புத்தகங்களைத் திருடுகிறவன்

இலக்கியங்களை  பற்றி நீங்களும் நானும் தெரிந்து என்ன செய்யப்போகிறோம் . ஒன்றுமேயில்லை நானும் நீங்களும் பிறக்கிறோம். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி மண்ணுக்குள் புழுவாகவோ, பிடி சாம்பலாக ஆற்றிலோ,குளத்திலோ, அல்லது கடலிலோ வானிலோ, எப்போதேனும் யாருக்கும் அகப்படாமல் எங்கோ எப்படி இவ்வளவுதானே இந்த வாழ்வு அது ஆண்டியோ, அரசனோ, யாராய் இருக்கட்டுமே யாரையும் வானத்திலே புதைக்க முடியாது மண்ணிலேதான். சமாதிகளை கோட்டை போல அரண்மனை போல கட்டிக்கொள்ளலாம் அதற்கு தகுதியானவனாக , தகுதியானவளாக அதில் புதைக்கப்பட்டது இருக்கணும், இல்லையென்றால் ஒரு நூற்றாண்டு தாங்காத அடையாளங்களாக மாறிவிடும்.

இந்த வாழ்வை ஒரு பெரும் நிலபரப்புடன், பெரும் மனிதக்கூட்டத்துடன் ஆயிரமாயிரம் காட்சியுடன் உங்களையும், என்னையும், இந்த நிலத்தையும் அதன் காட்சிகளையும் நீண்ட நெடுங்காலத்துக்கு இம்மண்ணில் தக்க வைக்கிற மாயத்தை நிகழ்த்துகிறது இலக்கியம். மனித மன இடுக்குகளில் புகுந்து விசாரணை செய்து அதை ஆயிரமாயிரம் மக்களுக்கு கடத்துகிறது என்கிற விடயங்கள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும். கடந்த காலங்களின் ஆயிரமாயிரம் பக்கங்களை இன்றைய மனிதன் முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒற்றை சாதனம் இலக்கியம் மட்டுமே. சினிமா அதை செய்யும் என்றாலும் அதற்கும் எழுத்து வடிவிலான ஆதார வரலாறு வேண்டும். அதையும் தேர்ந்த எழுத்தாக்கிய பின்பே காட்சியாக்க முடியும். ஒருவன் இலக்கியமோ, அதற்க்கு இணையான புத்தகங்களோ படிக்காமல் அறிவாளியாக இருக்கலாம் ,ஆற்றல் மிக்கவனாக இருக்கலாம். ஆனால் உறுதியாக சொல்ல முடியும் இலக்கியமோ வேறு எதுவோ வாசிப்பற்ற புரிதல் பார்வையென்பது இரு பரிமாண தோற்றம் மட்டுமே முப்பரிமாண பார்வையுடன் உலகை அணுக இலக்கிய வாசிப்பு அவசியம்.

ஒரு வரலாற்று கட்டிடம் தருகிற தகவல்களை விடவும், ஒரு சிலையோ அல்லது ஓவியமோ தருகிற தகவல்களை விடவும், ஒரு இலக்கியம் கடந்த காலத்தின் மிகச்சிறந்த தரவுகளை நமக்குத் தந்துவிடும் அது புதினமாகவோ கவிதையாகவோ இருக்ககூடும். நிலம், மனிதன், வாழ்வு, கலை, போர் என ஒவ்வொன்றையும் ஒரு நூற்றாண்டை அது உங்களுக்கு தந்துவிடும். அதிகாரத்தினால் எழுதப்படும் வரலாற்றில் பொய்யும் புரட்டும் மலிந்திருக்க வாய்ப்புண்டு, நாம் இது நாள்வரை பார்ப்பதும் அதுதான். அதே நேரம் ஒரு கலைஞனால் எழுதப்படும் இலக்கியத்தில் அப்படி நேர்வது மிக குறைவே. அதில் உங்களையும் , என்னையும் தனி தனியாக அடையாளம் காண்பதை விடவும் உலகின் ஒரு பெரும்நிலபரப்பின் நூறாண்டு கடந்த வாழ்வு, மொழி, வீரம், நேர்மை, பகட்டு ,பாசாங்கு, காதல், அரசு, அதன் அதிகாரம், மக்கள் என எல்லாவற்றையுமதில்  கண்டுணர முடியும். அதுதான் இலக்கியம்  இலக்கியத்தின் வழியே உலகைப்பார்ப்பது, உலகின் வழியே இலக்கியத்தை பார்ப்பது. என்கிற எனது புரிதல் வழியே  ருஷ்ய இலக்கியத்தின் மாபெரும் கவிஞன் அலெக்சாந்தர் புஷ்கின் அவர்களின்  கடைசி படைப்பான கேப்டன் மகள் பற்றி உங்களுடன் சின்னதாக பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

