தமிழ்நாட்டில் தொடர்ந்து பாஜக ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறதென நிரூபிக்கும் வகையில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத்தின் பேச்சு சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன் பங்குக்கு மோடியை புகழ்வது அதிமுக ஒரே ஒரு எம்.பி ரவீந்திரநாத் குமாரின் வேலையாக இருக்கிறது,

இதற்கிடையே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் அமெரிக்கா சென்றுள்ள ரவீந்திரநாத் குமார். அங்கு ஆசியா விருது விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ளார். அந்தப் பேச்சுதான் தற்போது வைரலாகிவருகிறது.

“நான் ரவீந்திரநாத் குமார். மோடியின் மண்ணான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்” என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு உரையைத் தொடங்கினார். தமிழ்நாட்டில் இருந்து சென்று தன்னை ஒரு இந்தியனாக அறிமுகப்படுத்திக்கொள்வதில் எந்த தவறும் இல்லை என்றாலும் நான் மோடி மண்ணான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்று பேசியதுதான் இங்கு சர்ச்சைக்குள்ளாக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், “நான் முதல் முறையாக தேர்தலில் நின்று வென்று இந்திய நாடாளுமன்றத்திற்குச் சென்றிருக்கிறேன். அதிமுக கூட்டணியில் நான் மட்டுமே வென்று சென்றுள்ளேன். எனக்கு முதல் முறை நாடாளுமன்றத்தில் பேசும்போது நடுக்கமாகவே இருந்தது. காரணம் நான் தனி ஆளாக போயிருக்கிறேன். ஆனால் அதன் பிறகு அந்த நடுக்கம் பயம் குறைந்து தொடர்ந்து 28 மசோதாக்கள் மீது பேசியுள்ளேன். சந்தோஷம் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க முக்கியக் காரணம் எனது கட்சியான அதிமுகதான். அதிமுகவுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்” என்று ரவீந்திரநாத் பேசியுள்ளார்.

இதைப்பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டபோதும், மோடியின் மண் என்று ரவீந்திரநாத் குமார் பேசியதை சிலர் சர்ச்சையாக்கி வருகின்றனர். “அதில் என்ன தவறு இருக்கிறது. மோடிதானே தற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். எனவே அந்த அர்த்தத்தில் அவர் பேசியிருக்கிறார். இதில் தவறே இல்லை” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதை நிராகரித்து விட்டாராம்.