நமக்காகப் பேச யாருமற்றுப் போகும் முன்னே, சமூக செயற்பாட்டாளர்களைப் பழிவாங்கும் இந்த மோடி அரசுக்கு எதிராகக் குரல்கொடுப்போம்!

-சசி தரூர்

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்திருத்த மசோதாவைத் தாக்கல் செய்த மோடியரசு ‘இம்மசோதா நாட்டில் மனித உரிமைகளைப் பலப்படுத்தும்’ என்று முழங்கியது. ஆனால் நான் மக்களவையில் குறிப்பிட்டதைப்போல அம்மசோதா அரசு சொன்ன நோக்கத்தைப் பூர்த்திசெய்வதாக இல்லை!

இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை பாரிஸ் நெறிமுறைகளின்படி மாற்றியமைக்கும் நோக்கோடு இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. 1993-ஆம் ஆண்டு ஐ.நா. பொதுக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரிஸ் நெறிமுறைகள் உலகெங்கும் உள்ள மனித உரிமை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய மதிப்புகளையும் நியமங்களையும் வழங்கியிருக்கிறது. (அதன் கோட்பாடுகளோடு இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கோட்பாடுகள் ஒத்திருக்காததால் 2017-இல் ஐ.நா.இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அங்கீகரிக்க மறுத்தது). நமது உச்ச நீதிமன்றமே தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை “பல் இல்லாத புலி” என்று விமர்சித்துள்ளது (இதனையும் மக்களவையிலே குறிப்பிட்டுள்ளேன்). ஆனால் மோடி அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் இந்த மசோதா தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு பற்களைத் தருவதாக இல்லாமல் பாரிஸ் நெறிமுறைகளின் பரிந்துரைகளை அமல்படுத்துவதாகவும் இல்லாமல் ஒரு போலியான ஒப்பனைத் தோற்றத்தையே கொண்டிருக்கிறது.

மனித உரிமைகளைப் பாதுகாக்கப் போராடுபவர்கள் மீது அரசாங்கமே தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கும் அதே வேளையில் நாடாளுமன்றத்திற்குள்ளே மனித உரிமைகளைப் பற்றிப் பேசுவது மிகப்பெரிய முரணாக உள்ளது. இந்த அரசாங்கத்திற்கு மனித உரிமைபேசும் வழக்கறிஞர்கள் மீதுள்ள வெறுப்பு நாடறிந்தது. 2015-இல் “5-ஸ்டார் செயல்பாட்டாளர்களிடம்” பாதுகாப்பாக இருங்கள் என்று பிரதமர் மோடியே பேசினாரே! (2015 முதல்வர்கள் – தலைமை நீதிபதிகள் கூட்டுமாநாட்டில் பேசியது; சமூக செயற்பாட்டாளர்களை அவ்வாறு குறிப்பிட்டார்)

2014 தேசிய ஜனநாயக்கூட்டணி அரசாங்கம் அமைந்தவுடன் ஆளுங்கட்சியினைச் சேர்ந்த சதிகாரர்களும் அவர்களது ஏவல்காரர்களாகப் பணிபுரியும் ஊடகவியலாளர்களும் சேர்ந்து கொண்டு 1950களில் அமெரிக்காவிலிருந்த மெக்கார்த்தி யிசத்தைவிடவும் கேவலமான முறையில் சமூகச் செயற்பாட்டாளர்களை ‘தேசத் துரோகிகள்’ என்றும் ‘அர்பன் நக்சல்கள்’ என்றும் தாக்கத் தொடங்கினார்கள்.