நாம் ஆப்ரோ அமெரிக்கர்களை பற்றி புரிந்து வைத்திருக்கிறோம், அந்த  வகையில் புஷ்கினை ஆப்ரோ ருஷ்யர் என்று சொல்லாம்  புஷ்கினின் தாய் வழி தாத்தா  அப்ராம் ஹனிபால் என்கிற நீக்ரோ அபிசீனியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர். துருக்கியர்கள் ஒரு யுத்தத்தில் அவரை சிறைபிடித்து  ருஷ்ய சக்ரவர்த்தியான ஜார் முதலாம் பீட்டருக்கு பரிசாகத் தந்துவிட்டனர். அந்த அரபு ஊழியனின் பேத்தி மகனே நம் மாபெரும் ருஷ்ய இலக்கிய மேதை புஷ்கின்.

காப்டன் மகள் அது கடந்த கால வாழ்வை பற்றி நமக்கு சொல்வதுடன் நிகழ்காலத்தை கடந்த காலத்துடன் ஒப்பீடு செய்ய சொல்கிறது. நான் அப்படி உணர்கிறேன். வாசித்தால் நீங்களும் அப்படியே உணர்வீர்கள்.

புஷ்கினை உலக இலக்கிய கர்த்தாக்களிலேயே மாமேதை என்பார்கள் அந்த மகத்தான கலைஞனை கவிஞர் என்றும் இலக்கிய ஆசான் என்றும் தெரியாமலே 1990களில் காதலின் மனம் வீசுமொரு இரவில் காப்டன் மகளை வாசித்து அதை என் நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. மகத்தான இலக்கிய கர்த்தா லியோ டால்ஸ்டாய் அவர்களுக்கு முன்னோடி, புஷ்கின் அவர்கள் அவர்தான் ருஷ்ய இலக்கியத்தின் எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருக்கிறார் என்று மக்சிம் கார்க்கி கூறுகிறார். காலத்தை பிரதிபலிக்கிற எழுத்துக்கள் புஷ்கினுடையது. என் படைப்புகளில் கலைத் தன்மை கொஞ்சம் இருக்குமென்றால் நான் புஷ்கினுக்கும் நன்றி சொல்ல வேண்டியவனே. காப்டன் மகளில் புகாச்சோவ் என்கிற விவசாயிகளின் கலகக் கூட்ட தலைவனின் வரலாற்றை கைகளில் ஏந்தி அதற்கு அழகிய வண்ணம் தீட்டுகிறார் இலக்கிய மாய வித்தைக்காரர் புஷ்கின்

காப்டன் மகள் புஷ்கின் எழுதிய கடைசி புதினம் 1836 இல் எழுதப்பட்டது. 1744-1775 ஆண்டுகளில் புகச்சோவ் தலைமை தாங்கிய விவசாய எழுச்சியை பின்னணியாகக் கொண்ட நாவலிது.

1774 களில் விவசாயிகளின் நலனுக்காக கலகம் செய்த புகச்சோவ் என்கிற கலகப்படை தலைவனை பற்றிய படைப்பு வரலாற்றின் மீதான புனைவு இந்தப் புதினம், நம் காலத்து சந்தனக்காடு வீரப்பனை நினைவுபடுத்த கூடியது. நான் அப்படி கருதுகிறேன்.( சந்தன வீரப்பன் விவசாயிகளின் கலக கும்பலின் தலைவன் இல்லை ) வாசித்தால் உங்கள் கருத்தும் அதுவாக இருக்கலாம்.

