இலங்கையில் உணவுப்பொருட்களுக்கும், மருந்துகளுக்கும், பெட்ரோலுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடக்கின்றனர். போராட்டக்காரர்கள் ரொட்டியையும், ராஜபக்ஷே கட்சி அரசியல்வாதிகளின் வீடுகளையும் எரித்து தங்கள் கடுங்கோபத்தையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்தினர். மகிந்தா ராஜபக்ஷேவின் இடத்தில் ரனில் விக்ரமசிங்கா அமர்ந்திருக்கிறார்.

இலங்கையின்நெருக்கடிக்குக் கீழ்கண்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன.

  1. இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பு பெருமளவு குறைந்துவிட்டது. அதனால் வெளிநாடுகளிடமும் அமைப்புகளிடமும் வாங்கிய கடன்களைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. டாலர் கையிருப்பு இல்லாததால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யமுடியவில்லை . இதனால்தான் தட்டுப்பாடு.
  2. ஈழப் போரின்போதும் அதற்குப் பின்பும் இலங்கை சீனாவிடமிருந்து நிதி உதவி மற்றும் கடன் பெற்று பிரம்மாண்டமான உள்கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்தியது. அம்பன்தோட்டா துறைமுகத்தைப் பெரும் செலவில் மேம்படுத்தியது. இவை தோல்வியடைந்தன. அம்பன்தோட்டா துறைமுகத்தை பன்னாட்டுக் கப்பல்கள் நாடி வரவில்லை. உள்கட்டுமானத்திட்டங்களால் தனிநபர்கள் பலனடைந்தார்களே தவிர அரசிடம் பணம் வரவில்லை. இதனால் இலங்கைபொருளாதாரம் சர்வ நாசம் அடைந்தது.
  1. ராஜபக்ஷே அரசு பல வரிச்சலுகைகள் அளித்தது. அது நாட்டை போண்டியாக்கியது.
  2. கோவிட்டின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வரவு குறைந்தது. எனவே அவர்களால் கிடைக்கும் வருமானமும் வரவில்லை. எனவே நாடு கடும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டது.

இவற்றில் சீனாவிடம் வாங்கிய கடன்களே இலங்கையை இந்த நிலைக்குக் கொண்டு வந்தன என்ற கருத்து இந்திய ஊடகங்களால் தீவிரமாகப் பரப்பப்படுகிறது. இந்தக் கருத்தை மேற்கத்திய ஊடகங்களும், பொருளாதார நிபுணர்களும் இந்திய ஊடகங்களிடையே விதைக்கின்றனர். இந்தியாவில் இப்போதைய ஆட்சியாளர்களிடமும், அதிகார வட்டங்களிடையிலும் நிலவும் சீன எதிர்ப்பு மனநிலையின் காரணமாக இந்தக் கருத்து முக்கிய இடம் பெறுகிறது.

அதே நேரம் இது ஐ.எம்.எஃப். உருவாக்கிய நெருக்கடி IMF Crisis)என்று உமேஷ் மொரமுதலி என்ற இலங்கை ஆய்வாளர் கூறுகிறார். (டிப்ளமேட் 27.4.22).

அபினைத் திணித்தது போல நாடுகளின்மேல் பொருளாதார சீர்திருத்தங்கள் திணிக்கப்படுகின்றன என்கிறார் ஜோஸப் ஸ்டிக்லிட்ஸ் என்ற நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானி. நாடுகள் தங்கள் சந்தைகளைத் திறக்கச் சொல்லி வலியுறுத்தப்படுகின்றன, ராணுவத்தைக் கொண்டு மிரட்டப்படுகின்றன என்கிறார் அவர்.

உலகமயமாக்கலை நடைமுறைப்படுத்தும் நாடுகள் தங்கள் பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டை இழக்கின்றன. உலகமயமாக்கலை ஏற்றுக் கொள்ளும் நாடுகள் தனது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன. உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் கடன் வாங்க நேரிடும் நாடுகள் பொருளாதாரத்தை தனியார்மயமாக்க வற்புறுத்தப்படுகின்றன.அவை தனது வருமானத்தில் ஒரு பகுதியை இழக்கின்றன. தனியார் மயமாக்கலின்போது அரசுத் துறைகள் தனியாருக்கு விற்கப்படுவதால் அரசு வருமானத்தை இழக்கிறது.எனவே பட்ஜெட்டில் துண்டு விழுகிறது. நலத் திட்டங்களுக்கு செலவழிக்க அரசிடம் பணம் இல்லாமல் போவதாலும், அரசிடம் போக வேண்டிய பணம் பெருமுதலாளிகளிடம் குவிவதாலும் நாட்டில் மற்ற பிரிவினரிடையே வறுமை அதிகரிக்கின்றது. மேலும் கடன் வாங்கும் நிலைக்கு அரசுகள் தள்ளப்படுகின்றன.

