பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்

போகாதே

என் அம்மா உள்ளேயிருந்து வாரிக்கொண்டு வந்தவற்றை நிலையில் நின்றபடி ஒவ்வொன்றாக வெளியே வீசியெறிந்துகொண்டிருந்தாள். என் ஆடைகள், என் பவுடர் டப்பா, மை உள்ளிட்ட மேக்-அப் பொருள்கள், என் செருப்புகள், என் உள்ளாடைகள், என் இருப்பையே வீட்டிலிருந்து அழித்துவிடவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டவள் போல. நான் வெளியே தள்ளி நின்றுகொண்டிருந்தேன். என் கன்னத்தில் அவள் கொடுத்த அறை இன்னும் எரிந்தது. என் அப்பா அப்போது வீட்டிலில்லை. அவர் இருந்திருந்தாலும் ஒன்றும் பெரிதாக நடந்திருக்காது. அவளது ஆங்காரத்துக்கு முன் அவருடைய சொற்பக் கோபம் சில கனைப்புகளாக  மட்டுமே வெளிப்பட்டிருக்கும்.

அவள் வீசியெறிவதை ஒரு நிமிடம் நிப்பாட்டினால் நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டுப் போய்விடலாமென எண்ணினேன். மிதுனா எனக்காகத் தெருமுனையில் காத்திருந்தாள். நாங்கள்  நேசித்து, காதலிகளாக மாறி இன்றோடு இரு வருடங்கள் முடிந்துவிட்டிருந்தன. எங்கள் தீர்மானத்தின்படி சேர்ந்து வாழப் போகும் முதல் நாள் அது.

எங்கள் விஷயம் தெரிந்த ஒவ்வொரு நாளுமே என் வீட்டிலும் சரி, அவள் வீட்டிலும் சரி, போராட்டமாகவே இருந்தது. இரண்டு மனங்களுக்கு இடையில் ஏன் உடல்கள் குறுக்கே வருகின்றன? மனங்களின் அந்தரங்கத்துக்கு  உடல்களின் அந்தரங்கம் வெறும் திரைதான் என்று யார் இவர்களுக்கு எடுத்துச் சொல்வது? அதுவும் என் அம்மாவிடம்.

பெற்ற பெண்களிடம் பஜாரி போல கத்துவதை அம்மாக்களுக்கு யாரும் கற்றுத்தர வேண்டாம்.  “உடம்பு கிடந்து அலையுதாடி?” என்று கத்துவாள் என் அம்மா. தெருவுக்கே கேட்கும். எல்லா அம்மாக்களுக்கும் ஒன்றே போலத்தான் குரல், திட்டு வார்த்தைகளின் அஞ்சறைப்பெட்டி எல்லா அம்மாக்களுக்கும் பொதுவானது.

மிதுனாவோடு நானும் உறவுகொள்ளும்போது பறவையாக வானத்தில் ஏகாந்தமாகப் பறப்பேன். டால்ஃபினாக தெள்ளிய கடல் நீரில் துள்ளுவேன். ஆனால், உறவுகொள்ளாமல், கைகளைக்கூடக் கோர்த்துக்கொள்ளாமல் பல வாரங்கள் நாங்கள் இருந்திருக்கிறோம். அவள் தன் வேலை நிமித்தமாக வெளிநாட்டுக்கு சென்றபோது மட்டுமல்ல, உள்ளூரில் அன்றாடம் நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதுகூட சில வாரங்கள் தொடர்ச்சியாகச் சேராமல் இருந்திருக்கிறோம். உறவில் செக்ஸை இரண்டாம்பட்சமாகக் கருதுவது ஒன்றும் பெரிய பாவமில்லையே!

அம்மா வீசியெறிந்த காதணிகளில் கல் வைத்த குண்டு ஜிமிக்கி ஒன்று என் கையில் கீறி கீழே விழுந்தது. இன்னொன்று என் பாதத்தின் மீது விழுந்தது. இப்போதைக்கு நிற்கப்போவதில்லை, அவள் ஒவ்வொன்றாக எறிவதைப் பார்த்தால் இன்னும் ஒரு மணி நேரம் பிடிக்குமென்று நினைத்துக்கொண்டேன். என் காதணிகளே ஐம்பது அறுபது ஜோடிகள் இருக்கும்.  என் புத்தகங்கள் வேறு இன்னும் இருந்தன.

மிதுனா காத்துக்கொண்டிருந்தாள். பக்கத்துவீட்டிலிருந்து ஸ்வேதா ஓடி வந்தாள். எட்டு வயதிருக்கும். “அக்கா, இந்த ஜிமிக்கியை நான் எடுத்துக்கவா?” அருகே வந்து கேட்டாள். பிறகு என் அம்மாவைப் பயத்தோடு பார்த்தாள். அம்மா எறிவதை ஒரு கணம் நிப்பாட்டினாள்.  “ஸ்வேதா, இங்க வா!” என்று அழைத்தாள். “அக்காவோடது எல்லாத்தையும் எடுத்துட்டுப் போ, வச்சுக்கோ,” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். ஸ்வேதா அவள் பின்னாலேயே குதித்தோடியபடிச் சென்றாள்.