அன்றைக்கு ருஷ்ய செல்வந்தர்களின் பகட்டான வாழ்வு, அவர்களது நேர்மை, பொழுதுபோக்குக்காக எளிய மனிதர்களை மனசாட்சியற்று அவர்கள் பயன்படுத்தும் விதத்தை பகடி செய்து எழுதுவதில் வல்லவர் புஷ்கின். செல்வந்தர்களின் பகட்டு தன்மையை அதன் மீதான இவ்வளவு இலக்கிய மாண்போடு  பகடி செய்யும் வேறு ஒரு படைப்பை நான் பார்க்கவில்லை. புதினத்தின் நாயகன் பியோதர் அந்திரேயெவிச்  இன்று போல் அந்த நாட்களில் ஊருக்கு ஒரு பள்ளி இல்லையென்பதால்  நாயகனின் தந்தை தன் 300 அடிமைகளில் குடிபழக்கமற்ற எழுத தெரிந்த சவேலிச் என்கிற ஒரு அடிமையை தேர்ந்தெடுத்து அவனிடம் பராமரிப்பிற்காக ஒரிரு வயதிலேயே தன்மகனை ஒப்படைக்கிறார்கள். அடிமை வேலைக்காரனின் பாதுகாப்பில் வளர்கிற கதாநாயகனுக்கு அந்த பண்புள்ள அடிமை எழுத படிக்க கற்று தருவதுடன்  தந்தையை போல கவனித்துக்கொள்கிறான்.

பியோதருக்கு பன்னிரண்டு வயதாகிறது இப்போது புதிய ஜெர்மன் ஆசிரியரை நியமிக்கிறார்கள். ஜெர்மன் ஆசிரியர் பப்ரே குடிகார சோம்பேறி ஆனால் ஆர்வமூட்டக்கூடியவர், ஆசிரியரின் சோம்பேறிதனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் இந்த புதினத்தின் நாயகனான பியோதர் சுதந்திரமாக சேட்டைகள் செய்தபடி, புறா வளர்த்துக்கொண்டு திரிய அவனது அப்பாவுக்கு இந்த விடயம் தெரியவருகிறது.

இதற்க்கு மேலும் இவனை இப்படியே விடக்கூடாது என அன்றைய பிரபுக்கள் வழக்கமான ராணுவத்துக்கு சேவை செய்ய அனுப்புவது என்கிற வழி முறைபடி மகனை ராணுவ சேவைக்கு அனுப்புகிறார். அந்தியெவிச்சை குழந்தையிலிருந்து தந்தையைப்போல் கவனித்துக்கொள்ளும் வேலைக்காரன் சவேலிச் கூடவே செல்கிறான்  ராணுவ சேவையில் சேர தந்தையின் கடிதத்துடன் போகும் வழியில் குடியும் சூதாட்டமும் ராணுவத்தினருக்கு அழகு என போதிக்கும் படைப்பிரிவு கேப்டன் இவன் இவானோவிச் ஸூரினை சந்திப்பது குடித்து கும்மாளமிட்டு சீட்டாடிய வகையில் 100 ரூபில் தோற்பது என முதல் அத்தியாயம் ஒரு அழகிய கவிதை போல தொடங்குகிறது …அனேகமாக  புஷ்கினின் படைப்புகள் எவ்வளவுக்கெவ்வளவு  இலக்கியமோ அவ்வளவுக்கவ்வளவு சாகச பாணியிலான புனைவாகவும் இருக்கும்  (அவரோட துப்ரோவ்ஸ்கி புதினமும் அப்படி தான் …..)