“உலகமயம் பல நன்மைகள் செய்துள்ளது. ஆனால் அதற்கு ஒரு இருண்ட பக்கமும் உண்டு. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளியை உலகமயம் அதிகரித்து உள்ளது. நமக்கு ஒரு புதுவகையான உலகமயம் வேண்டும்” என்கிறார் முன்னாள் ஐ.எம்.எஃப். இயக்குநரான டொமினிக் ஸ்ட்ராஸ் கேன். அர்ஜண்டைனா, கிரீஸ் போன்ற பல நாடுகள் ஏற்கனவே போண்டியாகியுள்ளன. அந்த வரிசையில் இப்போது இலங்கை. இது வழக்கம்தான் என்று இன்னொரு கருத்து உள்ளது. இதில் எது உண்மை? மேற்கத்திய நாடுகளின் அரசியல் பொருளாதார நலன்களுக்கு ஏற்ற விதத்தில் பாதி உண்மைகள் திரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றனவா என்பது முக்கியமான கேள்வி.

இலங்கை 1965 லிருந்து ஐ.எம்.எஃப்.இன்உறுப்பு நாடாக இருந்து வருகிறது. 1977 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை சோஷலிச பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிடத் தொடங்கியது. அப்போதிருந்து பொருளாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, அரசுத் துறைகளைத் தனியார்மயப்படுத்துவது, பன்னாட்டு மூலதனத்துக்கு நாட்டைத் திறந்து விடுவது என்று நகர்ந்து வருகிறது.

1977லிருந்து 2000 வரை இலங்கை 16 முறை பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. (எகனாமிக் ஸ்டெபிலைசேஷன் புரோகிராம்). அதாவது 16 முறை இலங்கை பொருளாதாரம் நிலைகுலைந்துள்ளது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வந்திருக்கிறது. இத்தனைக்கும் இலங்கையின் பொருளாதார நிர்வாகம் ஐ.எம்.எஃப் திட்டங்களின் அடிப்படையில்தான் நடந்து வருகிறது என்கிறது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (IMF and the Sri Lanka bailout drama) Kandaswami Subramanian இலங்கையின் பொருளாதாரம் சமநிலை அடைய இன்னும் எத்தனை புரோகிராம்களை நடத்த வேண்டும் என்று கேட்கிறார் கட்டுரையாசிரியர் கந்தசாமி சுப்பிரமணியன்.

2010லிருந்தே இலங்கையின் வெளிநாட்டுக் கடன் அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கியது. போர் முடிந்ததும் இலங்கையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த உதவுவதாகக் கூறி பல வெளிநாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் படையெடுத்தன. இலங்கைக்கு மிகப்பெரிய அளவுக்குக் கடன் கொடுத்தது ஆசிய வளர்ச்சி வங்கி. இதில் அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளனர். இலங்கைக்கு அதிக அளவில் கடன் கொடுத்த நாடுகளில் ஆசிய வங்கிக்கு அடுத்த இடத்தில் சீனாவும் அதற்கு அடுத்த இடத்தில் ஜப்பானும் உள்ளன.

இலங்கையில் அம்பன்தோட்டா போன்ற துறைமுகங்களை மேம்படுத்துவது, பிரம்மாண்டமான சாலைகள் அமைப்பது, கட்டடங்கள் கட்டுவது என்று மாபெரும் திட்டங்கள் தீட்டப்பட்டன. இவையனைத்தும் நாட்டுக்கு வருமானம் அளிக்காமல் செலவு மட்டுமே வைத்து இழப்பை ஏற்படுத்தின என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

