கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி எந்தக் காலத்திலும் திராவிட கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி சேரமாட்டோம் என்று கூறிய பாமக தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதில் எந்தவித நெருடலும் இல்லை என தெரிவித்துள்ளார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி , கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தமிழக அமைச்சர்கள் மீது 24 ஊழல்கள் பட்டியல் அடங்கிய ஒரு மனுவை அளித்தார். மேலும், அதிமுகவின் கதை என்ற  ஊழல் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டு, அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த கட்சி பாமக. தற்போது அவர்களுடன் கூட்டணியில் இருப்பது பற்றி பாமகவின் மீது கடுமையான விமர்சனம் எழுதுள்ளது. அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்த்து ஏன் என்று சென்னை தி.நகரில் இன்று (பிப்ரவரி 25) செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சூழல் மாறியதால் அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது என்று தெரிவித்தார். ”அதிமுகவுக்கு எதிராக வைத்த விமர்சனங்களுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்கிறீர்களா?” என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கொதித்த அன்புமணி, ”எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு, அமைதியாக உட்காருங்கள்” என பதிலளித்தார்.

”தேர்தல் நேரத்தில் நிலைப்பட்டை மாற்றி கூட்டணி வைப்பது மக்களை முட்டாளாக்கும் செயல் இல்லையா?” என்ற கேள்விக்கு, ”8 ஆண்டுகளாக தனித்து போட்டியிட்டோம்; யாராவது பாராட்டினீர்களா?; தமிழக மக்களும் எங்களுக்கு எந்த அங்கீகாரமும் கொடுக்கவில்லை.”  என பதிலளித்தார் அன்புமணி.

திணறிய அன்புமணி

மேலும் பேசிய அவர், “அதிமுக மீது விமர்சனம் செய்தோம். இல்லை எனக் கூறவில்லை. விமர்சனம் செய்த கட்சியுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்றால் இந்தியாவில் எந்தக் கட்சியும் கூட்டணி வைக்க முடியாது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியும் கடுமையான விமர்சனம் செய்து கொண்டனர். ஆனால், தற்போது காங்கிரஸ்க்கு எதிராக கூட்டணி அமைத்து ஒன்றாக தேர்தலை சந்திக்கவுள்ளனர். ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒருவரை ஒருவா் கடுமையாக விமா்சித்து விட்டு தற்போது கூட்டணி அமைத்துள்ளன. ஏன் தமிழகத்தில் காங்கிரஸ்- திமுகவும் தான் விமர்சனம் செய்துகொண்டனர். இப்போது அவர்கள் எல்லாம் ஒன்றாக இருக்கவில்லையா. தேர்தலுக்காக அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துள்ளார்கள். இப்படிப் பல உதாரணங்கள் சொல்லலாம்.” என்று கூறினார்.

”தமிழக அரசு மீதான ஊழல் புகார்களை ஆளுநரிடம் அளித்ததை திரும்பப்பெறவில்லை. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. கூட்டணி சேர்வதால் பாமக தனது கொள்கைகளில் இருந்து பின் வாங்காது. ” என்றார் அன்புமணி

மேலும், குட்கா ஊழல் உட்பட தமிழக அரசு மீதான பல்வேறு ஊழல்கள் குறித்து செய்தியாளா்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய அன்புமணி, செய்தியாளர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். தமிழக மக்களின் நலனுக்காகதான் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளோம் என்று தெரிவித்தார் அன்புமணி.