அன்பான தாய் கண்டிப்பான தேசப்பற்றுள்ள தந்தையென ராணுவத்துக்கு சேரப்போகிற அன்றைய மேல் தட்டு பிரபுக்களின் ராணுவ வாழ்க்கை அதன் பகட்டான உயர்குடி மனோபாவத்தை ஆசிரியர் பகடி செய்கிறார். சூதாடியதில் நூறு ரூபில் இழக்கிறளவு அவர் அப்பா 300 அடிமைகளுக்கு சொந்தமுள்ள பணக்காரர் என்பதால் பணத்தைப் பற்றி நம் நாயகனுக்கு கவலையில்லை, அவர்கள் ராணுவ சேவைக்குப் போவது அதில் சம்பாதித்து வாழ்வை நடத்த  வேண்டும் என்பதற்காக அல்ல அவர்களின் சக்ரவர்த்திக்கு தங்கள் விசுவாசத்தை காட்டவும் தனது தேச பக்தியை காட்டவும்தான். 300 மனிதர்களை அடிமையாக வைத்து சுரண்டிக்கொள்வது அவர்களுக்கு கலாச்சாரம், பண்பாடு, அது தான் அன்றைக்கு நாகரீகம். இதையெல்லாம் அனுமதிக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லும் பகட்டு கூட்டம், ராணுவ உயர் பதவியென்பது அவர்களுக்கு சமூக அந்தஸ்த்தின் அடையாளம்.

ராணுவப் பணிக்காக செல்லும் வழியில் கடுமையான பணி புயலில் அவர்கள் சிக்குண்டு இருக்கும்பொழுது புஷ்கின் இப்படி எழுதுகிறார். “ஒரு மனிதன் மூடநம்பிக்கைகளை வெறுத்த போதிலும் சந்தர்ப்பம் வரும்போது சுலபமாக மூடநம்பிக்கைகளுக்கு இரையாகிவிடுவான் என்று  புஷ்கின் ஒவ்வொன்றைப் பற்றியும் பகடி செய்வதில் பெரிய நிபுணர்.

ராணுவத்தில் சேர்வதற்காக தன் மகனை அனுப்பும் நம் நாயகனின் தந்தை தன் பல்ய நண்பரும் மகன் போகும் கோட்டையின் ராணுவத் தளபதியுமான தன் பால்ய நண்பருக்கு ஒரு கடிதம் எழுதி மகனிடம் கொடுத்து அனுப்புகிறார்.

’அன்பிற்க்குரிய தளபதிக்கு!

என் ஆருயிர் இளம் ராஸ்கலை உங்களிடம் அனுப்பியுள்ளேன் அவனை முள்ளம்பன்றி கையுறைகளால் நன்கு கவனித்துக் கொள்ளவும். ’என்று தொடங்கும் அந்த கடிதம்

இந்த கடிதத்தை அந்த அதிகாரி வாசிக்கிறார் பிறகு நம் நாயகனைப்பார்த்து

“இதற்கு என்ன? பொருள் தெரியுமா” என்று கேட்க

“ நீங்கள் என்னை அன்பாக நடத்த வேண்டும்” என்று நம் நாயகன்  சொல்லுவான். ஆனால் உண்மையில் என் மகனை சொகுசாக வைத்திருக்காமல் அவனை கண்டிப்புடன் நடத்தும்படி கேட்கிறார். அதன் பிறகு அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் இலக்கிய உலகில் இதுவரை கண்டிராத பகடியென்பேன். தொலை தூர கிர்கீசிய கிராமத்தில் இப்படி வசதியற்ற மர வீட்டில் சிக்கிக்கொள்வோம் என்று நம் நாயகன் கனவு கூட கண்டதில்லை