பிரச்சினை என்னவெனில் உலகமயத்தின் இயல்பே இதுதான். தமிழகத்தில் உதாரணமாக கோவையில் நான்கைந்து மேம்பாலங்கள் சில ஆயிரம் கோடி செலவில் கட்டப்படுகின்றன. அப்படியொன்றும் இவை போக்குவரத்துக்கு அவசியமானவை என்று சொல்ல முடியாது. இந்த மேம்பாலங்கள் வணிகத்துக்கும் பெருமுதலாளிகளுக்கும் உதவலாம். ஆனால் அரசுக்கு இவற்றால் எந்த லாபமும் இல்லை. நகருக்கு உள்ளே டோல் பூத் இல்லை. எனவே ஒருவேளை இந்த மேம்பாலங்களினால் பெரும் வணிக நிறுவனங்களின் வணிகம் அதிகரித்தாலும் அதன் பலன் முழுமையாக அரசுக்கு வந்து சேரப் போவதில்லை. அதே போலத் தான் பிரம்மாண்டமான சாலைகளும்.

மருத்துவம், குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு போன்ற துறைகள் மேலும்மேலும் தனியாருக்கு விடப்படும்போது இவற்றால் வரும்  நிதிவருவாயை அரசு இழக்கிறது. எனவே மக்களுக்கு வரி விதிப்பதையும், மேலும் மேலும் வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்குவதையும் தவிர அரசுக்கு வேறு வழி இல்லாத நிலை ஏற்படுகிறது.

இதேதான் இலங்கைக்கும் ஏற்பட்டது. பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. சீனா மேம்படுத்திய அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வெளிநாட்டுக் கப்பல்கள்வரவில்லை. அந்தத் திட்டம் தோல்வியடைந்ததால் நஷ்டம் என்கிறார்கள். அது வெற்றியடைந்திருந்தாலும் அதனால் வரும் வருமானத்தில் அற்பமான அளவுக்கே அரசுக்கு வந்து சேர்ந்திருக்கும்.

ஆனால் இந்தத் திட்டங்களால் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும், உள்ளூர் அரசியல்வாதிகளும் அவர்களின் உறவினர்களும் பெரும் லாபமடைகின்றனர். அரசு உள்ளுக்குள் உளுத்துப் போய்க்கொண்டே இருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு உலகமயத்தை இடையில் நிறுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு உடனடி காரணத்தினால் பொருளாதாரம் தகர்ந்து தரை மட்டமாவது நடந்தே தீரும்.

2009 ஆம் ஆண்டு, 2016 ஆம் ஆண்டு என்று இரண்டு முறை இலங்கை ஐ.எம்.எஃப். க்கு பொருளாதார சீர்திருத்தங்கள் செய்வதாக வாக்குறுதி அளித்தது.எரிபொருள், மின்சாரம் ஆகிவற்றுக்கு விலை நிர்ணயிப்பதிலும், வரிவிதிப்பிலும் மாற்றங்கள் செய்வதாக உறுதியளித்தது. ஆனால் பொதுமக்களிடையே கடும் அதிருப்தி ஏற்படும் என்று இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2019 ஆம் ஆண்டு கோத்தபய ராஜபக்ஷே ஆட்சிக்கு வந்ததும் அரசு தனது செலவினங்களுக்காக இஷ்டம் போல பணத்தை அச்சடிக்கத் தொடங்கியது. அப்போதே இது மோசமான விளைவுகளுக்குக் கொண்டு போய்விடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர்.யாரும்  கண்டுகொள்ளவில்லை.

ராஜபக்ஷே தேர்தலில் வாக்களித்தபடி பெரிய அளவுக்கு வரிவிலக்குகள் கொடுப்பதாக அறிவித்தார்.. வாட்வரி 15 லிருந்து 8 ஆகக் குறைக்கப்பட்டது. கட்டுமான நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் கொடுக்கப்பட்டன.நேஷன் பில்டிங் வரி என்று ஒரு வரி 2 சதம் வசூலிக்கப்பட்டு வந்ததும் விலக்கப்பட்டது. பங்குகளின் மீதான வரி, நிதி நிறுவனங்கள் மீதான வரி ஆகியவற்றிலும் சலுகைகள் கொடுக்கப்பட்டன. 2,50,000 வரை பணம் ஈட்டுபவர்களுக்கு வருமானவரி இல்லை என்றார் ராஜபக்ஷே. முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சம்ரவீரா இந்தச சலுகைகள் இலங்கையை வெனிசூலா, கிரீஸ் போல போண்டியாக்கிவிடும் என்றார். சலுகைகளால் இலங்கை போண்டியாகவில்லை. இந்த சலுகைகளின் எதிர்விளைவின் காரணமாகவே நாசமடைந்தது.