பழியுணர்ச்சியுள்ள இந்த அரசாங்கத்திற்கு முதலில் பலியானது சமூக செயற்பாட்டாளர் சுதா பரத்வாஜ்; சட்டத்தின்மூலம் சத்தீஸ்கரின் ஊரக மக்கள் மற்றும் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதற்குத் தன் அமெரிக்க குடியுரிமையைத் துறந்து இங்குவந்து பணியாற்றினார். அவரது உயர்ந்த சேவையையும் தைரியத்தையும் ‘ஹார்வர்ட் சட்டப் பல்கலைக்கழகம்’ பாராட்டும் அதே வேளையில் இந்திய அரசு அவரை நக்சல் தொடர்புடையவர் என்று கைதுசெய்கிறது!
சட்டத்துறையில் பருந்துகளாக லாபம் கொழிக்கும் தொழில் நடத்தாமல் தங்கள் வாழ்க்கையை இந்திய அரசியல் சாசனத்தின் சாரத்தைக் காக்கப் போராடுவதற்காக அர்ப்பணிப்பதைத் தவிர வேறெந்தத் தவறும் செய்யாத மனித உரிமைப் போராளிகளான மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர் மீது கடந்த ஜூலை 11 அன்று சிபிஐ சோதனை ஏவப்பட்டது.

புற்றுநோய்க்கான மருந்தினை ஒரு ஸ்விஸ் மருந்து நிறுவனம் கைப்பற்றிக் காப்புரிமை பெற முயன்றபோது உச்சநீதிமன்றத்தில் முழுமூச்சுடன் கடுமையாக வாதாடி அதில் வென்று, பல லட்சம் புற்றுநோயாளிகள் அந்த மருந்தினைக் குறைந்த விலையில் பெற்றிட வழி ஏற்படுத்தித் தந்தவர் ஆனந்த் குரோவர்! 17 ஆண்டுகளாக LGBTQ சமூகத்தினருக்கான உரிமைக்குரலாக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு (IPC) 377-க்கு எதிராகப் போராடி தன்பாலின ஈர்ப்பு குற்றமல்ல என்ற தீர்ப்பினைப் பெற்றுத் தந்தவர்.

இந்தியாவின் முதல் பெண் கூடுதல் பொது வழக்கறிஞரான (Additional Solicitor General) இந்திரா ஜெய்சிங் தொழிலாளர்கள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பாடுபடுபவர். பஞ்சாப் முன்னாள் காவல்துறைத் தலைவர் (DGP) கே.பி.எஸ்.கில் மீதான பாலியல் குற்றச்சாட்டை வழக்காடி நிரூபித்தவர்; கல்வியாளரும் செயற்பாட்டாளருமான மேரி ராய் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்காடி சிரிய கிறிஸ்தவ பெண்கள் சொத்தில் சமபங்கு என்ற உரிமையினைப் பெற வழிவகுத்தவர்!

இவர்கள் நடத்தும் ‘வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு’ சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பது. அசாமைச் சேர்ந்த கார்கில் போராளி முகமது சனாவுல்லா வெளிநாட்டவர் என்று கூறப்பட்டு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டதை எதிர்த்து வழக்காடி அவருக்கு விடுதலை பெற்றுத் தந்தனர். இப்படிப் பலமுறை அதிகாரமற்றவர்களின் குரலாய் அரசாங்கத்தோடும் ஆளும்கட்சியோடும் தொடர்புடைய அதிகார மையங்களோடு நேரடியாக மோதியுள்ளனர்.

மனித உரிமைகளுக்காகப் போராடும் என்.ஜி.ஓ.க்களை வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FCRA) தெளிவற்ற விதிகளைப் பயன்படுத்தி ஒடுக்குகிறது இந்த அரசு. இதற்கு முதலில் பலியானது, குஜராத் மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சட்டப்போராட்டங்களை நடத்திய தீஸ்தா செதல்வாட்-டின் நீதி மற்றும் அமைதிக்கான மக்கள் இயக்கம் (CJP). தெரிந்தே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களெல்லாம் எளிமையாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லவிட்டிருக்கும் இந்த மோடி அரசாங்கம், சுற்றுச்சூழற் செயற்பாட்டாளரான பிரியா பிள்ளை, ஒரு லண்டன் நிறுவனம் இந்தியாவில் செய்த காரியங்களைப் பற்றி லண்டன் எம்பிக்களின் முன்னே சான்றுரைக்கச் சென்றபோது அவருக்கு அவரசரமாக பயணத் தடைவிதித்து விமானத்திலிருந்து தரையிறக்கியது! ஆனால் தில்லி உயர்நீதிமன்றம் அரசுக்குக் குட்டுவைத்தபிறகு அந்தப் பயணத் தடையை நீக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயினர்.