அவன் கனவு கண்டதோ  வேறு ஒன்றை 300 பண்ணையடிமைகளின் சொந்தக்காரரின் மகனான நான் ராணுவ சேவைக்கு அனுப்பப்படுவது என்பது நடனமாடவும், குடிக்கவும், கேளிக்கை சொகுசுகளை அனுபவிக்கவும், நகர மாடமாளிகையை சுற்றி பார்க்கவும், உல்லாசமாக இருக்கவும் கனவு கண்டவன், கடைசியில் வசதி குறைந்த நாட்டின் எங்கோ தொலை தூரத்திலிருக்கும் கிர்கீஸ் ஸ்தெப்பி நிலபரப்பிலிருக்கும் பெலகோர்ஸ்  கோட்டைக்கு அனுப்பப்படுகிறான். அதுவாவது வசதியான பெரிய கோட்டை கொத்தளமாக இருக்கும் என்று பார்த்தால் அங்கே மிகச் சாதாரண மர வீடுகள், அவற்றை சுற்றி உயரமான மர வேலிகள் இவ்வளவு தான் இருக்கிறது. இதுதான் கோட்டையாம். சந்தேகத்தில் வண்டிக்காரனிடம் கோட்டை எங்கே என்று கேட்கிறான்.

வண்டிக்காரன் அந்த மர வீடுகளை தான் காட்டுகிறான். இதுதான் கோட்டையா நம் நாயகனுக்கு உற்சாகம் இல்லாமல் போய்விடுகிறது. சரி தளபதியின் வீட்டுக்குப் போ என்கிறான் அந்த வீடும் மிக எளிய மரவீடுதான். அதுவும் சிறிய வீடு அந்த நாட்களில் ராணுவத்தினர் சமாதான காலங்களில் ரஷ்யாவின் தொலை தூரமெங்கும் பரவி இருப்பார்கள் அப்படி இருப்பவர்கள் தனித்தனி முகாம்களில் இல்லாமல் அக்கம் பக்கத்து கிராமங்களில் ஓரளவு வசதியானவர்கள் வீடுகளில் அவரவர் பதவிக்கேற்ப தங்கிக்கொள்வார்கள். யுத்தம் என்றால் ஒன்று சேர்ந்துக்கொள்வார்கள். அங்கே கேப்டனின் மனைவிகளின் ஆதிக்கம்தான் ஜாரின் மனைவிகள் போல ஆணையிடுவது குடியானவர்களை சுரண்டி பிழைப்தென நம் நாயகன் அங்கு போய் சேர்ந்ததும் அவனுக்கு தங்குவதற்க்கு ஒரு வீட்டை தளபதியின் மனைவி ஏற்பாடு செய்கிறாள். தளபதி மனைவியின் தோட்டத்தில் குதிரையை மேய விட்ட உள்ளூர்காரனை பழி வாங்க அவனுடைய வீட்டில் புதிதாக வந்துள்ள புதிய இளம் அதிகாரிக்கு இடம் தர சொல்கிறாள். இது தான் அந்த பழி வாங்கும் முறை. இப்போது நம் நாயகனுக்கு இருக்கிற ஒரே ஆறுதல் அழகான பண்பான கேப்டனின் மகள் மட்டுமே.

 ராணுவ பணிக்கு வந்த இடத்தில் பியோதர் அந்திரேயெவிச்சுக்கு  ஷவாப்ரின் என்கிற அதிகாரியுடன் நட்பு கிடைக்கிறது. இவர்கள் இருவருமே கோட்டை தளகர்த்தரின் அதாவது கேப்டனின் மகளை காதலிக்கிறார்கள். ஆனால் கேப்டன் மகள் நம் கதாநாயகனையே காதலிக்கிறாள். ஒரு கட்டத்தில் கோட்டை தளகர்த்தர் பெண்ணின் மீதுள்ள காதலால் அந்த நாள் வழக்கபடி சட்ட விதிகளுக்கு புறம்பான வாள் சண்டைக்கு இருவரும் தயாராகிறார்கள். நம்மூரில் ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு வரியா என்று அழைப்பது போல அந்த ஊரிலும் யார் தகுதியும் திறமையும் உள்ளவன் என்று நிருபித்துக்கொள்ள வலுச்சண்டைக்கு அழைப்பார்கள். பெரும்பாலும் துப்பாக்கி, சில சமயம் வாள் அதில் யாராவது ஒருவர் மட்டுமே தப்பிப் பிழைக்க முடியும். (அப்படியான ஒரு வலுசண்டையில் தான் இந்த புதினத்தின் ஆசிரியர் புஷ்கின் மரணமடைந்தார்.) அந்த சண்டையும் பெண்ணுக்காக நடந்ததே.