ராஜபக்ஷேவின் வரிச்சலுகை நடவடிக்கைக்கு உலக சந்தையில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டது என்கிறது எகனாமிக் டைம்ஸ். (what caused economic collapse of sri lanka). இலங்கைக்கு கடன் கொடுத்திருந்தவர்களான உலக நிதி நிறுவனங்கள் இலங்கையின் மதிப்பீட்டை (ரேங்கிங்) குறைத்தனர்.அந்நாடு வெளிநாட்டு நிறுவனங்களிடையே மேலும் கடன் வாங்குவதை அடியோடு தடுத்தனர்.இது Nosedived மூக்குடைப்பு என்றழைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையிலிருந்துதான் இலங்கையில் அன்னிய செலாவணி பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது. அரசு வரிவிலக்குகள் கொடுக்கக் கூடாது. நலத்திட்டங்களில் ஈடுபடக்கூடாது, இலவசமாக எதுவும் கொடுக்கக் கூடாது என்பதே பன்னாட்டு நிதி நிறுவனங்களின் விருப்பம். அரசின் வருமானம் குறைந்தால் தங்களுக்கு வர வேண்டிய வட்டியும் அசலும் வராது என்பதும் அரசு பலவீனப்பட்டால் அங்கே கொள்ளையடிக்க முடியாது என்பதும்தான் இந்த மூக்குடைப்பு தாக்குதலுக்குப்பின்னுள்ள காரணங்கள்.

1977இல் இலங்கை தாராளமய பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டதிலிருந்தே அது இறக்குமதி செய்யும் பொருட்களின் அளவு ஏற்றுமதியை விட அதிகரித்து வந்தது. இந்த நெருக்கடியை அரசு கடன் வாங்கியே சமாளித்து வந்தது. எனவே ராஜபக்ஷே ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மோசமான நிலையிலிருந்த பொருளாதாரம் மேலும் மோசமடைந்தது. இந்த நேரத்தில்தான் கோவிட் வந்து சுற்றுலா நின்று போனது. கடன்கள் ஏறின.

உரம், விவசாயக் கருவிகள் உள்ளிட்ட அனைத்தையும் இலங்கை இறக்குமதி செய்துவந்தது. இப்போது இவற்றை வாங்கப் போதுமான அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இறக்குமதி செய்யப்படும் செயற்கை உரங்கள் தேவைப்படாத இயற்கை வேளாண்மைக்கு நாடு முழுவதும் மாற வேண்டும் என்று ராஜபக்ஷே உத்தரவிட்டார்.

இது போதுமான முன் தயாரிப்பு இல்லாத திட்டமாகும். இயற்கை வேளாண்மையில் ஈடுபடும்போது முன்பைவிட 20 சதவீதம் அதிக நிலப்பரப்பு தேவைப்படும் என்று கணக்கிட்டு உள்ளார்கள். இப்படி விவசாயம் செய்யப்படும் நிலப்பரப்பை அதிகரிக்காமல், மக்களுக்குப் போதுமான பயிற்சி இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்ட இயற்கை வேளாண்மை திட்டம் அரசுக்குப் பெரிய நெருக்கடியைக் கொண்டு வந்தது. உடனடியாக தேயிலை உற்பத்தி குறைந்தது. பொருளாதாரம் மேலும் வீழச்சி கண்டது. நெல் உற்பத்தி 20 சதம் வீழ்ச்சி கண்டது. அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. ஏப்ரல் 12 அன்று இலங்கை வெளிநாட்டுக் கடன்களைத் திரும்ப செலுத்துவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

பின்பு அரசு வட்டிவிகிதங்களை அதிகரித்தது. விலைகளின் மீதான அரசு கட்டுப்பாட்டை நீக்கியது. எரிபொருள் விலை இரண்டு மடங்கு ஆனது. 87 ரூபாய் மண்ணெண்ணெய் 300 ஆனது. இது நடுத்தர வர்க்கத்தையும் ஏழைகளையும் படுகுழியில் தள்ளியது.

