பிரதமர் நரேந்தர் தாமோதர்தாஸ் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்திய மக்களின் பாராட்டிற்கு உரியவர்கள். அவர்கள் நேர்த்தியாக தங்களின், தங்கள் அரசின் நோக்கத்தை அல்லது உள்நோக்கங்களைக் கூட வெளிப்படையாக சொல்லி செய்து நாட்டு மக்களுக்குத் தங்களை நன்கு உணர்த்தி வருகிறார்கள். அதில் ஒளி மறைவு என்றேதும் கிடையாது, இதுதான் நாங்கள், எங்களின் இலக்கு இதுதான், இப்படிதான் செயலாற்றுவோம், இதனை நீங்கள் எப்படிப் புரிந்துக் கொண்டாலும் அது பற்றியெல்லாம் கவலைப்படுபவர்கள் அல்ல நாங்கள் என்பதை ஒவ்வொரு அறிவிப்பிலும் செயலிலும் அவர்கள் உணர்த்திக் கொண்டே வந்துள்ளார்கள். சுருங்கக் கூறின் இந்நாட்டைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு திறந்த புத்தகம். அதனால்தான் கூறினேன் பிரதமரும் நிதியமைச்சரும் பாராட்டிற்குரியவர்கள் என்று.

அப்படி அவர்கள் தங்களை பட்டவர்த்தனமாக நிரூபித்த ஒன்றுதான் பிரதமர் மோடியின் கொரோனா தொற்றால் முடங்கிப்போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அறிவித்த ரூ.20 இலட்சம் கோடித் திட்டமும், அது எப்படி செலவிடப்படும் என்பதை தொடர்ந்து 5 நாட்களாக தொலைக்காட்சியின் மூலம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கமும்.

கெளசிக் பாசு, நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட இந்நாட்டின் பொருளாதார நிபுணர்கள் முதல் விப்ரோ நிறுவனத் தலைவர் அஜிம் பிரேம்ஜி, டிவிஎஸ் சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் உள்ளிட்டோர் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். அது, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட முழு அடைப்பு மற்றும் ஊரடங்கலால் வேலை வாய்ப்பு இழந்து வருவாய் இன்றி நாடு முழுவதிலும் வாடிக்கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கும், தங்கள் உற்பத்தியை சந்தைக்குக் கொண்டு வர போக்கு வரத்து வசதி இல்லாததால் காய்கறிகள், பழங்கள் முதல் மலர்கள் வரை சாகுபடியான அனைத்தும் அழுகி குப்பையானதால் பெரும் நட்டத்திற்கு ஆளான விவசாயிகளுக்கும், தங்கள் கைத் தொழிலை மட்டுமே நம்பி வேலை பார்த்து வருவாய் ஈட்டி வாழ்க்கை நடாத்தி வந்த நாவிதர், இசைக் கலைஞர்கள், சமையல் பணியாளர்கள், பானை, கூடை செய்து பிழைப்போர் என்று பல்லாயிரக்கணக்கான கைவினைஞர்கள், விவசாயம் நடந்தால் மட்டுமே வேலையும் கூலியும் வயிரும் வாழ்வும் என்றிருக்கும் உழவுக் கூலிகள், நகர்புற சந்தைகளில் நாள் முழுவதும் பொருட்களை ஏற்றி இறக்கி வியர்வையில் வாழும் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள், கடலுக்குச் சென்று மீன் பிடித்து வந்தாலும் அயலூர்களுக்கு அவற்றை அனுப்பி வணிகம் செய்து பிழைத்த மீனவர்களும் அது சார்ந்த சிறு வர்த்தகர்களும், இவர்களையெல்லாம் தாண்டி மாநிலம் விட்டு மாநிலம் வந்து குறைந்த கூலிக்கு உழைப்பு விற்று வாழ்ந்த பல கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 இலட்சம் கோடித் திட்டத்தின் கீழ் இவர்கள் யாவருக்கும் குடும்பத்திற்கு சில ஆயிரங்கள் நிதி உதவி அளிக்கப்படும் என்றுதான் எதிர்பார்த்தனர்.