2016-இல் வழக்கறிஞர்களின் கூட்டமைப்பை முடக்கும் நோக்கில் அவர்கள் வெளிநாட்டு நிதிகள் பெறுவதற்கான உரிமத்தை நிறுத்திவைத்தது. அதே ஆண்டு உள்துறை அமைச்சகம் அவர்களது ஆவணங்களைக் கைப்பற்றுவதற்கான முழு அதிகாரத்தோடு ஐந்து நாட்கள் ஆய்வு செய்தது. மேலும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டபோது வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பல்வேறு ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்கவும் செய்தது. அதன்பின்னரும் வழக்கறிஞர் கூட்டமைப்பை இழிவு செய்யும் அப்பட்டமான நோக்கில் சிபிஐ மீண்டும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் உள்துறை அமைச்சகம் சோதனை செய்த அதே ஆவணங்களை சோதனையிடுகிறது!

இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர், இருவரும் எதிர்க்கவியலாத பெரும் சாதனையாளர்கள்தான்; ஆனால் அவர்கள் வயதின் மூப்பையும் கணக்கில் கொள்ளாமல் அவர்களைப் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படும் இந்த அரசாங்கத்திற்கு, மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீது துளியும் அக்கறையில்லை. அவர்களுக்காகக் குரல்கொடுக்க வேண்டியது குடிமக்களாகிய நமது கடமை. அப்படிச் செய்யாவிட்டால் “அவர்கள் நம்மைத் தாக்க வரும்போது, நமக்காகப் பேச யாரும் இருக்கமாட்டார்கள்” என்று ஜெர்மன் மதபோதகர் மார்ட்டின் நீமுல்லர் சொன்னதுபோல் ஆகிவிடும். சர்வதேச நீதிபதிகள் ஆணையம், உச்சநீதிமன்ற பார் கவுன்சில் மற்றும் பல்வேறு அறிஞர்கள், ஜெய்சிங் மற்றும் குரோவர் நடத்தப்பட்ட விதம் பற்றி தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

வைமர் குடியரசில் தொழிலாளர் நலத்திற்காகவும் அவர்கள் உரிமைகளுக்காகவும் பல ஆண்டுகள் போராடியவர் பிரபல வழக்கறிஞர் ஹான்ஸ் லிட்டன். 1931-இல் அப்போது கும்பல் சேர்த்துகொண்டு அரசியல்வாதியாக உருவாகிக்கொண்டிருந்த அடோல்ஃப் ஹிட்லருக்கு எதிராக வழக்கினை நடத்தினார். பின்னர் ஹிட்லர் சர்வாதிகாரியான பிறகு அவரைப் பழிதீர்த்துக்கொண்டார்! இந்த அபாயம் எப்போதும் உண்டு. ஆனாலும் இந்நாட்டின் மனச்சான்றைக் காப்பவர்களைப் பழிவாங்கும் இந்த அரசாங்கத்தை எதிர்த்து நாம் குரல்கொடுத்தே ஆகவேண்டும்! வலிமையான நீதித்துறையை எதேச்சதிகார அரசு எபோதும் விரும்பாது என்பது ஊரறிந்ததுதானே! நன்மதிப்புமிக்க வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் என்பது இந்நாட்டின் நீதித்துறை மீதான தாக்குதலேயன்றி வேறில்லை.

(Source:www.theprint.in நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சசிதரூர், The Print ஆங்கில ஊடகத்தில் எழுதிய கட்டுரை)