சட்டத்துக்குப் புறம்பான சண்டை என்பதால் இருவரும் மறைவான ஒரு இடத்தில் சண்டை போடுகிறார்கள். உயிரோடு இருப்பவருக்கு காப்டன் மகள் சொந்தம். இந்த விடயம் எப்படியோ நம் நாயகனின் வேலைக்காரன் சவேலிச்சுக்கு தெரிந்து தன் எசமானனை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று அவர் பெயரை சொல்லி கத்திக்கொண்டு ஓடி வருகிறான் இதில் பியோதரின் கவனம் பிசகிய சமயத்தில் எதிரி நம் நாயகனின் தோல்பட்டையில் வாளை சொருகி விட பியோதர் மயங்கி விழுகிறான். கண்விழித்து பார்க்கும்போது எதிரே கேப்டன் மகள்கண்ணீரோடு உட்கார்ந்திருக்கிறாள். கோட்டை ராணுவ மருத்துவர் அந்த நாட்களில் எங்கோ போய்விட கோட்டை நாவிதரே வாளால் ஆழமாக வெட்டப்பட்ட காயத்துக்கு மருத்துவம் செய்கிறார். இதில் முக்கியமான விடயம் அன்றைய நாட்களில் உலகம் முழுக்கவே வெட்டு காயங்களுக்கு  நாவிதர்கள் மருத்துவர்களாக இருந்திருக்கிறார்கள். உலகம் முழுக்க இதுதான் பண்பாடாக இருந்திருக்கிறது. சில பழக்கவழக்கங்கள் உலகம் முழுக்க ஒன்று போலதான் இருக்கிறது. அதுவும் ருஷ்யாவில் பல பழக்க வழக்கங்கள் நம் பண்பாட்டோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறது.

இந்த நாவல் எழுதப்பட்டு 190 வருடங்கள் கடக்கப் போகிறது ஆனால் அதன் உணர்வுகளும், மனோபாவங்கள் இப்போது போலவே அப்போதும் எந்த மாற்றமுமற்று இருக்கின்றன.  பணம் படைத்தவர்கள், அதிலும் பழமைவாதிகள் அப்போது மட்டுமல்ல இப்போதும் அப்படித்தான் பின் எப்போதும் அவர்கள் அப்படித்தான் அவர்கள் திருத்தப்படவேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.

அப்படி கிர்கீஸ் ஸ்தெப்பியில் பெலகோர்ஸ்க் கோட்டை புகச்சோவால் கைப்பற்றப்படுகிறது.  அங்கு தான் நம் நாயகன் ராணுவ அதிகாரியாக இருக்கிறான். பெரிய பாதுகாப்பற்ற ஒரேயொரு பீரங்கி கொண்ட மர வீடுகளால் ஆன குடியிருப்பும் மர வேலியால் ஆன தடுப்பும் உள்ள பலவீனமான கோட்டையது, இந்த கோட்டையை  புகசேவ் கைபற்றி ராணுவ ஜெனரல்கள் எல்லோரையும் பிடித்து தூக்கில் போடுகிறான்.  அந்த கோட்டையின் தளபதி மகளும், நம் நாயகனும் மட்டும் தப்பி பிழைக்கிறார்கள்.

அதற்கான காரணம் நம் நாயகன் ராணுவ பணிக்காக வீட்டிலிருந்து தன் வேலைக்காரனுடன் கிளம்பும் போது அவனது பிரமாண்டமான குதிரை வண்டி பனி புயலில் சிக்கிக்கொள்கிறது. கடும் பனியில் சிக்கிய நம் நாயகனின் குதிரை வண்டியை மாறு வேடத்தில் திரிந்துக்கொண்டிருந்த புகச்சேவ் பாதுகாப்பாக ஒரு விடுதிக்கு அழைத்து செல்கிறான். அவன் தான் அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளியென நம் நாயகனுக்கும் அவனது வேலைக்காரனுக்கும் தெரியாது. பனிப்புயலில் இருந்து காப்பாற்றியதற்க்கு நன்றியாக நம் நாயகன் புகச்சேவுக்கு மதுவும் விலை உயர்ந்த முயல் தோலால் ஆன கோட்டும் அன்பளிப்பாக தருகிறான். அதற்கு நன்றியாகவே இப்போது இவன் உயிர் தூக்கிலிருந்து தப்புகிறது.

