் அவரது நினைவுகள் மேலும் வலிமை பெற்றிருக்கின்றன. அவரது கருத்தாக்கங்கள் மேலும் உக்கிரமடைந்திருக்கின்றன. தலைவர் கலைஞர், உடலால் இங்கு இல்லை, ஆனால் தனது சிந்தனைகளாலும் போராட்டங்களாலும் அவர் நம் இதயங்களில் ஒரு தகிக்கும் வாளாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார். வாழ்ந்துகொண்டிருப்பார். கலைஞரை நினைக்கும் ஒவ்வொரு ஆண்டிலும் இதைத்தான் மீண்டும் மீண்டும் எழுதவேண்டியிருக்கும்.
எழுந்து வா தலைவா!