ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித்தை 19ஆம் தேதி வரை கைது செய்யமாட்டோம் என்று காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் பா.ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய அவர், ‘ராஜராஜ சோழன் காலத்தில் தான் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன. ராஜராஜ சோழனின் காலம்தான் இருண்ட காலம்’ என்று பேசினார். பா.ரஞ்சித்தின் இந்த பேச்சு சர்ச்சையானது. இதுதொடர்பாக ரஞ்சித்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், சிலர் ஆதரவுகளும் தந்தனர்.

இதைதொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ரஞ்சித் முன் ஜாமின் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று (ஜுன் 13) நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பா.ரஞ்சித் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள் தந்தை பெரியார் எழுதிய சுயமரியாதை சமதர்மம் என்ற புத்தகம், குடவாயில் பாலசுப்ரமணிய ன் எழுதிய தஞ்சாவூர் என்ற புத்தகம், வெண்ணிலா என்ற ஆசிரியர் எழுதிய தேவரடியார் என்ற புத்தகம், ஆகிய புத்தகங்களின் அடிப்படையில் தான் இயக்குநர் ரஞ்சித் பேசியதாக கூறினார்.

இதைகேட்ட நீதிபதி, 1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை இப்போது ஏன் பேச வேண்டும். குறிப்பாக ஏன் ராஜராஜ சோழனை இலக்காக வைத்து பேச வேண்டும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். வரும் 19ஆம் தேதி வரை ரஞ்சித்தை கைது செய்யத் தடை விதித்த நீதிமன்றம், அன்றைய தினத்துக்கே வழக்கை ஒத்திவைத்தது. அதுவரை பா.ரஞ்சித்தை கைதுசெய்ய மாட்டோம் என்றும் காவல் துறை நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.