இந்த எதிர்பார்ப்பு நியாயமற்றதன்று, உலக நாடுகள் அனைத்திலும் – அமெரிக்கா முதல் சிறியத் தீவு நாடான சிங்கப்பூர் வரை கொரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க முழு அடைப்பு அறிவித்த நாடுகள் அனைத்தும் அதனால் வருவாய் இழந்த பணியாளர்களுக்கும் உழைப்பாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவிப்பு செய்து அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் முழு அடைப்பு அறிவித்த அடுத்த நாளிலேயே அறிவிப்பையும் வெளியிட்டன. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஊதியத்தை நிறுவனங்கள் அளித்திட வேண்டும் என்று அறிவித்ததோடு அதற்கு அரசின் பங்களிப்பு எவ்வளவு என்பதையும் அறிவித்தன.

எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரை எடுத்துக்கொள்வோம். கொரோனா சிக்கலை எதிர்கொள்ள இதுவரை மூன்று நிதியுதவித் திட்டங்களை (stimulus packages) அந்நாடு அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 60 பில்லியன் சிங்கப்பூர் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இது இந்திய ரூபாயில் 3,15,000 கோடி வருகிறது. கொரோனா ஒரு பெரும் சிக்கலாக உருவாகும் என்பதையறிந்த சிங்கப்பூர் அரசு அதற்கான நிதியை தனது நிதி நிலை அறிக்கையிலேயே ஒதுக்கீடு செய்யத் தொடங்கியது. அதன் பிறகு மேலும் இரண்டு முறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை ஆதரவு நிதி நிலை அறிக்கை (Solidarity Budget) என்றுதான் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

இத்தொகை எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்பதையும் அரசறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பூர் நாட்டிற்கு பணி அனுமதி (Work Permit or S permit) பெற்று வந்து பணிபுரியும் அயல்நாட்டவர்களுக்கு அவர்களை பணியமர்த்தும் அந்நாட்டு நிறுவனங்கள் அயல்நாட்டுப் பணியாளர் வரி (Foreign Workers Levy – FWL) செலுத்த வேண்டும். மாதா மாதம் செலுத்த வேண்டிய இந்த வரியில் 750 டாலர் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது சிங்கப்பூர் அரசு.

கொரோனா முழு அடைப்பு மாதத்திற்கு சிங்கப்பூர் அரசுக்கு பணியாற்றிவரும் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், விவசாய அலுவலகங்கள் ஆகியவற்றிற்கான வாடகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நட்டம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்ட தொழில்களுக்கு அளிக்கும் கடன்களில் அரசின் பங்கு 80% இருந்து 90% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் பணியாளர்கள் ஒவ்வொருவரும் பெறும் ஊதியத்தில் 75% சிங்கப்பூர் அரசின் பங்காக இருக்கும், அது அதிகபட்சமாக 4,600 வெள்ளியாக இருக்கும் என்றும், ஒரு இலட்சம் வெள்ளிக்கும் குறைவான ஊதியத்தைப் பெறும் நிறுவனங்களின் இயக்குனர்களுக்கும் இந்த ஊதிய ஆதரவு நிதியுதவி  கிடைக்கும்.

சுய தொழில் புரிவோருக்கு மாதத்திற்கு 3,000 வெள்ளிகள் வரை ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு அளிக்கப்படும். 20 வயதிற்கு மேற்பட்ட சிங்கப்பூர் குடிமக்கள் அனைவருக்கும் கூடுதல் ஊதியமாக 300 வெள்ளியும், 20 வயதிற்கு குறைவான பிள்ளைகள் ஒவ்வொன்றுக்கும் கூடுதலாக 100 வெள்ளியும் குடும்பத்தினருக்கு ஆதரவு நிதியாக வழங்கப்படும். இதுமட்டுமின்றி, பணிபுரியும் அனைவருக்கும் அளிக்கப்படும் ஊதியம் 2,000 வெள்ளிக்குக் குறைவாக இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது அந்நாட்டு அரசு.