சில மாதங்களாகவே இலங்கை மக்கள் மருந்து, உணவு, பெட்ரோல் பொருட்களை வாங்க முடிவேயில்லாத நீண்ட வரிசைகளில் நிற்பது வழக்கமாக இருந்தது. காத்துக் கிடந்தாலும் கிடைக்குமா என்பது சந்தேகமே என்ற நிலையே நிலவியது. விலை நிர்ணயத்தில் அரசு கட்டுப்பாட்டை நீக்கியதும் நிலைமை இன்னும் மோசமடைந்தது. 13 மணிநேரம் மின்தடை வாட்டி வதைத்தது. மக்கள் ரொட்டியை எரித்துப் போராடினர். மருந்துக்காக சுகாதார அமைச்சகத்தை சூறையாடினர். சீனா உதவிக்கு வரும் என்று அரசு எதிர்பார்த்தது. சீனாவிலேயே பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டிருந்ததால் நினைத்த அளவுக்கு உதவும் நிலையில் சீனாவும் இல்லை. பெட்ரோல், உணவுப் பொருட்கள் விலையேற்றத்தை எதிர்த்து உக்கிரமான போராட்டங்கள் வெடித்தன.கோத்தபய வீட்டுக்கு

வெளியே போராட்டக்காரர்கள் முகாம் அமைத்தனர். கோடா கோ ஹோம் என்ற முழக்கம் உருவானது.

மே ஒன்பதாம் தேதி போராட்டக்காரர்களை அரசு ஆதரவு குண்டர்கள் தாக்கினர். போராட்டக்காரர்கள் 200 பேர் காயமடைந்தனர். பதிலடியாக போராட்டக்காரர்கள் ராஜபக்ஷே, அவர் கட்சி அரசியல்வாதிகள், அமைச்சர்களின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

ராஜபக்ஷே சகோதரர்களின் அரசு மேலும் மேலும் பலவீனமடைவதை உணர்ந்த பல உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறியதால் கோத்தபய அரசு மைனாரிட்டி ஆனது. கோதா திரும்பவும் எமர்ஜென்ஸியை விலக்கிக் கொண்டார்.ரனில் விக்ரமசிங்கே இப்போது ஆட்சியில் அமர்ந்து இருக்கிறார். இப்போது உதவி கேட்டு அவர் போகக் கூடிய இடம் ஒன்றே ஒன்றுதான். உலக வங்கி, ஐ.எம். எஃப். உடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர்களும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

ஒரு நாடு இந்த நிலைக்கு வந்த பிறகு அதை மீட்க ஐ.எம்.எஃப். ஆல் மட்டுமே முடியும் அல்லது அந்த நாடு கார்ப்பரேட்டுகள், அன்னிய நிறுவனங்களின் சொத்துக்களை தேசிய உடைமையாக்கி முற்றிலும் வேறுவிதமான பொருளாதார அமைப்பை ஏற்படுத்தி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.ஈரானில் இப்படி நடந்தது. இதெல்லாம் ராஜபக்ஷே சகோதரர்களுக்கு  நன்கு தெரியும். அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சிக்காரர்கள் அல்ல. பிறகு ஏன் நெருக்கடி தோன்றிய உடனே ஐ.எம்.எஃப்.ஐ. நாடவில்லை என்பது ஒரு அடிப்படையான கேள்வி.

உலகமயம், தனியார்மயத்தை ஏற்றுக் கொண்ட அர்ஜண்டைனா, பிரேசில், கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளிலும் இவ்வாறு பொருளாதாரம் கடன் சுமையால் திவாலானதும், பின்பு ஐ.எம்.எஃப். போன்ற அமைப்புகளிடம் பெரும் கடன்கள் பெற்று மீட்கப்படுவதும் இம்மி பிசகாமல் நடைபெற்றது. ஆனால் ஐ.எம்.எஃப். விதித்த நிபந்தனைகளின் காரணமாக அரசு செய்து வந்த சேவைகள்,செயல்படுத்தி வந்த நலத்திட்டங்கள் முழுவதும் காணாமல்போய் பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத்தரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுவிட்டது.