காப்டனின் மகள் உயிர் தப்பினாலும் அவளது வாழ்வு இப்போது வெறி கொண்ட விலங்கின் முன் சிக்கிக்கொண்ட நிலைமை அந்த விலங்கு முன்பு ரஷ்ய படையில் நம் நாயகனுக்கு தோழனாய் இருந்து பின் காப்டன் மகளுக்காக வாள் சண்டையிட்ட ஷ்வாப்ரின் இப்போது கலகக்காரன் புகச்சோவ் படையுடன் சேர்ந்துக்கொள்கிறான். அவன் காப்டன் மகளை அபகரிக்க நினைக்கிறான்  அவளோ அந்த ஊர் பாதிரியாரின் நோயுற்ற உறவினள் என்கிற பெயரில் பதுங்கியிருப்பவள் தூக்கிலிடப்பட்ட காப்டனின் மகளென்று தெரிந்தால் அவள் உயிருக்கு கலகக்காரர்களால் ஆபத்து. இதற்கிடையில் அவளும் நம் நாயகனும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அவளை காப்பாற்ற வேண்டும் இந்த போராட்டங்கள்  மட்டுமே புதினமென்றில்லாமல்  அந்த நாட்களின்  ருஷ்ய நகர்புற, தொலை தூர கிராமங்களின் உள்ளொளியை அதன் சரிவை, மேட்டிமை பகட்டை, நசுக்கி நாசமாக்கப்ட்டவர்களின் எழுச்சியை  அது மீண்டும்  மிக கொடூரமாக அடக்கப்பட்ட துயரத்தை பேசுகிற புதினமிது.

அடிமைகளை நசுக்கிச் சாறெடுக்க உரிமையுள்ளவன், நசுக்குவதற்கு தன்னை மனமார ஒப்புக்கொடுக்கிறவன் என்கிற கதாபாத்திரங்களை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்.

புஷ்கின் 1773 ஆம் ஆண்டில் கிர்கீஸ் பகுதியின் ஒரேன்புர்க் என்கிற பகுதியை புஸ்கின் இப்படி எழுதுகிறார்,  இன்றைய நாட்களுக்கும் அது பொருந்தக்கூடியதாக இருக்கிறது. இந்த வட்டாரம் மிகப் பெரியதாகவும் செல்வம் கொழிக்கும் பகுதியாகவும் இருக்கிறது. அங்கே வசித்து வரும் மக்கள் பாதி காட்டுமிராண்டிகளாகவே இருந்தனர் அவர்கள் சட்டங்களுக்கும், சமூக வாழ்க்கைக்கும் பழக்கப்படாதவர்கள் அளவுக்கு மீறிய துணிச்சலும் குரூரமான பழக்கவழக்கங்களும் கொண்டவர்கள் என்று எழுதுகிறார்.  ஒரு வேளை ருஷ்யா மாறியிருக்கலாம். ஆனால் இன்றைக்கும் நம்மூரிலும், இன்னும் பல ஊர்களிலும் இதுதானே நிலைமை இன்றைய சூழல்களுடன் நம்மால் இதை பொருத்திப்பார்க்க முடியும்.