இதுபோல் ஆஸ்ட்ரேலியா, கனடா, அமெரிக்க நாடுகளும் ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் 1,5000 டாலர்கள் அளவிற்கு – ஆஸ்ட்ரேலிய அரசு 15 நாட்களுக்கு ஒருமுறை 1,200 டாலர்களை ஊதியமாக வழங்குவதென அறிவித்துள்ளன. இந்நாடுகள் அனைத்தும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மாத ஊதியத்தை அளித்திட உத்தரவு இட்டதோடு நிற்காமல் அதற்கான நிதிப் பங்கீட்டையும் செலுத்துகின்றன. அதனால்தான் இதனை ஊக்க நிதித் திட்டம் என்றழைக்கப்படுகிறது.

ஆனால் நமது நாட்டுப் பிரதமர் மோடி, நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்தை தவறாமல் அளித்திட வேண்டும் என்று வேண்டுகோள் விட்டதோடு நிறுத்திக் கொண்டார். அதற்கான நிதிப் பங்கீடு எதையும் நிறுவனங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அறிவிக்கவில்லை. இந்நாட்டின் தொழில், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் கொரோனா அடைப்பால் வருவாய் நின்றுவிட்ட நிலையில் தங்களால் இயன்ற அளவிற்கு ஒரு மாதத்திற்கு மட்டும் ஊதியத்தை அளித்துவிட்டு நிறுத்திக்கொண்டன. இந்த நிலையில்தான் அடுத்த மாத வாழ்விற்கு வருவாய் இல்லாமல் பல கோடிக்கணக்காக அயல் மாநிலப் பணியாளர்கள் இந்நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் தங்கள் சொந்த மண்ணை நோக்கி நடைபோடத் தொடங்கினர்.

இப்படி அயல் மாநிலங்களில் இருந்து வந்த பல்வேறு மாநிலங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த பணியாளர்களின் (Migrant Labours) எண்ணிக்கை மட்டும் எவ்வளவு தெரியுமா? 8 கோடிக்கும் அதிகம்! இவர்கள் யாவரும் சாதாரண உடல் உழைப்பாளிகளாக வந்த வேலை செய்து இன்றைக்கு திறன் வாய்ந்த பணியாளர்களாக (Skilled Labours) மாறியுள்ளனர். இவர்கள் வெளியேறுவது பெரும் இழப்பு என்று தொழில், வர்த்தக நிறுவனங்கள் கதறுவது இதனால்தான்!

எனவேதான் இப்படிப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், நகர்புற தொழிலாளர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை அரசு கொடுக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்களும் அஜிம் பிரேம்ஜி, வேணு சீனிவாசன் போன்றவர்களும் அரசுக்கு அறிவுறுத்தினர். அப்படி அரசு செய்யும் என்றும் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால் தொடர்ந்து 5 நாட்களாக பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி ஆதரவு நிதித் திட்டத்தை விளக்கி விளக்கிப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அது பற்றி ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை. எல்லா நாடுகளும் இப்படியான நிதியுதவியை செய்கின்றனவே நீங்கள் ஏன் அறிவிக்கவில்லை என்று கேட்டதற்கு, “ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்த வழிமுறை உண்டு, என்னைப் பொறுத்தவரை பசித்தவனுக்கு மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே சிறந்தது என்று கருதுகிறேன்” என்று தத்துவ சாதுரியமான பதிலைக் கொடுத்துள்ளார் நிதியமைச்சர். இந்த பதிலை இந்நாட்டின் நெடுஞ்சாலைகளில் கால் தேய நடந்துக் கொண்டிருக்கும் புலம் பெயர் தொழிலாளர்களிடம் சென்று நிரிமலா சீதாராமன் சொல்லியிருக்க வேண்டும், பசித்தும் நடந்துக் கொண்டிருக்கும் அவர்கள் உரிய  பதிலை தந்திருப்பார்கள்.

நமது கேள்வி என்னவென்றால் நாடு முழுவதும் தங்கள் மாநிலத்தை நோக்கி நடந்துக் கொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சிகளுக்கு மீன் கதையை சொல்லும் நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் அந்த கதையை சொல்லாமல் அவர்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் அள்ளி அள்ளிக் கொடுக்கப்பட்ட ஊக்கத் தொகை உதவித் திட்டங்களை ஆதரிக்கிறேன் என்று சொல்வது விநோதமாக இருக்கிறதே. பசி ஏப்பக்காரணக்கும் புளி ஏப்பக்காரணக்கும் வேறுபாடு தெரியாத ஒருவர் இந்நாட்டின் நிதியமைச்சராக இருக்கிறார்.