நெருக்கடிகள் உச்சத்தில் இருக்கும்போது நாடுகள் ஐ.எம்.ஃப். ஐ அணுகத் தயங்குவது உலகம் முழுவதும் இருப்பதுதான்.ஐ.எம்.எஃப். சதையையே அறுத்துக் கேட்கும். மக்களுக்கு அரசு அளித்து வரும் சேவைகளை நிறுத்தச் சொல்லும் என்ற பயம் எல்லா ஆட்சியாளர்களுக்கும் உள்ளது. உலகமயத்தை முதலில் செய்யும் ஆட்சியாளர்கள் மக்களால் வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களது அரசியல் வாழ்க்கை முடிந்து போகிறது.

இதன் காரணமாகவே ராஜபக்ஷே குடும்பத்தினர் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க வேறு வழிகள் தேடினார்கள், சற்றே கோமாளித்தனமாக இருந்தாலும் கூட. அவர்கள் தெற்கு இலங்கையைச் சேர்ந்த நிலவுடைமையாளர்கள். தங்களைச் சேர்ந்தவர்கள், அடியாட்களுக்கு அள்ளி வழங்கும் சிந்தனை கொண்டவர்கள். இலங்கை அரசின் எல்லா மட்டங்களிலும் தங்கள் குடும்பத்தினரைக் கொண்டு வந்து நிரப்பினர்; மிக நீண்ட காலத்துக்கு இலங்கையைத் தங்கள் குடும்பத்தினர் ஆட்சி செய்ய அடித்தளமிட்டு வந்தனர்.

விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடித்ததற்குப் பிறகு மகிந்த ராஜபக்ஷே சிங்கள மக்களிடையே பெரும் தலைவராக உலாவந்து கொண்டிருந்தார். அதை மூலதனமாக கொண்டு ஒருவிதமான கவர்ச்சிகரமான திட்டங்களை செயல்படுத்தும் சர்வாதிகாரியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றார். ஆனால் ஐ.எம்.எஃ.ப்பிடமும் செல்லாமல், சுயசார்பையும் அதிகரிக்காமல் நெருக்கடியைக் கடக்கமுயன்று படுதோல்வியடைந்தார். உலகம்இன்னொரு பாடத்தைக் கற்றுக் கொண்டது.

ஐ.எம்.எஃப். உடனடியாக இலங்கையை மீட்பதற்கான தனது நிபந்தனைகளை விதிக்கத் தொடங்கிவிட்டது. இலங்கைபொருளாதாரக் கொள்கையில் கறாராக இருக்க வேண்டும். வரியை அதிகரிக்க வேண்டும். அன்னிய செலாவணியை மாற்றுவதில் விட்டுக்கொடுத்துப் போக வேண்டும். அதாவது இலங்கைநாணயத்தின் மதிப்பைக் குறைக்க வேண்டும் என்று ஐ.எம்.எஃப். அதிகாரி அன்னி வுல்ஃப் சொல்லியுள்ளார். Reuters. 23.4.22.

ஏப்ரல் இறுதியில் இலங்கை மற்றும் ஐ.எம்.எஃப். அதிகாரிகள் கொழும்புவிலும் வாஷிங்டனிலும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி Rapid Financing Instrument and an Extended Fund Facilityஅதாவது பணம் அளித்து இலங்கையை மீட்பதற்கான வழிவகைகளைத் திட்டமிட்டுள்ளனர்.ஐ.எம்.எஃப். முதலில் 300 மில்லியன் முதல் 600 மில்லியன் டாலர் வரை மருந்துகளும்  அத்தியவசியப் பொருட்களும் வாங்க கடன் கொடுக்கும். அடுத்த நான்கு மாதங்களில் உலக வங்கி ஒரு பெரும்தொகை கடனாகக் கொடுக்கும். எனவே ஒரு வட்டம் முழுமையடைகிறது.

மக்கள் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படுத்துவதில் ஐ.எம்.எஃப். உம்,உலக வங்கியும் தோல்வி அடைந்துள்ளன. உலகின் கடன் நெருக்கடிக்கும் வறுமைக்கும் இவை காரணமாக அமைந்துள்ளன. ஏழை நாடுகளை மேலும் நெருக்கடியில் தள்ளிவருகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் உலகமயத்துக்குப் பிறகு கிராமங்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்ட வட இந்திய கிராமங்களில் இருந்து லட்சோப லட்ச மக்கள் பஞ்சைப் பராரிகளாக நாடு முழுவதும் அலைந்து திரிவது நாம் அறிந்ததுதானே.