கடந்த காலத்தில் விசாரணை கைதிகளை சித்ரவதை செய்வது என்பது விசாரணையின் முக்கிய முக்கியமான பங்காக இருந்தது. ( இப்போதும் தான் ) ஆனால் புஷ்கின் இப்படி எழுதுகிறார்,

இப்போது சித்ரவதை செய்வது கூடாது என்கிற உத்தரவு இருக்கிறது ஆனால் அந்தக் கருணைமிக்க உத்தரவை யாரும் பின் பற்றுவது கிடையாது. சித்ரவதை செய்வது காட்டுமிராண்டித்தனம் என்பதை ஏற்பதற்கில்லை என்று சொல்லும் நீதிபதிகள் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்று புஷ்கின் விமர்சனம் செய்கிறார். 200 வருடம் கழித்தும் அதே தன்மையிலிருந்து மாறாத சித்ரவதைகளையும், இந்த மாதிரி தீர்ப்பெழுதும் நீதிபதிகளை நாம் இப்போதும் பார்க்கிறோம்.

புதினத்தில் நாயகன் பணியில் உள்ள கோட்டை கலகக்காரன் புகச்சோவால் கைப்பற்றப்பட்டு அதிகாரிகள் எல்லாம் தூக்கிலிடப்பட நம் நாயகனுக்கு மட்டும் சிறப்பு சலுகையாக தூக்கில் இருந்து தப்பி சுதந்திரமாக இடத்துக்கு போக அனுமதி கிடைக்கிறது. ஆனால் அவனுக்குள்ள நெருக்கடி கோட்டையில் சிக்கி இருக்கும் தன் காதலியை மீட்பது அவளை தன் தாய் தந்தையரிடம் அழைத்து சென்று கடுமையான கண்டிப்புள்ள பெற்றோரிடம் அவளை மணக்க சம்மதம் பெறுவது, இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள் இதனிடையே கலக்காரன் கோட்டையிலிருந்த எல்லோரையும் தூக்கிலிட உன்னைமட்டும் தப்ப விட்டதேன் என்று ருஷ்ய அரசு கேள்வியெழுப்பி சந்தேகத்தில் தேச துரோக குற்றம்சாட்டி பியோதரை கைது செய்கிறார்கள். பிறகு அதிலிருந்து அவன் தப்பி கேப்டன் மகளை எப்படி அடைகிறான் என்கிற பதட்டமும் விறுவிறுப்புமான கலையழகுமிக்க இந்த நாவலை நீங்கள் வாசிக்க வேண்டும்.

பிழைப்புக்காக சொகுசான அழுகிய வாழ்க்கைக்காக யார் காலிலும் மண்டியிடும் பிறவிகள் உலகமெங்கும் இருக்கிறார்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள் என்பதை அலெக்சாந்தர் புஷ்கின் எவ்வளவு கலாபூர்வமாக சொல்கிறார் என்பதை நீங்கள் வாசிக்க வேண்டும் மிக அற்புதமான கலை படைப்பு.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சகோதரிகள் : கரன் கார்க்கி
  2. சிங்கிஸ் ஐத்மாத்வ் : ஜமீலாவின் ‘’கிச்சினே பாலே ’’ -கரன் கார்க்கி
  3. ‘’தாக்குங்கள்.. பெத்யூன் நம்முடன் இருக்கிறார்’’: ஒரு மருத்துவப் போராளியின் கதை- கரன் கார்க்கி
  4. உண்மை மனிதனின் கதை |  பரீஸ் பொலெவோய்- கரன் கார்க்கி
  5. ருஷ்ய புரட்சியைப் பேசுகிற ஒற்றைப் புத்தகம்: ‘உலகை குலுக்கிய பத்து  நாட்கள்’ - கரன் கார்க்கி
  6. சிங்கிஸ் ஐத்மாத்தவின் முதல் ஆசிரியன்: இரண்டு பாப்ளர் மரங்கள் - கரன் கார்க்கி
  7. லேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு: அழிவற்ற அறத்தின் குரல் - கரன் கார்க்கி.
  8. நடப்பது என்பது எனக்கு வாசிப்பதுபோல, வாசிப்பது எனக்கு மண்ணில் நடப்பதுபோல - கரன்கார்க்கி
  9. லெனினுக்கு மரணமில்லை - கரன்கார்க்கி
  10. 1. புத்தகங்களைத் திருடுகிறவன்