ஒரு அதிகார மையத்தை எதிர்த்து சாதாரண மக்கள் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல, அதுவும் எண்ணிகையில் மிகவும் குறைந்த, எல்லா வழிகளிலும் ஒதுக்கப்பட்ட பழங்குடியினர் வெற்றி பெறுவது என்பது நிச்சயம் உச்சி முகர்ந்து நினைவில் கொள்ளவேண்டிய அற்புதம். அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது! ஈக்விடார் நாட்டின் அமேசான் மண்ணில் வாழும் வொரானி பழங்குடியினர் எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அமேசான் காடு உலக அளவில் அதன் பல்லுயிர் பேணும் சூழலுக்காகப் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட எழுபது சதவிகித அமேசான் நிலம் ஏற்கனவே எண்ணெய் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், மீதமிருக்கும் தங்கள் பூர்வீக மண்ணைக்  காப்பாற்ற வொரானி பழங்குடியினர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு பெரும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்கள்.

அமேசான் காடுகள் வெறும் இயற்கை முக்கியத்துவம் உள்ள இடம் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான பழங்குடியினரின் மண் அது. அமேசானில் ப்ளாக் 22 (Block 22) என்று ஈக்விடார் அரசால் பெயரிடப்பட்டிருக்கும் மொத்த நிலமும் 18 வொரானி குழுக்களுக்கு வீடாக இருக்கிறது. சாலை வசதிகூட இல்லாத மக்கள் அவர்கள், காட்டில் வாழ்பவர்கள். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு தங்கள் மண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதற்கு அவர்கள் எடுத்த ஆயுதம்தான் படமிடல் (Mapping). இதன் மூலம் மண்ணின் மீதான அவர்களின் பூர்வீக உரிமையை நிலைநாட்டுவதோடு, அவர்கள் நிலத்தின் இயற்கை செறிவையும், அவர்கள் முன்னோரின் அனுபவ அறிவையும் வருங்காலத் தலைமுறைக்குக் கடத்த முடியும் என்று நினைத்தார்கள். GPS தொழில்நுட்பத்துடன், ட்ரோன்களின் உதவியுடன் 1,80,000  ஹெக்டேர் பரப்பளவு உள்ள தங்கள் நிலத்தைப் படமிட்டிருக்கிறார்கள். இந்த வரைபடத்தில் கிட்டத்தட்ட 10,000 GPS புள்ளிகள் உண்டு.

தொழில்நுட்பத்தின் உதவியை கையிலெடுத்தவர் ஓஸ்வாண்டோ நென்கிமோ. வொரானி பழங்குடியின இனத்தைச் சேர்ந்த ஓஸ்வாண்டோ அத்தனை வொரானி குழுக்களையும் சந்தித்து அவர்களுக்குGPS தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்து, படமிடலைத் தொடங்கியிருக்கிறார். பெரும் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து தங்கள் நிலத்தைக் காப்பாற்ற அவர்களுக்கு இருந்த ஒரே வழியாக இது மட்டும்தான் இருந்தது. கடந்த நவம்பரில் ப்ளாக் 22-ஐ எண்ணெய் நிறுவனங்களுக்குக் குத்தகைக்குவிட அரசு முடிவெடுத்தபோது வொரானி மக்கள் நீதிமன்றத்தை நாட முடிவுசெய்தார்கள். இப்போது நீதிமன்றம் நிலத்தின்மீதான வொரானி மக்களின் உரிமையை அங்கீகரித்திருக்கிறது.

வொரானி மக்களின் வார்த்தைகள் இவை மட்டும்தான் ‘எங்கள் கதையை நாங்கள்தானே சொல்ல வேண்டும்!’ வொரானி மக்களின் வலிமை பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.