அம்மா பின்னால் நான்தான் செல்கிறேனோ என்று கணம் தோன்றியது. அங்கிருந்து கிளம்பினேன். என்னைப் பார்த்தவுடன் “என்ன, அம்மா பெரிசா ஒன்னும் பிரச்னை செய்யலியே?” என்று கேட்டாள் மிதுனா. ”சீக்கிரமாவே நம்ம ரெண்டு பேரையும் வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிடுவாங்க,” என்றேன் புன்னகைத்தபடி அவளிடம்.

பொழுது விடிஞ்சாப் பிச்சைக்காரனுக்கு

நாளைக்குச் செய்ய வேண்டும் என்று வீட்டில் இரவு நேரத்தில் எதைத் திட்டமிட்டுப் பேசிக்கொண்டிருந்தாலும் என் பாட்டி உடனே தவறாமல்  சொல்வாள், ”பொழுது விடிஞ்சாப் பிச்சைக்காரனுக்கு.”  பொழுது எதற்காகப் பிச்சைக்காரனுக்காக விடியவேண்டும், ஏன் வசதியிருக்கிறவனுக்காக, பணக்காரனுக்காக நாளை அது விடியாதா? பங்களா, பண்ணை, தோப்பு, துரவு, பெட்ரோல் பங்க், பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக், பினாமி, அடியாள், வெளிநாட்டில் வங்கிக்கணக்கு, இதையெல்லாம் வைத்திருக்கிறவனுக்கு விடியாதா? சொல்லப் போனால், இதையெல்லாம் வைத்திருக்கிறவர்களைத்தான் முளைத்தவுடன் சூரியன் ஓடி வந்து காலையில் முதலில் நமஸ்கரிக்கிறது. ஆனால் ஏனோ இப்படிப் பொய்யும் புளுகுமாய் ஒரு சொலவடை.

ஒரு நாள் புது வீடு ஒன்று வாங்குவதற்கான பேச்சு எங்கள் குடும்பத்தில் அடிபட்டுக்கொண்டிருந்தது. “நாளைக்கி எல்லாரும் போய்ப் பார்த்துட்டு பிடிச்சா முடிவு செய்யலாம்,” என்றார் அப்பா. உடனே “பொழுது விடிஞ்சா” என்று ஆரம்பித்த பாட்டியிடம் மேற்படி சந்தேகத்தைக் கேட்டு வைத்தேன். ”பெரியவங்க  சொல்லுவாங்க. அதப் பாத்து நானும் சொல்றேன், உன்னை மாதிரி எதுக்கெடுத்தாலும் குறுக்க குறுக்க நாங்கள்ளாம் கேள்வி கேக்க மாட்டோம்,” என்று பாட்டி சிம்பிளாக எனக்கொரு குட்டு வைத்தாள். ஆனால், ஒரு முறை “பொழுது விடிஞ்சாப் பணக்காரனுக்கு.”  என்று சொல்லிப் பார்த்துவிட்டுக் கூறினாள், “என்னவோ சரியா வரலடி.”

நடுவில் புகுந்த என் அத்தை என்னிடம் விளக்கினாள்:

”நாளைக்கு செய்யறோம்னு நாம உத்தரவாதமா சொன்னா அத ஏதாவது கெட்ட யட்சிணி கேட்டுக்கும், மொதல்ல காரியத்தக் கெடுக்கும். அதுக்குத்தான் இப்படிச் சொல்றது. எங்களுக்கு நாளைப் பொழுதில பெரிசா நம்பிக்கையில்ல, பிச்சைக்காரனுக்குத்தான் நல்லது நடக்கும்னு.”

“அப்ப நீங்க சொல்றத யட்சிணி நம்பி, அது பிச்சைக்காரனுக்குக் கெட்டது செய்யணும், அதானே?”

“அவனுக்கென்னடி புதுசா கெட்டது நடக்க இருக்கு?” என்று பதிலுக்குக் கேட்டாள் அத்தை.

”பிச்சை எடுக்க முடியாமப் படுத்துட்டான்னா கெட்டது இல்லையா, மொத்தத்துல நல்ல மனசு உங்களுக்கெல்லாம்” என்றேன். “ இப்ப நாம பேசறத யட்சிணி ஒட்டுக் கேக்காதா? கேட்டா நீங்க ஏமாத்தறது அதுக்குத் தெரியாதா? அது உங்களை வந்து பழி வாங்காதா?” என்று கேட்டேன்.

“ஏதாவது உளறாதே,” என்றார்கள் பாட்டியும் அத்தையும் ஒரே நேரத்தில். அவர்கள் கண்களில் துளி பயம் தெரிந்தது எனக்குத் திருப்தியாக இருந்தது.

“பொதுவா யட்சிணிலாம் நல்ல மாதிரிதான். ஒன்னு ரெண்டுதான் அப்டி இப்டி. அதெல்லாம் நம்ம வீட்டுக்கு வராது. நரசிம்ம ஆராதனைல்லாம் பண்றோம்,” என்றாள் பாட்டி கொஞ்சம் சத்தமாக.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
  2. உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
  3. கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
  4. குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
  5. குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
  6. சிறுகதை: அழகு - பெருந்தேவி
  7. சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
  8. குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
  9. குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
  10. பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
  11. விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
  12. ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
  13. படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
  14. ஜானுவும் ராமும்- பெருந்தேவி
  15. நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
  16. துச்சலை- பெருந்தேவி
  17. கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
  18. பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
  19. 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
  20. அத்தனை நீண்ட கனவு  (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
  21. பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
  22. சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
  23. பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்