தேவே கௌடா மற்றும் குலாம் நபி ஆசாத் தலைமையில் ஆளும் கட்சி – எடியூரப்பா தலைமையில் எதிர்கட்சி என்று இரு தரப்புமே போராட்டங்களில் குதித்துள்ளனர். 

கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் காங். மற்றும் சுயேட்சைகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தது. தற்போது அக்கூட்டணியைச் சேர்ந்த 10 காங். எம்.எல்.ஏக்கள், 2 ஜ.தள எம்.எல்.ஏக்கள் மற்றும் 2 சுயேட்சைகள் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அவைத்தலைவரிடம் கடிதம் வழங்கியுள்ளனர். அவர்களது பதவி விலகல் ஏற்கப்பட்டால் ஆளும் கூட்டணி அரசு தனது பெரும்பான்மையை இழக்கும். அவைத்தலைவர், அவர்களது பதவி விலகலை இன்னும் ஏற்கவில்லை என்று அறிவித்ததை தொடர்ந்து அம்மாநில அரசியலில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

கர்நாடகத்தில் தொடர்ந்து நீடித்துவரும் குழப்பங்களால் முதலமைச்சர் குமாரசாமி தனது அரசு மற்றும் அலுவல் நிமித்தமான பணிகளை ஒத்திவைத்துள்ளார்.

ஆட்சியைத் தக்கவைக்கும் யுத்தியாக அதிருப்தி உறுப்பினர்களையும் அமைச்சரவையில் சேர்த்து புதிய அமைச்சரவையை உருவாக்கும் நோக்கில் அமைச்சரவையின் 21 காங். மற்றும் 9 ஜ.தள அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்தும் அதிருப்தி உறுப்பினர்கள் மனம் மாறவில்லை.

அதிருப்தி உறுப்பினர்கள் மும்பையிலுள்ள சொகுசு விடுதி ஒன்றில் முகாமிட்டுள்ளனர். அவர்களைச் சந்தித்து சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அம்மாநில காங். தலைவர்களில் ஒருவரான டி.கே. சிவகுமாரின் சந்திப்பை அதிருப்தி உறுப்பினர்கள் தொடர்ந்து மறுத்துவருகின்றனர். 

பாஜக, தாம் ஆட்சியைப் பிடிக்க ஜானநாயகத்தை படுகொலையை செய்வதாக காங். கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜகவை சேர்ந்த சட்டமன்ற மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்கள் விதான் சௌதாவின் அருகில் அமைந்துள்ள காந்தி சிலையின் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். 

அப்போது பேசிய பாஜக தலைவர் எடியூரப்பா, “இன்று மாலை நாங்கள் ஆளுநரைச் சந்திக்கிறோம். ஜீலை 12ல் கூடுகிற சட்டசபைக்கூட்டம் சட்டவிரோதமானது. அவர்களிடம் (மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங். கூட்டணி) போதிய பெரும்பாமை இல்லை. பாஜகவிற்கு வழிவிட்டு முதலமைச்சர் குமாரசாமி பதவி விலக வேண்டும்” என்றார். 

ஆளுநருக்கு அரசியல் சாசன சரத்து 190(3)(b)ஐச்  சுட்டிக்காட்டி அவைத்தலைவர் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிவிலகல் கடிதத்தை ஏற்றிடவே வேண்டும் என்று கடிதம் ஒன்றை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர். 

மாநிலங்களவையில் இப்பிரச்சனையைக் கிளப்பி காங். எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து மாநிலங்களவை 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.