அதுதான் அவர்களுக்கு இலவயமாக 5 கிலோ அரசி அல்லது கோதுமை கூடுதலாக ஒரு கிலோ பருப்பு மூன்று மாதங்களுக்கு அளிக்கிறோமே என்கிறார். அதற்கு மட்டும் அரசுக்கு ரூ.48,000 கோடி செலவிடப்படுகிறது என்றும் சொல்கிறார்.  இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் காய்ந்துக் கொண்டும் மழை வந்தால் நனைந்து முளைத்துக் கொண்டிருக்கும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு அள்ளித் தருவதற்கு நிதி ஆதாரம் பேசும் நிர்மலா சீதாராமனுக்கு நமது கேள்வி: இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India) இந்நாட்டின் விவசாயிகளிடம் இருந்து வாங்கி சேமித்து வைத்துள்ள உணவுத் தானியங்களுக்கு இந்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளதா? இல்லையே. இந்திய உணவுக் கழகம் தனக்கு ஆகும் கொள்முதல் செலவுகளை ஈடுகட்ட தேச சிறு சேமிப்பு நிதியத்திடம் (National Small Savings Fund – NSSF) இருந்து அதிக வட்டிக்குக் கடன் வாங்கி அல்லவா உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து சேமித்து வைத்துள்ளது. அந்த வகையில் 2019-20 நிதியாண்டு வரை அதன் கடன் ரூ.1,98,000 கோடியாகவும் அது கட்ட வேண்டிய வட்டிச் செலவு ரூ.65,000 கோடி வரை உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றனவே! உண்மையா? இல்லையா? பிறகு இருப்பதில் இருந்து அள்ளித் தந்துவிட்டு அதற்கு ஏதோ மோடி அரசு தனது பட்ஜெட்டில் இருந்து வாரிக் கொடுத்ததைப் போல் கணக்குக் காட்டுவது ஏமாற்றுச் செயல் அல்லவா?

எருதின் புண் காக்கை அறியாது என்றொரு பழமொழி உண்டு. அதன் புண்ணில் ஈ உட்கார்ந்தால் கூட தனது வாலால் விரட்டிடும் எருதுக்கு அதில் காக்கை தனது அலகை விட்டுக் கொத்தித் திண்ணும் போது ஏற்படும் வலியை எப்படி காக்கை அறியாதோ அது போலத்தான் நமது ஆட்சியாளர்களும்! இந்நாட்டு மக்களின் வலி அவர்களுக்குத் தெரியாது, கார்ப்பரேட்டுகளின் தேவை அவர்களுக்கு புரிகிறது, அவர்களால் எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் அதனை ஈடுகட்டும் ஆட்சியாளர்களுக்கு சாதாரண மக்களின் வலி புரிவதில்லை, எனவே மீன் கதை சொல்கிறார்கள். இவர்கள் மாற மாட்டார்கள், மக்கள்தான் உணர்ந்து மாற வேண்டும்.

ஆனால் ஒரு உண்மையை எடுத்துக் கூறி முடிக்க வேண்டும். பசியிலும் சுமைகளையும் பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு தங்கள் ஊர்ப் போய் சேர நடையாய் நடந்துக் கொண்டிருக்கும் இந்த புலம் பெயர் தொழிலாளர்களும் அவர்களைப் போன்று நாடு முழுவதும் அன்றாடம் பாடுபட்டு உழைக்கும் 43 கோடி அமைப்புச் சாரா உழைப்பாளர்களின் உழைப்புப் பங்கில் விளையும் உற்பத்திதான் இந்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% விழுக்காடு என்பது மோடி, நிர்மலா வகையறாக்களுக்குத் தெரியாது, தெரிந்தாலும் காட்டிக்கொள்ள மாட்டார்கள், ஆனால் நாம் அறிவோம்.

சித்திரச் சோலைகளே – உமை நன்கு திருத்த இப் பாரினிலே – முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ! உங்கள் வேரினிலே. என்றுப் பாடினார் இவர்களின் உழைப்பின் பயனை உணர்ந்த புரட்சிக் கவிஞர் பாரதி தாசன்.

சென்னை, மே 20, 2020.