கொள்ளை நோய் அகதிகள்
மனுஷ்ய புத்திரன்
அங்கு கைவிடப்பட்டவர்களின்
மிகப்பெரிய ஊர்வலமொன்று
சென்றுகொண்டிருக்கிறது
போர்கள் வருவதற்கு முன்பு
அகதிகள் வந்து விடுகிறார்கள்
கொள்ளை நோய் பரவுவதற்கு முன்பு
கொள்ளை நோய் அகதிகள் புறப்பட்டு விட்டார்கள்
பெரியவர்கள் குழந்தைகளையும்
முதியவர்களையும் சுமந்துகொண்டு
அவர்கள் கடக்க முடியாத
விதியின் தொலைவொன்றைக்
கடந்துகொண்டிருக்கிறார்கள்
சிறுவர்களும் சிறுமிகளும்
தட்டு முட்டுச் சாமான்களை
சுமந்தபடி நடந்துகொண்டிருக்கிறார்கள்
கால்முறிந்த மனைவியை சுமந்துகொண்டு
ஒருவன் நடக்கும் புகைப்படத்தைக்கூடக் கண்டேன்
அவர்கள் சுமக்க முடிந்த அளவு
உடமைகளுடன் மட்டும் வெளியேற
அந்த நகரம்
அந்தக் காலம் அவர்களை அனுமதித்திருக்கிறது
அவர்கள் தலையில் இருந்துதான்
மாநகரங்கள் எழுந்தன
அந்த நகரங்கள் அவர்களைக் கைவிட்டன
அவர்கள் கைகள்தான்
வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கான
வீடுகளைக் கட்டின
அவர்கள் ஒரே இரவில்
இருப்பிடமற்றவர்களானார்கள்
அவர்கள் கால்கள்தான்
வாகனங்கள் அற்ற தார்ச்சாலைகளை போட்டன
அந்த சாலையில்தான் அவர்கள்
அவசர அவசரமாக வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்
அவர்களைப்பற்றி யாருக்கும் சிந்திக்க நேரமில்லை
நள்ளிரவுக்குள் நாட்டையே மூடுமாறு
முன்னிரவில் சொன்ன அரசருக்கு
அவர்களைப் பற்றி
வழக்கம் போல் எந்த நினைவும் வரவில்லை
அவர் யாருக்கும் எந்த அவகாசமும் தராமல் இருப்பதில்
எப்போதும் எல்லையற்ற இன்பம் அடைகிறார்
ஒரு பேரிடர் காலத்தில்
பிராணிகள் பூகம்பத்தை முன்னுணர்வதுபோல
அவர்கள் இந்த நகரம் தன்னைக் கைவிடும் என்று
உள்ளுணர்வால் அறிந்திருந்திருந்தார்கள்
பறவைகளும் மீன்களும் இடம்மாறிச் செல்வதுபோல்
அவர்கள் வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
கொரோனொவுக்கு மருந்து உருவாக்குவதற்கு முன்பு
நாம் கொரோனோ அகதிகளை உருவாக்கியிருக்கிறோம்
அகராதிக்கு அது நம் புதிய கொடை
’கொரோனோ அகதிகள்’
இப்படித்தான் இந்த நாடு முழுக்க
ஒவ்வொரு நகரத்தின் பேருந்து நிலையங்களும்
வெளியூர்காரர்களான
கொரோனோ அகதிகளால்
நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன
செத்துக்கிடக்கும் பேருந்துகளின் மீதும் ரயில்களின்மீதும்
அவர்கள் தலைகளை முட்டிக்கொண்டு அழுகிறார்கள்
’எப்படியாவது எங்களை ஊருக்குப் போகவிடு’ என்ற கதறல்
ஒரு சித்ரவதை முகாம்களின் குரல்கள் போலவே இருக்கிறது
ஏன் வெளியூர்காரர்கள் ஒருவர்கூட
நமது நகரங்களை நம்பவில்லை?
இந்த நகரங்கள் தங்களை பட்டினியால் கொன்றுவிடும்
என்று ஏன் அத்தனை உறுதியாக நம்புகிறார்கள்?