உணவின் விலை உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, கடுமையான பொருளாதார வீழ்ச்சி என்ற மூன்று நெருக்கடிகளால் உலகின் 69 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 25 ஆப்பிரிக்க நாடுகள், 25 ஆசிய நாடுகள், 19 தென்னமெரிக்க நாடுகள். என்று UNCTD குறிப்பு கூறுகிறது. (Srilanka is the first dominoto fall in the face of a global debt crisis).

இந்த நாடுகள் அனைத்தும் அடுத்தடுத்து இலங்கையைப் போல கடன் நெருக்கடியில் சிக்கும் அபாயத்தில் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.வளர்ச்சியடைந்த நாடுகள் இவ்வாறு பாதிக்கப்படும் மூன்றாம் உலக நாடுகளை வளர்ச்சியடைந்த நாடுகளின் சந்தைகளாகவும், அவற்றுக்கு மூல வளங்களையும், மனித வளத்தையும் ஏற்றுமதி செய்பவையாகவும் கருதுகின்றன. வட்டிக்கடைக்காரர்கள் போல இவற்றை சூறையாடி மக்களின் சொல்லொண்ணா துயருக்குக் காரணமாகின்றன.

கடந்த ஒரு ஆண்டில் தெற்காசியப் பகுதியில் மூன்று நாடுகளில் தலைமை மாற்றம் நடந்துள்ளது. நேபாளத்தின் பிரதமர் சர்மா ஒலி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷே என மூன்றுபேர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 1958 லிருந்து பாகிஸ்தான் ஐ.எம்.எஃப். இடமிருந்து 21 முறை கடன்கள் பெற்றுள்ளது. அதில் 12 பெய்ல் அவுட். அதாவது நெருக்கடியில் இருந்து தப்ப வாங்கப்பட்டவை ஆகும்.

இந்த ஆட்சித் தலைவர்கள் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இணக்கமானவர்கள் அல்ல என்பதால்தான் இவர்கள் பதவியிலிருந்து விலக்கப்பட்டனர் என்று ஒரு கருத்து நிலவுகிறது.இலங்கை போராட்டங்களைப் பற்றி இப்படிக் கருத்துச் சொல்வது போராடும் மக்களைக் கொச்சைப்படுத்துவதாகும் என்பது இன்னொரு தரப்பு.

மக்களின் போர்க்குணத்தையும் போராட்டத்தையும் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. அதே நேரம் அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் இல்லாத நிலையில் ஆட்களை மட்டும் மாற்றுவதைப் பன்னாட்டு நிறுவனங்களும் ஏகாதிபத்தியங்களும் விரும்பியே வந்துள்ளன என்பதும் ஒரு உண்மையாகும்.

மூன்றாம் உலக நாடுகளின் ஜனநாயக ஆட்சியாளர்களை ஊழல்வாதிகள் என்று சொல்லி ராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதையும், ராணுவ ஆட்சியாளர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர் என்று சொல்லித் திரும்பவும் மக்களாட்சியை ஏற்படுத்துவதையும் ஏதோ வேடிக்கை விளையாட்டு போல ஏகாதிபத்தியங்கள் திரும்பத் திரும்பச் செய்து வருகின்றன.

எனவே மகிந்தா பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டதை ஏகாதிபத்தியங்கள் விரும்பவே செய்யும். அதற்கு ஆதாரம்தான் அவர்கள் உடனடியாக ரனிலுடன் பேச்சுவார்த்தை நடத்துவது. மகிந்தாவுக்குப் பதில் இன்னொருவர் ஆட்சியில் அமர்வது இலங்கையில் உள்ள ஏகாதிபத்தியங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும். பன்னாட்டு நிறுவனங்கள் இலங்கையில் தொடர்ந்து வணிகம் செய்வதைப் பாதுகாக்கும். அந்த நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பு முறை பாதுகாக்கப்பட்டு தொப்பி போல பிரதமர், ஜனாதிபதி மட்டுமே மாற்றப்படுவது அந்த அமைப்பு முறையால் லாபம் அடைந்தவர்களுக்கு நன்மைதானே.

போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது. ஒரு வேளை அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துவதிலும், ஏகாதிபத்திய தளையிலிருந்து தங்கள் நாட்டை விடுவிப்பதிலும் இலங்கை மக்கள் வெற்றி பெறவும்கூடும்.

 

 

iramurugavel@gmail.com