இறந்துவிட்டால் தங்கள் பிணங்கள் இழிவாக நடத்தப்படும்
என்று ஏன் அத்தனை பயத்துடன் நினைக்கிறார்கள்?
நாம் அசாதாரணக் காலங்களில் மட்டுமல்ல
சாதாரணக் காலங்களிலும் அவர்களை
அப்படித்தான் நடந்தியிருக்கிறோம்
நம்மிடயே வேறொரு கிருமி நிரந்தரமாகக் குடியிருக்கிறது
அது எளியவர்களை எப்போதும் வேட்டையாடுகிறது
அவர்களின் குருதியில் நமக்கான ஒயினை
அது உற்பத்தி செய்கிறது
ஒருபோதும் நம்மால் கொல்லமுடியாத கிருமி அது
எங்குமே மருந்தில்லாத கொள்ளை நோய் அது
அவர்களுக்குத் தெரியும்
நமது கைகள் அவர்களுக்காகத் தட்டப்படுவது
ஒரு குரூர நகைச்சுவையின் அங்கமென்று
நமது நன்றியறிவித்தல்கள்
நமது போலி மனச்சாட்சியின் ஆபரணங்களென்று
அவர்கள் இதையெல்லாம் ஒருபோதும் நம்புவதில்லை
இந்த நகரவாசிகளை மட்டுமல்ல
இந்த நகரத்தின் தலைவர்களை மட்டுமல்ல
தங்கள் கடவுள்களையும் கூட
ஆபத்துக் காலங்களில் அவர்கள் நம்புவது இல்லை
அவர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ளும்
தமது கரங்களையே நம்புகிறார்கள்
வெளியேறும் தங்கள் கால்களையே நம்புகிறார்கள்
அந்த ஊர்வலம் முடிவற்றுச் சென்றுகொண்டிருக்கிறது
இயங்காத பேருந்து நிலையங்களில் கூட்டம் குறையவில்லை
யாரும் அவர்களைத் தடுக்கவில்லை
யாரும் ’இங்கிருங்கள் நாங்கள் உங்களுக்கு இருக்கிறோம்’
என்று சொல்லவில்லை
ஒருபோதும் அவர்கள்
அந்த வார்த்தையைக் கேட்டதில்லை
அது அப்படித்தான் நிகழ முடியும்
அது அப்படித்தான் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது
தலை நகரம் இப்போது
வெளியூர் தொழிலாளிகள் இல்லாத நகரமாகிவிட்டது
ஒவ்வொரு நகரமுமே அப்படித்தான் சுத்தமாகிருக்கிறது
அவர்கள்தான் நோய்களைப் பரப்புகிறவர்கள்
என்று நம்பும் நகரவாசிகள்
ரகசியப் பெருமூச்சு விடுகின்றனர்
நகரத்தின் சுமை குறைக்கப்பட்டிருப்பதாக
அதிகாரிகள் நிம்மதியடைகின்றனர்
அந்த நெடும் பயணத்தில்
யார் ஊர் போய் சேர்ந்தார்கள்
எனபதற்கு எந்தத் தகவலும் இருக்கப்போவதில்லை
யார் பட்னியால் இறந்தார்கள் என்பதற்கோ
யார் கொள்ளை நோயால் இறந்தார்கள் என்பதற்கோ
ஒருபோதும் தகவல்கள் வரப்போவதில்லை
எஞ்சியவர்கள் மறுபடி நகரங்களுக்கு
திரும்பி வருவார்கள்
கொள்ளை நோய் வெளியேறிய பிறகு
சாலைகள் திறக்கப்படும்
வாகனங்கள் ஓடத் தொடங்கும்
பசி அவர்களை அங்கே அழைத்து வரும்
அவர்கள் வராவிட்டால்
பாராளுமன்றக் கட்டிடத்தை
யார் புதுப்பிப்பது?
ராமருக்கு யார்
கோயில் கட்டுவது?
அடுத்த கொள்ளை நோய்க்கு
வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களுக்கான
வீடுகளை யார் கட்டித்தருவது?
29.3.2020
பகல் 2.34
மனுஷ்ய புத்திரன்